உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/மகா-பரி-நிருவாணம்

விக்கிமூலம் இலிருந்து

இருபதாம் இயல்

மகா - பரி - நிருவாணம்


‘மருளறுத்த பெரும்போதி மாதவரைக்
கண்டிலமா(ல்)என் செய்கேம் யாம் !
அருளிருந்த திருமொழியா(ல்) அறவழக்கம்
கேட்டிலமா(ல்)என் செய்கேம் யாம்!
பொருளறியும் அருந்தவத்துப் புரவலரைக்
கண்டிலமா(ல்)என் செய்கேம் யாம்!’

–வீரசோழியம்

குசீநகர்

பெருங் கூட்டமான, பிக்குக்களோடு புத்ததேவர் குசீநகரில் ‘உபவர்த்தனம்’ என்ற சாலமரச் சோலையை அடைந்தார். அப்போது அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால், ஆனந்தரை அழைத்து, ஓரிடத்தில் இரட்டைச் சாலமரங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டி, அவைகளின் இடையே தமக்குக் கட்டிலைப் போட்டுவைக்கும்படி கூறினார். உடனே ஆனந்தர் அவ்வாறே செய்தார். பெருமான் வடதிசையில் தலைவைத்து, வலது புறமாகத் திருமேனியைச் சாய்த்துக் கொண்டு, கட்டில் மீது சயனித்துக்கொண்டார். அப்போது அவர் நல்ல பிரக்ஞையுடனும் அமைதியுடனுமே விளங்கினார். சீரிய சிங்கம் பாறைமீது படுத்திருப்பது போல அவர் காணப்பெற்றார்.

இரட்டைச் சால மரங்களிலும் கொத்துக் கொத்தாகப் பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தன. காலமில்லாத காலத்திலே பூத்த அந்த மலர்கள் பெருமான் திருமேனி மீது உதிர்ந்து கொண்டிருந்தன. வானத்திலிருந்து மந்திர புஷ்பங்களும், கந்தம் மிகுந்த சந்தனத் துகளும் சாரல் பெய்வதுபோல் பெய்து கொண்டிருந்தன. ஆகாயத்தில் தேவகீதங்கள் முழங்கின; சோலையைச் சுற்றிலும் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த அற்புதங்களை யெல்லாம் பார்த்து ஆனந்தர் பெருயப்படைந்தார்.

அப்போது பெருமான் அவரை நோக்கி அந்தநேரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதங்களால் மட்டும் ததாகதருக்குப் பெருமையில்லை என்றும், ஒவ்வொரு பிக்குவும், பிக்குணியும் தமக்குரிய விநய விதிகளின்படி நடந்து வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டு, சீலத்தில் சிறந்து விளங்குவதே ததாகதரைச் சரியான முறையில் வணங்கிக் கௌரவிப்பதாகும் என்றும் விளக்கிச் சொன்னார்.

அப்போது எதிரே நின்று விசிறிக் கொண்டிருந்த உபாவணரைப் பார்த்துப் பெருமான், ‘ஓ பிக்கு, என் முன்னால் நின்று மறைக்காமல் ஒதுங்கி நிற்கவும்!’ என்று கூறினார். காலமெல்லாம் அவருக்கு ஊழியம் செய்து வந்த தொண்டரை விலகியிருக்கச் சொல்லிய தன் காரணம் என்ன என்று ஆனந்தர் பெருமானை வினவினார். ததாகதரைத் தரிசிப்பதற்காகப் பத்து உலகங்களிலிருந்தும் தேவர்கள் வந்து இச்சோலையைச் சூழ்ந்து நிற்கிறார்கள்; இங்கிருந்து பல காத தூரம்வரை எள்ளும் விழ இடமின்றிச் சுற்றிலும் வல்லமை மிக்க தேவதைகள் குழுமி நிற்கின்றனர். அவர்கள் தரிசிப்பதற்கு இடையூறாக யாவரும் ததாகதரை மறைத்து நிற்கவேண்டாம் என்ப தற்காகவே உபாவணரை ஒதுங்கியிருக்கச் சொன்னேன் என்று பெருமான் கூறினார். ததாகதர்கள் மண்ணுலகில் தோன்றுவதே அபூர்வம்; அவ்வாறு அருமையாகத் தோன்றிய ஒரு ததாகதர் தேவ வியோகமாவதைக் காணவே யாவரும் கூடியிருந்தனர்.

