மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/சிற்பக் காட்சியின் விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து

சிற்பக் காட்சியின் விளக்கம்.

படம் 2. காண்க. இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர் நின்று பார்ப்பவருக்கு இடது புறத்தின் மேல்பகுதித் தோற்றம். இந்தப் பகுதியின் வலது புறத்தில், ஒடுங்கிய வயிறும் வளர்ந்த தாடியும் உள்ள ஒருவர், தனது இரண்டு கைகளையும் தலை மேல் தூக்கி ஒற்றைக்காலில் நின்று தபசு செய்கிறார். இது சகர சக்கரவர்த்தியின் உருவம்: கண்டப்பிரபாத மலையில் தபசு செய்கிறதைக் குறிக்கிறது. இவருக்கு எதிரில் தண்டாயுதத்துடனும் நான்கு கைகளோடும் ஒரு தெய்வம் நிற்கிறது. இது நாட்யமாலகன் (இந்திரன்) உடைய உருவம், இந்திரனுக்குரிய தண்டாயுதம் கையில் காணப்படுகிறது. இங்கு ஒரு ஐயம் ஏற்படக்கூடும். அதாவது, இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டா என்கிற கேள்வியுண்டாகும். சைவ வைணவ சிற்ப சாஸ்திரப்படி, இந்திரனுக்கு இரண்டு கைகள் தான் உண்டு. ஆனால், ஜைன சிற்ப சாஸ்திரக் கருத்துப்படி. இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டு, நான்கு கைகளையுடைய இந்திரனுடைய சிற்ப உருவம், வேறு ஜைனக் கோயில்களில் இன்றும் காணப்படுகிறது. ஆகையால் இந்த உருவம் - நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இந்தச் சகர சக்கரவர்த்தி நாட்யமாலகன் உருவங்களுக்குப் பக்கத்தில் மிகக்குறுகிய குறள் உருவங்கள் குறுகிய கைகால்களுடன் காணப்படுகின்றன. இவ்வாறு ஆறு குறள் உருவங்கள் காணப்படுகின்றன. இந்தச் சிற்பப் பகுதியின் இடது கோடியில் இன்னும் இரண்டு குறள் உருவங்கள் காணப்படுவதை நேரில் காணலாம். படத்தில் மறைந்திருக்கின்றன. ஆக மொத்தம் 8 குறள் உருவங்கள் இதில் காணப்படுகின்றன. இவை 8 பூதங்கள் ஆகும். அன்றியும், கிரீடமகுடம் உடையனவாய் ஆகாயத்தில் பறப்பது போல -ஆண் பெண் ஆகிய எட்டு ஜதை தேவர்கள் இதில் காணப்படுகிறார்கள். இந்த எட்டு ஜதை தெய்வ உருவங்களும் எட்டு பூதங்களும் எதைக் குறிக்கின்றன என்றால், சகர சக்கரவர்த்திக்குக் கிடைத்த ஒன்பது நிதிகளில், எட்டு நிதிகளைக் குறிக்கின்றன. (ஒன்பதாவது நிதியைப் பற்றிப் பிறகு விளக்குவேன்.) எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டு தேவர்களும் காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி குறிக்கிறது. இதில், எட்டு நிதிகளின் தலைவர்களான எட்டு தேவர்களும் மனைவியரோடு எட்டு ஜோடியாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெயரும் எட்டு நிதிகளின் பெயரே யாகும். அதாவது, நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன், மகாபத்மன், காலன், மகாகாலன், மானவன், சங்கன் என்னும் எட்டு தெய்வங்களாகும். இவ்வாறு, கலையறிஞர்களாகிய சிற்பிகள், எட்டு தெய்வ உருவங்களையும் எட்டு பூதங்களையும் சிற்பத்தில் சித்திரித்து எட்டு நிதிகளைக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு நிதிக்கும் ஆயிரம் பூதம் வீதம் எட்டு நிதிகளுக்கு எட்டாயிரம் பூதம் காவலாக இருந்தன. ஆனால், சிற்பத்தில் எட்டாயிரம் பூதங்களைக் காட்டினால் நன்றாக இருக்குமா? இராது. ஆகையினால், 8 நிதிக்கு 8 பூதங்களை மட்டும் காட்டியிருக்கிறார்கள், இவ்வாறு 8 நிதிகளை 8 பூத உருவத்துடனும் 8 ஜதை தெய்வ உருவத்துடனும் சிற்பிகள் அழகாகக் காட்டியிருக்கிறார்கள், இப்படியில்லாமல் வேறு எப்படி நிதிகளக்காட்டமுடியும். எட்டு நிதிகளின் தலைவர்கள் சிற்பத்தில் ஆகாயத்தில் பறப்பதுபோல ஏன் காட்டப்பட்டனர் என்றால், அவர்கள் மானிடர் அல்லர், மானிட்ருக்கு மேற்பட்ட தெய்வச் சத்தியுள்ள தேவர்கள் என்பதைக்காட்ட இவ்வாறு சிற்பத்தில் அமைக்கப்பட்டனர். இந்தச் சிற்பத்திலேயே வேறு நான்கு உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள், ஆகாயத்தில் பறப்பது போன்று இல்லாமல் தரையில் நிற்பது போன்றும், கையில் சில ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. தரையில் நிற்பது போல் காணப்படுவதால், இவை மனித உருவங்களாகும். இவை எதனைக் குறிக்கின்றன? சகர சக்கரவர்த்தி கண்டப்பிரபாத மலைக்குச்சென்று நோன்பு நோற்றபோது அவருடன் போயிருந்த மந்திரிகளைக் குறிக்கின்றன. இங்குக் காணப்படுகிற சிங்கம், புலி, மான் முதலிய உருவங்கள் தண்டப்பிரபாத மலையைச் சேர்ந்த காடுகளை நினைவூட்டுகின்றன.

