நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
Appearance
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]அறத்துப்பால்: துறவறவியல்
[தொகு]நான்காம் அதிகாரம் அறன் வலியுறுத்தல்
[அஃதாவது, தருமத்தின் பலனை அறிவித்தலாம்]
பாடல்: 31 (அகத்தாரே)
[தொகு]அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்| அகத்தாரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி| புகத் தாம் பெறாஅர் புறங்கடை - பற்றி
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத்| மிகத் தாம் வருந்தி யிருப்பரே மேலைத்
தவத்தாற் றவஞ்செய்யா தார். (01)| தவத்தால் தவம் செய்யாதார்.
- பதவுரை
- மேலை= முற்பிறப்பில்;
- தவத்தால்= தவங்காரணமாக;
- தவம்= நற்றவம்;
- செய்யாதார்= செய்யாதவர்கள்;
- அகத்தாரே= இல்வாழ்க்கையாரே;
- வாழ்வார் என்று= வாழ்பவர்கள் என்று;
- அண்ணாந்து= தலைநிமிர்ந்து;
- நோக்கி= பார்த்து;
- தாம்புக= தாம் உள்ளே நுழைய;
- பெறார்= பெறாதவர்களாய்;
- புறங்கடை= தலைவாயிலை;
- பற்றி= பிடித்துநின்று;
- மிக= மிகவும்;
- தாம்= தாங்கள்;
- வருந்தி= வருத்தப்பட்டு;
- இருப்பர்= இருப்பார்கள்.
- கருத்துரை
- முற்பிறப்பில் தவஞ்செய்யாதார் இப்பிறப்பில் இல்வாழ்க்கையாரே வாழ்பவர்கள் என்று தலைவாயிலைப்பற்றி உள்ளே நுழையாதவர்களாய் வருத்தப்பட்டிருப்பார்கள்.
- விசேடவுரை
- தவஞ்செய்யாதார்- எழுவாய், இருப்பர்-பயனிலை, அண்ணார்த்தல் என்னுந் தொழிற்பெயர் வினையாங்கால் அண்ணாருகிறது என்றாகும். அண்ணார்ந்து இதில் ஒற்றுக்கெட்டது.
- தொல்காப்பியம்- பெயரியல்- 30ஆம் சூத்திரம்.
- “தாமென் கிளவி பன்மைக் குரித்தே.”
பாடல்: 32 (ஆவாதா)
[தொகு]- ஆவாநா மாக்க நசைஇ யறமறந்து | ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து
- போவாநா மென்னாப் புலைநெஞ்சே - யோவாது | போவாம் நாம் என்னாப் புலை நெஞ்சே - ஓவாது
- நின்றுஞற்றி வாழ்தி யெனினுநின் வாழ்நாள்கள் | நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ் நாள்கள்
- சென்றன செய்வ துரை. (02) |சென்றன செய்வது உரை.
- பதவுரை
- ஆவாம்= வாழக்கடவோம்;
- நாம்= யாமென்று;
- ஆக்கம்= செல்வத்தை;
- நசைஇ= இச்சித்து;
- அறம்= தருமத்தை;
- மறந்து= மறந்துவிட்டு;
- போவாம்= இறந்துபோவோம்;
- நாம் என்னா= நாம் என்று எண்ணாத;
- புலை- இழிவான;
- நெஞ்சே= மனமே;
- ஓவாது= இடைவிடாது;
- நின்று= நிலைபெற்று;
- உஞற்றி= முயற்சி செய்து;
- வாழ்தி எனினும்= வாழ்வாயானாலும்;
- நின்= உன்னுடைய;
- வாழ்நாள்கள்= ஆயுள்கள்;
- சென்றன= போயின;
- செய்வது= (இனி நீ) செய்வதென்ன?
- உரை= சொல்.
- கருத்துரை
- மனமே! பல முயற்சிகள் செய்து வாழ்வாயானாலும், உன்னுடைய ஆயுள்கள் போயின; இனி நீ செய்வதென்ன சொல்.
- விசேடவுரை
- நீ- எழுவாய், உரை- பயனிலை, செய்வது- செயப்படுபொருள்.
பாடல்: 33 (வினைப்பயன்)
[தொகு]- வினைப்பயன் வந்தக்கால் வெய்ய வுயிரா () வினைப் பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
- மனத்தி னழியுமாம் பேதை - நினைத்ததனைத் ()மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்து அதனைத்
- தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத் () தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
- தெல்லை யிகந்தொருவு வார். (03) எல்லை இகந்து ஒருவுவார்.
