மகாகவி பாரதியார்/பட்டினி உபதேசம்
பாரதியார்
பட்டினி உபதேசம் !
கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை
வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி
தந்திரத் தாலே சரிப்படுத்த லாம் கண்டாய் !
வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்.
⚬⚬⚬
அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்:—
முந்தாநாள் நீ உண்ட மொச்சை விதைக்குழம்பு
நேற்றும் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும்.
மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய் !
இன்று முருங்கக்காய் இட்டுப் பருப்பிட்டு
நன்று குழம்பிட்டு நாலுபிடி சோறுண்டாய் !
நாளைக்குக் கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய்,
வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய்
நித்தம் விதவிதமாய் நீ உண்பாய்; ஆனாலும்,
அத்தனையும்தெவிட்டும்; ஆசைவிடும். மேற்கொண்டே,
⚬⚬⚬
அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு
கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும்.
ஆமைவடை மோர்க்குழம்புக் கப்பாலோ, நாகரிகச்
சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம் !
வீட்டில் பதார்த்த விழாநடத்த ஆசையுண்டு;
மூட்டைப் பணம்வேண்டும் முள்ளங்கிப் பத்தையைப்போல் !
⚬⚬⚬
இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால்,
பட்டினியாற் போட்டுவிடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ
இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை !
பட்டினியால் லாபம் பல.