நாலடியார் 12-ஆம் அதிகாரம்-மெய்ம்மை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]அறத்துப்பால்: துறவறவியல்
[தொகு]பனிரெண்டாம் அதிகாரம் மெய்ம்மை
[அஃதாவது, உண்மை கூறுதலாம்]
பாடல்: 111 (இசையா)
[தொகு]இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க வசை அன்று வையத்து இயற்கை- நசை அழுங்க
நின்றோடிப் பொய்த்த னிரைதொடீஇ! செய்ந்நன்றி நின்று ஓடிப் பொய்த்தல் நிரை தொடீஇ, செய் நன்றி
கொன்றாரிற் குற்ற முடைத்து. (01) கொன்றாரில் குற்றம் உடைத்து. (௧)
- பதவுரை
நிரை தொடீஇ= வரிசையாக அணிந்த வளையல்களை யுடையவளே!
இசையா= கிடையாத,
ஒரு பொருள்= ஒரு பொருளை,
இல் என்றல்= இல்லையென்று சொல்லல்,
யார்க்கும்= யாவர்க்கும்,
வசை அன்று= குற்றமல்ல,
வையத்து= பூமியில்,
இயற்கை= இயல்பாகும்;
நசை= ஆசை,
அழுங்க= கெட,
நின்று ஓடி= நெடுங்கால நின்று,
பொய்த்தல்= பொய்சொல்லல்,
செய் நன்றி= பிறர் செய்த வுதவியை,
கொன்றாரில்= கொன்றவரைப் பார்க்கிலும்,
குற்றம்= குற்றம்,
உடைத்து= உடையதாம்.
- கருத்துரை
- பெண்ணே! ஒருவரைப் பலகால் திரியவைத்து இல்லையென்று சொல்லல் செய்ந்நன்றி அழித்ததிலும் குற்றமுடையதாம்.
- விசேடவுரை
- பொய்த்தல்- எழுவாய், குற்றமுடைத்து- பயனிலை.
பாடல்: 112 (தக்காருந்)
[தொகு]- தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை () தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை
- யெக்காலுங் குன்ற லிலராவர்- அக்காரம் () எ காலும் குன்றல் இலர் ஆவர் - அக்காரம்
- யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந் () யாவர் ஏ தின்னினும் கையாதாம் கைக்குமாம்
- தேவரே தின்னினும் வேம்பு. (02) தேவர் ஏ தின்னினும் வேம்பு.
- பதவுரை
தக்காரும்= பெரியோரும்,
தக்கவர் அல்லாரும்= சிறியோரும்,
தம்= தமது,
நீர்மை= குணங்களில்,
எ காலும்= எந்நாளும்,
குன்றல்= குறைதல்,
இலர் ஆவர்= இல்லாதவராவர்;
அக்காரம்= வெல்லத்தை,
யாவர்= எவர்,
தின்னினும்= தின்றாலும்,
கையாது= கசக்காது;
வேம்பு= வேம்பை,
தேவர்= தேவர்கள்,
தின்னினும்= தின்றாலும்,
கைக்கும்= கசக்கும்.
- கருத்துரை
- பெரியோரும் சிறியோரும் தங்கள் குணங்களில் குறைவுபடார்கள்.
- விசேடவுரை
- குன்றல்- எழுவாய், இலராவர்- பயனிலை; ஆம், உம், ஏ, உம் அசைகள்.
பாடல்: 113 (காலாடு)
[தொகு]காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து () கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்- ஏலா ()மேல் ஆடு மீனில் பலர் ஆவர்- ஏலா
விடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட! () இடர் ஒருவர் உற்றக்கால் ஈர் குன்றம் நாட
தொடர்புடையே மென்பார் சிலர். (03) தொடர்புடையேம் என்பார் சிலர். (௩)
- பதவுரை
ஈர் குன்றம்= குளிர்ந்த மலையையும்,
நாட= நாட்டையும் உடைய பாண்டியனே!,
ஒருவர்= ஒருவர்,
கால் ஆடு போழ்தில்= (செல்வமுற்று) சஞ்சரிக்கும் காலத்து,
கழி= மிகுந்த,
கிளைஞர்= உறவினர்,
வானத்து= ஆகாயத்து,
மேல் ஆடு= மேலே சஞ்சரிக்கும்,
மீனில்= நட்சத்திரங்களைப் பார்க்கிலும்,
பலர் ஆவர்= அநேகராவார்,
ஏலா= பொருந்தாத,
இடர்= துன்பங்களை,
உற்றக்கால்= அடைந்தால்,
சிலர்= சிலர் மாத்திரம்,
தொடர்பு= சம்பந்தம்,
உடையோம்= உடையோம்,
என்பார்= என்று சொல்வார்கள்.
