போதி மாதவன்/கபிலையம்பதி
பதிமூன்றாம் இயல்
கபிலையம்பதி
மாற்றரும் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் !......
–மணிமேகலை
‘மத யானையின் முதுகிலே அமர்ந்து இன்புறக் கூடிய செல்வமும், இவ்வரசும் நான் வேண்டேன்’ என்று வெறுத்துச் சென்ற சித்தார்த்தர், புத்தராகி, மீண்டும் கபிலையம்பதிக்கு வருகிறார் என்ற செய்தியை அறிந்து, அந்நகர மக்கள் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர். வீதிகளிலே வெண்மணல் விரித்தனர்; வீடுதோறும் மகர தோரணங்கள் - கட்டினர்; மாடங்களிலே மணிக்கொடிகளைப் பறக்க விட்டனர். வயல்களிலும் வயற்புறங்களிலுமுள்ள வாழைகள், கமுகுகள் எல்லாம் வீதிகளுக்கு வந்து விட்டன. தங்கப் பூண் கட்டிய தந்தங்களுடனும், வெள்ளி அம்பாரிகளுடனும் யானைகள் தயாராக நின்றன. பிரபுக்களும் அதிகாரிகளும் ஆங்காங்கே நின்று வரவேற்கக் காத்திருந்தனர். கீதவாத்தியங்கள் பல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
நகருக்கு அருகே அமைந்திருந்த அரசருடைய நெடிய சோலையான நியக்குரோத வனத்திலே[1] பெருந்தவ முனிவர் தங்குவதற்கு ஏற்ற அழகிய மண்டபம் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அச்சோலையிலே பசுமையான மரங்களும் மலர்ச் செடிகளும், கொடிகளும் மிகுதியாக இருந்தன.
புத்தர் பெருமான் வருகின்ற தினத்திலே உரோகிணி நதிக்கரையிலிருந்தே ஆடவர், ‘பெண்டிர், குழந்தைகள் யாவரும் ஆயிரக்கணக்கில் அவரைச் சூழ்ந்து வந்து கொண்டிருந்தனர். அவருடைய முகவிலாசத்தையும், அமைதியையும், அருட்பொலிவையும் கண்டு, ‘இப்படியும் ஒரு துறவி இவ்வுலகில் உள்ளாரோ!’ என்று மக்கள் அதிசயித்தனர்.
நியக்குரோத வனத்தை நண்ணி வரும்போது அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காக அரசர் தேர்மீது அமர்ந்து கொண்டு காத்திருந்தார். அவருடன் அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், செல்வச் சீமான்களும் கூடியிருந்தனர். எள்ளும் விழுவதற்கு இடமின்றி ஜனக் கூட்டங்களும் திரள் திரளாகத் திரண்டு நின்றன.
அந்நிலையில், மழுங்கச் சிரைத்த தலைகளுடன் விளங்கிய ஆயிரம் துறவிகளுடன், காஷாயக் கடலின் மீது விளங்கும் செங்கதிர்போல், ஒளிவீசி நடந்து வந்து கொண்டிருந்தார் பெருமான். அவர் தலையும் முண்டித மாயிருந்தது. அவர் உடையும் காவியாகவே இருந்தது. தூரத்திலிருந்து அவரைக் கண்டதும், சுத்தோதனர் தேரிலிருந்து கீழிறங்கினார். விருந்தினர் தமது குமாரரே எனினும், மன்னர்கள் துறவிக்குச் செய்ய வேண்டிய மரியாதையை எண்ணி அவர் நடந்தே சென்றார். பெருமானின் திருக்கோலம் அவர் உள்ளத்தை வேதனை செய்த போதிலும், அவருடைய பேரெழிலைக் கண்டு அவர் அதிசயித்து ஆனந்தமடைந்தார். அவர் ஏதேதோ பேச வேண்டும் என்று முயன்றும், சொற்கள் கிடைக்க வில்லை.
எதிரே, மேருமலை போன்ற அமைதியும், உறுதியும் கொண்டு, சிம்மம் போன்ற ஆண்மையுடன், ஏறுபோன்ற நடையுடன், ஒளிவீசி வந்து கொண்டிருந்த துறவி அவருடைய சொந்தக் குமாரரே! ஆயினும் அவருக்கும் இவருக்கும் இடையில் எவ்வளவு தூரம்! அந்த முனிவர் இப்போது சித்தார்த்தர் அல்லர்– புத்தர், புனிதர், தரும ராஜா, தாரணியின் தனிப்பெரும் குரு! இவரோ பற்றுக்கள் நிறைந்து, இன்னும் குழப்பத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தார்! ஏழு ஆண்டுகளாக இந்த நாளை எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்த மன்னரது உள்ளத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் குமுறிக் குமைந்து கொண்டிருந்தன. ‘சித்தார்த்தா!’ என்று அருகே சென்று கூவி அழைக்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அவர் உடனே அடக்கிக் கொண்டார்.
புத்தரின் ஆற்றல்
போதி வேந்தர் மன்னரின் மனநிலையை ஊகித் தறிந்து, தமது இருத்தி ஆற்றலை அவருக்கும் மக்களுக்கும் சிறிது காட்ட வேண்டும் என்று திருவுளம் கொண்டார். நியக்குரோத வனத்தை அடைந்ததும், அவர் திடீரென்று வானத்திலே எழுந்து, ஆகாயத்திலே நடந்தும், தமது திருமேனியைப் பலவிதமாகப் பிரித்தும், சேர்த்தும் காட்டினார். அவர் உடலின் மேற்பகுதியிலிருந்து நெருப்புப் பிழம்புகள் பாய்ந்தன. அடுத்தாற் போல் அவர் இந்தக் காட்சியையே மாற்றிக் காட்டினார். பின்னர் வலது புறத்திலிருந்து நெருப்பும், இடது புறத்திலிருந்து நீரும் பெருகிக் கொண்டிருந்தன. இவ்வாறு இரட்டை இரட்டையான இருபத்திரண்டு ஆற்றல்களை[2] அறத்தனக முதல்வர் அன்று செய்து காட்டியதாகக் கூறப்படுகின்றது.
சுத்தோதனர் தம் துயரையெல்லாம் கைவிட்டு, மைந்தருடைய துறவின் மாண்பை அறிந்து, பேரதிசயம் அடைந்து அவரை வணங்கினார். சாக்கியர் அனைவரும் அரசரைப் பின்பற்றித் தாமும் ததாகதரை வணங்கினர்.
