உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை

விக்கிமூலம் இலிருந்து


சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

[தொகு]

அறத்துப்பால்: இல்லறவியல்

[தொகு]

ஒன்பதாம் அதிகாரம் பிறர்மனை நயவாமை

[அஃதாவது, பிறருடைய மனைவியை இச்சியாமையாம்]


பாடல்: 81 (அச்சம்)

[தொகு]

அச்சம் பெரிதலா லதற்கின்பஞ் சிற்றளவால் அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்

நிச்ச னினையுங்காற் கோக்கொலையாம்- நிச்சலுங் நிச்சல் நினையுங்கால் கோ கொலையாம் நிச்சலும்

கும்பிக்கே கூர்த்த வினையாற் பிறன்றார கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம்

நம்பற்க நாணுடை யார். (01) நம்பற்க நாண் உடையார்.


பதவுரை

நாண் உடையார்= நாணம் உள்ளோரே!

அச்சம்= பயம்;

பெரிது= பெரியது;

அதற்கு= அப்பயத்திற்கு;

இன்பம்= இன்பமானது;

சிற்றளவால்= சிறிய அளவினையுடையது;

நிச்சமும்= தினமும்;

நினையுங்கால்= எண்ணுமிடத்து;

கோ=அரசனால்வரும்;

கொலையால்=ஆக்கினையால்;

நிச்சலும்= தினமும்;

கும்பிக்கே= நரகத்திற்கே;

கூர்த்த= மிகுந்த;

வினையான்= தீவினை வருமாதலால்;

பிறன்=அயலானுடைய;

தாரம்= மனையாளை;

நம்பற்க= விரும்பாது இருப்பீர்களாக.

கருத்துரை
நாணம் உடையவர்களே! பயம் பெரியதுய; அப்பயத்தால் வரும் இன்பம் சிறியது; இராஜ தண்டனை வரும்; நரகத்துக்கு ஏதுவாம்; பாவம் வரும்; ஆகையால், பிறர் மனையாளை இச்சியாதிருங்கள்.
விசேடவுரை
ஆல் மூன்றும் அசைகள். நாணுடையார்- எழுவாய் (அண்மை விளி), நம்பற்க- பயனிலை, பிறன்றாரம்- செயப்படுபொருள்.

தொல்காப்பியம்: விளிமரபு: 40-ம் சூத்திரம்.

“அண்மைச் சொல்லே இயற்கை யாகும்.”

பாடல்: 82 (அறம்புகழ்)

[தொகு]
அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் () அறம் புகழ் கேண்மை பெருமை இந் நான்கும்
பிறன்றார நச்சுவார்ச் சேரா- பிறன்றார ()பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா- பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் () நச்சுவார்ச் சேரும் பகை பழி பாவம் என்று
றச்சத்தோ டிந்நாற் பொருள். (02) அச்சத்தோடு இந் நாற் பொருள்.


பதவுரை

பிறன்= அயலானுடைய,

தாரம்= மனைவியை,

நச்சுவார்= இச்சிப்பவர்களை,

அறம்= தரும்மும்,

புகழ்= கீர்த்தியும்,

கேண்மை= சிநேகமும்,

பெருமை= மேன்மையும்,

இ நான்கும்= இந்த நாற்பொருளும்,

சேரா= அடையாவாம்;

பிறன்= பிறனுடைய,

தாரம்= மனைவியை,

நச்சுவார்= இச்சிப்பவர்களை,

பகை= விரோதமும்,

பழி= இகழ்ச்சியும்,

பாவம்=அதருமமும்,

என்று= என்று சொல்லிய,

அச்சத்தோடு= பயத்தோடு,

இ நால் பொருள்= இந்த நான்கு பொருள்களும்,

சேரும்= அடையும்.

கருத்துரை
பிறன் மனைவியை இச்சிப்பவரைப் புண்ணியம், கீர்த்தி, சிநேகம், மேன்மை ஆகிய இந்நான்குஞ் சேராவாம். பிறன் மனைவியைரை இச்சிப்பவரைப் பகை, பழி, பாவம், பயம் ஆகிய இந்நான்குஞ் சேரும்.
விசேடவுரை
நன்கும்- எழுவாய், சேரா- பயனிலை. நாற்பொருள்- எழுவாய், சேரும்- பயனிலை.

தண்டியலங்காரம்

“விரவத் தொடுப்பது சமநிலை யாகும்.”

இது மூவினங்கலந்த சமநிலையணி.