- பதவுரை
- பேதை= அறிவில்லாதவன்;
- வினைப் பயன்= தீவினைப் பயன்;
- வந்தக்கால்= வந்தால்;
- வெய்ய= கொடிதாக;
- உயிரா= பெருமூச்செறிந்து;
- மனத்தின்= மனத்தினால் நினைந்து;
- அழியும்= அழிவான்;
- அதனை= அத்தீவினைப் பலனை;
- நினைத்து= ஆராய்ந்து;
- தொல்லையது என்று= முற்பிறப்பிற் செய்தது என்று;
- உணர்வாரே= அறிபவர்களே;
- தடுமாற்றத்து= பிறவித்துன்பத்தின்;
- எல்லை= பிரமாணத்தை;
- இகந்து ஒருவுவார்= கடந்து போவார்.
- கருத்துரை
- அறிவில்லாதவன் தீவினை வந்தால் மனத்தில் நினைத்து அழிவான். அத்தீவினை முன்வினை என்று அறிந்தவர்களே பிறவித் துன்பத்து அளவைக் கடப்பார்கள்.
- விசேடவுரை
- பேதை- எழுவாய், அழியும்- பயனிலை, உணர்வார்- எழுவாய், ஒருவுவார்- பயனிலை.
- யாப்பருங்கலம்
- “வெண்பா முதலா நால்வகைப் பாவு
- மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய.”
- -இவ்விதியால் வெண்பா பிராமணசாதியாம். தொன்னூல் விளக்கத்தினுங் காண்க.
பாடல்: 34 (அரும்பெறல்)
[தொகு]- அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் () அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
- பெரும்பயனு மாற்றவே கொள்க - கரும்பூர்ந்த ()பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பு ஊர்ந்த
- சாலவும் பின்னுதவி மற்றதன் () சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன்
- கோதுபோற் போகு முடம்பு. (04) கோது போல் போகும் உடம்பு.
- பதவுரை
- பெறல்= பெறுதற்கு;
- அரும்= அரிய;
- யாக்கையை= உடலை;
- பெற்ற= அடைந்த;
- பயத்தால்= பலனால்;
- பெரும்= பெரிய;
- பயனும்= கருமப்பலனையும்;
- ஆற்றவே= மிகவும்;
- கொள்க= கொள்ளக்கடவீர்கள்;
- கரும்பு= கரும்பிலிருந்து;
- ஊர்ந்த= (ஆலையாற்) பரவிய;
- சாறுபோல்= சாற்றைப் போல;
- சாலவும் = மிகவும்;
- பின் உதவி = (அத்தருமப் பலன்) பிற்காலத்து உதவியாம்;
- அதன் = அக்கரும்பின்;
- கோதுபோல் = சக்கை போல;
- உடம்பு= உடல்;
- போகும் = அழிந்து போகும்.
- கருத்துரை
- பெறுதற்கரிய உடல் அடைந்த பலனால் தருமப்பலனைக் கொள்ளக்கடவீர்கள். அப்பலன் கருப்பஞ்சாற்றைப் போலாம்; உடல் அதன் சக்கை போலாம்.
- விசேடவுரை
- (நீங்கள்)- தோன்றா எழுவாய், கொள்க- பயனிலை, பயன்-செயப்படுபொருள். மற்று-அசை. எவ்வகைப் பிறப்பிலு மக்கட் பிறப்பு மேலாகையால், ‘அரும்பெறல் யாக்கை’ என்றார்.
பாடல்: 35 (கரும்பாட்டிக்)
[தொகு]- கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் () கரும்பு ஆட்டி கட்டி சிறுகாலைக் கொண்டார்
- துரும்பெழுந்து வேங்காற் றுயராண் - டுழவார் ()துரும்பு எழுந்து வேம் கால் துயர் ஆண்டு - உழவார்
- வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் () வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
- வருங்காற் பரிவ திலர். (05) வரும் கால் பரிவது இலர்.
- பதவுரை
- கரும்பு= கரும்பை,
- ஆட்டி= ஆலையில் ஆட்டி,
- கட்டி= வெல்லக் கட்டியை,
- சிறுகாலை= முற்காலத்தில்,
- கொண்டார்= கொண்டவர்கள்,
- துரும்பு= அக்கரும்பின் துரும்பு,
- எழுந்து= தீயால் எழுந்து,
- வேம்கால்= வேகுங் காலத்து,
- ஆண்டு= அவ்விடத்து,
- துயர்= துன்பத்தால்,
- உழவார்= வருந்தார்;
- (அதுபோல) உடம்பின்= உடம்பாலாகிய,
- பயன்= தருமப்பலனை,
- வருந்தி= பிரயாசப்பட்டு,
- கொண்டார்= கைக்கொண்டவர்கள்,
- கூற்றம்= இயமன்,
- வருங்கால்= வரும்போது,
- பரிவது= வருந்துவது,
- இலர்= இல்லாதவர்களாவார்கள்.
