உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/பிம்பிசாரர்

விக்கிமூலம் இலிருந்து

ஏழாம் இயல்

பிம்பிசாரர்


‘பாக சாலையில் பக்குவம் செய்தும்,
யாக சாலையில் எரிவாய் ஊட்டியும்
பலவா(ம்) உயிரின் குலவே(ர்) அறுத்தல்
பழியும் பாவமும் பயக்கும் செயலாம்.’

–கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

செல்வ நெடு மாடங்கள் நிறைந்த இராஜகிருக நகரைச் சுற்றி ஐந்து பெருங்குன்றுகள் அரண்களாக அமைந்திருந்தன. அந்நகர் மகத நாட்டின் தலைநகர், சிரேணிய[1] பிம்பிசாரர் அங்கிருந்து கொண்டு தமது நல்லர சாட்சியை நடத்தி வந்தார்.

அடவி, மலை ஆறுகளையெல்லாம் கடந்து கௌதமர் செய்துவந்த யாத்திரையில் கடைசியாக இராஜகிருக நகரை அடுத்த இரத்தினகிரி என்ற குன்றில் வந்து சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கேயுள்ள சோலைகளில், பல தபசிகள் தங்கள் உடல்களை மிகவும் வருத்திக் கோரமான தவங்களைச் செய்து கொண்டிருந்தனர். கூர்மையான கற்களின்மீது படுத்தும், சுடலையில் தங்கியும், சருகுகளைப் புசித்தும், ஒற்றைக் காலால் நின்றும் அவர்கள் பல முறைகளில் தங்கள் சடலங்களை வதைத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளையெல்லாம் பார்த்த கௌதமர், வாழ்வின் துயரங்களே தாங்கமுடியாமல் இருக்கையில் அவர்கள் மேற்கொண்டும் தாமாக உடல்களை வதைத்துக் கொள்வதற்காகப் பெரிதும் இரங்கினார். உடலை வதைத்தால் சுவர்க்கம் பெறலாம் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். கௌதம முனிவர் அவர்களுக்குத் தமது கருத்தை எடுத்துக் கூறினார். உடல் உயிரின் வீடு என்றும், அந்த வீட்டை உள்ளிருந்தே இடித்துத் தகர்ப்பது அறிவுடைமை ஆகாது என்றும் அவர் கூறினார். ஆயினும் அவர்கள் கேட்பதாயில்லை.

ஆட்டு மந்தை

இரத்தினகிரியின் சாரலிலே ஒரு நாள் முற்பகலில் கௌதமர் சோலைகளையும், அங்கே பாடித் திரிந்து கொண்டிருந்த பறவைகளையும் பார்த்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தார். கதிரவன் ஒளியைப் பருகி இன்பத்தில் திளைத்துக் கொண்டு ஆயிரம் ஆயிரமாகப் பூங்கொத்துக்கள் மலர்ந்திருந்தன. வானளாவி வளர்ந்திருந்த மரங்கள் இலைகளும் தழைகளும் நிறைந்து, இன்பமயமாகக் காட்சியளித்தன. புள்ளினங்களும் யாதொரு கவலையுமின்றி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. அவைகளின் மகிழ்ச்சி கீதமாய்ப் பெருகிப் பரவிக் கொண்டிருந்தது. தாவரங்களும், பிராணிகளும், தங்களுக்கு அன்றன்று தேவையுள்ளவைகளை வெறுக்காமலும், அடைதற்கரிய பேறுகளை எண்ணிக்கொண்டு அவதிப்படாமலும் இருப்பதன் காரணம் என்ன? மானிடன் மட்டும் கைக்கு எட்டிய வாழ்வையும் கை விட்டுக் காணாத ஒன்றுக்காகக் கவலை கொண்டு தன்னையே சித்திரவதை செய்து கொண்டிருப்பது ஏன்? மனிதன் பகுத்தறிவைப் பெற்று ஜீவராசிகளுக்குத் தலைமை வகித்திருக்கிறான்; தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் வதைத்து, உதிரத்தில் தோய்ந்து வளர்ந்த தன் அறிவினால் அவன் தன்னையும் வதைத்துக் கொள்ளுகிறான் என்று கருதினார் கௌதமர்.

அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கும் வேளையில், கொடுரமாகக் காய்ந்து சொண்டிருக்கும் வெய்யிலிலே, மலைகளிலிருந்து ஓர் ஆட்டுமந்தை வந்து கொண்டிருந்தது. இரு நூறு ஆடுகள் இருக்கும்; அவைகள் புதர்களை நாடி ஓடாமல் இரண்டு ஆயர்கள் அவைகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். வழக்கமாக ஆடுகள் மாலை நேரத்திலேயே மலையிலிருந்து திரும்புவது வழக்கம். நண்பகலிலே அவைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்ட கௌதமர், அவைகள் எங்குச் செல்லுன்றன என்று ஆயர்களிடம் கேட்டார்.

பிம்பிசார மன்னர் அன்று நடத்தும் வேள்விக்காக அந்த ஆடுகளையெல்லாம் அழைத்துச் செல்வதாக ஆயர்கள் கூறினர். அன்று மாலையோடு யாகம் முடிவடைவதாயும் தெரிவித்தனர்.

அஜமேத, அசுவமேதம், நரமேதம் முதலிய எத்தனை வித யாகங்கள்! மனிதன் தான் பாவங்களையெல்லாம் வேறு ஜீவன்களின் மீது ஏற்றி, அவைகளின் தலைகளை வெட்டித் தெய்வங்களுக்குப் பலியளித்தால், தன் பாவங்கள் ஒழிந்து பேரின்பம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்திலே அவரவர் பாவ புண்ணியங்களை அவரவர் அனுபவித்துத் தீரவேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்த கௌதமர், வாயில்லாப் பிராணிகளான ஆடுகளைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினார். அவைகள் தங்கள் தலைகளைக் கொலை வாளுக்கு இரையாகக் கொடுப்பதற்காகக் காட்டு வழியாக விரைந்து சென்று கொண்டிருந்தன, உயிரில் அவைகளுக்கு எவ்வளவு ஆசையிருந்தது! சாலையின் இரு புறத்தும் இருந்த செடிகளையும் தழைகளையும் உண்டு பசியாறுவதற்கு அவைகளுக்கு எவ்வளவு ஆசை யிருந்தது! அவைகளுக்குள்ளே பெரிய ஆடுகள் குட்டி களை அழைத்துச் செல்லும் அன்புக்கு ஓர் அவதியில்லாதிருந்தது.

ஆட்டு மந்தைக்குப் பின்னால் ஒரு பெண் ஆடு ஒரு குட்டியுடன் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. அதனுடைய மற்றொரு குட்டி கால் நொண்டியாயிருந்த தால் வெய்யிலில் நடக்க முடியாமல் தள்ளாடி வந்து கொண்டிருந்தது. தாய் ஆடு அதை விட்டுப் பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக்கொண்டே யிருந்தது. கருணையின் நிலையமாகிய கௌதமர் அந்தக் காட்சியைக் கண்டதும், ஓடிச் சென்று நொண்டிக் குட்டியைப் பரிவோடு தூக்கித் தமது தோளிலே வைத்துக் கொண்டார். ‘நானும் வேள்வி காண வருகிறேன்!’ என்று கூறி, அவரும் ஆயர்களோடு தலை நகருக்குப் புறப்பட்டார்.

யாகம் தடுத்தல்

‘மனேந்தும் ஈச(ன்) உளம் நாண, ஆட்டின்
மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்’

மாலை நேரத்திலே மாநகரின் திருவாயிலை அடைநதார். கருணையே உருவெடுத்துக் கால், கரங்களோடு நடப்பது போல் விளங்கிய அருளரசைக் கண்ட மக்கள், அவர் முகப் பொலிவையும், தவக் கோலத்தையும் கண்டு சொக்கிப் போய்விட்டனர். வீதிகளிலே பெண்டுகள் வீடுகளைத் திறந்து போட்டுவிட்டு, அவர் பேரெழிலைக் கண்களால் முகந்து பருகிக்கொண்டு, மெய்மறந்து நின்றனர். நகரின் சந்தடியே அடங்கி, நாலு பக்கங்களிலிருந்தும் ஜனங்கள் கூட்டங் கூட்டமாக வந்து ஆடு சுமந்து செல்லும் ஐயனைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். வீதிகளையெல்லாம் தாண்டிச் சென்று ஐயனும் ஆயர்களும் வேள்விச் சாலையை அடைந்தார்கள்.

