மகாபாரதம்-அறத்தின் குரல்/1. அழிவின் எல்லையில்
சௌப்திக பருவம்
வெற்றி எவர் பக்கம் தோல்வி எவர் பக்கம்? - என்று நிர்ணயிக்க வேண்டிய பதினெட்டாம் நாள் போரும் தொடங்கிவிட்டது. தருமனும் சல்லியனும் நேருக்கு நேர் எதிர்த்துப் போர் புரிந்தனர். சல்லியனுடைய சங்கநாதம் விண்ணதிரச் செய்தது என்றால், தருமனுடைய சங்கநாதம் திசையதிரச் செய்தது. வாயால் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பகைமையின் ஆத்திரத்தை எல்லாம் வில் முனையில் பேசித் தீர்த்துக் கொண்டார்கள் இருவரும். யாராவது ஒருவரை யாராவது ஒருவர் தோற்கச் செய்து விடவேண்டும் என்ற மாதிரி அவர்களிருவரும் கங்கணம் கட்டிக்கொண்டு போர் செய்வது போலத் தோன்றியது.
நேரம் ஆக ஆகச் சல்லியன் கை ஓங்கியது. தருமனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த சாரதியின் தலையை அறுத்து வீழ்த்தினான், சல்லியன். தேரின் மேலிருந்த குடையின் மேற்பகுதியையும் உடைத்துவிட்டான். இவற்றையெல்லாம் பார்த்தபோது தருமனுடைய தளராத நெஞ்சமும் சிறிது தளர்ந்தது. நல்லவேளை! அப்போது அருகில் போர் செய்து கொண்டிருந்த வீமன் தருமனுக்கு உதவியாக வந்து சல்லியனை எதிர்த்தான். வீமன் வரவு கண்ட தருமன், ‘நம்மைக் காட்டிலும் சல்லியனை எதிர்ப்பதற்கு வீமனே தகுதி வாய்ந்தவன்’ என்று எண்ணிக் கொண்டு தான் ஒதுங்கிக் கொண்டான்.
இதனால் வீமனுக்கும் சல்லியனுக்கும் நேரடிப் போர் தொடங்கிற்று. மந்திர சக்தி வாய்ந்த அம்புகளை ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். இவர்களுக்கிடையே நிகழ்ந்த கடும் போரைத் தருமன் பார்த்துக் கொண்டிருந்தான். சல்லியன் மேல் சினமுற்ற வீமன் விற்போரை நிறுத்திவிட்டுக் கதாயுதத்தோடு தேரிலிருந்து கீழே குதித்தான். சல்லியனுடைய தேரை நெருங்கிக் கதையால் அடித்து நொறுக்கலானான். ‘சல்லியன் இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்க வில்லையாகையினால் வீமனை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினான். சல்லியனுடைய தேர்ப்பாகன், குதிரைகள், தேர்ச் சக்கரங்கள் ஆகியவை எல்லாம் வீமனுடைய கதைக்கு இலக்காகி அடிபட்டு நொறுங்கின.
கதாயுதத்தைவிடப் பெரிய ‘கோமரம்’ என்னும் ஆயுதத்தை ஓங்கிக்கொண்டு வீமன் மேல் பாய்ந்தான் சல்லியன். வீமன் சல்லியனை எதிர்ப்பதற்குள் சல்லியனுடைய கோமரம் வீமன் நெற்றியில் விழுந்தது. அந்தப் பலமான அடி வீமனை ஒருகணம் பொறிகலங்கச் செய்துவிட்டது. ஆனால் அந்தக் கலக்கம் ஒருகணம்தான் நீடித்தது. மறுகணமே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் போரில் ஈடுபட்டான் அவன். சல்லியனும் வீமனும் போர் செய்ததைப் போலவே அவரவர் கட்சியைச் சேர்ந்த படைவீரர்களும் தனித்தனியே போர் புரிந்தனர். இறுதி நிலையில் இவருக்குத் தான் வெற்றி, இவருக்குத்தான் தோல்வி, என்று கண்டு கொள்ள முடியாதபடி கடுமையாக முற்றியிருந்தது போர்.
