போதி மாதவன்/கடைசி யாத்திரை

விக்கிமூலம் இலிருந்து

பத்தொன்பதாம் இயல்

கடைசி யாத்திரை

‘மாரனை வெல்லும் வீர, நின்னடி,
தீ நெறிக் கடும்பகை கடிந்தோய், நின்னடி,
பிறர்க்(கு) அறம் முயலும் பெரியோய், நின்னடி,
துறக்கம்[1] வேண்டாத் தொல்லோய், நின்னடி,
எண்பிறக்(கு) ஒழிய இறந்தோய்,[2] நின்னடி,
கண் பிறர்க்(கு) அளிக்கும் கண்ணோய், நின்னடி,
தீ மொழிக்(கு) அடைத்த செவியோய், நின்னடி,
வாய்மொழி சிறந்த நாவோய், நின்னடி,
நரகர் துயர்கெட நடப்போய், நின்னடி,
உரகர் துயர(ம்) ஒழிப்போய், நின்னடி,
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்(கு)
அடங்காது!’

–மணிமேகலை

புத்ததேவரின் சரிதையிலே, அவர் மெய்ஞ்ஞானம் பெற்றபின் இருபத்தோராண்டுகள் வரை–அதாவது அவருடைய ஐம்பத்தாறாம் வயது வரையிலுமே–ஓரளவு வாழ்க்கைக் குறிப்புக்கள் தெரிந்திருக்கின்றன. அதன் பின்னர் அவரது எழுபத்தொன்பதாவது வயதுவரை, இருபத்து மூன்று ஆண்டுகளின் சரிதையைப் பற்றி எத்தகைய குறிப்புமே இல்லை ஆனால் அந்திம காலத்தில் அவர் செய்த யாத்திரை பற்றியும், மல்லர்கள் வாழ்ந்த குசீநகரில் அவர் முடிவெய்தியது பற்றியும் ‘மகா-பரி - நிர்வாண சூத்திர’த்தில்[3] விவரங்கள் காணப் பெறுகின்றன. தமது இறுதி யாத்திரையில் அவர் பல ஊர்களில் அடியார்களுக்கும் மக்களுக்கும் செய்த உபதேசங்களின் சுருக்கங்களும் அதில் குறிக்கப் பெற்றுள்ளன. அந்தச் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு புத்தர் பெருமானின் கடைசி யாத்திரையையும், மகா-பரி-நிருவாணத்தையும் நாம் விவரிப்பதற்கு முன்னால், பெருமானின் சிற்றன்னை யாகிய கௌதமி அம்மையாரும், வாழ்க்கைத் துணையாக விளங்கிய யசோதரா தேவியாரும் நிர்வாண மடைந்ததைக் குறிப்பிடவேண்டும்.

அன்னையார்

கௌதமியார் வைசாலி நகரில் நெடுங்காலம் பிக்குணிகளின் தலைவியராயிருந்து புத்தருக்கும் தருமத்திற்கும், சங்கத்திற்கும் அரும்பெரும் பணிகள் ஆற்றிவந்தார். நாள்தோறும் பௌத்த தருமம் வளர்ந்து பிக்குக்களும், பிக்குணிகளும் பல்லாயிரக்கணக்கில் பெருகி வந்ததைப் பற்றி எண்ணி எண்ணி அவர் உள்ளம் பூரித்திருந்தார். தாம் வளர்த்து வந்த தவப்புதல்வர் கோடிக் கணக்கான மக்களின் பிறவிப் பிணிக்கு மருத்துவராக விளங்கியதுடன், தமக்கும் நற்கதியளிக்கும் வழியை உணர்த்தியதற்காக அப்புனிதரை அவர் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கி வந்தார். ஒரு சமயம் புத்தர் பிரான் வைசாலி நகரில் மகாவனத்தில் அமைந்திருந்த கூடாகார விகாரையில் தங்கியிருக்கையில் சிற்றன்னை கௌதமியார் அங்கே சென்று அவரைத் தரிசித்துவிட்டுத் தமது விகாரைக்குத் திரும்பிச் சென்றார். அப்போது அவர் உள்ளத்தில் தாம் விரைவிலே நிருவாணமடைய வேண்டும் என்ற எண்ணம் சுடர்விட்டு ஒளிர ஆரம்பித்தது.

பெருமானுடைய திருமேனி திடமாயிருக்கும்போதே தாம் முன்னதாக முக்திபெற வேண்டும் என்று அவர் கருதினார். மேலும் புத்தருடைய சீடர்களில் கௌண்டின்யர், சாரீபுத்திரா, மௌத்கல்யாயனர் முதலியோர் விரைவிலே நிருவாணமடையும் நிலையிலிருந்ததை அவர் தமது ஞான திருஷ்டியால் உணர்ந்திருந்தார். எனவே எல்லோருக்கும் முன்னதாகத் தாமே நிருவாணப் பேற்றைப் பெற வேண்டும் என்று ஆவல் கொண்டு, அவர் பெருமானை அணுகித் தமது விருப்பத்தை வெளியிட்டார். ஐயனும் மன உருக்கத்தோடு அதற்கு இசைந்தார் அப்போது அனனையார்க்கு வயது நூற்றிருபது என்று இலங்கை வரலாறுகளில் காணப்படுகின்றது. அந்த முதுமைப் பருவத்திலும் அவர் நரை, திரை முதலியவையின்றி இளமையோடு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பெண்டிரும் நிருவாணப் பேற்றை எளிதில் அடைய முடியும் என்பதை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டுப் போதி மாதவர் தம் அன்னையார் பெற்றிருந்த இருத்தி ஆற்றல்களைக் காட்டும்படி வேண்ட, அவரும் அவ்வாறே ஆகாயத்திற் பறந்து, பல உருவங்களெடுத்துப் பின்பு ஒரே உருவாகிப் புத்தர் புகழை ஓதிக் கொண்டே நிருவாண நிலையை அடைந்தார். அவரைப் போலவே அவருடன் தவப்பள்ளியில் தங்கியிருந்த 500 பிக்குணிகளும் நிருவாணமடைந்தனராம்.

மனைவியார்

யசோதரா தேவியார் தமது எழுபத்தெட்டாம் வயதில் நிருவாண நிலையை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. புத்தர் அவதரித்த நன்னாளிலேயே அவரும் தோன்றியவராதலால், இருவரும் ஒரே வயதினர். பெருமான் ஈராண்டுகளில் மகா-பரி-நிருவாணம் எய்துவார் என்பதைத் தேவியார் அறிந்திருந்ததால், அவருக்கு முன்னதாகத் தாம் நிருவாணமடைதலே முறையென்று கருதினார். போதி வேந்தரும், ‘சீலம் நிறைந்த பெண்களில் நீயே முதன்மை யானவள்!’ என்று அவரைப் போற்றி அனுமதி அளித்தார். பெருமானும், பிக்குக்களும், ஏராளமான , பொது மக்களும் சூழ்ந்திருக்கையில், தேவியார் வானத்தில் எழுந்து தமது இருத்தி ஆற்றலால் சில அற்புதங்கள் செய்து காட்டி விட்டுத் தமது தவப்பள்ளிக்குத் திரும்பிச் சென்று, தியானத்தில் அமர்ந்து, அன்றிரவே சாந்தி நிலையமாகிய நிருவாண நிலையை அடைந்தார்.

யாத்திரா மார்க்கம்

போதி நாதரின் கடைசியான புனித யாத்திரை இராஜ கிருக நகருக்கு அருகேயிருந்த கிருத்திரகூடம் என்ற கழுகுக் குன்றிலிருந்து ஆரம்பமாயிற்று. தலைநகரிலும், அருகாமையிலும் தங்கியிருந்த பிக்குக்களும், சீடர்களும் ஐயனின் அறவுரை கேட்க விகாரையில் வந்து குழுமியிருந்தனர். பௌத்த சங்கம் நாள்தோறும் வளர்ச்சி பெற்று நிலை நிற்பதற்குரிய முறைகளையெல்லாம் பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். பிக்குக்கள் ஒற்றுமையோடு அடிக்கடி சங்கத்திற் கூட வேண்டும் என்றும், வயது முதிர்ந்த தேரர்களுடைய வாய்மொழிகளை மற்றவர்கள் மதித்து நடக்கவேண்டும் என்றும் அவர் உபதேசித்தார். ஏகாந்த வாசம், வீண்பேச்சை விலக்கல், மடிமைக்கு இடங் கொடாமை, ஊதியம் தரும் தொழில்களில் ஈடுபடாமை தீய ஆசைகளை அகற்றல், தீவினைகளுக்கு, அஞ்சுதல், நிரம்பிய கல்வி, நிறைந்த நம்பிக்கை, தெளிந்த ஞானம், உலைவில்லாத ஊக்கம், சத்திய நாட்டம், நிலையாமையை உணர்தல், உள்ளப் பரிசுத்தம், அமைதி, ஆனந்தம், தியானம், அற்பமான பயன்களைக் கருதிப் பேரின்ப லட்சியத்தைக் கைவிடாமை, ‘நான்’ எனும் அகங்காரத்தை ஒழித்தல், சுய நலங்களை அறவே மறத்தல், உயர்ந்த புனிதமான சிந்தனைகளை வளர்த்தல், நிருவாண நிலையின் மேம்பாடு ஆகிய பல பொருள்களைக் குறித்தும் அப்போது அவர் விளக்கியுரைத்தார்.

கழுகுக் குன்றில் அவர் சீடர்களுக்குச் செய்த உபதேசங்களிலும், பின்னால் யாத்திரையில் பல இடங்களிலே ஆற்றிய சொற்பொழிவுகளிலும், பெருமான் ஒரு முக்கியமான கருத்தைத் திரும்பத் திரும்பக் கூறி வந்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அந்த உயரிய உபதேசம் வருமாறு:

‘நேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிந்தையை ஒருநிலைப்படுத்தும் சமாதியால் (தியானத்தால்) விளையும் பயன் பெரிது; மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க் கொண்டு அடையும் ஞானத்தால் விளையும் பயன் பெரிது; மகத்தானது. ஞானத்தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசைகளிலிருந்தும், “நான்” என்ற அகங்காரத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றது.’