பாடல்: 83 (புக்கவிடத்)

[தொகு]
புக்க விடத்தச்சம் போதரும்போ தச்சந் () புக்க இடத்து அச்சம் போதரும் போது அச்சம்
துய்க்குமிடத் தச்சந் தோன்றாமற்- காப்பச்ச ()துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமல் - காப்பு அச்சம்
மெக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ? () எக்காலும் அச்சம் தருமால் எவன் கொலோ
வுட்கான் பிறனில் புகல். (03) உட்கான் பிறன் இல் புகல்.


பதவுரை

புக்க இடத்து= பிறன் மனையாளிடத்திற் போகும்போதும்,

அச்சம்= பயம்;

துய்க்கும் இடத்து= அநுபவிக்கும் போதும்,

அச்சம்= பயம்;

தோன்றாமல்= புணர்ச்சி தோன்றாமல்,

காப்பு= காத்தலும்,

அச்சம்= பயம்;

எ காலும்= எந்நாளும்,

அச்சம்= பயத்தை,

தருமால்= கொடுக்கும், (ஆகையால்)

உட்கான்= அஞ்சாதவனாய்,

பிறன் இல்= பிறன் மனையாளிடத்து,

புகல்= பிரவேசித்தல்,

எவன் கொல்= என்ன பலன் குறித்தோ?

கருத்துரை
பிறன் மனையாளிடத்துப் போகும்போதும் பயம், வரும்போதும் பயம், அநுபவிக்கும்போதும் பயம், புணர்ச்சி தோன்றாது காத்தலும் பயம், எந்நாளும் பயமாகையால் அஞ்சாது பிறன் மனையாளிடத்துப் பிரவேசித்தலென்ன பயன்?
விசேடவுரை
புகழ்- எழுவாய், எவன்கொல்- பயனிலை, பிறனில்- செயப்படுபொருள்.

பாடல்: 84 (காணிற்)

[தொகு]
காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால்குறையு () காணில் குடிப் பழி ஆம் கை உறில் கால் குறையும்
மாணின்மை செய்யுங்கா லச்சமா- நீணிரயத் ()மாண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம்- நீள் நிரயம்
துன்பம் பயக்குமாற் றுச்சாரி! நீகண்ட () துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட
வின்ப மெனக்கெனைத்தாற் கூறு. (04) இன்பம் எனக்கு எனைத்தால் கூறு.


பதவுரை

துச்சாரி= காமுகனே!

காணின்= பிறன் மனையாளைக் கூடுகையிற் கண்டால்,

குடி= தன் குடிக்கு,

பழியாம்= இகழ்ச்சியாம்;

கை உறின்= அகப்படில்,

கால்குறையும்= கால் வெட்டப்படும்;

மாண்= பெருமை,

இன்மை= இல்லாமை,

செய்யுங்கால்= செய்யுமிடத்து,

அச்சமாம்= பயமாகும்;

நீள்= நீண்ட,

நிரயம்= நரகத்தில்,

துன்பம்= துயரத்தை,

பயக்குமால்= கொடுக்கும் ஆகையால்,

நீ கண்ட= நீ அறிந்த,

இன்பம்= இன்பமானது,

எனைத்து= எத்தன்மையுடையது?

எனக்கு= என்றனுக்கு,

கூறு= சொல்லு.

கருத்துரை
காமுகனே! பிறன் மனைவியைக் கூடுகையில் பிறர் கண்டால் தன்குடிக்குப் பழிப்பாகும்; அகப்படில் கால்குறைந்து போம்; அநுபவிக்கும்போது பயமாகும்; நரகத்தில் துயரத்தைக் கொடுக்கும்; நீ கண்ட இன்பம் எத்தன்மையுடையது? எனக்குச் சொல்.
விசேடவுரை
நீ- எழுவாய், கூறு- பயனிலை, இன்பம்- செயப்படு பொருள். ஆல்- அசை.

பாடல்: 85 (செம்மையொன்)

[தொகு]
செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் () செம்மை ஒன்று இன்றிச் சிறியார் இனத்தராய்
கொம்மை வரிமுலையா டோண்மரீஇ- உம்மை ()கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே யிம்மை () வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை
யலியாகி யாடியுண் பார். (05) அலி ஆகி ஆடி உண்பார்.


