உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்

விக்கிமூலம் இலிருந்து

சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்

[தொகு]

உரை: களத்தூர் வேதகிரி முதலியார்

[தொகு]

II.பொருட்பால்: 1.அரசியல்

[தொகு]

[அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]


பதினெட்டாம் அதிகாரம் நல்லினஞ் சேர்தல்

[அஃதாவது, நன்மையாகிய இனத்தைச் சேர்தல் ]


பாடல்: 171 (அறியாப்)

[தொகு]

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி || அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வு - நெறியறிந்த || நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் - நெறி அறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப் || நல் சார்வு சார கெடுமே

புற்பனிப் பற்றுவிட் டாங்கு. || புல் பனி பற்று விட்டு ஆங்கு. (௧)


பதவுரை:

கருத்துரை:

விசேடவுரை:

பாடல்: 172 (அறிமின்)

[தொகு]

அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் || அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்

பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் || பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம்

வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் || வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல். || பெறுமின் பெரியார் வாய் சொல். (௨)


பதவுரை:

அறம் = தருமத்தின்,

நெறி = வழியை,
அறிமின் = அறியுங்கள்,
கூற்றம் = இயமனுக்கும்,
அஞ்சுமின் = பயப்படுங்கள்,
பிறர் = அயலாருடைய,
கடு சொல் = கொடுஞ் சொல்லை,
பொறுமின் = பொறுத்துக் கொள்ளுங்கள்,
வஞ்சம் = வஞ்சத்தை,
போற்றுமின் = வாராது போற்றுங்கள்,
வினை = தீவினையுள்ள,
தீயார் = கொடியவர்,
கேண்மை = சிநேகத்தை,
வெறுமின் = வெறுத்து விடுங்கள்,
எஞ்ஞான்றும் = எந்நாளும்,
பெரியார் = பெரியோர்கள்,
வாய் சொல் = வாயிற் பிறக்குஞ் சொல்லை,
பெறுமின் = பெறுங்கள்.

கருத்துரை:

தருமத்தை யறியுங்கள்; இயமனுக்கு அஞ்சுங்கள்; கொடுஞ் சொல்லைப் பொறுங்கள்; வஞ்சனை வாராது காத்துக் கொள்ளுங்கள்; தீயவர் நட்பை விடுங்கள்; பெரியோர் சொல்லைப் பெறுங்கள்.

விசேடவுரை:

(நீங்கள்)-தோன்றா எழுவாய், பெறுமின் - பயனிலை.


பாடல்: 173 (அடைந்தார்ப்)

[தொகு]

அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு || அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும்

முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் - றொடங்கிப் || உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கி

பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை || பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை

யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. (௩) || உற புணர்க அம்மா என் நெஞ்சு. (௩)


பதவுரை:

அடைந்தார் = அடைந்தவரை,

பிரிவும் = பிரிதலும்,
அரும் = அரிய,
பிணியும் = நோய்களும்,
கேடும் = மரணமும்,
உடம்பு = உடம்பை,
கொண்டார்க்கு = கொண்டவர்க்கு,
உடங்கு = உடனே,
உறலால் = வரலால்,
தொடங்கி = வினை தொடங்கி,
பிறப்பு = வரும் பிறப்பு,
இன்னாது என்று = துன்பமென்று,
உணரும் = அறியும்,
பேர் அறிவினாரை = பெரியோரை,
என் நெஞ்சு = என் மனம்,
உற = சிக்கென,
புணர்க = பிணிப்பதாக.

கருத்துரை:

பெரியோரை என் மனம் பிணிக்கக் கடவது.

விசேடவுரை:

நெஞ்சு - எழுவாய், புணர்க - பயனிலை, பேரறிவினாரை - செயப்படுபொருள். அம்மா - அசை.


இலக்கணத் திரட்டு

“அம்ம வுரையசை கேளென் றாகும்.”