பிக்குக்கள் நிறைந்த நம்பிக்கையோடு இருக்கவேண்டும்; அவர்கள் இதயத்தில் அடக்கம் நிலைபெற வேண்டும்; பாவத்திற்கு அவர்கள் அஞ்சி ஒதுங்கவேண்டும்; அவர்கள் கல்வி நிறைந்திருக்கவேண்டும்; ஆற்றல் பெறவேண்டும்; உள்ளங்கள் அசைவிலா ஊக்கத்தோடு இருக்கவேண்டும்; அவர்கள் பூரண ஞானம் பெறவேண்டும்–இந்த ஏழு விதிகளின்படி அவர்கள் நடந்து வந்தால்தான் பிக்குக்கள் அழிவுப் பாதையைவிட்டு வளர்ச்சிபெற்று வாழ்வார்கள் என்பதை ஐயன் அவர்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிய வைத்தார்.

பின்னர் பெருமான் இராஜகிருக நகரிலிருந்து. அடியார்கள் புடைசூழ, அம்பலத்திகா என்ற கிராமத்திற்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு, நாலந்தா கிராமத்தை அடைந்தார். நாலந்தா தருமசேநா பதியாகிய சாரீபுத்திரருடைய சொந்த ஊர். அங்கே பாவாரிகை என்ற மாந்தோப்பில் அவர் பகவருடன் தங்கி யிருந்த சமயத்தில் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடல் ஒன்று ‘மகா-பரி- நிருவாண சூத்திர'த்தில் குறிக்கப் பெற்றுள்ளது. உலகில் தோன்றிய புத்தர்கள் யாவரிலும் கௌ தம புத்தரே தலைசிறந்தவர் என்று சாரீபுத்திரர் தம் கருத்தைக் கூறினராம். நிகரற்ற மேதையாயும், சாத்திரக் கடலாயும், சன்மார்க்க சீலராயும் விளங்கிய தருமசேநாபதி கூட அவ்வாறு கூறியது குற்றம் என்று விமலர் எடுத்துக் காட்டினார். ஒரு வாழ்க்கையில் காணும் விஷயங்களைக் கூட முழுவதும் உய்த்துணரமுடியாத நிலையில், தொன்மையிலே தோன்றிய புத்தர்கள் அனைவரையும் பற்றி ஒருவர் ‘எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? எனவே பகவர், ‘கௌதம புத்தராகிய என்னையாவது நீ பூரணமாக அறிந்து விட்டாயா?’ என்று வினவினார். சாரீ புத்திரர் வெட்கத்தால் தலை வணங்கித் தமது பிழையை உணர்ந்து, தமது குருநாதரையே தாம் முழுதும் தெரிந்து கொள்ள வில்லை என்று ஒப்புக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு சாரீபுத்திரரைப் பற்றியோ மௌத்கல்யாயனரைப் பற்றியோ ‘மகா - பரி -நிருவாண சூத்திர’த்தில் வேறு விவரம் எதுவுமில்லை . ஆயினும் புத்ததேவரின் வலக்கரமாயும், இடக்கரமாயும் விளங்கிய இவ்விரு நண்பர்களும் அவருக்கு முன்பாகவே நிருவாணப் பேற்றை அடைந்து விட்டனர். அந்த விவரத்தை நாம் வேறு வரலாறுகளிலிருந்தே அறிய வேண்டியிருக்கிறது.

நாலந்தாவுக்கு அடுத்தாற்போல் புத்ததேவர் தங்கி யிருந்து உபதேசம் செய்த இடம் பாடலிகாமம். இது அக்காலத்தில் ‘பாடலி’ என்ற சிறு கிராமமாகவே இருந்து வந்தது. பிற்காலத்தில் பாடலிபுரம் (பாடலிபுத்திரா) என்ற பெருநகராகி, சந்திரகுப்தர், அசோகர் முதலிய சக்கரவர்த்திகளின் சாம்ராஜ்யத்திற்குத் தலைநகரமாயும் விளங்கிற்று. ‘பாடலி’ என்பது ஒரு மலரின் பெயர் என்பர்; பாடலிபுரத்திற்குக் குஸுமபுரம் (மலர் - நகர்) என்றும் பெயருண்டு. புத்தர் காலத்திலேயே பாடலியில் மகத மன்னர் அஜாதசத்துருவின் ஆணைப்படி பல அரண்கள் கட்டப்பெற்று வந்தன. விரிஜி நாட்டார் மகத நாட்டின் மீது படையெடுத்து வரக்கூடும் என்பதற்காக இவை அமைக்கப் பெற்றனவாம். எதிர் காலத்தில் பாடலி சாம்ராஜ்யத் தலைநகராக விளங்கும் என்பதைப் புத்தர் பெருமானும் அறிவித்திருந்தார்.

பாடலியில் யாத்திரிகர்கள் தங்கும் கிராம விடுதியிலேயே பெருமான் எழுந்தருளியிருக்க ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. அவருடைய விஜயத்தைக் கேள்வியுற்று அந்தப் பகுதியிலிருந்த அடியார்கள் பலரும் திரளாக வந்து குழுமியிருந்தனர். இரவில் நெடு நேரம்வரை போதிநாதர் அவர்களுக்கு அறவுரை புகன்று வந்தார். பின்னால் மகத மன்னரின் பிரதிநிதிகளாக அங்கு வேலை பார்த்து வந்து சுநீதர், வருஷகாரர் என்ற இருவரும் பெருமானை வணங்கி, அவரும் அடியார்களும் தம் அதிதிகளாக வந்து அமுது செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவரும் அதற்கு இசைந்து ஒரு நாள் அவர்கள் அளித்த விருந்தினை ஏற்றுக்கொண்டார்.

பாடலியிலிருந்து பெருமான் யாத்திரை தொடங்கு கையில், ஏராளமான அடியார்களும், பொதுமக்களும் தொடர்ந்து சென்றனர். வழியில் கங்கை நதியைக் கடந்து அக்கரை செல்லவேண்டியிருந்தது. பெருமானுக்காகப் பல ஓடங்கள் வந்து காத்து நின்றன. ஆயினும் அவர் தமது இருத்தி ஆற்றலால் கங்கை மீது பறந்து சென்றனராம். எந்த ஓடத்தில் ஏறிச் சென்றாலும், மற்ற ஓடக்காரர்கள் மனம் வருந்தக்கூடிய நிலையைத் தவிர்க்கவே அவர் பறந்து சென்றனர் என்று குறிக்கப் பெற்றுளது.

அம்பபாலி

இதன் பின்னர் பெருமான் கோடிகாமம், நாதிகா என்ற கிராமங்களின் வழியாக விரிஜி நாட்டின் தலைநக ரான வைசாலியை அடைந்தார். அங்கே அம்பபாலியின்[4] மாஞ்சோலையில் அவரும் அடியார்களும் தங்கியிருந்தனர். அம்பபாலி பேரெழிலும் பெருஞ் செல்வமும் பெற்றிருந்த ஒரு கணிகை. பேரரசர்களும், இளவரசர்களும் அவளு டைய புன்னகையை எதிர்பார்த்துப் பொற்காசுகளையும் நகைகளையும் அவள் அடிகளில் வைத்துக் காத்து நிற்பது வழக்கம். பழைய மகத மன்னர் பிம்பிசாரர் மூலம் அவள் புத்த பகவரின் கருணையைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். பகவரின் அன்பு எவரையும் வசியப்படுத்தி ஆட்கொள்ளும் என்றும், அது சுயநலக் கலப்பில்லாது மன்னுயிர் அனைத்தையும் தழுவிக் கொள்ளும் நீர்மையுள்ளது என்றும், அது வற்றாத கருணை வெள்ளம் என்றும் அம்மன்னவர் விளக்கிக் கூறிய தாக ஒரு கதையுண்டு. எனவே அம்பபாலி பெருமானைக் கண் குளிரக் கண்டு வணங்கவேண்டும் என்று அவர் வரவைப் பன்னெடு நாட்களாக எதிர்பார்த்திருந்தாள். அவர் வைசாலி வந்து தனது மாஞ்சோலையிலேயே தங்கி யிருப்பதை அறிந்தவுடன், அவள் விரைவாக அங்கே சென்று அவரைத் தரிசிக்க வேண்டுமென்று தன் பணிப் பெண்களுடன் மாளிகையை விட்டுப் புறப்பட்டாள்.

மாஞ்சோலையிலே, பெருமான் பிக்குக்களின் நடுவே அமர்ந்து, கருத்துடைமையைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவருடைய உபதேசங்களிலெல்லாம், ‘கருத்தோடிருங்கள்! கருத்தின்மை அழிவிற் கொண்டு சேர்க்கும்; கருத்துடைமை அமர வாழ்வளிக்கும். விழிப் போடிருங்கள்! மடிமைக்கு இடம் கொடுக்க வேண்டாம்!’ என்ற கருத்தை அடிக்கடி கூறி வற்புறுத்துவது வழக்கம் அப்போதும் அதையே தெளிவுபடுத்திக் கூறினார் : ‘ஓ பிக்குக்களே! துறவி கருத்தோடு, விழிப்போடு, இருக்க வேண்டும். துறவி இவ்வுலகில் இருக்கும்போது உடலின் ஆசையாலும், புலன்களின் வேட்கையாலும், தவறான ஆராய்ச்சியாலும் எழும் துக்கத்தை வெல்ல வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் மன உறுதியுடன் செய்யுங்கள். உண்ணல், பருகல், நடத்தல், நிற்றல் முதலிய வற்றிலும், உறங்கல் அல்லது விழித்திருத்தல், பேச்சு அல்லது மௌனம் ஆகிய எதிலும் கருத்தோடு நடந்து கொள்ளவும்!’[5]

மேலும் மெய்ஞ்ஞானம் பெறுவதற்குரிய ஏழு கருவிகளான ஸதி (ஞாபகம்), தரும விசாரம் (திரிபிடக சாத்திர ஆராய்ச்சி), வீரியம் (இடைவிடா முயற்சி), ஆனந்தம் (உள்ளம் இன்பத்தில் திளைத்தல்), சாந்தி (சித்தத் தெளிவால் வரும் அமைதி) சமாதி (சிந்தையை ஒரு நிலைப் படுத்தல்), உபட்சை (எதையும் சமமாகப் பாவித்தல்) என்ற ‘ஸப்த போத்தியாங்கங்கள் பற்றியும் அவர் விளக்கி யுரைத்தார்.

