நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]2.பொருட்பால்: 1.அரசியல்
[தொகு][அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]
பதினான்காம் அதிகாரம் கல்வி
[அஃதாவது, கல்வியைப் பற்றிச் சொல்லியது]
பாடல்: 131 (குஞ்சி)
[தொகு]குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு குஞ்சி அழகும் கொடும் தானை கோட்டு அழகும்
மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து மஞ்சள் அழகும் அழகு அல்ல - நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே யழகு. (01) கல்வி அழகே அழகு. (௧)
- பதவுரை
குஞ்சி= மயிரினுடையை,
அழகும்= அழகும்,
கொடும்= மடிப்புள்ள,
தானை= ஆடையினுடைய,
கோடு= கரைக்கோட்டினது,
அழகும்= அழகும்,
மஞ்சள்= மஞ்சளினுடைய,
அழகும்= அழகும்,
அழகு அல்ல= அழகல்லவாம்;
நெஞ்சத்து= மனதில்,
நடுவு நிலைமையால்= நடுவுநிலையால்,
நல்லம்= நன்மையுடையோம்,
யாம் என்னும்= யாமென்று சொல்லும்,
கல்வி= வித்தையினுடைய,
அழகே= அழகே,
அழகு- ஒருவர்க்கு அழகாகும்.
- கருத்துரை
- ஒருவர்க்குக் கல்வி அழகே அழகாகும்; மற்றை அழகுகள் அழகல்லவாம்.
- விசேடவுரை
- அழகு- எழுவாய், கல்வி அழகு- பயனிலை.
“ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப.”
இவ்விதியால் ஒருவர் என்றது, ஆண்பாற்கும் பெண்பாற்குங் கொள்க. மஞ்சள் பெண்பாற்கும், மஞ்சள் கலந்த சந்தனம் ஆண்பாற்குமாம். கல்வி பெண்பாற்கும் வேண்டுவதென்பதாயிற்று.
பாடல்: 132 (இம்மை பயக்)
[தொகு]- இம்மை பயக்குமா லீயக் குறைவின்றால் () இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
- தம்மை விளக்குமாற் றாமுளராக்- கேடின்றா ()தம்மை விளக்குமால் தாம் உளராக் - கேடு இன்றால்
- லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன் () எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
- மம்ம ரறுக்கு மருந்து. (02) மம்மர் அறுக்கும் மருந்து. (௨)
பதவுரை: இம்மை= இப்பிறப்பில்,
பயக்கும்= பயன்கொடுக்கும்;
ஈய= (பிறர்க்குக்) கொடுக்க,
குறைவு இன்று= குறைதலில்லை;
தம்மை= கற்றவர் தங்களை,
விளக்கும்= விளங்கச் செய்யும்;
தாம் உளரா= தாம் உயிருள்ளவராக வாழுமளவும்,
கேடு இன்று= கேடில்லை;
ஆல்= ஆதலால்,
எம்மை உலகத்தும்= எவ்வுலகத்தும்,
யாம்= நாம்,
கல்விபோல்= வித்தையைப் போல,
மம்மர்= மயக்கத்தை,
அறுக்கும்= தீர்க்கும்,
மருந்து= மருந்தை,
காணேம்= கண்டறியோம்.
கருத்துரை: கல்விக்கு மேலானது ஒன்றுமில்லை.
விசேடவுரை: யாம்- எழுவாய், காணேம்- பயனிலை, மருந்து- செயப்படுபொருள்.
பாடல்: 133 (களர்நிலத்)
[தொகு]- களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் () களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
- விளைநிலத்து நெல்லின் விழுமிகாக் - கொள்வர் ()விளை நிலத்து நெல்லின் விழுமிது ஆ - கொள்வர்
- கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரைத் () கடை நிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத்
- தலைநிலத்து வைக்கப் படும். (03) தலை நிலத்து வைக்கப் படும். (௩)
பதவுரை: களர் நிலத்து= உவர் நிலத்தில்,
பிறந்த= உண்டான,
உப்பினை= உப்பை,
சான்றோர்= பெரியோர்,
விளை= விளைகின்ற,
நிலத்து= வயல்நிலத்துப் பிறந்த,
நெல்லின்= நெல்லைப் பார்க்கிலும்,
விழுமிது ஆ= சிறப்பாக,
கொள்வர்= கொள்வார்கள்; (அதுபோல)
கடை= கடையான,
நிலத்தோர் ஆயினும்= சாதியிற் பிறந்தோராயினும்,
கற்று அறிந்தோரை= கற்றுணர்ந்தவரை,
தலை நிலத்து= முதன்மையான இடத்து,
வைக்கப்படும்= வைக்கத்தகும்.
