மகாபாரதம்-அறத்தின் குரல்/6. துயர அமைதி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

6. துயர அமைதி

இன்னதென்று புரிய முடியாத உணர்வுகளால் அலைமோதிக் கொண்டிருந்த குந்தியின் மனத்தில் இனம் புலப்படாத சோக இருள் சூழ்ந்தது. வலக்கண்ணும் தோளும் புருவமும் தீய நிமித்தமாகத் துடித்தன. உடல் காரணமின்றி நடுங்கியது. ‘உன் மகன் கர்ணன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று ஏதோ உருவமற்ற தெளிவிழந்த குரல் ஒன்று இடைவிடாமல் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் பயந்தாள். அவளுடைய மனமும் எண்ணங்களும் குழம்பி நடுங்கின. பதறியடித்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடினாள். அவளுடைய கால்களைக் காட்டிலும் படுவேகமாக மனம் அங்கு ஓடியது. அங்கே சென்றதும் சற்று முன் அவள் எதைப் ‘பிரமை’ என்று எண்ணினாளோ, அதுவே உண்மையாக நடந்திருந்தது!

ஆம்! கர்ணன் குருதி வெள்ளத்தில் இடையே வீழ்ந்து கொண்டிருந்தான். குந்தி அவனை அந்த நிலையில் கண்டு ஓவென்று கதறியழுது புலம்பினாள். தளர்ந்து உணர்விழந்து சாவை நெருங்கிக் கொண்டிருந்த அவன் உடலைத் தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு பலவாறு புலம்பினாள். பெற்ற பாசத்தினால் அவளுடைய மார்பகங்களில் பால் சுரந்தது, பிறந்த அன்று கிடைக்காத தாய்ப்பால் அப்போது போர்க்களத்தின் பயங்கரமான சூழ்நிலையில், மரணத் தறுவாயில் கர்ணனுக்குக் கிடைத்தது. பெற்றும் வளர்க்கப் பயந்து ஆற்றிலே விட்டவளின் இதயத்திலிருந்து அத்தனை காலத்துக்குப் பிறகு சுரந்த அந்தச் சில துளிபாலை உட்கொண்ட பின் கர்ணனுடைய உடலிலிருந்து உயிர் அமைதியாகப் பிரிந்து சென்றது.

‘குந்தி கர்ணனின் உடலை எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அழுகிறாள்? அவளுக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணனுடைய மரணத்தைச் சகிக்காமல் அவள் அலறியழுவதேன்?’ என்று பாண்டவர்கள் உட்படப் போர்க்களத்தில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் எதுவுமே தெளிவாக விளங்கவில்லை. அங்கே அந்த மாபெரும் இரகசியம் இரண்டே பேருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் கண்ணன், குந்தி ஆகிய இருவரே.

இப்படி இவர்கள் வியப்பில் மூழ்கி வருந்திக் கொண்டிருந்த போது துரியோதனன் ஒருபுறம் கர்ணன் பிரிவு தாங்க முடியாமல் கதறி அழத் தொடங்கினான். அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையாகிய கர்ணனும் அழிந்து போய்விட்டான். அவனால் பொறுத்துக் கொள்ள முடியாத அழிவு அது.

“வீராதி வீரனே! நீ இறந்து விட்டாய். இனிமேல் என் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு யார் இருக்கிறார்கள்? ஒப்பற்ற நண்பா! உன்னை இழந்த இனி நான் எப்படி வாழப் போகிறேன். இனி நான் போரில் வென்று ஆகப்போவது தான் என்ன? இனி இந்த உலகத்தை நான் ஆளவும் வேண்டுமா? நீ போன பின் எனக்கு வேண்டியது எது? வேண்டாதது எது?” துரியோதனன் கல் நெஞ்சுக்காரன். அவனே விக்கி விக்கி அழுததைப் பார்த்தபோது போர்க் களத்திலிருந்தவர்களுக்குப் பரிதாபமாக இருந்தது.

“தங்களுடைய தாய் கர்ணனுக்காக ஏன் இவ்வளவு அலறியழுகிறாள்?” என்று திகைத்து மயங்கிய பாண்டவர்கள் கண்ணனிடம் போய்க் கேட்டார்கள்.

உடனே கண்ணன். “கர்ணன் உங்களுடைய தமையன். அவன்தான் தர்மனுக்கும் மூத்தவன்” என்று கூறிக் கர்ணனுக்கும் குந்திக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விவரித்தான். அவற்றைக் கேள்விப்பட்டவுடன் பாண்டவர்களும் அலறியழுது கொண்டே கர்ணனின் சடலத்தை நோக்கி ஓடினார்கள். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்று அறிந்ததும் அவர்கள் நெஞ்சு பதறியது; உடல் நடுங்கியது.

“அம்மா! நீ ஏன் இந்த இரகசியத்தை முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை? ஐயோ! நாங்களே கர்ணனின் உயிருக்கு உலை வைத்து விட்டோமே” என்று குந்தியை நோக்கிப் பாண்டவர்கள் ஐந்து பேரும் கதறினர்.

“ஏ! கண்ணா நீ பொல்லாத சூழ்ச்சிக்காரன். உனக்கு இந்த இரகசியம் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் இருந்து விட்டாயே? தாயும் நீயுமாகச் சேர்ந்து கொண்டு எங்களைப் பெரிதும் ஏமாற்றி விட்டீர்கள் வஞ்சகம் செய்து விட்டீர்கள். உன் சூழ்ச்சிகள் மனிதர்களுக்குப் புரியவே மாட்டேனென்கிறதே! இரணியனை அவன் பெற்ற பிள்ளை பிரகலாதனைக் கொண்டே கொல்லித்தாய். அரக்கனான இராவணனை அவனுடைய தம்பியாகிய விபீஷணனைக்கொண்டே அழித்துவிட்டாய். எங்கள் முன் பிறந்தவனாகிய மூத்த தமையனை எங்களைக் கொண்டே கொன்றுவிட்டாய். நீ மாயவதாரன். கபட நாடக சூத்திரதாரி. உன் மாயைகளை மனிதர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லையே?” என்று கண்ணனைக் குறை சொல்லி முறையிட்டார்கள். அவன் பாண்டவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. மறுமொழி கூறாமல் தலையைக் குனிந்து கொண்டான். அப்போது அவனுடைய முகத்தில் சிரிப்பா, அழுகையா, சோகமா, மகிழ்ச்சியா, எது என்றே இனங்கண்டு கொள்ள முடியாததோர் மெல்லிய சலனம் புலப்பட்டது. யாருக்குத் தான் புரியும் அவனுடைய அலகிலா விளையாடல்கள்?

கர்ணனுடைய மரணம் போர்க்களம் முழுவதும் ஒருவிதமான சோகம் ததும்பி நிற்கும் துயர அமைதியை உண்டாக்கிவிட்டிருந்தது. அவனுடைய மரணமாகிய வேதனையால் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு சாரருமே துயரங் கொண்டனர். அந்திமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடை பெறலாயின. போட்டியும், பொறாமையும், பகைமையும், குரோதமும் நிறைந்து நின்ற அந்தப் போர்க்களம் கர்ணனுடைய மரணத்தால் யாவற்றையும் மறந்து சோகம் என்ற ஒரே ஓர் உணர்வில் ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தது.

அன்றிரவு துரியோதனனுக்குத் தூக்கமே இல்லை. உணவு, உறக்கம், மறுநாள் போர், எதைப் பற்றியுமே கவலைப்படாது கர்ணனைப் பிரிந்த துன்பத்தில் மூழ்கியிருந்தான் அவன்.

சகுனி அப்போது அங்கே வந்தான். “துரியோதனா! இறந்தவன், நாம் வருத்தப்படுகிறோம் என்பதற்காக இனி மேல் திரும்பியா வரப்போகிறான்? கவலையைக் கைவிட்டு விடு. நாளைப் போருக்கு யாரைத் தரைவனாக நியமிக்கலாம். அதைப்பற்றி இப்போதே தீர்மானித்துக் கொள்ள வேண்டாமா?” என்று சகுனி துரியோதனனைக் கேட்டான்.

பின்பு ‘படைத் தலைவனாக யாரை நியமிப்பது’ என்பது பற்றி அன்று இரவு சகுனியும் துரியோதனனும் நீண்ட நேரம் விவாதித்தனர். இறுதியில் இருவரும் ஏகமனதாக ஒரே முடிவுடன் ஒரே ஆளைத் தேர்ந்தெடுத்தார்கள். பதினெட்டாவது நாள் போருக்குச் சல்லியனைப் படைத் தலைவனாக்குவது என்பதே அவர்களுடைய அந்தத் தீர்மானம். கர்ணனுக்குப் பின்னர் கெளரவ சேனையில் எஞ்சியிருந்தவர்களில் சல்லியனைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள் வேறு எவரும் இல்லை. அவன் ஒருவனால் தான் இனிமேல் அவ்வளவு பெரிய கெளரவ சேனையை நிர்வகித்து நடத்த முடியும். இத்தகைய காரணங்களாலேயே துரியோதனன், சகுனி இருவரும் சல்லியனைத் தேர்ந்தெடுத்தனர். உறக்கமில்லாத அந்த நீண்ட துயர இரவு கழிந்ததும் பதினெட்டாம் நாள் பொழுது புலர்ந்தது. துரியோதனன் போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை வேண்டா வெறுப்பாகச் செய்தான். சல்லியனை அழைத்து, சல்லியா! இன்றைய படைத் தலைவன் நீ தான். என்னுடைய படைகளை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். இனி என்னுடைய உயிர், உடல், வாழ்வு, துணிவு, வெற்றி, நம்பிக்கை எல்லாம் உன் வசத்தில்தான் இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொறுப்பை - வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டிய சோதனையைத் துணிந்து உன் கையில் கொடுக்கிறேன். யானை, தேர், குதிரை, காலாள் என்ற எனது நான்கு வகைப் படைகளுக்கும் இந்த விநாடியிலிருந்து நீயே தளபதி. இதோ அதற்குரிய அடையாள மரியாதைப் பொற்பட்டத்தை உனக்கு அணிவிக்கிறேன். ஏற்றுக்கொள்” என்று சல்லியனிடம் உருக்கமாகக் கூறித் தளபதிப் பதவியை அளித்தான். சல்லியன் மகிழ்ச்சியோடும் பயபக்தியோடும் தனக்களிக்கப்பட்ட சேனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டான். துரியோதன்னுடைய படைகளுக்கு நடுவே கம்பீரமான பட்டத்து யானை மேல் ஏறி உட்கார்ந்து அணிவகுப்புக்காக வீரர்களை ஒழுங்குபடுத்தினான் சல்லியன். துரியோதனனின் படை வீரர்கள் சல்லியனுடைய தலைமையை மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து வரவேற்றனர். சல்லியன் அன்றைய போருக்கு ஏற்றபடி வீரர்களைத் தனித்தனிப் பிரிவாக அணிவகுத்து நிறுத்தினான். துரியோதனனுக்குப் போர்க்களத்திற்கு வரவேண்டுமென்ற ஆசையோ, ஆர்வமோ அன்று இல்லாவிட்டாலும் கடமைக்காக வரவேண்டியிருந்தது. பதினெட்டாம் நாள் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அவனும் போர்க்களத்துக்கு வந்து படைகளை அணிவகுப்பதில் சல்லியனுக்கு உதவியாக இருந்தான்.

கெளரவர் சேனை சல்லியன் தலைமையில் பதினெட்டாம் நாள் போருக்குத் தயாராக அணிவகுத்துக் களத்தில் வந்து நின்றுவிட்டது. ஆனால் பாண்டவ சேனையையோ, பாண்டவ வீரர்களையோ இன்னும் காணவில்லை. அவர்கள் நிலை என்னவென்று இப்போது சென்று கவனிக்கலாம். உண்மையில் பார்க்கப்போனால் கர்ணனுடைய மரணத்தினால் கெளரவர்களைவிட பாண்டவர்கள்தாம் அதிகத் துயரம் அடைந்தனர். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்ற உண்மை வேறு அவர்களுக்குத் தெரிந்து விட்டதே? அதனால் அவர்களுடைய சோகமும் வேதனையும் வளருவதற்கு வழி ஏற்பட்டதே ஒழியக் குறையவில்லை. எந்த அர்ச்சுனனுடைய கைகள் கர்ணனுடைய மார்பில் அம்பு எய்து கொன்றனவோ, அதே அர்ச்சுனனுடைய கைகள் அன்றிரவு விடிய விடியத் துடி துடித்துக் கொண்டிருந்தன. செய்யத் தகாத காரியத்தைச் செய்து விட்டோமே என்ற வேதனை அவனை உறங்கவிடவில்லை. தருமனுக்கோ இனிமேல் போர் செய்ய வேண்டுமென்ற ஆசையே இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது. வீமன், நகுலன், சகாதேவன் முதலிய யாவருமே கர்ணனை இழந்த துன்பத்தில் மூழ்கிப் பதினெட்டாம் நாள் போரை மறந்திருந்தனர்.

கண்ணன் ஒருவன் மட்டும் நினைவூட்டி அவர்களை ஊக்கி முயற்சி செய்திருக்கா விட்டால் அவர்கள் அன்றையப் போருக்குப் புறப்பட்டு வந்திருக்கவே மாட்டார்கள்.

“இன்பமோ? துன்பமோ? க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் அவற்றில் முற்றிலும் ஆழ்ந்து மூழ்கிப் போய்விடக்கூடாது. க்ஷத்திரியனுக்குக் கடமையைவிடப் பெரியது ஒன்றுமில்லை. அதை மறப்பதைவிடக் கேவலமும் வேறொன்று இல்லை. துன்பத்தை மறந்து போருக்குப் புறப்படுங்கள்” - என்று கண்ணன் கூறிய பின்புதான் பாண்டவர்கள் மனம் தேறித் தங்கள் படைகளுடன் போர்களத்திற்குப் புறப்பட்டு வந்தனர். துட்டத்துய்ம்மன் தலைமை தாங்கி வந்தான்.

அங்கே சல்லியன் முன்னேற்பாடாகத் தன் கட்சிப் படைகளைப் பெரிய பெரிய வியூகங்களில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைத்திருந்தான். அதைப் பார்த்த போது பாண்டவர்களும் மற்ற வீரர்களும் திகைத்தனர். அவ்வளவு பெரிய வியூகங்களில் வரிசையாக நிற்கும் கெளரவ சேனையைக் கண்டு தருமன் முதலியவர்களுக்கு மலைப்பாக இருந்தது.

“கண்ணா! இன்று கெளரவ சேனை அணிவகுக்கப் பட்டிருக்கும் விதத்தையும், சல்லியன் அதற்குத் தலைவனாக நிற்கும் தோரணையையும் பார்த்தால் நாம் நிச்சயமாகத் தோற்றுவிடுவோமோ என்று பயமாக அல்லவா இருக்கிறது? என்ன செய்யலாம்?” என்று தருமன் அச்சம் தொனிக்கும் குரலில் கண்ணனைப் பார்த்துக் கேட்டான். அர்ச்சுனன், வீமன் முதலிய மற்றவர்களும் அதே சந்தேக நிழல் படிந்த முகத்தோடு கண்ணனை ஏறிட்டுப் பார்த்தார்கள். தருமன் வாய் திறந்து கேட்ட சந்தேகத்தையே அவர்கள் கண்பார்வையால் தன்னைக் கேட்பதை கண்ணன் புரிந்து கொண்டான்.

“பாண்டவர்களே! கவலைப்படாதீர்கள். நான் சொல்லுகிற முறைகளை அனுசரித்து இன்றைய போர் நடந்தால் வெற்றி உங்களுக்குத்தான். சல்லியனின் வலிமைக்கு இணையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீயும் (தருமனைப் பார்த்து) வீமனும் சேர்ந்து போரிட்டால் சல்லியனைக்கூட வென்றுவிடலாம். அர்ச்சுனன் அசுவத்தாமனை எதிர்த்துப் போரிட வேண்டும். சகாதேவன் சகுனியோடு போர் செய்து அவனைத் தொலைக்க வேண்டும். நகுலன் கர்ணனுடைய புதல்வர்களை எதிர்த்துப் போரிட வேண்டும் இந்த முறை மாறாமல் நீங்கள் கௌரவ சேனையை எதிர்த்துப் போர் புரிந்தீர்களானால் நிச்சயம் உங்களுக்குத்தான் வெற்றி, சந்தேகமில்லை” - என்று கூறி தருமனையும், வீமனையும், சல்லியனை எதிர்ப்பதற்கு அனுப்பிவிட்டு, தான் அர்ச்சுனனுடைய தேரில் ஏறிக் கொண்டான் கண்ணன்

அர்ச்சுனனின் தேரைக் கண்ணன் அசுவத்தாமன் இருந்த திசையை நோக்கிச் செலுத்தினான். வீமனும் தருமனும், சல்லியன் இருந்த பக்கமாகத் தத்தம் தேர்களைச் செலுத்திக் கொண்டு சென்றனர். சகாதேவன் சகுனியை நோக்கியும், நகுவன் கர்ணனின் புதல்வர்களை நோக்கியும் சென்றனர். ஊழிக் காலத்து ஓலிகளைப் போன்ற பெரிய சப்தங்களுடன் பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது. அம்புடனே அம்புகளும், வாளுடன் வாளும், கதையுடன் கதையும் மோதி ஒலி வெள்ளம் ஆரவாரித்துப் பொங்கி எழுந்தது. வெற்றி தோல்வியின் இறுதி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது, அன்றைய தினம் நடந்து கொண்டிருந்த இறுதிப் போராட்டம்.

{கர்ண பருவம் முற்றும்)