பகவர் சில மணி நேரத்தில் தங்களை விட்டுப் பிரிந்து செல்வது நிச்சயம் என்பதை ஆனந்தர் உணர்ந்து கொண்டார். எவ்வளவு உறுதியுடன் மனத்தை அடக்கி வைத்துக் கொண்ட போதிலும், அவரால் துக்கத்தைத் தாங்க முடிய வில்லை பகவரின் நிழல் போலப் பல்லாண்டுகள் அவரையே தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஆனந்தர், ‘இனி நமக்குக் கதி யார்?’ என்று ஏக்கமுற்றார். அவருக்கு எப்பொழுதுமே இளகிய மனமுண்டு. மகா காசியபர், சாரீ புத்திரர், மௌத்கல்யாயனர். உபாலி முதலியோரைப் போல, அவர் பெரிய அதிர்ச்சிகளைத் தாங்குதல் அரிது. பண்பாடுபெற்ற பெருந்துறவியே யாயினும், இடையிடையே அவர் உணர்ச்சி வசப்பட்டு உழல்வது வழக்கம். எனவே பெருமானுடைய வாழ்க்கையில் பல சம்பவங்களைபற்றி அவர் எண்ணமிட்டுக் கலங்கியிருக்க வேண்டும். மழைக் காலத்தில் பிக்குக்கள் பலரும் ததாகதருடன் வந்து தங்கியிருக்கையில் அவர் எல்லோருக்கும் உபதேசம் செய்து வந்ததை நினைத்தவுடன், ‘இனி அதற்கெல்லாம் வழியில்லையே!’ என்று அவர் வருந்தினார்.

பகவர் ஆனந்தரைப் பார்த்துப் பேசலானார். தருமத்தில் நம்பிக்கையுள்ள மனிதன் பயபக்தியுடன் யாத்திரை செய்து தரிசிக்க வேண்டிய தலங்கள் நான்கு என்றும், ததாகதர் அவதரித்த இடம், போதியடைந்த இடம், தரும சக்கரப் பிரவர்த்தனம் செய்த இடம், முடிவில் அவர் பேரின்பமடைந்த இடம் ஆகிய நான்குமே அத்திருப்பதிகள் என்றும் கூறினார்.

பெண்கள் சம்பந்தமாகப் பிக்குக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி ஆனந்தர் விசாரிக்கையில், அவர்களைப் பார்க்கவே வேண்டாம் என்றும், பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் பேச வேண்டாம் என்றும், பேச நேர்ந்தால் மிகவும் லிழிப்போடு இருக்க வேண்டும் என்றும் பெருமான் அருளினார்.

ததாகதர் மகா-பரி- நிருவாணமடைந்த பிறகு பிக்கு செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றி ஆனந்தர் பகவரின் கருத்தை அறிய விரும்பினார்.

பகவர் கூறியதாவது:

‘ஆனந்தா, ததாகதரின் சடலத்திற்கு மரியாதை செய்வதைப் பற்றி நீ இடர்ப்பட வேண்டியதில்லை! எப்பொழுதும் நீ விழிப்போடிருக்க வேண்டும். ஆனந்தா, உன் நன்மைக்காகவே இதைச் சொல்லுகிறேன். உனது நன்மைக்காக நீயே பாடுபட வேண்டும். ஆர்வத்தோடு இருக்க வேண்டும்; விழிப்போடு இருக்கவேண்டும்: உனது நன்மையிலே நாட்டமாயிருக்கவேண்டும்!

‘ஆனந்தா! க்ஷத்திரியப் பிரபுக்களிலும், பிராமணர்களிலும், கிருகஸ்தர்களிலும் ததாகதரிடம் உறுதியான நம்பிக்கையுள்ள அறிவாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் ததாகதரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்வார்கள்.