கருத்துரை: தாழ்ந்த நிலத்திற் பிறந்த உப்பை உயர்ந்த நிலத்திற் பிறந்த நெல்லினுஞ் சிறப்பாகக் கொள்வர்; அதுபோலக் கீழ்குலத்தோராயினுங் கற்றோரை மேலிடத்து வைக்கத்தகும்.
விசேடவுரை: சான்றோர்- எழுவாய், கொள்வர்- பயனிலை.
பாடல்: 134 (வைப்புழிக்)
[தொகு]- வைப்புழிக் கோட்படா வாய்தீயிற் கேடில்லை () வைப்பு உழிக் கோள் படா வாய்த்து ஈயில் கேடு இல்லை
- மிக்க சிறப்பி னரசர்-செறின்வவ்வா ()மிக்க சிறப்பின் அரசர் - செறின் வவ்வார்
- ரெச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன () எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
- விச்சைமற் றல்ல பிற. (04) விச்சை மற்று அல்ல பிற. (௪)
பதவுரை: வைப்பு உழி= வைத்தவிடத்தில்,
கோள் படா= பிறரால் கொள்ளப்படாது;
வாய்த்து= பொருந்தி,
ஈயில்= கொடுத்தால்,
கேடு இல்லை= குறைவு இல்லை;
மிக்க= மிகுந்த,
சிறப்பின்= சிறப்புடைய,
அரசர்= அரசர்கள்,
செறின்= கோபித்தால்,
வவ்வார்= கவரார்; (ஆகையால்)
ஒருவன்= ஒருவன்,
மக்கட்கு= தன் புதல்வர்க்கு,
எச்சம் என= (தேடியிடும்) பிள்ளையென,
செய்வன= செய்யத்தகுவன,
விச்சை= கல்விகளே;
பிற= பிறவெல்லாம்,
அல்ல= தேடிவைக்குஞ் செல்வங்களல்ல.
கருத்துரை: ஒருவன் தன் பிள்ளைக்குத் தேடியிடும் பிள்ளையாகக் கல்வியொன்றே கற்பிக்க வேண்டும்.
விசேடவுரை: விச்சை- எழுவாய், செய்வன- பயனிலை. மற்று- அசை.
பாடல்: 135 (கல்விகரை)
[தொகு]- கல்வி கரையில கற்பவர் நாள்சில () கல்வி கரை இல கற்பவர் நாள் சில
- மெல்ல நினைக்கிற் பிணிபல- தெள்ளிதி ()மெல்ல நினைக்கில் பிணி பல - தெள்ளிதின்
- னாராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் () ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே நீர் ஒழியப்
- பாலுண் குருகிற் றெரிந்து. (05) பால் உண் குருகின் தெரிந்து. (௫)
பதவுரை: கல்வி= கல்விகள்,
கரை இல= அளவில;
கற்பவர்= கற்பவர்களுக்கு,
நாள்= வாழ்நாள்கள்,
சில= சிலவுள;
மெல்ல= மெதுவாக,
நினைக்கில்= ஆராய்ந்தால்,
பிணி= நோய்கள்,
பல= பலவுள;
தெள்ளிதின்= தெளிவுள்ள அறிவால்,
ஆராய்ந்து= விசாரித்து,
அமைவு உடைய= நிறைவுடைய நூல்களை,
நீர் ஒழிய= சல நீங்க,
பால்= பாலை,
உண்= உண்ணும்,
குருகில்= அன்னம் போல,
தெரிந்து= அறிந்து,
கற்ப= (அறிவுடையோர்கள்) கற்பார்கள்.
கருத்துரை: அன்னம் நீரை நீக்கிப் பாலைக் கொள்ளுதல்போல, அறிவுடையோர்கள் பொய்ந்நூலைத் தள்ளி மெய்ந்நூலைக் கற்பார்கள்.
விசேடவுரை: (அறிவுடையோர்)- தோன்றா எழுவாய், கற்ப- பயனிலை, அமைவுடைய- செயப்படுபொருள். ஏ-அசை.
