மகாபாரதம்-அறத்தின் குரல்/1. மறைந்த வாழ்வு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விராட பருவம்

1. மறைந்த வாழ்வு

‘பன்னிரண்டு வருட காலம் காட்டுவாசம் முடிந்து விட்டது. இனி எங்காவது ஒரு நகரத்தில் மறைந்து வாழ வேண்டும்’ -என்று எண்ணிய பாண்டவர்கள் அது பற்றித் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். சகோதரர்கள் பலரும் பலவாறு கூறினர். ஒவ்வொருவரும் அவரவருடைய விருப்பத்திற்கு ஏற்றதாக ஒரு நகரத்தைக் குறிப்பிட்டனர். அந்த நிலையில் எல்லோரும் ஒன்று கூடி மறைந்து வாழ்வதற்கேற்ற ஒரு நகரத்தை அர்ச்சுனன் குறிப்பிட்டான். அதுவே விராட மன்னனால் அரசாளப்பட்டு வந்த வளம் மிக்க விராட நகரம், சகோதரர்கள் ஐவரும் தாம் இன்னாரென்று தெரியாதபடி, மாறுவேடங்கொண்டு அந்த நகரத்து அரசனை அண்டி. வாழ்வதென்று தீர்மானமாயிற்று. வனத்தில் பாண்டவர்களுக்கு நட்பினராய் ஒன்று சேர்ந்திருந்த முனிவர்களும் சிற்றரசர்களும் பலர் இருந்தனர். தங்களோடு அவர்களும் வரநேர்ந்தால் அஞ்ஞாதவாசரகசியம் வெளியாகி விடுமோ என்று தயங்கினான் தருமன், எனவே அவர்களை அவரவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று வாழுமாறு கூறி ஏற்பாடு செய்து விட்டு அதன் பிறகே அவர்கள் விராட் நகருக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

விராட நகரத்தை கோநகரமாகக் கொண்டு ஆளப்பெற்று வந்த தேசத்திற்கு மச்சதேசம் என்று பெயர். பாண்டவர்கள் ஐவரும் மச்சதேச எல்லைக்குள் பிரவேசித்து விராட நகரத்தை அடைந்தனர். விராட மன்னனின் அரண்மனைக்குச் சென்று அவனைச் சந்திப்பதற்கு முன்னால் தங்கள் பொருள்களையும் ஆயுதங்களையும் ஒதுக்குப்புறமாக ஒளித்து வைப்பதற்கு ஒரு இடம் தேவையாயிருந்தது அவர்களுக்கு. நகரத்தின் எல்லைப் புறமாகப் பழங்காலத்துக் காளி கோவில் ஒன்று இருந்தது. ‘போகிற போக்கில் அந்தக் காளி கோவிலுக்குள் போய் வணங்கி விட்டுப் போகலாம்’ -என்றெண்ணி உள்ளே சென்ற பாண்டவர்கள் தங்கள் பொருள்களை ஒளித்து வைப்பதற்கேற்ற ஒரு நல்ல இடத்தை அங்கே கண்டனர். காளி சந்நிதிக்கு முன்புறம் ஒரு வயதான வன்னிமரம் பருத்து வளர்ந்து செழித்துப் படர்ந்திருந்தது. அந்த மரத்தின் அடிப்புறம் அமைந்திருந்த பெரிய பொந்தில் எவ்வளவு பொருள்களை வேண்டுமானாலும் ஒளித்து வைக்கலாம் போலத் தோன்றியது. பாண்டவர்கள் தங்களுடைய ஆயுதங்களையும் பிற பொருள்களையும் அந்தப் பொந்திலே போட்டு ஒளித்து வைத்தார்கள். அப்பொருள்கள் யார்க்கும் புலப்படாமல் நலமாக அங்கிருக்க வேண்டும் என்று காளியை வேண்டி வணங்கிய பின் யார், யார் எந்தெந்த மாறு வேடத்தோடு விராடனின் அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்தனர்.

தாங்கள் ஐந்து பேரும் சகோதரர்கள் என்பது தெரியாதபடி தனித்தனியே வேறு வேறு தோற்றங்களுடன் வேறு முறையில் அரண்மனையில் நுழைவதே ஏற்றது என்று கருதினார்கள். முதன் முதலில் மாறு வேடங்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட வேண்டிய முறை தருமனுக்கு வாய்த்தது. தருமனுக்கு இயல்பான சாந்தகுணம் துறவியாகவே செல்லத் தூண்டியது. அவன் முற்றுந்துறந்த முனுபுங்கவனாக மாறி, கங்கன் என்ற பெயரைப் பூண்டு விராட மன்னனுக்கு முன் சென்று நின்றான். தவஒளி மிக்கவர் போலத் தோன்றியதால்விராட மன்னன் அவனை அன்போடு வரவேற்றான்.

