போதி மாதவன்/வேணு வனம்

விக்கிமூலம் இலிருந்து

பதினோராம் இயல்

வேணு வனம்

‘எண்ணிறந்த குணத்தோய் !
யாவர்க்கும் அரியோய் நீ!
உள்நிறைந்த அருளோய் நீ!
உயர்பார நிறைத்தோய் நீ!
மெய்ப்பொருளை அறிந்தோய் நீ!
மெய் அறமிங்(கு) அளித்தோய் நீ!
செப்பரிய தவத்தோய் நீ!
சேர்வார்க்குச் சார்வு நீ!’

–வீரசோழியம்

பொது அறிவை இகழ்ந்து புலமுறு மாதவரான[1] புத்தர் உருவேலா என்ற கயையை அடைய வேண்டும் என்று கங்கையைக் கடந்து சென்றார். அங்கே அக்கினியை வழிபடும் ஜடிலர்கள்[2] என்று அழைக்கப் பெற்ற சடைமுடி தரித்த முனிவர்கள் நூற்றுக்கணக்காக இருந்தனர். அவர்களுடைய தலைவரான அக்கினி காசியபர் அகில பாரதத்திலும் புகழ்பெற்றிருந்த மகரிஷி, ஐந்நூறு சீடர்களோடு அவர் வானப் பிரஸ்தராக இருந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய சகோதரர்களான நதீ காசியபரிடம் முந்நூறு சீடர்களும், கயை காசியபரிடம் இருநூறு சீடர்களும் இருந்தனர். மகா ஞானியாயும், புகழ்பெற்ற முனிவராயும் விளங்கிய அக்கினி காசியபருக்கு முதலில் தரும உபதேசம் செய்ய வேண்டும் என்று பகவர் திருவுளம் கொண்டிருந்தார்.

அக்கினி காசியபர்

உருவேலாவில் காசியபருடைய தவப்பள்ளியை அடைந்து, ததாகதர் அம்முனிவரைச் சந்தித்தார். அன்று தாம் அங்கு தங்க விழைவதாகவும், முனிவர் அக்கினி வழிபாடு செய்யும் குகையிலேயிருந்து கங்குற்பொழுதைக் கழிக்க இடம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முனிவரும் அதற்கு இசைந்தார் ஆனால் அங்கே ஒரு கொடிய விடநாகம் தங்கியிருப்பதாயும், அது எந்த மனிதரையும் கொன்று விடும் என்று தாம் அஞ்சுவதாயும் கூறினார். அதைக் கேட்ட பின்னும் ததாகதர் அங்கேயே தங்க விரும்பியதால், முனிவரும் அனுமதியளித்து விட்டார்.

அந்தக் குகையுள் சென்றதும், ததாகதர் நிமிர்ந்து அமர்ந்து, விழிப்புடன் நாலுபுறத்திலும் அறிவைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

இரவிலே நாகம் வெளிப்பட்டு, நஞ்சைக் கக்கிக் கொண்டு சீறி வந்தது. குகை முழுவதும் விஷப் புகையும் அனலும் நிறைந்தன. ததாகதர், எதுவும் நிகழ்ந்திராதது போல, அமைதியோடு அமர்ந்திருந்தார். அனலை அனல் விழுங்கிற்று; புகையைப் புகையே தீர்த்து விட்டது! நாகம் கடும் சீற்றமடைந்து, தான் தன் சீற்றத்திற்கே இரையாகி மடிந்தது.

இரவிலே கண் விழித்துப் பார்த்த காசியபர் குகையுள் வெளிச்சத்தைக் கண்டு, ‘அந்தோ! சுந்தரவதனத்துடன் விளங்கும் சாக்கியமுனி சர்ப்பத்துக்கு இரையாகி விடுவாரே!’ என்று வருந்தினார்.

மறுநாள் காலையில் அவரும் சீடர்களும் குகையுள் சென்று பார்க்கையில், ததாகதர் உதய சூரியனைப் போன்ற ஒளியுடன் அமர்ந்திருக்கக் கண்டனர். மடிந்து கிடந்த பாம்பின் உடலைப் பார்த்து அவர்கள் பெருவியப் படைந்தனர். ‘அதனுடைய அனலை எனது நெருப்பு வென்று விட்டது!’ என்று ததாகதர் கூறினார்.

சாக்கிய முனிவரின் தவவலிமையையும், இருத்தி ஆற்றலையும் கண்டு காசியபர் வியந்தார். ஆயினும் போதிநாதர் தம்மைப் போன்ற புனிதர் அல்லர் என்று அவர் தம் மனத்துள் எண்ணிக் கொண்டார்.

பின்னர் அந்தப் பகுதியில் திருவிழா ஒன்று நடந்தது. அதற்கு ஏராளமான மக்கள் வருவர் என்றும், அப்போது சாக்கிய முனிவர் அங்கேயிருந்தால், அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்டுத் தம்மைக் கைவிட்டு விடக் கூடும் என்றும், தமது செல்வாக்குக் குறையும் என்றும் காசிய பருக்குப் பொறாமை தோன் றிற்று. அதைத் தாமாகவே உணர்ந்து கொண்ட ததாகதர், திருவிழாக் காலத்தில் மெதுவாக வெளியே சென்று விட்டு, அது முடிந்த பின்பு திரும்பினார்.

காசியபர் அதைப்பற்றி விசாரிக்கையில், சாக்கிய முனிவர், ‘தாங்கள் விரும்பியபடியே நான் நடந்து கொண்டேன்!’ என்றார். அவர் விருப்பம் இவருக்கு எப்படித் தெரிந்தது? இதைப் பற்றிக் காசியபர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ஆயினும் அவர் செருக்குமட்டும் அழியவில்லை.

ததாகதர் அவரை நோக்கி, ‘நீர் உண்மையைக் காண்கிறீர். ஆனால் உமது உள்ளத்திலுள்ள பொறாமையால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர் பொறாமையும் புனிதமுள்ளதா? அதுவே அகங்காரத்தின் கடைசிச் சின்னமாக உமது இதயத்தில் உறைந்துள்ளது. நீர் இன்னும் பரிசுத்த மடையவில்லை; தரும மார்க்கத்தை நீர் இன்னும் மேற் கொள்ளவில்லை!’ என்று கூறினார்.