வேள்விச் சாலையின் நடுவே மகத நாட்டு மன்னர் பிம்பிசாரர் நின்று கொண்டிருந்தார். வேத முறைப்படி வேதியர் மந்திரம் ஓதி, அக்கினி வளர்த்து, அதில் ஆகுதிகளைப் பெய்து கொண்டிருந்தனர். தரையிலே முன்னால் வெட்டிய ஆடுகளின் ‘உதிரம் பாய்ந்திருந்தது. மற்றொரு புறத்திலே யாகத் தறியிலே ஒரு வெள்ளாடு கட்டப்பெற்றிருந்தது. தீட்சிதர் ஒருவர் வாளேந்தி அதை வெட்டப் போகும் தருணத்திலே, கௌதமர் ஓடிச்சென்று, அக்கொலையினைத் தடுத்து, அரசரைப் பார்த்து, ‘ஆட்டினைக் கொல்லாது அருள் புரியவேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டார். ஆட்டின் காலிலும், வாலிலும், கண்டத்திலும் கட்டியிறுக்கி இருந்த கட்டுக்களை அவிழ்த்து, அதை அவரே விடுதலை செய்துவிட்டார். வேள்வித் தீயின் ஒளியைப் பார்க்கிலும் விரிந்த சோதியோடு விளங்கிய அவர் திருமுகத்தை நோக்கிய வண்ணம் யாவரும் திடுக்கிட்டு நின்றனர்.

‘பாவத்தைத் தொலைப்பதற்காகக் கொலையுடன் கூடிய யாகம் செய்தல் புதிய பாவத்தையே விளைவிக்கும். பிராணிகளின் உதிரத்தால் எவனும் தன்னைப் பரிசுத்தமாக்க முடியாது. தேவர்கள் நல்லவராயின், கொலையுடன் கூடிய ஊனுடை வேள்வியால் உள்ளம் களிக்க மாட்டார்கள். அவர்கள் தீயோராயின், அத்தீயோரிடமிருந்து நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று வினவினார் விமலர்.

‘வாழும் உயிரினை வாங்கிவிடல்–இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்;


வீழும் உடலை எழுப்புதலோ—ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதையா!

‘பிள்ளையைக் கொன்று கறிசமைத்தீர்—அதன்
பெற்றோரை உண்ண அழைத்துநின்றீர் ;
வள்ளலே, உள்ளந் தெளிந்தவரே—இது
வாழ்வை யளிக்கும் செயலாமோ?

‘கன்று பசுவை மறந்திடினும்–செய்த
கருமங்கள் உம்மை விடுமோ, ஐயா?
கொன்று பழிதேட வேண்டாமையா–இனிக்
கொல்லா விரதமேற் கொள்ளுமையா!’


இவ்வாறு கருணை வள்ளல் உயிர்க்கொலை தவிர்த்து, உள்ளத்தால் ஊனமில் வேள்வியை நடத்தி வரும்படி மன்னர்க்கும் மறையோர்க்கும் பலவாறு உபதேசித்தார். ‘யாகங்களால் மன்னர்க்குப் பெருமை என்றும், மறையோர்க்குப் புண்ணியம் என்றும், பலியிடப் பெறும் உயிர்களுக்குச் சொர்க்கம் என்றும் கூறுவர். பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியிட்டுச் சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடலாமே! அவரைவிடச் சிறந்த உயிர்தான் வேறு ஏது? ஆதலால் உயிர்ப்பலி வேண்டாம்! அவசியமானால், என்னையே பலியிடுங்கள்–ஏழை ஆட்டின் உயிரை வாங்க வேண்டாம்!’ என்று அவர் முரசு முழங்கியதுபோல் முழக்கம் செய்தார்.

அருகே வந்து பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னர், களங்கமற்ற மூர்த்தியைக் கண்குளிரக் கண்டு வணங்கி, செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டினார் ‘இனி நாடெங்கும் கொலை தவிர்க்கும் படி நாளையே பறையறைவிப்பேன்!’ என்று சபதமும் செய்துகொண்டார். வேதியர்களும் ஓமகுண்டத்தீயை அவித்துவிட்டு வேள்வியை நிறுத்திக் கொண்டனர்.[2]