படம் 3 காண்க, இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை, எதிர் நின்று பார்ப்பவருக்கு வலக்கைப்புறத்தின் மேற்புறக் காட்சியாகும், இது ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும் நிதியைக் குறிக்கிறது. இந்நிதியிலிருந்து கிடைக்கிற ஜீவரத்தினங்கள். ஏழு அஜீவரத்தினங்கள் ஏழு ஆக பதினான்கு இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக்காட்டுகிறது. மற்றும் இசை முதலியவற்றையும் கின்னர உருவங்கள் முதலியவற்றால் வெளிப்படுத்துகின்றது. எனவே, 2-ஆவது 3-ஆவது படங்கள் சகரசக்கரவர்த்தி நோன்பிருந்து நோற்றதையும் அவர் அடைந்த ஒன்பது வகையான நிதிகளையும் உருவகவாயிலாக வெளிப்படுத்துகின்றன.

படம் 4 காண்க, இதில் ஒரு கோயிலும் அதன் எதிரில் ஒரு முனிவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பது போன்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கயிலாய மலையில் பரதச் சக்கரவர்த்தி அமைத்த ரிஷபதேவர் கோயிலையும், அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவர்த்தி தமது உருவத்தை, ரிஷபர் செய்யும் உபதேசத்தைச்

(Upload an image to replace this placeholder.)

செவிசாய்த்துக் கேட்பது போல அமைத்திருந்ததையும் (பரதச் சக்கர வர்த்தியின் உருவத்தையும்) குறிக்கின்றன. (கோயிலுக்கு எதிரில் உள்ள பரதச் சக்கரவர்த்தியின் உருவத்தை ரிஷி என்று தவறாகத் தற்காலத்தில் கருதுகிறவர்கள் உண்டு. பண்டைக்காலத்தில் அரசர்களும் சக்கரவர்த்திகளும் தாடி மீசை தலைமயிர்களை நீட்டி வளர்த் திருந்தனர். இதற்குப் பௌத்த நூல்களிலும் ஜைன, நூல்களிலும் சான்றுகள் உண்டு. சிற்ப உருவங்களின் சான்றுகளும் உள்ளன.) இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஆறுபோன்ற காட்சியும் அதில் நாகர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இதைக் கங்கையாறு என்று தவறாகக் கருதுகிறார்கள். இது ஆறு அன்று. சகர குமரரர்கள், கோயிலைச்சுற்றிலும் தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இதில் காணப்படுகிற நாகர்கள், ஜூவலனப்பிரபன் என்னும் நாகராசனும் அவனுடன் வந்த அவன் மனைவி, மந்திரி முதலியவர்களும் ஆவர். பாதாளம் வரையில் அகழிதோண்ட. அதனால், நாகர்களுக்குத் துன்பம் உண்டாக, அப்போது சினங்கொண்ட. நாகராசன் சாகரரிடம் வந்து அவர்களை எச்சரித்த செய்தியை இப்பகுதி குறிக்கிறது.