பாடல் 136 (தோணி)
[தொகு]- தோணி யியக்குவான் றொல்லை வருணத்துக் () தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
- காணிற் கடைப்பட்டா னென்றிகழார் - காணா ()காணில் கடை பட்டான் என்று இகழார் - காணா
- யவன் றுணையா வாறுபோ யற்றேநூல் கற்ற () அவன் துணை ஆ ஆறு போய் அற்றே நூல் கற்ற
- மகன்றுணையா நல்ல கொளல். (06) மகன் துணையா நல்ல கொளல். (௬)
பதவுரை:
தொல்லை= பழைய,
வருணத்து= சாதிகளுள்,
காணில்= ஆராயில்,
தோணி= தோணியை,
இயக்குவான்= ஓட்டுவான்,
கடை= கீழ்ச்சாதியில்,
பட்டான் என்று= பிறந்தவன் என்று,
இகழார்= இகழார்கள்;
அவன்= அவனையே,
துணையா= துணையாக,
ஆறு= ஆற்றை,
போய் அற்றே= கடந்து போவது போலும்,
காணாய்= பாராய்,
நூல்= நூல்களை,
கற்ற மகன்= கற்றவன் இழிவானவனாகிலும்,
துணை ஆ= அவனே துணையாக,
நல்ல= நல்ல நூற்பொருள்களை,
கொளல்= (ஒருவன்) கற்றுக் கொள்ளல் வேண்டும்.
கருத்துரை: ஒருவன் இழிந்தோனிடத்துங் கல்வியைக் கற்க வேண்டும்.
விசேடவுரை: (ஒருவன்)- தோன்றா எழுவாய், கொளல்- பயனிலை, நல்ல- செயப்படுபொருள்.
பாடல் 137 (தவலருந்)
[தொகு]- தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையா () தவல் அரு தொல் கேள்வி தன்மை உடையார்
- ரிகலில ரெஃகுடையா தம்முட்- குழீஇ ()இகல் இலர் எஃகு உடையா தம் உள் - குழீஇ
- நகலி னினிதாயிற் காண்பா மகல்வானத் () நகல் இனிது ஆயின் காண்பாம் அகல் வானத்து
- தும்ப ருறைவார் பதி. (07) உம்பர் உறைவார் பதி. (௭)
பதவுரை: தவல் அரு= கேடில்லாத,
தொல்= பழைய,
கேள்வி= கல்விகளால் வரும்,
தன்மை= குணங்களை,
உடையார்= உடையவர்களும்,
இகல் இலர்= பகையில்லாதவர்களும்,
எஃகு உடையார்= கூரிய புத்தி கூர்மை உடையவர்களும்,
தம்முள்= தங்களிடத்தில்,
குழீஇ= கூடவிருந்து,
நகலின்= மகிழ்தலைப் பார்க்கிலும்,
அகல்= அகன்ற,
வானத்து= வானத்தில்,
உம்பர்= தேவர்கள்,
உறை= வாசம்பண்ணும்,
வார் பதி= நெடும்பதி,
இனிது ஆயின்= இனிதாயிருந்தால்,
காண்பாம்= (யாம்) காணக்கடவோம்.
கருத்துரை: அறிவுடையோரிடத்துக் கூடி மகிழ்தலைப் பார்க்கிலும் தேவருலகம் இனிதாயிருக்காமானாற் காண்போம்.
விசேடவுரை: யாம்- எழுவாய், காண்பாம்- பயனிலை, பதி- செயப்படுபொருள்.
பாடல் 138 (கனைகடற்)
[தொகு]- கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை () கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை
- நுனியிற் கரும்புதின் றற்றே- நுனிநீக்கித் ()நுனியில் கரும்பு தின்று அற்றே - நுனி நீக்கித்
- தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா () தூரில் தின்று அன்ன தகைத்து அரோ பண்பு இலா
- வீர மிலாளர் தொடர்பு. (08) ஈரம் இலாளர் தொடர்பு. (௮)
பதவுரை:
கனை= சத்திக்கும்,
தண்= குளிர்ந்த,
கடல்= கடலினது,
சேர்ப்ப= கரையையுடைய பாண்டியனே!
கற்று அறிந்தார்= கற்று உணர்ந்தோர்,
கேண்மை= சிநேகமானது,
கரும்பு= கரும்பை,
நுனியில்= நுனியிலிருந்து,
தின்று அற்று= தின்றாற் போலும்;
பண்பு இலா= நற்குணங்கள் இல்லாத,
ஈரம் இலாளர்= அன்பில்லாதவர்கள்,
தொடர்பு= சிநேகமானது,
நுனி= கரும்பின்நுனியை,
நீக்கி= விட்டு,
தூரில்= அடியிலிருந்து,
தின்று அன்ன= தின்றாற் போலும்,
தகைத்து= தன்மையுடையது.