- கருத்துரை
- ப2ண்டியனே! ஒருவர் நடந்து திரியுங் காலத்துப் பலபேர் உறவினராவார்கள்; அவரை துன்பமடைந்த காலத்துச் சிலபேர் உறவினராவார்கள்.
- விசேடவுரை
- கிளைஞர்- எழுவாய், ஆவர்- பயனிலை, சிலர்- எழுவாய், என்பார்- பயனிலை.
பாடல்: 114 (வடுவிலா)
[தொகு]வடுவிலா வையத்து மன்னிய மூன்றி () வடு இலா வையத்து மன்னிய மூன்றின்
னடுவண தெய்த விருதலையு - மெய்து ()நடுவணது எய்த இரு தலையும் - எய்தும்
நடுவண தெய்தாதா னெய்து முலைப்பெய் () நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
தடுவது போலுந் துயர். (04) அடுவது போலும் துயர்.(௪)
- பதவுரை
வடு இலா= குற்றமில்லாத,
வையத்து= பூமியில்,
மன்னிய= நிலைபெற்ற,
மூன்றில்= (அறம், பொருள், இன்பமென்னும்) மூன்றனுள்,
நடுவணது= நடுவாகிய பொருள்,
எய்த= பொருந்த,
இருதலையும்= தருமமும், காமமும்,
எய்தும்= அடையும்;
நடுவணது= பொருளை,
எய்தாதான்= அடையாதவன்,
உலை= உலையில்,
பெய்து= போட்டு,
அடுவதுபோலும்= (ஆமையைக்) கொல்லுதல் போலும்,
துயர்= துன்பத்தை,
எய்தும்= அடைவான்.
- கருத்துரை
- பொருளை அடைந்தவன் புண்ணியத்தையும், இன்பத்தையும் அடைவான்; பொருளை அடையாதவன் துன்பத்தை அடைவான்.
- விசேடவுரை
- இருதலை- எழுவாய், எய்தும்- பயனிலை, பொருளை- செயப்படுபொருள். எய்தாதான்- எழுவாய், எய்தும்- பயனிலை, துயர்- செயப்படுபொருள்.
பாடல்: 115 (நல்லாவின்)
[தொகு]நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉங் () நல் ஆவின் கன்று ஆயின் நாகும் விலை பெறூஉம்
கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச்- சொற்செல்லும் ()கல்லாரை ஆயினும் செல்வர் வாய் - சொல் செல்லும்
புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச் () புல் ஈரம் போழ்தின் உழவே போல் மீது ஆடி
செல்லாவா நல்கூர்ந்தார் சொல். (05) செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். (௫)
- பதவுரை
நல்= நல்ல,
ஆவின்= பசுவின்,
கன்று ஆயின்= கன்றானால்,
நாகும்= இளங்கன்றும்,
விலை பெறூஉம்= விலை பெறும்;
கல்லாரே ஆயினும்= கல்லாதவரானாலும்,
செல்வர் வாய்= ஐசுவரியவான்கள் வாக்கிற் பிறக்கும்,
சொல் செல்லும்= சொற்கள் செல்லும்;
நல்கூர்ந்தார் சொல்= வறியவர் வாக்கிற் பிறக்கும் சொற்கள்,
புல் ஈரம்= அற்ப ஈரம் பொருந்திய காலத்தில்,
(உழும்) உழவே போல்= உழுபடைச் சால் போல,
மீது ஆடி= மேலாடி,
செல்லா ஆம்= செல்ல மாட்டாவாம்.
- கருத்துரை
- செல்வவான்கள் சொற்கள் செல்லும், தரித்திரர் சொற்கள் செல்லாவாம்.
- விசேடவுரை
- சொல்- எழுவாய், செல்லாவாம்- பயனிலை. ஏ-அசை.
பாடல் 116 (இடம்பட)
[தொகு]இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்று () இடம் பட மெய் ஞானம் கற்பினும் என்றும்
மடங்காதா ரென்று மடங்கார்- தடங்கண்ணா ()அடங்காதார் என்றும் அடங்கார் - தடம் கண்ணாய்
யுப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் () உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய். (06) கைப்பு அறா பேய் சுரையின் காய் (௬).
- பதவுரை
தடம் கண்ணாய்= விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!