பதவுரை

செம்மை= நடுவுநிலைமை,

ஒன்று இன்றி= சிறிதுமில்லாது,

சிறியார்= சிறியார்கள்,

இனத்தர் ஆய்= இனமுடையவராய்,

கொம்மை= திரட்சியும்,

வரி= தேமலும் பொருந்திய,

முலையாள்= முலைகளையுடைய பெண்களின்,

தோள்= தோள்களை,

மரீஇ= பொருந்தி,

உம்மை= முற்பிறப்பில்,

வலியால்= தமது வல்லமையால்,

பிறர்= அந்நியருடைய,

மனைமேல்= மனையவளிடத்தில்,

சென்றார்= போனவர்கள்,

இம்மை= இப்பிறப்பில்,

அலி ஆகி= பேடிகளாகி,

ஆடி= கூத்தாடி,

உண்பார்= உண்பார்கள்.

கருத்துரை
நன்மனமில்லாது, சிறியவர்கள் இயல்பினையுடையவர்களாய் முற்பிறப்பில் தமது வல்லமையால் பிறர் மனைவியைச் சேர்ந்தவர்கள், இப்பிறப்பில் பேடிகளாய்க் கூத்தாடி உண்பார்கள்.
விசேடவுரை
சென்றார்- எழுவாய், உண்பார்- பயனிலை. ஏ- அசை.

பாடல் 86 (பல்லாரறிய)

[தொகு]

பல்லா ரறியப் பறையறைந்து நாட்கேட்டுக் () பல்லார் அறியப் பறை அறைந்து நாள் கேட்டு

கல்யாணஞ் செய்து கடிபுக்க-மெல்லியற் ()கல்யாணம் செய்து கடி புக்க- மெல் இயல்

காதன் மனையாளு மில்லாளா வென்னொருவ () காதன் மனையாளும் இல்லாள் ஆ என் ஒருவன்

னேதின் மனையாளை நோக்கு. (06) ஏதில் மனையாளை நோக்கு.


பதவுரை

நாள்= சுபதினத்தை,

கேட்டு= கேட்டு,

பல்லார்= பலரும்,

அறிய= அறியும்படி,

பறை அறைந்து= மணப்பறை யடித்து,

கல்யாணஞ் செய்து= விவாகம் பண்ணி,

கடி= காவலில்,

புக்க= புகுந்த,

மெல்= மெல்லிய,

இயல்= இயல்பினையுடைய,

காதல்= இச்சிக்கப்பட்ட,

மனையாளும்= மனைவியும்,

இல்லாள் ஆ= தன் வீட்டில் உள்ளவளாக,

ஒருவன்= ஒருவன்,

ஏதில்= அயலாருடைய,

மனையாளை= மனைவியை,

நோக்கு= பார்க்கும் பார்வை,

என்= யாது?

கருத்துரை
ஒருவன் பிறன் மனையாளைத் தன் மனையாளாகப் பார்க்கும் பார்வை என்ன?
விசேடவுரை
நோக்கு- எழுவாய், என்- பயனிலை, ஏதின் மனையாளை- செயப்படுபொருள்.

பாடல் 87 (அம்பலயலெடுப்ப)

[தொகு]

அம்ப லயலெடுப்ப வஞ்சித் தமர்பரீஇ () அம்பல் அயல் எடுப்ப அஞ்சி தமர் பரீஇ

வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று-நம்பு ()வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று- நம்பு

நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின் () நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்

றலைநக்கி யன்ன துடைத்து. (07) தலை நக்கி அன்னது உடைத்து.


பதவுரை

அயல்= அயலார்,

அம்பல் எடுப்ப= புறங்கூற,

அஞ்சி= பயந்து,

தமர்= உறவினர்,

பரீஇ= வருந்த,

வம்பலன்= அயலானுடைய,

பெண்= மனையாளை,

மரீஇ= தழுவி,

மைந்து= மயக்கத்தை,

உற்று= பொருந்தி,

நம்பும்= நம்பியிருக்கிற,

நிலைமை இல்= நிலையில்லாத,

நெஞ்சத்தான்= மனமுடையவன்,

துப்புரவு= அநுபவம்,

பாம்பின்= பாம்பினது,

தலை= தலையை,

நக்கி அன்னது= நக்கி இன்பமடைந்தாற் போலும்,

உடைத்து= தன்மையுடையது.

கருத்துரை
பிறன் மனைவியைத் தழுவி மயக்கமடைந்து நம்பு மனமுடையவன் அநுபவம், பாம்பின் தலையை நக்கினாற்போலும் உள்ளது.
விசேடவுரை
துப்புரவு- எழுவாய், உடைத்து- பயனிலை.

