மகாபாரதம்-அறத்தின் குரல்/2. முடிவு நெருங்குகிறது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. முடிவு நெருங்குகிறது

போர்க்களத்தில் நின்று அந்தத் தவத்தைத் செய்ய இயலாதென்று தோன்றியது. துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடினான். சிறிது தொலைவு சென்றதும் ஒரு குளமும் அதன் கரையில் பெரிய ஆலமரமாக வளர்ந்திருந்த இடம் வந்தது. குளத்தில் இறங்கி நீராடி ஆலமரத்தின் நிழல் படும்படியாகத் தண்ணீரிலேயே நின்றுகொண்டு அவன் தவத்தை ஆரம்பித்தான். தவத்தில் ஈடுபட்ட அவன் சுற்றுப்புறத்தைக் கவனிக்கவே இல்லை. மந்திரமும் தானுமாக இரண்டறக் கலந்து ஒன்றி விட்டான்.

இந்த நேரத்தில் அங்கே போர்க்களத்தில் அசுவத்தாமன் முதலியோர் துரியோதனனைக் காணாமல் திகைத்தனர். போருக்குப் பயந்து தோற்று ஓடிவிட்டனா? அல்லது போரில் மாண்டு விட்டானா? - என்றெண்ணிக் கலங்கிய நெஞ்சத்தோடு அவனைத் தேடுவதற்குக் கிளம்பினார்கள். போர்க்களத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் கால் கடுக்க அலைந்து பார்த்தும் அவன் அகப்படவில்லை. இப்படி அவர்கள் அலைந்து கொண்டிருந்தபோது சஞ்சய முனிவர் எதிரே வந்தார். அசுவத்தாமன் முதலியவர்கள் தங்கள் கலக்கத்தை அவரிடம் கூறித் துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டார்கள்.

முக்காலமும் அறியவல்ல அந்த முனிவர் துரியோதனன் இருந்த இடத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அவர்களுக்குக் கூறினார்: “அன்பர்களே! நீங்கள் நினைப்பது போல் துரியோதனனுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இங்கிருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றால் ஒரு குளமும் ஆலமரமும் இருக்கும். அக்குளத்தில் துரியோதனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள். போரில் இறந்தவர்களையெல்லாம் பிழைத்தெழச் செய்து மீண்டும் போர் செய்வதற்கு முயல்கிறான் அவன்.”

“முனிவர் பெருமானே! தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரியமாகச் செல்கிறீர்கள்?” - என்று அவரைக் கேட்டான் அசுவத்தாமன்.

“அப்பா! அதையேன் கேட்கிறாய்? நான் உயிர் பிழைத்து வந்தது கருணை வடிவமான அந்தக் கண்ணன் அருளாலேயே ஆகும். துருபதேயனைப் போன்ற கொடியவர்கள் சிலர் என்னைக் கொல்வதற்கு ஓடிவந்தனர். நல்ல வேளை கண்ணன் வந்து என் உயிரைக் காப்பாற்றினான். இப்போது நான் திருதராட்டிர மன்னனையும் அவன் மனைவி காந்தாரியையும் சந்திப்பதற்காகச் செல்கிறேன்” - என்றார் முனிவர். முனிவருக்கு வணக்கமும், நன்றியும், தெரிவித்துவிட்டு அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் முதலியவர்கள் விரைந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.

அவர்கள் சென்றபோது தண்ணீரின் நடுவே நின்று கொண்டு கண் இமைகளை மூடி ஆடாமல் அசையாமல் நிஷ்டையில் இருந்தான் துரியோதனன். அவர்கள் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். இரைந்து கத்தினார்கள். ஆலமரத்து விழுதுகளை அசைத்தும் நீரை அளைந்தும் ஓசை உண்டாக்கினார்கள். என்ன செய்தும் அவனுடைய மோனத்தவத்தைக் கலைக்க முடியவில்லை. அசுவத்தாமன் தன் மனத்திலிருந்த எண்ணங்களையெல்லாம் அள்ளித் கொட்டி ஒரு நீண்ட பிரசாங்கமே செய்து பார்த்தான்: “துரியோதனா! இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்குத் தவம் வேறு செய்ய வேண்டுமா? இப்போது நான் தற்பெருமை பேசவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் போரில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு! வாளேந்திய கைகள் தண்டும் கமண்டலமுமா ஏந்துவது? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! எங்களோடு புறப்பட்டு வா. இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் பாண்டவர்களின் வாழ்வை முடித்துவிடுகிறேன். பின் இந்த உலகம் முழுவதற்கும் ‘ஏகசக்ராதிபதி‘ நீதான்”