உப்பொடு= உப்புடன்,
நெய்= நெய்யும்,
பால்= பாலும்,
தயிர்= தயிரும்,
காயம்= பல காயங்களும்,
பெய்து= இட்டு,
பேய்ச்சுரையின் காய்= பேய்ச்சுரைக்காயை,
அடினும்= சமைத்தாலும்,
கைப்பு அறா= (அதன்) கசப்பு நீங்காது; (அதுபோல),
மெய் ஞானம்= உண்மை ஞான நூல்களை,
என்றும்= எந்நாளும்,
இடம்பட= விரிவாக,
கற்பினும்= கற்றாலும்,
அடங்கார்= அடங்காதவர்கள்,
என்றும்= எந்நாளும்,
அடங்கார்= அடங்கார்.
- கருத்துரை
- பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
- விசேடவுரை
- அடங்காதார்- எழுவாய், அடங்கார்- பயனிலை.
அவிநயர் சூத்திரம்
“குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்
முதற்பா தனிச்சொலி னடிமூஉ யிருவகை
விகற்பி னடப்பது நேரிசை வெண்பா.”
இஃது இவ்விதியால் நேரிசை வெண்பா.
பாடல் 117 (தம்மை)
[தொகு]தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க () தம்மை யிகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க
வென்னை? யவரொடு பட்டது- புன்னை ()என்னை அவரொடு பட்டது- புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப () விறல் பூ கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப
வுறற்பால யார்க்கு முறும். (07) உறல் பால யார்க்கும் உறும் (௭).
- பதவுரை
புன்னை= புன்னையினது,
விறல்= மிக்க,
பூ= பூக்களின் மணம்,
கமழ்= பரிமளிக்கின்ற,
கானல்= சோலையையும்,
வீங்கு= நிறைந்த,
நீர்= நீரினையும்,
சேர்ப்ப= கடற்கரையையும் உடைய பாண்டியனே!
உறல் பால= வருபவை,
யார்க்கும்= யாவருக்கும்,
உறும்= வருமாதலால்,
தம்மை= தங்களை,
இகழ்வாரை= இகழ்பவர்களை,
தாம்= தாங்கள்,
அவரின்முன் இகழ்க= அவர்களின் முன்பாக இகழக்கடவர்கள்,
அவரோடு பட்டது= அவர்கள் பின்னால் இகழப்பட்ட தன்மை,
என்னை?= என்ன?
- கருத்துரை
- பாண்டியனே! தங்களை யிகழ்ந்தவர்கள் முன்பாகத் தாங்கள் இகழக்கடவர்கள்! அவர்கள் பின் இகழ்வதென்ன.
- விசேடவுரை
- தாம்- எழுவாய், இகழ்க- பயனிலை
பாடல் 118 (ஆவே)
[தொகு]ஆவே றுருவின வாயினு மாபயந்த () ஆ வேறு உருவின ஆயினும் ஆ பயந்த
பால்வே றுருவின வல்லவாம்- பால்போ ()பால் வேறு உருவின அல்லவாம்- பால்போல்
லொருதன்மைத் தாகு மறநெறி யாபோ () ஒரு தன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல்
லுருவு பலகொள லீங்கு. (08) உருவு பல கொளல் ஈங்கு. (௮)
- பதவுரை
ஆ= பசுக்கள்,
வேறு= வேறுபட்ட
உருவின ஆயினும்= உருவங்களை யுடையனவாயினும்,
ஆ= அப்பசுக்கள்,
பயந்த= கொடுத்த,
பால்= பாலெல்லாம்,
வேறு= வேறுபட்ட,
உருவின= உருவங்களையுடையன,
அல்ல ஆம்= அல்லனவாம்;
பால் போல்= அப் பால் போல,
அறம்= அறத்தினது,
நெறி= வழி,
ஒரு தன்மைத்து= ஒரு தன்மையையுடையது,
ஆகும்= ஆம்,
ஆ போல்= அப் பசுக்கள் போல,
ஈங்கு= ஈங்கு உண்டாகிய சமயங்களும்,
பல= பல,
உருவு= வேடங்களை,
கொளல்= கொண்டிருக்கும்.
- கருத்துரை
- பசுக்களெல்லாம் வேறுருவானாலும் பாலெல்லாம் ஓருருவே; அதுபோல, யார்செய்யினுந் தரும்மெல்லாம் ஒருவழியாகும்; இப்படியே சமயங்கள்.