பின்னர் ததாகதர், தாம் முந்திய பிறவிகளில் ஒன்றில் வேசந்தரர் என்ற இளவரசராயிருந்து, யாசிப்பவர்களுக்குக் கேட்டதையெல்லாம் அருளி, முடிவில் தமது மக்களைப் பிரிந்து, அருமை மனைவியையும் ஓர் அந்தணருக்குத் தானம் செய்து விட்டதையும், தேவேந்திரன் தோன்றி, அவரையும் பத்தினியையும் பாராட்டி, அந்த இணை பிரியாக் காதலரை மீண்டும் சேர்த்து வைத்ததையும் விரிவாகக் கூறித் தாம் எக்காலத்திலுமே பரதுக்க துக்கர்[3] என்பதையும், பிற உயிர் ஓம்பும் மன்னுயிர் முதல்வா என்பதையும் எடுத்துக் காட்டினார். ஞானியின் இயல்பு பற்றி அவர் அப்போது நயமான சில உரைகளும் புகன்றார் :
“ஞானி, உலகம் எரிகின்ற நெருப்பால் சூழப்பட்டிருப்பதாகக் கண்டு அச்சமுற்றுப் பிறப்பு, முதுமை, மரணங்களை ஒரேயடியாக ஒழிக்கும் வரை அந்த அச்சத்தைக் கைவிடாமல் இருக்கிறான். ஞானி வாழும் இடம் எல்லையற்ற அமைதி நிறைந்து விளங்குகின்றது. அங்கு ஆயுதங்கள் தேவையில்லை; இரதங்களும், யானைகளும், குதிரைகளும், படைகளும் தேவையில்லை! ஞானியின் ஆசைகள் அடங்கி அவிந்து போகின்றன; வெகுளி அவனிடமிருந்து விலகி ஓடுகின்றது; பேதைமை பிரிந்து ஓடுகின்றது; பரந்த உலகிலே வெல்ல வேண்டியது எதுவும் இல்லை; அவன் துக்கம் என்ன என்பதை அறிந்து, அவன் அதன் மூலத்தையே அறுத்துவிடுகிறான்; பின்னர் நன்னெறிகளைக் கடைப்பிடித்து, உலகின் நான்கு சீரிய வாய்மைகளையும் நன்குணர்ந்து கொண்டு, அவன் அச்சத்தை உதறிவிட்டுப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறி விடுகிறான்!’
அவ்வுரைகளைக் கேட்ட மன்னர், ‘நீ உலகாளும் மன்னனாக இருந்திருந்தால், இத்தகைய உயர்ந்த தருமத்தை உபதேசிக்க யாரும் இருக்கமாட்டார்கள்; நான் இதைக் கேட்கும் பேறும் வாய்த்திருக்காது; உலகில் ஜனன மரண விலங்குகள் மக்களை விட்டு அகலாது பிணித்துக் கொண்டேயிருக்கும்! நீ நாடு துறந்ததும் நலமேயாயிற்று!’ என்று மனத்துள் கருதி மகிழ்ந்தார்.
அற உரைகள்
பின்னர் புத்தர் பெருமான், ஆயிரமாயிரமாகக் கூடியிருந்த மக்கள் அனைவரும் அமைதியோடிருந்து அறம் கேட்க ஆவலாயிருப்பதை அறிந்து, தாம் பிறந்த திருப்பதியிலேயே, தமது அரிய தரும உபதேசத்தை ஆரம்பித்தார். ஐயனின் அருள் மொழிகளிற் சில[4] வருமாறு:
‘அறிவுக்கு எட்டாதவைகளை ஆராய்ந்து கொண்டு காலத்தை வீணாக்க வேண்டாம்; அளக்க முடியாததைச் சொற்களால் அளவிட முயல வேண்டாம்; ஆழம் காண முடியாத ஆழத்திலே சிந்தனைக் கயிற்றை ஆழ்த்தி இழக்கவேண்டாம்! வினவுவோனும் தவறு செய்கிறான்; விடையிறுப்போனும் தவறே செய்கிறான். (சித்தத்துக்கு எட்டாதவைகளைப் பற்றி) எதுவும் சொல்ல வேண்டாம்!
‘திரை திரையாகக் கழற்றிவிட்டுப் பார்த்தாலும், பின்னும் திரைமேல் திரையே மூடிக் கொண்டிருக்கும்.
‘உலகில் இருப்பதைக் கொண்டு உண்மையை உணர்தலே போதும். வாழ்வும், மரணமும், இன்பமும், துன்பமும் இங்கே இருக்கின்றன; காரணத்தைத் தொடர்ந்தே காரியம் நிகழ்கின்றது. கால வெள்ளத்திலே நிகழ்ச்சிகள் அலை மேல் அலையாக வீசிக்கொண்டு செல்லும் ஆறு போல் தொடர்பாக நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே ஆறு தான், ஆயினும் ஒன்றல்ல; மலையிலே தோன்றிய வெள்ளம் சமவெளியிலே இல்லாது மாறுகின்றது. ஆறு கடலில் மறைந்து, ஆவியாகி, மேகமாகி, மலைமீது பொழிந்து மீண்டும் ஆறாக வந்து ஓடுகின்றது. அதற்கு ஓய்வுமில்லை; ஒழிவுமில்லை.
‘பிரார்த்தனை செய்து என்ன பயன்? இருள் வெளுத்து விடாது! மோன நிலையைப் பார்த்து வரம் கேட்டால், மௌனமே பதிலாக வரும்! சோதர சோதரிகளே, இயற்கையிலேயே துக்கமடைந்துள்ள நீங்கள், கடுமையான தவங்களால் மேலும் மேலும் உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்.
‘தெய்வங்களை வேண்டி உயிர்ப்பலிகள் அளிக்க வேண்டாம்; பண்டம், பழங்கள் வைத்துப் பூஜை செய்து பலனை எதிர்ப்பார்த்து இருக்க வேண்டாம்’
‘உயர்ந்தோர்க்கும், தாழ்ந்தோர்க்கும், யாவர்க்குமே தமது விதியின் மேல் அதிகாரம் உண்டு. உயிரும் சதையும் கொண்டு உலாவும் ஜீவர்கள் யாவர்க்கும் விதி ஒன்று தான்; அவரவர் செயலே இன்பத்திற்கும், ஏனைத் துன்பத்திற்கும் காரணம்.
‘செய்த வினைகளே இப்போது செய்யும் வினைகளின் காரணம், கடைசியாகச் செய்தது இப்போது முதலாவதாக விளைகின்றது; முதலாவது செய்ததே முடிவானதாக விளைகின்றது.
‘தேவர் யாவரும் முன் செய்த நல்வினைப் பயனைத் துய்ப்பவரே; நரகில் உழல்வோர் அனைவரும் பழமையான தங்கள் தீவினைப் பயனைத் துய்ப்பவராம்.
‘இந்திரனுக்கு மேலாக உங்கள் நிலையை நீங்களே உயர்த்திக்கொள்ள முடியும்; புழுக்கள் கொசுக்களுக்குக் கீழாகவும் உங்களைத் தாழ்த்திக் கொள்ளவும் முடியும்- இரண்டும் உங்கள் கையிலேதான் இருக்கின்றன.
‘சம்சார சக்கரம்[5] சுழல ஆரம்பித்தால், அது நிற்பதுமில்லை; மாறுவதுமில்லை; சக்கரத்தின் ஆயக்கால்கள் மேலும் கீழுமாய்ச் சுற்றிக் கொண்டேயிருக்கும்!
சம்சார சக்கரத்தில் சிக்குண்டு கிடந்தால், விமோசனமில்லை; வேதனையே மிஞ்சும்.
‘நீங்கள் கட்டுண்ட அடிமைகள் அல்லர்! உறுதியாக மனம் வைத்தால், நீங்கள் சக்கரச் சுழலிலிருந்து வெளியாகி, நீங்காத இன்பத்தை யடையலாம்; நல்லன யாவும் மேலும் நன்மை யாவும் மேலும் நன்மைகளாகவே முடியும்.
