உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

[தொகு]

1. அறத்துப்பால்: துறவறவியல்

[தொகு]

மூன்றாம் அதிகாரம் யாக்கை நிலையாமை

{அதாவது, சரீரமானது நிலைநில்லாமையாம்}

பாடல்: 21 (மலைமிசைத்)

[தொகு]

மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் மலை மிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையீர் - நிலமிசைத் தலைமிசைக் கொண்ட குடையீர் - நிலம் மிசைத்

துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லா துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்

லெஞ்சினா ரிவ்வுலகத் தில். (01) எஞ்சினார் இவ் உலகத்து இல்.


பதவுரை
மலை= மலையின்,
மிசை- மேல்,
தோன்றும்- உதிக்கும்,
மதியம்போல்= சந்திரனைப் போல,
யானை= யானையின்,
தலைமிசை= தலைமேல்,
கொண்ட= கவியக்கொண்ட,
குடையர்= புடையையுடைய மன்னர்களும்,
நிலமிசை= பூமிமேல்,
துஞ்சினார் என்று= இறந்தார் என்று,
எடுத்து= பிறரால் எடுத்து,
தூற்றப்பட்டார்= தூறு சொல்லப்பட்டார்கள்,
அல்லால்= அல்லாமல்,
எஞ்சினார்= உயிரோடிருந்தார்,
இ உலகத்து= இந்த உலகத்தில்,
இல்= ஒருவருமில்லை.


கருத்துரை
யானைமேல் ஏறிய அரசர்களும், இறந்தார்களென்று சொல்லப்பட்டார்களேயல்லாமல், இவ்வுலகத்து உயிரோடு வாழ்ந்தவர்கள் ஒருவருமில்லை.
விசேடவுரை
எஞ்சினார்- எழுவாய், இல்- பயனிலை.

பாடல்: 22 (வாழ்நாட்)

[தொகு]
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் () வாழ் நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள் ()வீழ் நாள் படாது எழுதலால் - வாழ் நாள்
ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு () உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல். (02) நிலவார் நிலம் மிசை மேல்.
பதவுரை
வாழ்நாட்கு= வாழும் நாள்களுக்கு,
அலகு ஆ(க)= அளவு மரக்காலாக,
வயங்கு= பிரகாசிக்கும்,
ஒளி= கிரணங்களையுடைய,
மண்டிலம்= சூரியனானவன்,
வீழ்நாள்= வீழுங்காலம்,
படாது= உண்டாகாமல்,
எழுதலால்= உதயமாதலால்,
வாழ்நாள்= வாழுநாள்,
உலவாமுன்= கெடாமுன்,
ஒப்புரவு= தருமத்தை,
ஆற்றுமின்= செய்யங்கள்!,
யாரும்= யாவரும்,
நிலமிசைமேல்= நிலத்தின்மேல்,
நிலவார்= நிலைக்கமாட்டார்.
கருத்துரை
யாரும் உலகத்தில் நிலைநிற்க மாட்டார்கள்; உங்கள் ஆயுள் கெடுமுன்னமே தருமத்தைச் செய்யுங்கள்.
விசேடவுரை
நீங்கள்- தோன்றா எழுவாய், ஆற்றுமின்- பயனிலை, ஒப்புரவு,செயப்படுபொருள்.

பாடல்: 23 (மன்றங்)

[தொகு]

மன்றங் கறங்க மணப்பறை யாயின () மன்றம் கறங்க மணப் பறை ஆயின

வன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ()அன்று அவர்க்கு ஆங்கே பிணப் பறையாய்ப் - பின்றை

யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே () ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்து போம் ஆறே

வலிக்குமா மாண்டார் மனம். (03) வலிக்குமாம் மாண்டார் மனம்.

பதவுரை
மன்றம்= சபையில்,
கறங்க= சப்திக்க,
மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்,
அன்று= அன்றைக்கே,
அவர்க்கு= அம்மாப்பிள்ளைக்கு,
ஆங்கே= அவ்விடத்தே,
பிணப்பறையாய்= பிணக்கோலத்திற்குக் கொட்டும்பறையாய்,
பின்றை= பின்பு,
ஒலித்தலும்= சப்தித்தலும்,
உண்டாம் என்று= உண்டாகுமென்று நினைத்து,
உய்ந்துபோம்= பிழைத்துப் போகிற,
ஆறு= வழியை,
வலிக்கும்= துணிந்து நிற்கும்,
மாண்டார்= பெரியோர்கள்,
மனம்= இருதயம்.
கருத்துரை
மணத்திற்குக் கொட்டும் பறைகளே பிணத்திற்குக் கொட்டும் பறைகளாமென்று நினைத்துப் பெரியோர்கள் மனம் பிழைக்கும் வழியைத் துணிந்து நிற்கும்.
விசேடவுரை
மனம்- எழுவாய், வலிக்கும்- பயனிலை, ஆறு- செயப்படுபொருள்.

