நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

அறத்துப்பால்: துறவறவியல்[தொகு]

ஐந்தாம் அதிகாரம் தூய்தன்மை

{அஃதாவது, சுத்தமல்லாத தன்மையைச் சொல்லுதலாம்}

பாடல்: 41 (மாக்கேழ்)[தொகு]

மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர்| மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர்

நோக்கார்கொ னொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோ| நோக்கார் கொல் நொய்யது ஓர் புக்கில்லை - யாக்கைக்கு ஓர்

ரீச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே | ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே

காக்கை கடிவதோர் கோல். (01)| காக்கை கடிவது ஓர் கோல்.

பதவுரை

யாக்கைக்கு= உடலிற்கு, ஓர்= ஒரு, ஈ= ஈயினது, சிறகு= சிறகை, அன்னது= ஒப்பாகியது, ஓர்= ஒரு, தோல்= தோலானது, அறினும்=அறுந்தாலும், காக்கை= காகத்தை, கடிவது= துரத்துவதற்கு, ஓர்= ஒரு, கோல்= தடி, வேண்டுமே= வேண்டுமல்லவா? (ஆதலால்), மா= மாமரத்தின், கேழ்= தளிர்நிறத்தையும், மடம்= இளமையையுமுடைய, நல்லாய் என்று= பெண்ணேயென்று, அரற்றும்= அறிவீனர் பிதற்றும், நொய்யது= அற்பமாகியதாய் விளங்கும், ஓர்= ஒரு, புக்கில்லை= உடலை, சான்றவர்= பெரியோர்கள், நோக்கார்= பார்க்க மாட்டார்கள்.

கருத்துரை

அறிவுடையோர்கள் இழிவாகிய உடலைப் பாரார்கள்.

விசேடவுரை

சான்றவர்-எழுவாய்; நோக்கார்- பயனிலை; புக்கில்லை- செயப்படுபொருள். கொல்- அசை. 'நோக்கார்கொல்' என்றது, 'இழிவென்று காணாரோ' எனினும் அமையும்.

நன்னூல் அரும்பதக் கொத்து

“கொல்லே யைய மசைநிலைக் கூற்றே.” (41).

பாடல்: 42 (தோற்போர்வை)[தொகு]

தோற்போர்வை மேலுந் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கு () தோல் போர்வை மேலும் துளை பல ஆய் பொய் மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானான் - மீப்போர்வை ()மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் - மீ போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் () பொய் மறையா காமம் புகலாது மற்று அதனை
பைம்மறியாப் பார்க்கப் படும். (02) பை மறி ஆ பார்க்கப்படும்.

பதவுரை:

தோல்= தோலாகிய,
போர்வை= போர்வையானது,
மேலும்= உடன்மேலும்,
துளை= நவதுவாரங்கள்,
பல ஆய் = பலவிடமாய்,
பொய்= மலங்களை,
மறைக்கும்= மறைத்து வைத்திருக்கும்,
மீ போர்வை= மேற்போர்வையால்,
மாட்சித்து= பெருமையுடையது,
உடம்பு ஆனால்= உடலானதால்,
மீ போர்வை= மேலே போர்த்த போர்வையால்,
பொய் = மலங்களை,
மறையா= மறைக்கும்,
காமம்= காம நுகர்ச்சியை,
புகலாது= இச்சியாது,
அதனை= அவ்வுடலை,
பை மறி ஆ= உட்புறந் திருப்பிய பையைப் போல,
பார்க்கப்படும்= நோக்கத்தகும்.

கருத்துரை:

மலங்களை மறைத்துத் தோலால் மூடி வைத்திருக்கும் உடலை உட்புறம் திருப்பிய பையைப்போலப் பார்க்க வேண்டும்.

விசேடவுரை:

பைம்மறியாப் பார்க்கப்படும் - பாம்பின் கடைவாய்ப் பையுள் மறிபட்ட விடம்போலப் பார்க்கப்படும் என்பாரும் உளர். (நீ)-தோன்றா எழுவாய், பார்க்கப்படும்- பயனிலை, அதனை- செயப்படுபொருள். மற்று-அசை.

