உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/அநாத பிண்டிகர்

விக்கிமூலம் இலிருந்து

பன்னிரண்டாம் இயல்

அநாத பிண்டிகர்


‘அருளாழி நயந்தோய் நீஇ !
அறவாழி பயந்தோய் நீஇ !
மருளாழி துறந்தோய் நீஇ !
மாதவரில் மாதவன் நீஇ !
வானவருள் வானவன் நீஇ !
போதனரில் போதனன் நீஇ!
புண்ணியருள் புண்ணியன் நீஇ !

–வீரசோழியம் உரை

செல்வம் கொழித்துக் கொண்டிருந்த சிராஸ்வதி நகரில் திரைகடலோடித் திரவியம் தேடிய பெருந்தனிகர்கள் சிலர் இருந்தனர். சுதத்தர், மிருகாரர் முதலிய இந்த வணிகர்கள் இந்திய நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பொருள்களை அனுப்பி வாணிபம் செய்து வந்ததில், பொன்னும், வெள்ளியும், மணிகளும் அந்நகரிலே குவிந்து கொண்டிருந்தன. சமுதாயத்திலே பிராமணர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் அடுத்தபடியாக, அக்காலத்தில் இத்தணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில் சுதத்தர் கோடீச்வரர். இராஜகிருகத்திலிருந்த சூலர்[1] என்ற கோடீச்வரரின் சகோதரியை அவர் மணந்திருந்தார். அதனாலும், தொழில் காரணமாகவும் அவர் அடிக்கடி மைத்துனர் ஊருக்குச் சென்று வருவார். அங்கே அவருக்கு அரசர்க்கு உரிய உபசாரங்கள் நடப்பது வழக்கம்.

அவருடைய இயற்பெயர் சுதத்தர் என்றிருந்த போதிலும், எல்லோரும் அவரை அநாத பிண்டிகர் என்றே அழைத்து வந்தனர்.[2] அநாதைகளை ஆதரித்து அமுதளித்தும், ஏழைகளுக்கு எண்ணிறந்த உதவிகள் செய்தும், அவர் வரையாது அளிக்கும் வள்ளலாக விளங்கியதால், அவர் வாழ்க்கை முழுவதும் இந்தப் பெயரே நிலைத்திருந்தது. திருமுறைகளிலும் இலக்கியங்களிலும் இப் பெயரே பொறிக்கப் பெற்றுவிட்டது.

அவர் புத்தரை முதல் முறை சந்தித்த விவரம் ‘விநய பிடக'த்தில் அழகாக விவரிக்கப் பெற்றுள்ளது.

அநாத பிண்டிகர் ஒரு சமயம் இராஜகிருகத்திற்குச் சென்றிருக்கையில், அவர் மைத்துனர் மாளிகையில் பணியாளர்களும் அடிமைகளும், ஓய்வொழிவு இல்லாமல், ஓடியும் சாடியும் வேலை செய்து கொண்டிருந்தனர். மைத்துனரான கோடீச்வரர் அவர்களுக்கு ஆணைகளிட்டு, ‘நாளை அதிகாலையில் எல்லோரும் எழுந்திருந்து பக்குவ மான உணவுகளும், கறிகளும், இனிப்புப் பண்டங்களும் விரைவாகத் தயாரிக்க வேண்டும்!’ என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அநாத பிண்டிகரை யாரும் கவனித்து வரவேற்கக் கூட முடியவில்லை. அந்த மாளிகையில் திருமணம் ஏதேனும் நடக்கப் போகின்றதோ, அல்லது ஒருவேளை பிம்பிசார மகாராஜருக்கு விருந்து. ஏற்பாடாகின்றதோ என்று அவர் எண்ணினார்.

அவருடைய மைத்துனர் பணியாட்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையெல்லாம் கூறிவிட்டு, வெகு நேரத்திற்குப் பிறகு, அவரிடம் வந்து அமர்ந்து கொண்டு, அவர் உடல்நலம் முதலியவைபற்றி விசாரிக்கலானர். பேச்சின் நடுவில் அவர், ‘இங்கு திருமணம் எதுவும் நடக்கவில்லை ; மகாராஜரும் வரவில்லை. இந்நகரில் வேணு வனத்திலே தங்கியிருக்கும் புத்தர் பெருமான் பிக்குக்களுடன் நாளை இங்கே அமுது செய்ய இசைந்திருக்கிறார். அதற்காகவே ஏற்பாடுகள் நடக்கின்றன!’ என்று கூறினார்.

