நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]அறத்துப்பால்: ௦௨. இல்லறவியல்
[தொகு]{அஃதாவது, இம்மை மறுமை ஆகிய இருமையின்பங்களையும் அனுபவித்தற்குரிய இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறியில் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடை மனைவியோடுஞ் செய்யப்படும் தருமமாம்}
எட்டாம் அதிகாரம் பொறையுடைமை
- [அஃதாவது, பொறுமையை யுடைத்தாயிருக்குந் தன்மையாம்]
பாடல்: 71 (கோதை)
[தொகு]கோதை யருவிக் குளிர்வரை நன்னாட கோதை அருவிக் குளிர் வரை நல் நாட
பேதையோ டியாது முரையற்க- பேதை பேதையோடு யாதும் உரையற்க - பேதை
யுரைப்பிற் சிதைத்துரைக்கு மொல்லும் வகையான் உரைப்பின் சிதைத்து உரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று. (01) வழுக்கிக் கழிதலே நன்று.
- பதவுரை
கோதை= மாலைபோல் விழும்,
அருவி= அருவியாற்றைப் பொருந்திய,
குளிர்= குளிர்ந்த,
வரை= மலைகளையும்,
நல்= நல்ல,
நாட= நாட்டையுமுடைய பாண்டியனே!,
பேதையோடு= அறிவிலானுடன்,
யாதும்= ஒன்றையும்,
உரையற்க= சொல்லாதிருப்பாயாக.
பேதை= அவ்அறிவில்லான்,
உரைப்பில்= ஒன்றைச் சொன்னால்,
சிதைந்து= கெடும்படி,
உரைக்கும்= சொல்வான்; (ஆதலால்)
ஒல்லும்= பொருந்தும்,
வகையால்= விதத்தால்,
வழுக்கி= தப்பி,
கழிதல்= (அவனை விட்டு) நீங்குதல்,
நன்று= நல்லது.
- கருத்துரை
- பாண்டியனே அறிவீனனுடன் ஒன்றுஞ் சொல்லாதிருப்பாயாக. சொன்னால் சிதைவுடன் சொல்வான்; ஆகையால் அவனை விட்டு நீங்குதல் நன்று.
- விசேடவுரை
- கழிதல்- எழுவாய், நன்று- பயனிலை, அறிவிலான்- செயப்படுபொருள்.
“எதிர்மறை யேவற் கேவே யவ்வே
யன்மோ வற்க வாகு மொருமை
யாமி னன்மி னற்பீர் பன்மை”
-இவ்விதியால் ‘அற்க’ விகுதி ஏவல் ஒருமைக்கண் வந்தது.
பாடல்: 72 (நேரல்லார்)
[தொகு]- நேரல்லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது () நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
- தாரித் திருத்த தகுதிமற்- றோரும் () தாரித்து இருத்தல் தகுதி மற்று -ஓரும்
- புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் () புகழ்மையாக் கொள்ளாது பொங்கு நீர் ஞாலம்
- சமழ்மையாக் கொண்டு விடும். (02) சமழ்மையாக் கொண்டு விடும்.
- பதவுரை
நேர் அல்லார்= ஒப்பில்லாதவர்,
நீர் அல்ல= குணமில்லாத சொற்களை,
சொல்லியக்கால்= சொன்னால்,
அது= அவ்வாறு சொன்னதை,
தாரித்திருத்தல்= பொறுத்திருத்தல்,
தகுதி= பொறுமை,
மற்று= அதைப் பொறுக்காவிட்டால்,
புகழ்மை ஆ= புகழ்ச்சியாக,
கொள்ளாது= கொள்ளாமல்,
பொங்கு= மிகுந்த,
நீர்= நீர்சூழ்ந்த,
ஞாலம்= பூமி,
சமழ்மை ஆ= தாழ்மையாக,
கொண்டுவிடும்= கொள்ளும்.
- கருத்துரை
- தமக்கு ஒப்பில்லார் தாழ்வானவைகளைச் சொன்னால் பொறுத்துக்கொள்ளல் பொறுமையாகும்; பொறாவிட்டால் உலகம் புகழ்ச்சியாகக் கொள்ளாது இகழ்ச்சியாகக் கொள்ளும்.
- விசேடவுரை
- ஞாலம்- எழுவாய், கொண்டுவிடும்- பயனிலை, மற்று, ஓரும்- அசைகள்.