‘ஆண்டால் தரணியை ஆள்வார், இல்லையெனில் அகில உலகுக்கும் ஞானகுருவாக விளங்குவார்!’ என்று ஆதியில் வேதியர்கள் சாக்கிய மன்னர்க்குக் கூறிய சாக்கிய இளவரசரே தவக்கோலத்தில் அங்கு எழுந்தருளியுள்ளார் என்பதை அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்டதும், இந்திரன் பிரமனை வணங்கச் செல்வதுபோலப் பிம்பி சாரர் அவர் அண்டையில் சென்றார். உடல் நலம் பற்றி விசாரித்தார். கௌதமரும், இனிய முகத்துடன், தம் உள்ளமும் உடலும் செம்மையுற்றிருப்பதாக மறுமொழி கூறினார். பின்னர் மன்னர் அவருக்குச் செய்யவேண்டிய உபசாரங்களை யெல்லாம் முறை தவறாமல் செய்து, அவரைத் தம்மோடு இருக்கும்படி வேண்டினார். ஆனால் கௌதம பிக்கு, தாம் வந்த காரியம் முடிந்ததென்று சொல்லிவிட்டு, மீண்டும் மலையருகே தாம் வாழ்ந்துவந்த குகையை நோக்கிச் சென்று விட்டார்.

சிரேணிய மன்னர் சித்தார்த்தருடைய துறவை எண்ணிக் கவலைப்பட்டார். இளம் வயதிலேயே, மணி முடி துறந்து, காவியுடுத்து முண்டிதமான தலையுடன் ஒளியுடன் விளங்கிய உருவத்தை அவர் சிறிது நேரம் கூட மறக்க முடியவில்லை. மறு நாட் காலை, அவர் மந்திர மறையோர்களையும், மந்திரிகளையும் அழைத்துக் கொண்டு கௌதமரைத் தரிசித்து வருவதற்காக வனத்தை நோக்கிப் புறப்பட்டார்.

பிம்பிசாரரின் வேண்டுகோள்

மலையின் மீது ஒரு மரத்தின் நிழலில் அசலம்[3] போல அசைவில்லாமல் அமர்ந்திருந்த கௌதமரைக் கண்டு அவர் வணங்கி விட்டு, அருகேயிருந்த ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டு, தம் உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அவரிடம் வெளியிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘சாக்கிய குல தீபமே! தங்கள் மரபுக்கும் எனக்கும் நெருங்கிய உறவு உண்டு. தங்கள் சூரிய வமிசத்தின் பெருமையை, நான் அறிவேன். அந்த வமிசத்திலே உதித்து, இளமையும் எழிலும் கொண்ட தாங்கள், நாட்டை ஆளும் கடமையை விட்டுத் துறவு பூண்டு வந்திருப்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. இந்த விரக்தி தங்களுக்கு எப்படி வந்தது? முரட்டுத் துணிகளைத் தாங்கள் எப்படி அணிய முடிகிறது? பல வீடுகளில் வாங்கும் கேவலமான பிச்சை உணவைத் தாங்கள் எப்படி வெறுப்பின்றி உண்ண முடிகிறது?’ எனக் கேட்டார். கௌதமர் பதில் கூறினார்: ‘முதன் முதலில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது இவைகள் எனக்குக் கஷ்டமாகத் தோன்றவில்லை. பழகப் பழக எல்லாம் சரியாகப் போய்விடும். ஒரு பிக்கு வினுடைய மாசற்ற உடையிலிருந்து மேலாடைக்கும் மனிதனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். களங்கமற்ற மனம் இருந்தால் போதும். புசிக்கும் உணவில் என்ன இருக்கிறது? மாசற்றமனமே மனிதருக்கு இருக்கவேண்டும். தேன் மிகவும் தித்திப்பாய்த்தான் இருக்கிறது. ஆனால் அது கொலையினாலும் களவினாலும் சேர்க்கப்பட்ட வஸ்துவானதால், இனிப்பாயிருந்து என்ன பயன்? அதை விட ஆற்றில் ஓடும் பரிசுத்தமான தண்ணீரே அதிக இனிப்பு வாய்ந்ததென்று கருத வேண்டும். ஏனெனில் அத்தண்ணீர் கள்ளத்தனமாகச் சம்பாதிக்கப்பட்ட வஸ்துவல்ல.’[4]

மீண்டும் பிம்பிசாரர் தொடர்ந்து பேசினார். ‘செங்கோல் பிடிக்க வேண்டிய தங்கள் கரம் பிச்சையெடுக்க ஏற்றதன்று. அண்டினோர்க்கு அபயமளிக்க வேண்டிய கையில் திருவோட்டை ஏந்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