கண்டோர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேரழகுள்ள தாசி அம்பபாலி அங்கு விரைவிலே வரக்கூடும் என்பதால், பிக்குக்கள் துறவிகளேயாயினும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு விழிப்போடு இருப்பதற்காக ஐயன் அந்த நேரத்தில் கருத்துடைமை பற்றியும், உள்ளப் பண்பாடு பற்றியும் எச்சரிக்கை செய்தார் என்று புத்தகோஷர் என்ற உரையாசிரியர் கூறுவர்.

மாஞ்சோலையை அடைந்த அம்பபாலி, சோலையுள்ளே சிறிது தூரம் சென்றதும், தன் வாகனத்தையும், சேடிகளையும் ஒருபுறம் நிறுத்திவிட்டு, அறவாழி அந்தணரை நோக்கி நடந்து சென்றாள். அழகு வழியும் வதனமும், இளமை ததும்பும் அங்கங்களும் அவளுடைய பேரெழிலை விளம்பரஞ் செய்து வசீகரித்தபோதிலும். அன்று அவள் மதிப்புயர்ந்த அணிகள், ஆடைகள் எதுவுமின்றித் தூய்மையான எளிய உடையே அணிந்திருந்தாள் அவள் உள்ளத்தில் சாந்தி நிலைத்திருந்தது. பயபக்தியோடு ஐயன் அமர்ந்திருந்த மரத்தடியை நோக்கி மெல்ல மெல்ல நடந்து சென்றாள்.

தூரத்தில் வரும்போதே அமலர் அவளைக் கண்டு கொண்டார். அவர் பிக்குக்களை நோக்கி, ‘ஒரு நுகத்தடியில் பூட்டப் பெற்ற இரு காளைகளாக விளங்குபவை புலன்களும் அவை நாடிச் செல்லும் பொருள்களும். இரண்டையும் குறித்த அளவுக்குக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். கட்டுப்பாடில்லை யென்றால், இரண்டுக்கு மிடையே ஆசைகள் வளர ஆரம்பிக்கின்றன. ஏனெனில் இரண்டும் பொருத்தமில்லாதபடி ஒன்றுக்கொன்று மிஞ்சிய காளைகள்... ஆதலால் தான், “இதயத்தை அடக்கி வையுங்கள், கட்டுப்பாடில்லாமல் அதை விட்டுவிடக் கூடாது” என்று நான் கூறுகிறேன்.’[6] மன்னர்களோடு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அம்பபாலி சிந்தை நிறைவுற்றுச் சாந்தி பெற்றுத் திகழ்வதைக் கண்டு அவர் வியப்படைந்தார். இளவயது, பெருஞ் செல்வம், பேரழகு ஆகியவற்றோடு, தன்னைச்சுற்றி நிறைந்திருந்த இன்பங் களில் ஆழ்ந்து திளைத்திராமல், அக்கணிகைமகள், முகத் திலே சிந்தனையைத் தேக்கிக்கொண்டு, உள்ள உறுதியோடு வந்துகொண்டிருந்தாள். ‘உலகிலே இது அபூர்வம். பொதுவாகப் பெண்கள் அறிவில் குறைந்தவர்களாயும், ஆடம்பரத்தில் ஆழ்ந்தும் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இவளோ, செல்வம் கொழிக்கும் நிலையில் வாழ்ந்திருந்தும் ஒரு மேதாவியைப் போன்ற ஞானம் பெற்று, தவத்தில் இன்பம் கண்டு களிப்படைந்து, சத்திய உபதேசத்தை அப்படியே முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க நற் பாத்திரமாக விளங்குகிறாள்!’ என்று பெருமான் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அம்பபாலி அருகே வந்து போதிமாதவரின் பொன்னடிகளை வணங்கி, அவர் குறித்துக் காட்டிய இடத்தில் அமைதியோடு அமர்ந்தாள். அழகும், அறிவும், குண சௌந்தரியமும் பெற்றிருந்த அவளைப் போன்ற ஒரு பெண் தரும உபதேசம் பெற வந்திருப்பது அரியதொரு நிகழ்ச்சி என்று அவர் பாராட்டி, மேலும் சிலவார்த்தைகள் கூறினார்:

‘இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன் முறையான சிந்தனையினால் நன்மையிலே திளைத்திருக்க ஆரம்பிக்கிறான். செல்வமும் அழகும் நிலையாமையை அவன் கண்டு கொள்கிறான். தருமமே அவனுக்கு நிகரற்ற அணியாக விளங்குகின்றது.

‘ஆசையைத் தூண்டக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் அவன் எப்போதும் ஒதுக்கித் தள்ளி விட்டு, அவாவின்மையால் ஏற்படும் வலிமையைப் பெறுகிறான்.

‘வெளி உதவியைச் சார்ந்து நின்றால், அவன் துக்கமே பெறுகிறான்; தன்னம்பிக்கை கொண்டவுடன், அவனுக்கு வலிமையும் இன்பமும் கிடைக்கின்றன...’[7] சினேந்திரரின் சீரிய சொற்கள் செவிகளில் நுழைந்தவுடனே, அம்பபாலியின் மெய்யறிவு திடம் பெற்றது. அறிவின் உதவியால் அவள் ஆசைகளைத் துறக்க மடிந்தது. உள்ளத்தை விஷமாக்கும் தீய கருத்துக்கள் யாவுமே அவளை விட்டு அகன்று விட்டன. அவள் முகம் ஆனந்தத்தால் மலர்ச்சியுற்றது. அவள் எழுந்து நின்று, பகவர் பிக்குக்கருடனே நாளை எனது இல்லத்தில் பிச்சை ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? என்று விநயமாக வேண்டினாள். பெருமானும் தமது மௌனத்தினாலேயே அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். பிறகு அவள் அங்கிருந்து அரிதில் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினாள்.

வமியிலே வைசாலி நகரத்து லிச்சவிகள் என்ற அரச குலத்தைச் சேர்ந்த பிரபுக்களில் முக்கியமானவர்களும் அவர்களுடைய தலைவனும், ஆடம்பரமான ஆடைகளும், அணிகளும் அணிந்து, தங்களுடைய நேர்த்தியான இரதங் களிலே மாஞ்சோலையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அம்பபாலியின் இரதம் லிச்சவித் தலைவனுடைய இரதத்திற்கு நேர் எதிராக ஓடிச் சென்றது. அப்போது அத் தலைவன், ‘அம்பபாலி, எங்களுக்கு எதிராக நீ இவ்வளவு வேகமாக இரதத்தை ஓட்டிச் செல்வதன் கருத்து என்ன!’ என்று வினவினான்.

‘பிரபுவே, புத்த பகவரையும் அவருடைய அடியார்களையும் நாளை எனது இல்லத்தில் அமுது செய்யும்படி இப்பொழுதுதான் கேட்டுக் கொண்டு திரும்புகிறேன்!’ என்று மறுமொழி கூறினாள் அம்பபாலி.

தங்களுக்கு முன்னதாக ஒரு கணிகை போதி வேந்தருக்கு விருந்தளிக்கும் பெருமையைக் கொள்வதா என்று லிச்சவிகள் மனம் புழுங்கினர். அவர்கள், ‘அம்பபாலி. இந்த விருந்தை நாங்கள் அளிக்கும்படி எங்களுக்கு விட்டுக்கொடு–நூறாயிரம் பொன் தருகிறோம்!’ என்று வேண்டினர்

‘சீமான்களே! வைசாலி முழுவதையும் அதற்கு உட்பட்ட இராஜ்யத்தையும் கொடுத்தாலும், நான் இத்தகைய பெருமையை விட்டுக் கொடுக்க இயலாது!’ என்று கூறி விட்டுப் போய்விட்டான் அம்பபாலி.

லிச்சவிகள், நேராகச் சென்று ஐயனிருந்த அருந்தவப் பள்ளியை அடைந்தனர் தேவர்களைப் போல் அலங்காரம் செய்துகொண்டு வந்திருந்த அவர்களைச் சுட்டிக் காட்டி, ஐயன், ‘தேவர்களைப் பார்த்திராதவர்கள் இவர்களை இப்போது பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறினர் லிச்சவிகள் அவரை வணங்கிவிட்டு அருகே அமர்ந்து கொண்டனர்

பகவர் அவர்களுக்கு ஏற்ற அரிய உபதேசங்களைச் செய்தார். செல்வம், ஆபரணங்கள், மலர்மாலைகள், அழகு முதலியவை ஒழுக்கத்தின் எழிலுக்கு இணையாக மாட்டா என்பதை முதற்கண் வற்புறுத்திச் சொன்னார். வைசாலி நாடு இயற்கை வளங்கள் நிறைந்து, செழிப்பும் சாந்தியும் நிறைந்திருப்பினும், மக்கள் இன்பமாகவும் எழிலுடனும் வாழ்வதற்கு உள்ளப் பண்பாடே அவசியம் என்று கூறினார். சமயவாழ்விலும் பற்று ஏற்பட்டு விட்டால், அந்த மக்களின் புகழுக்கு ஈடில்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது:

‘பரிசுத்தமான ஒழுக்கத்திலிருந்து சுயமான வீரியம் பிறக்கின்றது. அதுவே அபாயங்களினின்றும் ஒருவனைக் காக்கும். நாம் பேரின்பத்திற்கு ஏறிச்செல்வதற்கு ஏற்ற ஏணிபோல் தூய ஒழுக்கம் விளங்குகின்றது........

முதலாவதாக “நான்” என்ற அகங்காரமுள்ள கருத்து ஒவ்வொன்றையும் அகற்றிவிடவேண்டும். நெருப்பை நீறு மறைத்திருப்பது போல் அகங்கார எண்ணம் ஒவ்வோர் உயரிய இலட்சியத்தையும் மறைத்துவிடுகின்றது;சாம்பரை மிதித்த பாதத்தை உள்ளேயுள்ள நெருப்பு சுட்டுவிடுகின்றது.

நல்லொழுக்கத்தையும் புண்ணியத்தையும் இழந்தால், நாம் வருந்த நேருகின்றது; அவ்வாறு இழப்பதற்கு முழுவதும் காரணமாயுள்ளது “நான்” என்ற அகந்தையே. (வாழ்வில்) வெற்றியடைந்தவர்களிடையே நான் சினேந்திரனாயுள்ளேன்; எனவே, தன்னைத்தான் அடக்கி வெற்றி கொள்ளும் ஒவ்வொருவனும் என்னோடு சேர்ந்தவனாவன்.

அவா என்பதே துக்கத்திற்கு முதன்மையான காரணம்; அது நமது நண்பனைப்போல இருந்து, அந்தரங்கத்தில் நம்மை உறவாடிக் கெடுக்கும் பகையேயாகும்.

