மகாபாரதம்-அறத்தின் குரல்/2. விசயன் தவநிலை

விக்கிமூலம் இலிருந்து

2. விசயன் தவநிலை

வியாசரிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவபெருமானை நோக்கித் தவமியற்றச் சென்ற அர்ச்சுனன் வடதிசையில் பல நாள் இடைவிடாது பிரயாணம் செய்து இமயமலையை அடைந்தான். பராசக்தியாகிய உமாதேவி தோன்றிய அந்த மலையின் மேல் அவனுக்குத் தனிப்பட்ட பய பக்தி ஏற்பட்டது. எங்கு நோக்கினும் முனிவர்களும் தபஸ்விகளுமாகத் தென்பட்ட அந்த மலையில் அவர்களையெல்லாம் வணங்கி வழிபட்ட பின்னர் கைலாச சிகரம் நோக்கி அவன் மேலும் பயணம் செய்தான். அரிய முயற்சியின் பேரில் யாத்திரை செய்து கைலாச சிகரமடைந்த அர்ச்சுனன் வியாச முனிவரின் யோசனையின்படி தன் தவத்தை அங்கே தொடங்கினான். பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி ஒற்றைக் காலில் நின்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டான்; கைகள் சிரத்திற்கு மேல் உயர்ந்து வணங்கும் பாவனையில் குவிந்திருந்தன. அப்போது விளங்கிய அவனுடைய தோற்றம் சிவபெருமானே அங்கு வந்து நின்று தவம் செய்வதைப் போல இருந்தது.

புலன்களின் ஒடுக்கத்தில் அறிவு மலர்ந்து பரம் பொருளை நோக்கிப் படர்ந்தது. அவனைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் வளர்ந்த பஞ்சாக்கினிகள் வெம்மையை உண்டாக்கியதாகவே தோன்றவில்லை. நெஞ்சம் சிவனை எண்ணிச் சிவமயமாக இருந்தது. உடல் புளகித்தது. இன்பமயமான அந்தப் பரம்பொருள் தியானத்தில் மெய்சிலிர்த்துச் சிலிர்த்துப் புற உணர்வுகள் ஓயப்பெற்ற அந்த உடல் நாளடைவிலே கற்சிலை போல் இறுகி விட்டது. உணர்ச்சிகள் அடங்கி உள்முகமாக ஒடுங்கி விட்டன. மலைச் சிகரங்களிடையே ஒரு கற்சிலை நிற்பது போல அவன் உடலும் நின்றது. காட்டு யானைகள் உடல் தினவு தீர்த்துக் கொள்ளும் நோக்குடனே அவனுடைய சரீரத்தைக் கற்பாறை என்றெண்ணி அதன் மேல் உரசிக் கொண்டன. உடலின் கீழ்ப் பகுதியில் மண் மேவியதால் அதைப் புற்று என்றெண்ணிப் பாம்புகள் வாசஞ்செய்ய வந்து விட்டன. மனித சரீரம் நெகிழ்ந்து, ஆன்ம சரீரம் வலுப்பட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தழைத்திருந்த செடி கொடிகள் சரீரத்தை மறைத்துத் தழுவிப் படந்து வளர ஆரம்பித்து விட்டன. காலம் வளர்ந்து கொண்டே போயிற்று. சிவ நாம ஸ்மரணையும், தியானமும் தவிரத் தனக்குரிய புறவுடலின் நினைவேயின்றித் தவஞ்செய்தான் அர்ச்சுனன். மாரியும் கோடையுமாகப் பருவங்கள் மாறி மாறி வந்தன. மாரிக் காலத்தில் மழை வர்ஷித்தது. கோடைக் காலத்தில் வெயில் வாட்டியது. குளிர் காலத்தில் குளிர் ஒடுக்கியது! ஆனால் அர்ச்சுனனுடைய தவம் குலையவில்லை. சரீரம் தளரத் தளர ஆன்ம சாதனை பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. போர் என்றால் காயங்கள் ஏற்படாமலா போய் விடும்? தவம் என்றால் சோதனைகள் ஏற்படுவது இயற்கை தான்.

அர்ச்சுனனுடைய கடுந்தவத்திற்கும் சோதனைகள் ஏற்பட்டன. அவன் மனத்திண்மையைப் பரிசோதனை செய்வதற்காக இந்திரன் அந்தச் சோதனைகளை ஏற்படுத்தினான். தேவருலகில் உள்ள அழகிய மாதர்களை யெல்லாம் ஒன்று திரட்டி, திலோத்தமை, ரம்பை முதலியவர்களின் தலைமையில் அனுப்பினான். நல்ல இளவேனிற் காலத்தில் மன்மதன் தென்றலாகிய தேரில் பவனி புறப்படும் சமயத்தில் திலோத்தமை முதலிய வானுலகத்து அழகிகள் இமயமலைச் சாரலுக்கு வந்தார்கள். அர்ச்சுனன் காலத்தையும் பருவத்தையும் உணராத கர்மயோகியாகத் தவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவன் தவத்தைக் குலைக்கும் முயற்சியில் நளினமான உடலும் மோகக் கவர்ச்சியும் நிறைந்த அந்த வானர மகளிர் ஈடுபட்டனர். காமக்கலைக்குக் கடவுளாகிய மன்மதன் கூட அவர்களுடன் சேர்ந்து கொண்டு பூங்கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தான். அவர்கள் ஆடினார்கள். பாடினார்கள், உடலைத் தீண்ட முயன்றார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. தேவ மாதர்களுக்குப் பெருந்தோல்வி. அர்ச்சுனனுடைய தவம் சிறிதளவும் சலனமுறாமல் மேலே நடந்தது. மாதர் இந்திரனிடம் சென்று கூறினர்.

இந்திரனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. அர்ச்சுனனின் தவ வலிமை அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்தது. அந்த ஆச்சரியத்தில் தன் மகன் என்ற பெருமிதமும் கலந்திருந்தது. இறுதிச் சோதனையாகத் தானே நேரில் புறப்பட்டுச் சென்று வரலாம் என்றெண்ணினான். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் போன்ற தோற்றங்கொண்டு புறப்பட்டான் இந்திரன். இமயமலைச் சாரலில் அர்ச்சுனன் தவஞ் செய்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது அவனிருந்த நிலையைக் கண்டு இந்திரனே திகைத்து விட்டான். வைராக்கியத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. இந்திரன் தவத்திலிருந்த அர்ச்சுனனை விழிக்கச் செய்து எழுப்பி, “நீ யார் அப்பா? எதற்காக இப்படிக் கடுந்தவம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமானைப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கடுந்தவம் என்று அர்ச்சுனன் பதில் கூறினான்.

“அது உன்னால் முடியாது இளைஞனே! வீணாக ஏன் பயனற்ற இந்தத் தவமுயற்சியில் நேரத்தைக் கழிக்கிறாய்?”

“எனக்கு முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் முயல்கிறேன். அதைத் தடுக்க நீ யார்?”

“அதற்குச் சொல்லவில்லை அப்பா! சிவபெருமான் தேவர்களுக்கும் வேதங்களுக்குமே தோற்றங் கொடுக்காதவர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர். கேவலம் சாதாரணத் தபஸ்வியாகிய உனக்கு எப்படிக் காட்சி கொடுப்பார்?”

“கொடுப்பார் கொடுக்கத்தான் போகிறார். உம்முடைய உபதேசம் தேவையில்லை. நீர் போகலாம்” இந்திரன் தனக்குள் அர்ச்சுனனுடைய உறுதியை எண்ணிச் சிரித்துக் கொண்டான். அவனுடைய திண்மை அதியற்புதமாகத் தோன்றியது. தனது சொந்த உருவத்தை அர்ச்சுனனுக்குக் காட்டினான் இந்திரன். அர்ச்சுனன் முறை கருதி மரியாதை அளித்து இந்திரனை வணங்கினான். தன்னுடைய தவ உறுதியை மட்டும் கைவிடவேயில்லை.

“அர்ச்சுனா! உன் உறுதி எனக்கு வியப்பைக் கொடுக்கிறது. நான் அதனைப் பாராட்டுகிறேன். உன் தவம் உறுதியாக வெற்றியடைந்தே தீரும். சிவபெருமானை நீ காண்பாய். உனக்குரிய வரத்தையும் நீ பெறுவாய்” என்று கூறி வாழ்த்தி விட்டுச் சென்றான் இந்திரன் அர்ச்சுனன் பழையபடி உறுதியுடனும் ஊக்கத்துடனும் தனது தவத்தை ஆரம்பித்தான்.