‘தந்தை ஆளும் இராஜ்யத்தைத் தாம் ஆள விரும்புதல் கூடாது என்று தாங்கள் அன்பினாலே அகற்றி விட்டு வந்திருந்தால், இங்கே என் இராஜ்யம் இருக்கின்றது. இதில் பாதியை நீங்கள் ஆளலாம். நல்லாரின் இணக்கம் நன்மையானது என்பதால், எனக்கும் என் நாட்டுக்கும் நலமே விளையும். இப்போதே என் கடமையை நிறைவேற்றச் சித்தமாயுள்ளேன். தாங்கள் மனமுவந்து சம்மதிக்க வேண்டும்.

‘சாக்கிய குல திலகமாகிய நீங்கள் பிறருடைய இராஜ்யத்தை ஏற்றல் இழுக்கு என்று கருதினால், எண்ணற்ற படைகளைத் திரட்டிப் போர்த் தொழிலில் இறங்குங்கள். அதற்கும் உதவியளிக்க நான் சித்தமாயுள்ளேன்.

இன்பம், செல்வம், அறம் மூன்றுமே இம்மையில் நாம் அடையத்தக்க பயன்கள். அறம், பொருள், இன்பங்களை அனுபவித்தவரே நிறைந்த மனிதர்; வீட்டுப் பேற்றை விரும்பி முயலவேண்டியர்கள் அவர்களே.

‘வில்லேந்த வேண்டிய தங்கள் கைகள் வீணாகச் சோம்பியிருக்க வேண்டாம். இந்த உலகம் கிடக்கட்டும்–மூவுலகையும் வெற்றிகொண்டு ஆள முற்படுங்கள்!

‘உங்களிடம் விளைந்த அன்பினால் நான் இதைக் கூறுகிறேன்; ஆதிக்கிய ஆசையாலன்று. உங்கள் துவராடையைக் கண்ட பிறகு, அன்பினால் என் உள்ளம் உருகிக் கண்களில் நீர் பெருகுகிறது.

இப்போது இன்பங்களை நுகர வேண்டிய பருவம். பின்னால் கொள்ள வேண்டியதே பெருந்துறவு. இளமைக்கு ஏற்றவை இன்பங்கள்; நடுவயதுக்கு ஏற்றது செல்வம்; முதுமைக்கு ஏற்றது துறவு என்றே ஆன்றோர் வகுத்துள்ளனர்.

‘இளமையிலே புலன்கள் விரும்பிய திசையெல்லாம் பாயக்கூடியவை. இன்பங்கள் எங்கெங்கு கிடைக்குமோ அங்கெல்லாம் அவைகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். செல்வமும் துறவும் இளமையின் இலட்சியங்கள் அல்ல.’

மகத மன்னரின் அன்பும் ஆர்வமும் கௌதமர் உள்ளத்தைக் கவர்ந்தன. ஆயினும் அவருடைய உரை மட்டும் தமது கொள்கைக்குப் புறம்பாக விளங்குவதை உணர்ந்தார். நட்பு உரிமையோடு அவர் கூறிய கூற்றுக் களை நயமான உரைகளாலேயே மறுத்துரைக்க வேண்டும் என்று கருதி, அவர் மறுமொழி புகல ஆரம்பித்தார்:

‘முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சி, விடு தலை நாட்டத்தோடு நான் துறவு பூண்டு வந்துள்ளேன். கண்ணீரும் கம்பலையுமாக நின்ற உற்றார், உறவினர் யாவரையும் துறந்து வெளியேறியவன் நான்.

‘உலக இன்பங்களைக் கண்டு வெறுத்து விட்டேன். விடங்கொண்ட நாகங்களைப் பார்க்கினும், வானத்திலி லிருந்து வீழும் இடிகளைப் பார்க்கினும், காற்றோடு கலந்து பரவும் பெரு நெருப்பைப் பார்க்கினும் நான் இந்த இன்பங்களைக் கண்டு அதிகமாக அஞ்சுகிறேன்.

‘நிலையற்ற இன்பங்களே நமது உண்மையான இன்பத்தையும், செல்வத்தையும் கொள்ளை கொள்ளும் சோரர்கள்! இவைகள் யாவும் கானல் நீரே.