போர் என்றால் வெற்றி தோல்விகளைப் போலவே உயிர் பிழைப்பதும், உயிர் இழப்பதும் கூட இயற்கையாக நேரக்கூடியவையே! நகுலனை எதிர்த்து கர்ணனின் புதல்வர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திர தீர்த்தி என்ற இளைஞர்கள் மூவரும் தாக்குதல் நடத்தினர். நகுலனுடைய அனுபவம் மிகுந்த வீரத்துக்கு முன்னால் இந்தச் சிறுபிள்ளைகள் எவ்வளவு நேரம்தான் நிலைத்து நிற்க முடியும்? பாவம்! கால் நாழிகைப் போரிலேயே இந்த மூவரையும் கொன்று முடித்துவிட்டான் நகுலன், உலூகன், சைந்தவன் என்ற தன் பிள்ளைகள் புடைசூழச் சகுனி நகுலனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். ஆனால் நகுலன் செய்த சண்டமாருதப் போரை எதிர்த்து நிற்க முடியாமல் உடனே புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர் அவர்கள். துரியோதனாதியர் பக்கம் ஏற்பட்ட இவ்வளவு அழிவுக்கும் பதிலாகப் பாண்டவர்கள் பக்கம் ஒரே ஓர் அழிவுதான் ஏற்பட்டிருந்தது. ‘கேதுதரன்’ - என்னும் பாண்டவர் படைவீரன் துரியோதனன் கையால் இறந்திருந்தான்.
மீண்டும் போர் தொடர்ந்து நிகழ்ந்த போது சல்லியன் வீமனை எதிர்த்தான். வீமன் தரப்பைச் சேர்ந்த சுமித்திரன் என்ற வீரன் சல்லியனுடைய அம்புக்கு இரையாகி மாண்டான். சுமித்திரன் இறந்தபின் சல்லியன் தனது முழுப்பலத்தையும் வீமனைத் தாக்குவதில் காட்டினான். வீமன் திணறினான். அதைக் கண்ட நகுலன், சகாதேவன், சாத்தகி ஆகியோர்கள் வீமனுக்கு உதவுவதற்காக ஓடிவந்தார்கள்.
ஆனால் அவர்கள் நான்கு பேருமாகச் சேர்ந்தும்கூடச் சல்லியனை எதிர்க்க முடியவில்லை. சல்லியனுக்குப் போர் வெறி பிடித்திருந்தது. ஊழிக்காலத்து மழைத் துளிகள் போல அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகள் அவர்களைத் திக்குமுக்காடச் செய்தன. வீமன் பார்த்தான். ‘இந்தச் சல்லியனை இப்படியே கைமீற விட்டுவிட்டால் பின் நம்மைச் சும்மா விடமாட்டான்’ என்றெண்ணிக்கொண்டு ஆவேசத்தோடு சல்லியனின் தேரை நோக்கிப் பாய்ந்தான். அடுத்த விநாடியில் வீமன் சீறிப்பாயும் மின்னலாக மாறிவிட்டான். அவன் கையிலிருந்த ஆயுதம் தேரைத் தாக்கியது. தேரோட்டியைத் தாக்கியது. தேர்க் குதிரைகளைத் தாக்கியது. வெறிகொண்டு தாக்கிய அந்தத் தாக்குதலால் சல்லியனின் தேர்ப்பாகன் இறந்தான். தேர் உடைந்தது. படைகள் சிதறி ஓடின. சல்லியனின் அணிவகுப்பும் உடைந்துவிட்டது.
போர்க்களத்தின் மற்றொரு பகுதியில் அர்ச்சுனனும் அசுவத்தாமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தார்கள். அர்த்த சந்திர வடிவாக வளைந்த கத்தி போலிருந்த பல அம்புகளை அர்ச்சுனன் மேல் செலுத்தினான் அசுவத்தாமன். அவை அசுவத்தாமனுடைய திறமையை வெளிப்படுத்தின. இதனால் அர்ச்சுனன் உடலில் பல இடங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அர்ச்சுனனும், அசுவத்தாமனுடைய உடலில் பல காயங்களை உண்டாக்கினான். இருவருடைய தேர்க்குதிரைகளும் அழிந்தன. இருவரும் தரையில் இறங்கிப் போர் செய்தனர். சிறிது நேரத்தில் அசுவத்தாமன் புறங்காட்டி ஓடினான். அவன் உண்மையாகவே புறங்காட்டி ஓடுவதாக எண்ணிக் கொண்டிருந்த அர்ச்சுனன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு அஜாக்கிரதையாக இருந்தான்.
