உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/3. பகைவர் சோதனை

விக்கிமூலம் இலிருந்து

3. பகைவர் சோதனை

கீசகனும் அவன் தம்பியர்களும் அழிந்ததைப் பற்றி விரதசாரிணியையோ, பலாயனனையோ, யாரும் ஐயுறவில்லை. விரதசாரிணியின் கற்பைக் காவல் புரிந்து வந்த கந்தருவர்களே அவர்களைக் கொன்றிருக்க வேண்டுமென்று பேசாமல் இருந்துவிட்டனர். தன் சுகத்துக்கெல்லாம் காரணமாக இருந்த தம்பி போய்விட்டானே என்று சுதேஷ்ணையின் மனம் மட்டும் சில நாட்களுக்குப் பெருங்கவலையில் ஆழ்ந்திருந்தது. விராட நகரத்து அரண்மனையில் மறைவாக வாழ்ந்து வந்த பாண்டவர்களோ, ‘விரைவில் தங்கள் அஞ்ஞாதவாச காலம் முடிகிறது. பின் நிம்மதியாக நாடாளச் செல்லலாம்’ என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களது பகைவர்களாகிய துரியோதனாதியர்களால் அவர்களுக்கு ஒரு பெருஞ்சோதனை ஏற்பட்டுவிட்டது. அஞ்ஞாதவாச காலத்தில் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் பாண்டவர்கள் வனவாசம் செய்தே ஆக வேண்டும். அதற்காக எங்கிருந்தாலும் அவர்களைக் கண்டுபிடித்து விடுவது என்ற முயற்சியில் இறங்கி நான்கு திசைகளிலும் உளவு அறிவதற்கு ஆட்களை அனுப்பினர் துரியோதனாதியர்கள். உளவு அறிவதற்காகப் புறப்பட்ட ஒற்றர்கள் தம் தொழிலில் வல்லவர்களாயினும் பல காலம் சுற்றியும் கூடப் பாண்டவர்கள் மறைந்து வாழும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றமடைந்த ஒற்றர்கள் ‘ஒன்றும் தெரிய வில்லை’ என்று போய்த் துரியோதனாதியர்களிடம் கூறினர்.

உடனே துரியோதனன் பாண்டவர்கள் எங்கிருக்கக் கூடும் என்பதைத் தன் அவைப் பெரியோர்களுடன் கலந்து ஆலோசித்தான். “இன்னும் ஆயிரமாயிரம் ஒற்றர்களை நீ அனுப்பினாலும் பாண்டவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க உன்னால் முடியாது. அவர்கள் சத்தியவான்கள். அவர்கள் எந்த இடத்தில் மறைந்து வாழ்கின்றார்களோ அந்த இடம் பல வளங்களும் நிறைந்து செழிப்பாக இருக்கும். வேண்டுமானால் அந்தச் செழிப்பைக் காரணமாகக் கொண்டு அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம்” என்றார் முதியவராகிய வீட்டுமர். இந்தச் சமயத்தில் ஒற்றன் தான் கேள்விப்பட்ட வேறோர் செய்தியையும் துரியோதனனிடம் கூறத் தொடங்கினான். அது உண்மையிலேயே இரகசியத்தை வெளிப்படுத்துவது போலிருந்தது.

“அரசே? இப்போதுதான் நாங்கள் கேள்வியுற்ற ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. சென்ற பல ஆண்டுகளை யெல்லாம்விட, விராடநகரம் இந்த ஆண்டு அதிக வளத்தோடு விளங்குகின்றது. தவிரவன்மை வாய்ந்தவர்களான கீசகனையும் அவன் தம்பிமார்களையும் யாரோ ஒரு பலசாலி அந்த நாட்டில் ஒரே சமயத்தில் யமனுலகுக்கு அனுப்பியிருக்கின்றான். அத்தகைய பலசாலிகள் வீமன், அருச்சுனன் ஆகிய இருவருக்குள் ஒருவராகத்தான் இருத்தல் வேண்டும்” என்றான் அந்த ஒற்றன்.