‘புத்தராகிய நானும் புவனத்து மக்களின் துயரையெல்லாம் எண்ணிக் கண்ணீர் சிந்தினேன்; ஆனால் இப்போது இன்புற்று நிற்கிறேன்! ஏனெனில் யாவர்க்கும் விடுதலை நிச்சயம்–நான் அதைப் பெற்றுவிட்டேன்!
‘துயரப்படும் மக்களே! ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் துயரங்களுக்குக் காரணம் நீங்களே! ஜனன மரணச் சக்கரத்தில் உங்களை மாட்டி வைத்து, அதன் ஆயக்கால்களை நீங்கள் ஆர்வத்தோடு பற்றிக்கொண்டு வேதனைப்படும் படி வெளியேயுள்ள எவரும் செய்யவில்லை.
‘எது தப்பினாலும் தருமம் தப்புவதில்லை ! நன்மையைச் செய்தால் நல்லதே விளையும்: தீமையைச் செய்தால் தீமையே விளையும்.
‘தருமத்திற்குக் கோபமில்லை; மன்னிக்கும் இயல்பும், கிடையாது; செய்த வினையின் பயன் இன்றோ, நாளையோ, விளைந்தே தீரும்.
‘எனவே, கொலைஞன் தனது கூரிய வாளால் வேறொன்றைக் கோறுவதில்லை,[6] தன்னையே தான் கொலைசெய்து கொள்கிறான்; அநீதி செய்யும் நீதிபதி தனக்கே அநீதி இழைத்துக் கொள்கிறான்; திருடரும் தீயோரும் பறிக்கும் பொருளைத் திரும்பக் கட்டியே தீரவேண்டும். கரும விதியைக் கடந்து செல்ல முடியாது!
துக்கம் எங்கிருந்து வருகிறதென்பதை அறிந்து, பழைய தீமைகளுக்குப் பரிகாரம் செய்து, ஆசாபாசங்களையும் அசத்தியங்களையும் களைந்தெறிந்து, துன்பத்தைப் பொறுமையுடன் தாங்கி, இன்னா செய்தவர்களுக்கும் இனிய வற்றையே செய்து, வாழ்க்கைப் பற்றை வேருடன் களைந்து விட்டால், பின்னால் பிறப்புமில்லை, இறப்புமில்லை! அந்நிலையே நிருவாணம்!
‘துக்கத்தை உணருங்கள்! துக்க உற்பத்தி எங்கே என்று காணுங்கள்! துக்க நீக்கம் அவசியம் என்பதை அறியுங்கள்! அதற்கு உரிய வழியை நன்கு கடைப்பிடியுங்கள்!
இதுவே நான் கூறும் எட்டுப்படிகளுள்ள அறவழி:
‘காட்சியைத் தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்; ‘நான்கு வாய்மைகளையும் உணர்ந்து, பாவபுண்ணியங்களைப் பகுத்து அறியுங்கள். அறத்திற்கு அஞ்சுங்கள்; கருமத்தைக் கவனியுங்கள். இதுவே நற்காட்சி!
‘அவாவை அறுத்து, வெறுப்பு, வெகுளி, கொடுமை முதலியவற்றை நீக்கி, எல்லா உயிர் களிடத்தும் அன்பு கொண்டு வாழுங்கள். இதுவே நல்ல சங்கற்பம், நல்லூற்றம்!
‘பொய், புறங்கூறல், இன்னாச் சொல், வீண் பேச்சு முதலியவற்றை ஒழித்து, வாய்மை, அடக்கம், இன்சொல், பயனுள்ள அற ஆராய்ச்சி முதலிய நற் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்திலே அரசர் கொலுவீற்றிருக்கிறார். அந்தக் கொலு மண்ட பத்தின் வாயில் உங்களுடைய வாய். வாயில் கண்ட வார்த்தைகள் நுழைந்துவிடாமல் காத்துக் கொள்ளுங்கள்; அமைதி, அழகு, கௌரவம் ஆகியவற்றில் ஊறிய சொற்களையே வாய் பழகிக் கொள்ள வேண்டும், இதுவே நல்வாய்மை!
‘உயிர்க்கொலை, களவு, காமம், பொறாமை, வெகுளி, முதலிய தீமைகளை விலக்கி, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் எதைச் செய்தாலும் அச் செயல் முன்னால் உள்ளத்தில் ஊன்றி வளரும் ஒரு தீமையைக் களையவேண்டும், அல்லது ஒரு நன்னம முளை விட்டு வளரும்படி செய்ய வேண்டும். இதுவே நற்செய்கை!
‘வாழ்வுக்கு வேண்டிய பொருள்களை நீதியான முறையிலே உழைத்துப் பெறவேண்டும். இதுவே நல் வாழ்க்கை !
‘தீய எண்ணங்களை அழித்து நல்லெண் ணங்களை வளர்க்க இடைவிடாமல் எப்போதும் முயற்சி செய்து கொண்டேயிருக்கவேண்டும், இதுவே நல்லூக்கம்!
‘அறிவினால் கண்ட வாய்மைகளைப் போற்றி எப்போதும் கருத்தோடு இருக்கவேண்டும். கவலையின்றிச் சிறிது கண்ணை மூடினாலும், தீமைகள் உள்ளத்தில் புகுந்துவிடும். கருத்துடைமையே நற்கடைப்பிடி!
‘உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தலே நல்லமைதி!
‘ஒரேயடியாக எல்லோரும் வானத்துச் சூரியனை அடைந்துவிட முடியாது. சிறிது சிறிதாக உயரே பறந்து, பயிற்சி பெற்று, உறுதியுடன் முயன்று வந்தால், நினைத்த இலட்சியம் நிச்சயம் கைகூடும்!
‘நவரத்தினங்களைவிடச் சிறந்தது நான் கூறும் நல்லறம்; தேனினும் இனியது இந்தத் தருமம்; இன்பங்களில் எல்லாம் இதுவே தலைசிறந்தது!
‘எதற்கும் முதலில் ஒழுக்கம் வேண்டும்.
‘எந்தப் பிராணியையும் கொல்லாதீர்கள்!
‘தானம் கொடுங்கள்; பிறர் உதவிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், பேராசை, புரட்டு, பலவந்தம் ஆகிய வழிகளில் பிறர் பொருளில் ஆசை வைக்கவேண்டாம்!
‘பொய்ச் சாட்சி சொல்லவேண்டாம்; அவ தூறு கூறவேண்டாம்; சுத்தமான அகத்திலிருந்து வரும் பேச்சே! சத்தியமானது!
‘மயக்கமளிக்கும் குடிவகைகளை ஒழித்து விடுங்கள்!
‘பிறன் மனைவியைத் தீண்டலாகாது. உடலால் இயற்றும் மற்றைத் தீமைகளையும் கை விட்டு விடுங்கள்!’