பாடல்: 73 (காதலார்)
[தொகு]காதலார் சொல்லுங் கடுஞ்சொ லுவந்துரைக்கு () காதலார் சொல்லும் கடும் சொல் உவந்து உரைக்கும்
மேதிலா ரின்சொலிற் றீதாமோ?-போதெலா ()ஏதிலார் இன் சொலில் தீது ஆமோ - போது எலாம்
மாதர்வண்டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப () மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப
வாவ தறிவார்ப் பெறின். (03) ஆவது அறிவார்ப் பெறின்.
- பதவுரை
போது எலாம்= மலர்களில் எல்லாம்,
மாதர்= அழகிய,
வண்டு= வண்டுகள்,
ஆர்க்கும்= சப்திக்கும்,
மலி= நிறைந்த,
கடல்= கடலையும்,
தண்= குளிர்ந்த,
சேர்ப்ப= கரையையுமுடைய பாண்டியனே!
ஆவது= ஆகவேண்டிய நன்மையை,
அறிவார்= அறிந்தவரை,
பெறின்= பெற்றால்,
காதலார்= தம்மில் விருப்புள்ளோர்,
சொல்லும்= சொல்லுகின்ற,
கடுஞ்சொல்= கொடுஞ் சொல்லானது,
ஏதிலார்= பகைவர்,
உவந்து உரைக்கும்= மகிழ்ந்து சொல்லும்,
இன்சொல்லின்= இன்சொல்லைப் பார்க்கிலும்,
தீதாமோ= குற்றமாகுமோ?
- கருத்துரை
- பாண்டியனே! சிநேகர் சொல்லுங் கடுஞ்சொல்லானது பகைவர் சொல்லும் இனிய சொல்லைப் பார்க்கிலும் குற்றமாகுமோ?
- விசேடவுரை
- கடுஞ்சொல்- எழுவாய், தீதீமோ- பயனிலை.
பாடல்: 74 (அறிவதறிந்)
[தொகு]அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி () அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
யுறுவ துலகுவப்பச் செய்து- பெறுவதனா ()உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால்
லின்புற்று வாழு மியல்புடையா ரெஞ்ஞான்றுந் () இன்பு உற்று வாழும் இயல்பு உடையார்
எஞ்ஞான்றுந்
துன்புற்று வாழ்த லரிது. (04) துன்பு உற்று வாழ்தல் அரிது.
- பதவுரை
அறிவது= அறியத் தக்கதை,
அறிந்து= தெரிந்து,
அடங்கி= அடங்கி,
அஞ்சுவது= அஞ்சத்தகுவதற்கு,
அஞ்சி= பயந்து,
உறுவது= செய்யத் தகுவதை,
உலகு= உலகத்தார்,
உவப்ப= மகிழ,
செய்து= செய்து,
பெறுவதனால்= பெறும் பலனால்,
இன்பு உற்று= இன்பம் அடைந்து,
வாழும்= வாழுகின்ற,
இயல்பு உடையார்= குணமுடையார்,
எஞ்ஞான்றும்= எந்நாளும்,
துன்புற்று= துன்பமடைந்து,
வாழ்தல் அரிது= வாழ்தலில்லை.
- கருத்துரை
- அறியத் தகுவதை அறிந்து, அஞ்சத் தகுவதற்கு அஞ்சிச் செய்யத் தகுவதைச் செய்து பெறும் பலனால் இன்பம் பொருந்தி, வாழுங்குணமுடையோர் துன்பம் பொருந்தி வாழ்தல் இல்லை.
- விசேடவுரை
- வாழ்தல்- எழுவாய், இல்லை- பயனிலை.
“குறிலே மிகுதல் குறிலியற் செய்யுள்.”
-யாப்பருங்கலத்திலுங் காண்க.
பாடல்: 75 (வேற்றுமை)
[தொகு]வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்காற் () வேற்றுமை இன்றிக் கலந்து இருவர் நட்டக்கால்
றேற்றா வொழுக்க மொருவன்க ணுண்டாயி ()தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
னாற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின் () ஆற்றும் துணையும் பொறுக்க பொறான் ஆயின்
தூற்றாதே தூர விடல். (05) தூற்றாதே தூர விடல்.
- பதவுரை
வேற்றுமை= வேறுபடுங் குணம்,
இன்றி= இல்லாது,
கலந்து= பொருந்தி,
இருவர்= இரண்டுபேர்,
நட்டக்கால்= சிநேகித்தால்,
தேற்றா= தெளியாத,
ஒழுக்கம்= நடக்கை,
ஒருவன்கண்= ஒருவனிடத்து,
உண்டாயின்= உண்டானால்,
ஆற்றும்= (கோபம்) அடங்கும்,
துணையும்= அளவும்,
பொறுக்க= பொறுக்கக்கடவன்,
பொறான் ஆயின்= பொறுக்கானாயின்,
தூற்றாது= (அவன்) குற்றத்தைத் தூற்றாமல்,
தூரவிடல்= அவனது நட்பைக் கைவிடுக.