அசுவத்தாமனின் இந்த நீண்ட சொற்பொழிவைக் கேட்ட பின்பும் துரியோதனன் கண்களைத் திறக்கவே இல்லை. பழையபடி எதையும் பொருட்படுத்தாத நிஷ்டையிலேயே ஆழ்ந்திருந்தான். “சரி! இனிமேல் இவனைக் கலைக்க முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் இவனுடைய நிஷ்டை நீங்காது” - என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். யார் வந்தார்கள்? யார் போனார்கள்? எதற்காக வந்தார்கள்? இவையொன்றுமே தெரியாமல் தன்னுள் இலயித்திருந்தான் துரியோதனன்.

இவர்கள் நிலை இங்கு இவ்வாறிருக்க அங்கே போர்க்களத்தில் எதிரிகள் ஒருவரையும் காணாது வியந்தனர் பாண்டவர். துரியோதனன் எங்கே? அவனுடைய மீதமிருந்த படைகள் எங்கே? இனிமேல் நம்மால் முடியாது என்று பயந்து ஓடிவிட்டார்களா? அல்லது வேறு எங்காவது மறைந்து சூழ்ச்சி செய்கிறார்களா என்று பாண்டவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

“துரியோதனன் எங்கே போய்விட்டான்? என்ன செய்கிறான்” என்று கண்ணனைக் கேட்டார்கள் அவர்கள். கண்ணன் ஞானதிருஷ்டியால் துரியோதனன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்தை உணர்ந்தான், அவன் அப்போது எதற்காகத் தவம் செய்கிறான் என்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டான்.

“பாண்டவர்களே! துரியோதனன் தவம் செய்கிறான். எதற்காகத் தெரியுமா? போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர்பெறச் செய்து உங்களோடு போரிடுவதற்காக. அவனுடைய தவம் வெற்றி பெற்று விடுமானால் நிச்சயம் அவன் உங்களை வென்று விடுவான்” - என்று கூறினான் கண்ணன். பாண்டவர்கள் இதைக் கேட்டதும் மலைப்படைந்தனர்.

“துரியோதனனின் தவத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிடுவோம். அவ்வளவு ஏன்? தவம் முடிவதற்குள் அவன் வாழ்வையே முடிந்துவிட்டால் போகிறது. வாருங்கள்! இப்போதே அவன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் அவனைத் தொலைத்துவிடுவோம்” - என்றான் வீமன். மற்றவர்களும் அதற்கு இணங்கி உடன் கிளம்பினர். துரியோதனன் தவம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தடிக்குளத்திற்குச் செல்லும் வழியில் கண்ணபிரான் பாண்டவர்களை அழைத்துக் கொண்டு போனான்.

அங்கே துரியோதனன் முன் போலவே கண்மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்தான். மற்றவர்கள் கரையோரத்தில் ஒதுங்கிக் கொள்ள விமன் மட்டும் நீரருகே இறங்கி அவனை வம்புக்கு இழுத்தான்.

“அடே! துரியோதனா! உனக்குத் தவம் ஒரு கேடா? வீட்டுமன், துரோணன், கர்ணன் முதலிய மகாவீரர்களை எல்லாம் போரில் பறிகொடுத்துவிட்டு நீ மட்டும் உயிரோடு தவம் செய்வதற்கு வந்துவிட்டாயோ? நீ ஒரு கையாலாகாத மனிதன் வாளேந்திப் போர் செய்யத் தெரியாத நீ தவம் செய்தா எதிரியை மடக்கிவிடப் போகிறாய்? பேடிக்கும் உனக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? ஆண்மையில்லாத பேடிதான் பெண்பிள்ளையைப் போல் ஒடுங்கிக் கிடப்பான். வீரமில்லாத நீ முனிவனைப் போல அடங்கித் தவம் செய்வதாகப் பாசாங்கு செய்கிறாய். ஆனால் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன். அன்று அரசர்கள் கூடிய பேரவையில் எங்கள் திரெளபதியை நீ அவமானப்படுத்திய போது நான் ஒரு சபதம் செய்தேனே? அது உனக்கு நினைவிருக்கிறதா? அந்தச் சபதத்தை நிறைவேற்றுவதற்குரிய நேரம் இப்பொழுது நெருங்கிவிட்டது. இன்று நீ என்னை ஏமாற்ற முடியாது. உன்னோடு போர் செய்து உன்னைத் தொலைப்பதற்காகவே இப்போது இங்கே வந்து நிற்கிறேன். எழுந்திரு, கரையேறி வா!”