பாடல்: 24 (சென்றே)

[தொகு]
சென்றே யெறிப வொருகால் சிறுவரை () சென்றே எறிப ஒருகால் சிறு வரை
நின்றே யெறிப பறையினை - நன்றேகாண் ()நின்றே எறிப பறையினை - நன்றே காண்
முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் () முக் காலைக் கொட்டின் உள் மூடித் தீக் கொண்டு எழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. (04) செத்தாரைச் சாவார் சுமந்து.


பதவுரை
சென்று= போய்,
பறையினை= பிணப்பறையினை,
ஒருகால்= ஒருமுறை,
எறிப= அடிப்பார்கள்;
சிறுவரை= சற்றுநேரம்,
நின்று= நிறுத்தி, (அப்பறையினை),
எறிப= இரண்டாமுறை அடிப்பார்கள்;
முக்காலை= மூன்றாமுறை,
கொட்டின்= அடித்தமாத்திரத்தில்,
உள்= பாடையினிடத்து,
மூடி= பிணத்தைச் சீலையால் மூடி,
தீ= நெருப்பை,
கொண்டு= சட்டியிற்கொண்டு,
செத்தாரை= இறந்தவரை,
சாவார்= இனி யிறப்பவர்கள்,
சுமந்து= தோள்களிற் சுமந்து,
எழுவர்= மயானத்திற்கு எழுவர்,
நன்றே காண்= (இவ்வுலக இயற்கையை) நன்றாகப் பார்.
கருத்துரை
மூன்றுமுறை பறையறைந்த மாத்திரத்தில் பிணத்தைப் பாடையில் வைத்துச் சீலையால் மூடித் தீயுடன் சுடலைக்குக் கொண்டுபோவார்கள்.
விசேடவுரை
தொல்காப்பியம் "அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே" - என்ற சூத்திரப்படிப் பலர்பால் விகுதி பெற்றது. சாவார்- எழுவாய், எழுவர்- பயனிலை, செத்தாரை- செயப்படுபொருள். நீ- தோன்றா எழுவாய், காண்- பயனிலை. ஏ- இரண்டும் அசைகள்.

பாடல்: 25 (கணங்கொண்டு)

[தொகு]
கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் () கணம் கொண்டு சுற்றத்தார் கல் என்று அலறப்
பிணங்கொண்டு காட்டுய்ப்பார் கண்டு - மணங்கொண்டீண் ()பிணம் கொண்டு காட்டு உய்ப்பார் கண்டு - மணம் கொண்டு ஈண்டு
டுண்டுண்டுண் டென்னு முணர்வினாற் சாற்றுமே () உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ ணென்னும் பறை. (05) டொண் டொண் டொண் என்னும் பறை.
பதவுரை
கணம் கொண்டு= கூட்டம் கூடிக்கொண்டு,
சுற்றத்தார்= இனத்தார்,
கல்லென்று= கலீல் என்னுஞ் சத்தம் உண்டாக,
அலற= புலம்ப,
பிணம்= சவத்தை,
கொண்டு= எடுத்துக்கொண்டு,
காடு= சுடுகாட்டில்,
உய்ப்பார்= செலுத்துபவரை,
கண்டும்= பார்த்திருந்தும்,
மணம்கொண்டு= விவாகஞ் செய்துகொண்டு,
ஈண்டு= இவ்விடத்தில்,
உண்டு உண்டு உண்டு என்னும்= (இல்வாழ்க்கை) உண்டுஉண்டு உண்டு என்னும்,
உணர்வினான்= அறிவீனனுக்கு,
டொண் டொண் டொண் என்னும்= டொண் டொண் டொண் என்னும் (ஓசையுள்ள),
பறை= சாப்பறை,
சாற்றும்= (சரீர நில்லாமையை) அறிவிக்கும்.
கருத்துரை
இனத்தார் அழப் பிணத்தைக் கொண்டு போவாரைக் கண்டிருந்தும் இல்வாழ்க்கையை விரும்பினவனுக்குச் சரீர நில்லாமையைச் சாப்பறை அறிவிக்கும்.
விசேடவுரை
பறை- எழுவாய், சாற்றும்- பயனிலை.