‘ஆகவே, முதலாவது நமக்குத் தேவையானது “ஸம்மா திருஷ்டி” (என்ற நற்காட்சி) ஐயம், திரிபுகளுள்ள கொள்கைகளை நீக்கி, உண்மையைக் கண்டு கொள்ள அதுவே உதவியாகும். அதன் பின்பு அவாவின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் எளிது........’

அமலர் அருளிய அரிய வாசகங்களால் லிச்சவிகளின் உள்ளங்களில் எழுச்சியும் மகிழ்ச்சியும் தோன்றின. அவர் கள் எழுந்து நின்று வணங்கி, மறுநாள் பெருமானும் பிக்குக்களும் தங்கள் இடத்திற்கு வந்து விருந்துண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

‘லிச்சவிகளே! கணிகை அம்பபாலியுடன் நாளை விருந்துண்ண வாக்களித்துள்ளேன்!’ என்று பெருமான் கூறிய தும், அவர்கள் ஒரு வேசிப் பெண் தங்களை எளிதில் வென்று விட்டதை எண்ணி வருந்தினார்கள். பிறகு விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் தத்தம் இடத்திற்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் அம்பபாலி தனது மாளிகையில் மாதவர்க்கு ஏற்ற நல் விருந்து தயாரித்து, ஐயனையும் அடியார்களையும் அழைத்து வந்து, அன்போடு உபசரித்தாள். அவர்கள் ‘போதும்! போதும்!’ என்று தடுக்கும் வரை அக்காரவடிசிலும் பணிகாரங்களும் பரிமாறப்பட்டன. விருந்துக்குப் பின்னால், அம்பபாலி பகவரின் பக்கத்திலிருந்து கொண்டு, ‘தேவா! புத்ததேவரைத் தலைவராய்க் கொண்ட பிக்குக்களின் சங்கத்திற்கு நான் இந்த மாளிகையைத் தத்தம் செய்கிறேன்!’ என்று கூறித் தான் வசித்து வந்த மாபெரும் மாளிகையையும் தானம் செய்து விட்டாள். குருதேவரும் அதை ஏற்றுக்கொண்டு, அவளுக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய அறிவுரைகள் புகன்று, அரிதில் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

பெலுவம்

அம்பபாலியின் ஆம்ரவனத்திலே தாம் விரும்பிய காலம் வரை தங்கியிருந்து விட்டுப் பெருமான் அடுத்தாற் போல் வைசாலிக்கு அருகேயிருந்த பெலுவம் என்னும் ஊருக்குச் சென்றார். பெரும்பாலான அடியார்களைத் தலைநகருக்கு அருகே பல இடங்களில் தங்கியிருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் மாரிக்காலம் முழுவதும் அந்தக் கிராமத்திலேயே வசித்திருந்தார். அப்போது அவர் மெய்ஞ்ஞானம் பெற்று நாற்பத்தைந்து ஆண்டுகளாயின. அவருடைய கடைசி வருஷா காலத்தை அவர் பெலுவத்திலேயே கழித்தார்.

அங்கே அவருக்குத் திடீரென்று கடுமையான நோய் தோன்றியது. கொடிய வேதனைகளால் மரணமும் நேரக் கூடிய நிலை ஏற்பட்டது. எனினும் அவர் எல்லை யற்ற அடக்கத்துடன் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார் சங்கத்தைச் சேர்ந்த அடியார் பலரையும் சந்தித்து, இறுதியாக அவர்களுக்கு உபதேசம் செய்யாமல் உலக வாழ்வை நீத்தல் உசிதமில்லை என்று கருதியதால், தாகதர் தமது உள்ள வலிமையையெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டு அப்போதிருந்த நிலையில் நோயை அடக்கி, மரணத்தை வென்றுவிட்டார்.

விரைவிலே உடல் நலமடைந்து வந்தது. ஒருநாள் பெருமான் தாம் தங்கியிருந்த தவப்பள்ளிக்குப் பின்புறத்திலே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அணுக்கத் தொண்டர் ஆனந்தரும் அங்கே போய் வணங்கி விட்டு, அருகே ஓரிருக்கையில் அமர்ந்தார். அவர் பெருமான் நோயுற்று வருந்திய சமயத்தில் தாம் அடைந்த மன வேதனையை விவரித்துக் கூறி, ஐயன் நெடுநாள் வாழ்ந் திருக்க வேண்டுமென்றும், அடியார்களுக்கு மேலும் அவசியமான உபதேசங்களைச் செய்ய வேண்டு மென்றும் வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட பகவர், ‘ஆனந்தா, சங்கம் இன்னும் என்னிடம் என்ன தான் எதிர்பார்க்கின்றது? சாதாரண மானவர்களுக்கு என்றும், பயிற்சி பெற்ற அந்தரங்க சீடர்களுக்கு என்றும், தருமத்தில் வேற்றுமையில்லாமலே, எல்லோருக்கும் பொதுவாகவே, நான் தருமப் பிரசாரம் செய்துள்ளேன். ஆனந்தா, சில விஷயங்களைக் கூறாமல் “ஆசாரிய முஷ்டி[8]” என்று தரும சம்பந்தமாக நான் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை!’ என்று கூறினார். சங்கத்தைத் தாமே தலைமை தாங்கி நடத்தி வர வேண்டுமென்றோ , சங்கம் தம்மையே தாரகமாகக் கொண்டதென்றோ ஒருவர் கருதினால், அவரே சங்க சம்பந்தமான சகல விதிகளையும் விதிக்க வேண்டு மென்றும், ஆனால் ததாகதரென்ற முறையில் தாம் அவ்வண்ணம் கருதவில்லையென்றும் அவர் தெளிவாக்கினார். மேலும் அவர் கூறியதாவது ;

‘பின் எதற்காகச் சங்க சம்பந்தமான எந்த விஷயத்தைப்பற்றியும் ததாகதர் போதனைகள் கூறி வைக்க வேண்டும்?

‘ஓ ஆனந்தா! எனக்கும் வயதாகின்றது; இப்போது முதுமையடைந்து விட்டேன்; எனது யாத்திரையின் முடிவு நெருங்கியுள்ளது; நான் வாழ வேண்டிய நாட்கள் வாழ்ந்தாகி விட்டது; எனக்கு எண்பதாவது வயது நிறைகின்றது.

‘தேய்ந்து ஆடிப்போன வண்டியை அதிகக் கவனத்துடன் பாதுகாத்தால்தான் அதை ஓடும்படி செய்யலாம்; அதுபோலவே ததாகதருடைய உடலையும் அதிகக் கவனத்துடன் பாதுகாத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன், ஆனந்தா!

‘ஆனந்தா! வெளியேயுள்ள பொருள் எதையும் பர் றிக் கவனியாமல், (புலன்களின் மூலம் ஏற்படும்) உணர்ச்சி களையும் விட்டு, உலகப் பொருள் எதிலும் சம்பந்த மில்லாத தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது தான், ததாகதர் நிம்மதியாக இருக்கிறார்.’

சங்கத்தின் சார்பாக ஆனந்தரை முன்னிலையில் வைத்துக்கொண்டு பெருமான் தொடர்ந்து பேசலானார். மெய்ப் பொருளில் நாட்டமுடையோர் யாவர்க்கும். எக்காலத்தும், உறுதிபயக்கும் வண்ணம் அவர் கூறிய திருவாசகங்கள் வருமாறு:

‘ஆதலால், ஆனந்தா, உங்களுக்கு நீங்களே தீபங்களாயிருங்கள். உங்களுக்கு நீங்களே அடைக்கலமாயிருங்கள். வெளியில் எத்தகைய அடைக் கலத்தையும் நாடாதீர்கள்!

‘சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியத்தையே அடைக்கலமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் நாட வேண்டாம்!

‘ஆனந்தா! ஒரு பிக்கு தாமே தமக்குத் தீபமாயும், தாமே தமக்கு அடைக்கலமாயும், வெளியே அடைக்கலம் தேடாமல், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொண்டும் தம்மைத் தவிர வேறு எவரையும் அடைக்கலமாகக் கொள்ளாமல் இருப்பது எப்படி?

‘ஆனந்தா! ஒரு பிக்கு உடலோடு வாழும் காலத்தில் இடைவிடாத முயற்சியுடனும், கருத்துடனும், உறுதியுடனும், தாம் உலகில் இருக்கும் போதே, உடலின் ஆசைகளிலிருந்து தோன்றும் துக்கத்தை வெல்லத்தக்க முறையில் உடலைப் பற்றிப் பாவனை செய்துகொள்ள வேண்டும்.

‘அவ்வாறே அவர் சிந்தனை செய்யும்போது, அல்லது ஆராயும்போது, அல்லது உணரும் போது, இடைவிடாத முயற்சியுடனும், கருத்துடனும், உறுதியுடனும், தாம் உலகில் இருக்கும் போதே, சிந்தனைகள், ஆராய்ச்சி, அல்லது உணர்வு காரணமான அவாவிலிருந்து தோன்றும் துக்கத்தை வெல்லத்தக்க முறையில் சிந்தனைகளைப் பற்றிப் பாவனை செய்து கொள்ள வேண்டும்.

‘ஆனந்தா! என் பிக்குக்களிடையே இப்பொழுதோ, அல்லது நான் மரித்த பிறகோ, எவர்கள் தமக்குத் தாமே தீபமாயும், வெளியே எவ்வித உதவியும் தேடாமல், தமக்குத் தாமே அடைக்கலமாயும், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக்கொண்டும், சத்தியத்தையே தமது அடைக்கலமாகப் பற்றிக்கொண்டும், தம்மைத் தவிர வெளியே எவரிடமும் அடைக்கலத்தை நாடாமலும் இருக்கின்றார்களே, அவர்களே (இலட்சிய) சிகரத்தை அடைவார்கள். ஆனால் அவர்கள் கற்க வேண்டியதில் ஆர்வத்தோடு இருக்க வேண்டும்!”

வைசாலி

மறுநாள் அதிகாலையில் புத்த தேவர் மடியான சீவர உடையணிந்து, திருவோடேந்திக் கொண்டு, ஐயம் ஏற்பதற்தாக வைசாலி நகருக்குச் சென்று திரும்பினார். அன்று உணவருந்திய பின்னர் அவர் ஆனந்தரை அழைத்து, ‘ஆனந்தா, பாயை எடுத்துக்கொள்! இன்றைப் பொழுதை, நான் சாபால சேதியத்தில் கழிக்க விரும்புகிறேன்’ என்று சொன்னார். ஆனந்தர் அவ்வண்ணமே பாயை எடுத்துக் கொண்டு, ஐயனுக்குப் பின்னால் அடி மேல் அடிவைத்துத் தொடர்ந்து சென்றார்.