‘விறகிட்ட தீயைப்போல, இன்பத் தேட்டம் பெருகிக் கொண்டேயிருக்கும். அதற்கு ஓய்வுமில்லை; ஒழிவுமில்லை. அதற்கு அடிமைப்பட்டவர்களுக்கு இம்மையிலும் இன்பமில்லை; மறுமையிலும் இன்ப மில்லை.

‘மயக்கத்தினாலேயே மக்கள் இந்த இன்பங்களின் வலையில் வீழ்கின்றனர். உண்மையை உணர்ந்தவன், சித்தத் தெளிவுடையவன், தீமையைக் கண்டு ஒதுங்கியவன், தானாக மறுபடி இந்த இன்பங்களிலே எங்ஙனம் நாட்டம் கொள்வான்?

‘வையமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், இன்னும் கடலுக்கு அப்பால் கண்டம் எதுவும் இருக்கிறதா என்று ஆசை கொள்ளல் இயல்பு. ஆசைக்கு ஓர் அளவில்லை ! கடல் முழுவதும் நீர் நிறைந்திருப்பினும், அதற்கு அமைதியில்லை. அதுபோல், எத்தனை எத்தனை இன்பங்கள் இருப்பினும், மனித குலத்திற்குத் தெவிட்டுதல் இல்லை !

‘ஆதலால் இன்பங்கள் என்ற இந்தக் கொடிய பகைவர்களோடு உறவாட எவர்கள் விரும்புவார்கள்? கந்தை அணிந்து, கந்த மூலங்களையே உண்டு, நாகங்களைப் போல நீண்டு தொங்கும் சடை முடிகளோடு விளங்கிய மகரிஷிகள் கூட இவைகளைக் கண்டு மயங்கினார்கள் என்றால், மற்றவர் நிலையைக் கூறுவானேன்! இன்பங்கள் யாவும் நஞ்சுகள். ஆழ்ந்த அறிவுடையோர் இவைகளை அமுதம் என்று விரும்பலாகாது. இன்பங்கள் சீறிப் பாய்கின்ற சர்ப்பங்கள்! இவைகளை அண்டலாகாது.

‘இன்பங்களின் உண்மையான தன்மைகளை உணர்ந்தவர்கள் அவைகளைப் பரிகாரங்களாகவே எண்ணுவார்கள். தாகலிடாய்க்குத் தண்ணீர், பசிப் பிணிக்கு உணவு, வாடைக்கும் வெயிலுக்கும் வீடு, அம்மணத்தை மறைக்க ஆடை–இவ்வாறு ஏற்பட்டுள்ள பரிகாரங்களே நமக்கு இன்பங்களாகத் தோன்றுகின்றன.

‘இன்பங்கள் நிலையற்றவை. முடிவில் இவற்றால் துன்பங்களே வருகின்றன. ஒரு காலத்தில் இன்பங்களாயுள்ளவை, மற்றொரு சமயம் துன்பங்களாக மாறுகின்றன.

‘உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கின்றன. எந்த நேரமும் புன்னகை புரிந்து கொண்டிருக்கும் அரசனும் இங்கில்லை; எந்த நேரமும் வேதனையில் வாடிக் கொண்டிருக்கும் அடிமையும் இங்கில்லை.

‘உலகத்தையெல்லாம் வென்ற மன்னனுக்கும் தங்குவதற்கு ஒரு நகரமே தேவை; வசிப்பதற்கு ஒரு மாளிகை தான் தேவை; உணவும் உடுக்கையும் அவ்வாறே அற்பத் தேவையில் அடங்கிவிடுகின்றன. மற்றைப்படி மன்னர்க் குரிய வரிசைகள் யாவும் வெறும் ஆடம்பரங்களே! ஆதலால் - அரசாட்சி என்பது பிறருக்காக நாம் மேற்கொள்ளும் உழைப்பேயாகும்.

‘இராஜ்யம் இல்லாமலே எனக்குத் திருப்தி ஏற்பட்டுள்ளது. திருப்தியுள்ள இடத்தில் பேதங்கள் மறையும். உண்மையான இன்பத்தை அடையும் நெடுந் தருமப் பாதையிலே செல்பவனை அற்ப இன்பங்கள் ஏமாற்ற முடியாது.

‘நண்பரே! பிச்சையெடுத்து வாழும் துறவியைக்கண்டு இரங்குதல் வேண்டாம். அவனே பாக்கியசாலி! முதுமை யையும் மரணத்தையும் வெற்றி கொள்ளும் பாதையிலே செல்லும் அவனே, இவ்வுலகில் இணையற்ற ஆனந்தத்தையும் சாந்தியையும் அனுபவிப்பான். மறுமையிலும் அவனுக்குத் துன்பங்களில்லை.

