உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்[தொகு]

அறத்துப்பால்: துறவறவியல்[தொகு]

ஆறாம் அதிகாரம் துறவு


பாடல்: 51 (விளக்குப்புக)[தொகு]

விளக்குப் புகவிருண் மாய்ந்தாங் கொருவன் () விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்

தவத்தின்முன் னில்லாதாம் பாவம்- விளக்குநெய் ()தவத்தின் முன் நில்லாதாம் பாவம்- விளக்கு நெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை () தேய்வு இடத்துச் சென்று இருள் பாய்ந்து ஆங்கு நல் வினை

தீர்விடத்து நிற்குமாந் தீது. (03) தீர்வு இடத்து நிற்குமாம் தீது.

பதவுரை
விளக்கு= தீபம்,
புக= பிரவேசிக்க,
இருள்= இருட்டு,
மாய்ந்தாங்கு= கெட்டாற்போல,
ஒருவன்= ஒருவன்,
தவத்தின்முன்= தவத்திற்குமுன்,
பாவம்= தீவினை,
நில்லாது= நிற்காது,
விளக்கு= அத்தீபத்தின்,
நெய்= தைலம்,
தேய்விடத்து= குறைந்தபோது,
இருள்= இருட்டு,
சென்று= போய்,
பாய்ந்தாங்கு= பாய்ந்ததுபோல,
நல்வினை= புண்ணியம்,
தீர்விடத்து= நீங்கினபோது,
தீது= பாவம்,
நிற்கும்= வந்துநிற்கும்.
கருத்துரை
விளக்கைக் கண்டு இருள்கெட்டாற்போலும், ஒருவன் செய்தவத்தின்முன் பாவங்கெடும்; விளக்கு நெய் அற்றபோது இருள்வந்து சம்பவித்தல்போலும், நல்வினை நீங்கியபோது தீவினை வந்து சம்பவிக்கும்.
விசேடவுரை
பாவம்- எழுவாய்; நில்லாது- பயனிலை. தீது- எழுவாய்; நிற்கும்- பயனிலை. ஆம் இரண்டும் அசை.

(தாது விளக்கம்)

“விளக்கஞ் செயலால் விளக்கெனப் படுமே.”

பாடல்: 52 (நிலையாமை)[தொகு]

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் () நிலையாமை நோய் மூப்புச் சாக்காடு என்று எண்ணித்

தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச் ()தலை ஆயார் தம் கருமம் செய்வார் - தொலைவு இல்லாச்

சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும் () சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்

பித்தரிற் பேதையா ரில். (04) பித்தரின் பேதையார் இல்.

பதவுரை
தலை ஆயார்= பெரியோர்கள்,
நிலையாமை= (செல்வம், இளமை, சரீரம் இவை) நில்லாமை,
என்று= என்றும்,
நோய்= வியாதியும்,
மூப்பு= விருத்தாப்பியமும்,
சாக்காடு= மரணமும் இருக்கின்றன,
என்று= என்றும்,
எண்ணி= நினைத்து,
தம்= தமது,
கருமம்= கருமமாகிய தவத்தை,
செய்வார்= செய்வார்கள்;
தொலைவு இல்லா= அளவில்லாத,

சத்தமும்= சத்த சாத்திரமும்,

சோதிடமும்= சோதிட சாத்திரமும்,
என்று= என்று சொல்லிய,
இவை= இவைகளை,
பிதற்றும்= பலகாற் பேசும்,
பித்தரின்= பித்தர்களைப் போல,
பேதையார்= அறிவீனர்,
இல்= இல்லை.
கருத்துரை
பெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். சத்த சாத்திரமும், சோதிட சாத்திரமும் கற்றுப் பிதற்றும் பித்தர்களைப்போலும் அறிவீனர்கள் இல்லை.
விசேடவுரை
தலையாயார்- எழுவாய், செய்வார்- பயனிலை, கருமம்- செயப்படுபொருள்; பேதையார்- எழுவாய், இல்- பயனிலை; ஆங்கு- அசை, என்று இரண்டிடத்து ஒட்டுக.
இலக்கணக்கொத்து
43-ஆம் சூத்திரம்.
“நீக்க மின்றி நிகழ்த்தலு மின்னே.”
- இவ்விதியால் ‘பித்தரின்’ என்றது, ஒப்புப்பொருள். இச்சூத்திரத்திற்கு இச்செய்யுளே உதாரணங் காட்டினார்.