பாடல்: 174 (இறப்ப)

[தொகு]

இறப்ப நினையுங்கா லின்னா தெனினும் || இறப்ப நினையும்கால் இன்னாது எனினும்

பிறப்பினை யாரு முனியார் - பிறப்பினுட் || பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்

பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்று || பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்

நண்பாற்றி நட்கப் பெறின். (04) || நண்பு ஆற்றி நட்க பெறின். (௪)


பதவுரை:

பிறப்பினுள் = பிறப்புள்,

பண்பு = நற்குணங்களை,
ஆற்றும் = சுமந்திருக்கும்,
நெஞ்சத்தவர்களோடு = மனமுள்ள நல்லோருடன்,
எஞ்ஞான்றும் = எந்நாளும்,
நண்பு ஆற்றி = சிநேகஞ்செய்து,
நட்க பெறின் = சிநேகிக்கப் பெற்றால்,
இறப்ப = மிகவும்,
நினையுங்கால் = நினைந்தால்,
இன்னாது எனினும் = துன்பமானாலும்,
பிறப்பினை = பிறவியை,
யாரும் = யாவரும்,
முனியார் = வெறுக்கார்.

கருத்துரை:

பிறப்புத் துன்பமாயினும் பெரியோரைச் சிநேகித்தால் அப்பிறப்பை வெறுக்கார்.

விசேடவுரை:

யாரும் - எழுவாய், முனியார் - பயனிலை, பிறப்பினை - செயப்படுபொருள்.

பாடல்: 175 (ஊரங்கண)

[தொகு]

ஊரங் கணநீ ருரவுநீர்ச் சேர்ந்தக்காற் || ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிதாகித் தீர்த்தமா - மோருங் || பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் - ஓரும்

குலமாட்சி யில்லாருங் குன்றுபோ னிற்பர் || குலம் மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர்

நலமாட்சி நல்லாரைச் சேர்ந்து. (04) || நலம் மாட்சி நல்லாரை சேர்ந்து. (௫)


பதவுரை:

ஊர் = ஊரில்,

அங்கணம் நீர் = சலதாரை நீர்,
உரவு நீர் = மிகுந்த நீரை,
சேர்ந்தக்கால் = சேர்ந்தால்,
பேரும் = பெயரும்,
பிறிது ஆகி = வேறாகி,
தீர்த்தமாம் = தீர்த்தமாகும்; (அது போல),
குலம் மாட்சி = குலப்பெருமை,
இல்லாரும் = இல்லாதவரும்,
நலம் மாட்சி = நற்பெருமையுள்ள,
நல்லாரை = நல்லோரை,
சார்ந்து = சேர்ந்து,
குன்றுபோல் = மலைபோல்,
நிற்பர் = உயர்ந்து நிற்பர்.

கருத்துரை:

சலதாரை நீர் பெருவெள்ளத்தைச் சேர்ந்து தீர்த்தமாகும்; அதுபோல, உயர்ந்தோரைச் சேர்ந்த தாழ்ந்தோரும் உயர்ந்தோராவர்.

விசேடவுரை:

குலமாட்சி யில்லார் - எழுவாய், நிற்பர் - பயனிலை, ஓரும் - அசை.

பாடல்: 176 (ஒண்கதிர்)

[தொகு]

ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய || ஒள் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய

வங்கண் விசும்பின் முயலுந் - தொழப்படூஉங் || அங்கண் விசும்பின் முயலும் - தொழப்படூஉம்

குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர் || குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்

குன்றன்னார் கேண்மை கொளின். || குன்று அன்னார் கேண்மை கொளின். (௬)


பதவுரை:

ஒண் = ஒள்ளிய,

கதிர் = கிரணங்களையுடைய,
வாள் = பிரகாசிக்கும்,
மதியம் = சந்திரனை,
சேர்தலால் = அடைதலால்,
ஓங்கிய = உயர்ந்த,
அம் = அழகிய,
கண் = இடமுடைய,
விசும்பின் = ஆகாயத்துள்ள,
முயலும் = முசலும்,
தொழப்படூஉம் = (யாவராலும்) வணங்கப்படும்; (அதுபோல),
குன்றிய = குறைந்த,
சீர்மையர் ஆயினும் = சிறப்புடையரானாலும்,
குன்று அன்னார் = மலையை யொத்த பெரியோர்,
கேண்மை = சிநேகத்தை,
கொளின் = கொண்டால்,
சீர் பெறுவர் = சிறப்படைவர்.