வீமனின் பேச்சு, துரியோதனனுடைய பொறுமையைச் சோதித்து விட்டது இயற்கையாகவே அவனுக்குரிய கீழ்மைக் குணம் அவனைப் பற்றிக் கொண்டது. முன்பு அசுவத்தாமன் முதலியோர் வந்தபோதுங்கூடத் தவத்தைக் கைவிடாமல் இருந்தவன், இப்போது ஆத்திரத்தினால் வீமனை எதிர்ப்பதற்காகத் தவத்தைக் கைவிட்டுக் கரையேறினான். வீமன்மேல் துரியோதனனுக்கு ஏற்பட்டிருந்த கோபம் நிஷ்டையைக் கலைத்தே விட்டது. பாண்டவர்களைச் சினத்தோடு நோக்கினான் அவன்.

“தனியாக ஆயுதமின்றித் தவகோலத்தில் நிற்கும் என்னைப் போருக்கு அழைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் ஐந்தாறு பேராகத் திரண்டு ஆயுதங்களோடு வந்துள்ளீர்கள். நானோ தன்னந்தனியனாய் நிற்கிறேன். ஆகவே உங்களில் யாராவது ஒருவர் மட்டும் என்னோடு யுத்தம் செய்ய வாருங்கள்” - என்று அழைத்தான் துரியோதனன்.

உடனே கண்ணன் துரியோதனனை நோக்கி மறுமொழி கூறலானான் :- “பயப்படாதே! நாங்கள் எல்லோரும் உன்னோடு போர் செய்து உன்னைத் துன்புறுத்தி விடமாட்டோம். உன்னை எதிர்ப்பதற்கும் அழிப்பதற்கும் பிறந்தவன் ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன் தான் வீமன். அந்த வீமன் உன்னைக் கொல்வதாகச் சபதம் செய்திருப்பதை நீ மறந்திருக்க மாட்டாய். ஆகவே நீயும் வீமனும் இப்போது போர் புரியுங்கள். உங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் இந்தப் பரந்த தேசத்தையும் இதன் ஆட்சி உரிமையையும் சொந்தமாகப் பெறலாம்.”

கண்ணனுடைய நிபந்தனைக்குத் துரியோதனன் இணங்கினான். வீமனை வென்று மண்ணையும் மண்ணாளும் உரிமையையும் பெற்றுவிட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது.

வீமன், துரியோதனன் இருவரும் தங்களுக்குள் கதாயுதத்தால் போர் செய்வது என்று தீர்மானமாயிற்று. போரை எந்த இடத்தில் நடத்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது. இருவருக்குள் நடக்கும் போரானாலும் அதற்கு வசதியும் தகுதியும் நிறைந்த இடம் வேண்டுமல்லவா? ஏற்ற இடம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு எல்லோரும் சேர்ந்து கண்ணபிரானை வேண்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஆலமரத்தடிக் குளக்கரையில் நின்று இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது பல நாட்களாக யாத்திரை போய்ச் சுற்றிவிட்டு வந்திருந்த விதுரனும் பலராமனும் அந்தப் பாதையில் வந்தார்கள். பாண்டவர்களும் விதுரனும் ஆச்சயரித்தோடும், எதிர்பாராத சந்திப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். தீர்த்த யாத்திரை சென்ற இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விதுரனும் பலராமனும் விரிவாகக் கூறினார்கள். போர்க்களத்தில் பதினேழு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாண்டவர்கள் விதுரனுக்கும் பலராமனுக்கும் கூறினார்கள். பரஸ்பரம் பேச்சு குசலப் பிரச்னம், எல்லாம் முடிந்தபின், இப்போது இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்!” என்று பாண்டவர்களைக் கேட்டான் விதுரன்.