பாடல்: 53 (இல்லமிளமை)[தொகு]

இல்ல மிளமை யெழில்வனப்பு மீக்கூற்றஞ் () இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலியென் றிவையெல்லா - மெல்ல ()செல்வம் வலி என்று இவை எல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் () நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாமுய்யக் கொண்டு. (02) தலை ஆயார் தாம் உய்யக் கொண்டு.
பதவுரை
தலை ஆயார்= பெரியோர்கள்,
இல்லம்= இலவாழ்க்கையும்,
இளமை= இளமைப்பருவமும்,
எழில்= நிறமும்,
வனப்பு= அழகும்,
மீக்கூற்றம்= மிகுந்த இனத்து ஆதரவும்,
செல்வம்= பாக்கியமும்,
வலி= பலமும்,
என்று= என்று சொல்லிய,
இவை எல்லாம்= இவைகள் எல்லாம்,
மெல்ல= ஆராயுமிடத்து,
நிலையாமை= நிலையாமையை,
கண்டு= பார்த்து,
தாம்= தாங்கள்,
உய்யக்கொண்டு= கடைத்தேறும் வழியைக் கைக்கொண்டு,
நெடியார்= தாமதங்கொள்ளாதவர்களாய்,
துறப்பர்= இருவகைப்பற்றையும் விடுவர்.
கருத்துரை
பெரியோர்கள், இங்ஙனஞ் சொல்லிய யாவும் நில்லா என்று இருவகைப் பற்றும் விடுவர்.
விசேடவுரை
தலையாயார்- எழுவாய், துறப்பர்- பயனிலை.

பாடல் 54 (துன்பம்பல)[தொகு]

துன்பம் பலநா ளுழந்து மொருநாளை () துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை
யின்பமே காமுறுவ ரேழையார் - இன்ப ()இன்பமே காமுறுவர் ஏழையார்- இன்பம்
மிடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா () இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு
றடைவொழிந்தா ரான்றமைந் தார். (03) அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார்.
பதவுரை
ஏழையார்= அறிவில்லார்,
பல நாள்= பல காலமும்,
துன்பம்= துயரத்தை,
உழந்து= அநுபவித்தும்,
ஒரு நாளை= ஒரு நாளில் வரும்,
இன்பமே= சுகத்தையே,
காமுறுவர்= இச்சிப்பார்,
ஆன்று அமைந்தார்= அறிவுடையார்,
இன்பம்= இல்வாழ் இன்பத்தின்,
இடை= வேறுபாட்டை,
தெரிந்து= அறிந்து,
இன்னாமை= துன்பத்தை,
நோக்கி= பார்த்து,
மனை ஆறு= இலவாழ்க்கை வழியின்,
அடைவு= சம்பந்தத்தை,
ஒழிந்தார்= நீங்கினார்.
கருத்துரை
அறிவில்லார் இல்வாழ்க்கை இன்பத்தை இச்சிப்பார்; அறிவுடையார், அவ் இல்வாழ்க்கை யின்பத்தை விட்டு நீங்குவர்.
விசேடவுரை
ஏழையார்- எழுவாய், காமுறுவர்- பயனிலை, இன்பம்- செயப்படுபொருள்; ஆன்றமைந்தார்- எழுவாய், ஒழிந்தார்- பயனிலை, அடைவு- செயப்படுபொருள்.