கருத்துரை: கற்றோர் சிநேகம் கரும்பை நுனியிலிருந்து தின்றாற் போலும்; மற்றோர் சிநேகம் கரும்பை அடியிலிருந்து தின்றாற் போலும்.
விசேடவுரை: கேண்மை- எழுவாய், தின்றற்று- பயனிலை, தொடர்பு- எழுவாய், தகைத்து- பயனிலை. ஏ, அரோ- அசைகள்.
பாடல் 139 (கல்லாரே)
[தொகு]- கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகி () கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
- னல்லறிவு நாளுந் தலைப்படுவர்- தொல்சிறப்பி ()நல் அறிவு நாளும் தலைப்படுவர் - தொல் சிறப்பின்
- னொண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு () ஒள் நிறம் பாதிரிப் பூ சேர்தலால் புத்தோடு
- தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (60) தண்ணீர்க்குத் தான் பயந்து ஆங்கு. (௯)
பதவுரை: ஒள்= ஒள்ளிய,
நிறம்= நிறமுடைய,
பாதிரி= பாதிரிப் பூவின்,
புது ஓடு= புதிய இதழ்களானவை,
சேர்தலால்= அடைதலால்,
தண்ணீர்க்கு= சலத்திற்கு,
தான்= வாசனைதான்,
பயந்தாங்கு= பயன்பட்டாற் போலும்,
கல்லாரே ஆயினும்= கற்றிலரானாலும்,
கற்றாரை= கற்றவரை,
சேர்ந்து= சார்ந்து,
ஒழுகின்= நடப்பாராயின்,
தொல்= பழைய,
சிறப்பின்= சிறப்புடைய,
நல்= நல்ல,
அறிவு= அறிவில்,
நாளும்= நாடோறும்,
தலைப்படுவர்= முதன்மையுடையவராவர்.
கருத்துரை: பாதிரிப்பூக்களின் இதழ்களானவை தண்ணீர்க்கு வாசம் தந்தாற்போலும், கல்லாதவருங் கற்றோரைச் சார்ந்தால் அறிவில் முதன்மையாவர்.
விசேடவுரை: ஓருவர்- எழுவாய், தலைப்படுவர்- பயனிலை. ஏ- அசை.
பாடல் 140 (அலகுசால்)
[தொகு]- அலகுசால் கற்பி னறிவுநூல் கல்லா () அலகு சால் கற்பின் அறிவு நூல் கல்லாது
- துலகநூ லோதுவ தெல்லாங் - கலகல ()உலக நூல் ஓதுவது எல்லாம்- கலகல
- கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் () கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
- போஒந் துணையறிவா ரில். (09) போஒம் துணை அறிவார் இல். (௰)
பதவுரை:
அலகு= அளவு,
சால்= மிக்க,
கற்பின்= நூல்களைக் கற்றால்,
அறிவுநூல்= ஞான நூல்களை,
கல்லாது= கற்காமல்,
உலகம் நூல்= உலகத்திற்குரிய நூல்களை,
ஓதுவது எல்லாம்= கற்பதெல்லாம்,
கலகல= கலகலவென்னும் ஓசையாய்,
கூஉம் துணை= கூவுமளவு,
அல்லால்= அல்லது,
தடுமாற்றம்= பிறவித்துன்பத்தைவிட்டு,
கொண்டு= நல்வழியைக்கொண்டு,
போஒம் துணை= போகும் அளவை,
அறிவார்= அறியவல்லவர்,
இல்= இல்லை.
கருத்துரை:
ஞானத்திற்குரிய நூல்களைக் கற்காமல், உலகத்திற்குரிய நூல்களைக் கற்குதல் வீண் என்பதாம்.
விசேடவுரை:
அறிவார்- எழுவாய், இல்- பயனிலை.
‘கல்வி’ அதிகாரம் முற்றிற்று
பார்க்க
[தொகு]- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
- நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
- நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
- நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
- நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
- நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
- நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
- நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
2.பொருட்பால்: 1.அரசியல்
- [[]]
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
II.பொருட்பால்: 2.நட்பியல்
II.பொருட்பால்: 3.இன்பவியல்
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]]