சாபால சேதியத்தில் பெருமான் பாயின்மீது வீற்றிருக்கையில், ஆனந்தரும் அருகே அமர்ந்திருந்தார். அப்பொழுது ‘வைசாலி எவ்வளவு அழகான இடம், ஆனந்தா! உதான சேதியம், கோதம சேதியம், சத்தம்பக சேதியம், பகுபுத்த சேதியம், சாரந்தக சேதியம், சாபால சேதியம் எல்லாம் எவ்வளவு இன்பமானவை! என்று, இயற்கை யழகும் செயற்கையழகும் சிறந்து விளங்கிய விரிஜி நாட்டின் தலை நகரைப் பகவர் பாராட்டிப் பேசினார்.

பின்னர் அருகத்து நிலையை அடையவேண்டும் என்ற இலட்சியத்தை மேற்கொண்ட ஒருவர் அதற்குரிய சிரத்தை, வீரியம், சித்தம், மீமாம்சை[9] ஆகிய நான்கு ‘இருத்தி பாதங்கள்’ என்ற வழிகளில் இடைவிடாது ஒழுகி வந்தால் என்ன பயன் விளையும் என்பதுபற்றி அவர் எடுத்துரைத்தார். அந்த நால்வகை இருத்தி ஆற்றல்களும் கைவரப்பெற்று, அவற்றை ஒரே சாதனமாக்கி, அந்தச் சாதனத்தை உபயோகித்துக்கொள்ளும் பயிற்சி பூரணமாக ஏற்பட்டுள்ள ஒருவர், தாம் விரும்பினால், உலகில் கற்பகாலம் வரை வாழ்ந்திருக்க முடியும் என்றும், ததாகதராகிய தாம் அத்தகைய வல்லமை பெற்றிருப்பதால் தாம் விரும்பினால், அவ்வாறு வாழ்ந்திருக்க முடியும் என்றும் பெருமான் கூறினார்

ஆனந்தருக்கு எப்பொழுதுமே புத்த தேவர் உலகில் உயிரோடு உலவி வரவேண்டும் என்ற ஆவலுண்டு. எனவே அவர் பெருமானைப் பார்த்து, உலக மக்கள், தேவர்கள் யாவருடைய நலனுக்காகவும் ததாகதர் உலக முடிவு (கற்பம்) வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமான் தாம் கூறியதை மீண்டும் மும்முறை திரும்பக் கூறியும், ஆனந்தர் அவர் திருவுளத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் ஆனந்தர் தம்மை விட்டு அகன்று சென்று தமக்கு உசிதமான வேலையைக் கவனிக்கும்படி சொன்னார். ஆனந்த தேரரும் அவ்வாணைப்படியே எழுந்து நின்று வணங்கிவிட்டுப் பிரிந்து சென்று, சிறிது நேரத்திற்குப்பின் ஒரு மரத்தடியிற்போய் அமர்ந்து கொண்டார்.

அந்தச் சமயம் பார்த்துச் சீலவிரோதியாகிய மாரன் பகவரண்டையில் வந்து, அவர் உலகைப் பிரியவேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஞாபகப்படுத்தினான். பகவர் ஏராளமான பிக்குக்களைச் சீடர்களாகப் பெற்று, அவர்கள் தருமத்திலும் விநய விதிகளிலும் ஊறித் திளைக்கும்படியும், தருமத்தின் உதவியால் தவறான கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் பரிசீலனை செய்து ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மையான மார்க்கத்தை அவர்கள் எங்கும் உபதேசம் செய்யும் வல்லமை பெறும்படியும் செய்து, பௌத்த தருமத்தை உலகிலே நிலை நிறுத்திய பின்பு பூத உடலை நீத்துவிடுவதாக முன்பு தன்னிடம் கூறியிருந்த தையும் அவன் எடுத்துக் காட்டி, ‘இப்போது தாங்கள் எண்ணியபடியே எல்லாம் நிறைவேறிவிட்டனவே!’ என்று கூறினான்.

மாரனுடைய மாற்றத்தைக் கேட்டதும், பெருமான், ‘தீவினையாள, பொறுமையோடிரு! ததாகதர் மகா-பரிநிருவாணமடைதல் நெடுந்தூரத்திலில்லை. இப்போதிலிருந்து மூன்று மாதங்கள் முடிந்ததும் ததாகதர் மகா-பரிநிருவாண மடைவார்!’ என்று பகர்ந்தார்.

இவ்வாறு பெருமான் தாம் நெடுங்காலம் வாழ்ந்திருக்கக் கூடிய எஞ்சிய வாழ்வு வேண்டாமென்று துறந்து விட்டார். அந்த நேரத்தில் பூமியதிர்ச்சி உண்டாயிற்று; பயங்கரமான இடியும் இடித்தது. மாரனும் மறைந்தான்.

‘முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்பட்டுச் செல்வது போல நான் விடுதலை பெற்றுச் செல்கிறேன். ‘எனக்குரிய வாழ்நாளை நான் தியாகம் செய்து விட்டேன்; இனிமேல் நான் சமாதியின் சக்தி கொண்டு வாழ்வேன். மான் உடல் பழுதுபட்ட இரதம் போல நிற்கின்றது. இனி “வருதல்", “போதல்” ஆகியவைகளுக்குரிய காரணம் யாதுமில்லை ![10] என்று பெருமான் அப்போது உலகுக்கெல்லாம் பொதுவாக அறிவித்தார்.

உலகின் உற்பாதங்களைக் கண்டு ஆனந்தர் அறவாழி அந்தணரை அணுகியபோது, அவர் மாரனுக்கும் தமக்கும் நிகழ்ந்த உரையை அறிவித்தார் மேலும் ததாகதர் சம்பந்தமாகப் பூகம்பங்கள் எவ்வெப்போது ஏற்படுகின்றன என்பதையும் விளக்கிக் கூறினார். ஆனந்தர் ஐயனுடைய முடிவான தீர்மானத்தை அறிந்து, அவர் அதனை மாற்றிக்கொண்டு உலகமுள்ளவரை இருக்க வேண்டுமென்று மன்றாடினார்.

‘போதும், ஆனந்தா! ததாகதரிடம் அதைக் கேட்காதே. ததாகதரிடம் அதை வேண்டிக்கொள்ளும் காலம் கடந்து விட்டது, ஆனந்தா!’ என்று போதிவேந்தர் மறுத்து விட்டார்.

உள்ளன்போடு உருகிநின்ற ஆனந்தர் ஒருகணமேனும் பெருமானின் பிரிவை எங்ஙனம் சகித்திருக்கமுடியும்? அவர் மீண்டும் இருமுறை வேண்டிப் பார்த்தார். ‘ததாகதரின் ஞானத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று கேட்டார் பகவர். சிறிது நேரத்திற்கு முன்னர் இருத்தி பாதங்கள் நான்கும் கைவரப் பெற்றவர், தாம் விரும்பினால், கற்பகாலம் வரை வாழ்ந்திருக்க முடியும் என்று பெருமான், அருளிய வாய்மையை ஆனந்தர் எடுத்துக் காட்டினார். அவர் தமது உள்ளக்கிடையை அறிந்து கொள்ளாமைக்குப் பெருமான் வருந்தினார்.

‘ஆனந்தா! ததாகதரின் ஞானத்தில் உனக்கு நம்பிக் கையிருந்தால், மூன்று முறைகளாகத் ததாகதரை நீ சிரமப்படுத்துவானேன்? நமக்குப் பிரியமான சகல பொருள்களையும் நாம் விட்டுப் பிரிந்து செல்லத்தான் வேண்டும் என்பது இயற்கை என்பதை உனக்கு நான் முன்பு தெரிவிக்கவில்லையா? உலகில் பிறந்துள்ள, அல்லது தோற்றுவிக்கப்பட்ட, (ஸ்கந்தங்களாக) ஒன்று சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் தானே உலைந்து மறையக் கூடிய இயற்கையைத் தன்னுள்ளே பெற்றிருக்கையில், ஆனந்தா, நான் எப்படி (உடலோடு) இருக்கமுடியும்? எனவே என்னுடைய இந்த உடல் மட்டும் உலையாமல் இருப்பது எப்படி முடியும்? அத்தகைய நிலைமை இருக்க ‘முடியாது! ஆனந்தா! அநித்தியமான வாழ்வு வேண்டாமென்று ததாகதர் உதறிவிட்டார்; தியாகம் செய்து விட்டார்; மறுத்துவிட்டார், தள்ளிவிட்டார்!’ என்று பகவர் மீண்டும் விளக்கிச் சொன்னார்.

இதற்குப் பின்பு பெருமானும் ஆனந்தரும் மகாவனத்திலிருந்த கூடகார விகாரைக்குச் சென்றனர். வைசாலியைச் சுற்றிச் சமீபத்தில் வசித்து வந்த பிக்குக்கள் யாவரும் அங்கு வந்து கூடினர். பெருமான் ஒரு பாயின் மீது எழுந்தருளியிருந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

‘ஓ பிக்குக்களே! உங்களுக்குத் தருமத்தைப் பற்றித் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதை நீங்கள் (ஐயம்- திரிபு இல்லாமல்) பூரணமாகத் தெரிந்து கொண்டு, அதை அனுஷ்டிக்கவும்! அதைப் பற்றித் தியானம் செய்யவும்! உண்மையான சமயம் நெடுங்காலம் நிலைத்திருப்பதற்காகவும், பெருங் கூட்டமான மக்களுக்கு நன்மையும் இன்பமும் ஏற்படும்படியும், உலகின் மீது இரக்கம் கொண்டும், உயிர் படைத்த சகல ஜீவராசிகளின் நன்மைக்காகவும், ஆதாயத்திற்காகவும் தருமம் நீடித்து நிலைபெறுவதற்காக அதை வெளியே பரவச் செய்யுங்கள்!