துரியோதனன், கர்ணன், சகுனி முதலியவர்கள் ஒற்றன் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர். “நாம் நம்முடைய வீரர்களை ஏவி, விராடராசனுக்குச் சொந்தமான பசுக்கூட்டங்களைத் திருடி வர ஏற்பாடு செய்வோம். பாண்டவர்கள் அங்கு இருப்பது உண்மையாயின் அப்போது எதிர்த்துப் போர் புரிய வருவார்கள், கண்டுபிடித்து விடலாம்” என்று யோசனை கூறினான் கர்ணன். மற்றவர்களும் இந்த யோசனையை ஒப்புக் கொண்டார்கள். திருட்டுத் தொழிலில் சதுரப்பாடும் சாமர்த்தியமும் மிக்கவனாகிய திரிகர்த்தன் என்பவனுடைய தலைமையில் படைகளை அனுப்பி விராடனின் நாட்டுத் தென் பகுதியிலுள்ள பசுக்களைத் திருடிக் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். திரிகர்த்தனும் படைவீரரும் அவ்வாறே ஓடிச்சென்று விராடராசனின் பசுக்களைத் திருடினர். பசுக்களைப் பறி கொடுத்த கோவலர்களும் பிறரும் ஓடோடிச் சென்று விராடனிடம் முறையிட்டனர். விராடன் திருடர்களை ஒழிப்பதற்காகப் படை திரட்டிக் கொண்டு சென்றான்.

அவனோடு மாறுவேடத்திலிருந்த பாண்டவர்களில் வீமன் முதலிய நால்வரும் கூடப் போருக்குச் சென்றிருந்தனர். அவர்கள், போர்த் திறமையினாலும் விராடராசன் படை வலிமையினாலும் பசுக்களைத் திருட வந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டும் திருடிய பசுக்களை விட்டுவிட்டும் ஓடினர். படையினர் யாவரும் தோற்று ஓடிப்போன பின்பும் கூடத் ‘திரிகர்த்தன்’ என்ற படைத்தலைவன் அனல் கக்கும் விழிகளுடன் விராட்னை அணுகி எதிர்த்து அஞ்சாமல் போர் புரிந்தான். எப்படியோ சாதுரியமாக விராடராசனை வெறுங்கையனாக்கிச் சிறைப்பிடித்துத் தன்னுடைய தேர்க்காலிலும் கட்டிவிட்டான். கங்க முனிவராக இருந்த தருமன் பலாயன்னை (வீமனை) அழைத்துத் திரிகர்த்தனுக்குப் பாடம் கற்பித்து அவனைச் சிறைபிடித்துக் கட்டுமாறு ஏவினார். வீமன் வெகுண்டெழுந்தான். கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு வரும் வீமனைக் கண்டதும் திரிகர்த்தன் நடுநடுங்கிப் போனான். ஆயினும் மன நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு எதிர்த்தான். வீமனுக்கும் திரிகர்த்தனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இறுதியில் வீமன் விராடமன்னனை அவிழ்த்து விட்டு அவனுக்கு முன்னால் திரிகர்த்தனைக் கொண்டுபோய் நிறுத்தினான். விராடனை எந்தக்கைகள் இழுத்துக் கட்டினவோ, அதே கைகளைத்தான் இழுத்துக் கட்டினான் வீமன். தன்னை விடுதலை செய்ததோடன்றித் தன் எதிரியைச் சிறைப்பிடித்ததற்காகவும் வீமனுக்கு நன்றி செலுத்தினான் விராட மன்னன்.

“பிழை புரிந்தோரையும் மன்னிப்பது பெரியோர் இயல்பு. நாம் இந்தத் திரிகர்த்தனை விடுதலை செய்வதே பெருந்தன்மையான செயல்” என்று கூறினார் கங்க முனிவர். விராடனும் அதற்கு இணங்கினான். உடனே வீமன் பசுத்திருடனாகிய திரிகர்த்தனை அவிழ்த்து விட்டான் அவன் குனிந்த தலையோடு சென்றான். தனக்கு ஏற்பட்ட அவமானங்களால் அவன் நெஞ்சம் கொதித்தது. திரும்பி அத்தினாபுரிக்குச் செல்லாமல் ஓரிடத்தில் போய்த் தங்கிக் கொண்டு தன் தோல்வியையும் பிற நிகழ்ச்சிகளையும் துரியோதனனுக்குக் கூறியனுப்பினான்.