காக்கைபாடினியார் சூத்திரம்

“தனியசை யென்றா விணையசை யென்றா
விரண்டென மொழிமனா ரியல்புணர்ந் தோரே.”
- இவ்விதியால் இன்பம்-இணையசை.

பாடல்: 55 (கொன்னே)[தொகு]

கொன்னே கழித்தன் றிளமையு மின்னே () கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே

பிணியொடு மூப்பும் வருமால்- துணிவொன்றி ()பிணியொடு மூப்பும் வரும் ஆல் - துணிவு ஒன்றி

யென்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ () என்னொடு சூழாது எழு நெஞ்சே போதியோ

நன்னெறி சேர நமக்கு. (05) நல் நெறி சேர நமக்கு.

பதவுரை
துணிவு= துணிதலை,
ஒன்றி= பொருந்தி,
என்னொடு= என்னுடன்,
சூழாது= ஆலோசியாது,
எழும்= எழுகின்ற,
நெஞ்சே= ஓ மனமே!
இளமையும்= இளமைப் பருவமும்,
கொன்னே= பயனில்லாமல்,
கழிந்தன்று= நீங்கியது,
இன்னே- இப்பொழுதே,
பிணியொடு= முப்பிணியுடன்,
மூப்பும்= தள்ளாமையும்,
வரும் ஆல்= வரும் ஆகையால்,
நமக்கு= நமக்கு,
நல்நெறி= பிறப்பறு நல்வழி,
சேர= பொருந்த,
போதி= வருதி.
கருத்துரை
எனக்கு உடன்படாதெழுந்து செல்கின்ற மனமே! இளமைநீங்கி முதுமை வரும் ஆகையால், நமக்குப் பிறப்பறும் வழியில் பொருந்த வா.
விசேடவுரை
நெஞ்சம்- எழுவாய், போதி- பயனிலை. போதல்- வருதல்; இதனாற் போதி வருதி யென்றாயிற்று. ‘போதியோ’ என்றதற்குப் ‘போகிறாயா’ என்பாருமுளர்.

பாடல் 56 (மாண்ட)[தொகு]

மாண்ட குணத்தோடு மக்கட்பே றில்லெனினும் () மாண்ட குணத்தோடு மக்கள் பேறு இல் எனினும்

பூண்டான் கழித்தற் கருமையாற் - பூண்ட ()பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட

மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே () மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக் கண்ணே

கடியென்றார் கற்றறிந் தார். (06) கடி என்றார் கற்று அறிந்தார்.


பதவுரை
மாண்ட= பெருமை பொருந்திய,
குணத்தோடு= நற்குணத்தோடு,
மக்கள்பேறு= மக்களைப் பெறுதல்,
இல் எனினும்= (மனைவிக்கு) இல்லையானாலும்,
பூண்டான்= விவாகஞ் செய்தவன்,
கழித்தற்கு= அவளை விடுதற்கு,
அருமையால்= அரிதாதலால்,
பூண்ட= தாம் கொண்ட,
மிடி என்னும்= வறுமையென்னும்,
காரணத்தின்= ஏதுவினால்,
கற்று அறிந்தார்= பெரியோர்கள்,
மேல் முறைக்கண்ணே= மேலாகிய துறவறவொழுக்கத்தை விரும்பி,
கடி என்றார்= (மணஞ்செய்யுமுன்னமே யில்வாழ்க்கையை) விட்டுவிடு என்றார்கள்.
கருத்துரை
நற்குணமு மக்கட்பேறு மனைவிக்கு இல்லாதிருந்தும் கொண்டவன் நீக்குதற்கு அரிது ஆதலால், தரித்திரமென்னுங் காரணத்தாலேனுந் துறவறத்தை விரும்பி இல்லறத்தை நீக்கென்றார்கள்.
விசேடவுரை
கற்றறிந்தார்- எழுவாய், கடியென்றார்- பயனிலை.