“செய்வதென்ன? பாண்டவர், கெளரவர் ஆகிய இருசாராருக்கும் வசதியாக ஒரு முடிவு செய்திருக்கிறோம். பாண்டவர்கள் சார்பாக வீமனும், கௌரவர்கள் சார்பாகத் துரியோதனனும் கதாயுதங்களால் போர் செய்வது. போரில் யாருக்கு வெற்றியோ அவர்கள் அரசாள வேண்டியது என்று தீர்மானித்திருக்கிறோம். தீர்மானப்படி போரை எந்த இடத்தில் நடத்துவதென்பது தான் யோசனையிலிருக்கிறது.” விதுரனை நோக்கி இப்படிக் கூறிவிட்டுப் பலராமன் பக்கமாகத் திரும்பி, “இவர்கள் போரை எந்த இடத்தில் நடத்தலாம் என்பதை நீதான் சொல்லேன் அண்ணா! நீ சொன்னால் இவர்கள் இருவருமே அதை ஒப்புக் கொள்வார்கள்!” - என்று பலராமனைக் கேட்டான் கண்ணன்.

“இல்லை இல்லை நான் சொல்வது பொருத்தமில்லை நீயே ஓர் இடத்தை இருவருக்கும் பொதுவாக நிர்ணயித்துக் கூறிவிடு” என்றான் பலராமன். “சரி! அப்படியானால் சமந்த பஞ்சகம், என்னும் இடம் இங்கிருந்து சமீபத்தில் தான் இருக்கிறது. அந்த இடம் நீங்கள் போர் புரிவதற்குப் பொருத்தமானது” - என்று கண்ணன் கூறினான். உடனே விதுரன், பலராமன் உட்பட யாவரும் அருகிலிருந்த சமந்த பஞ்சகம் என்னும் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் நிகழ்வதற்குரிய ஏற்பாடுகள் அங்கே நடந்தன. தனி ஆளாக இருந்த துரியோதனனுக்கு மனத்தில் குழப்பமும், கலக்கமும், ஏக்கமும், நிறைந்திருந்தன. ‘தருமனுக்கு நான்கு தம்பிமார்கள். எனக்கு நூறு தம்பிமார்கள் . தருமனுடைய நான்கு சகோதரர்களும் இதோ அவன் அருகிலேயே நிற்கின்றனர். ஆனால் என்னுடைய நூறு சகோதரர்களில் இப்போது ஒருவன் கூட உயிருடன் இல்லை‘ - என்று ஏங்கினான் துரியோதனன். அவனுடைய அகத்தில் மட்டுமல்ல, முகத்திலும் அந்த ஏக்கம் பிரதிபலித்தது.

பளிங்கின் உள்ளே நிறைந்த பொருள் அந்தப் பளிங்கு வழியாகவே வெளியில் தெரிவது போல் துரியோதனனுடைய நெஞ்சின் ஏக்கம் தருமனுக்கு அவன் முகத்திலிருந்தே நன்கு தெரிந்தது. “துரியோதனா! இந்த உலகத்தில் உண்மையான அன்பும் நேசமும் கொண்டு சகோதரனாக வாழ்வதைப் போல் சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை. இப்போது இந்தக் கடைசி விநாடியில் நீ விரும்பினாலும் போரை நிறுத்திச் சமாதானமடைந்து எங்கள் அன்புச் சகோதரனாக உன்னை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீ அதற்குச் சம்மதிக்கின்றாயா?” என்று கேட்டான் தருமன். ஆனால் துரியோதனன் அதற்குச் சம்மதிக்கவில்லை. “என் உற்றார் உறவினர், உடன் பிறந்தவர்களையெல்லாம் போரில் கொன்று விட்டீர்கள். என் பரம வைரிகளாகிய உங்களோடு சமாதானம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ மரணமோ, முடிவு எதுவானாலும் அதைப் போர் செய்தே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பாண்டவர்களிடம் திமிரோடு பேசினான் அவன்.

“சரி! நீயே போருக்கு ஆசைப்படுகிறபோது எங்களுக்கென்ன வந்தது? செய்; போரைச் செய்து உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக்கொள்” என்றான் தருமன்.

சமந்த பஞ்சகத்திலுள்ள ஒரு பெரிய பூஞ்சோலையில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஆரம்பமாயிற்று. ஒருவர் கதை ஒருவர் மேல் புடைக்க இருவர் மேலும் அடிகள் திடும் திடுமென்று விழுந்தன.

“அடே துரியோதனா? உன் உடலைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் இரத்ததைக் குடிக்கவில்லையானால் என் பெயர் வீமனில்லை. இது சாதாரணப் போரில்லை. ஒன்று இந்தப் போரில் நீ என்னைக் கொல்ல வேண்டும் அல்லது நான் உன்னைக் கொல்ல வேண்டும்” என்று கூறிக்கொண்டே போர் புரிந்தான் வீமன். பயங்கரமானதோர் காட்டில் இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு போர் செய்வது போல் தோன்றியது. கதாயுதமும் கதாயுதமும் மோதிக் கொண்டனவா? அல்லது மலையும் மலையும் மோதிக் கொண்டனவா? - என்று வியக்கத்தக்க விதத்தில் நடந்தது அந்தப் போர்.