‘புத்தரா? புத்தர் என்றுதானே சொன்னீர்?’ என்று வியப்புடன் வினவினார் அநாத பிண்டிகர்.

‘ஆம், புத்தரே!’

அப்பொழுதும் அநாத பிண்டிகர் நம்பால், மீண்டும் இருமுறை தமது கேள்வியைக் கேட்டு, உண்மையைத் தெரிந்து கொண்டார். சாட்சாது புத்தரே!

‘உலகத்திலே “புத்தர்” என்ற திருப் பெயரின் ஒலி கூடக் கேட்பதில்லையே! புத்தர்! இப்பொழுது நான் உடனே சென்று போதியடைந்த அந்தப் புனிதரை-புத்தரை-நேரில் தரிசனம் செய்ய முடியுமா?”

“இப்பொழுது சரியான சமயமில்லை. நாளை அதிகாலையில் சென்று தரிசிக்கலாம்!”

அநாத பிண்டிகர் உணவருந்திவிட்டுப் படுத்துக் கொண்டார். இரவெல்லாம் மறு நாள் காலையில் கலைகட்கெல்லாம் நாதரான கருணை வள்ளலைக் கண்களால் கண்டுகளிப்பதைப் பற்றியே அவர் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். இடையில், இரவிலேயே பொழுது விடிந்துவிட்டது என்று கருதி, இரண்டு முறை எழுந்திருந்து பார்த்தார். மாளிகையைச் சூழ்ந்து இருட்போர்வையே போர்த்தியிருந்தது. ஆயினும் மூன்றாவது முறை எழுந்ததும், இருளிலேயே அவர் நேராக வள்ளல் வசித்து வந்த வனத்தை நோக்கிப் புறப்பட்டார்.

புத்த தரிசனம்

நகரின் கோட்டையைத் தாண்டி வெளியே செல்கையில், திடீரென்று தாரகைகளின் ஒளியும் மங்கி விட்டன. முன்னும், பின்னும், நாலு புறத்திலும், ஒரே இருட்பிழம்பாக இருந்தது. கங்குலில் தோன்றும் கலவரங்கள் அவர் உள்ளத்தைக் கலக்கின; மயிர்கூச் செறிந்து அவர் திகிலுடன் நின்று விட்டார்.

அப்போது அசரீரியின் இனிய ஒலி ஒன்று கேட்டது.

‘நாலு யானைகள், நூறு குதிரைகள், நாலு காளைகள் பூட்டிய நூறு தேர்கள், நகைகள் அணிந்த நூறாயிரம் நங்கையர் ஆகிய அனைத்தையும் ஒருவன் பெறுவதாக வைத்துக் கொண்டால், இலட்சியத்தை அடையும் பாதை யில் ஓர் அடி எடுத்து வைப்பதில் கால் பகுதியில் கால் பகுதிக்குக் கூட அவை அனைத்தும் இணையாகா!......... தொடர்ந்து நடந்து முன்னே செல்வீராக!’

அநாத பிண்டிகர் மன உறுதி கொண்டு மேலும் நடக்கலானார். உடனே எங்கணும் ஒளி உண்டாயிற்று, அவரும் விரைவில் வேணு வனத்தை அடைந்தார்.

பொருள் வள்ளலும் அருள் வள்ளலும்

பகவர் பொழுது விடியுமுன்பே எழுந்திருந்து, திறந்த வெளியிலே உலாவிக் கொண்டிருந்தார் சாந்தி தவழும் சோலையிலே சாந்தி நிறைந்த உள்ளத்துடன் நடந்த வண்ணம் ஐயன் தொலைவில் வரும் வள்ளலைக் கண்டு, அருகே தமக்கென்று அமைக்கப்பெற்றிருந்த ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டார். அநாத பிண்டிகரும் அருகே வந்தார். ‘வருக, சுதத்தா! வருக!’ என்று அண்ணல் அன்போடு அழைத்தார்.