‘ஓ பிக்குக்களே, வாருங்கள்! உங்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்; ஒன்றாகச் சேர்க்கப்பெற்ற பொருள்கள் (பஞ்ச பூதங்களின் கலப்பால் தோன்றுபவை) யாவும் அழியும் தன்மை யுள்ளவை. நீங்கள் கருத்தோடு முக்திக்கு வழி தேடுங்கள்! ததாகதர் முற்றிலும் மறைவதற்கு இன்னும் அதிக காலமில்லை. இதிலிருந்து மூன்று மாதங்கள் கழிந்ததும் ததாகதர் முற்றிலும் மறைந்து விடுவார்!’

போதியடைவதற்குரிய முப்பத்தேழு தத்துவங்களையும் பெருமான் அந்தக் கூட்டத்தினர்க்கு நினைவுறுத்தினார். அவர் தமது தருமத்திற்குரிய–தாமே கண்டுணர்ந்த–அவ்வாய்மைகளை முன் பலமுறை கூறியது போல் மீண்டும் வகைப்படுத்திக் கூறினார். நான்கு சதிப்பிரஸ் தானங்கள், நான்கு சம்யக் பிர தானங்கள், நான்கு இருத்தி பாதங்கள், ஐந்து இந்திரியங்கள், ஐந்து பவங்கள், ஏழு போத்தியாங்கங்கள், அஷ்டாங்க மார்க்கம் என்ற எட்டு முறைகள்[11] ஆகியவற்றை அவர் விளக்கினார். முடிவாக அவர் கூறியதாவது :

‘என் ஆயுள் பூர்த்தியாகிவிட்டது; என் வாழ்வு அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி யுள்ளது; நான் உங்களை விட்டுப் பிரிகிறேன்; என்னையே நான் துணையாய்க் கொண்டு செல்கிறேன்! ஓ பிக்குக்களே, கருத்தோடிருங்கள்! புனிதமாயிருங்கள்! சிந்தனை நிறைந்திருங்கள்! செய்து கொண்ட முடிவில் உறுதியுடன் நில்லுங்கள்! உங்களுடைய சொந்த இதயங்களையே நன்றாகக் கண்காணித்து வாருங்கள்! எவர்கள், சலனமடையாமல், சத்தியத்தையும் தருமத்தையும் பற்றுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கைக் கடலைத் தாண்டி விடுவார்கள்! துக்கத்திற்கு முடிவு கட்டிவிடுவார்கள்!’

பின்னர், லிச்சவிகள் பலரும் வந்து ஐயனைத் தரிசித்து ஆசி பெற்றனர். அப்போது பெருமான், ‘சூரியனும், சந்திரனும், எல்லாமும் அழியக்கூடியவையே எல்லாப் புத்தர்களும், எதிர்காலப் புத்தர்களும் அழிவுறக் கூடியவர்கள். நானும் நிருவாணமடைந்து விடுவேன்...... கதிரவன் மேற்கு மலைகளில் ஏறிச்செல்வதுபோல, மேல் நோக்கிச் செல்லும் (தருமப்) பாதையில் அடிமேல் அடியாக முன்னேறிச் செல்லுங்கள்!’ என்று உபதேசித்தார். லிச்சவிகள் மிகுந்த துயருற்று, ‘அந்தோ ! பரிசுத்தமான பொன் மலைபோல விளங்கிவந்த பெருமானின் திருமேனி விரைவிலே சாய்ந்து விடுமே! புனிதமும் அழகும் நிறைந்து வானளாவிப் பறந்து கொண்டிருந்த அருட் கொடி அற்று விழுந்து விடுமே!’ என்று கதறினர்.

ஒரு நாள் காலையில் பெருமான் வைசாலி நகரில் பிச்சையெடுத்துவந்து உண்ட பின்பு, யானை திரும்பிப் பார்ப்பதுபோல, நகரை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது அவர் ஆனந்தரை நோக்கி, ‘ஆனந்தா! ததாகதர் வைசாலியைப் பார்த்தல் இதுவே கடைசி முறை யாகும். இனி, ஆனந்தா, நாம் பண்டகாமாவுக்குச் செல்வோம்!’ என்றார்.

பண்டகாமா

அவ்வாறே அவர்களும் அடியார் பலரும் பண்டகாமா வுக்குச் சென்றனர். அங்கே பெருமான் பிக்குக்களுக்கு நால் வகை வாய்மைகளை விளக்கிக் கூறினார். பின்னர் அங்கிருந்து ஹத்திகாமா, அம்பகாமா, ஜம்புகாமா ஆகிய ஊர்களில் சிலநாள் தங்கியிருந்துவிட்டு, அவர்கள் போக நகரத்தை அடைந்தனர். எல்லா ஊர்களிலும் வழக்கம் போல் பிக்குக்களுக்கு ஐயன் உபதேசம் செய்தார். போக நகரில் ஆனந்த சேதியத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் பிக்குக்களில் எவர் எது சொன்னாலும், அது ததாகதருடைய வாய் மொழிதானா என்பதையும் அவருடைய முந்திய நியமங்களுக்கும் சூத்திரங்களுக்கும் அது பொருத்தமாயுளதா என்பதையும் ஆராய்ந்து பார்த்தே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தமக்குப் பின்னால் அடியார் அனைவரும் தருமத்தையே துணையாகக் கொள்ளவேண்டும் என்றும் விநய விதிகளுக்கு முரண்பாடானவைகளை விலக்கி ஒதுக்குதல் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார்.

சந்தனின் விருந்து

அந்த யாத்திரையிலே அடுத்தாற்போல் பகவர் தங்கிய இடம் பாவா நகரில் ஒரு மாஞ்சோலை. அது சந்தன் என்னும் சீடனால் சங்கத்திற்கு அளிக்கப்பெற்ற தோட்டம். சந்தன் ஒரு பொற்கொல்லன்; பெருமானிடம் பேரன்பு கொண்டவன். ஐயன் எழுந்தருளிய செய்தியைக் கேட்டதும், அவன் ஆர்வத்தோடு சென்று அவரை வணங்கி உபதேசம் பெற்றான். முடிவில் மறு நாள் தேவர் அடியார் திருக்குழாத்துடன் தனது இல்லத்தில் பிச்சை யேற்றருள வேண்டும் என்று அவன் வேண்டினான். பெருமானும் மௌனமாக அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். வந்தது போலவே வணக்கம் செய்துவிட்டுச் சந்தன் விடை பெற்றுச் சென்றான்.

மறுநாள் பகலில் சந்தன் சர்க்கரைப் பொங்கல், பண்டங்கள், பணிகாரங்கள் முதலியவற்றோடு, உலர்த்தி வைத்த பன்றி இறைச்சியும் சமைத்து வைத்திருந்தான். பெருமான் அவன் வீட்டுக்கு வந்து அமர்ந்த பின்பு, அவனை அழைத்து, ‘சந்தா! நீ தயாரித்துள்ள உலர்ந்த பன்றி இறைச்சியை எனக்கு மட்டும் படைக்கவும். மற்ற அரிசிப் பொங்கல், பணிகாரங்கள் முதலியவற்றைப் பிக்குக்களுக்குப் படைக்கவும்’ என்று சொல்லிவைத்தார். உணவருந்திய பின்னும் அவர் பக்தனை அழைத்து, ‘சந்தா! உன்னிடம் எஞ்சியுள்ள பன்றி இறைச்சி முழுவதையும் ஒரு புழையில் கொட்டி மூடிவிடவும். என்னைத் தவிர வேறு எவரும் அதை உண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாது!’ என்றும் கூறினாராம். சந்தன் ஐயனுடைய ஆணைப்படியே செய்துவிட்டுத் திரும்பிவந்து, அவர் அருகே அமர்ந்திருந்து, மீண்டும், உபதேசம் பெற்றான், பிறகு ஐயன் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சீடர்களுடன் வெளியே சென்றார்.

சந்தன் அளித்த உணவே பெருமான் பூவுலகில் புசித்த கடைசி உணவாகும். அன்று உணவருந்தியதிலிருந்தே அவருக்குக் கடுமையான சீதபேதி ஏற்பட்டது. அன்பன் ஆர்வத்தோடு அளித்த உணவினால் அவருக்கு நோயும் மரணமும் நேர்ந்தன என்று உலகில் எவரும் கருத வேண்டாம் என்றும், சந்தனும் அதை எண்ணி வருந்தலாகாது என்றும் பெருமானே பின்னால் ஆனந்தரிடம் கூறியுள்ளார்.

பெருமான் சந்தனுடைய வீட்டில் அருந்தியது உலர்ந்த பன்றி இறைச்சிதானா என்பதே சந்தேகமாயுள்ளது. பாலி மொழியிலும் வடமொழியிலுமுள்ள விவரங்களிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மூலத்தின் சொற்களை மாற்றிப் பொருள் கொண்டிருத்தல் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். ‘ஸுஸ்க ஸுகர மார்தவ–ஸுகர மாத்தவ’ என்ற சொற்றொடருக்கு ‘உலந்த பன்றி இறைச்சிபோல் மென்மையான’ என்று தான் பொருள் என்றும், அது மக்கள் புசிக்கக்கூடிய ஒருவகைக் காளானை குறிக்கும் என்றும் ‘புத்த மீமாம்சை– Buddha Mimamsa’ என்ற ஆங்கில நூலொன்றில் குறிக்கப்பெற்றுளது. குடல் நோயைக் குணமாக்கும் காளான் அல்லது ஒரு வகைக் கிழங்கினையே சந்தன் சமைத்திருக்கவேண்டும் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதுவரை பெருமானுக்கு நடந்த விருந்துகளிலெல்லாம் இனிப்பான அரிசிப் பொங்கலும், பணிகாரங்களும் குறிக்கப்பெற்றிருக்கின்றனவேயன்றி, வேறு புலால் சேர்ந்த கறி வகைகளைப் பற்றிய குறிப்பேயில்லை. எனவே அவர் அருந்திய கடைசி உணவும் சைவ உணவாகவே இருந்திருக்கும் என்று கருத இடமுண்டு.

மீண்டும் பயணம்

பெருமானுக்கு வயதும் எண்பதாகியிருந்தது. வயிற்றுக் கடுப்பும் அதிகமாகிப் பெரும் வேதனையளித்தது. எனினும் வழக்கம்போல் அளவுகடந்த பொறுமையுடன் அவர் துயரத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு, ‘ஆனந்தா, நாம் குசீநகருக்குச் செல்வோம்!’ என்று கூறி, மீண்டும் பிரயாணமானார். வழியில் அவருக்குக் களைப்பு மிகுந்ததால், அவர் பாதைக்கு அருகிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டார். அப்போது, ‘தாகம் அதிகமாயுளது!’ என்று கூறி அருகேயிருந்த ஓடையிலிருந்து நீர் கொண்டு வருமாறு அவர் ஆனந்தரை வேண்டினார். மேற்கொண்டு சிறிது தூரம் சென்றால், குகுஷ்டை நதியில் நல்ல நீர் பருகலாம் என்று ஆனந்தர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆகவே ஓடையிலிருந்து ஆனந்தர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கப் பகவர் அதைப் பருகித் தாகவிடாயைத் தணித்துக் கொண்டார்.