போர் நடந்துகொண்டிருக்கும் போது துரியோதனன் ஒரு தந்திரம் செய்து வீமனின் உயிர்நிலை இருந்த இரகசியத்தை அறிந்து கொண்டான். “வீமா! நீ எவ்வளவு பெரிய வீரன்? உன்னுடைய உயிர்நிலை உடம்பில் எங்கே இருக்கிறதென்று சொல்லேன்; பார்ப்போம். எனக்குத் தெரிவதனால் ஒன்றும் கெடுதல் இல்லையே?” - என்று கேட்டான். இந்தக் கேள்வியின் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத வீமன் சுபாவமாகத்தான் துரியோதனன் இப்படிக் கேட்கிறானென்று எண்ணிக் கொண்டு, “அதுவா? அது என் தலையில் இருக்கிறது” - என்று பதில் கூறிவிட்டான். பின்பு சிறிது நேரமானதும் வீமனுடைய தலையில் ஓங்கி ஓங்கி அடித்தான் துரியோதனன். உயிர் நிலையில் தொடர்ந்து அடி விழுந்தபோதுதான் துரியோதனனுடைய வஞ்சகம் புரிந்தது.

‘ஆகா! இவனிடம் நாம் ஏமாந்துவிட்டோமே. இவன் நம்மைத் தொலைப்பதற்காக அல்லவா உயிர்நிலையைப் பற்றி விசாரித்திருக்கிறான். சரி! இவன் பாடத்தை இவனிடமே திருப்பி படிப்போம்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, “துரியோதனா! என் உயிர்நிலை எங்கிருக்கிறது? என்பதைப் பற்றிக் கேட்டாய். உடனே பதில் கூறினேன். இப்போது நான் கேட்கிறேன். உன் உயிர்நிலை உடலின் எந்தப் பாகத்தில் இருக்கிறது சொல்?” - என்று கேட்டான் வீமன்.

வீமனுடைய கேள்விக்குத் துரியோதனன் சமர்த்தியமாகப் பொய் சொல்லிச் சமாளித்து விட்டான். தன் உயிர் நிலை தனது தொடையிலிருந்தும் அதைச் சொல்லாமல், “வீமா! உன்னைப் போலவே எனக்கும் தலையில் தான் உயிர் நிலை இருக்கிறது” என்று புளுகினான். அதை நிஜமென்று நினைத்துக் கொண்டவீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கையால் ஓங்கி ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு உறைத்த மாதிரியே தெரியவில்லை. அவன் சிறிதும் வலியின்றிச் சிரித்துக் கொண்டே ஊக்கம் தளராமல் வீமனை எதிர்த்தான். உண்மையில் எது உயிர்நிலையோ, அங்கே அடிபட்டிருந்தால் தானே வலி, தளர்ச்சி எல்லாம் ஏற்படும்? வீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் வீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கவுமில்லை; விழவுமில்லை. அருகில் நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கவனித்தான். துரியோதனன், வீமனை ஏமாற்றிவிட்டான் உன்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. கண்ணன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ச்சுனனை அழைத்து இரகசியமாக அவன் காதருகே இதைக் கூறினான்:- “அர்ச்சுனா! துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது. ஆனால் தலையிலிருப்பதாக உன் அண்ணனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் அவன். இப்போது உண்மையை நாம் வீமனுக்குத் தெரிவித்து விடவேண்டும் நீ ஒரு காரியம் செய்! ஜாடையாக வீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவித்துவிடு” என்று கண்ணன் கூறியபோது, அர்ச்சுனன் அப்படியே செய்வதாக கூறிச் சென்றான். வீமனுக்கு அருகே போய்க் கையால் தொடையைத் தொட்டுக் காட்டிக் கண்ணால் ஜாடை செய்தான் அர்ச்சுனன். அவ்வளவு சொன்னால் போதாதா வீமனுக்கு? துரியோதனனுடைய உயிர்நிலை அவன் பொய்யாகச் சொன்னது போல் தலையில் இல்லை; தொடையில் தான் இருக்கிறது என்று வீமனுக்குப் புரிந்துவிட்டது.