அண்ணல் தமது இயற்பெயரை அறிந்து கூறியதைக் கண்டு அநாத பிண்டிகர் ஆச்சரியமடைந்தார். உடமே தமது நெடிய உருவத்தை நிலத்தின் மீது கிடத்தி வணங்கி யெழுந்து, ‘ஐய, கங்குற்பொழுது இனிதாய்க் கழிந்ததோ?’ என்று குசலம் விசாரித்தார்.

‘ஞானி எப்போதுமே இன்புற்றிருக்கிறான். ஞானி! இருள் வழியை நீக்கி ஒளி வழியில் செல்வன். வீட்டை விட்டு, விரும்புதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன்பத்தில் அவன் திளைத்துக் கொண்டிருப்பான். அவள் உள்ளம் வேதனை நீங்கி எப்போதும் சாந்தி பெற்றுத் தழைத்து நிற்கின்றது!’ என்று பகவர் பதிலுரைத்தார்.

பகவர் அவருடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். தானம், தருமம், சுவர்க்கம், ஒழுக்கம், துறவு. ஆசாபாசங்கள் முதலிய பல விஷயங்களைப் பற்றித் தேன் மழை பொழிவது போல அவர் பொழிந்து கொண்டிருந்த இன்சொற்களைச் சிராவஸ்தி வள்ளல் இன்னமுது என்று பருகிக் கொண்டிருந்தார்.

‘புத்தர் என்ற பெயரைக் கேட்டதும் நீ உள்ளம் களித்து ஓடி வந்தாய். ஏனெனில், முந்திய பிறவிகளிலே நீ செய்த புண்ணியத்தின் பலனால். உன் உள்ளம் பண்பட்டிருக்கிறது. உள்ளே பணிவு, வெளியே வரையில்லா மல் அள்ளக் கொடுக்கும் கொடை–இவற்றால் உன்னிடம் தருமம் பெருகி நிலைத்திருக்கின்றது!’ என்று புத்தர் பாராட்டினார்.

அநாத பிண்டிகர் தம் வரலாற்றையும் அவருக்கு எடுத்துரைத்தார்.. சிராவஸ்தி பற்றியும், பார்த்திபர் பிரசேனஜித்தைப் பற்றியும், ஏழைசளுக்குத் தாம் செய்து வரும் ஊழியம் பற்றியும் அவர் கூறினார்.

புத்தர் பெருமான் அவருடைய தூய சிந்தையையும்’ வள்ளண்மையால் அவர் தருமத்தைக் கொள்ளை கொள்ளையாகச் சேர்த்து வருவதையும் அறிந்து, அவர் செய்து வருவதே உண்மையான ஈகை என்று புகழ்ந்துரைத்தார். பயன் கருதாமல், புகழை விரும்பாமல், அவர் செய்து வரும் தருமத்தால், பயனும் புகழும் பெருகி நிற்பதைச் சுட்டிக் காட்டினார்.

‘நெருப்புப் பற்றிய பொக்கிஷத்தில் மிஞ்சியிருப்பவைகளை அள்ளியெடுப்பது போல், பிறருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுக்க வேண்டும்!’ என்றும், ‘செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தையே மூட்டை கட்டிச் சேர்த்து வைத்து, முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்!’ என்றும், ‘தானம் செய்பவன் உள்ளக் களிப்புடன் அமைதி பெறுகிறான்; அவனுக்குக் கவலையு மில்லை, சஞ்சலமுமில்லை’ என்றும், அவர் ஈகையின் பெருமைகளை வியந்துரைத்தார்.