‘உடனே காசியபரின் உள்ளம் திருந்தியது. பொறாமை மறைந்தது. பகவரின் பொன்னடிகளைப் போற்றி வணங்கி நின்று ‘ஐயனே, எனக்கும் அறவுரை புகன்று, என்னை ஆட்கொள்ள வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார்

பகவர் முதலில் அவர் தம் அடியார்களைக் கலந்து கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார். காசியபரின் கருத்தை அறிந்த அவரது சீடர்கள், ‘நாங்களும் சாக்கிய முனிவரைச் சரணடைய வேண்டும் என்றே ஆர்வம் கொண்டுள்ளோம். தாங்கள் அவருடைய சங்கத்தில் சேர்ந்ததும். நாங்களும் சேர்கிறோம்!’ என்று சொன்னார்கள்.

அக்கினி காசியபரும், அவருடைய அடியார்களும், அக்கினி வழிபாட்டுக்கு உரிய தங்கள் சாமக்கிரியைகளை யெல்லாம் ஆற்றிலே மிதக்க விட்டு விட்டுப் போதி வேந்தரிடம் சென்று, சங்கத்திலே சேர்ந்து பிக்குக்களாயினர்.

அக்கினி காசியபருடைய சகோதரர்களான நதீ காசியபரும், கயை காசியபரும் நதியிலே மிதந்து வந்த சாமக்கிரியைகளைக் கண்டு, தங்கள் சகோதரருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்று, அவர் தவப் பள்ளிக்குச் சென்று பார்த்தனர். அவரும் சீடர்களும் மஞ்சள் உடை பூண்டு பௌத்த தருமத்தை மேற்கொண்டிருந்த்தைர் கண்டு, தாங்களும் அவ்வாறே அவ்வறத்தைத் தழுவினக். அவர்களுடைய அடியார்களும் தங்கள் தலைவர்களைப் பின்பற்றினர். இவ்வாறு புத்தரைச் சுற்றி ஒரே சமயத்தில் ஆயிரம் துறவிகள் சேர்ந்து விட்டனர். அவர்களுக்கும் காசியப சகோதரர்களுக்கும் அச்சமயத்தில் அவர் அக்கினியை உபமானமாகக் கொண்டே ஓர் அரிய உபதேசம் செய்தார். அது வருமாறு :

‘ஓ பிக்குக்களே! எல்லாப் பொருள்களும் அனல் பற்றி எரிகின்றன. பிக்குக்களே, அனல் பற்றி எரியும் இந்தப் பொருள்கள் யாவை?

‘பிக்குக்களே, கண் பற்றி எரிகின்றது; உருவங்கள் எரிகின்றன; கட்புலனும் எரிகின்றது; கண்ணால் பார்த்த பொருள்களின் கருத்துக்களும் எரிகின்றன; புலன்களின் மூலம் உணரும் நல்லன, தீயன, அல்லாதன ஆகிய எல்லா உணர்வுகளும் எரிகின்றன.

‘எதைப் பற்றிக் கொண்டு இவைகள் எரிகின்றன?

ஆசைத் தீயிலும், துவேஷத் தீயிலும், வெறி கொண்ட பற்றுத் தீயிலும், ஜனனம், முதுமை, மரணம், துக்கம், புலம்பல், துயரம், சோகம், அவநம்பிக்கை ஆகியவற்றால் தோன்றும் தீயிலும் எரிகின்றன.

‘ஆசாபாசங்கள், வெகுளி, பேதைமை, வெறுப்பு முதலியவை இருக்கும் வரை–நெருப்பு தான் பற்றி எரிவதற்குரிய பொருள்கள் இருக்கும் வரை–தீ எரிந்து கொண்டேயிருக்கும் அதனால் ஜனன மரணங்களும், அவைகளைச் சார்ந்த துயரங்களும் நேர்ந்து கொண்டேயிருக்கும்.

‘இவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்துச் சத்திய மார்க்கத்தில் செல்லும் சீடன், நான்கு உயரிய வாய்மைகளையும் உணர்ந்து கொண்டு, அஷ்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றி ஒழுகுவான். கண், காது முதலிய பொறிகளிலும், புலன்களிலும், அவைகளால் உணரப் பெறும் பொருள்கள், உருவங்களிலும், மனத்திலும், அதில் தோன்றும் கருத்துக்களிலும், மன உணர்விலும் அருவருப்படைவான். இந்த அருவருப்புக் காரணமாகக் காமம் முதலிய உணர்ச்சிகளை நீக்குவான்; அதனால் விடுதலை பெறுவான். விடுதலை பெற்றதும் அந்நிலையை உணர்வான்; தனக்கு மேற்கொண்டு பிறப்பில்லை என்றும், தான் செய்ய வேண்டியதைச் செய்து புனித வாழ்வு வாழ்ந்தாயிற்று என்றும், இவ்வுலகில் தன் வேலை முடிந்தது என்றும் அவன் அறிந்து கொள்வான்.’[3]

சீடர்கள் யாவரும் இப் புனித உரையைக் கேட்டு. உளமகிழ்ந்து, புத்த, தரும சங்கத்தில் நிலைத்து நின்றனர்.

உருவேலாவில் சிறிது காலம் தங்கியிருந்து, பின்னர் புத்ததேவர் முன்னால் பிம்பிசார மன்னர்க்குத் தாம் அளித்திருந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக இராஜ கிருக நகரை நோக்கிப் புறப்பட்டார். அவரோடு அக்கினி காசியபரும், நூற்றுக்கணக்கான பிக்குக்களும் சென்றனர்.

இராஜகிருகம்

போதி நாதரும் பிக்குக்களும் தமது தலைநகருக்கு வருவதை அறிந்த மகத மன்னர் பிம்பிசாரர், மந்திரிகள், சேனாபதிகள் புடைசூழ, எதிர்கொண்டு சென்று வரவேற்றார். அப்போது போதி நாதர் நகரின் அருகே யிருந்த யஷ்டி வனத்தில் தங்கியிருந்தார். அவரோடு அமர்ந்திருந்த பிக்குக்களிலே பலர் முன் காலத்தில் சடை வளர்த்துக் கொண்டிருந்த ஜடிலர்கள். அவர்களையும், அவர்களுடைய தலைவராக விளங்கிய அக்கினி காசியபரையும் கண்ட சிரேணிய மன்னர் திகைத்து விட்டார். போதிநாதர் காசியபருடைய சீடராகி விட்டாரா, அல்லது காசியபர் அவருடைய சீடராகி விட்டாரா என்று அவர் உள்ளம் திகைத்தது. அதை உணர்ந்த புத்தர் பெருமான், காசியபரை நோக்கித் தாம் பௌத்த தருமத்தை மேற்கொண்டதால் பெற்ற நன்மைகள் என்ன என்று வினவினார். காசியபர், தாம் முன்னால் அக்கினி வணக்கம் செய்து வந்ததில், அகங்காரம் அழியாமல் பிறவிச் சுழலிலேயே சிக்கியிருந்ததாகவும், பௌத்த தருமத்தால் தமக்கு ஞானம் பிறந்து சாந்தி நிறைந்த நிர்வாணத்தை அடையும் மார்க்கம் தெரிந்ததாகவும் கூறினார். அவரைப் போன்ற மகானே போதிநாதரிடம் அடைக்கலம் புகுந்து விட்டதைப் பார்த்துப் பெருமானுடைய ஏற்றத்தை மன்னர் தெளிவாக உணர்ந்து மகிழ்ந்தார். அவரும் பெருமானும் ஒருவரையொருவர் குசலம் விசாரித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் புத்தர் பெருமான், அங்குக் கூடியிருந்த கூட்டத்தினர் யாவரும் தமது தருமத்தைக் கேட்டுப் பக்குவ நிலையை அடைந்திருப்பதைக் கண்டு, மதிமுகம் மலர்ந்து மன்னரை நோக்கிக் குயில் போன்ற தமது இசைக் குரலில் உபதேசிக்கலானார்:

‘மனம், சிந்தனைகள், பொறிகள் யாவும் ஜனன மரண விதிக்கு உட்பட்டவை. ஜனன மரணத் துக்கத்தின் காரணத்தை ஒரு முறை புரிந்துகொண்டால், பின்னர் எல்லாம் தெளிவாகி விடும்.

‘ஒருவன் தன் உண்மை இயல்பை அறிந்து, தன் பொறிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை உணர்ந்து கொண்டால், பிறகு “நான்” என்று சொல்லிக் கொள்வதற்கு இடமில்லாமற் போவதை அறிவான். அதன் மூலம் அந்தமில்லாத அமைதியைப் பெறுவான். உலகம் “நான்” என்பதைப் பற்றிக் கொண்டிருப்பதாலேயே தவறான காட்சிகள் ஏற்படுகின்றன.

‘சிலர், மரணத்திற்குப் பின்னும் “நான்” நிலைத்து நிற்பதாயும், சிலர், அதுவும் மரித்து விடுவதாயும் கூறுவர். இருதிறத்தாருடைய கருத்தும் தவறானது; அவர்களுடைய தவறு பெருந் தவறாகும்.

“ஏனெனில், “நான்” அற்றுப்போகும் என்று அவர்கள் சொன்னால், அவர்கள் அடைய வேண்டும் என்று கருதி முயன்ற பயனும் அத்துடன் அழிந்து விடுகின்றது; - பின்னால் தொடர்பில்லாமற் போகின்றது.

‘மற்றொரு புறத்தில், “நான்” அழிவதில்லை என்று சொல்லுபவர்களுடைய கூற்றின் படி, வாழ்விலும் மரணத்திலும் மாறுதலில்லாத ஒரே தன்மை நிலைத்திருப்பதாகும்-அதற்குத் தோற்றமுமில்லை; முடிவுமில்லை. அவர்களுடைய “நான்” இத்தகையது என்றால், அதுவே நிறைவுள்ளதாயிருக்கும். கருமங்களின் மூலம் அதைச் செம்மைப்படுத்த முடியாது. நிரந்தரமான, அழிவற்ற “நான்” என்பதை ஒருக்காலும் மாற்றவே முடியாது. அதுவே தலைவனாகத் தலைமையில் நிற்கும்; அத்தகைய பூரணமானதை மேலும் பூரணமாக்குதல் பயனற்ற வேலை; எனவே ஒழுக்க விதிகளும், முக்தியுமே தேவை யில்லாமற் போகின்றன.

‘ஆனால் (வாழ்க்கையில் ) நாம் இன்பங்களையும் துன்பங்களையும் காண்கிறோம். நம் செயல்களையெல்லாம் “நான்” என்பதே செய்வதாயிருக்கவேண்டும்; இல்லையெனில் “நான்” என்பதும் இல்லை; செயலுக்குப் பின்னால் அதைப் புரிந்தவன் இல்லை. அறிவுக்குப் பின்னால் அதைப் புரிந்தவன் இல்லை; அறிவுக்குப் பின்னால் அறிந்தவனில்லை. வாழ்வைத் தலைமையில் நின்று நடத்துவோனும் இல்லை.

‘கவனமாய்க் கேளுங்கள்! பொறிகள் ஒரு பொருளைச் சந்திக்கின்றன. அந்தச் சம்பந்தத்தினால் உணர்வு தோன்றுகிறது; அதிலிருந்து நினைவு எழும்புகின்றது; பூதக் கண்ணாடியைக் கதிர் ஒளியில் காட்டினால், ஒளியின் சக்தியால் தீ உண்டாதல் போலப் பொறியும் பொருளும் கொள்ளும் சம்பந்தத்தில் ஏற்படும் அறிவினால் “நான்” என்று அழைக்கப் பெறும் அகங்காரம் தோன்றுகின்றது, விதையிலிருந்து தான் முளை உண்டாகின்றது, விதை முளையன்று, இரண்டும் ஒன்றல்ல, எனினும் இரண்டும் வேறுபட்டவையும் அல்ல! இவ்வாறே தோன்றுகின்றது ஜீவன்.

“நான்” என்னும் அகங்காரத்திற்கு அடிமைகளாகிக் காலையிருந்து இரவுவரை அதற்கே ஊழியம் செய்து கொண்டிருப்பவர்களே! . பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகிய வற்றைப்பற்றி ஓயாது அச்சம் கொண்டவர்களே! “நான்” என்ற கொடிய தலைவன் இல்லை என்ற நற்செய்தியைக் கூறுகிறேன், கேண்மின்!

“நான்” என்பது ஒரு தவறு; ஒரு மயக்கம்; ஒரு கனவு. கண்களைக் திறந்து விழித்து எழுங்கள். விஷயங்களை உள்ளபடியே பாருங்கள். உங்களுக்குச் சாந்தி ஏற்படும்.

‘விழித்திருப்பவன் கனவுகளுக்கு அஞ்ச மாட்டான். கயிற்றைக்கண்டு அரவு என்று கருதியவன், (கயிறு கயிறு தான் என்று) அதன் தன்மையைக் கண்ட பின்பு பயத்தை ஒழித்துவிடுவான். “நான்” இல்லை என்பதைக் கண்டுகொண்டவன் சுய நல ஆசைகள், உணச்சிகளையெல்லாம் துறந்து விடுவான்.

‘பொருள்களில் கொள்ளும் பற்று, பேராசை, புலன்களின் உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வந்தவை; உலகின் துயரங்களுக்கும் செருக்குக்கும் அவைகளே காரணமானவை.

‘சுயநலத்தால் (பொருள்களில்) கொள்ளும் பற்றை (உபாதானத்தைக் கைவிடுங்கள்; பாவமற்ற, அமைதி நிறைந்த மன நிலையை நீங்கள் அடைவீர்கள்; அதனால் சாந்தியும், நலனும், ஞானமும் பெற முடியும்.

‘இந்த மன நிலையே உலகிலே தலைசிறந்தது. இதுவே நிர்வாணம்!’[4]

பரமார்த்தர் பரிவுடன் அருளிய அறிவுரையைக் கேட்டு மக்களும் மன்னரும் பெருமகிழ்வுற்றனர். பிம்பிசாரர் அதை மனத்தில் பதிய வைத்துக்கொண்டு, ஐயம் நீங்கித் தெளிவு பெற்று, எழுந்து நின்று ஐயனை வணங்கினார். தாம் இளவரசராயிருந்த காலையில் ஐந்து ஆசைகள் கொண்டிருந்ததாயும், தாம் மகிபராக வேண்டும் என்றும், தமது ஆட்சிக்காலத்தில் வையகத்தில் புத்தர் அவதரித்தால், அவர் தமது இராஜ்யத்திற்கு எழுந்தருள வேண்டும் என்றும், தாம் அவரை வணங்க வேண்டும் என்றும் பகவர் தமக்கு அறத்தினைப் போதிக்க வேண்டும் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய தருமத்தைத் தாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கருதியிருந்த அந்த ஐந்து விருப்பங்களும் நிறை வேறிவிட்டன என்றும் அவர் கூறி மகிழ்ந்தார்.

அறவாழி அந்தணர் கூறிய அறமே அனைத்தினும் சிறந்த அறம் என்று அவர் போற்றினார். இருளிடையே இடர்ப்பட்டுத் திரிபவர்களுக்குப் பகவர் அளித்த விளக்கின் ஒளி வழிகாட்டும் என்றும், கண்ணுடையோர் அனைவரும் அதன் பயனை அடையலாம் என்றும் கூறிவிட்டு, அவர், நான் புத்தரிடம் சரணடைகிறேன்! நான் தருமத்திடம் சரணடைகிறேன்! நான் சங்கத்திடம் சரணடைகிறேன்!’ என்று மும்மைச் சரணங்களையும் மொழிந்து புத்தரின் சீடரானார். அருள் வள்ளல் மறு நாள் தமது அரண்மனையில் அமுது செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.

ததாகதர் தமது தவமகிமையாலும், மாசிலாத சீலத்தாலும் யாவருடைய மனங்களையும் கவர்ந்து தம்பால் ஈர்த்துக்கொண்டு, உண்மையை அவர்கள் உணரும்படி செய்தார். இராஜ்யம் முழுவதும் இன்னருளின் விதைகள் பரவி வேரூன்ற வழி கோலப்பெற்றது.

பிக்குக்கள் பலரும் பின் தொடர, முன்னும் பின்னும் சாந்தி நிலவும்படி, கையிலே திருவோடு ஏந்தி, இராஜ கிருக வீதிகளின் வழியாகத் தருமராஜர் நடந்து சென்று அரண்மனையை அடைந்தார். அவருடைய மகிமைக்கு ஏற்ற உணவு வகைகளை மன்னர் தயாரித்தார். எல்லோரும் அமுது செய்தபின், பெருமானின் அருகே அமர்ந்திருந்த அரசர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவருக்குக் கிடைத்தற்கரிய பெரும் பேறு கிடைத்திருந்தது. போதி யடைந்ததும் போதி வேந்தர் அங்கு விஜயம் செய்திருந்தார். இராஜகிருகம் செய்த எல்லையற்ற தவத்தால் அது பௌத்த தருமத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கப் போகிறது! எனவே போதிநாதர் எப்போது வந்தாலும் தங்கியிருந்து தருமம் போதிப்பதற்கு ஏற்ற தவப்பள்ளி ஒன்றை அமைக்கவேண்டும். அதற்கு ஏற்ற சோலை ஒன்று வேண்டும்; அது நகருக்கு வெளியே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய சோலை எது என்பதைப் பற்றியே அரசர் சிந்தித்துக் கொண்டிருந்தார். கடைசியில் தாம் அருமையுடன் போற்றிவந்த தமது வேணு வனத்தையே[5] பௌத்த சங்கத்திற்கு அளித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே பெருமானிடம் விவரத்தைக் கூறி, தமது எழில் மிகுந்த சோலையை ஏற்றருளுமாறு வேண்டினார். பெருமானும் அன்புடன் அதை ஏற்றுக்கொண்டு அரசருக்கு ஆசிகள் கூறினார்; மேலும் அவருக்குக் கூற வேண்டிய நீதிகள் பலவும், எடுத்துச் சொல்லி அவர் உள்ளத்தைப் பவித்திரமாக்கினார். பிறகு விடை பெற்றுக்கொண்டு, அரண்மனையிலிருந்து வெளியே சென்றார்.

மன்னரின் நீதி

பிம்பிசாரப் பெருந்தகைபற்றியும், வேணு வனத்தைப் பற்றியும் பல இனிய கதைகள் உண்டு. அவர் பல போர்களில் வெற்றிபெற்ற வெற்றி வீரர். அக்காலத்தில் மக்கள் அவரை மானிட மடங்கல்[6] என்று கருதி வந்தனர். ஆயினும் அவர் அன்பும் பெருந்தன்மையுமுள்ள பேரரசர். அவருடையமகத நாட்டின் பெருமை இந்திய சரித்திரத் திலே பொன் ஏடுகளில் பொறிக்கத்தக்கதாகும். பிற் காலத்தில் பாரதநாடே மகத சாம்ராஜ்யமாக விளங்கிற்று.

மன்னரின் தலைநகரான இராஜகிருகம் குளிர்ச்சியான காவுகளும் சோலைகளும் நிறைந்து எழிலுடன் விளங்கிக் கொண்டிருந்தது. ஒருசமயம் கோதாவரி நதிக்கரையில் ஆண்டுகொண்டிருந்த இராஜஸ்ரீ என்ற மன்னன் அந்நகரைப் பார்வையிடச் சென்றிருந்தான். அங்கு அழகே குடி கொண்டிருந்ததைக் கண்டு அவன் ஆச்சரியமுற்றான். அரண்மனையும் அதைச் சேர்ந்த நந்தவனங்களும் அவனைப் பரவசமாக்கின. ஒருநாள் மாலை அவன் பிம்பிசாரருடன் பிரியமாகப் பேசிக்கொண்டே, அவருடைய உபவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். தளிர்களும், கொடிகளும், செடிகளும், பூங்கொத்துக்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்துக்கொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு மூலையில் பண்படுத்தப் பெறாத் மண்மேடு ஒன்று இருந்தது. அதைக்கண்ட விருந்தினனான மன்னன், அதையும் வெட்டித் திருத்தியிருந்தால் சோலையின் அழகு அதிகமாயிருக்கும் என்று கூறினான்.

“அது என்னுடைய இடமன்று!” என்றார் மகத மன்னர், அது ஏழையான ஒரு விதவையின் உடைமை என்றும், அவள் அதைத் தமக்கு விற்கவோ, அளிக்கவோ விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

‘அரசர் என்ற, முறையில் தாங்கள் விரும்பினால் அதை எடுத்துக் கொள்ள இயலாதா?’

‘உபவனத்தின் அழகு குன்றிப்போனாலும் கவலை யில்லை; அந்த இடத்தை அபகரிக்க நான் விரும்பவில்லை!’

கோதாவரி-மன்னன் உண்மையை உணர்ந்து உவகை வெள்ளத்தில் ஆழ்ந்தான். பேரரசர் பிம்பிசாரர் விரும்ப வில்லை! அம்மன்னன், ‘அந்த மேடுதான் தங்கள் பூந் தோட்டத்தின் அழகைத் துலக்கமாக எடுத்துக் காட்டுகின்றது!’ என்று புகழ்ந்து பாராட்டினான். மகத மன்னரின் நீதி அவ்வளவு உயர்வாக இருந்தது.

ஆனால் பிம்பிசாரர் பௌத்த தருமத்தை மேற்கொள்ளுமுன்னால், வேணு வனத்தைப் பெருங்குடியிலே தோன்றிய ஒரு தனிகரிடமிருந்து அபகரித்திருந்தார். சிறுவயதிலேயே, அவர் இளவரசாயிருந்த காலத்திலேயே, அந்த வனத்தில் அவருக்கு ஆசை பாய்ந்தது. தாம் மணி முடி புனைந்ததும், அதை ஆர்ச்சிதம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கருதியிருந்தார். பின்னால் அவ்வாறே வேணு வனத்தை அரசர்க்குரிய உரிமையில் எடுத்துக்கொண்டார். அவ்வனத்திற்கு உரியவரும் மாண்டுபோய்ப் பின்னால் ஒரு சர்ப்பமாகப் பிறந்திருந்தார். அவர் மன்னரிடம் தமக்குள்ள பகையை மறவாமல், வேணு வனத்திலேயே பாம்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார். மன்னர் அங்கே அயர்ந்துள்ள வேளையில் அவரைத் தீண்டிவிட வேண்டும் என்று அவர் காலம் கருதியிருந்தார்.

ஒருநாள் மாலை அரசரும் தேவியர்களும் அங்கு வந்து இளைப்பாறுகையில் மன்னர் உறங்கிவிட்டார். தேவியரில் ஒருத்தி தவிர மற்றையோர் தூரத்திலே உலாவிக் கொண்டிருந்தனர். அவளும் கண்ணயர்ந்து போனாள். அந்த நேரத்தில் நாகம் அவ்வழியாக மன்னர் அருகில் ஊர்ந்து வந்தது. அதைக் கண்ட பறவைகள் யாவும் கூக்குரலிட்டுக் கூவின என்றும், உடனே தேவி கண் விழித்துப் பாம்பைக் கொன்றனள் என்றும் சொல்லப்படுகிறது. மன்னர் விழிப்படைந்தபின், பறவைகள் காலத்திலே செய்த உதவிக்காக, அவ்வனத்தில் அவைகள் பிரியமாக வந்து தங்குவதற்காக ஏராளமான மூங்கில்களை வைத்து வளர்த்தார். மூங்கில் நிறைந்திருந்ததால் அவ்வனத்திற்கு ‘வேணு வனம்’ என்ற பெயர் பெயர் உண்டாயிற்றாம்.

வேணு வனத்தில் பிம்பிசாரர் விரைவாக ஒரு விகாரையைக் கட்டி, அதிலேயே பிக்குக்கள் அனைவரும் தங்கி யிருக்க வசதிகள் செய்து கொடுத்தார். வேணு வனத்தில், புத்தர் பெருமான் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து அறவுரை புகன்று வந்தார். தொள்ளாயிரம் பிக்குக்களும் ஆயிரக்கணக்கான பௌத்த உபாசகர்களும்[7] அக்காலத்திலே சேர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

முதன்மையான மூன்று சீடர்கள்

அக்காலத்தில் பிக்குக்களாகச் சேர்ந்தவர்களில் முதன்மையானவர் மூவர். அவர்களே சாரீபுத்திரரும், மௌத் கல்யாயனர் என்ற மொக்கலன்னாவும், காசியபர் அக்கினி தத்தரும். இவர்களில் சாரீபுத்திரரும், மௌத்கல்யாயனரும் இளமையிலிருந்தே நகமும் சதையும் போல் நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். பின்னாலும் அவர்கள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்ந்து வந்தனர்.

இராஜகிருகத்திற்கு அருகே நாலந்தா[8] என்ற நகரத்தில் மாதரா என்ற அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்குச் கோஷ்திலா என்ற குமரனும், சாரீ என்ற ஒரு பெண்ணும் இருந்தனர். கோஷ்திலா உலகாயத தத்துவ நூல் கற்பதற்காகச் சிறு வயதிலேயே தென்னிந்தியாவுக்கு வந்து விட்டார். இங்கே சகல சாத்திரங்களையும் கற்றுணரும் வரை நகங்களை எடுப்பதில்லை என்ற வைராக்கியத் துடன் இருந்ததால், அவருக்கு ‘தீர்க்கநகா’[9] என்ற காரணப் பெயரும் உண்டாயிற்று.

சாரீ என்ற மாதரசி தென்னிந்தியாவிலிருந்து அங்கு சென்றிருந்த திஷ்யர் என்ற பிராமணரை மணந்து இல் வாழ்க்கை நடத்தி வருகையில், அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். திஷ்யருடைய குமரன் என்பதால் அவனை உபதிஷ்யன் (பாலியில் உபதிஸ்ஸா ) என்றும், தாயின் பெயரை வைத்து சாரீபுத்திரன் என்றும், குடும்பப் பெயரை வைத்து சாரத்வதி புத்திரன் என்றும் அழைத்து வந்தனர். ஆயினும் பௌத்த இலக்கியத்திலே சாரீபுத்திரன் என்ற பெயரே பெரும்பாலும் வழங்கிவருகின்றது

சாரீபுத்திரர் இளமையிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். அக்காலத்து அந்தணர் அறிய வேண்டிய சாத்திரங்கள் பலவற்றையும் அவர் பயின்றிருந்தார்.

மௌத்கல்யாயனரும் அருகேயிருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் கௌண்டின்ய போதாலர் என்ற மன்னரின் புரோகிதராயிருந்தவர். அவருடைய அன்னையின் பெயர் மோத்கல். அவருக்கு மௌத் கல்யாயனர் என்பது குடும்பப் பெயராக அமைந்தது; அவருடைய இயற்பெயர் கோலிதர். அவரும் இளமையிலிருந்தே சாரீபுத்திரருடன் சேர்ந்து கல்வி கற்றுச் சகல கலா வல்லவராக விளங்கினார்.

இவ்விருவரும் பள்ளித் தோழர்களாகப் பழகி வந்ததில், பின்னால் மௌத்கல்யாயனர் துறவறம் மேற்கொள்ளத் தீர்மானிக்கையில் சாரீபுத்திரரும் துறவியாகி விட்டார். இருவரும் இராஜகிருக நகரிலிருந்த சஞ்சயர்[10] என்ற புகழ் பெற்ற குருவிடம் உபதேசம் பெற்று வந்தனர். சஞ்சயர் காலமான பின்னர், அவருடைய சீடர்கள் இருநூற்றைம்பது பேர்களுக்கும் அவர்கள் இருவருவமே தலைவராக விளங்கி வந்தனர். அவர்களைப் பற்றி இங்கே விரிவாகக் குறிப்பிட வேண்டிய காரணம் யாதெனில், அவர்களே பின்னால் பௌத்த தருமத்தின் இரு தூண்களாக விளங்கி வந்தார்கள். புத்த பெருமானுக்கு அவர்கள் இரு கரங்களைப் போல உதவி வந்தனர். அவர்கள் புத்தரைச் சரணடைந்த வரலாறே அவர்களது இயல்பை நன்கு உணர்த்துவதாயுள்ளது.

ஒருநாள் இராஜகிருக வீதியிலே புத்தருடைய ஆரம்பச் சீடர்கள் ஐவருள் ஒருவராகிய அசுவஜித் கையிலே திருவோடு தாங்கிப் பிச்சையேற்று வருகையில் சாரீபுத்திரர் அவருடைய ஒளி நிறைந்த முகத்தையும், அமைதியையும் கண்டு திகைத்து நின்றார். அவர் அண்டையில் சென்று அவர் யார் என்றும், அவர் சீடர்களைச் சேர்த்துக்கொண்டு உபதேசம் செய்கிறாரா என்றும் வினவினார். அசுவஜித் தாமே ஒரு குருவுக்குச் சீடர் என்று கூறினார்.

‘தங்களுடைய குரு யாவர்? அவர் திருநாமம் என்ன?’

‘சாக்கிய மரபிலே தோன்றிய புகழ் பெற்ற முதன்மையான சிரமணரே எனது குரு!’

‘அவர் உங்களைப்போன்ற பெருமையும் கம்பீரமும் பெற்று விளங்குபவரா?’

‘கடுகுக்கும் மேரு மலைக்கும், பசுவின் குழம்பு பதிந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீருக்கும் கடலுக்கும், கொசுவுக்கும் கருடனுக்கும். எவ்வளவு வேற்றுமையுண்டோ அவ்வளவு எனக்கும் என் குருநாதருக்கும் உண்டு!’

‘நான் எப்போதுமே அறிவுக்குப் பொருத்தமான உண்மையையே விரும்புபவன்; சொற்களையும் வாக்கியக் குவியல்களையும் பற்றி நான் கவனிப்பதில்லை; ஏனெனில் ஞானி தீர்க்கமான அறிவைக் கொண்டே தன் வாழ்வை அமைத்துக்கொள்கிறான் தங்களுடைய குருநாதருடைய கொள்கையைத் தாங்கள் விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன்.’

‘நானே சமீபத்தில்தான் அவரிடம் உபதேசம் பெற்றவன். கேட்கவேண்டியதை அவருடைய திருவாயிலி லிருந்தே நேரில் கேட்பது நலம். சுருக்கமாய்ச் சொன்னால்,


“யேதர்மா ஹேதுப்ரபாவா: தேஷாம்ஹேதும் ததாகத;
ஆஹதேஷா யோநிரோத்: ஏவம்வாதீ மஹாஸமண:”

[11]

[“காரணம் ஒன்றிலிருந்து எந்தத் தன்மைகள் ஏற்படுகின்றனவோ, அவைகளின் காரணத்தைத் ததாகதர் கூறினார்; அதை அடக்கும் முறையையும் அந்த மகாசிரமணர் கற்பித்துள்ளார்.”]

என்று சொல்லிவிடலாம்.

இதைக் கேட்ட சாரீபுத்திரர், ‘போதுமே! இந்த ஒரு சுலோகமே தங்களுடைய குருவின் மேன்மையை எடுத்துக் காட்டப் போதுமானது! ஆம், உலகிலே எல்லாம் காரணத்தாலேயே – ஏதுவாலேயே – தோன்றுகின்றன. காரணத்தை அறிந்து நீக்கிவிட்டால், காரியமும் இராது!’ என்று தமக்குள் பாராட்டிப் பேசிக்கொண்டார்.

‘கதிரவன் ஒளிவந்த பிறகு எவரேனும் விளக்கினைத் தேடுவரோ? புத்தரின் போதனை துக்கத்தின் வேரையே அறுத்து விடுவதாகும்!’ என்று கருதி அவர் பிக்குவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் நேராக வீட்டுக்குத் திரும்பிச் சென்றார். அவருடைய அகமும் முகமும் மலர்ந்து விளங்கின. வழியிலே அவரைக் கண்ட மௌத்கல்யாயனர், அவருடைய பெருமகிழ்ச்சிக்கு உரிய காரணம் இருக்கும் என்று கருதினார். சாரீ புத்திரர் தாம் கேட்டறிந்த சுலோகத்தைக் கூறி, ‘இது வரை எவரும் வெளியிட்டிராத வார்த்தைகளையே (செய்தியையே) ததாகதர் சொல்லி யுள்ளார்!’ என்று பாராட்டியுரைத்தார்.

இருவரும் அங்கிருந்து வேணுவன விகாரையை நோக்கிப் புறப்பட்டனர், அவர்களுடன் இரு நூற்றைம்பது சீடர்களும் தொடர்ந்து சென்றனர்

அந்தணர் இருவரும் தம்மை நோக்கி வந்துகொண் டிருப்பதைக் கண்ட ததாகதர், தம்முடன் அமர்ந்திருந்த பிக்குக்களைப் பார்த்து, இதோ வருகிற இந்த இருவரும் என் சீடர்களில் முதன்மையான இருவராக இருப்பார்கள்; ஒருவன் ஞானத்தில் நிகரற்று விளங்குவான், மற்றவன் சித்திகளில் (இருத்தி ஆற்றல்களில்) நிகரற்று விளங்குவான்!’ என்று கூறி அருளினார்.

பின்னர், உள்ளங்கனிந்த இனிமையுடன், அவ்விருவரையும் முகம் நோக்கி, ‘வருக!’ என்றார்.

உடனே, அவர்கள் கைகளிலே ஏந்தியிருந்த முக்கோல் களும், கமண்டலங்களும், சடைமுடியும் எல்லாம் மாறி, அவர்கள் துவராடை தரித்த முண்டிதமான பிக்குக்களாகக் காட்சியளித்தனர். அவ்வாறே அவர்களுடைய அடியார்களும் மாறிவிட்டனர். எல்லோரும் ‘தரையில் வீழ்ந்து பகவரின் பாதங்களை வணங்கி எழுந்து, அவர் அருகிலே சூழ்ந்து அமர்ந்துகொண்டனர்.

சாரீபுத்திரர் அறிவுக்களஞ்சியமாக விளங்கிய போதிலும், சிறிதளவும் செருக்கில்லாமல், அடியார்க்கு அடியராக நடக்கும் இயல்புடையவர். விகாரையிலே பெருமானுடன் தங்கியிருக்கும் காலங்களில், அவரே அறைகளையெல்லாம் சுத்தம் செய்து, பானைகளிலே நீர் ஊற்றிவைத்து, நோயாளருக்குச் சிகிச்சை செய்வது வழக்கம். பிற்காலத்தில் அவரே பல நகரங்களுக்கும் சென்று, பொதுமக்களின் பெருங்கூட்டங்களில் சொற்பொழிவாற்றியும், அரசர்கள், பிரபுக்கள் தலைவர்கள் முதலியோரைச் சந்தித்து அற நிலையங்கள் அமைத்தும், எதிர்ப் பிரசாரங்களுக்கு மறுப்புக் கூறியும் அரும்பெருந் தொண்டுகள் செய்துவந்தார். ‘நான் இல்லையென்றால் என் ஸ்தானத்தில் இருக்கக்கூடியவன் சாரீபுத்திரன்!’ என்று பெருமானே அவரைப் பாராட்டியுள்ளார். இத்தகைய அருங்குணங்கள் அனைத்தும் வாய்ந்த அந்த அந்தணரே பௌத்த தருமத்தின் ‘சேனாபதி’ என்ற பட்டமும் பெற்று விளங்கினார்.

மௌத்கல்யாயனர் தருமத்தின் உட்பொருளை நன்கு. உணர்ந்துகொண்டு அதன்படி ஒழுகிவந்தவர். பிற சமயத்தார்களுக்கு அவர் பெயரைக் கேட்டாலே பயமுண்டாகும் . அவரை யாரும் எதிர்த்து வெல்ல முடியாது; பகைவர்கள் அவர்மீது பாய்ந்து சென்றாலும், அவர் அமைதியோடு உயரே பறந்து ஆகாயத்திலேயே அமர்ந்துகொள்வார். அவருக்கு அவ்வளவு இருத்தி ஆற்றல் அமைந்திருந்தது!

சாரீபுத்திரருடைய தாய்மாமனாரான கோஷ் திலாவும் சிலநாட்களுக்குப் பிறகு புத்தரைத் தரிசித்துச் சங்கத்தில் சேர்ந்துகொண்டார்.

வேணு வனத்திலே தயாவீர தருமராஜர் தங்கியிருந்த காலத்திலே அவருடைய அருட் சமயத்திற்குக் கிடைத்த மும்மணிகளில் மூன்றாமவர் காசியபர் அக்கினிதத்தர் என்பவர். அவர் கல்விச் செல்வமும், பொருட் செல்வமும் மிக்க தபோதனர். அவர் மனைவி அருங்குணங்களெல்லாம் அமைந்த கற்புக்கரசி. அவர் முக்தியை நாடி, வீடு செல்வம் அனைத்தையும் நீத்துத் துறவறம் மேற்கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் வைசாலி நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் பாதையிலே, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோரான புத்தரைக் கண்ணுற்றதும், அவரை அடி வணங்கி, ‘பெருந்தகை வள்ளலே! நீரே எமது குரு; யான். உம் அடியாருள் ஒருவன்!’ என்று கூறினார்.

துறவறத்தாலே உழன்று பெரும் பாடுபட்டு உண்மை நெறியை அறிந்துகொள்ள உள்ளன்போடு முயன்று கொண்டிருந்த அந்த ‘அந்தணாளரையும் அறவோர் தமது சங்கத்திலே சேர்த்துக்கொண்டு, அவர் உய்யும் பொருட்டு அருளுரைகள் வழங்கினார். இந்தக் காசியபரே பிற் காலத்தில் ‘மகா காசியபர்’ என்று பெரும்புகழ் பெற்று விளங்கிய மேதை. ஐயனுக்கு அவரிடம் அளவற்ற அன்பு இருந்து வந்தது. புத்தருக்குப் பின்னால் அவருடைய அறிவுரைகளைத் தொகுத்துத் திரிபிடங்களாக அமைத்து வைத்த பெருமையிலே பெரும்பகுதி மகா காசியபரையே சேரும். இத்தகைய மகான்களும், மதிவாணர்களும், ஆறுகள் : அலை கடலை நாடி அடைவதுபோல், அருள்நெறி காக்கும் ஐயனை அடைந்து, அருளறத்தை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

நாள்தோறும் இளைஞர்களும் பெரியோர்களும் பகவரைச் சரணடைந்து துறவிகளாகி வந்ததைக் கண்ட இராஜகிருக மக்கள் கவலை கொண்டனர். திடீர் திடீரென்று பல ஆடவர்கள் வீடு வாசல்களையும், மனைவி மக்களையும் விட்டுப் பிரிந்து, தலைகளை மழித்துக் கொண்டு, வேணுவனத்திற்கு ஓடிவிடுவதைக் கண்டு சிலர் பிக்குக்களையே வெறுத்துப் பேசினர். இவ்வாறு பேசிய பேச்சுக்களைப் பற்றிப் பிக்குக்கள் பகவரிடம் தெரிவித்த போது அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்:

‘ஒ பிக்குக்களே! இந்தக் கூச்சல் நீடித்து நிற்காது. ஏழு நாட்களில் இதெல்லாம் அடங்கி விடும். உங்களை அவர்கள் ஏசினால், பிக்குக்களே, நீங்கள் இவ்வாறு மறுமொழி கூறுங்கள் : “சத்தியத்தைப் பிரசாரம் செய்தே ததாகதர்கள் மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அறிவாளரைக் கண்டு எவர்கள் கூச்சலிடுவார்கள்? சீலம் நிறைந்தவர்களை எவர்கள் நிந்திப்பார்கள்? தன்னடக்கம், நியாயம், பரிசுத்தமான உள்ளம் ஆகியவற்றோடு விளங்க வேண்டும் என்பதே எங்கள் குருவின் போதனை!”

  1. சாமானிய அறிவைத் தள்ளி மெய்ஞ்ஞானத்தால் விளங்கும் தவ சீலரான.
  2. ஜடிலம்-சடைமுடி.
  3. ‘மகாவக்கம்.’
  4. ‘ஃபோ-ஷோ-ஷிங்- த்ஸாங்-கிங்’ என்ற சீன நாட்டுப் புத்த சரிதை.
  5. வேணுவனம்–மூங்கில் அடர்ந்த சோலை; (வேணு–மூங்கில்)
  6. மடங்கல்- சிங்கம்.
  7. உபாசகர்கள் - குடும்பத்தில் இருந்துகொண்டு கருமத்தை மேற்கொள்பர்கள்.
  8. நாலந்தாவிலே புகழ்பெற்ற சர்வகலாசாலை ஒன்று இருந்து வந்தது. பின்னால் பல நூற்றாண்டுகள் வரை அது பௌத்த தருமத்திற்கு உறைவிடமாக இருந்தது.
  9. தீர்க்கநகா- நீண்ட நகமுள்ளவர்.
  10. சஞ்சயருக்குப் பதிலாகக் கபிலர் என்றும் கூறுவதுண்டு.
  11. பௌத்த தருமத்தின் சாரத்தை உணர்த்தும் சுலோகமாக இது கருதப்படுகிறது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு. வருமாறு:

    ‘Of those conditions which spring from a cause
    The cause has been told by Tathagata ;
    And the manner of Suppression
    The great Samana has like wise taught.’

"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/வேணு_வனம்&oldid=1283889" இலிருந்து மீள்விக்கப்பட்டது