பாடல் 57 (ஊக்கித்தான்)[தொகு]

ஊக்கித்தாங் கொண்ட விரதங்க ளுள்ளுடையத் () ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடையத்

தாக்கருந் துன்பங்க டாந்தலை - வந்தக்கால் ()தாக்கு அரும் துன்பங்கள் தாம் தலை- வந்தக்கால்

நீக்கி நிறூஉ முரவோரே நல்லொழுக்கங் () நீக்கி நிறூஉம் உரவோரே நல் ஒழுக்கம்

காக்குந் திருவத் தவர். (07) காக்கும் திருவத்தவர்.

பதவுரை
ஊக்கி= உறுதிகொண்டு,
தாம்= தாங்கள்,
கொண்ட= நல்லொழுக்கமாகக் கொண்ட,
விரதங்கள்= தவங்கள்,
உள் உடைய= இருதயங் கலங்க,
தாக்கு= தாங்குதற்கு,
அரும்= அரிய,
துன்பங்கள்= துயரங்கள்,
தலை= தம்மிடத்தில்,
வந்தக்கால்= வந்தால்,
நீக்கி= தள்ளி,
நிறூஉம்= தங்களைத் தவத்திலே நிறுத்தும்,
உரவோரே= அறிவுடையோரே,
நல் ஒழுக்கம்= நல்ல தவவொழுக்கத்தை,
காக்கும்= காப்பாற்றும்,
திருவத்தவர்= சிறப்பினையுடையார்.
கருத்துரை
அறிவுடையோர், எத்துன்பம் வரினும் அத்துன்பத்தைச் சகித்துத் தவத்தைக் காப்பர்.
விசேடவுரை
உரவோர்= எழுவாய், திருவத்தவர்- பயனிலை. தாம்- அசை, தாக்கு- விகாரம்.
இலக்கணக்கொத்து
ஒழிபியல், நான்காம் சூத்திரம்.
“இயற்கை யளபெடை செயற்கை யளபெடை
யெழுத்துப்பே றளபெடை யிசைநூ லளபெடை
யொற்றுப்பே றளபெடை யொரோவழிக் கூடி
லைந்தென மொழிப வளபெடை யவைதாங்
குற்றெழுத் தளபெடை நெட்டெழுத் தளபெடை
யொற்றெழுத் தளபெடை யெனவொரு மூன்றாய்
மொழிமுத லிடைகடை மூன்றினும் வருமே.”
இவ்விதியால் ‘நிறூஉம்’ குற்றெழுத் தளபெடை.

பாடல் 58 (தம்மையிகழ்ந்)[தொகு]

தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் () தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி மற்று

றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை ()எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் - உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று () எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று

பரிவதூஉஞ் சான்றோர் கடன். (08) பரிவதூஉம் சான்றோர் கடன்.

பதவுரை
தம்மை= தங்களை,
இகழ்ந்தமை= இகழ்ந்து பேசினவற்றை,
தாம் பொறுப்பது அன்றி மற்று= தாங்கள் பொறுப்பது அல்லாமல்,
எம்மை= எங்களை,
இகழ்ந்த= இகழ்ந்து பேசிய,
வினைப்பயத்தால்= தீவினைப் பலனால்,
உம்மை= மறுபிறப்பில்,
எரிவாய்= தீயிடமாகிய,
நிரயத்து= நரகத்தில்,
வீழ்வர் கொல் என்று= வீழ்வார்க ளென்று,
பரிவதூஉம்= இரக்கங்கொள்வதும்,
சான்றோர்= பெரியோர்கள்,
கடன்= கடமை.
கருத்துரை
பெரியோர்கள், பிறர் வைதலைப் பொறுப்பதன்றியும், வைதவர்கள் நரகத்தில் வீழுவார்கள் என்று இரங்குவார்கள்.
விசேடவுரை
சான்றோர்- எழுவாய், கடன்- பயனிலை. மற்று, கொல்-அசைகள்.