ததாகதரின் தெள்ளிய மொழிகளைக் கேட்ட மக்கள் தங்கள் மனமாசுகள் கரைந்து, நல்லுணர்வு பெற்று மகிழ்ந்தனர். அரசரும் உள்ளம் பரவசமடைந்து தமது அரண்மனைக்குத் திரும்பிச் சென்றார். புத்தர் நியக்குரோத வனத்திலேயே தங்கியிருந்தார் அன்று கூடியிருந்த அரச குலத்தைச் சேர்ந்தவர்களும், பிரபுக்களும், எக்காரணத்தாலோ பெருமானை மறுநாள் அமுது உண்ண அழைக்காமலே சென்றுவிட்டனர்.
தந்தைக்கு உபதேசம்
மறு நாள் காலையில் அருள்வள்ளல் தமது வழக்கம் போல் பிச்சையெடுக்க வெளியேறி நகருக்குள்ளே செல்லலானார். அவர் கையிலே சுரைக்குடுக்கை போன்ற மண் பாத்திரம் இருந்தது. அவருடைய அகத்தின் ஒளி முகத்திலும் உடலிலும் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அவரைப் பார்ப்பதற்காகத் தெருக்களிலும், மாடிகளிலும், சாளரங்களிலும், பெண்களும் பிரபுக்களும் நிறைந்து நின்றனர். ஐயன் சாலை மண்ணிலே நடந்து ஐயமெடுக்கும் காட்சியைக் கண்ட பலருடைய கண்களிலே கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வீடுதோறும் பெண்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அமுது அளித்தனர். புத்தர் தெருக்களில் நடந்து பிச்சையெடுக்கிறார் என்ற செய்தி நகரெங்கும் பரவி, விரைவிலே மன்னருக்கும் எட்டிற்று.
மன்னர் மிகவும் துக்கமடைந்தார்; துக்கம் கோபமாக மாறிவிட்டது. உடனே அரண்மனையிலிருந்து குதிரை மீது ஏறிப் புத்தரை நாடித் தெருக்களுக்கு விரைந்து சென்றார். வழியிலே பெருமான் வீடுதோறும் வாசலில் சிறிது நேரம் மௌனமாக நிற்பதையும், அவர் கரங்களிலே பிச்சையெடுத்த சோற்றுடன் திருவோடு விளங்குவதையும் கண்ட மன்னர், விசனம் தாங்காமல், ‘என்னை ஏன் இப்படிக் கேவலப்படுத்துகிறீர்? உமக்கும் பிக்குக்கள் அனைவர்க்கும் உணவளிக்க எனக்குச் சக்தி இல்லையா?’ என்று கேட்டார்.
‘இது என் குல மரபு!’ என்றார் புத்தர்.
‘இது எவ்வாறு மரபாகும்? நீர் உதித்த இராஜ வமிசத்திலே, ஒரு மன்னர்கூட உணவுப் பிச்சை எடுத்ததில்லையே!’ என்று மன்னர் மீண்டும் கூறினார்.
‘பேரரசே! தாங்களும், தங்கள் குலத்தினரும் அரசர்களின் வமிசம் என்று கூறிக்கொள்ளலாம்; என் வமிசம் தொன்று தொட்டுத் தோன்றிவந்துள்ள புத்தர்களுடைய வமிசம். அவர்கள் உணவுக்காகப் பிச்சையெடுத்தே வாழ்ந்து வாழ்ந்தனர்!’ என்று பகவர் மறுமொழி புகன்றார்.
அத்துடன் தாம் தவத்தால் கண்டெடுத்த புதையலைத் தந்தையார்க்கும் அளிக்க விரும்புவதாய்க் கூறி, அண்ணல் அவருக்குத் தனியாக அறவுரை புகன்றார்: ‘கனவுகளைக் கைவிட்டு, உள்ளத்தை உண்மைக்காக திறந்து வையுங்கள்! அற ஒழுக்கத்தைக் கையாண்டு நிலையான இன்பத்தை, அடையுங்கள்!’ என்று கேட்டுக் கொண்டார்.
மன்னர் அவர் கையிலிருந்த திருவோட்டைத் தம் கையிலே வாங்கி வைத்துக்கொண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அன்று புத்தருக்கும் பிக்குக்களுக்கும் அங்கேயே அமுது படைக்கப் பெற்றது. பின்னர் புத்தருடைய உபதேசத்தால் சுத்தோதனர், ‘சோதாபத்தி’ என்ற நிர்வாண வழியின் முதற்படியை அடைந்தார். அன்றே நியக்குரோத வனத்தைச் சங்கத்திற்கு அளிப்பதாக மன்னர் புத்தர் கையில் புனித நீர் ஊற்றி அர்ப்பணம் செய்து கொடுத்தார்.
யசோதரை
போதி வேந்தர் அரண்மனைக்கு வந்திருந்த சமயத்தில் அரச குலத்தைச் சேர்ந்த அனைவரும் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரைக் கண் குளிரத் தரிசித்துக் கொண்டனர். அவருடைய சிற்றன்னை கௌதமி அவரிடம் உபதேசம் பெற்று, நிருவாண வழியின் முதற்படியை அடைந்தாள். ஆனால் தேவி யசோதரை மட்டும் அங்கு வரவில்லை. அரசர் அவளுக்குத் தனியாகச் சொல்லி விட்டிருந்தும், அவள், ‘என்னிடத்தில் சித்தார்த்தருக்கு ஏதும் சிரத்தையிருந்தால், அவரே என்னை வந்து பார்ப்பார்!’ என்று சொல்லி விட்டாள்.
புத்தரும் யசோதரை எங்கே என்று விசாரித்தார். அவள் வர மறுத்து விட்டாள் என்பதைக் கேட்டு, அவர் எழுந்திருந்து, தாமே அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்றும் புறப்பட்டார். தம்முடன் சாரீபுத்திரரையும், மௌத்கல்யாயனரையும் அழைத்துக் கொண்டார். ‘சோகத்தால் உள்ளம் நொந்துள்ள யசோதரை ததாகதரைத் தொட்டாலும், நீங்கள் பேசாதிருங்கள்!’ என்று அவர் அவர்களுக்குக் கூறிவைத்தார். சுத்தோதனதரும் அவர்களோடு சென்றார்.
யசோதரை கூந்தலை இழந்து, காவிச் சீலை அணிந்து கொண்டு, தனது அறையில் அமர்ந்திருந்தாள். புத்தர் பெருமான் அங்கே சென்றதும், அவள் எழுந்து அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கி அவருடைய இரு பாதங்களையும் பற்றிக்கொண்டு கண்ணீர் பெருக்கிக் கதறினாள். பின்னர் அறையில் மன்னரும் இருப்பதை அறிந்து விரைந்து எழுந்தாள். புத்தர் தமது ஆசனத்தில் அமர்ந்ததும், தேவியும் சிறிது தூரத்திற்கு அப்பால் சென்று அமர்ந்தாள்.
சுத்தோதனர், கணவரைப் பிரிந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அவள் வாழ்ந்து வந்த முறையை! வியந்து கொண்டே விவரமாகக் கூறினார். சித்தார்த்தரைப் பற்றிய செய்திகள் வந்த காலங்களில், அவள் அவைகளைக் கேட்டுத் தன் கணவரைப் போலவே தானும் நடந்து வந்தாள். அவரைப் போலவே தானும் சீவர ஆடை புனைந்தாள்; கூந்தலைக் கத்தரித்துக் கொண்டாள்; ஒவ்வொரு நாளும் ஒருவேளை உணவே உட்கொண்டு வந்தாள்; சித்தார்த்தரைப் போலவே தானும் தரையின் மீது படுத்து உறங்கி வந்தாள்.