- கருத்துரை
- வித்தியாசமில்லாமல் இருவர் கலந்து சிநேகஞ் செய்யில் ஒருவனிடத்து நன்னடக்கை இல்லாவிடில் மற்றவன் பொறுக்குமளவும் பொறுக்கக் கடவன். பொறாவிட்டால் தூற்றாமல் சிநேகத்தை விடக்கடவன்.
- விசேடவுரை
- ஒருவன்- எழுவாய், தூரவிடல்- பயனிலை, நட்பினை- செயப்படுபொருள். ஏ-அசை.
பாடல் 76 (இன்னா)
[தொகு]- இன்னா செயினு மினிய வொழிகென்று () இன்னா செயினும் இனிய ஒழிக என்று
- தன்னையே தானோவி னல்லது- துன்னிக் ()தன்னையே தான் நோவின் அல்லது - துன்னிக்
- கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட! () கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
- விலங்கிற்கும் விள்ள லரிது. (06) விலங்கிற்கும் விள்ளல் அரிது.
- பதவுரை
கானகம்= காடு செறிந்த,
நாட= நாட்டைஉடைய பாண்டியனே!
இன்னா= துன்பங்களை,
செயினும்= ஒருவர் செய்தாலும்,
இனிய= இனியனவாக எண்ணி,
ஒழிக என்று= கோபம் நீங்கென்று,
தன்னையே தான்= தன்னைத்தானே,
நோவின் அல்லது= நோவுதலல்லால்,
துன்னி= நெருங்கி,
கலந்தாரை= சிநேகித்தவரை,
கைவிடுதல்= விட்டுவிடுதல்,
விலங்கிற்கும்= மிருகத்திற்கும்,
விள்ளல்= வேறுபடல்,
அரிது= அருமை.
- கருத்துரை
- பாண்டியனே! ஒருவர் துன்பஞ் செயினும் இன்பமாக நினைத்துத் தன்னை நொந்துகொள்வதேயல்லது நேசித்தாரை விட்டு விடுதலாகாது; மிருகத்திற்கும் பிரிதல் அரிது.
- விசேடவுரை
- கைவிடுதல்- எழுவாய், அரிது- பயனிலை, கலந்தாரை- செயப்படுபொருள்.
பாடல் 77 (பெரியார்)
[தொகு]பெரியார் பெருநட்புக் கோடறாஞ் செய்த () பெரியார் பெரு நட்புக் கோடல் தாம் செய்த
வரிய பொறுப்பவென் றன்றோ?- அரியரோ? ()அரிய பொறுப்ப என்று அன்றோ - அரியரோ
ஒல்லெ னருவி யுயர்வரை நன்னாட! () ஒல் என் அருவி உயர் வரை நல் நாட
நல்லசெய் வார்க்குத் தமர். (07) நல்ல செய்வார்க்குத் தமர்.
- பதவுரை
- கருத்துரை
- விசேடவுரை
பாடல் 78 (வற்றிமற்)
[தொகு]- வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க் () வற்றி மற்று ஆற்றப் பசிப்பினும் பண்பு இலார்க்கு
- கற்ற மறிய வுரையற்க- வற்ற ()அற்றம் அறிய உரையற்க -அற்றம்
- மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் () மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
- துறக்குந் துணிவிலா தார். (08) துறக்கும் துணிவு இலாதவர்.
- பதவுரை
வற்றி= உடல் மெலிந்து,
ஆற்ற= மிகவும்,
பசிப்பினும்= பசித்தாலும்,
பண்பு இலார்க்கு= நட்புக்குணம் இல்லாதார்க்கு,
அற்றம்= வறுமையை,
அறிய= தெரிய,
உரையற்க= சொல்லாதிருப்பாயாக,
அற்றம்= வறுமையை,
மறைக்கும்= நீக்கும்,
துணையார்க்கு= அளவினை உடையார்க்கு,
தம்மை= தம் உயிரை,
துறக்கும்= விட்டுவிடும்,
துணிவு இலாதார்= துணிவு கொள்ளாதார்,
உரைப்ப= சொல்வார்கள்.