இனி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற மூன்று மனித உருவங்களும், அதற்கு எதிர்ப்புறத்தில் யானைகளின் உருவங்களும் காணப்தைக்குறிக்கிறது என்பதைப் பார்ப்போம், தலயற்ற மூன்று உருவங்கள், நாகராசன் கோபப் பார்வையினால் இறந்துபோன சகர குமாரர்களைக் குறிக்கிறது. சகரகுமாரர்கள் அறுபதினாயிரவரையும் சிற்பத்தில் அமைத்துக் காட்ட முடியாதாகையினால், மூன்று தலையற்ற உருவங்களாச் சிற்பிகள் காட்டியுள்ளார்கள். தலையற்ற உடலாக அமைத்து இறந்து போனார்கள், என்பதைச் சிற்பிகள் காட்டுவது அவர்களின் நுண் அறிவைப் புலப்படுத்துகிறது. தமிழில் ஒருமை பன்மை என்று இரண்டு எண்கள் மட்டும். இலக்கண நூலில் கூறப்படுகின்றன.

வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் இலக்கண நூலில் கூறப்படுகின்றன,

வடமொழி முறையைப் பின்பற்றி, சகர குமாரர்கள் பலர் என்பதைக்குறிக்க மூன்று உருவங்களாக அமைத்தனர் போலும். சிற்பத்தில் இவ்வளவு நுட்பமாகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் காட்டப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இச்சிற்பத்தில் காணப்படும் யானைகள் ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனையும் அவலுடன் வந்த நாகப் பரிவாரங்களையும் குறிக்கிறது. பெரிய யானை (நாகராசன் )கோபித்துப் பார்ப்பது போலக் காணப்படுகிறது. இதன் பார்வையினால், சகர குமாரர்கள் இறந்து மாண்ட செய்தி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற உடலோடு உள்ள (மூன்று உருவங்களில்) காட்டப்பட்டிருக்கிறது.

நாகராசன், பாம்பரசன் ஆகையால், (அகழியில் நாகராசன் காட்டப்பட்டிருப்பது போல) பாம்பு உருவத்துடன் காட்டப்படாமல், யானை உருவத்துடன் ஏன் காட்டப்பட்டான் என்கிற கேள்வி உண்டாகிறது. நாகலோகத்தில், கங்கை நீர் பாய்ந்து வெள்ளக் காடாகிய போது, நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், "அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டது போல "கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து எழுதியிருக்கிறார். நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும், பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் இருக்கிறபடியால், இக்காவியப் புலவர் இரண்டு பொருளிலும், சிலேடையாக இச்சொல்லை அமைத்து எழுதியிருக்கிறார். காவியப்புலவர் இவ்வாறு சிலேடையாகக் கூறிய கருத்தை ஓவியப்புலவராகிய சிற்பிகளும், சிலேடையையும், உபமானத்தையும் தமது சிற்பக்கலையில் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். காவியப் புலவர்களை ஓவியப்புலவர்கள் எவ்வளவு நுட்பமாகப் பின்பற்றிச் சிற்பத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது இதனால் நன்கு விளங்கும். அன்றியும் சிற்பிகள் யானையை அமைத்திருக்கிற இடத்தில், ' நாகராசன் உருவத்தைப் பாம்பு உருவமாக அமைத்திருந்தால் இந்தச் சிற்பம் இவ்வளவு கம்பீரமாகவும் இவ்வளவு அழகாகவும் விளங்குமா என்பதை யோசித்துப் பார்த்தால் இதன் சிறப்பு நன்கு விளங்கும்.