வள்ளலும், யசோதரையை அன்புடன் நோக்கி, முந்திய பிறவிகளிலும் அவள் தம்மையே விரும்பித் தம்முடனேயே வாழ்ந்து கொடுந்துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, போதிசத்துவராக விளங்கி தமக்கு ஒப்பற்ற உதவி செய்து வந்த வரலாறுகளை எடுத்துக் கூறினார். இந்தப் பிறவியிலும் அவள் தம்மை அடைந்ததன் காரணம், முற்பிறவிகளில் அவள் புத்தரையே மணந்து கொள்ள வேண்டுமென்று நோற்ற நோன்பு என்றும், அவளுடைய தவ வலிமைக்கு அளவில்லை என்றும் விளக்கிச் சொன்னார்.
இராகுலன்
புத்தர் கபிலவாஸ்துவுக்கு வந்த ஏழாம் நாளில் யசோதரை, மைந்தன் இராகுலனை இளவரசனைப் போலச் சிங்காரித்து, அப்போது அரண்மனைக்கு விஜயம் செய்திருந்த புத்தர் பிரானை அவனுக்குக் காட்டி, என் அன்பே! அதோ பிக்குக்களின் நடுவே தங்க நிறத்துடன், பிரும்மாவைப் போன்ற ஒளியுடன் இருக்கும் துறவியே உனது தந்தையாகிய புத்தர் பெருமான். அவர் பிறக்கும் போது நான்கு பெரிய கொப்பரைகளிலே நவரத்தினங்களும் நிதிகளும் நிறைந்து தோன்றின. அவர் துறவு பூண்டு சென்றபின் அவைகளும் கண்ணுக்குப் புலனாகாமல் மறைந்திருக்கின்றன. நீ அவரிடம் சென்று, நீ யுவ ராஜா என்றும், மகுடம் புனைந்தபின் நீ மாநிலத்து அரசனாக விளங்குவாய் என்றும் சொல்லி, தந்தையின் உடைமை மைந்தனுக்கு உரியது என்பதால், அவருடைய பொக்கிஷத்தை உனக்கு அளிக்கும்படி கேட்டு வர வேண்டும்!’ என்று சொல்லிக் கொடுத்தாள்.
அன்னை கூறியபடியே இராகுலன் புத்தரிடம் சென்றான். அவர் அப்போது அமுது செய்து கொண்டிருந்தார் அவரைக் கண்டதுமே, செல்வன் உள்ளத்தில் அன்பு பெருகிற்று. அவர் உணவு அருந்திய பின்பு, அருகே சென்று ‘ஐய! எனக்கு உரிய தந்தையின் செல்வத்தைத் தந்தருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டான். புத்தர் ஒரு முடிவும் கூறாவிடினும், அவன் அவரைத். தொடர்ந்து - நியக்குரோத வனத்திற்கே சென்று விட்டான்.
அங்கும், ‘ஐய! எனக்கு உரிய தந்தையின் செல்வத்தைத் தந்தருள வேண்டும்!’ என்று கூறினான். அருள் வள்ளல் தாம் போதி மரத்தின் அடியில் பெற்ற அழியாத செல்வத்தையே அவனுக்கு அளிக்க வேண்டும் என்று கருதினார். உடனே சாரீபுத்திரரைப் பார்த்து, ‘என் குமரன் பிதிரார்ச்சிதத்தைக் கேட்கிறான். கவலைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் அழியும் செல்வங்களை அவனுக்கு நான் அளித்தல் கூடாது; அழியாத செல்வமாகிய புனித வாழ்வையே அவனுக்குச் செல்வமாக வழங்க வேண்டும்!’ என்று கூறினார்.
பின்னர் இராகுலனை நோக்கி, ‘பொன்னும், வெள்ளியும், நகைகளும் என்னிடம் இல்லை. உயர்ந்த வாழ்வுக்குரிய செல்வங்களை நீ பெற விரும்பினால், அவைகளைத் தாங்கிப் பாதுகாக்கும் சக்தி உனக்கு இருந்தால், நான்கு வாய்மைகளை உனக்குக் கற்பிக்கிறேன்; அவற்றை உணர்ந்து கொண்டு, எட்டு முறைகள் அமைந்த அஷ்டாங்க மார்க்கத்தை நீ பின்பற்ற வேண்டும். அடைய தக்க இன்பங்களிலே தலைசிறந்த இன்பத்தை அடைவதற்காக உள்ளத்தைப் பயிற்சி செய்து வரும் பிக்குக்களின் சங்கத்திலே நீயும் சேருவதற்கு விரும்புகிறாயா” என்று பெருமான் வினவினார்.
இராகுலன் உள்ள உறுதியுடன், ‘ஆம், விரும்புகிறேன்!’ என்றான்.
அவனுக்கு மேற்கொண்டு பிறவியில்லை என்பதை உய்த்துணர்ந்த பெருமான், சாரீபுத்திரரை அழைத்து, இராகுலனுக்கு உபதேசம் செய்து, சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார். அவ்வாறே இராகுலன் சுமார் ஏழு வயதிலேயே துறவு வாழ்க்கையை மேற்கொண்டான்!
பிற்காலத்தில் போதிவேந்தரின் முக்கியமான சீடர்களில் இராகுலனும் ஒருவனாகக் குறிப்பிடப் பெற்றிருக்கிறான். அவன் தெளிந்த சிந்தனையும் தேர்ந்த ஞானமும், உயர்ந்த ஒழுக்கமும் பெற்று விளங்கினான். அத்தகைய உயர் நிலையை அடைவதற்கு முன்னால், போதி நாதர் அவனைத் தம் அருகிலே வைத்துக் கொள்ளாமல், வெகு தூரத்திலுள்ள விகாரையிலே தங்கி விநய ஒழுக்கங்களை நிறைவேற்றி வரும்படி உபதேசித்திருந்தார். அப்படியிருந்தும், அவன் நாவடக்கமின்றிப் பிக்கு ஒழுக்கத்தில் நிலைபெறாமல் இருப்பதாகக் கேள்வியுற்று, பெருமான் ஒருமுறை அவனைக் கண்டு அறவுரை புகன்ற விவரம் ‘மகாராகுல சூத்திர’த்தில் காணப்பெறுகின்றது. சத்தியத்தின் மகிமையையும், நாவடக்கத்தின் நயத்தையும், நாவினால் பொய் கூறுதல் உள்ளத்தை எவ்வாறு பாழாக்குகின்றது என்பதையும், அதனால் வாழ்வே தாழ்வடையும் என்பதையும் பகவர் அந்தச் சூத்திரத்திலே அமைத்துக் கூறியுள்ளார்.
பகவர் அவன் இருந்த விகாரைக்குச் சென்று அவனை ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து தம் பாதங்களைக் கழுவும்படி கூறினார். அவன் அவ்வாறே செய்தான். அழுக்கு நீர் இருந்த பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, ‘இதிலுள்ள தண்ணீர் குடிக்கத்தக்கதா?” என்று பகவர் கேட்டார். ‘இல்லை!’ என்றான் இராகுலன்.
அப்போது பகவர் சொன்னார் : ‘உன் விஷயத்தை இப்பொழுது எண்ணிப் பார்! நீ என் குமாரனாயிருந்தும், ஒரு மன்னரின் பேரனாயிருந்தும், தானாக யாவற்றையும் துறந்த சிரமணனாயிருந்தும், உன் உள்ளம் அசுத்தமாகாதபடி உன் நாவைப் பொய்யுரையிலிருந்து காத்துக்கொள்ள உன்னால் முடியவில்லையே!’
தண்ணீரை வெளியே கொட்டிய பிறகு, பகவர் மீண்டும், ‘இந்தப் பாத்திரம் குடி தண்ணீர் வைக்கத் தகுதி யுள்ளதா?’ என்று கேட்டார்.
‘இல்லை , பகவரே, பாத்திரமும் அசுத்தமாகி விட்டது!’ என்றான் இராகுலன்.
அப்போது பகவர் சொன்னார் : ‘உன் விஷயததை இப்பொழுது எண்ணிப்பார்! நீ சீவர ஆடை அணிந்திருப்பினும், நீ இந்தப் பாத்திரத்தைப் போல, அசுத்தமாகி விட்டபின், உயர்ந்த காரியம் எதற்கும் நீ தகுதி யுள்ளவனா?’
பிறகு காலிப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பகவர் அதை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தார். ‘இது கீழே விழுந்து உடைந்துவிடுமே என்று உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?’ என்று கேட்டார்.
‘இல்லை, இந்தப் பாத்திரம் மிக மலிவானது; இது உடைந்தால் அந்த நஷ்டமில்லை!’ என்றான் குமரன்.
அப்போது பகவர் சொன்னார்: ‘உன் விஷயத்தை இப்போது எண்ணிப் பார்! எல்லையற்ற பிறவிகள் என்னும் சுழலிலே உன் உடல் சிக்குண்டு சுழன்று வருகிறது; உன் உடலும், மற்ற உடைந்து சிதறும் பொருள்களைப் போலவே, அதே பொருள்களால் ஆக்கப் பட்டிருக்கின்றது. ஆதலால் அது உடைந்து விட்டால், அதிகச் சேதமில்லை. பொய்கள் பேசும் இயல்புடையவன் ஞானிகளால் வெறுத்து ஒதுக்கத்தக்கவன்.’
இராகுலனுக்கு வெட்கம் அதிகமாகி விட்டது. பகவர் மீண்டும் அவனுக்குப் போதிக்க ஆரம்பித்து ஓர் உபதேசக் கதை கூறினார்;
‘ஓர் அரசனிடம் வல்லமையுள்ள யானை ஒன்றிருந்தது; அது ஐந்நூறு சாதாரண யானைகளைத் தனியே எதிர்த்து நிற்கும் ஆற்றலுள்ளது. அந்த யானை போருக்குச் செல்லுகையில், அதன் தந்தங்களில் கூர்மையுள்ள நீண்ட வாள்களைக் கட்டுவார்கள்; கால்களில் ஈட்டிகளைக் கட்டுவார்கள்; வாலில் ஒரு இரும்புக் குண்டைக் கட்டுவார்கள். யானைப்பாகன் ஆயுதங்களோடு விளங்கும் யானையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைவான். அதன் துதிக்கையில் அம்புப் பட்டுச் சிறு புண் ஏற்படினும், அதன் உயிருக்கு அபாயம் என்பதை உணர்ந்து, அவன், யானை தன் துதிக்கையை நன்றாகச் சுருட்டிக் கொண்டிருக்கும்படி பழக்கி வைத்திருந்தான். ஆனால் போர்க்களத்திலே அந்த யானை ஒரு வாளைப் பற்றுவதற்காகத் துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. பாகன் மனத்திலே கலவரமடைந்து, அரசனிடம் கலந்து பேசினான். மேற்கொண்டு அந்த யானை போருக்கு ஏற்றதன்று என்று அவ்விருவரும் முடிவு செய்தனர்!
‘இராகுலா! மனிதர்கள் மட்டும் தங்கள் நாக்குக் களைக் காத்துக் கொண்டால் போதும்; எல்லாம் நலமாக முடியும்! போர் புரியும் யானை தன் துதிக்கையில் அம்பு பாயாமல் கவனித்துக் கொள்வதுபோல், நீயும் உன்னைக் காத்துக் கொள்வாயாக!
‘சத்தியத்தின் மீதுள்ள அன்பினால் உண்மையானவர்கள் நீதி முறையில் வழுவாமல் நிற்கின்றனர். நன்கு பழக்கப்பெற்று அமைதியாயிருக்கும் யானை தனது துதிக்கையை மிதித்துக்கொண்டு மன்னர் ஏறுவதற்கு இணங்கி அடக்கமாயிருக்கும். அதைப்போல், நீதி ஒழுக்கத்தைப் பேணும் மனிதனும், தன் வாழ்வு முழுவதும் அடக்கத்துடன் நேர்மையாகக் கழித்துவிடுவான்.’
இந்தச் சொற்களைக் கேட்ட இராகுலனுக்கு ஆழ்ந்த துக்கமுண்டாயிற்று. இதன் பிறகு அவன், குறைகூறவே இடம் இல்லாதபடி, ஆர்வத்தோடு முயற்சி செய்து, புனித வாழ்வு வாழ்ந்து வரலானான்.
தந்தன்
சுத்தோதன மன்னரின் இரண்டாவது மைந்தரின் பெயர் நந்தன். மகாராணி கௌதமி சித்தார்த்தரைக் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்த்த பின்பு பெற்ற குலக்கொழுந்து அவன். சித்தார்த்தர் வனம் புகுந்த பின்பு, யாவரும் அவனையே இளவரசாகக் கருதிவந்தனர். அழகிலே அவன் மன்மதனைப் போலிருந்ததால் அவனுக்குச் சுந்தர-நந்தன் என்று பெயர் வந்தது. புத்தர் பெருமான் கபிலையம்பதியில் தங்கியிருக்கும்போதே அவனுக்குத் திருமணம் நடந்தது; அதே நன்னாளில் அவனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டப்பெற்றது நாட்டை ஆள்வதற்கும், தமக்குப் பின்பு தமது வமிசத்தின் பெயரைப் புகழுடன் நிலை நிறுத்தவும், சுத்தோதனர் அவனையே நம்பிக் கொண்டிருந்தார். புத்தர் அவனையும் பிக்குவாகச் செய்து, சங்கத்தில் சேர்த்துக் கொண்டு விட்டார்.[7]
இளங்குமரனான இராகுலனும், நந்தனும் துறவிகளாகி விட்டதில் சுத்தோதனர் அடைந்த வருத்தத்திற்கு அளவேயில்லை. ஆயினும் புத்தருக்கு எதிராக அவர் எதையும் செய்ய இயலாதவராயும் இருந்தார். எனவே அவர் போதி வேந்தரைக் கண்டு, ‘இனியாவது இளைஞர்களைப் பெற்றோருடைய சம்மதமில்லாமல் சங்கத்திலே சேர்க்காமலிருக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார். ஐயனும் உடனே அதற்கு இசைந்தார்.
