நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]௧. அறத்துப்பால்: ௨. இல்லறவியல்
[தொகு]பதின்மூன்றாம் அதிகாரம் தீவினையச்சம்
[அஃதாவது, தீவினைக்கு அஞ்சுதலாம்]
பாடல்: 121 (தூக்கத்துட்)
[தொகு]துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா துக்கத்துள் தூங்கி துறவின் கண் சேர்கலா
மக்கட் பிணத்த சுடுகாடு - தொக்க மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்ட
புல்லறி வாளர் வயிறு. (01) புல் அறிவாளர் வயிறு. (௧)
- பதவுரை
துக்கத்துள்= துன்பத்தினிடத்து,
தூங்கி= மயங்கி,
துறவின்கண்= துறவறத்திலே,
சேர்கலா= அடையாத,
மக்கள்= மக்களின்,
பிணத்த= பிணங்களையுடையன,
சுடுகாடு= சுடுகாடுகள்,
தொக்க= நெருங்கிய,
விலங்கிற்கும்= மிருகங்களுக்கும்,
புள்ளிற்கும்= பறவைகளுக்கும்,
காடு= காடுகளாவன,
புலன்கெட்ட= அறிவுகெட்ட,
புல் அறிவு ஆளர்= அறிவீனருடைய,
வயிறு= வயிறுகள்.
- கருத்துரை
- மிருகங்கள் பறவைகள் இவற்றினுக்கு அறிவீனர்களுடைய வயிறுகளே சுடுகாடுகளாம்.
- விசேடவுரை
- வயிறு- எழுவாய், காடு- பயனிலை.
பாடல்: 122 (இரும்பார்க்குங்)
[தொகு]- இரும்பார்க்குங் காலரா யேதிலார்க் காளாய்க் () இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
- கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்குங் ()கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் - சுரும்பு ஆர்க்கும்
- காட்டுளாய் வாழுஞ் சிவலுங் குறும்பூழுங் () காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
- கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். (02) கூட்டுள் ஆய்க் கொண்டு வைப்பார். (௨)
பதவுரை: சுரும்பு= வண்டுகள்,
ஆர்க்கும்= சத்திக்கும்,
காட்டுள் ஆய்= காட்டிடமாய்,
வாழும்= வாழுகின்ற,
சிவலும்= கவுதாரியையும்,
குறும்பூழும்= காடையையும்,
கூட்டுள் ஆய்= கூட்டிடமாய்,
கொண்டு வைப்பார்= கொண்டுபோய் அடைப்பவர்கள்,
இரும்பு= விலங்கு,
ஆர்க்கும்= சத்திக்கும்,
காலர் ஆய்= அடிமையாய்,
ஏதிலார்க்கு= யாதொன்றும் இல்லாத அநாதைநிலைக்கு,
ஆள் ஆய்= ஆளாகி,
இரும் பார்= இருட்பூமியாகிய,
கழனியுள்= வயலிடத்தில்,
சேர்வர்=அடைவார்கள்.
கருத்துரை: இப்பிறப்பில் காடை, கவுதாரி முதலானவற்றைக் கூட்டில் அடைப்பவர்கள் மறுபிறப்பில் விலங்குபூண்டு நரகத்திலடைவார்கள்.
விசேடவுரை: வைப்பார்- எழுவாய், சேர்வார்- பயனிலை.
பாடல்: 123 (அக்கே)
[தொகு]- அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் () அக்கே போல் அம் கை ஒழிய விரல் அழுகி
- துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கா ()துக்கம் தொழு நோய் எழுபவே - அக்கால்
- லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற () அலவனை காதலித்து கால் முரித்து தின்ற
- பழவினை வந்தடைந்தக் கால். (03) பழ வினை வந்து அடைந்தக்கால். (௩)
பதவுரை: அ கால்= முற்பிறப்பில்,
அலவனை= நண்டுகளை,
காதலித்து= இச்சித்து,
கால் முரித்து= கால்களை ஒடித்து,
தின்ற= உண்ட,
பழ வினை= பழைய வினை,
வந்து அடைந்தக்கால்= வந்தால்,
அக்கே போல்= சங்குமணி போல்,
அம் கை= அகங்கை,
ஒழிய= தவிர,
விரல்= விரல்கள்,
அழுகி= அழுகி,
தொழு நோய்= குஷ்ட நோயில்,
துக்கம்= துன்பமடைந்து,
எழுப= திரிவார்கள்.