கருத்துரை:

சந்திரனைச் சேர்ந்த களங்கமுந் தொழப்படும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்த சிறியோருஞ் சிறப்படைவர்.

விசேடவுரை:

(கேண்மை கொள்பவர்) - தோன்றா எழுவாய், பெறுவர் - பயனிலை, சீர்மை - செயப்படுபொருள்.

பாடல்: 177 (பாலோட)

[தொகு]

பாலோ டளாயநீர் பாலாகு மல்லது || பாலோடு அளாய நீர் பால் ஆகும் அல்லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம் - தேரிற் || நீர் ஆய் நிறம் தெரிந்து தோன்றாதாம் - தேரில்

சிறியார் சிறுமையுந் தோன்றாதா நல்ல || சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து. (௭) ||பெரியார் பெருமையை சார்ந்து. (௭)


பதவுரை:

பாலோடு = பாலுடன்,

அளாய = கலந்த,
நீர் = நீரானது,
பாலாகும் = பால்போலாம்,
அல்லது = அல்லாமல்,
நீர் ஆய் = நீர் போலாம்,
நிறம் = நிறம்,
தெரிந்து = விளங்கி,
தோன்றாது = தெரியாது, (அதுபோல),
தேரில் = ஆராயில்,
நல்ல = நல்ல,
பெரியார் = பெரியோர்,
பெருமையை = பெருந்தன்மையை,
சார்ந்து = சேர்ந்த,
சிறியார் = சிறியோருடைய,
சிறுமையும் = இழிதன்மையும்,
தோன்றாது = தெரியாது.

கருத்துரை:

பாலைச் சேர்ந்த நீரும் பால் போலாம்; அதுபோலப் பெரியோரைச் சேர்ந்த சிறியோர் இழிவுந் தோன்றாது.

விசேடவுரை:

சிறுமை - எழுவாய், தோன்றாது - பயனிலை. ஆம் இரண்டும் அசைகள்.

பாடல்: 178 (கொல்லையி)

[தொகு]

கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் || கொல்லை இரு புனத்து குற்றி அடைந்த புல்

ஒல்காவே யாகு முழவ ருழுபடைக்கு || ஒல்காவே ஆகும் உழுவர் உழு படைக்கு

மெல்லியரே யாயினு நற்சார்வு சார்ந்தார்மேற் || மெல்லியரே ஆயினும் நல் சார்வு சார்ந்தார் மேல்

செல்லாவாஞ் செற்றார் சினம். (8) || செல்லாவாம் செற்றார் சினம். (௮)


பதவுரை:

கொல்லை = கொல்லையில்,

இரு = பெரிய,
புனத்து = புனத்திலே,
குற்றி = மரக்கட்டையை,
அடைந்த = சேர்ந்த,
புல் = புல்லானது,
உழவர் = பயிர் செய்வோர்,
உழு = உழுகிற,
படைக்கு = கலப்பைக்கு,
ஒல்காவாம் = அசையாவாகும்; (அதுபோல),
மெல்லியர் ஆயினும் = மெல்லியர் ஆனாலும்,
நல் சார்வு + நல்ல சார்வை,
சார்ந்தார் மேல் = சேர்ந்தவரிடத்து,
செற்றார் = பகைவருடைய,
சினம் = கோபம்,
செல்லா = செல்லமாட்டாவாம்.

கருத்துரை:

மரக்கட்டையைச் சார்ந்த புல் கலப்பைக்கு அசையாது; அதுபோல, வலியாரைச் சேர்ந்த மெலியாரிடத்துப் பகைவர் கோபஞ் செல்லாது.

விசேடவுரை:

சினம் - எழுவாய், செல்லா - பயனிலை. ஏ இரண்டும், ஆம் ஒன்றும் அசைகள்.

இலக்கணத் திரட்டு

“ஆவென விகுதி பன்மைமுற் றெதிர்மறை.”

பாடல்: 179 (நிலநலத்)

[தொகு]

நிலநலத்தா னந்திய நெல்லேபோற் றத்தங் || நிலம் நலத்தான் நந்திய நெல்லே போல் தம் தம்

குலநலத்தா லாகுவர் சான்றோர் - கலநலத்தை || குலம் நலத்தால் ஆகுவர் சான்றோர் - கலம் நலத்தை

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை || தீ வளி சென்று சிதைத்து ஆங்கு சான்றாண்மை

தீயினஞ் சேரக் கெடும். (9) || தீ இனம் சேர கெடும். (௯)


பதவுரை:

நிலம் = நிலத்தினது,

நலத்தால் = நன்மையால்,
நந்திய = வளர்ந்த,
நெல்லே போல் = நெல்லைப் போல,
தம்தம் = அவரவருடைய,
குலம் = குலத்தின்,
நலத்தால் = நன்மையால்,
சான்றோர் = பெரியோர்,
ஆகுவர் = ஆவர்;
கலம் = கப்பலின்,
நலத்தை = நன்மையை,
தீ வளி = தீக் காற்று,
சென்று = போய்,
சிதைத்து ஆங்கு = கெடுத்தாற் போல,
சான்றாண்மை = பெரியோர் தன்மை,
தீ இனம் = தீயவினத்தை,
சேர = அடைய,
கெடும் = கெட்டுவிடும்.

கருத்துரை:

கடுங்காற்றானது கப்பலைக் கெடுத்தாற் போல, நல்லினந் தீயினத்தைச் சேரக் கெடும்.

விசேடவுரை:

சான்றோர் - எழுவாய், ஆகுவர் - பயனிலை. சான்றாண்மை - எழுவாய், கெடும் - பயனிலை.

பாடல்: 180 (மனத்தான்)

[தொகு]

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த || மனத்தால் மறு இலர் ஏனும் தாம் சேர்ந்த

வினத்தா ழிகழப் படுவர் - புனத்து || இனத்தால் இகழப் படுவர் - புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே || வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் ஏ

யெறிபுனந் தீப்பட்டக் கால். (10) || எறி புனம் தீ பட்டக்கால். (௰)


பதவுரை:

எறி புனம் = வெட்டப்பட்ட வனம்,

தீ பட்டக்கால் = தீப்பட்டால்,
புனத்து = வனத்தில்,
வெறி = வாசனை,
கமழ் = வீசுகின்ற,
சந்தனமும் = சந்தன மரமும்,
வேங்கையும் = வேங்கைமரமும்,
வேம் = வேகும்; (அதுபோல),
மனத்தால் = மனதால்,
மறு இலர் ஏனும் = குற்றமிலர் ஆனாலும்,
தாம் சேர்ந்த = தாங்கள் சேரப்பட்ட,
இனத்தால் = தீய இனத்தால்,
இகழப்படுவர் = இகழப்படுவார்கள்.

கருத்துரை:

காடு தீப்பட்டால் அதைச் சார்ந்த மரங்கள் வேகும்; அதுபோல, குற்றமற்றவர் ஆனாலும், தீய இனத்தைச் சேர்ந்தால் இகழப்படுவார்கள்.

விசேடவுரை:

மறுவிலர் - எழுவாய், இகழப்படுவர் - பயனிலை. ஏ - அசை.


பதினெட்டாம் அதிகாரம் நல்லினஞ் சேர்தல் முற்றிற்று.



பார்க்க

[தொகு]
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை

2.பொருட்பால்: 1.அரசியல்

நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
[[]]
நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
[[]]