ஆனந்தன்
அரச குலத்தைச் சேர்ந்தவர்களில் அடுத்தாற்போல் பௌத்த தருமத்தை ஏற்றுக்கொண்டு பிக்குவானவர்களிலே முதன்மையானவன் ஆனந்தன்.[8] அவன் சுத்தோதனருடைய தம்பி அமிர்தோதனருடைய குமாரன். அவன் புத்தருடைய பிரதமசீடனாவான் என்று குழந்தைப் பருவத்திலேயே சோதிடர் கூறியிருந்தனர். ஆகவே புத்தர் தலைநகருக்கு வந்திருந்த சமயத்தில், அமிர்தோதனர் ஆனந்தனைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார்.
ஆயினும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளையும், மங்கையர்களிடமிருந்து, கணவர்களையும், குடும்பங்களிலிருந்து தலைவர்களையும் பிரிப்பதற்காகவே அவதரித்துள்ள புத்தர் பிரான் ஆனந்தனை விடவில்லை. ஒரு நாள் அமிர்தோதனருடைய மாளிகையின் தாழ்வாரத்திற்குப் போய் அவர் அங்கே அமர்ந்து கொண்டார். அவ்வமயத்தில் அவர்களைப்போடிருந்ததைத் தன் அறையிலிருந்து கண்ட ஆனந்தன், மெதுவாக வெளியே வந்து, ஒரு விசிறியைக் கொணர்ந்து ஐயன் அருகில் நின்று விசிற ஆரம்பித்தான். காந்தத்தைக் கண்ட இரும்பு போல் அவன் உள்ளம் பகவர்பால் சென்று விட்டது, சோதிடர் சொல்லியிருந்த கூற்று மெய்யாகி விட்டது!
பகவர் அவனுக்கு உபதேசம் செய்தார். அவர் புறப்பட்டுச் செல்லும் போது ஆனந்தனும் கூடவே புறப்பட்டு விட்டான். அப்போது மாளிகைக்கு வெளியே வந்த அமிர்தோதனர் ஆனந்தனை அழைத்தார் அவன் திரும்ப மனமின்றித் தயங்கினான்; தான் துறவு பூணுவதற்கு அனுமதி வேண்டினான். அமிர்தோதனர் முதலில் மறுத்த தாயும் பின்னால் தமது சகோதரர் சுத்தோதன மன்னரின் ஆலோசனையின் பேரில், மனமுவந்து அனுமதியளித்த தாயும் ஒரு கதை உண்டு. சுத்தோதனர், ‘நாம் அனுமதி கொடுக்காவிட்டாலும் நம் பிள்ளைகள் துறவிகளாவது நிச்சயம்; அவர்கள் தந்தையின் சொல்லைத் தட்டியவர்கள் என்று பெயர் வராமல், நாமாகவே அனுமதியளித்து விடுதல் நலம்!’ என்று கூறினாராம்.
ஆனந்தன் பெருமானின் அழைப்புக்குப் பாத்திரமான அருமைத் தொண்டன். பெருமானிடத்தில் அவன் கொண்டிருந்த அன்புக்கும் அவதியில்லை.[9] அவன் ஒழுங்கு நிலை நின்று, ஐயன் அறவுரைகள் கூறும்போதெல்லாம் ஆர்வத்தோடு அவைகளைக் கேட்டு வந்தான். பிற்காலத்தில் பெருமானுடைய ஐம்பதாவது வயதிலிருந்து அவருடைய ஆயுள் முழுவதும் அவர் அருகிலேயேயிருந்து அவருக்குத் தொண்டு செய்யும் அணுக்கத் தொண்டனாக விளங்கியவன் ஆனந்தனே. பின்னால் நெடுநாள் பிக்குவாயிருந்த அவனை ‘ஆனந்த தேரர்’ என்றே அழைப்பது வழக்கம். புத்தருடைய பிரதம சீடர்களிலே மகாகாசியபர், சாரீபுத்திரர் போன்ற பேரறிவும், மௌத்கல்யாயனர் போன்ற இருத்தி ஆற்றிலும், கேட்டவுடன் மனத்தால் பற்றி உணர்ந்து கொள்ளும் அஞ்ஞாத கௌண்டின்யரைப் போன்ற உறுதியும் ஆனந்தனுக்கு இல்லை எனினும், அவன் மெய்யறிவு, பெற இடைவிடாது உழைத்து வந்தான். இடையிடையே உலக பாசங்கள் ஏற்பட்டு அவன் சித்தம் தடுமாறுகையில், ஐயன் அதைக் கருத்தால் உணர்ந்து, அவ்வப்போது அவனுக்கு உதவி புரிந்து, அறிவு புகட்டி வந்ததாக விவரிக்கும் கதைகள் பல இருக்கின்றன. மொத்தத்தில், புத்தர் பெருமானின் திரு நாமத்தை நினைக்கும் போதெல்லாம் அதனுடன் ஆனந்தனுடைய நினைவும் தோன்றும்படி, அவன் ஐயனின் நிழல்போல அவர் வாழ்க்கை முழுவதும் அவரோடு இணைபிரியாமல் இருந்து வந்தான். மேலும் இன்று உலகத்திலே பௌத்த தருமத்தைப்பற்றி விளக்கும் முக்கியமான் சூத்திரங்கள் அடங்கிய ‘சுத்த பிடகம்’ மகா காசியபர் தலைமையில் ஆனந்தன் வரிசைப்படுத்திக் கூறிய வரலாறுகளும் உபதேசங்களும் அடங்கிய நூலாகும். மகாகாசியபரும் மற்றைத் தோழர்களும் அவைகளைச் சரி பார்த்து ஏற்றுக்கொண்டபின், அவைகள் குறித்து வைக்கப்பெற்றன.
அரசகுலக் குமரர்கள்
சித்தார்த்தர் அவதரித்த காலத்திலேயே சாக்கியகுலத் தலைவர்கள் தங்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வீரன் வீதம் அவருக்குத் தொண்டு செய்ய அனுப்புவதாகச் சபதம் செய்து கொண்டிருந்தனர். அவர் அரசராக இருந்து ஆட்சி செய்தால், அந்தச் சாக்கிய இளைஞர்கள் அரசசேவை புரிய வேண்டும் என்றும், அவர் துறவி யானால் அவர்களும் துறவிகளாகி அவரைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்திருந்தனர். ஏனெனின் சித்தார்த்தர் பிறந்ததிலிருந்தே அவர் அடைவது அரசா, துறவா என்பது நிச்சயமில்லாதிருந்தது. முன்னால் குடும்பத் தலைவர்கள் செய்திருந்த உறுதிப்படி, ஆயிரக்கணக்கான சாக்கிய வாலிபர்கள். பிக்குக்களாகி ஐயனைச் சரணடைந்தனர்; எண்பதினாயிரம் பேர்கள் என்று பழைய நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது!