மரத்தடியில் மாதவர் அமர்ந்திருப்பதைக் கண்ட புக்குசா என்ற வாலிப மல்லர் ஒருவர் அருகே சென்று அவரை வணங்கினார். புக்குசா ஆலார காலாமரின் சீடர். உடல் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையிலும் பெருமான் அவருக்குத் தரும உபதேசம் செய்து களிப்பித்தார். புக்குசா காவி நிறத்தில் இரண்டு பொன்னாடைகளை வரவழைத்து அந்த இடத்திலேயே அளித்து, ஐயன் அவைகளை அங்கீகரிக்கும்படி வேண்டினார். ததாகதர் ஒன்றைத் தமக்கு அணிவிக்கும்படியும், மற்றதை ஆனந்தருக்கு அளிக்கும்படியும் கூறினார்

பொன்னாடை போர்த்திய புத்த தேவரின் திருமேனி திடீரென்று பேரொளியோடு விளங்கிற்று. ஆடையின் பிரகாசம் அவருடைய ஜோதியில் அடங்கிவிட்டது. ஆனந்தர் அதற்குக் காரணம் கேட்கையில், ததாகதர் மகாபோதி யடையும்போது தேகவியோகமாகும் போதும் அவரது உடல் ஜோதிமயமாக விளங்குவது இயற்கை என்று பெருமான் கூறினார்

அன்றிரவு நடுயாமத்தில் குசீநகரிலுள்ள மல்லர்களுடைய சாலமரச் சோலையிலே ததாகதர் தேகவியோக மாவார் என்பதையும் அவர் ஆனந்தருக்கு அறிவித்தார்.

பின்னர் ஐயனும் ஆனந்தரும் குகுஷ்டை நதிக்குச் சென்றனர். பெருமான் நீருள் இறங்கிக் குளித்துவிட்டுத் தாகத்திற்கும் அத்தெளிந்த நீரைப் பருகினர். அங்கிருந்து அடியார்கள் புடைசூழ, இரணயவதி நதிக்கரையில் அமைந்திருந்த குசீநகரை நோக்கி அவர் மெல்ல மெல்ல நடந்து சென்றார்.

சாரீபுத்திரர் நிருவாணமடைதல்

பகவருடைய மகா-பரி- நிருவாணத்தைக் கூறு முன்பு, அவருடைய திருக்கரங்களாக விளங்கித் தருமம் வளர்த்து வந்த சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவரும் முக்தி யடைந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.

பெருமான் கடைசி முறையாக வைசாலியில் எழுந்தருளியிருக்கையில் சிராவஸ்தியில் தங்கியிருந்த சாரீ புத்திரர் தமது இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதையும், ஏழு நாட்களே எஞ்சி யிருந்தன என்பதையும் உணர்ந்து, தமது சொந்த ஊராகிய நாலந்தாவுக்குச் செல்ல வேண்டுமென்று அண்ணலிடம் வந்து விடை பெற்றுக் கொண்டார். அவர் கடைசி முறையாகப் பிக்குக்களுக்குப் போதனை செய்ய வேண்டுமென்று அண்ணல் வேண்டிக்கொள்ளவும், அவரும் அவ்வாறே செய்து விட்டு, ஐயனின் உதவியால் தாம்பெற்ற இருத்தி ஆற்றல்களையும் ஓரளவு வெளிப்படுத்திக் காட்டினார்.

தரும சேநாபதியின் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதைக்கேள்விப்பட்ட மக்கள், ஏராளமான வாசனைத் திரவியங்களும், மலர் மாலைகளும் எடுத்துக்கொண்டு, அவரைத் தொடர்ந்து நாலந்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி, அவர்கள் நகருக்குத் திரும்பிச் செல்லுமாறு செய்தார். அவருடைய மெய்யடியார்களான ஐந்நூறு பிக்குக்கள் மட்டும் அவருடன் சென்றனர்.

நாலந்தாவில், தம்முடைய பழைய வீட்டில், தாம் பிறந்த அறையிலேயே பூதவுடலை நீத்து நிருவாணப்பேறு பெறவேண்டும் என்பது சாரீபுத்திரரின் எண்ணம். மேலும் நாட்டார் பலருக்கும் நல்லுபதேசம் செய்து வந்த அப்பெரியார், தம்மைப் பெற்று வளர்த்த அன்னைக்கும் தருமத்தைப் போதிக்கவேண்டும் என்று விரும்பினார். எனவே ஏழுநாள் வழிநடந்து கிராமத்தை அடைந்ததும், முதற் கண் அவர் வயது முதிர்ந்த தமது அன்னைக்கு உபதேசம் செய்து, புத்த, தரும, சங்கத்தை அடைக்கலமாகப் பெறும் படி செய்தார். பின்னர், ‘அம்மா! என்னைப் பெற்று வளர்த்து, எனக்குக் கல்வி புகட்டி நீ பட்டபாட்டுக் கெல்லாம் இப்போது நான் கைம்மாறு செய்துவிட்டேன். இனி நீ என்னைத் தனியே விட்டு விட்டு அகன்று விட வேண்டுகிறேன்!’ என்று அவர் சொல்லியதால், அன்னை அறையை விட்டு வெளியே சென்றார்.

அன்றிரவு முடிவில் காலைக் கதிரவன் தோன்று முன்னே, சாரீபுத்திரர் தலைநிமிர்ந்து எழுந்து தம்மைச் சுற்றியிருந்த பிக்குக்களைப் பார்த்து, ‘நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நீங்கள் என்னுடன் வாழ்ந்து வந்தீர்கள். இவ்வளவு காலத்திலும் நான் உங்களில் எவருக்காவது பிழை செய்திருந்தால், என்னைப் பொறுத்தருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டார். பிக்குக்களும் அவரே தங்களை மன்னிக்க வேண்டும் என்றனர். குறித்த நேரம் வந்து விட்டதை அறிந்த சாரீபுத்திரர் திரிசரணங்களைக் கூறித் தியானத்தில் ஆழ்ந்து, ஆனந்த பரவசராகி, அவ்வண்ணமே நிருவாண நிலையை அடைந்துவிட்டார். இது காறும் தனித்து இலங்கிக் கொண்டிருந்த நீர்த்துளி பிரகாசமான பெருங் கடலுள் சேர்ந்து அதனுடன் கலந்து விட்டது!

சாரீபுத்திரரின் உடல் வாசனைத் திரவியங்கள் ஊட்டப்பெற்றும், அலங்கரிக்கப் பெற்றும் ஏழு நாட்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பெற்றிருந்த தாயும், ஆயிரக்கணக்கான ஆடவரும், பெண்டிரும், தேவர்களும் வந்து அதற்கு வணக்கம் செலுத்திய தாயும் பின்னர் பிரேத தகனம் மிக்க விமரிசையாக நடைபெற்ற தாயும், அந்தியக் கிரியை முடியும்வரை பிக்குக்களின் தரும் உபதேசம் இடைவிடாது நடந்து வந்ததாயும் பர்மா நாட்டு வரலாறுகளில் காணப்படுகின்றது. தரும சேநாபதியின் இளைய சகோதரராயும், சிறந்த பிக்குவாயும் விளங்கிய சந்தர் தமது சகோதரரின் அஸ்தியையும், திருவோடு முதலியவற்றையும் புத்தபகவரிடம் கொண்டுபோய்ச் சமர்ப்பித்து விவரம் கூறினார்.

பகவர் தமது மெய்யடியாரின் அஸ்தியை வலது கையிலே ஏந்திக்கொண்டு, பிக்குக்கள் அனைவருக்கும் சாரீபுத்திரரின் மேன்மையைப்பற்றி விளக்கிக் கூறினார். அவன் மற்றொரு புத்தரைப்போல் தானே தரும உபதேசம் செய்ய வல்லவன். நண்பர்களைப் பெறுவது எப்படி என்பதை அவன் அறிவான். அவன் சென்றவிட மெல்லாம் கூட்டங் கூட்டமான மக்கள் அவனுடைய போதனையைக் கேட்கத் தொடர்ந்து சென்றனர். என்னைத் தவிர, அவனுக்கு இணையானவர் எவருமிலர்!... அருமையான பிக்குக்களே, எனது ஞான புத்திரன் சாரீபுத்திரனை நினைவூட்டும் இந்த அஸ்திகளை மீண்டும் ஒரு முறை பாருங்கள்!’ என்று பெருமான் பெருமிதத்தோடு வியந்து பேசினார்.

சாரீ புத்திரரின் நினைவுச் சின்னமாக ஜேதவனத்தில் ஒரு சேதியம் அமைக்கும்படியும் பெருமான் ஏற்பாடு செய்தார்

மௌத்கல்யாயனர் நிருவாணமடைதல்

கடைசி முறையாகப் புத்ததேவர் இராஜகிருகத்தில் தங்கியிருந்த சமயம் மௌத்கல்யாயனரும் நிருவாண மடைந்தார்.

இராஜகிருகத்திற்கு அருகில் இஸிகிலிமலைக் குகை ஒன்றில் மௌத்கல்யாயனர் தங்கிவந்தார். அவருடைய இடைவிடாத பிரசாரத்தினாலும், ஊக்கத்தாலும், தைரியத்தாலும், ஆற்றல்களாலும் நகர் முழுவதும் பௌத்த தருமத்தின் பசுஞ்சோலையாக விளங்கிவந்தது. இதனால் மனக் கொதிப்படைந்து குமுறிக் கொண்டிருந்த புறச் சமயிகள் பலர், ஆடையில்லாத துறவிகளாக விளங்கிய அவர்கள் காழ்ப்புக் காரணமாக மௌத்கல்யாயனரைக் கொலை செய்யவே தீர்மானித்துவிட்டார்கள். இரகசியமாகக் கொலைஞருக்குப் பணம் கொடுத்துத் தங்களுடைய தீய கருத்தை நிறைவேற்ற அவர்கள் ஏற்பாடும் செய்தனர். கொலைஞர்கள் ஆறு நாட்களாக மௌத்கல்யாயனரிடம் சென்று வாட்களை ஓங்கியபொழுது, அவர் தமது இருத்தி ஆற்றலால் ஆகாயத்திலே எழுந்து சென்று தப்பிக் கொண்டார். ஆனால் ஏழாவது நாளில், இருத்தி ஆற்றல் பயனற்றுப்போய், அந்த மெய்யடியார் கொலைஞர் கையிலே சிக்கிக்கொண்டார். அவர்கள் அவரை மிகமிகக் கொடுமையாக அடித்து வதைத்ததில் அவர் உடல் சதைப் புண்டு மாமிசக் குவியலாகிவிட்டது. கொலைஞர் உடலை ஒரு புதரிலே தூக்கியெறிந்து விட்டுச் சென்றனர்.