பிறகு, தமது விருந்தினரின் உள்ளம் கனிந்து பக்குவமாயிருக்கும் நிலையை அறிந்து, பகவர், ‘எல்லார்க்கும் செல்வத்தை அளிக்கும் உனக்கு நான் அருளறத்தை அளிக்கிறேன்!’ என்று சொல்லி, அவருக்ருத் தரும உபதேசம் செய்தார். நான்கு உயரிய உண்மைகள் பற்றியும், ஆசைகளை அகற்றி மனச்சாந்தி பெறும் மார்க்கம் பற்றியும் உபதேசித்து, சுவர்க்கம் கிடைப்பதாயினும் அதை விரும்பாமல், பிறவியற்ற பெருவாழ்வாகிய நிருவாண முக்தியையே நாட வேண்டும் என்று வழி காட்டினார். எல்லாம்வல்ல ஆண்டவன் உலகையும் உயிர்களையும் படைத்து விட்டார் என்றார், உலகும் உயிர்களும் செய்யும் செயல்களுக்கும், அனுபவிக்கும் துயர்களுக்கும் அவனே பொறுப்பாளியாகிறான் என்றும், அதனால் தனி மனிதர்கள் கடமையோ, ஒழுக்கமோ, முயற்சியோ இல்லாமல், ‘எல்லாம் அவன் செயல்!’ என்று இருந்துவிட நேரும் என்றும், சொந்த இயற்கையினாலே ஜீவன்கள் தாமாகத் தோன்றின என்றால், உலகில் ஒவ்வொரு விஷயமும் காரண–காரியத் தொடர்புடன் நிகழ்ந்து வருகையில், அவை மட்டும் காரணமின்றித் தாமாகத் தோன்றின என்று கருதல் தவறு என்றும் பல தத்துவங்கள் பற்றியும் பகவர் விரிவாக எடுத்து விளக்கினார்.

அநாத பிண்டிகரின் அகத்தில் ஞானவிளக்கு நன்கு ஒளிவிட ஆரம்பித்தது. அவர் பௌத்த தருமத்தின் இயல்பை அறிந்து கொண்டார். தூய்மையான வெள்ளைத் துகிலில் சாயம் உடனே பற்றிக் கொள்வது போல், அறவுரை அவர் இதயத்தைப் பற்றிக் கொண்டதாம்! ஆயினும் அவர் அடைய வேண்டிய ஞானம் ஒரு துளி மட்டும் எஞ்சியிருந்ததாயும் அது அவர் பின்னால் புத்தருக்கும் பிக்குக்களுக்கும் விகாரை அமைத்து அர்ப்பணம் செய்யும் போது பூர்த்தியாயிற்று என்றும் நூல்கள் கூறுகின்றன.


‘போதிமூலம் பொருந்திய சிறப்பின்
நாதன்பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவிதோறும் மறவேன்’

[3]

என்ற முறையில் உறுதி பூண்டு, அநாத பிண்டிகர் அருள் நெறி காக்கும் செல்வரை வணங்கி, புத்த, தரும, சங்கம் என்னும் மும்மைச் சரணங்களையும் மொழிந்து, தம்மை ஏற்றருளுமாறு ஐயனை வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஐயனும் மனமிசைந்து, அவருக்கு ஆசி கூறினார்.

பின்னர் அநாத பிண்டிகர், போதிநாதரும், அடியார் திருக்கூட்டமும் மறுநாள் தாம் அளிக்கும் அமுதை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார்

பகவரும் மௌனத்தால் தமது இசைவை உணர்த்திய பின், அவர் விடைபெற்றுச் சென்றார்.

அன்று பகலில் அண்ணலுக்கும் அடியார்களுக்கும் விருந்தளித்த இராஜகிருக வள்ளல் தமது சகோதரியின் கணவரைப் பார்த்து, அவர் வந்த இடத்தில் என்ன செய்ய முடியும் என்றும், தாமே மறுநாள் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்வதாயும் கூறினார். அநாத பிண்டிகர் தாமே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டார்.

அதேபோல மறு நாள் விருந்து முறையாக ஏற்பாடாயிற்று. எல்லாம் தயாராயிருப்பதாகப் பகவருக்கும் காலையில் செய்தி கூறப்பட்டது. பகவரும் துவராடை பூண்டு, பிக்குக்கள் புடை சூழ, இராஜகிருகத்துக் கோடீச்வரரின் மாளிகைக்கு விஜயம் செய்தார். அநாத பிண்டிகர் அவர்களை அன்புடன் வரவேற்று, அனைவருக்கும் தாமே தம் கரங்களால் உணவு பரிமாறினார். எல்லோரும் அமுது செய்தபின், அவர் மருளறுத்த மாதவர் பக்கத்திலே போய் அமர்ந்து கொண்டு, ‘வருகிற மாரிக்காலத்தை ஐயன் சங்கத்தாருடன் சிராவஸ்தியிலே கழிக்க அருள் புரிய முடியுமா?’ என்று கேட்டார்.