மற்றைக் குடும்பத்தாரைப் போலவே சுத்தோதனருடைய மற்றொரு சகோதரரான துரோணோதனரின் மைந்தர்களான அனுருத்தனும் மகாநாமனும்[10] தமக்குள் யார் பிக்குவாக வேண்டும் என்பது பற்றி யோசித்தனர். முடிவில் அனுருத்தன் அதற்கு இசைந்து, அன்னையிடம் சென்று அனுமதியும் பெற்றான்.
அனுருத்தனுடன் சித்தார்த்தருடைய மைத்துனனான தேவதத்தனும்;[11] பத்திரிகன், பகு, கிம்பிலன் முதலிய அரச குலக்குமரர்களும் துறவு பூணுவதற்காகப் புத்தரை நாடி நியக்குரோத வனத்திற்குச் சென்றனர். அவர்களுக்குத் தலைகளை முண்டிதம் செய்வதற்காக அரண்மனை நாவிதனான உபாலி என்பவனும் அவர்களுடன் சென்றான்.
தவப்பள்ளியை அடைந்ததும் அரச குமாரர்கள் தலைகளை மழுங்கச் சிரைத்துக் கொண்டு குளிப்பதற்குச் சென்றனர். போகுமுன் அவர்கள் தங்கள் ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி உபாலியிடம் கொடுத்திருந்தனர்.
உபாலி யோசித்தான்: ‘அரச வமிசத்தைச் சேர்ந்த கட்டிளங் காளைகளே இரத்தின ஆபரணங்களையும், உடைகளையும் தூர எறிந்துவிட்டுத் துறவு பூணச் செல்கிறார்கள்! நான்மட்டும் இந்தத் துன்பச் சுமைகளைச் சுமந்துகொண்டிருப்பதில் என்ன பயன்?, பாவியேன் இழி குலத்தில் தோன்றியிராவிடின், இதற்குள் புத்த பகவரின் - மேன்மையான தருமத்தை ஏற்றுக்கொண்டு துறவியாகி, என் பிறவிப் பிணியை ஒழித்திருப்பேனே!’ இவ்வாறு ஏக்கமுற்று, அவன் பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கு வந்த சாரீபுத்திரர் அவனைக் கண்டு, அவன் சிந்தையையும் உணர்ந்துகொண்டு, ‘உபாலி ஏன் சோகமுற்று நிற்கிறாய்!’ என்று வினவினார். உபாலி தன் உள்ளக் கருத்தை உரைத்தான். அவர் அவனைக் கருணை வள்ளலிடம் அழைத்துச் சென்றார்.
‘இங்கே வா, பிக்கு! வந்து பரிசுத்த வாழ்க்கையை மேற்கொள்வாயாக!’ என்று அண்ணல் பரிவுடன் வரவேற்றார். அந்தக் கணத்திலேயே உபாலி, தலை முடி இழந்து. கையில் திருவோட்டுடன், காவியுடையில் பிக்குவாக மாறிக் காட்சியளித்தான்!
சாக்கிய இளைஞர்கள் நீராடித் திரும்பிவந்து ஐயனைத் தரிசிக்கையில், அவர் அருகில் உபாலி பிக்குவாக அமர்ந்திருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். அவர்கள் தீக்கை பெறுகையில், பிக்குவான அவனையும் வணங்க நேர்ந்தது பற்றி அவர்கள் சிறிது மனக்கசப்பு அடைந்ததாகத் திபேத்திய வரலாறு கூறுகின்றது. போதிநாதரும், அவர்கள் எல்லோரிடத்திலும் முழு நம்பிக்கை கொள்ளாமல், சந்தேகத்துடனேயே அவர்களைச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார்.
அன்று சங்கத்தில் சேர்ந்த பிக்குக்களிலே அனுருத்தன் முதன்மையானவன். அதுவரை அவன் சித்தார்த்தரைப் போல மூன்று அரண்மனைகளிலே சுகமாக வசித்து வந்தவன். அவன் தத்துவ நூல் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கியதால், பின்னால் பௌத்த தரும வளர்ச்சிக்கு அவன் பெருந்துணையாக விளங்கினான்.
தேவதத்தன் பொறாமைக் குணமுள்ளவன். கிறிஸ்து நாதருக்கு யூதாஸ் என்ற துரோகி வாய்த்ததுபோல; அவன் போதி நாதருக்கு வாய்த்திருந்தான். அவனால் பிற் காலத்தில் அவருக்கும் தருமத்திற்கும் பல கேடுகள் விளைந்தன.
நாவிதன் என்று மற்ற இளவரசர்களால் முதலில் இகழப்பெற்ற உபாலியே பின்னால் பெரிய மேதையாக விளங்கி, புத்தர் பெருமான் சங்கத்திற்கும் பிக்குக்களுக்கும் விதித்திருந்த ஒழுக்க விதிகளையெல்லாம் தொகுத்து ‘விநய பிடகம்’ என்ற நூலைத் தயாரிக்கக் காரணனாயிருந்தான்.
இவ்வாறு, முன்னால் ஓர் இளவரசர் துறவு பூண்டதற்காக வருந்திக் கொண்டிருந்த கபிலையம்பதி, புத்தருடைய விஜயத்தால், துறவிகளின் பெரு நகரமாக மாறி விட்டது. கண்ட இடமெல்லாம் காஷாய உடைகள்! திரும்பிய இடமெல்லாம் திருவோடுகள் ! பார்த்த இடமெல்லாம் பிக்குக்களின் திருக்கூட்டம்!
- ↑ நியக்குரோத வனம்– ஆலமரங்கள் அடர்ந்த சோலை.
- ↑ இரட்டைப்பட்ட இந்த இருத்தியை ‘யமக-பாதி ஹாரியம்’ என்பர்.
- ↑ பரதுக்க துக்கர்-பிறருடைய துக்கத்திற்காகத் தாம் வருந்துபவர்.
- ↑ ‘The Light of Asia-'By sir Edwin Arnold. உலகப் புகழ் பெற்ற கவிவாணர் எட்வின் ஆர்னால்ட் பொதுவான புத்தருடைய உபதேசங்களைத் தொகுத்து அளித்துள்ளார். அவைகளிலே மிக முக்கியமானவை இங்கே குறிக்கப்பெற்றுள்ளன
- ↑ சம்சார சக்கரம் - ஜனன மரண வளையம்.
- ↑ கோறல்- கொல்லுதல்
- ↑ நந்தன் பிக்குவான விவரத்தை அடுத்த இயலில் காண்க.
- ↑ ஆனந்தன் சுக்கிலோதனருடைய புதல்வன் என்றும், அவனும் தேவதத்தனும் உடன் பிறந்த சகோதரர்கள் என்றும் சில வரலாறுகள் கூறும். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் இவ்வாறே குறித்துள்ளார்கள்.–'புத்தர் சரித்திரம்’
- ↑ அவதி–எல்லை.
- ↑ அனுருத்தன் அமிர்தோதனர் மைந்தன் என்றும் கூறுவர். மொத்தத்தில், அரச குமாரர்களின் வரலாறு பற்றி நூல்களிலே பெருங் குழப்பமே காணப்படுகின்றது.
- ↑ தேவதத்தனும் சுக்கிலோதனருடைய புத்திரன் என்றும் கூறப்படும்.