பாடல்: 43 (தக்கோலந்)[தொகு]

தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடிப் () தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி
பொய்க்கோலஞ் செய்ய வொழியுமே - யெக்காலு ()பொய் கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
முண்டி வினையு ளுறைக்கு மெனப்பெரியோர் () உண்டி வினையுள் உறைக்கும் என பெரியோர்
கண்டுகை விட்ட மயல். (03) கண்டு கைவிட்ட மயல்.


பதவுரை:

எக்காலும் = எந்நாளும்,
உண்டி = உணவால் வரும்,
விளையுள் = தொழிலால்,
உறைக்கும் என = துர்க்கந்தம் வீசுமென்று,
பெரியோர் = பெரியோர்கள்,
கண்டு = அறிந்து,
கைவிட்ட = கைவிட்டு விட்ட,
மயல் = உடலான செத்தைக்கு,
தக்கோலம் தின்று = தாம்பூலந் தின்று,
தலை நிறைய = சிரசு நிறைய,
பூ சூடி = பூவைத் தரித்து,
பொய் கோலம் = பொய்யாகிய அழகை,
செய்ய = செய்தால்,
ஒழியுமே = உள்ளுள்ள மல நீங்குமோ?

கருத்துரை:

பெரியோர்கள் உணவுத் தொழிலால் நாறுமென்று வெறுத்த உடலுக்குத் தாம்பூலந்தின்று பூவைச் சூடினால் உள்ளிருக்கு மலங்கள் போய்விடுமோ?

விசேடவுரை:

(மலம்) - தோன்றா எழுவாய், ஒழியுமே - பயனிலை.

தொன்னூல் விளக்கம்

“ஏல மிளகு வெற்றிலை மூன்றுந் தக்கோல மென்றே சாற்றப் படுமே.”


பாடல்: 44 (தெண்ணீர்க்குவளை)[தொகு]

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று () தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற - விடுவேனோ? ()கண் இல் புன் மாக்கள் கவற்ற - விடுவேனோ?
வுண்ணீர் களைந்தக்கா னுங்குசூன் றிட்டன்ன () உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்ட அன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன். (04) கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்.


பதவுரை:

உள் = உள்ளிருக்கும்,
நீர் = சலத்தை,
களைந்தக்கால் = எடுத்தால்,
நுங்கு = நுங்கை,
சூன்றிட்ட அன்ன= தோண்டினாற் போலும்,
கண் = கண்களுடைய,
நீர்மை = குணத்தை,
கண்டு = பார்த்து,
ஒழுகுவேன் = நடப்பேன்;
தெள் = தெளிந்த,
நீர் = சலத்திலுள்ள,
குவளை = நீலோற்பலத்தையும்,
கயல் = கெண்டை மீனையும்,
வேல் = வேலாயுதத்தையும்,
பொரு என்று = ஒப்பு என்று,
கண் இல் = ஞானக்கண் இல்லாத,
புல் = அற்பமான,
மாக்கள் = மனிதர்கள்,
கவற்ற = என்மனதைக் கவலைப்படுத்த,
விடுவனோ? = (யான் துறவறத்தை) விடுவேனோ?

கருத்துரை:

நுங்குக் கண்களைப் போலப் பெண்கள் கண்களைக் கண்டு நடப்பேன்; அறிவீனர் என் மனதைக் கவலைப்படுத்த யான் துறவறத்தை விடுவனோ?

விசேடவுரை:

யான் - எழுவாய், விடுவனோ - பயனிலை.

“தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெய ரென்ன

வியற்றிரி பழிவாக்க மியைந்தாந் தொகையே.”

இவ்விதியால் ‘நீர் களைந்தக்கால்’ என்றதில் ஐயுருபுத்தொகையில் இயல்பாயிற்று. ‘விடுவேனோ’ என்றும் பாடமுண்டு.