- கருத்துரை
- உடல் மெலிந்து மிகப் பசித்தாலும் நட்புக்குணம் இல்லாதவர்க்கு வறுமையைச் சொல்லாதே. உயிர்விடத் துணியாதவர்கள் வறுமையை நீக்குவார்க்குச் சொல்வார்கள்.
- விசேடவுரை
- துணிவிலாதார்- எழுவாய், உரைப்ப- பயனிலை. ஏ- அசை.
பாடல் 79 (இன்பம்)
[தொகு]- இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினு () இன்பம் பயந்து ஆங்கு இழிவு தலைவரினும்
- மின்பத்தின் பக்க மிருந்தைக்க- இன்ப ()இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
- மொழியாமை கண்டாலு மோங்கருவி நாட! () ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட
- பழியாகா வாறே தலை. (09) பழி ஆகா ஆறே தலை.
- பதவுரை
- ஓங்கு= உயர்ந்த,
அருவி= அருவிகளையுடைய,
நாட= நாட்டையுடைய பாண்டியனே!
இன்பம் பயந்து= முன் இன்பத்தைக் கொடுத்து,
ஆங்கு= பின் அவ்விடத்து,
இழிவு= துன்பம்,
தலைவரினும்= முதன்மையாக வந்தாலும்,
இன்பம்= இன்பத்தினது,
பக்கம்= பட்சம்,
இருந்தைக்க= நீங்கினாற்போலும்,
இன்பம்= அவ்வின்பமானது,
ஒழியாமை= நீங்காது,
கண்டாலும்= தம்மிடத்து வந்தாலும்,
பழி ஆகா= தமக்குப் பழியாகாத,
ஆறே= நெறியே,
தலை= தலைமை.
- கருத்துரை
- பாண்டியனே! முன் இன்பம் வந்து பின் துன்பம் வருமேயானால், அவ்வின்பம் நீங்கினாற்போலும்; இன்பமே நீங்காதிருந்தாலும் குற்றமற்ற வழியிலே வந்த இன்பமே முதன்மை.
- விசேடவுரை
- ஆறு- எழுவாய், தலை- பயனிலை.
பாடல் 80 (தான்கெடினு)
[தொகு]- தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பி () தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின்
- னூன்கெடினு முண்ணார்கைத் துண்ணற்க- வான்கவிந்த ()ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - வான் கவிந்த
- வையக மெல்லாம் பெறினு முரையற்க () வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
- பொய்யோ டோடிடைமிடைந்த சொல். (60) பொய்யோடு இடை மிடைந்த சொல்.
- பதவுரை
தான் கெடினும்= தான்கெட்டாலும்,
தக்கார்= தன்னைக் கெடுக்குந் தன்மையாருக்கு,
கேடு= பொல்லாங்கை,
எண்ணற்க= நினையாதிருப்பாயாக;
தன் உடம்பின்= தன் உடலில்,
ஊன் கெடினும்= மாமிசங் கெட்டாலும்,
உண்ணார்= உண்ணப்படாதார்,
கைத்து= கைப்பொருளை,
உண்ணற்க= உண்ணாதிருப்பாயாக;
வான் கவிந்த= ஆகாய மூடிய,
வையகம் எல்லாம்= உலகமெல்லாம்,
பெறினும்= பெற்றாலும்,
பொய்யோடு= பொய்யுடன்,
இடை மிடைந்த= இடையிலே நெருங்கிய,
சொல்= சொல்லை,
உரையற்க= சொல்லாதிருப்பாயாக.
- கருத்துரை
- தான் கெட்டாலும் பிறர்க்குக் கேடு செய்யாதே. உண்ணத்தகார் விட்டில் உண்ணாதே, உலகமெல்லாம் பெற்றாலும் பொய் சொல்லாதே.
- விசேடவுரை
- ஒருவன்- எழுவாய், எண்ணற்க- பயனிலை, கேட்டை- செயப்படுபொருள். ஒருவன்- எழுவாய், உண்ணற்க- பயனிலை, கைத்து- செயப்படு பொருள். ஒருவன்- எழுவாய், உரையற்க- பயனிலை, சொல்- செயப்படுபொருள்.
“கதிரோன் வரைப்பிற் கட்டன லுடம்பு.”
பார்க்க
[தொகு]அறத்துப்பால்: 1.துறவறவியல்
- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
- நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
- நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
அறத்துப்பால்: 2.இல்லறவியல்
- நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
- நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
- நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
- நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
- நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
- நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
- பொருட்பால்: 1.அரசியல்