இராஜாதி ராஜனின் உடலுக்குச் செய்வது போன்று தமது உடலுக்கும் மரியாதை செய்ய வேண்டுமென்று பெருமான் கூறினார். தமது உடலைத் தைலமாட்டி வைத்திருந்து, கோடித்துணி அணிவித்துப் பலவிதமான கந்தப் பொருள்கள் தெளித்த காஷ்டத்திலே தகனம் செய்ய வேண்டுமென்றும் அவர் விவரமாகத் தெரிவித்தார். சக்கரவர்த்தியின் அஸ்திகளை அடக்கம் செய்து வைப்பதற்கு தாதுகோபம் அமைப்பதுபோல, தம் அஸ்திகளுக்கும் செய்வது உசிதமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் ஆனந்தர் அருகேயிருந்த விகாரையுள்ளே சென்று, ஒரு கதவு நிலையில் சாய்ந்து கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து நின்றார். ‘நான் இன்னும் அருகத்து நிலையை அடையவில்லையே! அதற்குள் பெருமான், என்னைத் தனித்திருக்க விட்டுவிட்டுப் பிரிகின்றாரே!’ என்ற எண்ணத்தினால், அதுவரை அவர் கட்டி வைத்திருந்த கண்ணீர்க்கடல் வெள்ளமிட்டுப் பெருக ஆரம்பித்தது. அதற்குள் வெளியே ஐயன், ‘ஆனந்தன் எங்கே?’ என்று விசாரிக்கலானார். உடனே ஒரு பிக்கு விகாரைக்குள் புகுந்து ஆனந்தரை அழைத்துச் சென்றார். ‘போதும், ஆனந்தா! நீ துயரப்பட வேண்டாம்; அழாதே!’ என்று சொல்லிப் பகவர் ஆனந்தருக்கு ஆறுதல் கூறினார் அன்புக்குரிய சகல பொருள்களையும் ஆப்தமானவர்களையும் முடிவில் பிரிந்து தானாக வேண்டும் என்பதைத் தாம் பன்முறை பலவிதமாக எடுத்துப் போதித்து வந்ததை அவர் ஞாபகப்படுத்தினார். பல வழிகளிலும் தாம் உலகுக்கு அறிவுறுத்திய தரும காயம்[1] நிலைத்திருக்கையில், தமது ஊனுடல் அழியாமற் காத்திருக்க வேண்டி யதில்லை என்பதை அவர் தெளிவாக விளக்கிக் கூறினார். புலன்களின் ஆசைகளைக் கைவிட்டு, சந்தோஷம், மயக்கம் அறியாமை ஆகிய தீமைகளைக் கடந்து, கருத்தோடு இடைவிடாது முயன்றால், ஆனந்தரும் பிறவிப் பிணி நீங்கி விடுதலை பெறுவது உறுதி என்பதைப் பெருமான் எடுத்துக் காட்டினார். பற்பல ஆண்டுகளாக ஆனந்தர் தம் அருகிலேயே இருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியதையும் அவர் வாயாரப் புகழ்ந்தார்.

சிறு நகராகிய குசீநகரத்தில் ஐயன் உலக வாழ்க்கை நீத்தல் சிறப்பில்லை யென்றும், இராஜகிருகம், சம்பா, சிராவஸ்தி, சாகேதம், கௌசாம்பி, காசி முதலிய பெரு நகரங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் ஆனந்தர் சொன்னார். அதற்கு மறுமொழியாகப் பெருமான் குசீநகர் முற்காலத்தில் மகா சுதர்சனன் என்ற புகழ் பெற்ற மன்னனின் தலைநகராயிருந்த வரலாற்றையும், அதன் பெருமையையும் எடுத்துக் காட்டினார்.

பின்னர், குசீநகரத்து மல்லர்களுக்கு அன்றிரவு தாம் பரி நிருவாணம் அடையப்போவதை அறிவிக்கும்படி பெருமான் கட்டளையிட்டார். அச்சமயம் ஏதோ பொதுக் காரியமாக ஊர்க்கூட்டம் கூட்டியிருந்தனர். பெருமானைப் பற்றிய செய்தியைக் கேட்டவுடனே அவர்கள் கூட்டம் கூட்டமாக உபவர்த்தனத்தில் சாலமரச் சோலையிலே வந்து கூடிவிட்டனர்.

பலர் அழுதனர்; பலர் துடித்தனர். ஆண்களும் பெண்களும், குழந்தைகளுமாக வந்திருந்த மல்லர்கள் அனைவரையும் சோகம் பற்றிக்கொண்டது. புனிதமூர்த்தி விரைவிலே பிரிந்து விடுவாரே என்றும், உலகின் பெருஞ் சோதி அணைந்து விடுமே என்றும் அவர்கள் அங்கலாய்த்தனர். அன்றிரவில் வெகு நேரம் வரை அவர்கள் சிறு சிறு கூட்டங்களாகச் சென்று சயனியத்திருந்த பகவரைக் கண் குளிரத் தரிசித்து வந்தனர்.

கடைசிச் சீடர்

அன்று பகவரிடம் கடைசியாக உபதேசம் பெறுவதற்காகக் குசீநகரவாசியான துறவி ஒருவரும் வந்து சேர்ந்தார். அவர் சுபத்திரர் என்ற பெயருடையார். தத்துவ விசாரத்தில் அவர் உள்ளத்தில் சில ஐயங்கள் ஏற்பட்டுக் கலக்கிக் கொண்டிருந்தன. ததாகதர் ஒருவரே அவர் சந்தேகங்களை நீக்க வல்லவர் என்றும், அன்றிரவு விடியு முன் ததாகதர் தேகவியோகமாவார் என்று மக்கள் கூறிய தால் விரைவாக அவரைச் சென்று காணவேண்டும் என்றும் கருதிய சுபத்திரர் வள்ளல் தங்கியிருந்த சோலைக்கு ஓடோடியும் வந்தார்.

அவர் வருகையை அறிந்த ஆனந்தர், பெருமானோடு அவர் விவாதம் செய்தால், இயற்கையாகவே தளர்ந்திருந்த ததாகதர் மேலும் நலிவுறுவார் என்று அஞ்சித் ததாகதர் நிலையை அவருக்கு உணர்த்த ஆரம்பித்தார்.

அந்நிலையில் ததாகதர், அவர்களுடைய பேச்சின் ஒலி கேட்டு, ஆனந்தரை அழைத்துச் சுபத்திரரை உள்ளே யனுப்புமாறு கூறினார். அவ்வாறே ஆனந்தர் சுபத்திரரிடம் சென்று, பெருமான் அவரை அனுமதித்துள்ளார் என்றும், அவர் உள்ளே செல்லலாம் என்றும் கூறினார்.

சுபத்திரர் பெருமானிடம் சென்று அவரை வணங்கினார். இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டபின், சுபத்திரர் அருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்து, சந்தேகங்களை ஐயனிடம் தெரிவித்தார். அக்காலத்தில் வெவ்வேறு சமயங்களில் ஆசாரியர்களாக இருந்து கொண்டு நாட்டிலே பிரசாரம் செய்து வந்த பூரண காசியபர், கோசலி மற்கலி, அஜிதகேச கம்பளர், கச்சாயனர், சஞ்சயர், நிகந்தநாதர் முதலியோர் தமது சொந்த ஞானத்தில் மெய்ப்பொருளைக் கண்டறிந்தவர்களா, அல்லது அவர்களிலே சிலர் மெய்ஞ்ஞானம் பெற வில்லையா என்று சுபத்திரர் வினவினார்.

பெருமான் அவருடைய வீண் விசாரத்தை உணர்ந்து கொண்டு, அந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. என்று கூறியதுடன், தாம் அதுவரை போதித்து வந்த தருமத்தின் பெருமையையும் அவருக்கு விளக்கியுரைத்தார். சமய வாழ்க்கையில் உயர் நிலை அடைந்து, ஒழுக்கத்தில் நிலைபெற்று, தியானத்தின் மூலம் மெய்ஞ்ஞானம் பெற்று ஒவ்வொருவரும் உண்மையை உள்ளபடி உணர்ந்து கொள்வதற்குத் தாம் வகுத்துள்ள ‘அஷ்டாங்க மார்க்கம்’ என்ற முறை வேறு தரும நெறிகளில் இல்லையென்றும், பௌத்த தருமத்தில் பயிற்சி பெறும் சீடன் முதலில் ச்ரோத பன்னனாகி இரண்டாவதாக ஸக்ருதாகாமியாகி, மூன்றாவதாக அநாகாமியாகி, நான்காவதாக மிக உயர்ந்த அருகத்து நிலையை அடைவான் என்றும், அத்தகைய நான்கு பயிற்சிப் படிகள் பிறருடைய முறைகளில் இல்லை யென்றும் புத்த தேவர் எடுத்துக் காட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது :

சுபத்திரா! மெய்ப்பொருளை நாடி நான் வெளியேறும் காலத்தில் எனக்கு வயது இருபத்தொன்பது. தரும ஸ்தாபனத்திற்காக நான் உலகைத் துறந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கழிந்து விட்டன. (சமய வாழ்வில் பயிற்சி பெறும் துறவிகளுக்காக வகுத்துள்ள) நான்கு படிகளில் எந்தப் படியிலுள்ள துறவியும் இந்தத் தருமத்திற்கு வெளியேயில்லை. வாதப்போர் புரியும் புறச்சமயிகளிடையே இத்தகைய துறவிகள் இல்லை. ஆனால் இந்தத் தருமத்திலே பிக்குக்கள் நிறைந்த சீலத்துடன் வாழ்ந்து வந்தால், உலகத்திலே அருகத்துக்கள் இல்லாமற் போகமாட்டார்கள்’[2]

இறுதி உபதேசம்

அடுத்தாற்போல் பகவர் ஆனந்தரைப் பார்த்து, ‘ஆனந்தா! “ததாகதரின் உபதேசம் முடிந்துலிட்டது; இனிமேல் நமக்கு ஆசிரியர் எவருமில்லை! என்று உங்களில் சிலருக்குச் சிந்தனை எழக்கூடும். ஆனந்தா! இதை அவ்வாறு நீங்கள் கருதக்கூடாது. இனிமேல் எனக்குப் பிறப்பில்லை என்பது உண்மைதான்; ஏனெனில் இனி எத்தகைய துக்கமும் எனக்கு இல்லாதபடி ஒழிந்து விட்டது. இந்த உடல் மரித்த பின்பும், ததாகதர் இருந்தே வருவார். நான் தெரிவித்துள்ள தருமமும், உங்களனை வருக்கும் பொதுவான சங்கத்தின் விநய விதிகளும், நான் சென்ற பிறகு, உங்களுக்கு ஆசிரியராக இருந்து வரட்டும்!.......

பின்னர் பெருமான் பிக்குக்கள் பக்கம் திரும்பி, எவருக்காவது சந்தேகமிருந்தால் கேட்கும்படி கூறினார்:

‘புத்தரைப் பற்றியோ, தருமத்தைப் பற்றியோ, சங்கத்தைப் பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ யாராவது ஒரு பிக்குவின் மனத்தில், ஏதாவது மயக்கமோ, ஐயப்பாடோ இருக்கலாம். “பகவருடன் நேருக்கு நேராக நாம் இருந்த பொழுது நாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளாமற் போனோமே!” என்று பின்னால் உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ள இடம் வைக்க வேண்டாம். ஆதலால் பிக்குக்களே, இப்பொழுதே கேளுங்கள், தாராளமாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!”

பிக்குக்கள் அனைவரும் மெளனமாகவே இருந்தனர். பெருமான் மும்முறை கேட்டும், அவர்களுடைய மெளனம் கலையவில்லை. கூட்டத்திலே புத்தர், தருமம், சங்கம் பற்றி யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லாதிருக்கலாம் என்று ஆனந்தர் பகவரிடம் கூறினார்.

அதைக் கேட்டும் பெருமான், நிறைந்த நம்பிக்கை காரணமாக ஆனந்தர் அவ்வாறு கூறியதாயும், உண்மையிலேயே அங்கிருந்த பிக்குக்களில் யாவருக்கும் எவ்வித ஐயமில்லை என்பதைத் தாமும் அறிந்ததாயும் கூறினார். அத்துடன் அங்கு குழுமியிருந்த ஐந்நூறு பிக்குக்களில், (கருத்துடைமையில்) மிகவும் பிற்பட்டு நிற்பவர்கள் உட்பட, யாவருமே திருந்திய வாழ்வு பெற்றவர்கள் என்றும், துக்கம் நிறைந்த பிறவிக் கடலில் இனிமேல் அவர்கள் விழ நேராது என்றும், யாவருக்கும் நிருவாணம் நிச்சயம் என்றும் அறிவித்தார்.

‘ஒ பிக்குக்களே! தருமத்தையும், சகல துக்கங்களின் காரணத்தையும், விமுக்திக்குரிய மார்க்கத்தையும் நீங்கள் இப்பொழுது அறிந்திருந்தால், அப்படியிருப்பினும், “நாங்கள் பகவரிடம் மரியாதையுள்ளவர்கள். பகவரிடம் கொண்ட மரியாதை காரணமாகவே நாங்கள் இவ்வாறு பேசுகிறோம்!” என்று தான் சொல்வீர்களா?’ என்று பெருமான் ஒரு கேள்வி கேட்டார்.

சீடர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘அவ்வாறில்லை’ என்று விடை பகர்ந்தனர்.

‘ஓ பிக்குக்களே! நீங்கள் பேசுவது, நீங்களே சுயமாக அறிந்து, நீங்களே கண்டு, நீங்களே அநுபவித்த விஷயமா யில்லையா?’ என்று அவர் கேட்க, ஆனந்தர் முதலிய யாவரும் ஆமென்று உரைத்தனர்.

மீண்டும் பகவர் பேச ஆரம்பித்தார்:

‘பிக்குக்களே, இப்பொழுது கவனியுங்கள்’

“(சேர்க்கையாகச்) சேர்ந்துள்ள பொருள்கள் யாவற்றிலும் (பிரிந்து) அழிவுறும் இயல்பு அடங்கி யுள்ளது” என்பதை நினைவுறுத்தியே நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்!”

இவையே ததாகதரின் கடைசி வார்த்தைகள் பிறகு ததாகதர் மௌனமாகித் தியானத்தில் ஆழ்ந்தார். நான்கு வகைத் தியானங்களையும் கடந்து, இறுதியான பேரின்ப நிலையாகிய நிருவாணத்தில் இலயித்து விட்டார்.

அந்த நேரத்தில் பூமி பயங்கரமாக அதிர்ந்தது. வானத்தில் இடியேறுகள் உறுமின. மன உணர்ச்சிகளை முழுவதும் அடக்கி வெற்றி பெறாத பிக்குக்கள் சிலர் கைகளை உயரே தூக்கிக் கொண்டு ‘ஓ’ வென்று கதறி அழுதனர்; சிலர் நின்ற நிலையிலேயே தலை சாய்ந்து விழுந்து துயரத்தால் துடித்தனர்.

அழுது அரற்றித் துயரப்பட்டவர்களை அநுருத்தர் தேற்றினார். ததாகதர் பலமுறை கூறிய வாய்மைகளை எடுத்துக் காட்டி, உலகில் எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்பும் வீணாக அழவேண்டிய்தில்லை என்று அவர் கடிந்து கொண்டார்: ‘உணர்ச்சிகளை வென்றவர்கள் அவர் உபதேசித்தருளிய வாய்மையைக் கருத்திற் கொண்டு, அமைதியோடும், அடக்கத்தோடும் இருப்பார் என்று கூறினார்.

அன்றிரவு முழுவதும் அநுருத்த நம், ஆனந்தரும் பௌத்த தரும சூத்திரங்களை ஓதிக்கொண்டிருந்தனர்.

பின் நிகழ்ச்சிகள்

பின்னர் ஆனந்தர் மூலம் போதிமாதவர் மகா- பரிநிருவாண மெய்திய செய்தியை அறிந்த மல்லர்கள் நகரிலிருந்து திரள் திரளாக வந்து சேர்ந்தனர். ஏராளமான மலர்மாலைகளும் பரிமளப் பொருள்களும் கொண்டுவந்து மக்கள் அவர் திருமேனியை வணங்கினர். மல்லர்களின் தலைவர்களுடைய ஆணைப்படி நகரிலிருந்த எல்லா வாத்தியங்களும் வந்து சேர்ந்தன. வாத்தியங்களின் இசைகளும், ஆடல்களும், பாடல்களும் இடைவிடாது நிகழ்ந்து வந்தன. இவ்வாறு ஆறு நாட்கள் மல்லர்கள் புத்ததேவரின் திருமேனிக்கு வணக்கம் புரிந்து வந்தனர்.

ஏழாவது நாளில் பரிமளம் மிகுந்த சந்தனச் சிதையின் மீது தேவரின் திருமேனி வைக்கப்பெற்றது. முதலாவதாக மகாகாசியபர், கைகளைக் கட்டிக்கொண்டு மிக்க வணக்கத்துடன் காஷடத்தை மும்முறை சுற்றி வந்து பெருமானின் திருவடிகளை வணங்கினார். பிறகு ஐந்நூறு பிக்குக்களும் அவ்வாறே செய்தனர்.

உடனே காஷ்டத்தில் தீ தானாகவே பற்றிக்கொண்டது. தகனம் முடிந்த பிறகு வானத்திலிருந்து வழிந்து வந்த வெள்ள நீரால் அனல் அணைக்கப்பெற்றது. ததாகதரின் உடல் தகனமானதில் நீரோ, புகைக்கரியோ சிறிது மின்றி, வைரம் போன்ற அஸ்திகள் மட்டுமே மிஞ்சி யிருந்தன. மல்லர்கள் அவற்றைச் சேகரித்து ஒரு பொற் குடத்தில் வைத்து, அக்குடத்தைத் தங்கள் நகரசபை மண்டபத்திலே கொண்டுபோய் வைத்திருந்தனர். தேவரின் அஸ்திகளுக்கு மரியாதை செய்வதற்காகக் கரகத்தின்மீது எண்ணற்ற மலர் மாலைகளும், வாசனைத் திரவியங்களும் தூவப்பெற்றன. அந்த நாட்டு வழக்கப்படி நாட்டியமும், சங்கீதமும் தொடர்ந்து நடந்து வந்தன.

பின்னால் மகத மன்னர் முதலிய ஏழு நாட்டு மன்னர்கள் புத்ததேவரின் அஸ்திகளில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று மல்லர்களுக்குத் தூதனுப்பினார்கள்; மல்லர்கள் முதலில் இணங்கவில்லை. அஸ்திகளுக்காகப் போர்களும் நேரக்கூடிய நிலைமை ஏற்பட்டது. முடிவில் ஆன்றோர்களின் யோசனைப்படி மல்லர்கள் அஸ்திகளை எட்டுப் பங்குகளாக வைத்து, ஏழு பகுதிகளை ஏழு நாட்டவர்க்குக் கொடுத்துவிட்டு, எட்டாவது பகுதியைத் தங்கள் நகரிலே வைத்துக்கொண்டார்கள். அந்த எட்டுப் பகுதிகளான அஸ்திகளையும் எட்டுப் பொற்குடங்களில் அடக்கம் செய்து, ஒவ்வொரு குடத்திற்கும் ஒரு தாது கோபம் கட்டப் பெற்றது. அங்கங்களைப் பாதுகாத்து வைக்கும் ஞாபகச்சின்னமாகிய தாதுகோபத்தைத் ‘தகோபா’ என்று கூறுவது வழக்கமாயுள்ளது.

புத்தர் பெருமான் மகா-பரி - நிருவாணமடைந்த காலம் ‘ஈசான சகாப்தம், 148-ஆம் வருஷத்தில் வைகாசி மாதத்திற் பூர்ணிமையும் விசாக நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையென்பர்’ என்பதாக மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் குறித்துள்ளார்கள். ஈசான சகம் எதுவென்று இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை. ஆயினும் திருவாளர் இ.மு. சுப்பிரமணியபிள்ளையவர்கள், கி.மு. 493, கலி 2609, வைகாசி 19-ஆம் நாள் செவ்வாயன்று நிறைமதி 2 நாழிகை 11 விநாடிக்குத் தொடங்கிற்று. அன்றே புத்தர் நிருவாணமடைந்தார் என்று தமது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்துள்ளார்கள், எனவே கி.மு.493-ஆம் ஆண்டே ஈசான சகாப்தம் 148-ஆம் ஆண்டாக இருத்தல் வேண்டும். மற்ற ஆராய்ச்சியாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் வெவ்வேறு ஆண்டுகளை யூகித்துக் குறித்துள்ளார்கள். ஆனால் அவ்வாண்டுகள் புத்தர் பெருமானுடைய வாழ்க்கையின் மற்ற அமிசங்களோடு பொருந்தவில்லை.

போதி மேவினை; புன்மை அகற்றினை;
சோதி வானவர் தொழ எழுந்தருளினை
ஆதி நாத! நின் அடியிணை பரவுதும்!

  1. காயம்-உடல்; தரும காயம்- தருமமாகிய உடல்
  2. ‘தீக நிகாயம்.’