- விசேவுரை
- அறநெறி- எழுவாய், ஆகும்- பயனிலை, சமயங்கள்- எழுவாய், கொளல்- பயனிலை, வேடங்களை- செயப்படுபொருள்.
அகத்தியச் சூத்திரம்
“முதலு மூன்று நாற்சீ ராகியும்
இரண்டு மீறு முச்சீ ராகியும்
தனிச்சொற் சீர்கொளு நேரிசை வெண்பா.”
பாடல் 119 (யாஅருலகத்)
[தொகு]யாஅ ருலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால் () யாஅர் உலகத்தோர் சொல் இல்லார் தேரும் கால்
யாஅ ருபாயத்தின் வாழாதார்- யாஅ ()யாஅர் உபாயத்தின் வாழாதார் -யாஅர்
ரிடையாக வின்னாத தெய்தாதார் யாஅர் () இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர்
கடைபோகச் செல்வமுய்த் தார். (09) கடை போக செல்வம் உய்த்தார். (௯)
- பதவுரை
தேரும்கால்= ஆராயுமிடத்து,
உலகத்து= உலகில்,
ஓர் சொல்= ஓர் நிந்தைச் சொல்லை,
இல்லார்= இல்லாதவர்,
யார்= யாவர்?,
உபாயத்தின்= (முற்பிறப்பில் தவஞ்செய்த) உபாயத்தால்,
வாழாதார்= (இப்பிறப்பில்) வாழாதார்,
யார்= யாவர்?,
இடை ஆக= இதற்கு முன்,
இன்னாதது= துன்பத்தை,
எய்தாதார்= அடையாதவர்,
யார்= யாவர்?,
கடைபோக= முடிவளவும்,
செல்வம்= செல்வத்தை,
உய்த்தார்= செலுத்தினவர்,
யார்= யார்தாம்? (ஒருவருமில்லை).
- கருத்துரை
- உலகத்தில் ஒரு நிந்தையேனும் அடையாதார் யார்? வாழாதார் யார்? யார் துன்பம் அடையாதார்? யார் முற்றுஞ் செல்வம் பெற்றார்.
- விசேடவுரை
- யார்- எழுவாய், யார்- பயனிலை.
பாடல் 120 (தாஞ்செய்)
[தொகு]தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற் () தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று
றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை- யாங்குத்தாம் ()யாங்கணும் தேரில் பிறிது இல்லை- ஆங்குத் தாம்
போற்றிப் புனைந்த வுடம்பும் பயனின்றே () போற்றிப் புனைந்த உடம்பும் பயன் இன்றே
கூற்றங்கொண் டோடும் பொழுது. (10) கூற்றம் கொண்டு ஓடும் பொழுது. (௰)
- பதவுரை
ஆங்கு= அவ்விடத்து,
தாம்= தாங்கள்,
போற்றி= காத்து,
புனைந்த= அழகுசெய்த,
உடம்பும்= சரீரமும்,
கூற்றம்= கூற்றுவன்,
கொண்டு= தமது உயிரைக் கொண்டு,
ஓடும்பொழுது= போங் காலத்தில்,
பயன்= பிரயோசனம்,
இன்றி= இல்லை;
தாம்= தாங்கள்,
செய்= செய்த,
வினை= இருவினையும்,
அல்லால்= அல்லாது,
தம்மொடு= தம்முடனே,
செல்வது= கூடப்போவது,
யாங்கணும்= எக்காலத்தாயினும்,
தேரில்= ஆராய்ந்தால்,
பிறிது இல்லை= வேறொன்றுமில்லை.
- கருத்துரை
- தாங்கள் செய்த நல்வினை தீவினையே தங்களோடுகூட வரும்.
- விசேடவுரை
- வினை- எழுவாய், பிறிதில்லை- பயனிலை.
பார்க்க
[தொகு]அறத்துப்பால்- 1.துறவறவியல்
- நாலடியார் 1-ஆம் அதிகாரம் -செல்வ நிலையாமை
- நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
- நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
- நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
- நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
- 2.இல்லறவியல்
- நாலடியார் 7-ஆம் அதிகாரம் - சினமின்மை
- நாலடியார் 8-ஆம் அதிகாரம்-பொறையுடைமை
- நாலடியார் 9-ஆம் அதிகாரம்-பிறர்மனைநயவாமை
- நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
- நாலடியார் 11-ஆம் அதிகாரம்-பழவினை
- [[]]
- நாலடியார் 13-ஆம் அதிகாரம்-தீவினையச்சம்
2.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
- [[]]