“சுவாமி! தாங்கள் எவ்வூரிலிருந்து வருகிறீர்களோ? தங்கள் திருநாமம் யாதோ?”

“விராட மன்னவா? நின் கொற்றம் வாழ்க நலம் சிறப்பதாகுக! நான் நேற்று வரை பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனோடு வனத்தில் தங்கியிருந்தேன். என்னைக் ‘கங்க முனிவர்’ என்பார்கள்."

“மிகவும் நல்லது முனிவரே! அடியேனுடைய நாடு தங்கள் வருகையால் பெரிதும் உயர்ந்து விட்டது. தேவரீர் இங்குவரத் திருவுளம் பற்றிய காரணத்தை அறியப் பெரிதும் ஆசைப்படுகிறேன்”

“காரணம் வேறொன்றம் இல்லை அரசே! திருவும் அறிவும் சிறந்து விளங்கும் உன் நாட்டில் உன்னோடு சில நாட்கள் தங்க வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை.”

“முனி சிரேஷ்டரே! வலிய வந்தடைந்த பாக்கியத்தைப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். விரும்பும் நாளெல்லாம் தங்கியிருங்கள். தங்களை விருந்தோம்பி மகிழும் இனிய பேறு எனக்குக் கிடைக்கும்” -தருமனுக்குத் திருப்தி ஏற்பட்டது. விராடன் நம்முடைய வேஷத்தைச் சரியானபடி நம்பிவிட்டான்! அஞ்சாத வாசத்திற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது. இனிக் கவலை இல்லை என்று களித்தது அவன் மனம்.

தருமனுக்கு அடுத்தபடி வீமன் சமையற்காரனாக மாறுவேடம் கொண்டு விராட்னைக் காணப் புறப்பட்டான். “என் பெயர் பலாயனன். சமையல் தொழிலில் எனக்கு நிகர் நானே. சுவை மிக்கவுணவு வகைகளை என் போலத் தேவருலகில் உள்ளவர்களாலும் படைக்க முடியாது. தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று விராடனுக்கு முன் வேண்டிக் கொண்டான்.

“ஏன் அப்பா? உன்னைப் பார்த்தால் மதமதவென்று வஞ்சகமில்லாமல் வளர்ந்து மல்யுத்தம் செய்கிற ஆள் மாதிரி இருக்கிறாயே? நீ சமையற்காரன் என்பதை எப்படி நம்புவது?” விராடனின் கேள்வி வீமனைத் தூக்கி வாரிப்போடச் செய்தது. எங்கே உண்மையை விராடன் கண்டு கொண்டு விட்டானோ என்றெண்ணி அவன் உடல் நடுங்கியது. நல்லவேளையாக உடனே துணிந்து சமாளித்துக் கொண்டு, “ஆம் அரசே! தங்கள் அனுமானம் முற்றிலும் முறையானதே. எனக்கு மல்யுத்தத்திலும் நல்ல பழக்கம் உண்டு. திறமாக மற்போர் புரிவேன்” என்றான். உடனே மனமுவந்த விராடன் அவனுக்குச் சிறந்த மரியாதைகள் செய்து தன் அரண்மனையிற் சமையற்காரனாக நியமித்துக் கொண்டு விட்டான். வீமன் பலாயனன் என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டு விராட மன்னனிடம் சமையற்காரனாக நடித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த முறை அர்ச்சுனனுடையது. முன்பு ஒரு முறை தேவர்கோன் தலைநகரமாகிய அமராபதியில் தங்கியிருந்த போது ஊர்வசியால், ‘நினைத்தபோது பேடியாக மாறிக் கொள்ளலாம்’ என்ற சாபமொன்றை அர்ச்சுனன் பெற்றிருந்தான் அல்லவா? அந்தச் சாபத்தை இப்பொழுது மாறுவேடத்துக்குப் பயன்படுத்த விரும்பினான் அவன். பேடியாக மாறிச் சென்றே விராடனிடம் வேலை பெறலாம் என்று தனக்குள் முடிவு செய்து கொண்ட அவன் பேடியாக மாறிப் ‘பிருகந்நளை’ என்ற பெயர் பூண்டு அரசனைக் காண்பதற்காகச் சென்றான்.

“நான் இசைக் கலையிலும் நாட்டியக் கலையிலும் வல்லவள். என் பெயர் பிருகந்நளை. முன்பு அர்ச்சுனனுடைய அந்தப்புர மகளிருக்குப் பேடியாக இருந்து பல்கலைகளைக் கற்பித்து நிறைந்த அனுபவம் பெற்றிருக்கின்றேன். தங்கள் அந்தப்புரத்தில் எனக்கு ஒரு பணி அளித்தால் நல்லது” -என்று விராடனுக்கு முன்னால் சென்று வேண்டிக் கொண்டான். தன் மகள் உத்தரைக்கு இசையும் நாட்டியமும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவ(னை)ளை நியமித்தான் அவன். அப்போதிலிருந்து அர்ச்சுனன் பிருகந்நளையாகி அந்தப் புரத்தில் போய் மறைந்தான்.

இயற்கையிலேயே நகுலனுக்குக் குதிரையைப் பழக்கும் கலையில் நல்ல பழக்கம் உண்டு. எனவே, அவன் குதிரை பழக்கும் பணியாளனாக அரண்மனைக்குச் சென்றான். மாறுவேடத்தோடு கடிவாளம் குதிரை பழக்கும் கயிறு முதலியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு அரண் மனையைச் சேர்ந்த குதிரைச் சாலையின் வாயிலில் நின்று கொண்டிருந்தான். அப்போது தற்செயலாகக் குதிரைச் சாலையைப் பார்வையிடுவதற்காக அங்கே வந்த விராட மன்னன் அவனைக் கண்டான். கையில் கடிவாளம் முதலிய குதிரை சம்பந்தமான பொருள்களை வைத்துக் கொண்டிருந்ததால் நின்று கொண்டிருப்பவன் அசுவ சாஸ்திரத்தில் (குதிரையைப் பற்றி கலைகளில் திறமை மிக்கவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான்.

“நீ எங்கிருந்து வருகிறாய் அப்பா? குதிரைகளைப் பழக்குவதில் நீ தேர்ச்சியுள்ளவன் போலும்!”

“அடியேனைத் தாமக்கிரந்தி என்று அழைப்பார்கள். அசுவ சாஸ்திரத்தின் இருப்பிடமாகிய நகுலனிடம் பல ஆண்டுகள் உடனிருந்து தொழில் கற்றேன். நகுலன் காட்டுக்குச் சென்றபின் ஆதரவிழந்து எங்கெங்கோ சுற்றினேன். இப்போது தங்களுடைய கலைஞரை ஆதரிக்கும் பண்பு கேட்டு இங்கு வந்தேன்.”

“மிகவும் மகிழ்ச்சி அப்பா! உன்னைப் போன்ற ஒரு தலைவனைத்தான் என்னுடைய குதிரைச் சாலையின் பொறுப்பு முழுவதையும் ஒப்படைப்பதற்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்றிலிருந்து நீ அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்” மகிழ்ச்சியும் நன்றியும் ஒருங்கே பொங்கும் உள்ளத்தோடு நகுலன் அந்தப் பதவியை ஏற்று ‘தாமக்கிரந்தி’ என்ற பெயருள் ஒளிந்து கொண்டான்.

அடுத்து சகாதேவன் வந்தான். பசுக்களை மேய்த்துப் பாதுகாக்கும் கோவலர் வகுப்பைச் சேர்ந்தவனைப் போல மாறுவேடமிட்டுக் கொண்டிருந்தான். அவன் பெயரையும் மாற்றித் ‘தந்திரி பாலன்’ -என்று வைத்துக் கொண்டான். விராடராசனிடம் சென்று, “யான் பசுக்களைப் பரிபாலனம் பண்ணுவதில் வல்லவன். முன்பு பாண்டவர்கள் அரசாண்ட பொழுது சகாதேவனுக்குக் கீழே பசுக்களைப் பாதுக்காப்பவனாகப் பணிபுரிந்து அனுபவமும் தேர்ச்சியும் அடைந்துள்ளேன். என் பெயர் தந்திரி பாலன். கலைஞர்க்குப் புகலிடமாக விளங்கும் தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” -என்று குழந்தை சொற்களால் வேண்டிக் கொண்டான். விராட மன்னனும் அவன் நிலைமைக்கு மனமிரங்கி அவனைத் தன் அரண்மனையிலுள்ள கோவலர்களுக்குத் தலைவனாக நியமித்தான்.

திரெளபதி ஒருத்தி தான் எஞ்சியிருந்தாள். அவள் விஷயம் இவர்கள் ஐவரையும் போல அவ்வளவு சுலபமானது இல்லை. அவள் பெண்! இடம், பொருள், ஏவல், பதவி பார்த்து வாழ வேண்டியவள். கற்பையும் பெண்மையையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்த மாறு வேடத்தோடுதான் அவள் அரண்மனையில் நுழைய முடியும். அப்படிப்பட்ட வேடம் ஒன்றை அவள் சிந்தித்துத் தேர்ந்தெடுத்தாள். அரண்மனைப் பெண்களுக்கு அலங்கரிக்கின்ற கலையில் வல்லவள் போல மாறுவேடம் கொண்டு வண்ண மகளாக விராடராசனின் கோப்பெருந்தேவியைக் காணச் சென்றாள் அவள். கோப்பெருந்தேவி கருணை மிக்க மனமுடையவள். வண்ணமகளாக வந்தவளை அன்புடன் வரவேற்று விசாரித்தாள்.

“தேவீ! என் பெயர் விரதசாரிணி என்பது. நான் அந்தப்புரத்து மகளிர்க்கு அலங்கரித்து விடுகின்ற வண்ணக் கலையில் நன்கு பழகியவள். முன்பு பாண்டவர்களின் அந்தப்புர மகளிர்க்கு வண்ணமகளாக இருந்திருக்கிறேன். துரியோதனனுடைய சூழ்ச்சியால் பாண்டவர்கள் நாடிழந்து காடு சென்றபின் ஒரு பணியுமின்றி நாட்களை வீணே கழிக்கின்றேன். ஆடையுடுத்தல், அணிகலன் அணிவித்தல், திலகமிடுதல், போன்ற கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறேன். நான் விரதங்களும் ஒழுக்கமுமே வாழ்க்கையின் உயிரெனக் கருதுகின்றவள். பிறந்த வீட்டில் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்திலிருந்தே தேவர்களால் காவல் செய்யப்படும் தெய்வீகமான கற்பைப் போற்றி வருகிறேன். ஆண்களின் முகத்தை நான் காண்பதே இல்லை. என்னுடைய இந்த விரதங்களுக்கு அடைக்கலம் அளித்து என்னைப் பணிமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.” விராடராசனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை அன்புடன் ‘விரதசாரிணி’யை ஏற்றுக் கொண்டாள். அவளுடைய கற்புக்கும் தனிமை விரதங்களுக்கும் பாதுகாப்பளிப்பதாக உறுதி கூறினாள்.

‘விரதசாரிணியாக’ மாறி வந்த திரெளபதி அங்கிருக்க உடன்பட்டாள். சுதேஷ்ணையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது அவளுக்கு இவ்வாறு பாண்டவர்கள் ஐவரும், அவர்கள் தேவியான திரெளபதியும் தத்தம் கலைகளின் திறமையாலும், மாறுவேடம் செய்த உதவியாலும், விராட நகரத்து அரண்மனையில் மறைந்து வாழத் தொடங்கினார்கள். இப்படி அவர்கள் வாழ்ந்து வரும்போது வீமனுக்குத் தன்னுடைய மற்போர் வன்மையை விராடனுக்கு முன்பு வெளிப்படுத்தும்படியான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது.

‘பலாயனன்’ -என்ற பெயரில் மறைந்து கொண்டிருந்த வீமன் இந்த வாய்ப்பைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான். மற்போரில் பல நகரங்களில் பலரை வென்று வாகை சூடியவனும் மகாவீரனுமாகிய வாசவன் என்ற மல்லன் விராட நகரத்துக்கு விஜயம் செய்திருந்தான். மனவளம் மட்டுமல்ல, உடல் வளமும் பெருகியிருந்தது அவனுக்கு. வாசவன் நடந்து வருகிறான் என்றாலே, ‘சிறுமலை’ ஒன்று கை கால்களைப் பெற்று நடந்து வருவது போலத் தோன்றும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மல்லர்களை வென்று தனக்கு இணை எங்கும் இல்லை என்பதாக அந்தந்த நாட்டரசர்களிடம் விருது பெற்றுத் திக்கு விஜயம் செய்து கொண்டு வந்தான் அவன். வாசவன் விராட நகருக்கு வந்திருந்ததன் நோக்கம் அரண்மனை மல்லர்கள் யாவரையும் வென்று வாகை சூடிச் செல்ல வேண்டும் என்பது தான். விராட மன்னனும் இந்தப் போட்டிக்கு ஒப்புக் கொண்டான். மற்போர் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. வாசவமல்லனோடு விராடனுடைய அவைக்களத்தைச் சேர்ந்த மல்லர்கள் ஒவ்வொருவராகப் போர் செய்து தோற்றுப் போனார்கள். விராடனுக்குத் தலை தாழ்ந்து விட்டது. தன் மல்லர்களுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனது பெருமைக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதினான் அவன். ஆனாலும் என்ன செய்வது? திறமைக்கு மதிப்புக் கொடுத்துத் தானே ஆக வேண்டும்? எனவே வாசவமல்லனுக்குச் செய்ய வேண்டிய வெற்றி மரியாதைகளை முறைப்படி செய்தான். அவன் மனத்தில் தன் அவையில் தன் மல்லர்களே தோற்கடிக்கப்பட்ட ஏக்கம் மட்டும் குறையாமலிருந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த ஏக்கத்தை முனிவராக, கங்கர் என்ற பெயரோடு அவனருகே அவையிலிருந்த தருமன் கண்டு கொண்டான்.

