நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]II.பொருட்பால்: 1.அரசியல்
[தொகு][அஃதாவது, பொருளினுடைய பகுப்பாம்]
இருபதாம் அதிகாரம் தாளாண்மை
[அஃதாவது, முயற்சி செய்தலாம்]
பாடல்: 191 (கோளாற்றக்)
[தொகு]கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் || கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப || கேள் ஈவது உண்டு கிளைகளோ - துஞ்சுப
வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் || வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும்
தாளாளர்க் குண்டோ தவறு. (01) || தாளாளர்க்கு உண்டோ தவறு. (191)
பதவுரை:
- கோள்= நீர்கொள்ளுதல்
- ஆற்ற = மிகவும்,
- கொள்ளா = கொள்ளாத
- குளத்தின் கீழ் = குளத்தின் கீழே
- பைங்கூழ் போல் = பசிய பயிர்போல
- கேள் = இனத்தார்
- ஈவது = கொடுப்பதை,
- உண்டு = புசித்து,
- கிளைகள் = இனத்தார்,
- துஞ்சுப = வருந்துவர்;
- வாள் ஆடு = வாள்கொண்டு சுழற்றும்,
- கூத்தியர் = கூத்தாடுவோர்,
- கண்போல் = கண்களைப் போல,
- தடுமாறும் = புடைபெயர்ந்து நிற்கும்,
- தாளாளர்க்கு = முயற்சி செய்வார்க்கு,
- தவறு = பொருள் முட்டுப்பாடு,
- உண்டோ = இல்லை.
கருத்துரை:
- முயற்சி செய்வார்க்கு யாதொரு குறைவுமில்லை.
விசேடவுரை:
- கிளைகள் - எழுவாய், துஞ்சுப - பயனிலை. தவறு - எழுவாய், உண்டோ - பயனிலை. ஓ - அசை.
பாடல்: 192 (ஆடுகோடாகி)
[தொகு]ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉங் || ஆடு கோடு ஆகி அதர் இடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் || காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும்
வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் || வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன் தான்
றாழ்வின்றித் தன்னைச் செயின். (02) || தாழ்வு இன்றி தன்னை செயின். (192)
பதவுரை:
- ஆடு = அசைகின்ற,
- கோடு ஆகி = கொம்பாகி
- அதரிடை = வழியிடத்து
- நின்றதூஉம் = நின்ற இளமரமும்
- காழ் = வைரம் கொண்ட
- கண்ணே = இடத்தே
- களிறு = யானையை
- அணைக்கும் = சேர்த்துக் கட்டும்
- கந்து ஆகும் = தறியாகி விடும்;
- ஒருவன் = ஒருவன்
- தாழ்வு = தாழ்ச்சி
- இன்றி = இல்லாமல்
- தன்னை செயின் = முயற்சியில் தன்னை யாக்கிக் கொண்டால்
- வாழ்தலும் = செல்வமுடையன் ஆதலும்
- அன்ன தகைத்தே = அத்தன்மையாம்.
கருத்துரை:
- இளைய மர முற்றினால் அதனைக்கொண்டு யானையைக் கட்டலாகும்; ஒருவன் முயற்சி செய்வானானால் வாழலாம்.
விசேடவுரை:
- வாழ்தல் - எழுவாய், தகைத்து - பயனிலை. தான் - அசை, வைரத்தின் பகுதி வேரம்; இதனை வீரசோழியத்திற் காண்க.
பாடல்: 193 (உறுபுலி)
[தொகு]உறுபுலி யூனிரை யின்றி யொருநாட் || உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள்
சிறுதேரை பற்றியுந் தின்னு - மறிவினாற் || சிறு தேரை பற்றியும் தின்னும் - அறிவினால்
காற்றொழி லென்று கருதற்க கையினான் || கால் தொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலு மாங்கே மிகும். (03) || மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
பதவுரை:
- உறு = பலமுற்ற
- புலி = புலியானது
- ஊண் = இறைச்சியாகிய
- இரை = உணவு
- இன்றி = இல்லாமல்
- ஒரு நாள் = ஒரு தினம்
- சிறு தேரை = சிறிய தவளையை
- பற்றியும் = பிடித்தும்
- தின்னும் = உண்ணும்; (ஆதலால்)
- அறிவினால் = அறிவால்
- கால் தொழில் என்று = அற்பத் தொழிலென்று
- கருதற்க = நினையாதிருக்கக் கடவன்,
- கையினால் = முயற்சியால்
- மேல் தொழிலும் = மேலான தொழிலும்
- மிகும் = மிகும்.