“நகரின் தெற்கு எல்லையிலுள்ள பசுக்களைக் கவரப்போன படைக்குத்தான் இந்தக் கதி நேர்ந்து விட்டது. நாம் வடக்கு எல்லையில் போய்ப் பெரும்படையோடு மீண்டும் பசுக்களைக் கவர்ந்து தாக்குவோம்” என்று துரியோதனன் படை திரட்டிக் கொண்டு வடக்கெல்லைக்கு விரைந்தான். வடக்குப் பகுதியில் எதிர்பாராதவிதமாகத் துரியோதனன் படை வந்ததும் அங்கிருந்தவர்கள் பதறிப் போய் அரண்மனைக்கு ஓடினர். தெற்கு எல்லையில் திரிகர்த்தனையும் படைகளையும் அடக்கிப் பசுக்களை மீட்கப் போயிருந்த விராடன் முதலியவர்கள் அதுவரை அரண்மனைக்குத் திரும்பவில்லை. அரண்மனையில் சுதேஷ்ணை, இளவரன் உத்தரன், பேடியாக இருக்கும் அருச்சுனன் ஆகிய மூவரே இருந்தனர். ஓடி வந்த மக்கள் சுதேஷ்ணையிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறினர். வீரப்பண்பு மிக்க சுதேஷ்ணை, ‘நாட்டுக்குத் துன்பம் ஏற்பட்டால் அரசனைப் போலவே அரசிக்கும் அதைக் காப்பது கடன்’ என்று எண்ணினாள். ஆனால் அதற்குள் இளவரசன் உத்தரன் தானாகவே போர்க்கோலம் பூண்டு, “தாயோ போர்க்களத்திற்கு நான் செல்லுகிறேன். எனக்குத் தேர் ஓட்டுவதற்கு மட்டும் ஓரு ஆளைக் கொடுங்கள்” என்றான்.

அப்போது பேடியாக இருந்த அருச்சுனன், விரதசாரிணி முதலியவர்கள் அங்கிருந்தனர். விரதசாரிணி பேடியைச் சுட்டிக் காட்டி, “தேவீ! இவளுக்கு நன்றாக ஓட்டத் தெரியும்; இவள் ஏற்கனவே அருச்சுனன் முதலியோருக்குப் பலமுறை தேரோட்டிப் பழகியவள்“ என்றாள். பிருகந்தளை என்ற பெயரோடு பேடியாக இருந்த அருச்சுன்னும் தேரோட்டிச் செல்வதற்கு இணங்கினான். பலவகை ஆயுதங்கள் நிறைந்த தேரில் நல்ல குதிரைகளைத் தேர்ந்தெடுத்துப் பூட்டி உத்தரகுமாரனை அமரச் செய்து தேரைச் செலுத்திக் கொண்டு வடதிசைப் போர்க்களம் நோக்கிச் சென்றான் அர்ச்சுனன். அங்கே போர்க்களத்தில் கௌரவர்களின் படை கடல் போலப் பரந்திருந்தது. உத்தரகுமாரன் அரண்மனையில் வீரம் பேசினானே ஒழியப் போர்க்களத்தைக் காண்பது இதுவே அவனுக்கு முதல் முறை. படைகளைக் கண்டதும் நடுக்கம் உண்டாகிவிட்டது அவனுக்கு. பெண்ணுருவத்தில் பேடியாக அமர்ந்து களத்தினிடையே துணிவாகத் தேரை ஓட்டுகிறவளுக்கு இருந்த துணிச்சல் கூட அவனுக்கு இல்லை.

“பிருகந்நாளை! ஐயையோ! எனக்கு பயமாக இருக்கிறது. தேரைப் பேசாமல் அரண்மனைக்குத் திருப்பி ஓட்டு. பசுக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன? இந்தப் படைக்கடலுக்கு முன்னால் நிற்கவே என் நெஞ்சில் துணிவில்லை“ -உத்தரகுமாரன் பீதி நிறைந்த குரலில் அலறினான். அவன் பயத்தைப் போக்குவதற்கு எத்தனையோ விதமாக வீர மொழிகளையும், உறுதிமொழிகளையும் கூறிப் பார்த்தான் அர்ச்சுனன். அவன் கேட்கவில்லை. அர்ச்சுனன் தேரை நிறுத்தாவிட்டால் தேரிலிருந்து குதித்து ஓடிவிடுவான் போலிருந்தது.