- கருத்துரை
- வெல்லக்கட்டியைக் கொண்டவர்கள், கரும்பின் சக்கை வேங்காலத்து விசனப்படமாட்டார்கள்; அதுபோல, உடம்பாலாகிய தருமப்பலனைக் கொண்டவர்கள் இயமன் வரும்போது விசனப்பட மாட்டார்கள்.
- விசேடவுரை
- பயன்கொண்டார்- எழுவாய், பரிவதிலர்- பயனிலை.
பாடல் 36 (இன்றுகொல்)
[தொகு]- இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது () இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது
- பின்னையே நின்றது கூற்றமென் - றெண்ணி ()பின்னையே நின்றது கூற்றம் என்று- எண்ணி
- யொருவுமின் றீயவை யொல்லும் வகையான் () ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
- மருவுமின் மாண்டா ரறம். (06) மருவுமின் மாண்டார் அறம்.
- பதவுரை
- இன்றுகொல்= இன்றைக்கோ?
- அன்று கொல்= நாளைக்கோ?
- என்று கொல்= என்றைக்கோ?
- என்னாது= எண்ணாது,
- பின்றையே= பின்னையே,
- நின்றது= நிற்கின்றது,
- கூற்றம் என்று= இயமன் என்று,
- எண்ணி= நினைத்து,
- தீயவை= பாவங்களை,
- ஒருவுமின்= நீக்குங்கள்,
- மாண்டார்= பெரியோராற் சொல்லிய,
- அறம்= தருமங்களை,
- ஒல்லும் வகையால்= கூடியமாத்திரம்,
- மருவுமின்= பொருந்தும்படி செய்யுங்கள்.
- கருத்துரை
- இயமன், பின்னே நிற்கிறான் என்று எண்ணி அதருமத்தை நீக்கித் தருமத்தைச் செய்யுங்கள்.
- விசேடவுரை
- (நீங்கள்)- தோன்றா எழுவாய், ஒருவுமின்- பயனிலை, தீயவை- செயப்படுபொருள், நீங்கள்- எழுவாய், மருவுமின்- பயனிலை, அறம்- செயப்படுபொருள்.
பாடல் 37 (மக்களா)
[தொகு]- மக்களா லாய பெரும்பயனு மாயுங்கா () மக்களால் ஆய பெரும் பயனும் ஆயும் கால்
- லெத்துணையு மாற்றப் பலவானால் - தொக்க ()எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - தொக்க
- வுடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க் () உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
- கிடந்துண்ணப் பண்ணப் படும். (07) கிடந்து உண்ணப்படும்.
- பதவுரை
- மக்களால்= மனிதர்களால்,
- ஆய= உண்டாய,
- பெரும்= பெரிய,
- பயனும்= விளைவும்,
- ஆயுங்கால்= ஆராயுமிடத்து,
- எத்துணையும்= எவ்வளவும்,
- ஆற்ற= மிக,
- பல ஆனால்= பலவாயிருந்தால்,
- தொக்க= பொருந்திய,
- உடம்பிற்கே= உடலுக்கே,
- ஒப்புரவு= தருமத்தை,
- செய்து= பண்ணி,
- ஒழுகாது= நடவாமால்,
- உம்பர்= சுவர்க்கத்தில்,
- கிடந்து= இருந்து,
- உண்ண=அநுபவிக்க,
- பண்ண= தருமங்கள் செய்ய,
- படும்= தகும்.
- கருத்துரை
- நீங்கள் உங்கள் உடலுக்குத் தருமத்தைச் செய்யாது சுவர்க்கத்தில் இருந்து அநுபவிக்கத் தருமத்தைச் செய்யுங்கள்.
- விசேடவுரை
- (நீங்கள்) தோன்றா எழுவாய், பண்ணப்படும்- பயனிலை, அறங்களை- செயப்படுபொருள்.
பாடல் 38 (உறக்குந்)
[தொகு]- உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி () உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி
- யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் ()இறப்ப நிழல் பயந்தாங்கு - அறப் பயனும்
- தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் () தான் சிறிது ஆயினும் தக்கார் கைப் பட்டக்கால்
- வான்சிறிதாப் போர்த்து விடும். (08) வான் சிறிதாப் போர்த்து விடும்.
- பதவுரை
- உறக்கும்= கிள்ளியெடுக்கும்,
- துணையது= அளவினையுடையது,
- ஓர்= ஒரு,
- ஆலம் வித்து= ஆலம் விதையானது,
- ஈண்டி= நெருங்க வளர்ந்து,
- இறப்ப= மிகவும்,
- நிழல்= நிழலை,
- பயந்தாங்கு= கொடுத்தாற் போல,
- அறம்= தருமத்தின்,
- பயனும்= பலனும்,
- தான்= தான்,
- சிறிது ஆயினும்= சிறியதாயிருந்தாலும்,
- தக்கார்= பெரியோர்கள்,
- கைபட்டக்கால்= கையிற்பட்டால்,
- வான்= ஆகாயம்,
- சிறிதாக= சிறியதாக,
- போர்த்துவிடும்= மூடிவிடும்.