பாடல் 59 (மெய்வாய்கண்)[தொகு]

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற () மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பேர் பெற்ற

வைவாய வேட்கை யவாவினைக் - கைவாய்க் ()ஐ வாய வேட்கை அவாவினக் -கைவாய்க்

கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான் () கலங்காமல் காத்து உய்க்கும் ஆற்றல் உடையான்

விலங்காது வீடு பெறும். (09) விலங்காது வீடு பெறும்.

பதவுரை
மெய்= உடலும்,
வாய்= வாயும்,
கண்= நேத்திரமும்,
மூக்கு= நாசியும்,
செவி= காதும்,
என= என்றுசொல்லிய,
பேர்பெற்ற= பெயர்கொண்ட,
ஐவாய= ஐந்திடமாகிய,
வேட்கை= ஆசையையும்,
அவாவினை= உளத்தால்வரும் ஆசையையும்,
கைவாய்= ஒழுக்கவழியில்,
கலங்காமல்= கலக்கமடையாது,
காத்து= காப்பாற்றி,
உய்க்கும்= தன்னை நடத்தும்,
ஆற்றல் உடையான்= வல்லமையுடையான்,
விலங்காது= தவறாது,
வீடு= மோக்ஷவீட்டை,
பெறும்= அடைவான்.
கருத்துரை
ஐம்பொறிகையும் ஐம்புலன்களிற் செல்லாமற் காக்கும் வல்லமை யுடையவன் மோட்சம் அடைவான்.
விசேடவுரை
ஆற்றலுடையான்- எழுவாய், பெறும்- பயனிலை, வீடு- செயப்படுபொருள்.
இலக்கணத்திரட்டு
“வீடொன் றும்மே விளம்பப் படாப்பொருள்.”

பாடல் 60 (துன்பமே)[தொகு]

துன்பமே மீதூரக் கண்டுந் துறவுள்ளா () துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்

ரின்பமே காமுறுவ ரேழையா - ரின்ப ()இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்

மிசைதோறு மற்றத னின்னாமை நோக்கிப் () இசைதோறும் மற்று அதனின் இன்னாமை நோக்கிப்

பசைதல் பரியாதா மேல். (60) பசைதல் பரியாதாம் மேல்.

பதவுரை
ஏழையார்= அறிவில்லார்,
துன்பமே= துன்பத்தையே,
மீது ஊர= மேன்மேலும் வர,
கண்டும்= பார்த்தும்,
துறவு= துறவறத்தை,
உள்ளார்= நினையாராய்,
இன்பமே= இனபத்தையே,
காமுறுவர்= இச்சிப்பார்,
மேல்= மேலாயினோர்,
இன்பம்= அவ்வின்பமை,
இசைதோறும்= இசைந்து வருந்தோறும்,
அதன்= அவ்வின்பத்தால் வரும்,
இன்னாமை= துன்பத்தை,
நோக்கி= பார்த்து,
பசைதல்= அவ்வின்பத்திற் பொருந்துதலை,
பரியாது= இச்சியார்.
கருத்துரை
அறிவில்லார் இன்பத்தை இச்சிப்பார்; அறிவுள்ளார் இன்பத்தை இச்சியார்.
விசேடவுரை
ஏழையார்- எழுவாய், காமுறுவ்ர- பயனிலை, இன்பம்- செயப்படுபொருள். மேல்- எழுவாய், பரியாது- பயனிலை, பசைதல்- செயப்படுபொருள்.
சங்கத்தார் அரியவிதிச் சூத்திரம்.
“விகுதி குன்றியும் விளங்கு முயர்திணை.”
-இவ்விதியால் ‘மேல்’ என்றது, விகுதி குன்றியது.

துறவு முற்றிற்று[தொகு]

பார்க்க[தொகு]

நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
பொருட்பால்
நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி