மகாபாரதம்-அறத்தின் குரல்/2. கீசகன் தொல்லைகள்
விராட நகரத்தில் பாண்டவர்களும் திரெளபதியும் மாறுவேடமும் மாற்றுப் பெயரும் கொண்டு அமைதியான முறையில் மறைந்து வாழ்ந்து வரும் பொழுது அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே கிளம்பியவன் போல் இன்னொரு மனிதன் கிளம்பினான். அவன்தான் கீசகன். கீசகன் விராடனின் படைத் தளபதி. பார்ப்பதற்குக் கவர்ச்சி நிறைந்த தோற்றத்தை உடையவன். விராட மன்னனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை என்பவளுக்குச் சகோதரன். இந்த உறவால் விராடனுக்கு மைத்துனன் முறை உடையவன். இந்த உறவு முறை அல்லாமலும் விராட மன்னனின் முழு அன்புக்குப் பாத்திரமானவன். இவன் அடிக்கடி தன் சகோதரியாகிய சுதேஷ்ணையின் அந்தப்புரத்திற்கு வந்து அவளோடு உரையாடிச் செல்வது வழக்கம். விரதசாரிணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி தன்னால் இயன்றவரை எந்த ஆடவர் கண்களிலும் தென்படாமல் மறைவாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால் ஒரு நாள் அவளை அறியாமலே அவளுடைய விரதத்திற்குப் பங்கம் நேர்ந்து விட்டது.
சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் பலவகை மலர்கள் பூத்துச் செழிப்புடன் விளங்கும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. அந்தப்புரத்திற்குள் வந்து போகின்றவர்கள் இந்தப் பூஞ்சோலைக்குள் நுழையாமல் வந்து போவதற்கில்லை. ஒரு நாள் காலை, மாலை தொடுப்பதற்காகப் பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள் திரெளபதி. அப்போது கீசகன் அந்த வழியாக வந்தான். அவள் மலர் கொய்து கொண்டிருப்பதை அவன் பார்த்து விட்டான். இயற்கையிலேயே சஞ்சல சுபாவம் நிறைந்த மனம் அவனுக்கு. கண்டவர்களை மயங்க செய்கின்ற அந்த அழகு, சபலம் நிறைந்த அவன் மனத்தைத் தடுமாறச் செய்துவிட்டது. அப்படியே சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை நோக்கினான். பூஞ்சோலையில் மற்றும் சில தோழிப் பெண்கள் வேறு ஓர் இடத்தில் மலர் கொய்து கொண்டிருந்தார்கள். கீசகன் அவர்களை அணுகி “இவள் யார்? இந்தப் புதுப்பெண் எவ்வளவு நாளாக இங்கே ஊழியம் செய்கிறாள்” என்று கேட்டான்.
அவர்கள், “அவள் வண்ணமகள், பெயர் விரதசாரிணி, புதிதாகச் சேர்ந்திருக்கிறாள்” -என்று மறுமொழி கூறினர். கீசகனுடைய உள்ளத்தில் ஆசைத் தென்றல் மெல்ல வீசியது. அனுராகத்தின் மெல்லிய குளிர்ச்சி நிறைந்த உணர்வுகள் தலையெடுத்து நின்றன. அவன் அங்கிருந்த மற்றத் தோழிப் பெண்களுக்கு சாடை காட்டினான். அவர்கள் அங்கிருந்து மெல்ல ஒதுங்கிச் சென்றனர். ‘விரதசாரிணி’ அந்தப் பூஞ்சோலையில் தனியாக விடப்பட்டாள், கீசகன் ஆசை துடிக்கும் மனத்தோடு அவளை நெருங்கினான்.
“பெண்ணழகி! உன் எழிலுக்குத்தான் எவ்வளவு ஆற்றல்? விராடராசனின் சேனாதிபதியையே பித்தனாக்கி மயங்கச் செய்து விட்டது இந்த அழகு. என்னை உன் காலில் விழுந்து வணங்கும் படி செய்துவிடும் போலிருக்கிறது இந்தப் பேரழகு. என் நிலைக்கு இரங்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.” உள்ளத்தின் வெறியால் வாயில் வந்த சொற்களைப் பிதற்றிக் கொண்டிருந்த கீசகனை எரித்து நீறாக்கி விடுபவளைப் போலப் பார்த்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய வெறுப்பு நிறைந்த அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமலே மேலும் தலை தாழ்த்திக் காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்சினான்.
“தாங்கள் யாராயிருப்பினும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை. இம்முறையற்ற செயலை உடனே விட்டு விட்டுச் செல்லுக, என்னையும் என் கற்பையும் தெய்வீக சக்தி வாய்ந்த ஐந்து தேவர்கள் காவல் புரிந்து வருகின்றனர். என்னை நெருங்காதே. உன் உயிரின் மேல் உனக்கு ஆசை இருக்குமானால் இப்படியே போய்விடு” -கோப மிகுதியால் பன்மையில் தொடங்கி ஒருமையில் ஏசி முடித்தாள் விரதசாரிணி. கீசகன் அவளுடைய சினமொழிகளைக் கேட்டும் காமவெறி நீங்காதவனாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான்.
“என் ஆசையை நீ தணிக்காவிட்டால் எப்படியும் என் உயிர் உடலில் தங்காது. போகிற உயிர் எப்படிப் போனால் என்ன?” -என்று கீசகன் கைகளை நீட்டி நெருங்கி அவளை அணைப்பதற்குப் பாய்ந்தான். கையிலிருந்த பூக்குடலையைக் கீழே போட்டுவிட்டுச் சுதேஷ்ணையின் இருப்பிடத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினாள் விரதசாரிணி. அணைப்பதற்கு நீட்டிய அவனது வலிய கரங்களில் ஒரு பூஞ்செடி சிக்கிக் கசங்கியது. கீசகன் நன்றாக ஏமாந்தான். ஓடிப்போன விரதசாரிணி சுதேஷ்ணையை அடைந்து கீசகனின் கொடுமையைக் கூறி அலறியழுதாள்.
“என்னை நெருங்கினால் உங்கள் தம்பியின் உயிர்தான் அழியும். தேவீ! என்னைக் காப்பாற்றுங்கள். அவருக்கு ஏற்பட்டிருக்கின்ற வெறியை வேறு யாராவது கணிகையர்களைக் கொண்டு தீருங்கள்” என்று விரதசாரிணி முறையிட்டபோது சுதேஷ்ணை அவளுக்காக இரங்கி வருத்தப்பட்டாள். தன் தம்பி கீசகன் மேல் அவளுக்கு மிகுந்த சினம் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் கீசகன் விரதசாரிணியைத் தேடிக் கொண்டு அங்கே ஓடி வந்தான்.
சுதேஷ்ணை அவனைத் தடுத்து நிறுத்தி “கீசகா! உன்னால் எனக்குக் கெட்ட பெயர்தான் உண்டாகிறது. இங்கிருக்கும் பெண்களிடம் நீ நடந்து கொள்ளும் விதம் சிறிதும் நன்றாக இல்லை. எனக்கு நல்லது செய்ய வேண்டுமானால் நீ இங்கே வரக்கூடாது” -என்று ஆத்திரத்தோடு கூறினாள். கீசகன் தமக்கைக்கு மறுமொழி கூற வாயின்றிப் பேசாமல் குனிந்த தலை நிமிரத் துணிவின்றித் திரும்பிச் சென்றான். கீசகன் தான் அந்தப்புரத்திலிருந்து திரும்பியிருந்தான். அவன் மனம் என்னவோ அந்தப்புரத்தில் விரத சாரியிணியிடத்திலிருந்து திரும்பவே இல்லை. வெறி நிறைந்த எண்ணங்களின் பயனாகத் தான் கண்ட அழகியைத் தன்னிடம் வரவழைப்பதற்கு ஒரு தந்திரமான திட்டம் தயார் செய்தான். காம மிகுதியினால் காய்ச்சல் கண்டு மயங்கி மூர்ச்சையுற்று விழுந்தவனைப் போல நடித்து, “விரதசாரிணியின் அழகு காரணமாக நான் சாகக் கிடக்கிறேன். என் உயிர் இனிமேல் பிழைப்பது அருமை. ஒருவேளை அந்த ‘விரதசாரிணி'யை மனமகிழக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் நான் மீண்டும் பிழைத்தாலும் பிழைக்கலாம்” என்று சுதேஷ்ணைக்குச் சொல்லியனுப்பினான்.
கீசகன் அனுப்பிய ஆட்கள் ஓடோடிச் சென்று அவன் சாகக் கிடக்கிறான் என்றும் விரதசாரிணியை ஒரு முறை காணாவிட்டால் செத்தே போவான் என்றும் சுதேஷ்ணையிடம் கூறினர். ஆயிரம் தான் தவறாக நடந்து கொண்டாலும் உடன் பிறந்த பிறப்பல்லவா? இரத்தபாசம் ஒன்று இருக்கிறதே! கீசகன் இறந்துவிட்டால் சுதேஷ்ணைக்குப் பலவிதத்தில் நஷ்டம். விரதசாரிணியைக் காணாமல் போகின்ற அவன் உயிர் அவளைக் கண்டு அவளோடு பழக முயன்றாலும் போய்விடுமே! தேவர்களால் காவல் செய்யப்படும் அவள் கற்பு அவனைக் கொன்று விடுமே’ என்று கலங்கினாள் அவள். இறுதியில் எப்படியும் தன் சகோதரனாகிய கீசகனின் உயிரைக் காப்பாற்றியே தீருவதென்று விரதசாரிணியிடம் சென்றாள் சுதேஷ்ணை கீசகனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் அவனுக்கு விரதசாரிணி வெறும் காட்சி மட்டும் அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்பது அவளுடைய கருத்து.
விரதசாரிணி மறுக்காத முறையில் அவளை அனுப்புவதற்காக ஒரு நல்ல பூமாலையை அவளிடம் கொண்டு போய்க் கொடுத்து, “விரதசாரிணி! நீ மிகவும் நல்ல பண்புடைய பெண் அல்லவா? இந்த ஒரே ஒரு முறை மட்டும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டு அதன்படி செய்து விடு. இந்தப் பூமாலையைக் கொண்டு போய் நான் கொடுக்கச் சொன்னதாகக் கீசகனைச் சந்தித்துக் கொடுத்து விட்டு வந்து விடு. கீசகன் என் உயிருக்கு உயிரான சகோதரன். அவனுக்குச்சாவு நேரிட்டு விட்டால் என்னால் பொறுக்கவே முடியாது. தயவு செய்து எனக்காக இதைச் செய்” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.
“தேவீ! தாங்கள் மீண்டும் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். என் கற்பிற்கு உரிய மரியாதையை நீங்களோ உங்கள் சகோதரனோ அளிக்கத் தவறினால் அதனால் உங்களுக்குத்தான் கெடுதல். தகாத காரியங்களைச் செய்யுமாறு என்னைத் தூண்டாதீர்கள்” என்று ஆத்திரத்தோடு கூறினாள் விரதசாரிணி.
“விரதசாரிணி! நீ என்னை நம்பு! உன் கற்பிற்கு இழிவு உண்டாகும்படியான எந்த ஒரு செயலுக்காகவும் உன்னை நான் தூண்டமாட்டேன். என் சகோதரன் உயிருக்காக இந்த ஓரே தடவை மட்டும் இதைச் செய். இந்த மாலையைக் கொடுத்து விட்டு வந்து விடு! போதும்.” சுதேஷ்ணையின் மறுக்க முடியாத தொல்லையினால் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டு கீசகனைக் காணப் புறப்பட்டாள் விரதசாரிணி. ‘என் கற்புக்கு உலகை ஒளி செய்யும் கதிரவனே காவலாக அமையட்டும்’ என்றெண்ணிக் கொண்டு சென்ற அவள் கீசகனைக் கண்டு மாலையைக் கொடுத்து விட்டுத் திரும்பினாள். அவள் தோற்றத்தைக் கண்டு உள்ளத்திலும் உடலிலும் வெறி மிகப் பெற்ற கீசகன், அவளைக் கட்டித் தழுவுவதற்காகத் துரத்தினான். திரெளபதி பாய்கிற புலியைக் கண்டு பதறியோடும் மானைப் போல் ஓடத் தொடங்கினாள். கீசகன் விடவில்லை. உள்ளக் கிளர்ச்சியைத் தணிக்க முடியாமல் அவளைப் பின் பற்றி ஓடினான்.
கால்கடுக்க ஓடிய திரெளபதி அரசர்களும் அமைச்சர்களும் கூடியிருந்த அவைக்களத்தில் போய் உடல் பதறிக்கூந்தல் கலைந்து கூனிக்குறுகி நின்றாள். கீசகன் அங்கும் அவளைத் துரத்தாமல் விடவில்லை. எட்டிப் பிடித்து அணைக்கும் ஆசையோடு பாய்ந்தான். திரெளபதியின் கற்பிற்குக் காவலனாகிய கதிரவன் கீசகனைக் கட்டுப்படுத்தி நிறுத்துமாறு ஒரு கிங்கரனைக் காற்று வடிவமாக ஏவினான். விராடராசனின் அவையில் அரூபமாக நுழைந்த அக்கிங்கரன் திரெளபதியாகிய விரதசாரிணியைத் தழுவமுயன்று கொண்டிருந்த கீசகனைத் தொலைவில் தூக்கி எறிந்தான். கீசகன் தான் யாரால் தூக்கி எறியப் பட்டோம் என்பதே தெரியாமல் கீழே விழுந்தான். பலர் கூடிய அவை நடுவில் இந்த அநீதியைச் செய்ய முயன்றதற்காகக் கீசகனை விராடனே தண்டித்திருக்கலாம், ஆனால் விராடனுக்கே கீசகனிடம் கொஞ்சம் பயமுண்டு. கீசகன் படைகளுக்குத் தலைவர்னாகையால் அவனை எதிர்த்துக் கொள்வது தனக்கே துன்பமாக முடிந்தாலும் முடியலாம் என்று அஞ்சினான்.
இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்தபோது விராடனுடைய அவைக் களத்தில் மாறுவேடத்தில் கங்கராகவும், பலாயனனாகவும், தருமன், வீமன், ஆகியவர்களும் இருந்தனர். தருமன் இயற்கையிலேயே அளவற்ற பொறுமையியல்பு கொண்டவனாகையால், “தருமத்தை எவரும் அழிக்க முடியாது” என்று அமைந்த மனத்தோடு பேசாமல் இருந்து விட்டான். பலாயனனாக இருந்த வீமனுக்குத்தான் படபடப்பையும் ஆத்திரத்தையும் அடக்க முடியவில்லை. தான் எந்த வேடத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து கீசகனை அப்படியே மார்பைக் கிழித்துக் கொன்று விடலாம் போலிருந்தது அவனுக்கு. சபாமண்டபத்துக்கு வெளியே படர்ந்து வளர்ந்த பெரிய மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வீமன் தன் ஆத்திரத்தைக் காட்ட விரும்பினான்.
நல்லவேளையாக அருகே கங்க முனிவர் உருவில் இருந்த தருமன், “பொறுத்திரு. ஆத்திரமடையாதே!” என்று குறிப்பாக அவனுக்குப் புலப்படுத்தினான். பலாயனன் மரத்தையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்ட அவையினருக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.
உடனே தருமன், “பலாயனா! சமையல் செய்வதற்கு விறகாகும் என்பதற்காகத்தானே இந்த மரத்தை இப்படி உற்று உற்றுப் பார்க்கிறாய்? இது ஈரமரம். இதில் நெருப்புப் பிடிக்காது. வேறு ஓர் காய்ந்த மரத்தை விறகுக்காகத் தயார் செய்து கொள்ளலாம். இது வேண்டாம். இதை விட்டுவிடு" என்று போலிச் சமாதானத்தைக் குறிப்பு மொழிகளால் கூறிவைத்தான். பலாயனன் இதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டு தன் சினத்தை அடக்கிப் பேசாமல் இருந்தான். வெட்கத்தால் உடல்கூசி நின்ற விரதசாரிணி துணிந்து விராட மன்னனை நோக்கித் தன் குறையை ஆத்திரத்தோடு கூறினாள். விராடன் திகைத்துப் போய் அவற்றைச் செவிமடுத்தான்.
“நியாயத்தையும், நேர்மையையும் காப்பாற்றக்கூடிய விராட மன்னனே! உன்னுடைய மைத்துனன் என்னை மிக இழிந்த முறையில் துன்புறுத்தும் இந்த நிலையைக் கண்டும் நீ மெளனமாக வீற்றிருக்கின்றாயே! உன் மனத்தில் இரக்கம் என்பது சிறிதேனும் இல்லையோ? உன் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாகப் பணி புரிகின்றவள் யான். என் பெயர் விரதசாரிணி. என் ஒழுக்கத்திற்கு இழுக்கு நேரப் பார்த்திருத்தல் உனக்குத் தகுமா? அரசின் நேரிய ஆணையையும் பாதுகாவலையும் அரசன் யாவர்க்கும் அளிக்கவில்லையானால் அவன் அரசு எங்ஙனம் நீண்டகாலம் வாழ முடியும்? இதை உணர வேண்டும் நீ.” விரதசாரிணி கூறிய இந்த ஆத்திரமொழிகள் கூட விராட மன்னனின் மெளனத்தைக் கலைக்கவில்லை.
இனியும் அவனது செவியில் வீண் வார்த்தைகளை வாரி இறைப்பதில் பயனில்லை என்றுணர்ந்த விரதசாரிணி துயரம் நிறைந்த மனத்துடன் அந்தப்புரத்திற்குச் சென்றாள். சுதேஷ்ணை கீசகனுக்கு உடன் பிறந்தவளானாலும் பெண் அல்லவா? ஒரு பெண்ணின் உள்ளத்தை உணரும் சக்தி இன்னொரு பெண்ணுக்கு இல்லாமலா போய்விடும்? சுதேஷ்ணையிடம் போய்த் தன் மனத்துன்பத்தை எல்லாம் அள்ளிக் கொட்டினாள் விரதசாரிணி.
வீமனையும் அடக்கித் தன் மனத்தையும் அடக்கி விட்ட தருமன் இறுதியில் பொதுவாக விருப்பு வெறுப்பின்றிக் கூறுகிறவனைப் போல விராட மன்னனை நோக்கி, “அரசே! கொடியவர்கள் எங்கிருந்தாலும் எவராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனுடைய கடமை. பெண்கள் பத்திரமாக இருப்பதைக் காட்டிலும் அவர்கள் கற்பு பத்திரமாக இருப்பதற்கு உழைப்பதே ஒரு அரசனுடைய சிறந்த கடமையாகும். அதுவும் உன் அந்தப்புரத்தில் உன்னுடைய கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக இருக்கும் ஒரு ஆதரவில்லாத பெண்ணை உன்னுடைய மைத்துனன் தீமைக்குள்ளாக்கும் போது நீ கண்டிக்காமல் இருப்பது சிறிதும் நல்லதன்று” என்று அறிவுரை கூறினான். ஒரு பெண்ணின் கதறலும் ஒரு முனிவரின் அறிவுரையும் அரியணையில் வீற்றிருந்த அந்த மன்னனின் மனத்தை இளகச் செய்தன. என்றாலும் கீசகனைப் பற்றிய பயம் ‘அவனைத் தண்டிக்கலாம்’ என்ற எண்ணத்தை எழவொட்டாமல் தடுத்தது.
எனவே ஒன்றும் மறுமொழி கூறத் தோன்றாமல் அவையிலிருந்து எழுந்து சென்றான் அவன். தருமனும் விவாதத்தை மேலே தொடர விடாமற் சென்றான். ஆனால் அங்கே சமையலறையில் ‘குபுகுபு’ வென்று பற்றி எரியும் அடுப்பைப் போலவே வீமனுடைய மனமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ‘கீசகன்’ என்னும் பெயருக்குட்பட்ட மனிதனை அழித்து உருக்குலைத்து விட வேண்டும் என்று அவனுடைய இரத்த நாளங்கள் துறுதுறுப்பை அடைந்து கொண்டிருந்தன. எல்லோரும் தாம் வருந்தினார்கள். ஆனால் அது வெறும் வருத்தம் என்ற அளவில் நின்று விட்டது. வீமனுடைய வருத்தமோ, எல்லையைக் கடந்து செயலாற்றத் துணிந்த வருத்தம். சுதேஷ்ணை கூட உள்ளுர வருந்தினாள். “கீசகன் செய்வது தீமை, அதை எதிர்க்க அரண்மனையைச் சேர்ந்த யாவருமே பயப்படுகிறார்கள்” என்று விராடநகர் முழுவதும் இந்தச் செய்தி பரவியிருந்தது. கீசகன் செய்யும் தொல்லைகளிலிருந்து தப்பிக்க விரதசாரிணியாகிய திரெளபதிக்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. ‘வீமன்’ உதவியை நாடுவது தான் அந்த வழி.
கீசகன் தன்னைத் துன்புறுத்திய சம்பவம் நடந்த அன்று இரவு எல்லோரும் உறங்கிய பின் திரெளபதி வீமனைச் சந்திப்பதற்காகச் சமையலறைப் பக்கம் சென்றாள். பகலில் நேர்ந்த நிகழ்ச்சிகளை எண்ணி வீமனும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். இரவில் திரெளபதி தன்னருகே வந்து நிற்பதைக் கண்டதும் அவன் எழுந்திருந்தான்.
“திரெளபதி! அவையிலேயே அந்தப் பயல் கீசகனைக் காலைக் கையை முறித்துப் போட்டிருப்பேன். அவ்வளவு கோபம் எனக்கு வந்தது. மாறுவேடத்தில் இருந்ததனாலும் அண்ணாவின் தடையினாலும் பொறுத்திருந்தேன்.”
“உங்கள் பொறுமைக்குக் காரணத்தை நானும் புரிந்து கொண்டேன். ஆனால் இனிமேலும் நீங்கள் அம்மாதிரிப் பொறுமையைக் கடைப்பிடித்தால் நான் என்னைக் கீசகனுக்குப் பறிகொடுக்க வேண்டியது தான். ஆகவே ஒரு திட்டம் செய்து கீசகனை யாரும் அறியாமல் ஒழித்துக் கட்ட முயல வேண்டும்.”
“என்ன திட்டம் செய்யலாம்? நீதான் ஒரு வழி சொல்லேன் திரெளபதி ! நான் எதற்கும் தயார்!”
“என்னைக் கந்தருவர்கள் காப்பதாகவும், என் கற்புக்குத் தீங்கு புரியும் எண்ணத்தோடு என்னைத் தொட முயல்கிறவர்கள் அக்கந்தருவர்களாலேயே உயிர் போக்கப்படுவார்கள் என்றும் இங்கு நான் யாரிடமும் கூறியுள்ளேன். இது நம்முடைய திட்டத்தை முடிக்க மிக அருமையாக வசதியளிக்கின்றது. கீசகன் கருத்துக்கு இணங்குவது போல் நடித்து அவனை ஒருநாள் இரவு தனியே அரண்மனைத் தோட்டத்திற்கு வரச் செய்கிறேன். நீங்கள் அங்கு மறைந்திருந்து அவனை அழிக்கும் விதமாக அழித்து விடுங்கள்.”
‘சரியான யோசனை திரெளபதி! அப்படியே ஏற்பாடு செய். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.” வீமன் சம்மதித்தான். திரெளபதி மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டு வீமனிடம் விடை பெற்றுச் சென்றாள். மறுநாள் வழக்கம் போலவே கீசகன் வெறி மிகுந்தவனாக விரதசாரிணியைச் சந்தித்துத் தன் ஆசையைப் பற்றி ஏதேதோ பிதற்றினான். விரதசாரிணி முதலில் அவன் வேண்டுகோளை மறுக்கின்றவள் போல நடித்துப் பின்பு இணங்கினாள். “இன்றிரவு, அரண்மனைப் பூந்தோட்டத்திலுள்ள உல்லாச அரங்கத்தில் என்னைச் சந்தியுங்கள். உங்களுக்காக நான் அங்கு காத்திருக்கின்றேன்” விரதசாரிணியின் பவழ வாயிலிருந்து இந்தச் சொற்கள் வெளி வந்தனவோ, இல்லையோ, கீசகன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போனான். அப்படியே இரவில் பூந்தோட்டத்தில் சந்திக்க இணங்கி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அன்று நள்ளிரவில் விரதசாரிணி பெண் வேடம் தரிக்கச் செய்து வீமனையும் அழைத்துக் கொண்டு அரண்மனைப் பூந்தோட்டத்தில் போய் மறைந்திருந்தாள்.
கீசகன் வருகின்ற நேரத்தில் விரதசாரிணி தனியே வேறோரிடத்தில் போய்ப் பதுங்கிக் கொண்டாள். பெண்ணுருவில் இருந்த வீமன் கீசகன் கண்ணிற்காணுமாறு அரங்கத்தின் நடுவே வெட்கத்தால் விரதசாரிணி தலை. குனிந்து உட்கார்ந்திருப்பது போல உட்கார்ந்து கொண்டான். கீசகன் நேரே அவனருகில் வந்து மனமுருகி “ஆரணங்கே! இன்றாவது உன் உள்ளம் என்பால் இரங்கியதே! உன் போன்ற பேரழகுடையவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை” என்று பலவாறு புகழ்ந்து மெல்லத் தழுவ முயல்பவன் போலத் தோளில் கையை வைத்தான்.
அவ்வளவு தான்! கீசகனுடைய முகவாய்க் கட்டையில் இரும்பையொத்த வன்கரமொன்று ஓங்கி ஒரு குத்து விட்டது. பெண் போல உட்கார்ந்திருந்த உருவம் துள்ளி எழுந்து வாட்டசாட்டமான தோற்றத்தோடு பூதாகாரமாக எழுந்திருந்து கீசகனைத் தாக்க ஆரம்பித்தது. கீசகன் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திணறிப் போனான். தான் தழுவ முயன்றது விரதசாரிணியை அல்ல. ‘அரண்மனைச் சமையற்காரனாகிய ‘பலாயனன்’ என்ற தடியன், பெண்ணைப் போலப் பதுங்கியிருந்து தன்னைத் தாக்குகிறான்’ என்று உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று கீசகனுக்கு. இருவரும் உல்லாச அரங்கத்தின் நடுவே உக்கிரமாகப் போர் செய்யலானார்கள். வெகு நேரத்துப் போருக்குப் பிறகு கீசகனின் உயிரற்ற சரீரத்தைக் கீழே தரையில் கிடத்தி விட்டுத்தான் தலை நிமிர்ந்தான் வீமன். ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி மலர்ந்த முகத்துடனே அவனருகில் வந்தாள்.
வீமன் அவளை நோக்கி நகைத்துக் கொண்டே “திரெளபதி! இனிக் கவலை இல்லை. உன்னைப் பற்றி நின்ற சனியன் ஒழிந்தது! நீ நிம்மதியாக உன் இருப்பிடத்திற்குச் சென்று உறங்கு” என்றான். அவளும் தன் நன்றி ததும்பும் பார்வையாலும் அன்பு நிறைந்த சொற்களாலும் வீமனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். வீமனும் போர் செய்த ஓய்வைத் தீர்த்துக் கொள்ளுவதற்காகச் சமையலறைக்குச் சென்று படுக்கையில் படுத்தான். வீமனுக்கும் கீசகனுக்கும் போர் நடந்தபோது கேட்ட குழப்பமான ஒலிகளால் கீசகனுடைய தம்பியர்கள் விழித்துக் கொண்டு பூந்தோட்டத்தின் பக்கமாக ஓடி வரலானார்கள். ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள் சிக்கனை அழித்து முடித்துவிட்டுத் திரெளபதியும் வீமனும் தத்தம் இருப்பிடத்திற்குப் போய்விட்டனர். வந்தவர்கள் தீவட்டிகளைக் கொண்டு இருளைப் போக்கிப் பூந்தோட்டத்தில் இருந்த உல்லாச அரங்கிலே தேடிப் பார்த்ததில் கீசகனுடைய உயிரற்ற உடல் இரத்த வெள்ளத்தினிடையே விழுந்து கிடப்பதைக் கண்டனர். கீசகன் தம்பியர்க்கு ஒரு புறம் அடக்க முடியாத வருத்தமும் மற்றோர் புறம் அடக்க முடியாத சினமும் ஏற்பட்டது.
“அண்ணனின் சாவுக்கு அந்தப் பாழாய் போன விரதசாரிணிதான் காரணமாக இருக்கவேண்டும். அண்ணனின் சடலத்தை எரிக்கும்போது அந்த நாசமாய்ப் போகிறவளையும் உடன் வைத்து எரிக்க வேண்டும்” என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்ட அவர்கள் உடனே அந்தப்புரத்திற்கு ஓடிப் பலவந்தம் செய்து உயிரோடு தீயிலிடுவதற்காக விரதசாரிணியை இழுத்துக் கொண்டு வந்தார்கள். விரதசாரிணி அவர்கள் செய்த துன்பம் பொறுக்க முடியாமல் ‘குய்யோ முறையோ’ என்று உரத்த குரலில் கூக்குரலிட்டாள்.
மடைப்பள்ளியில் உறங்கிக் கொண்டிருந்த வீமன் இந்தக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டு ஓடி வந்தான். கீசகனுடைய தம்பிமார்கள் திரெளபதியை இழுத்துச் செல்வது கண்டு ஆத்திரத்தோடு அவர்கள் மேல் தாவிப் பாய்ந்தான். ஒவ்வொருவராக வீமன் கையிலிருந்து ‘விண் விண்’ என்று குத்துகளை வாங்கிக் கொண்டே வீழ்ந்தனர். பொங்கி எழும் ஆத்திரத்தோடு நீண்ட நேரம் போர் செய்து கீசகன் தம்பிமார்களைக் கூண்டோடு விண்ணுலகுக்கு அனுப்பிய பின்பே வீமன் ஓய்ந்தான். பின்பு மனமகிழ்ச்சியோடு திரெளபதி தன்னிடத்திற்கும், வீமன் சமையலறைக்குமாக இருவரும் சென்றனர். பொழுது புலர்ந்ததும் கீசகனும் தம்பிமார்களும் இறந்த செய்தி ஊரெல்லாம் பரவியது. சுதேஷ்ணையும் விராடனும் வருந்தினார்கள். திரெளபதியோ தொல்லைகள் நீங்கிய புது மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள்.