படம் 5 காண்க, இந்தப் பகுதியில் மனிதர் சிலர் காணப்படுகின்றனர். இவர்களில் ஒரு ஆள், தனது இடதுதோளின் மேல் குடம் ஒன்றை வைத்துக் கொண்டு வலது கையினால் எதையோ தண்ணீரில் எறிவது போன்று காணப்படுகிறது. இந்த உருவத்தைச் சிலர், சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் கொண்டு போகிற அர்ச்சகன் என்று கருதுகிறார்கள். இது தவறு, குடத்தில் இருப்பது இறந்தவர் எலும்பு. அதை இந்த ஆள் நீரில் போடுகிறார். அதாவது இறந்தவர் எலும்புகளை ஆற்றில் போடுகிற வழக்கத்தை இந்தச்சிற்பம் காட்டுகிறது. பகீரதன் கங்கையைக் கடலுக்கு இழுத்துச் சென்ற போது. இறந்து போன சாகரர்களுடைய எலும்புகளைக் கங்கை அடித்துக்கொண்டு போயிற்று என்றும், அது முதல் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் அஜிதநாகதீர்த்தங்கரர் புராணம் கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம், இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டுகிறது.

இந்த உருவத்தின் பக்கத்தில் இன்னொரு ஆள் எதையோ ஒரு பொருளைக் கையில் தூக்கி வைத்திருப்பது போல் காணப்படுகிறது. இதை, கங்கையில் குளித்து துணியைப் பிழிகிறான் என்று சிலர் கூறுவர். இது தவறு. துணியைப் பிழிவது போல் இல்லை இது கனமான பொருளாகக் காணப்படுகிறது. சிலர் இப்பொருளைக் Cornicopia என்று கூறுகிறார்கள். Cornicopia என்பது கிரேக்க உரோம தேசங்களில், உணவுப் பொருள்களின் அபரிமிதமான விளைச்சலக் காட்டுவதற்காகச் சிற்பிகளும் ஓவியர்களும் காட்டுகிற ஒரு அடையாளம்.

(Upload an image to replace this placeholder.)

இது, மாட்டுக் கொம்பின் உள்ளே பழங்களையும் பூக்களையும் வைத்திருப்பது போன்று காட்டப்படுவது வழக்கம். இந்த மேல்நாட்டுச் சிற்பம் நமது நாட்டுச்சிற்பங்களில் அமைக்கப்படுவது இல்லை. ஆகவே இது Cornicopia அன்று. அதில் இருப்பதுபோன்று இந்தப்பொருளில் பூக்களும் பழங்களும் காணப்படவில்லை. ஆனால், இது எதைக் காட்டுகிறது என்றால், தண்ட ரத்தினத்தைக் காட்டுகிறது. தண்ட. ரத்தினத்தினால் சாகரர் அகழி தோண்டி, அதனால் தான் கங்கையைக் கொண்டுவந்தார்கள் என்று கதை கூறுகிறது. அந்த தண்ட ரத்தினத்தைத்தான் ஒரு ஆள் கையில் வைத்திருப்பதுபோன்று இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அது கனமாக இருப்பதால் இந்த ஆள் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கிக்கொண்டிருக்கிறான். தண்ட இரத்தினத்தினாலே அகழி ஆழமாகத் தோண்டப்பட்டது என்பதையும், தண்ட ரத்தினத்தினாலே கங்கையாறு அகழிக்குக் கொண்டுவரப்பட்டது என்பதையும், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய கங்கையைப் பகீரதன் தண்ட இரத்தினத்தினால்தான் கடலில் கொண்டு போய் விட்டடான் என்பதையும் காட்டுவதற்கு இங்குத் தண்ட, இரத்தினம் சிற்பத்தில் காட்டப்பட்டிருப்பது பொருத்தம் அல்லவா? கடைசியாக இந்தச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கிற உருவத்தைப்பற்றி விளக்கவேண்டுவது அவசியம் ஆகிறது. இந்தக்கோயில், கயிலாய மலையில் அமைக்கப்பட்டிருந்த ரிஷபதீர்த்தங்கரரின் கோயிலைக் குறிக்கிறது என்று கூறினேன். அப்படியானால், இதில் காணப்படும் உருவம் ரிஷபதீர்த்தங்கரர் உருவமாக இருக்க வேண்டும். ஆனால், இதில் காணப்படுவது திருமால் (விஷ்ணு) உருவமாகக் காணப்படுகிறது. இதன் காரணம் என்ன? ஜைன தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் உருவம் இருக்கக் காரணம் என்ன? இதற்கு இரண்டு விதமாக விடை... கூறலாம். முதலாவது காரணம்: திருமால் (விஷ்ணு ) ரிஷபதீர்த்தங்கரராக அவதாரம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. அதாவது ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்று கூறுகிறது. ஆகவே, சிற்பிகள் ரிஷப தீர்த்தங்கரருக்குப் பதிலாகத் திருமால் திருஉருவத்தை அமைத்தார்கள் போலும். இரண்டாவது காரணம் : விஜயநகர அரசர் ஆதிக்கம் இருந்த காலத்தில் கி. பி. 17-ஆவது நூற்றாண்டில், மகாபலிபுரத்தில் வைணவர் ஆதிக்கம் பலமாக இருந்தது. அக் காலத்து வைணவர்கள், மகாபலிபுரத்துச் சிற்பங்களில் சிலவற்றை மாற்றியிருக்கிறார்கள் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. (இங்கு வைணவர் ஆதிக்கம் இருந்த செய்தியையும் வைணவர்கள் இங்குச் செய்துள்ள சில காரியங்களையும் இல்விடத்தில் விளக்கினால் விஷயம் விரியும். ஆனதுபற்றி விளக்கவில்லை.) ஆகவே, வைணவர் காலத்தில், ஜைன உருவமாக இருந்த சிற்ப உருவத்தை மாற்றித் திருமால் உருவமாக அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