பாடல் 26 (நார்த்தொடுத்)

[தொகு]
நார்த்தொடுத் தீர்க்கிலெ னன்றாய்ந் தடக்கிலென் () நார்த் தொடுத்து ஈர்க்கில் என், நன்று ஆய்ந்து அடக்கில் என்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் - பழிக்கிலென் ()பார் துழிப் பெய்யில் என் பல்லோர் - பழிக்கில் என்
தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங் () தோல் பை உள் நின்றுதொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால். (06) கூத்தன் புறப்பட்டக் கால்.
பதவுரை
தோற்பை= உடலாகிய பை,
உள்= உள்ளே,
நின்று= இருந்து,
தொழில்= எத்தொழில்களையும்,
அற= முற்றாக,
செய்து= பண்ணி,
ஊட்டும்= உண்பிக்கும்,
கூத்தன்= ஆத்மாவானது,
புறப்பட்டக்கால்= வெளிப்பட்டால்,
நார்= நாரினால்,
தொடுத்து= (அவ்வுடலைக்) கட்டி,
ஈர்க்கில் என்= இழுத்தாலென்ன?
பார்= பூமியின்,
துழி= வெட்டுப்பள்ளத்தில்,
பெய்யில் என்= போட்டாலென்ன?
பல்லோர்= பலரும்,
பழிக்கில் என்= பழித்தாலென்ன?
கருத்துரை
உயிர்போன பின்பு உடலை எவ்விதஞ் செய்யினும் பயனென்ன?
விசேடவுரை
பிறர்- தோன்றா எழுவாய், இழுத்தல் முதலிய - பயனிலை, உடல்- செயப்படுபொருள்.
தொல்காப்பியம்-வினையியல்-32-ஆம் சூத்திரம்.
"பின்முன் கால்கடை வழியிடத் தென்னு
மன்ன மரபிற் காலங் கண்ணிய
வென்ன கிளவியு மவற்றியல் பினவே."
இவ்விதியால் ‘புறப்பட்டக்கால்’வினையெச்சம். பார்த்துழி யென்றதைக் கண்டுழியென்பாரு முளர்.

பாடல் 27 (படுமழை)

[தொகு]
படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் () படு மழை மொக்குளில் பல் காலுந் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றந் ()கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேமியா மென்றுணருந் திண்ணறி வாளரை () தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பாரியார் நீணிலத்தின் மேல். (07) நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்.
பதவுரை
படு= பெய்கிற,
மழை= மழையினது,
மொக்குளில்= குமிழியைப்போல,
பல்காலமும்= பலகாலமும்,
தோன்றி= உண்டாகி,
கெடும்= அழியும்,
இது= இஃது,
ஓர்= ஒரு,
யாக்கை என்று= உடலென்று,
எண்ணி= நினைத்து,
தடுமாற்றம்= பிறவித் துன்பத்தை,
தீர்ப்பேம்= நீக்குவோம்,
யாம் என்று= நாமென்று,
உணரும்= அறியும்,
திண்= வலிய,
அறிவாளரை= விவேகிகளை,
நீள்= நீண்ட,
நிலத்தின்மேல்= பூமியிடத்து,
நேர்ப்பார்= நேரானவர்,
யார்= எவர்?
கருத்துரை
குமிழியைப்போல் தோன்றி யழியும் உடலென்றெண்ணிப் பிறவித்துன்பத்தை நீக்கும் விவேகிகளை யொப்பானவர் யார்?
விசேடவுரை
நேர்ப்பார்- எழுவாய், யார்- பயனிலை.