கருத்துரை:
- புலி, இரை இல்லாவிடில், சிறு தவளையையுந் தின்னும். ஆகையால், அற்பத் தொழிலென் றெண்ணாதே. அதுவே பெரிய தொழிலாகும்.
விசேடவுரை:
- மேற்றொழில் - எழுவாய், மிகும் - பயனிலை, ஆங்கு, ஏ - அசைகள்.
பாடல்: 194 (இசையா)
[தொகு]இசையா தெனினு மியற்றியோ ராற்றா || இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
லசையாது நிற்பதா மாண்மை - யிசையுங்காற் || அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையும் கால்
கண்ட றிரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப || கண்டல் திரை அலைக்கும் கானலம் தண் சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று. (04) || பெண்டிரும் வாழாரோ மற்று.
பதவுரை:
- கண்டல் = முள்ளிச்செடியை
- திரை = அலைகள்
- அலைக்கும் = ஒதுக்கும்
- கானலம் = உப்பளத்தையும்
- தண் = குளிர்ந்த
- சேர்ப்ப = கடற்கரையையுமுடைய பாண்டியனே!
- இசையாது எனினும் = முயற்சி பொருந்தாவிடினும்
- இயற்றி = முயற்சிசெய்து
- ஓர் ஆற்றால் = ஒருவழியால்
- அசையாது = தளராமல்
- நிற்பதாம் = நிற்பதாகும்;
- ஆண்மை = ஆண்மைத்திறம்
- இசையும் கால் = முயற்சி பொருந்துமாகில்
- பெண்டிரும் = பெண்பிள்ளைகளும்
- வாழாரோ = ஆடவர்போல் வாழமாட்டார்களோ?
கருத்துரை:
- பாண்டியனே! முயற்சி பொருந்தாவிடினும் மேன்மேலும் முயற்சிசெய்து வாழ்தல் ஆண்மைத்திறம்; முயற்சி பொருந்துமானால் பெண்பிள்ளைகளும் வாழ்வார்கள்.
விசேடவுரை:
- ஆண்மை - எழுவாய், நிற்பதாம் - பயனிலை. மற்று - அசை.
பாடல்: 195 (நல்லகுல)
[தொகு]நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் || நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பி || சொல் அளவால் பொருள் இல்லை - தொல் சிறப்பின்
னொண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை || ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வனை
யென்றிவற்றா னாகுங் குலம். (05) || என்று இவற்றான் ஆகும் குலம்.
பதவுரை:
- நல்ல குலம் என்றும் = நல்ல குலமென்றும்
- தீய குலம் என்றும் = கெட்ட குலமென்றும்
- சொல் அளவு அல்லால் = சொல்லும் அளவல்லாமல்
- பொருள் இல்லை = யாதொரு பொருளுமில்லை;
- தொல் = பழைய
- சிறப்பின் = சிறப்பையுடைய
- ஒண் = ஒள்ளிய
- பொருள் = பொருளும்
- தவம் = தவமும்
- கல்வி = கல்வியும்
- ஆள்வினை = முயற்சியு்
- என்ற இவற்றான் = என்று சொல்லிய இவைகளால்
- குலம் = குலம்
- ஆகும் = மேன்மையடையும்.
கருத்துரை:
- பொருள், தவம், கல்வி, தொழில் ஆகிய இவற்றால் குலம் மேன்மை யடையும்
விசேடவுரை:
- குலம் - எழுவாய், ஆகும் - பயனிலை. ஒன்றோ - இடைச்சொல்.
பாடல்: 196 (ஆற்றுந்)
[தொகு]ஆற்றுந் துணையு மறிவினை யுள்ளடக்கி || ஆற்றுஉம் துணையும் அறிவினை உள் அடக்கி
யூக்க முரையா ருணர்வுடையார் - ஊக்க || ஊக்கம் உரையார் உணர்வு உடையார் - ஊக்கம்
முறுப்பினா லாராயு மொண்மை யுடையார் || உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. || குறிப்பின் கீழ் பட்டது உலகு.
பதவுரை:
- ஆற்றும் = செய்யுங்காரியம்
- துணையும் = முடியுமளவும்
- அறிவினை = அறிவை
- உள் அடக்கி = தம்முளடக்கி
- ஊக்கம் = தம் வலிமையை
- உணர்வு உடையார் = அறிவுடையார்,
- உரையார் = பிறரறியச் சொல்லார்
- ஊக்கம் = பிறர் வலிமையை
- உறுப்பினால் = அவயவத்தால்
- ஆராயும் = விசாரிக்கும்
- ஒண்மை உடையார் = அறிவை யுடையவர்
- குறிப்பின் கீழ் = அவர் குறிப்பினிடத்து
- உலகு = உலகமானது
- பட்டது = தங்கியது.
கருத்துரை: அறிவுடையோர் தமது காரியம் முடியுமளவும் தமது வலிமையைச் சொல்லார்கள், உலகு - அறிவுடையோர் குறிப்பிற் றங்கியது.
விசேடவுரை: உணர்வுடையார் - எழுவாய், உரையார் - பயனிலை. ஊக்கம் - செயப்படுபொருள்.
பாடல்: 197 (சிதலை)
[தொகு]சிதலை தினப்பட்ட வால மரத்தை || சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் || மதலையாய் மற்று அதன் வீழ் ஊன்றியாங்கு
தலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற || தலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (07) || புதல்வன் மறைப்ப கெடும். (197)
பதவுரை:
- சிதலை = செல்,
- தினப்பட்ட = தின்னப்பட்ட,
- ஆலமரத்தை =ஆலமரத்தை,
- அதன் = அம்மரத்தில்,
- வீழ் = வீழ்ந்த விழுது,
- மதலையாய் = பற்றுக்கோடாய்,
- ஊன்றியாங்கு = தாங்கினாற் போல,
- தந்தைகண் = தன் பிதாவிடத்து,
- குதலைமை = தளர்ச்சி,
- தோன்றின் = தோன்றினால்,
- தான்பெற்ற = தான் ஈன்ற,
- புதல்வன் = பிள்ளை,
- மறைப்ப = தன் முயற்சியால் மறைக்க,
- கெடும் = கெட்டுவிடும்.
கருத்துரை:
- ஆலமரத்தை அதன் விழுது தாங்கினாற்போலப் பிதாவிடத்துத் தளர்ச்சி தோன்றில் பிள்ளை தாங்குவான்.
விசேடவுரை:
- குதலைமை - எழுவாய், கெடும் - பயனிலை, மற்று - அசை.
பாடல்: 198 (ஈனமாயில்)
[தொகு]ஈனமா யில்லிருந் தின்றி விளியினு || ஈனம் ஆய் இல் இருந்து விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ - யானை || மானம் தலைவருவ செய்பவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா || வரிமுகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள்
ளரிமா மதுகை யவர். (08) || அரிமா மதுகையவர். (198)
பதவுரை:
- யானை = யானையினது,
- வரிமுகம் = புள்ளியையுடைய முகத்தை,
- புண் படுக்கும் = புண் செய்யும்,
- வள் = கூரிய,
- உகிர் = நகத்தையும்,
- நோன் தாள் = வலிய காலையுமுடைய,
- அரிமா = சிங்கத்தினது,
- மதுகையவர் = வலியுள்ளவர்,
- ஈனம் ஆய் = இழிவாய்,
- இல் இருந்து = வீட்டிலிருந்து,
- இன்றி = முயற்சி யில்லாது,
- விளியினும் = இறந்தாலும்,
- மானம் = குற்றம்,
- தலை = தம்மிடத்து,
- வருவ = வருங் காரியங்களை,
- செய்பவோ = செய்வாரோ?
கருத்துரை:
- சிங்கம்போலும் வலிமையுள்ளவர் முயற்சி யில்லாது வீட்டிலிருந் தழியினும் குற்றமுள்ள காரியங்களைச் செய்யார்கள்.
விசேடவுரை:
- மதுகையவர் - எழுவாய், செய்பவோ - பயனிலை.
பாடல்: 199 (தீங்கரும்பீ)
[தொகு]தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி || தீம் கரும்பு னீன்ற திரள் கால் உளை அலரி
தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங் - கோங்கு || தேன் கமழ் நாற்றம் இழந்து ஆஅங்கு - ஓங்கும்
முயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும் || உயர் குடியுள் பிறப்பின் என் ஆம் பெயர் பொறிக்கும்
பேராண்மை யில்லாக் கடை. (09) || பேர் ஆண்மை இல்லா கடை. (199)
பதவுரை:
- தீம் கரும்பு = மதுரமாகிய கரும்பு,
- ஈன்ற = தந்த,
- திரள் = திரண்ட,
- கால் = தாளினையும்,
- உளை = மென்மயிர் போற் கற்றையு முடைய,
- அலரி = பூ,
- தேன் கமழ் = இனிய பரிமளமாகிய,
- நாற்றம் = வாசனையை,
- இழந்து ஆங்கு = இழந்தாற் போல,
- பெயர் = தன் பெயரை,
- பொறிக்கும் = எங்கும் நாட்டும்,
- பேர் ஆண்மை = பெரிய முயற்சி,
- இல்லாக்கடை = இல்லாவிடில்,
- ஓங்கும் = ஓங்கி,
- உயர் = உயர்ந்த,
- குடியுள் = நற்குடியில்,
- பிறப்பின் = பிறந்ததனால்,
- என் = என்ன,
- ஆம் = பயனுண்டாம்.
கருத்துரை:
- முயற்சியினால் தன் பெயரை யெங்கும் காட்டாதவன் உயர்ந்த குடியிற் பிறந்து என்ன பயன்?
விசேடவுரை:
- என் - எழுவாய், ஆம் - பயனிலை.
பாடல்: 200 (பெருமுத்)
[தொகு]பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங் || பெரும் முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப் || கருனை சோறு ஆர்வர் கயவர் - கருனையை
பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை || பேரும் அறியார் நனி விரும்பு தாளாண்மை
நீரு மமிழ்தாய் விடும். (10) || நீரும் அமிழ்தாய் விடும். (200)
பதவுரை:
- பெரும் = பெரிய,
- முத்தரையர் = மும்மண்டலங்களில் வசிப்பவர்கள்,
- பெரிது = மிகவும்,
- உவந்து = மகிழ்ந்து,
- ஈயும் = இடும்,
- கருனை = பொரிக்கறியையும்,
- சோறு = சோற்றையும்,
- ஆர்வர் = புசிப்பார்,
- கயவர் = கீழ்மக்கள்,
- கருனையை = பொறிக்கறியை,
- பேரும் = பெயரும்,
- அறியாதார் = அறியாதவர்,
- நனி = மிகவும்,
- விரும்ப = இச்சிக்கத்தக்க,
- தாளாண்மை = முயற்சியில் வரும்,
- நீரும் + (புல்லரிசிக்) கூழ் நீரும்,
- அமிழ்து ஆய்விடும் = தமக்கு அமிருதத்தை ஒத்ததாகும்.
கருத்துரை:
- கீழ்மக்கள் பிறரிடத்து உண்பர்; மேன்மக்கள் முயற்சி செய்து உண்பர்.
விசேடவுரை:
- 'முத்தரையர்' என்பதற்கு 'முத்தரையரென்னும் பெரிய அரசனென்றாவது' சேர சோழ பாண்டிய மண்டலங்களில் வசிப்போரென்றாவது பொருள் கொள்க. நீர் - எழுவாய், அமிழ்தாய்விடும் - பயனிலை.
இருபதாம் அதிகாரம் தாளாண்மை முற்றிற்று
நாலடியார் அரசியல் முற்றிற்று
பார்க்க
[தொகு]II.பொருட்பால்: 1.அரசியல்
- நாலடியார் 14-ஆம் அதிகாரம்-கல்வி
- நாலடியார் 15-ஆம் அதிகாரம்-குடிப்பிறப்பு
- நாலடியார் 16-ஆம் அதிகாரம்-மேன்மக்கள்
- நாலடியார் 17-ஆம் அதிகாரம்-பெரியாரைப் பிழையாமை
- நாலடியார் 18-ஆம் அதிகாரம்-நல்லினஞ் சேர்தல்
- நாலடியார் 19-ஆம் அதிகாரம்-பெருமை
- நாலடியார் 20-ஆம் அதிகாரம்-தாளாண்மை
II.பொருட்பால்: 2.நட்பியல்
II.பொருட்பால்: 3.இன்பவியல்
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]
- [[]] [[]] [[]]