பாடல்: 45 (முல்லை)[தொகு]

முல்லை முகைமுறுவன் முத்தென் றிவைபிதற்றுங் () முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும்

கல்லாப் புன்மாக்கள் கவற்ற-விடுவனோ? ()கல்லாப் புன் மாக்கள் கவற்ற - விடுவனோ?

வெல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க () எல்லாரும் காண புறம்காட்டு உதிர்ந்து உக்க

பல்லென்பு கண்டொழுகு வேன். (05) பல் என்பு கண்டு ஒழுகுவேன். (05)

பதவுரை:

எல்லாரும் = யாவரும்,

காண = அறிய,
புறங்காட்டு = நடுக்காட்டில்,
உதிர்ந்து = உதிர்ந்து,
உக்க = மக்கிக் கிடக்கின்ற,
பல் என்பு = பல்லாகிய எலும்பை,
கண்டு = பார்த்து,
ஒழுகுவேன் = நடப்பேன்;
முறுவல் = அப்பற்களை,
முல்லை முகை என்று = முல்லை அரும்பென்றும்,
முத்து என்று = முத்து என்றும்,
இவை = இவைகளை,
பிதற்றும் = ஒப்பாகச் சொல்லும்,
கல்லா = கல்வி யறியாத,
புல் = அற்பமான,
மாக்கள் = மனிதர்கள்,
கவற்ற = என் மனதைக் கவலைப்படுத்த,
விடுவனோ? = (யான் துறவறத்தை) விடுவனோ?

கருத்துரை:

சுடுகாட்டில் உதிர்ந்து கிடக்கிற பல்லெலும்பைக் கண்டு நடப்பேன்; அறிவீனர், பெண்கள் வழியில் என் மனதைக் கவலைப்படுத்த யான் துறவறத்தை விடுவனோ?

விளக்கவுரை:

யான்- எழுவாய், விடுவனோ - பயனிலை.

“மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை

யப்பா லிரண்டென மொழிமனார் புலவர்.” (45)


பாடல் 46 (குடருங்)[தொகு]

குடருங் கொழுவுங் குருதியு மென்புத் () குடரும் கொழுவும் குருதியும் என்பு

தொடரு நரம்பொடு தோலு-மிடையிடையே ()தொடரும் நரம்பொடு தோலும் - இடை இடையே

வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்று () வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள்

ளெத்திறத்தா றீர்ங்கோதை யாள்? (06) எத்திறத்தாள் ஈர்ம் கோதையாள்? (06)


பதவுரை:

குடரும் = குடலும்,
கொழுவும் = மூளையும்,
குருதியும் = உதிரமும்,
என்பும் = எலும்பும்,
தொடரும் = தொடர்ந்த,
நரம்பொடு = நரம்புடன்,
தோலும் = தோலும்,
இடை இடையே = நடு நடுவாக,
வைத்த = வைக்கப்பட்ட,
தடியும் = இறைச்சியும்,
வழும்பும் = நிணமும்,
ஆம் = ஆகிய,
இவற்றுள் = இவைகளுள்,
ஈர் கோதையாள் = குளிர்ந்த மாலையை யுடையவள்,
எத்திறத்தாள்? = எந்தத் திறத்தை யுடையவள்?

கருத்துரை:

குடல், மூளை, உதிரம், எலும்பு, நரம்பு, தோல், இறைச்சி, நிணம் ஆகிய இவற்றுள் மாலை யணிந்தவள் எத்தன்மையுடையவள்?

விளக்கவுரை:

கோதையாள் - எழுவாய், எத்திறத்தாள் - பயனிலை. மற்று - அசை.