அசுவத்தாமன் அப்போது ஓடுவது போல் பாசாங்கு செய்துவிட்டுக் குபீரென்று திரும்பி ஒரு பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். ஆனால் உடனே அர்ச்சுனன் அதைத் தன் அம்புகளால் தடுத்து முறித்துவிட்டான். அடுத்து ஒரு பருமனான கதாயுதத்தை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். அதையும் உடைத்து விட்டான் அர்ச்சுனன். கடைசியில் வேறு வழியின்றிப் புறமுதுகு காட்டி ஓடினான் அசுவத்தாமன். அவன் ஓடிய பிறகு கிருபாச்சாரியன் வந்து அர்ச்சுனனோடு போரிட்டான். அர்ச்சுனன் விரைவில் அவனையும் தோற்று ஓடச் செய்தான். எல்லோரும் தோற்று ஓடிய பின்னர் தன் சகோதரனாகிய வீமனுக்குப் பக்கபலமாகப் போய் நின்று கொண்டான் அர்ச்சுனன்.
சல்லியனுக்கு உதவியாகத் துரியோதனன் வந்து சேர்ந்து கொண்டான். அவன் வந்து சேர்ந்த பின்பு சல்லியனுக்குத் துணிவும் புதிய ஊக்கமும் உண்டாகியிருந்தன. சல்லியனோடு போர் செய்து கொண்டிருந்த சாத்தகியும். நகுலனும் தோற்றனர். சகாதேவனும் தோற்றான். சல்லியனின் ஆண்மையும், ஆற்றலும் பெருகிக் கொண்டே வந்தன. வீமன், தருமன், அர்ச்சுனன் மூன்று பேரும் எதிர்க்கிறபோது தான் ஒருவனாகவே நின்று அவன் அவர்களைச் சமாளித்தான். சல்லியனுடைய அம்புகள் தருமன் முதலியவர்களின் உடலைத் துளைத்தன.
சல்லியன் மேல் சினங்கொண்ட வீமன் அவன் தலையில் தரித்திருந்த கிரீடம் கீழே விழுமாறு ஓங்கி தட்டினான். வீமன். இப்படிச் செய்ததைக் கண்டு அதிக ஆத்திரம் அடைந்த துரியோதனன் வில்லை வளைத்து அவன் மேல் அம்பு செலுத்தினான். துரியோதனன் தன்னைத் தாக்குவதைக் கண்ட வீமன் சல்லியனை விட்டு விட்டு துரியோதனன் மேல் பாய்ந்தான். துரியோதனனுக்கும் வீமனுக்கும் போர் ஏற்பட்டது. ஆனால் துரியோதனன் வீமனை எதிர்த்து நிற்கமுடியாமல் விரைவிலேயே தோற்று ஓடினான். துணையிழந்த சல்லியன் தனியாகவே பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டான். அவனுக்கு உதவியாக எண்ணற்ற கெளரவப் படை வீரர்கள் அருகிலிருந்தனர், ஆனால் அவன் ஒருவன். பாண்டவர்களோ பலர். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்று இவ்வளவு பேர்களும் ஒன்று திரண்டு சல்லியனை எதிர்த்தார்கள். போர் கடுமையாக நடந்தது. அந்தப் போரில் ஈடுபட்டிருந்த எல்லா வீரர்களுக்கும் உடம்பில் கவசங்களும் கருவிகளும் இருந்தன. ஆனாலும் அந்தக் கவசத்தைக் காட்டிலும் மேலான கவசம் அவர்கள் மனத்தில் இருந்தது. ‘மானம்’ என்ற கவசமும் வீரம் என்ற கருவியும் அவர்கள் மனத்தில் நிறைந்திருந்தன. அவற்றைக் கொண்டு அவற்றிற்கு எதனாலும் பங்கம் வந்து விடாத முறையில் போரிட்டனர் அவர்கள். சல்லியனைக் கொன்று தொலைத்துவிட வேண்டுமென்ற ஆவேசத்தோடு தருமனும், தருமனைக் கொன்று தொலைத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு சல்லியனும் போரிட்டனர். தருமனுடைய தேர், குதிரைகள், படைகள் ஆகிய எல்லாவற்றையும் அழித்து அவனை நொடிப் பொழுதிற்குள் வெறுங்கையனாக்கினான் சல்லியன்.
அவமானமடைந்த தருமன் வேறோர் தேரில் ஏறிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். ‘சல்லியனைக் கொல்வது அல்லது தானே இறப்பது’ - என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போரை இம்முறை தருமன் தொடங்கியிருந்தான். தன் மனத்திலிருந்த கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கூரிய வேலை எடுத்துச் சல்லியன் மார்பைக் குறிவைத்து வீசி எறிந்தான் தருமன். அந்த வேல் சல்லியன் மார்பில் பாய்ந்து முதுகை ஊடுருவிச் சென்றது. போர்களம் முழுதும் எதிரொலிக்கும்படி குரூரமாக அலறிக்கொண்டு தேரின் மேல் சாய்ந்தான் சல்லியன். வேல் பாய்ந்த இடத்திலிருந்து குருதி பீறிட்டுக் கிளம்பியது. சில கணநேரம் ஈனஸ்வரத்தில் அரற்றிக்கொண்டு கிடந்த பின் சல்லியன் இறந்துவிட்டான். தங்கள் தலைவனைக் கொன்றதற்காகப் பழிவாங்கும் எண்ணத்தோடு சல்லியனின் நூற்றுக்கணக்கான வீரர்கள் தருமனுடைய தேரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். துரியோதனனும் சகுனி, தன் தம்பியர், முதலியவர்களை அழைத்துக் கொண்டு தருமனை, எதிர்க்க வந்து விட்டான். ஆனால் தருமனுக்கு ஒருவிதமான ஆபத்தும் அவர்களால் ஏற்பட முடியாதபடி வீமன், துட்டத்துய்ம்மன் முதலியவர்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர். சோம குலத்து வீர இளைஞர்கள் வேறு உடன் வந்தனர். படைத் தலைவனாகிய சல்லியனைப் பறிகொடுத்த பின்னும் தயங்காமல் எதிர்த்தனர் துரியோதனாதியர்.
ஆனால் அதிகச் சேதம் துரியோதனன் பக்கமே ஏற்பட்டது. துரியோதனனுடைய சகோதரர்களில் எஞ்சியிருந்த ஏழு பேரும் வீமன் கையால் மாண்டு போனார்கள். எஞ்சியிருந்தவர்களில் இன்னும் ஐந்து சகோதரர்களை அழைத்துக்கொண்டு கிருதவன்மன் வீமனை எதிர்ப்பதற்கு வந்தான்.
“வாருங்கள்! வாருங்கள்! ஏழுபேரும் எந்த இடத்திற்குப் போனார்களோ அங்கே உங்களையும் அனுப்புகின்றேன்” - என்று அவர்களை வரவேற்றான் வீமன். சிறிது நேரம் போர் நடந்தது. சித்திரபாகு, பலசேனன், ஜெயசூரன், சித்திரன், உத்தமவிந்து என்னும் பெயர்களையுடைய அந்த ஐந்து சகோதரர்களைத் தவிர மற்றவர்களெல்லோரும் வீமனுக்குப் பயந்து போர்க்களத்தை விட்டே ஓடிவிட்டனர். இந்த ஐவர் மட்டும் மாண்டு போவதற்காகவே வந்தவர்களைப் போல ஓடாமல் நின்று நிலைத்துப் போர் செய்து கொண்டிருந் தார்கள். மிக விரைவிலேயே இவர்களும் விண்ணுலக வாசம் அடையுமாறு கொன்று குவித்தான் வீமன்.
‘அடுத்த பலி நாங்கள்தான்’ என்று சொல்லிக் கொண்டு வருகிறவர்களைப் போல் இன்னும் ஒன்பது சகோதரர்கள் தருமனையும் வீமனையும் எதிர்ப்பதற்காக சகுனியின் தலைமையில் ஓடிவந்தார்கள். வீமன் அவர்களை எதிர்ப்பதற்குத் தயாரானான். வீமனுக்கும் துரியோதனன் தம்பிமார்கள் ஒன்பது பேருக்கும் இடையறாத போர் நடந்தது. முடிவில் முன் சென்றவர்களைப் பின்பற்றி அவர்கள் ஒன்பதின்மரும் உயிரிழந்து போயினர். கூட்டம் கூட்டமாகத் தம்பிகள் சென்றபோதெல்லாம் வீமன் அவர்களை ஒருவர் விடாமல் கொன்று தொலைப்பதை அறிந்ததும் துரியோதனன் மலைத்தான். ‘தன்னுடைய முடிவுகாலம் நெருங்கிவிட்டதோ?’ என்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. பிரமித்துப் போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்து விட்டான் அவன். அந்த நிலையில் அருமை மாமனான சகுனி வந்து துரியோதனனைத் தேற்றி ஊக்கப்படுத்தினான்.
“துரியோதனா! நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இப்போது உன் சார்பாக நான் வீமனிடம் போருக்குப் போகிறேன். அவனை இலேசில் விடுகிறேனா பார்?” என்று வீறாப்புப் பேசிவிட்டுப் படைகளைத் திரட்டிக்கொண்டு வீமனை எதிர்க்கக் கிளம்பினான் சகுனி. வீமனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று.
“வா? வா! நீ ஒருவன் தான் வரவில்லையென்று எண்ணிக் கொண்டிருந்தேன். உனக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது” என்று சிரித்துக்கொண்டே கூறி சகுனியை வரவேற்றான் வீமன். சகாதேவன் வீமனுக்கு உதவியாகப் போரிட்டான். சகுனிக்கு உதவுவதற்காக வந்த துரியோதனன் ஒரு வேலாயுதத்தை எடுத்து சகாதேவன் மேல் எறிந்து விட்டான். அது சகாதேவனை நன்றாகத் தாக்கிவிட்டதனால் அவன் பிரக்ஞை தவறிக் கீழே நிலைகுலைந்து வீழ்ந்து விட்டான். தம்பியைத் துரியோதனன் தாக்கிவிட்டதைக் கண்டு மனம் கொதித்த வீமன் தன் மனக் கொதிப்பையெல்லாம் சகுனி மேல் காட்டினான். சகுனியைக் காப்பாற்றுவதற்காக, துரியோதனனும் அசுவத்தாமனும் பெருமுயற்சி செய்தார்கள். வீமன் அம்புகளை எய்து துரியோதனனை முர்ச்சையுறச் செய்தான். வீமனுக்கு உதவியாக வந்த சோழ மன்னன் எய்த அம்புகள் அசுவத்தாமனைப் பிரக்ஞையிழக்கச் செய்தன. இவர்களெல்லாம் இந்த அவலமடைந்ததைக் கண்டு கிருபாச்சாரியார் எஞ்சியிருந்த கெளரவப் படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்தார். சோழனோ அவரையும் அவரோடு வந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அடித்துவிட்டான். இதற்குள் சகாதேவன் பிரக்ஞையுற்று எழுந்திருந்தான். அவனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று. தன்னை வேலால் எறிந்தது போலவே சகுனியின் மேலும் வேலால் எறிய எண்ணினான் சகாதேவன். சகாதேவன் கையில் வேலை எடுத்து, சகுனியின் மார்பைக் குறிவைத்து எறிந்தான். சகாதேவனுடைய அந்தக் குறி தவறவில்லை. சகுனியின் மார்பை இரண்டாகப் பிளந்து வீழ்த்தியது அந்த வேல். சகுனி கீழே விழுந்து இறந்தான். எல்லாச் சூழ்ச்சிகளுக்கும், எல்லா வஞ்சகங்களுக்கும் காரணமாக இருந்த அவனுடைய மரணம் பாண்டவர்களுக்குள் மகிழ்ச்சி உண்டாக்கியது. முன்பு துரியோதனனுடைய சபையில் சகுனியைக் கொல்வதாக அவன் செய்திருந்த சபதமும் நிறைவேறி விட்டது.
ஏற்கெனவே தம்பியரைக் கொல்லக் கொடுத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருந்த துரியோதனன் சகுனியின் சாவுச் செய்தி கேட்டு ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பெரும் புயல் வீசும் பொழுது நட்ட நடுக்கடலில் மாலுமியில்லாத மரக்கலம் உடைந்து போனாற் போன்ற நிலையை அடைந்தான் அவன்.
அடுக்கடுக்காகத் தோல்விகளையும், மரணங்களையுமே கண்ட அவன் மனம் கலக்கத்தின் சிகரத்தை அடைந்தது. “என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? முட்புதரில் கைகளை நுழைத்துவிட்டோம்! எடுப்பது எப்படி?’ - என்று தான் விளங்கவில்லை. ஐயோ! எதற்காக இந்தத் துர்ப்பாக்கியமான போரைத் தொடங்கினோம்?” - அழிவின் எல்லையில் தோல்வி அணு அணுவாகத் தன்னை நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தபின் துரியோதனன் இப்படிச் சிந்தித்தான்.
முன்பு ஒரு முனிவர் தனக்கு உபதேசித்திருந்த மந்திரம் ஒன்று இப்போது அவனுக்கு நினைவில் வந்தது. அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்ப ஜபித்துத் தவம் செய்தால் போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர் பெறச் செய்து பாண்டவர்களை எதிர்க்கலாமென்று எண்ணினான். உண்மையில் அந்த மந்திரம் வலிமை வாய்ந்ததுதான். பிரம்மாவிடம் கற்ற அந்த மந்திரத்தைச் சுக்கிராச்சாரி சகமுனிவனுக்குக் கூறினான். சகமுனி வியாழ பகவானுக்குக் கற்பித்திருந்தான். வியாழபகவானிடம் சீடனாயிருந்து அவன் கருணைக்குப் பாத்திரமான ஒருவன் மூலம் துரியோதனன் அதைக் கற்றுக்கொண்டிருந்தான்.