(இதுகாறும் விளக்கிக் கூறப்பட்ட சிற்பங்கள் தவிர, ஏனைய சில சிற்ப உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அவை பூனை ஒன்று தபசு செய்து கொண்டிருக்க அதனைச் சூழ்ந்து எலிகள் விளையாடுவது போன்றும், குரங்குகள், புலி முதலிய உருவங்களும் இச்சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இச்சிற்பத்தை அழகுபடுத்துவதற்காகச் சிற்பிகள் அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.)

அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் இருப்பதும், இச்சிற்பம் சகா சக்கரவர்த்தியின் கதையைக் குறிக்கிறதென்பதும் இதனால் விளக்கப்பட்டது. இந்தக் கதை, தமிழ்நாட்டிலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் அடைந்திருந்த அந்தக் காலத்தில் (கி.பி. 7-ஆம் நூற்கண்டில்), எல்லோரும் அறிந்திருந்த கதையாக இருக்கவேண்டும். ஆகையினால் தான், இக்கதையின் சிற்பத்தைச் சிற்பிகள் இப்பாறையில் செதுக்கிக் காட்டினார்கள் என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி, இப்பெரிய அழகிய கம்பீரமான சிற்பத்தை அமைத்ததின் நோக்கம் யாது? என்பதை ஆராய்வோம். முக்கியமான நோக்கம் இல்லாமல் இச் சிற்பத்தை அமைத்திருக்கமாட்டார்கள், இதில் ஒரு நீதி அமைந்திருக்கவேண்டும். அது யாது? எத்தகைய பேராற்றல் உடையவராக இருந்தாலும், பெறுதற்கு அரிய நவநிதிகளைப் பெற்று தெய்வங்களின் உதவியையடைந்திருந்தாலும், சக்கரச் செல்வனாக விளங்கிய சகர சக்கரவர்த்தியின் புதல்வராகவிருந்தாலும், ஊழ்வினைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்பதை உணர்த்தவே இச் சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்று தோன்றுகிறது. இக்கருத்தை உட்கொண்டு இக்கதையைச் சிற்பத்தில் நோக்குவோர்க்கு

வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

என்னும் திருக்குறளின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிகின்றது.

(குறிப்பு: இந்தக்கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர், Trisashti Salaka Purusha Charitra Vol. II Translated by Helen M. Johnson. Gaekwads' Oriental Series) என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். இந்த நூலில் கூறப்பட்ட கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. தமிழில் உள்ள ஸ்ரீபுராணம் ஜீவசம்போதனை என்னும் நூல்கள், சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன.)