பாடல் 47 (ஊறியுவர்த்)[தொகு]

ஊறி யுவர்த்தக்க வொன்பது வாய்ப்புலனுங் () ஊறி உவர் தக்க ஒன்பது வாய் புலனும்

கோதிக் குழம்பலைக்குங் கும்பத்தைப்-பேதை () கோதி குழம்பு அலைக்கும் கும்பத்தை - பேதை

பெருந்தோளி பெய்வளா யென்னுமீப் போர்த்த () பெரும் தோளி பெய் வளாய் என்னும் மீ போர்த்த

கருந்தோளாற் கண்விளக்கப் பட்டு. () கரும் தோளால் கண் விளக்கப்பட்டு. (07)


பதவுரை:

பேதை = அறிவில்லாதவன்,
ஊறி = மலங்களூறி,
உவர் தக்க = வெறுக்கத்தக்க,
ஒன்பது வாய் புலனும் = நவத்துவாரவிடங்களிடமும்,
கோதி = கொழித்து,
குழம்பு = மலக் குழம்பை,
அலைக்கும் = ஒதுக்கும்,
கும்பத்தை = உடலான குடத்தை,
மீ போர்த்த = மேலே மூடிய,
கரும் = பெருமை பொருந்திய,
தோலால் = தோலால்,
கண் = கண்களுக்கு,
விளக்கப்பட்டு = விளக்கம் பொருந்தி,
பெரும் = பெரிய,
தோளி = தோள்களையுடையவளே!
பெய் வளாய் = இடப்பட்ட வளையல்களையுடையவளே!,
என்னும் - என்று சொல்லுவான்.

கருத்துரை:

அறிவீனன், நவத்துவாரங்களிலு மலத்தை யொதுக்கும் உடலை யுடையவளைப் புகழ்ந்து சொல்லுவான்.

விசேடவுரை:

பேதை - எழுவாய், என்னும் - பயனிலை, கும்பத்தை - செயப்படுபொருள்.

தொல்காப்பியம்: இடைச்சொல்லியல்: 14-ம் சூத்திரம்.

“பல்லோர் படர்க்கை முன்னிலைத் தன்மை

யவ்வயின் மூன்று நிகழும் காலத்துச்

செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா”

இவ்விதியால் என்னும் என்னுவான் என்றாயிற்று.

பாடல் 48 (பண்டமறியார்)[தொகு]

பண்ட மறியார் படுசாந்துங் கோதையுங் () பண்டம் அறியார் படு சாந்தும் கோதையும்

கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப் ()கொண்டு பாராட்டுவார் கண்டிலர் கொல் - மண்டி

பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்து () பெடை சேவல் வல் கழுகு பேர்த்து இட்டு குத்து

முடைச்சாகா டச்சிற் றுழி. (08) முடை சாகாடு அச்சு இற்ற உழி.


பதவுரை:

முடை = நாறுகின்ற,
சாகாடு = உடலான பண்டி,
அச்சு = உயிரான அச்சு,
இற்ற உழி = முறிந்தவிடத்து,
மண்டி = நெருங்கி,
பெடை = பெட்டையும்,
சேவல் = சேவலுமான,
வல் கழுகு = வலிய கழுகுகள்,
பேர்த்திட்டு = அடிகள் பேர்த்திட்டு,
குத்தும் = குத்தாநிற்கும்; (ஆகையால்),
பண்டம் = உடலாகிய பொருளினது தன்மையை,
அறியார் = அறியாதவர்களாய்,
படு = பொருந்திய,
சாந்தும் = சந்தனத்தையும்,
கோதை = மாலையையும்,
கொண்டு = கைக்கொண்டு,
பாராட்டுவார் = உடலைப் பாராட்டுவார்,
கண்டிலர்கொல் = அக்கழுகுகள் குத்துதலைக் காணார்களோ?

கருத்துரை:

உயிர்போனவிடத்து உடலைக் கழுகுகள் குத்துதலை உடலைப் பாராட்டுவார் காணார்களோ?

விசேடவுரை:

பாராட்டுவார் - எழுவாய், கண்டிலர்கொல் - பயனிலை.