“அரசே! உங்கள் கலக்கத்தை நான் உணருகிறேன். இந்த வாசவ மல்லனை வெல்வதற்கு ஏற்ற சரியான ஆள் ஒருவன் நம்முடைய அரண்மனைச் சமையற்காரர்களுக்கிடையே இருக்கிறான். அவனுக்கு மற்போரில் நல்ல பழக்கம் உண்டு, அவன் பெயர் பலாயனன். அவனை அழைத்து இவனோடு போருக்கு மோதவிட்டால் இவன் செருக்கு ஒழிந்து போகும்” என்று கங்கராக இருந்த தருமன் விராடனை நோக்கிக் கூறினான். விராடன் உடனே சமையற்காரப் பலாயன்னை அழைத்து வருமாறு காவலனை அனுப்பினான். வீமனுடைய மற்போர் வன்மைக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென்பதற்காகவே 'தருமன்’ விராடனுக்கு இந்த எண்ணத்தைத் தூண்டி விட்டான். விராடனோ தான் தோற்ற பெருமையை எல்லாமே மீண்டும் பெற்றவனைப் போல நம்பிக்கையோடு பலாயனனை அழைத்து வரச் செய்தான். மற்போர் என்றதுமே பலாயனன் என்றும் பெயருக்குள் ஒளிந்து கொண்டிருந்த வீமனுக்கு மனத்தில் ஒரே ஆனந்தம். வெகு நாட்களாகத் தினவெடுத்துக் கிடந்த தோள்களுக்கு நல்விருந்து கிடைக்கப் போகிறதே என்ற மனமகிழ்ச்சியோடு அரசவைக்கு வந்தான் அவன்.

“பலாயனா! நீ மற்போரில் வல்லவனென்று ஏற்கனவே என்னிடம் கூறியிருக்கிறாய். இப்போது இந்த வாசவமல்லனிடம் உன் திறமையைக் காட்டு, பார்ப்போம்” என்று உத்திரவிட்டான் விராடன்.

விராடனைத் தலைவணங்கிப் போருக்குத் தயாரானான் பலாயனன். “பெரிய பெரிய மல்லர்களையெல்லாம் வென்ற எனக்குக் கேவலம் இந்தச் சமையற்காரன் எம்மட்டு?” -என்றெண்ணி அவன் மேல் தோள் தட்டிக் கொண்டு பாய்ந்தான் வாசவன். பலாயனனுக்கும் வாசவமல்லனுக்கும் கோரமாகப் போர் நடந்தது. புஜங்களும் புஜங்களும் மோதின. கால் காலை இடறியது. மல்யுத்தத்தின் திறமைகளை எல்லாம் காட்டி ஒருவரை ஒருவர் வெற்றிக் கொள்ள முயன்றனர். திமிரும் மனக்கொழுப்பும் கொண்டு போர் புரிந்த வாசவமல்லன் தான் வீரன் என்பதை அவைக்கு விளக்க முயலுவதைப் போலத் துள்ளித் துடித்துப் பலாயன்னைத் தாக்கிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் யாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போர் புரிந்து வந்த பலாயனன். திடீரென்று ஆக்ரோஷமடைந்து வாசவனின் இடுப்பிலே ஓங்கி உதைத்து அவனைக் கீழே தள்ளினான். கீழே விழுந்த வாசவனது மார்பில் ஏறி அமர்ந்த பலாயனன் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவனுடைய கழுத்தை வேகமாகத் திருகினான். கழுத்தொடிந்த வாசவமல்லன் இறந்து விழுந்தான். பலாயனன் வென்றான். விராடன் சமையல்காரன் என்றும் பாராமல் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தான். தன்னுடைய ‘ஆஸ்தான மல்லன்’ என்ற கெளரவமான பதவியையும் பலாயனனுக்கு அளித்தான்.