பாடல் 28 (யாக்கையை)

[தொகு]
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற () யாக்கையை யாப்பு உடைத்து ஆப் பெற்றவர் தாம் பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை ()யாக்கையால் ஆய பயன் கொள்க - யாக்கை
மலையாடு மஞ்சுபோற் றோன்றிமற் றாங்கே () மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே
நிலையாது நீத்து விடும். (08) நிலையாது நீத்து விடும்.
பதவுரை
யாக்கையை= உடலை,
யாப்பு உடைத்து ஆ= பலமுள்ளதாக,
பெற்றவர்= அடைந்தவர்கள்,
தாம்= தாங்கள்,
பெற்ற= அடைந்த,
யாக்கையால்= அவ்வுடலால்,
ஆய= ஆகிய,
பயன்= தருமப்பிரயோசனத்தை,
கொள்க= கொள்ளக்கடவர்கள்;
யாக்கை= உடலானது,
மலை= மலையில்,
ஆடும்= சஞ்சரிக்கும்,
மஞ்சுபோல்= மேகம்போல,
தோன்றும்= தோற்றமாகி,
நிலையாது= நில்லாமல்,
நீத்துவிடும்= கெட்டுவிடும்.
கருத்துரை
உடலைப் பெற்றவர்கள் தங்கள் உடலால் ஆகிய தருமபபயனைக் கொள்ளக்கடவர்கள்; உடலோ மலைமேல் தோன்றும் மேகம்போல் தோன்றி யழியும்.
விசேடவுரை
பெற்றவர்- எழுவாய், கொள்க- பயனிலை, பயன்- செயப்படுபொருள்.

பாடல் 29 (புன்னுனி)

[தொகு]
புன்னுனிமே னீர்போ னிலையாமை யென்றெண்ணி () புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி
யின்னினியே செய்க வறவினை - இன்னினியே ()இன் இனியே செய்க அறம் வினை - இன் இனியே
நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் () நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலறச்
சென்றா னெனப்படுத லால். (09) சென்றான் எனப் படுதலால்.


பதவுரை
இன்னினியே = இப்பொழுதே இப்பொழுதே,
நின்றான்= நின்றிருந்தான்,
கிடந்தான்= படுத்திருந்தான்,
தன்= தன்னுடைய,
கேள்= இனத்தவர்,
அலற= புலம்ப,
சென்றான்= இறந்தான்,
எனப்படுதலால்= என்று சொல்லப்படுதலால்,
புல்= புல்லின்,
நுனிமேல்= நுனியிடத்து,
நீர்போல= பனிநீரைப்போல,
நிலையாமை என்று= சரீர நில்லாதென்று,
எண்ணி= நினைத்து,
இன்னினியே= இப்பொழுதே இப்பொழுதே,
அறம் வினை= தருமத்தை,
செய்க= செய்யக்கடவீர்.
கருத்துரை
இப்பொழுதே இருந்தான், இறந்தான் என்று சொல்லப்படுதலால் சரீரநில்லாதென்றெண்ணி இப்பொழுதே தருமஞ் செய்யக்கடவீர்கள்.
விசேடவுரை
தொல்காப்பியம்
"தானென் கிளவி யொருமைக் குரித்தே."
நீங்கள்- தோன்றா எழுவாய், செய்யக்கடவீர்- பயனிலை, அறவினை- செயப்படுபொருள்.

பாடல் 30 (கேளாதே)

[தொகு]
கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி () கேளாதே வந்து கிளைகள் ஆய் இல் தோன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே ()வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல () சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. (10) யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.
பதவுரை
மாந்தர்கள்= மனிதர்கள்,
கேளாது= கேளாமல்,
வந்து= வந்து,
கிளைகள் ஆய்= உறவினர்களாய்,
இல்= மனைவாழ்க்கையில்,
தோன்றி= பிறந்து,
வாளாதே= சொல்லாமலே,
மரன்= மரத்தில்,
சேக்கை= கூட்டை,
ஒழிய= விட்டு,
சேண்= தூரத்தில்,
நீங்கு= நீங்கும்,
புள் போல= பறைவையைப் போல,
யாக்கை= உடலை,
தமர்க்கு= உறவினர்களுக்கு,
ஒழிய நீத்து= ஒழித்துவிட்டு,
வாளாது= சொல்லாது,
போவர்= இறந்துபோவார்கள்.
கருத்துரை
மனிதர்கள் மனைவாழ்க்கையிற் பிறந்து தங்கள் உடலை உறவின்முறையார்களுக்கு ஒழித்துவிட்டு இறந்து போவார்கள்.
விசேடவுரை
மாந்தர்கள்- எழுவாய், போவர்- பயனிலை.
யாக்கை நிலையாமை முற்றிற்று
[தொகு]

பார்க்க

[தொகு]
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரையுடன்
நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
நாலடியார்
[[]]
[[]]
[[]]
[[]]
[[]] :[[]] :[[]]