கருத்துரை: முற்பிறப்பில் நண்டுகளைத் தின்றவர்கள் இப்பிறப்பில் குஷ்ட வியாதி கொண்டு திரிவார்கள்.
விசேடவுரை: தொழுநோய்- எழுவாய், எழுப- பயனிலை. ஏ- அசை.
நன்னூல்- மெய்யீற்றுப் புணரியல்,
“அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்.”
இவ்விதியால் அகம்+கை= அங்கை ஆயிற்று.
பாடல்: 124 (நெருப்பழற்)
[தொகு]- நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉ () ;நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
- மெரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும் - பரப்பக் ()எரிப்ப சுட்டு எவ்வம் நோய் ஆக்கும் - பரப்ப
- கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் () கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
- கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (04) கடு வினையர் ஆகியார் சார்ந்து. (௪)
பதவுரை:
நெருப்பு= நெருப்பினது,
அழல்= வெம்மையை,
சேர்ந்தக்கால்= சேர்ந்தால்,
நெய் போல்வதூஉம்= நெய்போலக் குளிர்ச்சியை யுடையதும்,
எரிப்ப= எரிக்கும்படி,
சுட்டு= கொளுத்தி,
எவ்வம்= துன்பமாகிய,
நோய்= நோயை,
ஆக்கும்= உண்டாக்கும்; (அதுபோல),
கோடாரும்= நன்னடை பிறழாதவர்களும்,
கடு வினையர் ஆகியார்= கொடியவர்களை,
சார்ந்து= சேர்ந்து,
கோடி= நன்னடை பிறழ்ந்து,
பரப்ப= முகவும்,
கோடு= கொடிய,
வினையர் ஆகுவர்= வினையையுடையவர் ஆவார்கள்.
கருத்துரை: துன்மார்க்கரைச் சேர்ந்த நன்மார்க்கரும் துன்மார்க்கராவார்கள்.
விசேடவுரை: கோடார்- எழுவாய், ஆகுவர்- பயனிலை.
பாடல்: 125 (பெரியவர்)
[தொகு]- பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் () பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
- வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் ()வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
- வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே () வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
- தானே சிறியார் தொடர்பு. (05) தானே சிறியார் தொடர்பு. (௫)
பதவுரை: பெரியவர்= பெரியோர்,
கேண்மை= சிநேகம்,
பிறைபோல= இளம்பிறை போல,
நாளும்= எந்நாளும்,
வரிசை வரிசை ஆ= கிரமங் கிரமமாக,
நந்தும்= வளரும்;
சிறியார்= சிறியோர்கள்,
தொடர்பு= சிநேகம்,
வான்= ஆகாயத்திலே,
ஊர்= செல்லும்,
மதியம்போல்= பூர்ணசந்திரன் போல்,
வைகலும்= தினந்தோறும்,
வரிசையாய்= கிரமமாய்,
தானே= தனக்குத் தானே,
தேயும்= குறைந்துபோகும்.
கருத்துரை: பெரியோர்கள் சிநேகம் பிறைபோல வளரும்; சிறியோர்கள் சிநேகம் நிறைசந்திரன் குறைதல்போற் குறையும்.
விசேடவுரை: கேண்மை- எழுவாய், நந்தும்- பயனிலை, தொடர்பு- எழுவாய், தேயும்- பயனிலை. ஏகாரம்- அசை.
பாடல் 126 (சான்றோரென)
[தொகு]
- சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் () சான்றோர் என மதித்து சார்ந்தாய் மன் சார்ந்தாய்க்கு
- சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயிற் - சார்ந்தோய்கேள் ()சான்றாண்மை சார்ந்தார் கண் இல் ஆயின் - சார்ந்தோய் கேள்
- சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் () சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன்
- பாம்பகத்துக் கண்ட துடைத்து. (06) பாம்பு அகத்து கண்டது உடைத்து. (௬)
பதவுரை:
சான்றோர் என= பெரியோரென,
மதித்து= எண்ணி,
சார்ந்தாய் மன்= சேர்ந்தவனே,
சார்ந்தாய்க்கு= சேர்ந்த உனக்கு,
சான்றாண்மை= பெருந்தன்மை,
சார்ந்தார்கண்= நீ சேரப்பட்டவரிடத்து,
இல் ஆயின்= இல்லாவிடில்,
சார்ந்தோய்= சேர்ந்தவனே,
கேள்= கேட்பாயாக,
சாந்து= கலவைச் சாந்து,
அகத்து= உள்ளிடத்து,
உண்டு என்று= இருக்கிறதென்று,
செப்பு= செப்பை,
திறந்து= திறந்து,
ஒருவன்= ஒருவன்,
அகத்து= உள்ளே,
பாம்பு= பாம்பை,
கண்டது உடைத்து= கண்டது போலும்.
கருத்துரை:
நன்மார்க்கம் உண்டென்று நீ சேரப்பட்டவரிடத்துத் துன்மார்க்கம் உண்டாயிருத்தல் எதுபோலெனில், ஒருவன் செப்பின் உள்ளே சாந்து உண்டென்று திறந்து பாம்பைக் கண்டாற் போலும்.
விசேடவுரை: ஒருவன்- எழுவாய், உடைத்து- பயனிலை, தன்மையை- செயப்படுபொருள். மன்- அசை.
பாடல் 127 (யாஅரொருவ)
[தொகு]
- யாஅ ரொருவ ரொருவர்த முள்ளத்தைத் () யாஅர் ஒருவர் ஒருவர் தம் உள்ளத்தை
- தேருந் துணைமை யுடையவர் - சாரற் ()தேரும் துணைமை உடையவர் - சாரல்
- கனமணி நின்றிமைக்கு நாடகேண் மக்கள் () கனம் மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள்
- மனம்வேறு செய்கையும் வேறு. (07) மனம் வேறு செய்கையும் வேறு. (௭)
பதவுரை:
சாரல்= மலைச்சாரலிலே,
கனம்= பொன்னும்,
மணி= அரதநங்களும்,
நின்று= இருந்து,
இமைக்கும்= பிரகாசிக்கும்,
நாட= நாட்டையுடைய பாண்டியனே,
கேள்= கேட்பாயாக;
மக்கள்= மனிதர்கள்,
மனம்= மனத்தில் எண்ணுவதும்,
வேறு= வேறு,
செய்கையும்= நடக்கையும்,
வேறு= வேறு, (ஆதலால்),
ஒருவர்= ஒருவர்,
ஒருவர் தம்= மற்றொருவருடைய,
உள்ளத்தை = மனதை,
தேரும் = அறியும்,
துணைமை உடையவர் = அளவினை யுடையவர்,
யார் = யாவர்?
கருத்துரை:
பாண்டியனே! ஒருவர் மனதை மற்றொருவர் அறியார்.
விசேடவுரை:
உடையவர் - எழுவாய், யார் - பயனிலை.
பாடல் 128 (உள்ளத்தா)
[தொகு]
- உள்ளத்தா னள்ளா துறுதித் தொழிலராய்க் () உள்ளத்தால் நள்ளாது உறுதி தொழிலராய்
- கள்ளத்தா னட்டார் கழிகேண்மை - தெள்ளிப் ()கள்ளத்தான் நட்டார் கழி கேண்மை - தெள்ளி
- புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட () புனல் செதும்பு நின்று அலைக்கும் பூ குன்றம் நாட
- மனத்துக்கண் மாசாய் விடும். (08) மனத்துக் கண் மாசு ஆய் விடும். (௮)
பதவுரை:
தெள்ளி= மணிகளைக் கொழித்து,
புனல்= அருவி நீரானது,
செதும்பு நின்று= சேறு பொருந்தி,
அலைக்கும்= ஒதுக்கும்,
பூ= அழகிய,
குன்றம்= மலையையும்,
நாட= நாட்டையுமுடைய பாண்டியனே!,
உள்ளத்தால்= மனதால்,
நள்ளாது= சிநேகியாது,
உறுதி தொழிலர் ஆய்= பலம் பொருந்திய செய்கையை உடையராய்,
கள்ளத்தால்= வஞ்சகத்தால்,
நட்டார்= சினேகித்தவரது,
கழி= மிகுந்த,
கேண்மை= சிநேகம்,
மனத்துக்கண்= மனதினிடத்தில்,
மாசு ஆய் விடும்= குற்றமாய் முடியும்.
கருத்துரை:
பாண்டியனே! மனங்கலந்து உறவு செய்யாது வஞ்சகமாக உறவு செய்தல் மனதிடத்திற் குற்றமாம்.
விசேடவுரை:
கேண்மை- எழுவாய், மாசாய்விடும்- பயனிலை.
பாடல் 129 (ஓக்கிய)
[தொகு]- ஓக்கிய வொள்வாடன் னொன்னார்கைப் பட்டக்கா () ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால்
- லூக்க மழிப்பதூஉ மெய்யாகு - மாக்க ()ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் - ஆக்கம்
- மிருமையுஞ் சென்று சுடுதலா னல்ல () இருமையும் சென்று சுடுதலான் நல்ல
- கருமமே கல்லார்கட் டீர்வு. (09) கருமமே கல்லார் கண் தீர்வு. (௯)
பதவுரை: ஓக்கிய= ஓங்கிய,
ஒள்= ஒளிபொருந்திய,
வாள்= தன் வாளாயுதம்,
தன் ஒன்னார்= தன் சத்துருக்கள்,
கை= கையில்,
பட்டக்கால்= அகப்பட்டால்,
ஊக்கம்= மனத் தைரியத்தை,
அழிப்பதூஉம்= கெடுப்பதும்,
மெய் ஆகும்= உண்மையாகும்;
ஆக்கம்= தீவினைப்பலன்,
இருமையும்= இம்மையு மறுமையும்,
சென்று= தன்னுடன் சென்று,
சுடுதலால்= வருத்துதலால்,
கல்லார்கண்= தீவினையாளரிடத்து,
தீர்வு= சிநேகம் நீங்குதல்,
நல்ல கருமமே= நல்ல காரியமேயாம்.
கருத்துரை: தீவினையாளரிடத்துச் சிநேக நீங்குதல் நல்லது.
விசேடவுரை: தீர்வு- எழுவாய், கருமம்- பயனிலை. ஏ-அசை.
நன்னூல்
“வலித்தல் மெலித்த னீட்டல் குறுக்கல்
விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி.”
இவ்விதியால் ‘ஓக்கிய’ என வலித்தல் விகாரமாயிற்று.
பாடல் 130 (மனைப்பாசங்)
[தொகு]- மனைப்பாசங் கைவிடாய் மக்கட்கென் றேங்கி () மனை பாசம் கை விடாய் மக்கட்கு என்று ஏங்கி
- யெனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - யெனைத்துஞ் ()எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
- சிறுவரையே யாயினுஞ் செய்தநன் றல்லா () சிறுவரையே ஆயினும் செய்த நன்று அல்லால்
- லுறுபயனோ வில்லை யுயிர்க்கு. (60) உறு பயனோ இல்லை உயிர்க்கு. (௰)
பதவுரை:
நெஞ்சே= மனமே!
மனை= இல்வாழ்க்கையின்,
பாசம்= ஆசையை,
கைவிடாய்= விட்டுவிடாய்;
மக்கட்கு என்று= மக்களுக்கு என்று,
ஏங்கி= இரங்கி,
எனைத்து ஊழி= எவ்வளவு காலம்,
வாழ்தியோ= வாழ்வாயோ;
சிறு வரை= சிறு பொழுது,
ஆயினும்= ஆனாலும்,
செய்த= தான் செய்த,
நன்று= தரும்பபலன்,
அல்லால்= அல்லது,
எனைத்தும்= எவ்வளவும்,
உயிர்க்கு= நம் உயிர்க்கு,
உறு பயன்= பொருந்திய பலன்,
இல்லை= இல்லை.
கருத்துரை: மனமே! நம்முயிர்க்குத் தருமத்தை அன்றிப் பலனில்லை.
விசேடவுரை: உறுபயன்- எழுவாய், இல்லை- பயனிலை- ஏ, ஓ- அசைகள்.
தீவினையச்சம் முற்றிற்று.
ஆக அதிகாரம் 13-க்குச் செய்யுள்-130.
இல்லறவியல் முற்றிற்று
[தொகு]அறத்துப்பால் முற்றிற்று
[தொகு]பார்க்க
[தொகு]- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
- நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
- நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
- நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
- நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
- நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
- நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
- [[]]
2.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
- [[]]