- கருத்துரை
- ஒரு ஆலம் விதை வளர்ந்து மிகவும் நிழலைக் கொடுத்தாற்போலத், தருமப்பலன் சிறியதானாலும் பெரியோர் கையிற் கொடுக்கப்பட்டால் அப்பலன் வானினும் பெரியதாயிருக்கும்.
- விசேடவுரை
- அறப்பயன்- எழுவாய், போர்த்துவிடும்- பயனிலை, உறக்கும் என்பதை உறங்கும் எனக் கூறினும் பொருந்தும்.
அரும்பதக் கொத்து: “உறக்கல் கறத்தல் விரலாற் கிள்ளுதல்.”
பாடல் 39 (வைகலும்)
[தொகு]- வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் ()வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார்
- வைகலும் வைகலை வைகுமென் - றின்புறுவர் () வைகலும் வைகலை வைகும் என்று - இன்புறுவர்
- வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் (09) வைகலும் வைகல் தம் வாழ் நாள் மேல் வைகுதல்
- வைகலும் வைத்துணரா தார். (09) வைகலும் வைத்து உணராதார்.
- பதவுரை
- வைகலும் = நாள்தோறும்,
- வைகல்= நாள் கழிதலை,
- தம்= தம்முடைய,
- வாழ்நாள்மேல்= ஆயுள்களின் மேல்,
- வைகுதல் வைத்து= செலவுநாளாக வைத்து,
- வைகலை= அந்த நாட்களை,
- உணராதார்= அறியாதார்,
- வைகலும்= நாள் தோறும்,
- வைகல் வர= தம் வாழ்நாள் கழிவுவர,
- கண்டும்= பார்த்தும்,
- அஃது= அதனை,
- உணரார்= அறியார்,
- வைகலும்= நாள்தோறும்,
- வைகலை= நாள்களை,
- வைகும் என்று= கழியும் என்று,
- இன்புறுவர்= இன்பத்தை அடைவர்.
- கருத்துரை
- நாள்தோறும் நாள் செல்லுதலைத் தம் வாழ்நாள் செலவுவரக்கண்டு அதையறியாமல் நாள்தோறும் நாள் செல்லுதலுக்கு இன்பத்தை யடைவர்.
- விசேடவுரை
- உணராதார்- எழுவாய், இன்புறுவர்- பயனிலை.
யாப்பருங்கலம்:(அகவல் வெண்பா)
- “அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்
- சீர்நிலை பெறூஉந் தொடைநிலை தெரியாது
- நடைவையி னோடி நெய்வார்ந் தன்ன
- நயமுடைத் தாகி பொருளொடு புணர்ந்து
- வெழுத்தறி யாதே.”
- -என்றது யாப்பருங்கல மேற்கோளாதல் அறிக. அணியியலிலுங் காண்க.
பாடல் 40 (மானவருங்)
[தொகு]- மான வருங்கல நீக்கி யிரவென்னு () மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்
- மீன விளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தா ()ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
- லூட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு () ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து இவ் உடம்பு
- நீட்டித்து நிற்கு மெனின். (10) நீட்டித்து நிற்கும் எனின்.
- பதவுரை
- ஈனத்தால்= இழிவால்,
- ஊட்டி= ஊட்டியக்கண்ணும்= இரந்து ஊட்டிய இடத்தும்,
- உறுதி= வலிமை,
- சேர்ந்து= பொருந்தி,
- இ உடம்பு= இவ்வுடல்,
- நீட்டித்து= நெடுநாள்,
- நிற்கும் எனின்= நிற்குமானால்,
- மானம்= அபிமானமாகிய,
- அரும்= அரிய,
- கலம்= ஆபரணத்தை,
- நீக்கி= தள்ளி,
- இரவு என்னும்= யாசகம் என்னும்,
- ஈனம்= கனவீனமான,
- இளிவினால்= அவமதிப்பால்,
- வாழ்வேன்மன்= உயிர் வாழ்வேன்.
- கருத்துரை
- இரந்து ஊட்டிய விடத்து, இவ்வுடம்பு நிலைநிற்குமானால் அபிமானம் என்கிற ஆபரணத்தைத் தள்ளிக் கனவீனமாகிய அவமதிப்பினால் உயிர் வாழ்வேன்.
- விசேடவுரை
- யான்- எழுவாய், வாழ்வேன்- பயனிலை, மன்- ஒழியிசை.
அறன் வலியுறுத்தல் முற்றிற்று
[தொகு]பார்க்க
[தொகு]- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- 2.இளமைநிலையாமை
- 3.யாக்கைநிலையாமை
- [[]]
- [[]]
- [[]]
- [[]]
- [[]] :[[]] :[[]]