கோரமான இக்கொலையைப் பற்றிய செய்தி விரைவிலே நாடெங்கும் பரவிவிட்டது. அரசர் அஜாதசத்துரு உடனே புலன் விசாரித்துக் கொலைஞர்களையும் கொலைக்குத் தூண்டிய துறவிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஏராளமான குற்றவாளிகள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்ததால், அரண்மனைக்கு முன்னால் ஆயிரம் குழிகள் தோண்டப் பெற்றன ஒவ்வொரு குழியிலும் ஒரு குற்றவாளி இடுப்பளவுக்குப் புதைக்கப்பட்டான். பின்னால் அனைவரும் தீயால் எரிக்கப்பட்டனர்.

சீலம் மிகுந்த மௌத்கல்யாயனருக்கு மேலே கூறிய துர்க்கதி எப்படி நேர்ந்தது? அவருடைய இருத்தி ஆற்ற லெல்லாம் இறுதியில் ஏன் பயனற்றுப் போயிற்று? இவை களைப்பற்றிப் பிக்குக்கள் விவரம் தெரியாமல் திகைத்து, ஒருவரை யொருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதையறிந்த புத்ததேவர் அவர்கள் அனைவருக்கும் விவரத்தை எடுத்துக் கூறினார். முந்திய ஜன்மம் ஒன்றில் மௌத்கல்யாயனர் தமது மனைவியின் தூண்டுதலால், தம் தாயையும் தந்தையையும் ஒரு வனத்திற்கு அழைத்துப் போய்,நேத்திரம் தெரியாத அவ்வயோதிகர்களைத் தனியே விட்டு விட்டுச் சென்றாராம். சிறிது நேரம் கழிந்தபின் அவர் மீண்டும் அவர்களிடம் வந்து, எவனோ ஒரு கொள்ளைக்காரன் என்று அவர்கள் கருதும்படி தம் குரலை மாற்றிக் கூவிக்கொண்டே, அவர்களைக் கொலைசெய்து விட்டாராம். மரிக்கும் பொழுதும் அப்பெற்றோர்கள் மகனை நினைத்து வருந்தி, ‘மகனே, நீயாவது எங்கேனும் தப்பித்துக் கொள்!’ என்று கூறினராம். தங்களைக் கொன்றவன் தங்கள் மகனே என்பதை அவர்கள் நம்பவே யில்லை. மாதா, பிதா இருவரையும் கொலைசெய்த அந்தப் பாவத்திற்காக மௌத்கல்யாயனர் பலகாலம் வெய்ய நரகிடையே அவதியுற்று, மீண்டும் உலகில் மனிதராய்த் தோன்றி முடிவில் கொலையுண்டு மடிந்தார் என்றும், கருமவினையின் பயனாய் அவருக்கு இறுதியில் ஆற்றல் பலியாது போயிற்று என்றும் பெருமான் கூறினார்.

மௌத்கல்யாயனரின் ஞாபகார்த்தமாக வேணுவன விகாரையின் வாயிலில் ஒரு சேதியம் கட்டும்படி பெருமான் ஆணையிட்டருளினார்.

2500 ஆண்டுகட்குப் பின்னால்!

பிற்காலத்தில் சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய அஸ்திகளும் சுமார் இருபத்தைந்து நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பெற்று, இன்றும் இந்திய நாட்டில் இருந்து வருகின்றன. ஆதியில் இந்த அஸ்திகள் புகழ் பெற்ற பௌத்தத் தலமாகிய சாஞ்சியில் ஒரு ஸ்தூபத்தில் புதைத்து வைக்கப் பெற்றிருந்தன. 1850-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் தலைமை அதிகாரியாயிருந்த தளபதி கன்னிங்ஹாம் அவைகளைக் கண் டெடுத்து, லண்டனிலுள்ள ஒரு கண்காட்சிசாலைக்கு அனுப்பிவைத்தார். இந்தியா விடுதலை பெற்றபின், தேடு தற்கரிய அச்செல்வங்கள் திரும்ப இந்நாட்டுக்கே அனுப்பப் பெற்றன.

அவைகளை மீண்டும் அடக்கம் செய்து வைப்பதற்காக, இரண்டு லட்சம் ரூபாய்க்குமேல் செலவிட்டு மகா போதி சங்கத்தார் சாஞ்சியிலே புதிதாக அழகிய விகாரை யொன்றை அமைத்திருந்தனர். 1952, நவம்பர் 29-ஆம் தேதி உலகப் பௌத்தர்களின் கலைப்பண்பு மகாநாடு சாஞ்சியிலே நடைபெற்றது. பாரதரத்னம், பேராசிரியர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மறுநாள் புத்ததேவரின் முதன்மையான சீடர்களான சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய அஸ்திகளும் அடங்கிய தங்கப் பேழை சாஞ்சிக் குன்றுக்கு ஊர் வலமாக எடுத்து வரப்பெற்றது. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அவ்வமயம் கூடியிருந்தனர். சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லந்து, பர்மா முதலிய பல நாட்டுப் பௌத்த பிக்குக்களும் பிக்குணிகளும் சீவர ஆடை யணிந்து வந்து அப்புனிதத் திருநாளில் கலந்துகொண்டனர். சாஞ்சிக் கிராமமும், விகாரை அமைந்திருந்த குன்றும் தொலைவிலுள்ள சிறு குன்றுகளும் அதிரும்படி கண்டாமணிகள் முழங்கின. மந்திர கீதங்கள் ஒலித்தன. பிக்குக்களும், பிக்குணிகளும் தரையில் விழுந்து வணங்கவும் பல்லாயிரம் மக்கள் பணிந்து போற்றி நிற்கவும், இந்திய மகாபோதி சங்கத்தின் தருமகர்த்தா புனித பிக்கு ஸ்ரீநிவாச நாயகத்தேரரும், இலங்கை மகாபோதி சங்கத் தலைவர் புனிதபிக்கு டாக்டர் வஜிராணன மகாதேரரும் அஸ்திகளை இந்தியப் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விகாரையுள் அடக்கம் செய்தனர். பிக்குக்கள் பௌத்த சூத்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டிருக்கையில், இலங்கை உள்நாட்டு மந்திரி, திரு. ஏ. ரத்ன நாயகா, சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய ஞாபகர்த்தமாகப் புதிய தீபம் ஒன்றை ஏற்றி வைத்தார். விகாரைக்கு வெளியே இளம் அரசமரக் கன்றுகளும் நடப்பெற்றன. அவைகளில் ஒன்று, புத்தகயையில் இருபத்தைந்து நூற்றாண்டுகட்கு முன்பு நற்றவ மூர்த்தியான சித்தார்த்தர் எந்தப் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானமடைந்தாரோ அதே மரத்தின் கன்று. அதைப் பர்மியப் பிரதம மந்திரி திரு. யு. நூ. நட்டார். இலங்கை அநுராதபுரத்திலுள்ள புராதனப் போதிவிருட்சத்தின் கன்று ஒன்றைச் சிக்கிம் சமஸ்தானத்து மகராஜ குமார் நட்டுவைத்தார்.

  1. துறக்கம்-சுவர்க்கம்; சுவர்க்க வாழ்வும் அழிவுள்ளதென்று புத்தர் அதையும் விரும்பவில்லை.
  2. எண் பிறக்கு ஒழிய இறந்தோய்-மனிதரால் எண்ண முடியாத அளவு உயர் நிலை அடைந்தோய்.
  3. மகா-பரி-நிருவாண சூத்திரம் தீக நிகாயத்தி லுள்ளது; இதைப்பற்றி 1838–ல் ஆராய்ந்து எழுதிய டர்னர் என்பார், பௌத்த பிடகங்கள் மூன்றிலும் இதுவே முதன்மையாகக் கவனிக்கத்தக்க கவர்ச்சியுள்ளதாயிருக்கும் என்று குறித்துள்ளார். இதில் பொருள் செறிந்திருப்பதுடன், வரலாற்றுக் குறிப்புக்களும் நிறைந்திருக்கின்றன.
  4. வடமொழியில் ஆம்ரபாலி என்று பெயர்; மாய் சோலையை ஆம்ர வனம் என்பர்.
  5. மகா - பரி- நிருவாண சூத்திரம்.
  6. ‘ஃபோ– ஷோ– ஹிங்– த்ஸாங்–கிங்’ என்ற சீன நாட்டுப் புத்த சரிதை.
  7. ‘ஃபோ- ஷோ - ஹிங்- த்ஸாங்- கிங்.’
  8. ஆசாரிய முஷ்டி–ஆசாரியர் வெளியிடாமல் கைப் பிடியில் மறைத்து வைத்துக் கொள்ளும் தத்துவம் (முஷ்டி–கைப்பிடி, விரல்களை முடக்கிய கை )
  9. சிரத்தை– இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற தீவிர ஆர்வம் முதலில் வேண்டும்.
    வீரியம்– இடைவிடாத முயற்சி வேண்டும்.
    சித்தம்– தீய சிந்தனைகள் யாவும் அகன்று, சித்தம் பரிசுத்தமாக வேண்டும்.

    மீமாம்சை– தாம்கொண்ட முடிவுகள் சரியானவையா என்று பகுத்தறிந்து பார்க்கும் ஆராய்ச்சி வேண்டும்.

  10. ஃபோ– ஷோ– ஹிங்– த்ஸாங்– கிங்.’
  11. இவற்றின் விவரங்களை ‘அஷ்டாங்க மார்க்கம்’ என்ற பகுதியிலே (இயல் : 9, 10) காண்க.