பாடல் 49 (கழிந்தா)[தொகு]

கழிந்தா ரிடுதலை கண்டார்நெஞ் சுட்கக் () கழிந்தார் இடு தலை கண்டார் நெஞ்சு உட்க

குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி-யொழிந்தாரைப் ()குழிந்து ஆழ்ந்த கண்ண ஆய் தோன்றி - ஒழிந்தாரை

போற்றி நெறிநின்மி னிற்றிதன் பண்பென்று ()போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று

சாற்றுங்கொல் சாலச் சிரித்து. (09) () சாற்றுங் கொல் சால சிரித்து. (09)


பதவுரை:

கழிந்தார் = இறந்தவர்கள்,

இடு = இடப்பட்ட,
தலை = தலைகளானவை,
கண்டார் = பார்த்தவர்கள்,
நெஞ்சு = இதயங்கள்,
உட்க = பயப்பட,
குழிந்து ஆழ்ந்த = குழிந்து ஆழ்ந்திருக்கின்ற,
கண்ண ஆய் = கண்களை உடையனவாக,
தோன்றி = தோற்றப்பட்டு,
ஒழிந்தாரை = சாவாதிருந்தவரை,
போற்றி = பாதுகாத்து,
நெறி = நன்மார்க்கத்தில்,
நின்மின் = நில்லுங்கள்,
இதன்பண்பு = இவ்வுடலினது தன்மை,
இற்று என்று = இத்தன்மையதென்று,
சால = மிகவும்,
சிரித்து = நகைத்து,
சாற்றும் கொல் = சொல்வன போலும்.

கருத்துரை:

இறந்தவர்கள் தலைகள் இறவாதவர்களை நல்வழியில் நில்லுங்கள் என்று சிரித்துச் சொல்வன போலும்.

விசேடவுரை:

தலைகள் - எழுவாய், சாற்றும் - பயனிலை.

பாடல் 50 (உயிர்போயார்)[தொகு]

உயிர்போயார் வெண்டலை யுட்கச் சிரித்துச் () உயிர் போயார் வெள் தலை உட்க சிரித்து

செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச்-செயிர்தீர்ந்தார் ()செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை - செயிர் தீர்ந்தார்

கண்டிற் றிதன்வண்ண மென்பதனாற் றம்மையோர் ()கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர்

பண்டத்துள் வைப்ப திலர். (10)பண்டத்துள் வைப்பது இலர். (10)


பதவுரை:

உயிர் போயார் = இறந்தவர்களுடைய,

வெள் தலை = வெண்மையாகிய தலைகள்,
உட்க = பார்த்தவர்கள் அஞ்ச,
சிரித்து = நகைத்து,
செம்மாப்பவரை = இல்வாழ்க்கையில் இறுமாந்தவரை,
செயிர் = குற்றத்தை,
தீர்க்கும் = நீக்கும்;
செயிர் = குற்றம்,
தீர்ந்தார் = நீங்கினவர்கள்,
கண்டு = பார்த்து,
இதன் வண்ணம் = இவ்வுடம்பின் வகை,
இற்று = இத்தன்மையையுடையது,
என்பதனால் = என்று சொல்லப்படுதலால்,
தம்மை = தங்களை,
ஓர் பண்டத்துள் = ஒரு பொருளிலே,
வைப்பது இலர் = வைத்து எண்ணார்கள்.

கருத்துரை:

இறந்தவர்கள் தலைகள், இல்வாழ்க்கையில் இறுமாந்தவர்களைக் குற்றத்தைவிட்டு நீக்கும்; இதைக் குற்றம் அற்றவர்கள் கண்டு தங்களை ஒரு பொருளாக வையார்கள்.

விளக்கவுரை:

தலைகள் - எழுவாய், தீர்க்கும் - பயனிலை, செயிர் - செயப்படுபொருள். செயிர்தீர்ந்தார் - எழுவாய், வைப்பதிலர் - பயனிலை, தம்மை - செயப்படுபொருள்.

தொல்காப்பியம்: வினையியல்: 30-ம் சூத்திரம்.

 “தடுமா றுருபுக டாஞ்சில வுளவே.”

இவ்விதியால் ஒவ்வோரிடத்து ஐயுங் குவ்வும் பொருந்தும்.


பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
[[]]:[[]]
[[]]
[[]]
[[]]
[[]] :[[]] :[[]]