பாடல் 88 (பரவா)

[தொகு]

பரவா வெளிப்படாப் பல்லோர்கட் டங்கா () பரவா வெளிப்படா பல்லோர் கண் தங்கா

வுரவோர்கட் காமநோ யோஒ-கொடிதே ()உரவோர்கள் காம நோயோஒ - கொடிதே

விரவாரு ணாணுப் படலஞ்சி யாது () விரவார் உள் நாணுப்படல் அஞ்சி யாதும்

முரையா துள்ளாறி விடும். (08) உரையாது உள் ஆறி விடும்.


பதவுரை

உரவோர்கள்= விவேகிகள்,

காமம்= காமமானது,

பரவா= பரவாது,

வெளிப்படா= வெளியாகாது,

பல்லோர்கண்= பல்லோரிடத்திலும்,

தங்கா= தங்காது,

நோய்= அக்காமத்தால் வரும் நோயானது,

ஓ ஒ கொடிது= மிகவும் கொடிது;

விரவாருள்= கலவாதவரிடத்து,

நாணுப்படல்= வெட்கமடைந்து,

அஞ்சி= பயந்து,

யாதும்= யாதொன்றும்,

உரையாது= சொல்லாது,

உள் ஆறிவிடும்= உள்ளுக்குள்ளே தணியும்.


கருத்துரை
அறிவுடையோர்கள் காமமானது பரவாமலும், வெளிப்படாமலும், பலரிடத்துத் தங்காமலும், கலவாரிடத்து அஞ்சிச் சொல்லாது உள்ளுக்குள்ளே தணியும்.
விசேடவுரை
நோய்- எழுவாய், ஆறிவிடும்- பயனிலை. ஏ- அசை. ‘விரவாருள்’ என்றது பகைவரிடத்து என்பாருமுளர்.

காக்கைபாடினியார் சூத்திரம்

“குறிநெடி லளபெடைக் குறிப்பா கும்மே.”

பாடல் 89 (அம்புமழலு)

[தொகு]

அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் () அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும்

வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்-வெம்பிக் ()வெம்பிச் சுடினும் புறம் சுடும் - வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம () கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம்

மவற்றினு மஞ்சப் படும். (09) அவற்றினும் அஞ்சப் படும்.


பதவுரை

அம்பும்= அஸ்திரமும்,

அழலும்= அக்கினியும்,

அவிர்= பிரகாசிக்கும்,

கதிர்= கிரணங்களையுடைய,

ஞாயிறும்= சூரியனும்,

வெம்பி= கனன்று,

சுடினும்= சுட்டாலும்,

புறம் சுடும்= மேலே சுடும்;

வெம்பி= கனன்று,

மனத்தை= இதயத்தை,

கவற்றி= கவலைப்படுத்தி,

சுடுதலால்= சுடுகின்றபடியால்,

காமம்= காமமானது,

அவற்றினும்= அம்பு நெருப்பு சூரியன் இவற்றைப் பார்க்கிலும்,

அஞ்சப்படும்= கொடியதென்று அஞ்சப்படும்.

கருத்துரை
காமமானது, அம்பிலும் அக்கினியிலும் சூரியனிலும் கொடிது என்பதாம்.
விசேடவுரை
காமம்- எழுவாய், அஞ்சப்படும்- பயனிலை.

பாடல் 90 (ஊருளெழுந்த)

[தொகு]

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு () ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு

நீருட் குளித்து முயலாகு- நீருட் ()நீருள் குளித்தும் உயல் ஆகும் - நீருள்

குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி () குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி

யொளிப்பினுங் காமஞ் சுடும். (60) ஒளிப்பினும் காமம் சுடும்.

பதவுரை

ஊருள்= ஊரில்,

எழுந்த= எழும்பிய,

உரு= வெப்பம்,

கெழு= பிரகாச மிகுந்த,

செம் தீக்கு= செந் நெருப்புக்கு,

நீருள்= தண்ணீரில்,

குளித்தும்= மூழ்கியும்,

உயல் ஆகும்= பிழைக்கலாம்;

காமம்= காமமானது,

நீருள்= தண்ணீரில்,

குளிப்பினும்= குளித்தாலும்,

சுடும்= சுட்டுவிடும்;

காமம்= காமமானது,

குன்று ஏறி= மலைமேல் ஏறி,

ஒளிப்பினும்= ஒளித்தாலும்,

சுடும்= சுட்டுவிடும்.

கருத்துரை
தூமத் தீக்குத் தப்பலாம்; காமத் தீக்குத் தப்பலாகாது.
விசேடவுரை
தூமம் என்பது புகை. காமம்- எழுவாய், சுடும்- பயனிலை. ஏ- அசை.

பார்க்க

[தொகு]
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
[[]]
நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
பொருட்பால்
நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி