உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/கௌதம பிக்கு

விக்கிமூலம் இலிருந்து

ஆறாம் இயல்

கௌதம பிக்கு


கறையற்ற பல்லும், கரித்துணி ஆடையும், கள்ளமின்றிப்
பொறையுற்ற நெஞ்சமும், பொல்லாத ஊணும் புறக்திண்னையும்
தரையில் கிடப்பும், இரந்(து) உண்ணும் ஓடும், சக(ம்) அறியக்
குறைவற்ற செல்வ(ம்) என் றேகோல மாமறை கூப்பிடுமே!’

- பட்டினத்தடிகள்

காலை இளம் பரிதி கீழ்த்திசையில் பல கோடிக் கதிர்களைப் பரப்பிக்கொண்டு உதயமாகும் நேரத்தில் கண்டகம் அநோம நதிக்கரையை அடைந்துவிட்டது. இரவில் எங்கும் நில்லாது சுமார் இருபது மைல் தூரம் ஒரே பாய்ச்சலாக ஓடிவந்துக் கொண்டிருந்த அக்குதிரை, அநோம நதிக்கரையில், பிருகு புத்திரரான பார்க்க முனிவரின் ஆசிரமத்திற்கருகே வந்ததும், களைத்து நின்று விட்டது. சித்தார்த்தர் தாம் அடைய வேண்டிய கானகம் அது தான் என்று கருதினார். குதிரை நின்ற இடத்திலேயே அவரும் சந்தகனும் கீழே இறங்கிவிட்டனர். இறங்கியதும், சித்தார்த்தர் குதிரையைத் தட்டிக் கொடுத்து, ‘உன்னால், எல்லாம் இனிதாக முடிந்தது!’ என்று அதை வாழ்த்தினார்.

சந்தகன் துயரம்

சந்தகனை அவர் மிகவும் புகழ்ந்தார். அவரிடம் அவனுக்கு நிறைந்த அன்பு இருந்ததோடு, அவர் நினைக்கும் காரியங்களை உடனுக்குடனே நிறைவேற்றிக் கொடுக்கும் திறனும் அவனிடம் இருந்தது. கடைசியாக அவர் நகரை நீங்கி வனத்தை அடைவதற்கும் அவன் ஒப்பற்ற உதவியைச் செய்து விட்டான். இதற்காக அவனைச் சித்தார்த்தர் பாராட்டினார். ‘உற்ற உறவினர் கூட ஒருவனுடைய அதிர்ஷ்டம் குறையும்போது வேற்றாராகி விலகிவிடுவர். நீயோ, பயன் கருதாமல், கடைசிவரை எனக்குப் பணிவிடை செய்து வந்திருக்கிறாய். உனக்கு நான் என்ன கைம்மாறு அளிக்க முடியும்?’ என்று கூறினார்.

இனி அவனை ஊருக்கு அனுப்பிவிட வேண்டும் என்று கருதி, ‘அன்பா! நீ என்னிடம் பேரன்பு கொண்டு உதவி புரிந்தாய்; இந்த உதவி உனக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்மை விளைவிக்கும். இனியும் நீ ஓர் உதவி செய்யவேண்டும். நான் அடையவேண்டிய வனத்தை அடைந்து விட்டேன். இனி நீ குதிரையை அழைத்துக் கொண்டு நகருக்குத் திரும்பிவிட வேண்டும்!’ என்று அவனைக் கேட்டுக்கொண்டார். அவர் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அவனுக்குப் பரிசாக அளித்தார். அரச் உடையையும், மணிகள் இழைத்த அரைக் கச்சையையும், உடைவாளையும் சுழற்றிக் கொடுத்தார். பின்னர் மிகவும் ஒளிவீசிக் கொண்டிருந்த தமது முடி மணியையும் எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவர் கூறியதாவது:

‘சந்தகா! அரண்மனையிலே மன்னருக்குப் பன்முறை என் வணக்கம் கூறி, இம்மணியையும், மற்றவைகளையும் அவரிடம் எனக்காகச் செலுத்துவாயாக! அவர் துக்கத்தை ஆற்றி, மேற்கொண்டு என் பொருட்டாக வருந்த வேண்டாம் என்று சொல்லவும்.

‘சுவர்க்க ஆசையினால் நான் இங்கு வரவில்லை. முதுமையையும், மரணத்தையும் வென்று அழிப்பதற்காகவே வந்துள்னேன். என் பிரிவுக்காக நீயும் வருந்தலாகாது. சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் முடிவில் என்றாவது பிரியத்தான் வேண்டும். ஆதலால் விடுதலை வேட்கையோடு வந்துள்ள எனக்காக வருந்துவதை விட்டுப் புலனடக்கமில்லாது போகங்களில் ஆழ்ந்திருப்பவர்களுக்காக வருந்துவதே முறை!

‘இளமையிலேயே நான் துறவுக்கோலத்தை மேற் கொள்ளுவதற்காக அரசர் வருந்த வேண்டாம். என்றுமே மரணம் நம்மை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கையில், நாம் முந்திக்கொள்ளுவதே முறையாகும்.

‘இவைகளையெல்லாம் தந்தையாரிடம் கூறுவதோடு, நீயும் உன் திறமையால் அவருக்கு நய உரைகள் சொல்லி அவர் என்னை மறந்துவிடும்படி செய்ய வேண்டுகிறேன். அன்புக்கு உரியவர் பிரிவதாலேயே துக்கம் வருகிறது. அன்பு அற்றவிடத்திலே துக்கமும் அற்றுப்போகும்.

‘உலகைக் காப்பதற்காகவே நான் உலகைத் துறக்கிறேன். என் இலட்சியத்தில் வெற்றிபெற்றால், என் வழியை உலகம் பின்பற்றும்; உலகமே எனதாகும் என்பதையும் அரசரிடம் கூறு!

‘அவருடைய அன்புக்கு நான் சிறிதும் பாத்திர மில்லை. அவருடைய பெருந்தன்மையின் முன்னால் என் குணங்களின் ஒளி மங்கிவிடும். அவரது பேரன்பிற்கு நான் சிறிதும் உரியவனில்லை என்பதை அறிவுறுத்த வேண்டியது உன் பொறுப்பு!’

இதுவரை அவர் சொல்லியபடியெல்லாம் சந்தகன் செய்து வந்தான் அவர் கொடுத்த நகைகளையும் வாங்கி வைத்துக்கொண்டான். ஆனால் சித்தார்த்தர் ஒரே உறுதியுடன் முடிவாகக் கூறிய சொற்களை அவனால் தாங்க முடியவில்லை. அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது. கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் மறுமொழி கூற முற்பட்டான். ஆனால் தொண்டை அடைத்துவிட்டது. சிறிது நேரத்திற்குப்பின் அவன் மெல்லப் பேசலானான்:

‘உற்றார் அனைவருக்கும் துக்கத்தை அளித்துத் தாங்கள் செய்யும் காரியத்தால், சேறு நிறைந்த கசத்தில் வீழ்ந்த யானைபோல், என் உள்ளம் தத்தளிக்கிறது. இரும்பு நெஞ்சு உடையவர்களையும், தங்களுடைய பிடிவாதமான செயல் அழவைத்துவிடும். அப்படியிருக்கையில், அன்பினால் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் இத் துன்பத்தை எவ்வாறு தாங்க முடியும்!

‘அரண்மனையில் இருக்கவேண்டிய உங்களுடைய மலர்போன்ற மெல்லிய உடல் தருப்பைப் புல் நிறைந்த காட்டுத் தரையில் எப்படிப் படுத்திருக்க முடியும்!

‘நகரிலே தாங்கள் அழைத்தவுடன் நான் குதிரையைக் கொண்டு வந்தேன். கொண்டு வந்தது நானல்ல–விதி தான் என்னை அப்படிச் செய்யும்படி உந்தியிருக்க வேண்டும். அதற்குப் பின்னால், இப்போது மறுபடி குதிரையைக் கொண்டு நான் நகருக்குள் எப்படித் திருப்பிச் செல்ல முடியும்? கபிலவாஸ்து முழுமைக்குமே சோகம் விளைவிக்கும் செய்தியுடன் திரும்பிச் செல்ல என் மனம் எப்படி இசையும்?

தேடுதற்கு அரிய திரவியமாக எண்ணித் தங்களைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வந்த வயோதிகத் தந்தையின் அன்பை எண்ணிப் பாருங்கள்! முகத்தின் மேல் முகம் வைத்து முத்தாடி உங்களை வளர்த்த சிற்றன் னையைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! நற்குணங்கள் அனைத்தும் பொருந்திய தங்கள் தேவியை எண்ணிப் பாருங்கள்! அறத்தின் நிலையமாகவும், புகழின் புகலிடமாகவும் விளங்கும் தாங்களே யசோதரையின் இளங் குமரனைக் கைவிடத் துணியலாமா?

‘நாட்டையும் நகரத்தையும் உற்றோரையும் பெற்றோரையும் கைவிடத் துணிந்தது ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் பாதங்களைத் தவிர வேறு சரணில்லாத என்னைக் கைவிடுவது நியாயமா?

‘என் உயிரே தீயில் வெந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் உங்களைக் கொடிய கானகத்திலே விட்டுவிட்டு நான் ஊருக்குத் திரும்புதல் இயலாது.

‘நான் மட்டும் நகருக்குத் திரும்பினால், அரசர் என்னை என்ன சொல்லுவார்? “என்ன செய்தி?” என்று தங்கள் தேவி என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்லி வாழப் போகிறேன்!

‘என்னிடம் கருணை காட்டுங்கள்; உடனே திரும்பி வாருங்கள்!’

பேரன்பு கொண்டவர்களைப் பிரிவது அரிது என்பதை .உணர்ந்த சித்தார்த்தர், அவனுக்கு மேலும் பல நீதிகளை எடுத்துரைக்கலானார்: ‘பந்துக்களிடம் பாசம் வைத்து நான் இப்போது மீண்டு வந்தாலும், பின்னாலும் ஆள் பார்த்து உழலும் கூற்று எங்களைப் பிரிப்பது உறுதி. இன்னும் எத்தனை எத்தனையோ பிறவி யெடுக்க வேண்டிய ஜீவன்களுக்கு மரணம் இயற்கையல்லவா? என்னைப் பெற்றெடுத்த தாயை எண்ணிப்பார்! இப்போது அவள் எங்கே, நான் எங்கே இருக்கின்றோம்? எங்களுக்குள் என்ன தொடர்பு இருக்கிறது? பறவைகள் கூடுகளை விட்டுப் பறந்து செல்லுதல்போல, எல்லா உயிர்களும் உடல்களை விட்டுப் பறக்கவேண்டியவைகளே : உயிர்கள் கூடுதலும் பிரிதலும் வானத்திலே மேகங்கள் சேர்ந்து சிதறுவது போலத்தான். “நாம் சேர்ந்திருக்கிறோம்” என்று எண்ணுவதே ஒரு கனவு. அப்படி இருக்கையில் எந்தப் பொருளையும் நமது என்று நினைப்பதும் தவறாகும். உலகமே மாறி விடுகிறது. இதை உணராமல் நாம் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

‘ஆதலால் என் உண்மை ண்பனாகிய நீ சோகத்தை விட்டுத் திரும்பிச் செல்வதே முறை. மேற்கொண்டும் உன் அன்பு நிலைத்திருக்குமானால், பின்னால் ஒரு முறை வந்து பார்த்துக்கொள்ளலாம்.’

‘கபிலவாஸ்துவின் மக்களுக்கு என் உறுதியை உள்ள படியே விளக்கிச் சொல்லிவிடு! “நீங்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பை விட்டு விடுங்கள்! வயோதி கத்தையும், சாவையும் அழித்து வெற்றிகொண்டு அவர் விரைவிலே இங்கு திரும்புவார்; இல்லாவிடின், தமது கோரிக்கை நிறைவேறாமல், தாமே அழிந்துவிடுவார்!” என்று தெரிவித்துவிடு!’

இந்தச் சொற்களை அருகிலேயிருத்து கேட்டுக்கொண்டிருந்த குதிரை கண்டகம் தன் நாவினால் அவர் பாதங்களை வருடிக் கண்களிலிருந்து நெருப்புத் துளிகளைப் போன்ற கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தது. அதன் உணர்ச்சியைக் கண்ட சித்தார்த்தர் உள்ளன்போடு அதைத் தடவிக் கொடுத்தார். தரும சக்கரம் பொறித்த அவருடைய திருக்கரத்தால் அதைத் தட்டிக் கொடுத்து, பரிகளுக்குரிய நன்றியை நீ நன்கு காட்டிவிட்டாய். துயரத்தை ஒழித்துச் சாந்தியோடிருப்பாயாக! நீ செய்த சேவைக்கு விரைவிலே உனக்குப் பயன் கிட்டும்!’ என்று கூறினார்.

பின்னர் சந்தகன் கையிலே கொடுத்திருந்த தமது உடை வாளை வாங்கி, உறையிலேயிருந்து அதை வெளியேயெடுத்தார். அக்காட்சி புற்றிலிருந்து பளபளப் பான பாம்பு வெளியேறுவது போல் இருந்தது. நவரத்தினங்கள் பதித்துத் தங்கப் பிடியுடன் விளங்கிய அந்த வாளைச் சித்தார்த்தர் தலைக்கு மேல் உயர்த்தித் தமது தலைமுடியைத் தலைப்பாகையோடு சேர்த்து அறுத்தெடுத்து, அதனை இடது கையால் ஆகாயத்திலே எறிந்து விட்டார்.[1]

நகைகள் ஒழிந்தன; முடிமணி ஒழிந்தது; மெல்லிய மஸ்லின்’ தலைப்பாகையும் காற்றிலே பறந்து விட்டது; அரச குமாரரின் அழகுக்கேற்ற இந்திர நீலம் போன்ற குஞ்சியும் வெட்டப்பெற்று விட்டது. மற்ற உடைகளையும் களைந்து விட்டுக் காஷாய உடை அணியவேண்டியது ஒன்றே எஞ்சியிருந்தது.

அந்த நேரத்தில் அங்கே காவியுடை அணிந்து, வில்லேந்திய வேடன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவனுடைய உடைக்கும் கையிலேந்திய வில்லுக்கும் பொருத்த மில்லையே என்று சித்தார்த்தர் பார்த்துத் திகைத்துக் கொண்டிருந்தார். அந்த விவரத்தை வேடனே விளக்கிச் சொல்லி விட்டான். சீவர உடையைக் கண்டால் தன்னைத் துறவி என்று எண்ணி வன விலங்குகள் விலகி ஓடாமல் நிற்கின்றன என்றும், அதனால் தான் வேட்டையாட எளிதாகிறது என்றும் அவன் கூறினான். இளவரசரின் வெண்பட்டு உடையைப் பார்த்து, அவர் இந்திரன் போல விளங்குவதாக அவன் எண்ணினான். அவ்வேடனுடைய காவி ஆடையிலேயே அவருடைய கண்கள் பதிந்திருந்தன. ‘நாம் இருவரும் உடைகளை மாற்றிக் கொள்வோமா?’ என்று இளவரசர் வேடனைக் கேட்டார்.

உடனே அவனும் அதற்கு இசைந்து, காஷாயத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டு, அவருடைய உடையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மறைந்து விட்டான். அவன் போகுமுன்பு, உயிர்வதை பாவம் என்று சித்தார்த்தர் அவனுக்கு உபதேசம் செய்தனுப்பினார். அவ்வேடனும் ஒரு தேவன் என்று வரலாறுகள் கூறுகின்றன.

காவியுடையுடன் சித்தார்த்தர் சந்தகனுக்கு விடை சொல்லி விட்டு அருகேயிருந்த ஆசிரமத்தை நோக்கி நடக்கலானார். அவருடைய திருக்கோலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தகன், துக்கம் தாங்காமல், தன் கண்களை என்ன செய்யலாம் என்று அறியாமல், அழுது அரற்ற ஆரம்பித்தான். பிறகு குதிரையை அணைத்து அழைத்துக் கொண்டு, அவன் நகரை நோக்கித் திரும்பினான். வழியெங்கும் அழுதல், அழுங்குதல், அரற்றுதல் ஐயனை எண்ணிப் புலம்புதலோடு, அடிக்கடி தவறி விழுந்து கொண்டே அவன் சென்றான். அவனுடைய உடல் தான் நடந்து கொண்டிருந்ததேயன்றி, ஆவி அநோம நதிக்கரையிலேயே இருந்தது. கண்டகமும் கண்ணீர் பெருக்கித் தள்ளாடிக் கொண்டே, மெல்ல மெல்ல நடந்து சென்றது? வழியிலே அது புல்லைத் தீண்டவில்லை, நீரும் பருகவில்லை அடிக்கடி திரும்பி வள்ளல் வசிக்கும் வனத்தை எண்ணிக் கனைத்துக் கொண்டிருந்தது.

பார்க்கவர் தவப் பள்ளி

சந்தகன் அகன்ற பின், சித்தார்த்தர் பார்க்கவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அங்குள்ள தவமுனிவர்களை வணங்கி, அவர்களுடன் அளவளாவிப் பேசிக்கொண் டிருந்தார். காவியுடையிலும் அவருடைய கம்பீரம் குன்ற வில்லை. அவருடைய முகப் பொலிவைக் கண்டு தாபதர் அனைவரும் அவரிடம் அளவற்ற அன்பு கொண்டு மரியாதை செய்தனர்.

தவப் பள்ளியிலே முனிவர்கள் பலப்பல முறைகளில் தவம் புரிவதை அறிய வேண்டும் என்று கருதிச் சித்தார்த்தர் அவர்களைப் பார்த்து, ‘இன்று தான் நான் தவப் பள்ளியை என் வாழ்க்கையில் முதல் முறையாகப் பார்க்கிறேன். தவமுறைகள் எவையும் எனக்குத் தெரியாததால், தயைகூர்ந்து தாங்கள் இங்கே புரிந்துவரும் தவத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்’ என்று விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

வேதியராகிய பார்க்கவர் தாமும் மற்றவர்களும் மேற் கொண்டுள்ள தவமுறைகளை விளக்கிக் கூறினார். உழுது பயிரிட்டு விளையும் உணவுப் பொருள்களை அவர்கள் தீண்டுவதில்லை. காட்டில் தாமாக விளைந்துள்ள தானியங்களையும், காய்கள், கனிகள், இலைகள், கிழங்குகளையுமே புசித்து வந்தார்கள். சிலர் மான்களைப் போல் புல்லை மட்டும் உண்டு வந்தனர். சிலர், பாம்புகள் காற்று வாங்குவது போல், வாயுவை மட்டும் பருகி வந்தனர். சிலர் நெருப்பிலே நின்று தவம் செய்து வந்தனர். சிலர் நீரிலே நின்று தவம் செய்து வந்தனர். சடை முடி தாங்கிய வேறு சிலர் வேத கீதங்களுடன் அக்கினியை வழிபட்டு வந்தனர். உடல்களுக்குக் கொடிய துன்பங்களை இழைத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் எல்லோரும் சுவர்க்கத்தை அடையலாம் என்று நம்பிக் கொண்டிருப்பதாகப் பார்க்கவர் கூறினார்.

கேவலம் சுவர்க்கத்திற்காக மட்டும் அவர்கள் அத்தனை பாடுகள் படுவதைப் பற்றிச் சித்தார்த்தர் சிந்தித்துப் பார்த்தார். எல்லா உலகங்களையும் போல், சுவர்க்கமும் மாறுதலுக்கு உட்பட்டதே என்றும், அந்தத் தாபதர்கள் அடைவது அற்பமான இலாபமே என்றும் அவர் எண்ணினார். அவருடைய பரிசீலனையில் தோன்றிய கருத்துக்களை அவர் தமக்குத் தாமே கூறிக் கொண்டார்: ‘வனத்திலிருந்து தவம் செய்து இவர்கள் பெறப் போவது மீண்டும் தவம் புரியத்தக்க வனமே யாகும். உயிர்வாழ்வில் அடங்கியிருக்கும் தீமைகளை ஆராய்ந்து அறியாமல், ஆசை காரணமாகத் தவங்கள் என்ற பெயருடன் வேதனைக்குள்ளாக்குதல், வேதனையைக் கொடுத்து வேதனையையே விலைக்கு வாங்குதல் போன்றது. உலக வாழ்வில் ஆசை கொண்டவர்களும், சுவர்க்க போகத்தில் ஆசை கொண்டவர்களும், எல்லோரும் தம் இலட்சியத்தை அடைய முடியாமல் துன்பத்திலேயே வீழ்கிறார்கள்.

‘பவித்திரமான உணவினால் புண்ணியம் கிடைத்து விடும் என்றால் புல்லைத் தின்னும் மான்களும் புண்ணிய மூர்த்திகளே! வேண்டுமென்றே உடலுக்குத் துன்பம் கேடு தன் புண்ணியம் என்றால், இன்பம் தேடுதலையே இலட்சியமாய்க் கொள்வது மட்டும் ஏன் புண்ணியமாகாது? தண்ணீரைத் தெளித்து விட்டு, “இது புனிதத் தலம்!’ என்று கூறுவதால், ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத் தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சியே யாகும் தண்ணீரால் பாவத்தைக் கழுவமுடியாது. தண்ணீர் தண்ணீரே தவிர வேறில்லை. நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால், மீன்களே முதலில் சுவர்க்கத்திகு உரியவை.

‘மனத்தின் போக்கினாலேயே உடல் இயங்குகின்றது. அல்லது இயக்கமின்றி நின்று விடுகின்றது. ஆதலால் சித்தத்தை அடக்குதலே சிறந்த வழியாக இருத்தல் வேண்டும். சிந்தனையை நீக்கி விட்டால், உடல் வெறும் மரக்கட்டைதான்!’

அன்று மாலைவரை முனிவர்கள் பல இடங்களிலே பரவித் தவம் செய்து கொண்டிருந்தனர். அந்தி மாலையில் எல்லோரும் ஆசிரமத்திற்கு வந்து கூடினர். அக்கினி வளர்த்து அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

சித்தார்த்தர் அவர்களோடு சில நாட்கள் தங்கியிருந்து விட்டு, அவர்களுடைய தவமுறைகளை அறிந்து கொண்ட பின், அங்கிருந்து வேறிடம் செல்ல வேண்டும் என்று கருதினார். முனிவர்கள் அவர் பிரிந்து செல்வதைப் பொறுக்க முடியாமல், தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர் பிரிவு ‘உடலிலிருந்து ஆவி பிரிவது போலிருக்கிறது!’ என்று கூறினார் பார்க்கவர்.

சித்தார்த்தர் அவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறினார். உங்களுடைய உபசார மொழிகள் அன்பினால் என்னை நீராட்டியது போல் இருக்கின்றன. முன்னால் தருமத்தைப் பற்றிய கருத்து எனக்குத் தெளிவாகிய சமயத்தில் எவ்வாறு ஆனந்த முண்டாயிற்றோ, அதே ஆனந்தம் இப்போதும் உண்டாகின்றது. உங்களைப் பிரிவதில் எனக்கும் துக்கந்தான். ஆனால் என் இலட்சியத்தை அடைய வெளியே தான் செல்ல வேண்டியிருக்கின்றது. உங்களுடைய குறிக்கோள் சுவர்க்கம்; எனது குறிக்கோள் பிறப்பை அறுத்தல். இரண்டும் வேறுபட்ட இலட்சியங்கள்!’ என்று அவர் தம் கருத்தைத் தெளிவுபடுத்திக் கூறினார்.

சடையும் தாடியும் வளர்த்து, மரவுரிகளை அணிந்து, ஊன் வாட வாடத் தவம் செய்து கொண்டிருந்த அம் முனிவர்களைப் பரிவோடு நோக்கி, அவர் தமக்கு விடையளிக்கும் படி வேண்டினார்.

அப்போது அங்கேயிருந்த வேதியர் ஒருவர், சித்தார்த் தரை வாழ்த்தி, அவருடைய குறிக்கோள் மிக்க சிறப்பு டையது என்றும், அவர் மேற்கொண்டு விந்திய கோஷ்தானத்தில் பெருந்தவமியற்றி வந்த ஆலார காலாமரிடம்[2] போய் உபதேசம் பெறுமாறு யோசனை கூறிவிட்டு, ‘அவருடைய போதனையில் உமக்கு விருப்பமிருந்தால், அதனை நீர் ஏற்றுக் கொள்வீர். ஆனால் பின்னால் அவருடைய தத்துவத்தையும் கடந்து நீர் செல்ல வேண்டியிருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது. இதுவரை, முந்திய யுகங்களிலேயும், மகரிஷிகள் அடையாத மெய்ஞ் ஞானத்தைப் பெற்று, நீர் உலகின் ஞான தேசிகராக விளங்கப் போகிறீர்!’ என்றும் சொன்னார்.

‘ நல்லது, அவ்வாறே செய்கிறேன்!’ என்று சொல்லி விட்டுச் சித்தார்த்தர் முனிவர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

மகத நாட்டில் பாண்டர மலைக் குகையிலே தவப் பள்ளியில் வைகும் ஆலார காலாமரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு, அவர் காட்டுச் சாலை வழியாக நெடுந்தூரம் நடந்து கொண்டேயிருந்தார் வழியிலே ஓய்வெடுத்துக் கொள்வதற்காக ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் தங்கினார்.

அந்த இடத்திலே கபிலவாஸ்துவிலிருந்து புறப்பட்டு வந்திருந்த அரசருடைய குலக் குருவும், மந்திரியும் அவரைக் கண்டு, அருகே சென்று அமர்ந்தனர். அவரும் அவர்களை முறைப்படி வரவேற்று வணக்கம் கூறினாள். அவர்கள் அரசரின் பிரதிநிதிகளாக வந்திருந்தனர். ‘உமது மைந்தரோடும், அவருடைய விதியோடும் போராடி, அவரைத் திரும்ப அழைத்துவர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்!’ என்று அவர்கள் சுத்தோதனருக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தனர்.

கபிலை நிகழ்ச்சிகள்

சந்தகன் குதிரையோடு தனியே தலைநகருக்குத் திரும்பியபோது நகரமக்கள் அனைவருமே அவனை வெறுத்துப் பேசினர். ‘எல்லோரும் திரண்டு வனத்திற்கு ஏகுவோம்!’ என்று கிளம்பினர். அரண்மனையில் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்த ஆடவர், பெண்டிர் அனைவரும் அவனையும் குதிரையையும் பழித்தனர். சந்தகன் தானும் அழுது கொண்டே எல்லோர்க்கும் சமாதானம் கூறினான்.

தேவி யசோதரை துயரத்தால் உளம் நொந்து, கோபத்தால் கொதித்துக் குமுறலானாள்: ‘சந்தகா! என் இதய நாதனை எங்கே விட்டு வந்தாய்? நல்லவனைப் போல இங்கே ஏன் அழுகிறாய்? கொடியோய்! இரக்கமின்றி எனக்குத் துரோகம் செய்து அவரை அழைத்துப் போனதற்கும் இந்தக் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இளவரசருக்கு நீ ஏற்ற நண்பன் தான்! சாதுரியமில்லாத மூட நண்பனைப் பார்க்கிலும், புத்திமானான பகைவனே மேலானவன்! உனது செயலால் அரச வமிசத்திற்கே தாங்க முடியாத துயரம் வந்து சேர்ந்துவிட்டது. அரண்மனைப் பெண்கள் அனைவரும் அழுது அரற்றுகின்றனர். அடுக்கடுக்காக அமைந்துள்ள இந்த அரண்மனைகளே அழுகின்றனவே!......பரிகளிற் சிறந்த கண்டகமுமா என் குடியைக் கெடுக்க வேண்டும்! நள்ளிரவில் திருடர்கள் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வதுபோல், அது என் நாயகத்தைக் கொண்டு சென்று விட்டதே! போரிலே வாள்களும், வாளிகளும் தாக்கும் போதெல்லாம் தாங்கிய கண்டகம், எதற்காகப் பயந்து என் கோமானைச் சுமந்து சென்று விட்டது?’

சந்தகன் அழுது தேம்புகின்ற தேவியைக் கண்டு, துயரம் தாங்காமல், நிகழ்ந்த செய்திகளை விவரமாகக் கூறினான்: ‘எல்லாம் தேவர் செயல்! விதியின் கூற்று! என் செயல்களுக்கும் நான் பொறுப்பில்லை. என்னைச் செய்யும்படி தூண்டிய ஏதோ ஒரு சக்தியின் கருவியாக நான் இருந்தேன்! - அரண்மனைக் கதவுகளையும், கோட்டைக் கதவுகளையும் திறந்து விட்டு, அடைத்தது யார்? கண்டகத்தின் குளம்புகள் தரையை மிதித்தால் ஓசை கேட்குமென்று அவை தரையில் தோயாமலே ஓடும்படி செய்தது யார்? அரசர் நியமித்துள்ள ஆயிரக் கணக்கான காவலாளிகளும் ஒரே சமயத்தில் உறங்கிக் கிடந்ததன் காரணம் என்ன? காட்டுக்குப் போனவுடன் தேவர் உலகிலிருந்து காஷாய உடையைக் கொண்டு மிக வேகமாக ஒருவன் ஓடி வந்து அண்ணலிடம் கொடுத்ததற்கு என்ன காரணம்? என்னையும் கண்டகத்தையும் குறை கூறுதல் வீண் பழியேயாகும்!’

இளவரசர் தவம் செய்யப் போகும்போது பண்டைக் காலத்து அரசரைப் போல் தன்னையும் வனத்திற்கு ஏன் அழைத்துப் போகவில்லை என்று யசோதரை ஏங்கினாள். ‘சுவர்க்கத்தில் எனக்கு ஆசையில்லை. வைராக்கியத்தோடு முயன்றால், சாதாரண மக்கள் கூட அதை அடைய முடியும். இம்மையிலும் மறுமையிலும் என் நாயகனைப் பிரியாமலிருப்பது ஒன்றையே நான் விரும்பினேன். அவரே எனக்குத் துரோகம் செய்து விட்டாரே?’ என்று புலம்பினாள். ‘பகைவரையும் பரிவு கொள்ளச் செய்யும் இந்தப் பச்சைக் குழந்தையையும் பரிதவிக்க விட்டுச் சென்ற அவர் உள்ளம் இரும்பாகத்தான் இருக்க வேண்டும்! என் செல்வர் சென்றுவிட்டார் என்றதைக் கண்ட பின்னும், இன்னும் உடைந்து சிதறாத என் உள்ளமும் பாறையாகவோ, இரும்பாகவோதான் இருக்க வேண்டும்!’ என்று தன்னையும் நொந்து கொண்டாள்.

கன்றைப் பிரிந்த கற்றாவைப்போல் அன்னை கௌதமி துடித்துக் கொண்டிருந்தாள், சீத மதிக் குடையின் கீழே சிம்மாசனத்தில் இருக்க வேண்டிய உடல் வனத்திலே வாடுவதை அவளால் சகிக்க முடியவில்லை சித்தார்த்தருடைய உடலழகுகளைப் பற்றி எண்ணி எண்ணி உருகினாள். ‘அந்தத் தருமமூர்த்தியை அரசனாகப் பெறுவதற்குப் பூமாதேவிக்குப் பாக்கியமில்லை! குடிகளுக்கும் அத்தகைய அரசனை அடையத் தகுதி யில்லாமற் போய் விட்டது!’ என்று அவள் புலம்பினாள்.

அரசரோ தமது சோகத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு மைந்தன் திரும்பி வர வேண்டும் என்று ஆலயத்தில் சென்று தவங்கிடந்தார். சந்தகனும் குதிரையும் திரும்பி வந்ததைக் கேள்வியுற்று, அவரும் வெளியே வந்து பார்த்தார். கோமகனைக் காணவில்லை; குதிரை மட்டுமே நின்று கொண்டிருந்தது! சந்தகன் கூறிய விவரங்களைக் கேட்டு, அவர் தாமே குற்றவாளி என்று தீர்மானித்தார் மைந்தன் வனம் புகுந்தான் என்றதைக் கேட்டதும், ஆவி பிரிந்த தசரதனைப் போல், தாமும் உயிர் துறக்காமலிருந்த பெருங்குற்றம் என்று கருதி, அவர் சித்தம் தடுமாற ஆரம்பித்தார். நெஞ்சிலே எவ்வளவு வீரமும், உறுதியும் இருந்தபோதிலும், புத்திர சோகத்தின் முன்னால் அவை நிலைத்திருக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் தான் அரசருடைய குலகுருவும் மந்திரியும் முன் வந்து தாங்கள் போய்க் குரிசிலை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டனர்.

சித்தார்த்தரின் உறுதி

வனத்திலே சித்தார்த்தரைக் கண்ட குருதேவரும் அமைச்சரும் தங்களுக்குத் தெரிந்த நீதிகளையெல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தனர். சிறிது காலம் ஆட்சி செய்து விட்டுச் சாத்திர முறைப்படி பின்னால் கானகத்தை அடையலாம் என்றும், அரசர் முதல் மக்கள் ஈறாக அல்லற்பட்டுத் துடிப்பதை ஆற்ற வேண்டியது அவர் கடன் என்றும், எல்லா உயிர்களுக்கும் அன்பு காட்டுவதே அறம் என்றும், துறவறம் மேற்கொள்ளக் காட்டுக்கு ஓடிச் செல்ல வேண்டியதில்லை என்றும், அரண்மனையிலிருந்து புலனடக்கத்தைக் கைக்கொண்டு உள்ளத் துறவு கொள்வதே சிறந்தது என்றும் குலகுரு வற்புறுத்திச் சொன்னார். மேலும், “நீ மஞ்சன நீராடி, மகுடம் புனைந்தவுடன் வெண் கொற்றக் குடையுடன் உன்னை ஒரு முறை கண்டு, அந்த மகிழ்ச்சியோடு நான் துறவு பூண்டு வனம் செல்ல வேண்டும்!” என்று மன்னர் உனக்குச் செய்தியனுப்பியுள்ளார்!’ என்றும் கூறினார்.

சித்தார்த்தர் அரசரின் சோகத்திற்குத் தாம் காரணரில்லை என்றும், மக்களும் சுற்றமும் துக்க காரணராக இருக்க முடியாது என்றும், அறியாமையாலேயே-மயக்கத்தாலேயே- துக்கம் தோன்றுகிறது என்றும் விரிவாக விளக்கிக் கூறினார். உலக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களே காலத்தைக் கவனிக்க வேண்டும் என்றும், பேரின்பமாகிய விடுதலைக்கு எக்காலமும் நற்காலந்தான் என்றும், காலத்திலே தோன்றும் பொருள்கள் யாவும் அழிந்தொழியும் இயல்புள்ளவை என்றும், மரணம் காலத்தின்மீது முழு ஆதிக்கியம் பெற்றிருப்பதால், மரணத்தை ஒழித்தால்தான் காலமும் மறையும் என்றும் எடுத்துரைத்தார். முடிவாக அவர் கூறியதாவது : பொன்மயமான அரண்மனை. தீப்பற்றி எரிவதாக எனக்குத் தோன்றுகிறது; அங்கேயுள்ள அறுசுவை உண்டிகள் நஞ்சு கலந்தவையாகத் தோன்றுகின்றன. மலரணை முதலைகள் நிறைந்த பொய்கையாகக் காட்சியளிக்கிறது.

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்திற்கு இருப்பிடம்; புத்திமான்கள் அங்கே வசிக்க மாட்டார்கள்.

‘அரசாட்சியையும் புலன் இன்பங்களையும் நான் புறக்கணித்து விட்டேன். சாந்தி நிறைந்த இந்த வனங்களை விட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து, இரவும் பகலும் என் பாவ மூட்டைகளைப் பெருக்கிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மேலும் சாக்கிய மரபிலே தோன்றிய நான் முன் வைத்த காலைப் பின்வாங்குவது ஏளனமான இழி செயலாகும். மேலே துவராடையுடனும், அகத்திலே இன்பங்களில் ஆசையுடனும், நான் அரண்மனையிலே வேடதாரியாக நடித்துக் கொண்டிருக்க இயலாது. வேண்டாம் என்று நான் உமிழ்ந்து விட்ட எச்சிலை மீண்டும் துய்க்க விரும்புவது முறையாகுமா? தீப்பற்றி எரியும் வீட்டிலிருந்து தப்பியவன் மீண்டும் அதன் நெருப்பிடையே புகுவதற்கு விரும்புவானா? பிறப்பு, முதுமை, இறப்பு ஆகிய தீமைகளைக் கண்டு, அவைகளால் விளை யும் துக்கத்திலிருந்து தப்புவதற்காகத் துறவியான நான், மீண்டும் அவைகளுடன் குலாவிக் கொண்டு வாழ முடியுமா?

‘அரண்மனையில் இருந்து கொண்டே துக்கம் நீங்கி முக்தி பெற முயல்வது நடவாத காரியம். விடுதலை சாந்தியிலிருந்தே விளையும். அரசனாயிருத்தல் துயரத்தை யும் பாவத்தையும் பெருக்கிக் கொள்வதிலேயே முடியும்.[3]

‘துறவறம் பூண்டு வனத்தில் வசிக்கையில் அரச போகங்களில் ஆர்வம் கொள்ளலும் இயலாத காரியம். இவ்விரண்டும் முரண்பாடானவை; நீரும் நெருப்பும், ஓய்வும் இயக்கமும் போல, இவை சேர்ந்திருக்க முடியாது.

நிலைமை இவ்வாறிருக்கையில் நான் ஏன் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்?’

‘சித்தார்த்தர் கூறிய காரணங்களைக் குருதேவரோடு அமைச்சரும் நன்கு செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவை பொருத்தமானவை என்றே அவருக்குத் தோன்றின. ஆயினும் வந்த காரியம் முடிய வேண்டுமே என்பதற்காக, அவரும் சில நீதிகளையும், தத்துவ நூல் முடிபுகளையும் எடுத்துச் சொன்னார். காணமுடியாத பயனைக் கருதிக் கண் முன்பு கிடைக்கும் பயனைக் கை விடு தல் ஆராய்ச்சிக்குப் பொருத்தமில்லை என்றும், சிலர் மறுபிறப்பு உண்டென்றும், சிலர் இல்லையென்றும் கூறுவதால் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது என்றும், சிலர் எல்லாப் பொருள்களும் அதன தன் சுபாவத்தினாலே தாமாகவே தோன்றியுள்ளதாகக் கூறுகின்றனர் என்றும், அவர் தத்துவ முரண்பாடுகளை எடுத்துக் காட்டினார்.

பொருள்களின் இயல்பை மனிதர் மாற்ற முடியா தென்றால், வேதனைகளையும், வயோதிகத்தையும், மரணத்தையும் ஒழித்து விட முயல்வது வீண் வேலையாகும் என்றும் அவர் கூறினார். ‘முள்ளைக் கூர்மையாக்கியது யார்? மானின் இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும், அவைகளின் பலவகைப்பட்ட உருவங்கள், நிறங்கள், பழக்கங்களை அளித்தது யார்? சுபாவமே! எவருடைய இச்சை காரணமாகவும் இவை ஏற்படவில்லை; இச்சையோ கருத்தோ இல்லாதபோது, இச்சைப்படுவானோ, கருதுவோனோ இல்லாமற் போகிறான்’ என்று கூறுவோ ருடைய கருத்தையும், ‘ஈசுவரனிடத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுவதால் ஜீவான்மா என்ன முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது? உலகத்தை இயங்க வைப்பவனே அந்த இயக்கம் நிற்க வேண்டியதையும் கவனித்துக் கொள்வான்’ என்று கூறுவோருடைய கருத்தையும் அவர் விளக்கி யுரைத்தார்.

சித்தார்த்தர் ஏதோ ஒரு தத்துவத்தை எண்ணிக் கொண்டு உறுதியாகத் துறவு பூண்டிருப்பதில் அசைவு கொடுக்கும்படி அவர் பல திறப்பட்ட கொள்கைகளையும் கூறிவிட்டு, முடிவாகத் தாம் எடுத்துக் கொண்ட விஷயத்தையும் மெதுவாக உணர்த்த முயன்றார். மனிதனுக்கு மூன்று கடமைகள் உண்டென்றும், தெய்வங்களுக்காக யாகங்கள் செய்தலும், இருடிகளுக்காக வேதங்கள் முதலிய வற்றைப் பாராயணம் செய்தலும், பிதிர்க்களுக்காக வமிச விருத்தி செய்தலுமே அக்கடமைகள் என்றும் கூறினார். தவிரவும் முற்காலத்து மன்னர்கள் சிலர் துறவறம் பூண்ட பின்பு, அதைக் கைவிட்டுத் திரும்பிய கதைகளையும் எடுத்துக் காட்டினார் ‘ஆதலால் தவப் பள்ளியிலிருந்து ஒருவன் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக இல்லத்திற்குத் திரும்புவதில் பாவம் எதுவுமில்லை!’ என்று கூறி அவர் தமது சொற்பொழிவுக்கு முத்தாய்ப்பும் வைத்தார்.

அன்போடும் ஆதரவோடும் அமைச்சர் அறிவுறுத்திய கூற்றுக்களை யெல்லாம் அமைதியாகக் சேட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தர், தமது இலட்சியத்தை அவர் அறியும் படி உள்ளம் திறந்து பேசினார்:

‘உண்மையாக உள்ளது எது என்பதைப்பற்றி நான் பிறருடைய கூற்றுக்களை நம்பியிருக்க முடியாது; தவத்தினாலோ, தியானத்தினாலோ அதைப்பற்றி அறியக் கூடியது அனைத்தையும் நானே அறிந்து கொள்ள வேண்டும். யாரும் அறிந்திராத ஒன்றை நான் ஆராய்ச்சி யில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கில்லை. உளது என்றும், இலது என்றும், ஒன்று என்றும், பல என்றும் முரண்பாடான கருத்துக்களைப் பிறருடைய நம்பிக்கையைக் கொண்டு எந்த அறிஞன் ஏற்றுக் கொள்வான்? மனிதர்கள் அனைவரும் இருளிலே குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போலக் குருட்டாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

‘பரம்பரையாக வந்த புனிதமான சாத்திரங்களே எதையும் உறுதிப் படுத்திக் கூற முடியவில்லை. நம்பிக்கைக்கு உரியவர்கள் கூறியுள்ளதே நன்மையானதா யிருக்கும். நம்பிக்கை என்பது மாசுகளற்ற நிலையிலேயே தோன்றும். மாசற்றவர் அசத்தியம் கூற மாட்டார்.

‘நீங்கள் சொல்லிய மன்னர்கள் பலரும் தங்கள் விரதத்தை முறித்து நாடு திரும்பியவர்கள், கடமையை உணர்வதற்கு அவர்கள் எப்படி வழிகாட்டிகளாக விளங்க முடியும்?

‘ஆதலால் என் உறுதியை எதுவும் கலைக்க முடியாது. கதிரவனே வானத்திலிருந்து மண் மீது வீழ்ந்து விட்டாலும், இமயமலையே அசைந்து ஆடி விட்டாலும், மெய்ப் பொருளை அறியாமல், வெளிப் பொருள்களிலே நாட்டம் செலுத்தும் புலன்களோடு, நான் என் மாளிகைக்குத் திரும்பப் போவதில்லை!

‘என் இலட்சியத்தை அடையாமல் நான் என் மாளிகைக்குத் திரும்புவதைவிட, எரிகின்ற தழலிலே மூழ்கி விடுவேன்!’

இவ்வாறு கூறிவிட்டுச் சித்தார்த்தர், தம் சொற்களைச், செயலிலே காட்டுவது போல, அங்கிருந்து எழுந்து வழி நடைக் கொண்டு விட்டார்.

அமைச்சரும், குலகுருவும் அண்ணல் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே, தங்கள் வழியே திரும்பினர். இருவர் கண்களிலும் மழை நீர் பொழிவது போலக் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

தருமத்தைத் தவிர வேறு துணையின்றி, மன்னுயிர் முதல்வரான போதி சத்துவர் காட்டு வழியாகத் தமது புனித யாத்திரையை மேற்கொண்டார். இளவரசர் சித்தார்த்தராக அவ்வனத்தில் நுழைந்தவர் கௌதம பிக்குவாக வெளியேறி நடந்து கொண்டிருந்தார்.

சித்தார்த்தருடைய இந்தத் துறவுபற்றி ‘மஜ்ஜிம நிகாயம்-அரிய பரியேசன’ சூத்திரத்தில் அவரே கூறி யுள்ள வாசகம் வருமாறு:

பின்னர், சீடர்களே! சிறிது காலம் கழித்து, நான் மேலும் இளமையோடு, கறுப்புக் கேசமும் வாலிபப் பருவமும் கொண்டிருக்கும் போதே, மானிட வாழ்வின் நல்ல நடு வயதிலேயே, என்னுடைய தாய் தந்தையரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதையும் பாராமல், நான் என்னுடைய தலை முடியையும், தாடி மீசைகளையும் அழித்து விட்டு, காஷாய ஆடையை அணிந்து, மனை வாழ்க்கையை விட்டு மனையற்ற வாழ்க்கையில் புகுந்தேன்.[4]

  1. ஆகாயத்திலே எறியப்பெற்ற முடி தரைக்கு வரு முன்பே தேவர்கள் அதைக் கையில் ஏந்திச் சென்று தேவ லோகத்தில் அதற்கு வழிபாடுகள் செய்தனராம்! அதற்கென்று ஒரு சேதியம் கட்டப்பெற்றதென்றும் கூறுவர். அன்று அநோம நதிக்கரையிலே சித்தார்த்தர் முடியை அறுத்தெறிந்த பின்பு அடர்ந்து வளர்ந்திருந்த அவருடைய தலை ரோமம் கத்தரித்த அளவிலேயே நின்று விட்டது என்றும், பின்னால் ஐம்பது வருட காலத்திலும் அது வளரவேயில்லை என்றும், அதனாலேயே புத்தருடைய சிலைகளிலெல்லாம் தலையில் எழுத்தாணிக் கொண்டைகள் போன்ற முடிச்சுக்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் திருப்பியனுப்பிய நகைகளைப் பின்னால் அவருடைய சிற்றன்னை ஒரு குளத்தில் எறித்ததாகவும், அந்தக் குளம் ‘ஆபரண புஷ்கரணி’ என்ற பெயருடன் புண்ணிய தீர்த்தமாகிவிட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.
  2. ஆராள ராமர் - ஆராதர், ஆராட ருத்திர ராமர் முதலிய வேறு பெயர்களாலும் இவர் குறிக்கப் பெற்றிருக்கிறார். ஆனால் புத்தர் பெருமான் ‘ஆலார காலாமா’ என்றே கூறியுள்ளார்.
  3. ஜலா லுத்தீன் ரூமி என்ற பாரசீகக் கவிஞர் இதே கருத்தை அமைத்து ஒரு பாடல் இயற்றியுள்ளார். அவர் கூறும் விவரம் பின்வருமாறு :
    இப்ராஹிம் மன்னர் ஆட்சி புரிந்த காலத்தில், ஒரு நாள் அவர் அரண்மனையிலே அரியாசனத்தில் அமர்ந்திருந்த போது, மாடியில் பல மனிதர்கள் ஓடிச் சாடும் அடியோசைகளும், கூக்குரல்களும் கேட்டன. அவர் ஆசனத்திலிருந்து இறங்கி ஒரு சாளரத்தின் வழியாக உயரே யிருந்தவர்கள் எவர்கள் என்று விசாரித்தார். உயரேயிருந்த அரண்மனைக் காவலர்கள் நடுக்கமுற்று, அரசருக்குத் தலைவணங்கி, ‘நாங்கள் தாம்- காவலர்கள்–தேடிக் கொண்டிருக்கிறோம்!’ என்று கூறினர்.
    ‘என்ன தேடுகிறீர்கள்?’
    ‘எங்கள் ஒட்டகைகளை!’
    ‘அரண்மனை மாடியில் ஒட்டகைகள் இருக்குமென்று எவர்களேனும் தேடுவார்களா?’
    ‘தங்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்கிறோம். சிம்மாசனத்தில் இருந்து கொண்டே தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல முயல்வதைப் போலவே, நாங்களும் முயற்சி செய்கிறோம்!’
  4. பிக்கு சோமானந்தருடைய ‘புத்தர் சரித்திரம்’ பார்க்கவும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/கௌதம_பிக்கு&oldid=1283883" இலிருந்து மீள்விக்கப்பட்டது