பகவர், ‘ததாகதர்கள் தனிமையான இடத்தையே விரும்புவார்கள்!’ என்றார்; ‘அங்கே விகாரை எதுவும் இருக்கிறதா?’ என்றும் கேட்டார்.

அநாத பிண்டிகர் : இல்லையே, பெரும!

புத்தர்' : அத்தகைய இடம் இருந்தால் பிக்குக்கள் வரவும், போகவும், தங்கியிருக்கவும் வசதியாயிருக்கும்.

அநாத பிண்டிகர் : தாங்கள் வர இசைந்தாற் போதும். நானே விகாரையை அமைத்துத் தயாராக வைத்திருப்பேன்![4]

பின்னர் விகாரையின் அமைப்புப் பற்றி புத்தரிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய நுணுக்கமான விஷயங்கயும் அவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். பகவரும் மனமுவந்து விபரங்களைக் கூறினார். வர்ணச் சித்திரங்கள் எங்கெங்கு எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார். விகாரைக்கு வரும் பிணியாளருக்குச் சிகிச்சை செய்யும் அறைக்கு வெளிப்புறத்தில் ததாகதர் நோயாளருக்குத் தொண்டு செய்வது போன்ற சித்திரம் எழுத வேண்டும் என்றும், தாம் வந்து தங்கியிருக்கக் கூடிய ‘கந்தகுடி’ அறையின் முன்புறம், கையில் மாலை ஏந்திய ஓர் இயக்கனுடைய உருவம் எழுத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநாத பிண்டிகர், விரைவாக விகாரை கட்டுவதற்குத் தமக்கு ஆலோசனை கூறி உதவி புரிவதற்காக, சாரீபுத்திரரையும் அழைத்துக் கொண்டு செல்ல ஐயனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.

புறப்படுவதற்கு முன்பு, ‘மேற்கொண்டு நான் செல்வங்களை வைத்திருக்க வேண்டுமா, அல்லது நாணம் துறவு பூண வேண்டுமா? தாங்கள் இராஜ்யத்தையும் அரசுரிமையையும் துறந்து உலகுக்கு வழி காட்டியுள்ளீர்களே!’ என்று அவர் பகவரிடம் கேட்டார். பகவர் செல்வம் தானாகத் தீமை பயப்பதில்லை; அதிலே பற்று வைத்து அதனுடன் ஒட்டிக் கொள்வது தான் கூடாது! பற்றுக் கொண்டு உள்ளத்தை விஷமாக்குவதை விட, அதை உதறி விடுவதே நலம்!’[5] என்று கூறினார்.

அவர் ஊருக்குத் திரும்புகையில் வழியெங்கும், ‘போதி, மாதவர் சிராவஸ்திக்கு வருகிறார்!’ என்று ஊர் ஊராகத் தகவல் சொல்லி சாலையின் முக்கியமான இடங்களிலெல்லாம் பிக்குக்கள் தங்கி இளைப்பாறுவதற்கு ஏற்ற நிலையங்கள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்து கொண்டே சென்றார்.

சுத்தோதனரின் அழைப்பு

இராஜகிருகத்திலேயே புத்த பகவர் தங்கியிருந்த காலையில் அவருடைய அருமைத் தந்தையார் சுத்தோதன மன்னர் பல தூதர்களை அவரிடம் அனுப்பியிருந்தார். வந்தவர்கள் அனைவரும், அவரிடம் அறம் கேட்டுப் பிக்குக்களாகி, வேணுவனத்தின் மரங்களின் அடியிலே தியானத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். இவ்வாறு ஒன்பது முறை தூதர்களை அனுப்பி ஏமாந்துபோன மன்னர், கடைசியாக உதாயி என்ற புத்தருடைய வாலிபத் தோழனைத் தக்க பரிவாரங்களுடன் அனுப்பத் தீர்மானித்திருந்தார். புத்தர் ஞானமடைந்தவுடன் அவரைத் தரிசித்த திரிபுஷன், பல்லிகன் என்ற இரு வணிகர்களும் கபிலவாஸ்துவுக்குச் சென்ற சமயம் அவரைப் பற்றிய விவரங்களையெல்லாம் அரண்மனையிலேயே அரசருக்கும், யசோதரை முதலியோருக்கும் கூறியிருந்தனர். அதிலிருந்து எல்லோருக்கும் ஐயனின் திருமுகத்தை எப்போது காணலாம் என்ற ஆர்வம் துடித்துக் கொண்டிருந்தது. மன்னரும் தாம் உலகை விட்டுப் பிரியுமுன் தமது மைந்தரை ஒருமுறையாவது காணவேண்டும் என்று கருதினார். எனவே, ‘மற்றவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு நலம் பெறுகிறார்கள்; ஆனால், பெற்ற தந்தையும், உற்ற உறவினரும் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை!’ என்ற செய்தியுடன் அவர் உதாயியை இராஜகிருகத்திற்கு அனுப்பி வைத்தார்.