‘இம்மையிலே பெருஞ் செல்வத்தின் நடுவிலும் ஆசை அடங்காமல், சாந்தியில்லாது சஞ்சலப்படுவோனுக்கே நாம் இரங்கவேண்டும். மறுமையிலும் அவனுக்கு வேதனையே காத்து நிற்கும்.

‘தாங்கள் கூறிய கூற்றுக்கள் தங்கள் பெருமைக்கும், பண்புக்கும், வாழ்க்கைக்கும், தங்களுடைய மாண்புடைய மரபுக்கும் ஏற்புடையவை; என் தீர்மானத்தை நிறைவேற்றுவதே என் பெருமைக்கும், பண்புக்கும், வாழ்க்கைக்கும், மரபுக்கும் ஏற்புடையவை.

‘ஆதலால் இந்திர லோகத்தை ஆளும் பேற்றினைக் கூட நான் ஏற்றுக்கொள்ள இயலாது. முதுமையும், பயமும், பிறப்பும், இறப்பும், சோகமும், துயரமும் இல்லாத உலகத்தை அடைவதே மனிதனின் மகோன்னதமான இலட்சியம். நமக்கு மரணம் எப்போது வரும் என்பதை அறியாத நிலையில், முதுமை வரட்டும் என்று காத்திருத்தல் ஆகாது.

‘சத்தியத்தை நாடி நான் செல்லும் யாத்திரையில் அடுத்தபடியாக ஞான குருவரன் ஆலார காலாமரை நான் சந்திக்கவேண்டும். அவரைத் தேடியே நான் இங்கு வந்தேன். இன்றே நான் புறப்படவேண்டும். தங்களுக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். வான மண்டலத்தில் இருந்துகொண்டு கதிரவன் உலகனைத் திலும் ஒளிபரப்புதல் போல, உங்கள் மேன்மைக் குணங் களால் மக்களுக்கு இன்பம் பெருகுவதாக!’

பிரம்பிசாரப் பெருந்தகை எழுந்து நின்று, அவரைச் சுற்றி வலம் வந்து, இருகையும் கூப்பி வணக்கம் கூறினார். ‘தங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்! விரும்பிய சித்தியெல்லாம் பெற்றபின்பு, தாங்கள் என்னை மறவாது மறுபடி என் நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார்.

அறத்தகை முதல்வரும் அவ்வாறே வருவதாக உறுதி சொல்லி விட்டு, ஆங்கிருந்து சென்றார்.

  1. சிரேணியர் - போர்த்திறல் வாய்ந்தவர் என்பதைக் குறிக்கும் பட்டம்.
  2. இந்த வேள்வியைப் பற்றியோ, கௌதமர் வந்து தடை செய்தது பற்றியோ அசுவகோஷர் முதலியோர் கூறியுள்ள வரலாறுகளில் செய்தி யொன்றுமில்லை. மலையடிவாரத்திலே கௌதமர் பிச்சைச் சோற்றை உண்டு கொண்டிருப்பதையும், ஒரு குகையில் வாழ்வதையும் ஒற்றர் மூலம் கேள்வியுற்ற பிம்பிசாரர், அங்கே சென்று அவரை வணங்கி வரவேற்றதை அவ்வரலாறுகள் கூறுகின்றன. மன்னருக்கும் கௌ தமருக்கும் நிகழ்ந்த நீண்ட சம்பாஷணையில், பிம்பிசாரர் யாகத்தின் பெரு மைகளைக் கூறும்போது, கௌதமர் ஊனுடை வேள்வியை வன்மையாகக் கண்டித்துக் கூறியிருக்கிறார். இங்கே குறித்துள்ள வரலாறு எட்வின் ஆர்னால்ட் எழுதிய ‘ஆசிய ஜோதி-Light of Asia’ என்ற நூலில் உள்ளது.
  3. அசலம்- சலனமில்லாத மலை.
  4. பழைய நீதிக்கதைகள்- பாகம் 1 - திரு. ஏ எஸ். பஞ்சாபகேச ஐயர், ஐ ஸி.எஸ்.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/பிம்பிசாரர்&oldid=1283884" இலிருந்து மீள்விக்கப்பட்டது