“நீ துணிவோடு இரு! பசுக்களை மீட்டுக் கொடுப்பது என் கடமை” என்றான் அர்ச்சுனன். அதே சமயம் ஓடிக் கொண்டிருந்த தேரிலிருந்து பின்புறமாகக் குதித்துத் தாவிப் பாய்ந்து ஓடலானான் உத்தரன். அர்ச்சுனனும் உடனே தேரை நிறுத்தி விட்டு இறங்கி அவனைப் பிடிப்பதற்காகப் பின் பற்றி ஓடலானான். விரைவிலேயே பயந்து ஓடும் உத்தரனை எட்டிப் பிடித்துத் தேருக்கு இழுத்துக் கொண்டு வந்தான். உத்தரன் அலறியும் கத்தியும் கூக்குரலிட்டும் திமிறி ஓட முயன்றான். அர்ச்சுனன் அவன் ஓடாமல் இருப்பதற்காக அவனைத் தேரில் கட்டிப் போட்டான். உத்தரன் ஓட முடியாமல் தேருக்குள் கட்டுண்டான். போரை உத்தரனுக்குப் பதில் தானே செய்து விடலாம் என்றெண்ணிக் காளி கோவில் வன்னிமரப் பொந்திலிருக்கும் தன் ஆயுதங்களை எடுப்பதற்குப் புறப்பட்டான். தேரை விட்டு விட்டு நடந்து போனால் உத்தரன் எங்காவது ஓடிவிடுவானோ என்று சந்தேகங்கொண்டு தேரையும் செலுத்திக் கொண்டே காளி கோவிலுக்குச் சென்றான்.

மரப்பொந்திலிருக்கும் ஆயுதங்களை அர்ச்சுனன் எடுத்தபோது தேரில் கட்டப்பட்டிருந்த உத்தரன், “இது ஏது பொந்தில் ஆயுதங்கள்?” என்று கேட்டான்.

“உத்தரா! இவை அர்ச்சுனனுடைய ஆயுதங்கள். இவற்றால் போர் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்” -என்று மறுமொழி கூறினாள் பேடி.

“ஆமாம்! அது சரி. அந்த அர்ச்சுனன் இப்போது எங்கிருக்கிறான்?”

“அவனா? வேறெங்கும் இல்லை. இங்கே தான் மிகச் சமீபத்திலேயே இருக்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் களத்தில் நீயே அவனைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம்” -என்றாள் பேடி உத்தரன் அவள் கூறியதை வியப்புடனே கேட்டான். “உத்தரா! இனிமேலும் நீ பயப்படக்கூடாது. போரையெல்லாம் நான் செய்து கொள்கிறேன். நீ தேரை மட்டும் செலுத்தினால் போதும்.”

“ஆகட்டும்! என்னை அவிழ்த்து விடு” -என்று தலையை ஆட்டினான் உத்தரன். தன் முன் பேடியைப் போலக் கோலங்கொண்டு நிற்பது அர்ச்சுனனாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அவன் மனத்தில் தவிர்க்க முடியாத நம்பிக்கை ஒன்று எழுந்துவிட்டது. இந்தப் புதிய நம்பிக்கையின் காரணமாக அவனிடமிருந்து பழைய பயம் நீங்கியது. அர்ச்சுனன் உத்தரனை அவிழ்த்துவிட்டான். உத்தரன் தேரைச் செலுத்தினான். பேடியும் அரசுகுமாரனும் தேரை நிறுத்திவிட்டு ஓடி விளையாடுவது கண்டு எள்ளி நகையாடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கெளரவர் படை இப்போது திடுக்கிட்டு நின்றது. “காரணம் என்ன? ஓடிய அரசகுமாரன் தேரைச் செலுத்திக் கொண்டுவருகிறான். பேடி வில்லேந்தி அம்பு சுமந்து ஆண்மையுள்ளவள் போலப் போருக்கு வருகிறாள்“ -ஆத்திரமும் ஆச்சரியமும் ஒருங்கே அடைந்த துரியோதனாதியர் தம் படைகளை அவசரமாக வியூகம் வகுத்துப் போருக்குத் தயாராக்கினர். உத்தரன், தேர் செலுத்தப் பெண்ணுருவில் பேடியாக இருந்த அர்ச்சுனன் பகைவர்களை நோக்கி சரமாரியாக அம்பு தொடுத்தான்.

பகைப் படையினரும் அவனை எதிர்த்து வளைத்துக் கொண்டு பலர் கூடி ஒரே சமயத்தில் தாக்கினர். அர்ச்சுனன் சிறிதும் சளைக்கவில்லை. நீண்ட நேரத்துப் போருக்குப் பின் பகைவர்களை ஓட ஓட விரட்டிப் பசுக்களை எல்லாம் மீட்டு உரியவர்களிடம் அளித்த பிறகே வில்லையும் அம்பையும் இயக்குவதை நிறுத்தினான். இதற்குள் அவன் உத்தரனிடம் கூறியிருந்த நான்கு நாழிகைகள் கழிந்து விட்டன. ஓடிப்போன பகைவர்கள் திரும்ப ஒன்று கூடி வரமுயன்று கொண்டிருந்தனர். அர்ச்சுனன் பேடியுருவம் நீங்கித் தன் சுய உருவுடன் நின்றான். உத்தரன் தன் நம்பிக்கை வீண் போகாமல் உண்மையாகியது கண்டு மகிழ்ந்து அர்ச்சுனனை வணங்கி நன்றி செலுத்தினான். முன்பு அக்னி தேவனால் அன்பளிப்பாக நல்கப்பட்ட அனுமக்கொடி பொருந்திய தேர் அர்ச்சுனனுக்கு முன் தோன்றியது. அர்ச்சுனன் வில்லும் கையுமாக அத்தேரில் ஏறிக் கொண்டான். பகைவர்கள் மீண்டும் திரும்பி வர முயன்று கொண்டிருந்த நிலையில் அர்ச்சுனனுடைய தேர் அவர்களை நோக்கிச் சென்றது. தேரில் பேடியின் ஸ்தானத்தில் அர்ச்சுனன் இருப்பதைக் கண்ட துரியோதனாதியர்கள் திடுக்கிட்டனர்.

அவன் அர்ச்சுனனாயின் அவனை அழித்து ஒழிக்காமல் விடுதல் கூடாதென்று கருதி மீண்டும் ஆவேசத்தோடு போருக்குப் புறப்பட்டார்கள். படையிழந்து வாகனமிழந்து வெறுங்கையனாய் நின்ற துரியோதனன் தன் படைகளை ஏவிவிட்டுத் தான் ஒரு தேரில் ஏறிப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு முன்பிருந்து நழுவி ஓடப் பார்த்தான். ஆனால் அர்ச்சுன்னா விடுகிறவன்? தன் தேரை ஓட்டித் துரியோதனன் தேர் ஓட முடியாதபடி தடுத்து நிறுத்தி விட்டுப் போருக்குத் தயாராக வில்லைக் கையில் எடுத்தான். துரியோதனனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. மிரள மிரள விழித்துக் கொண்டே ஒன்றும் தோன்றாமல் தேரின் மேல் நின்றான் அவன். அவனைக் காப்பாற்றுவதற்காகக் கர்ணன், சகுனி முதலியவர்கள் அந்தத் தேரின் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அர்ச்சுனனை எதிர்த்துப் போர் புரியலானார்கள். “அர்ச்சுனா! உன்னுடைய வீரத்திற்குச் சரியான மாற்றானாக இதோ நான் இருக்கிறேன், என்னோடு போர் செய் துரியோதனனை விட்டு விடு” -என்று கூறிக் கொண்டே முன் வந்து நின்றான் கர்ணன். அர்ச்சுனனுக்கு எதிராகக் கர்ணன் நின்று போரிட அவனுக்கு ஒரு தேர் கொண்டு வந்து கொடுத்தார்கள் குருகுலப் படையினர். எடுத்த எடுப்பிலேயே தான் செலுத்திய விரைவான அம்புகளால் அந்தத் தேரை அடித்து முறித்து வீழ்த்தினான் அர்ச்சுனன். மற்றும் இரண்டு தேர்கள் கர்ணனுக்காகக் கொண்டு வரப்பட்டன. அவற்றையும் அர்ச்சுனன் அழித்து விட்டான். மூன்று தேர்கள் பறிபோன அதிர்ச்சி கர்ணன் மனத்தில் உறைத்தது. அவன் தேரில்லாமலேயே போர் செய்தான். தேர் மேல் நின்று அர்ச்சுனன் செலுத்திய அம்புகள் கர்ணனுடைய வில்லையும் அம்பறாத் துணியையும் முலைக்கு ஒன்றாகச் சிதறி ஓடச் செய்தன. ஆடை அணிகலன்களெல்லாம் அம்புகளால் சிதைந்து கிழிந்து போன நிலையில் அங்கு நிற்பதற்கு வெட்கமுற்று ஓடலானான் கர்ணன். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் கர்ணனை அந்த அலங்கோல நிலையிலே கண்டு கை கொட்டிச் சிரிக்கலானான். கர்ணனைத் தோற்று ஓடச் செய்த பின்பு மூதறிஞரும் தன் ஆசிரியருமாகிய துரோணரோடு போர் புரிய வேண்டிய நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது.

அவன் தயக்கமடைந்தான். அவன் உள்ளம் ஆசிரியரோடு போர் புரிய மறுத்தது. நியாயந்தானே! மனம் துணியுமா? ‘அவரோடு தான் போர் புரிய விரும்பவில்லை’ -என்பதை அவருக்குத் தெரிவிப்பான் போலச் சில அம்புகளைச் செலுத்தி அவர் திருவடிகளை அந்த அம்புகள் வணங்கிச் சரணாகதி அடைவதைப் போலக் குறிப்புக் காட்டினான். “யான் எப்போதும் உங்களை என் கைகளைக் கூப்பி வணங்குவதற்கு உரியவனே அல்லாமல் வில்லை வளைத்து வணங்குவதற்கு முயலமாட்டேன். அது அபசாரம்” -என்பது அவன் செய்த குறிப்பின் பெயர். அதை விளங்கிக் கொண்டு உள்ளூர் மகிழ்ச்சி அடைந்த துரோணர்,

“அர்ச்சுனா! இது போர்க்களம். நான் யாருடைய அரசின் கீழ் உண்டு உடுத்து வசதியாக வாழ்ந்தேனோ, அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக என் மாணவனாகிய உன் முன் வில்லேந்தி நிற்கிறேன் பார். உறவும் முறையும் பாராமல் கடமையை எண்ணி நீ போர் புரியத்தான் வேண்டும். நீ போர் புரிய மறுத்தாலும் நான் உன்னோடு போர் புரிந்தே தீரவேண்டிய நிலையில் இருக்கிறேன்.”

வேறு வழியில்லாமல் போகவே அர்ச்சுனன் துரோணரின் விருப்பத்திற்கிணங்க அவரோடு போர் செய்யத் தொடங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்காமல் அமைதியாகவே போர் செய்தனர். நேரம் ஆக ஆக அர்ச்சுனன் செலுத்திய அம்புகளுக்கு மாற்றின்றித் துரோணர் திணறினார். முடிவில் தன் மாணவனாகிய அர்ச்சுனனுக்கு முன்னால் வில்லையும் அம்பறாத் துணியையும் கீழே போட்டு விட்டுத் தோல்வியை ஒப்புக் கொண்டு செல்ல வேண்டிய நிலை அவருக்கும் ஏற்பட்டது. தோல்வியடைந்து செல்கின்ற நிலைமையில் கூடத் தன்னுடைய மாணவனின் திறமை அவருக்கும் ஒருவகைப் பெருமிதத்தையே உண்டாக்கியது. ஆனால் அசுவத்தாமனின் மனத்தில் இந்தத் தோல்வி இதற்கு நேர்மாறான எண்ணத்தையே உண்டாக்கியது.

நம்முடைய தந்தையையே இந்தச் சாதாரண வாலிபன் தோற்று ஓடச் செய்துவிட்டானே என்று மனங்கொதித்த அவன் ஓர் அம்பு எய்து அர்ச்சுனனுடைய வில்லை ஒடித்துக் கீழே தள்ளினான். சினங்கொண்ட அர்ச்சுனன் வேறோர் வில்லை எடுத்துத் தான் அரிய முயற்சியால் பெற்றிருந்த பாசுபதாஸ்திரத்தை அசுவத்தாமன் மேல் எய்தான். அந்த அஸ்திரத்தின் வேகத்தைத் தாங்க முடியாமல் அசுவத்தாமன் தன்னிடமிருந்த சகலத்தையும் இழந்து பதறி அலறி அங்கிருந்து புறம் காட்டி ஓடிவிட்டான். முழு வெற்றி அர்ச்சுனன் பக்கம் வந்து சேர்ந்தது.