உதாயி புத்தர் பிறந்த அன்றே பிறந்தவன்; அவருடைய இணை பிரியாத் தோழன். ஆகவே, பகவருடைய அறிவுரைகளைக் கேட்டு மனம் மாறிய தூதர்களைப் போல் ஏமாறாமல், அவன் அவ்வுரைகள் தன் செவிகளுள் நுழையாதபடி பஞ்சு வைத்து அடைத்துக் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனைக் கண்டு, வந்த செய்தியைக் கூறிய பிறகு, அவனும் பிக்குவானான்.

சாலைகளிலும் சோலைகளிலும் மரங்களெல்லாம் வண்ண வண்ண மலர்களோடு ஒளிமயமாகத் திகழ்வதால், அந்த வசந்த காலத்திலேயே கபிலவாஸ்துவுக்குச் செல்ல வேண்டுமென்று அவன் ஐயனுக்கு நினைவுறுத்தினான். அவரும் அவ்வாறே செல்வதற்கு இணங்கினார். உதாயி அண்ணலின் வரவை அறிவிப்பதற்காக முன்னதாகச் சென்றான்.

விடை பெறுதல்

பெருமான் இராஜகிருகத்தை விட்டுப் புறப்படுமுன்பு, பிம்பிசாரர் தமது மைந்தன் அஜாத சத்துரு என்ற இளவரசனையும் அழைத்துக் கொண்டு போய், அவரைத் தரிசித்தார். இளவரசன் பிற்காலத்தில் தனது தந்தைக்கும் புத்தருக்கும், சங்கத்திற்கும் பல கொடுமைகள் செய்ய நேர்ந்தது. அவனுடைய குணத்தை முன்னதாகவே அறிந்து கூறுவது போல், பகவர் அவனுக்குப் பல நீதிகள் புகன்று, தந்திரமும் ஒழுங்கீனமும் எக்காலத்திலும் வெற்றியளித்துக் கொண்டிருக்கமாட்டா என்பதை வலியுறுத்திச் சொன்னார்.

மன்னர் ஐயனைச் சிலநாள் கூடப் பிரிந்திருக்க மனம் வருந்தி, அவருடைய சிகையில் கொஞ்சமும், அவர் கிள்ளி யெறிந்த நகங்களையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டாராம். அரண்மனைக் கோயிலில் அவைகளுக்குத் தூப தீபங்கள் காட்டி மரியாதை செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போது பகவர், ‘இவைகளை ஆலயத்திலே வைத்து விட்டு, உள்ளத்திலே என் போதனையைப் பதிய வைத்துக் கொள்ளவும்’ என்று கூறினாராம். பின்னர் மன்னர் தமது மாளிகைக்குச் சென்றார்; ஐயனும் ஆயிரம் பிக்குக்களுடன் கபிலவாஸ்துவுக்குப் புறப்பட்டார்.

  1. இவர் பெயர் உறுதியாகத் தெரியவில்லை. விநய பிடகத்தில் ‘இராஜகிருகத்து இலட்சப் பிரபு’ என்றே கூறப்பட்டுள்ளது.
  2. இவர் அநாதபிண்டிதா, அநாத பரிபாலகா என்றும் கூறப்படுவர்.
  3. மணிமேகலை
  4. இந்த உரையாடல் திபேத்திய ‘துல்வா’ என்ற நூலில் உள்ளது.
  5. ‘The Gospel of Buddha'–by Dr. Paul carus.