உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/8. மாண்டவர் மீண்டனர்

விக்கிமூலம் இலிருந்து

முன்பிருந்த கிளையில் போய்ப் பொருந்திக் கொண்டாலும் பொருந்திக் கொள்ளும். அதைச் செய்யுங்கள்” -என்றான் கண்ணபிரான். பாண்டவர்களும் திரெளபதியும் கண்ணபிரானும் நெல்லிக்கனியை எடுத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்றனர். கனியைக் கீழே வைத்துவிட்டு அவரவர்களுடைய மனத்தில் இருந்ததைச் சத்தியத்திற்குப் புறம்பாகாதபடி கூறலாயினர்.

“சத்தியமும் மெய்ம்மையுமே உலகில் நிலைத்து வாழக்கூடியவை. மற்றவை எல்லாம் அழிவனவே” என்றான் தருமன்.

“பிறன் மனைவியை விரும்பல் பெருந்தீமை. பிறரை வருத்தாமல் அவர்க்கு உதவுவது பண்பு” என்றான் வீமன்.

“மானத்தைக் காப்பது தான் வாழ்வு. உடல், உயிர் எல்லாம் அழிந்தாலும் அழியவிடக்கூடாதது மானம்” -என்றான் அர்ச்சுனன்.

“உலகில் மதிக்கத்தக்க பொருள் கலைகளாலும் கல்வியாலும் ஏற்படக்கூடிய ஞானமே” -என்றான் நகுலன்.

“சத்தியத்தைத் தாயாகவும், அறிவைத் தந்தையாகவும் தருமத்தைச் சகோதரனாகவும், சாந்தத்தை மனைவியாகவும், பொறுமையைப் புதல்வனாகவும் கொண்டு வாழ்வதே வாழ்வென்று கருதுகின்றேன் நான்” -என்றான் சகாதேவன்

“பெண்ணுக்கு ஆடவர்களின் மேல் ஏற்படக்கூடிய ஆசை அடக்க முடியாதது. எல்லாத் தகுதியும் பெற்ற பாண்டவர்கள் கணவராக வாய்த்தும் என் மனம் வேறொருவனை அடிக்கடி நாடுகிறது. மங்கையர்கள் கற்பு, கணவனாக அமைபவனைப் பொறுத்ததாகும். அது ஒரு உறுதியான பண்பென்று தோன்றவில்லை” என்று திரெளபதி தன் உள்ளத்தில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

இவர்கள் ஆறு பேரும் இவ்வாறு கூறி முடித்தபோது தரையில் இருந்த நெல்லிக் கனியைக் காணவில்லை. ஆச்சரியத்தோடு திகைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கண்ணபிரான் சிரித்துக் கொண்டே நெல்லி மரத்தின் கிளையைச் சுட்டிக் காட்டினான் என்ன விந்தை? அர்ச்சுனன் எந்த இடத்திலிருந்து அந்தக் கனியை வீழ்த்தினானோ அந்த இடத்தில் அதே காம்பில் அது பொருந்தித் தொங்கிக் கொண்டிருந்தது. தங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு வழி கூறியருளினதற்காகக் கண்ணபிரானுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்தினார்கள் பாண்டவர்கள். “என் உதவி ஒன்றும் இதில் கலந்துவிடவில்லை. உங்கள் தருமத்தாலும் சத்தியத்தாலும் உங்களை நீங்களே காத்துக் கொண்டீர்கள். வழி கூறிய பெருமை மட்டுமே எனக்கு உண்டு” என்றான் கண்ணன்.

8. மாண்டவர் மீண்டனர்

நெல்லிக்கனிச் சம்பவத்திற்குப் பின் பாண்டவர்கள் அஷ்டகோண முனிவருடைய வனத்தில் அதிக நாட்கள் தங்கியிருக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ‘விஷ்ணு சித்த முனிவர்’ என்ற வேறோர் முனிவர் வசித்து வந்த காட்டை அடைந்து தங்கினர். இவர்கள் இது விஷ்ணு சித்த முனிவரின் வனத்தில் தங்கியிருப்பது எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்து விட்டது. இந்த வனத்திலிருந்து உயிரோடு மீளாமல் பாண்டவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் திட்டத்தோடு வேலை செய்தனர். பல வேள்விகளைச் செய்து நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலுடையவரான காள மாமுனிவர் என்ற முனிவரைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தான் துரியோதனன், பல நாட்கள் இடைவிடாமல் அவரை வழிபாடு செய்து போற்றி உபசரித்தான். திடீரென்று தன்னை அழைத்து வந்து எதற்காக இவ்வளவு பெரிய உபசாரங்களை எல்லாம் செய்கிறான்? என்று விளங்காமல் திகைத்தார் முனிவர். துரியோதனன் மனக்கருத்தை அவர் கண்டாரா? பாவம்! மனம் மகிழ்ந்தார். சகுனியின் மூலமாகத் துரியோதனன் அவரிடம் ஒரு வரம் கேட்டான்.

சகுனி முனிவரிடம், “முனிவர் பெருமானே! துரியோதனனுடைய விரோதிகளை அழிப்பதற்கு நீங்கள் உங்கள் தவ வலிமையினால் உதவவேண்டும்” என்று குறிப்பை மறைத்துக் கொண்டு நல்லது போலக் கேட்டான். விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத முனிவர் தமக்கிருந்த மனமகிழ்ச்சியில், “நல்லது துரியோதன்னுடைய பகைவர்கள் எவராக இருந்தாலும் என் உதவியால் நான் அவர்களை ஒழிக்க இணங்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டார்.

உடனே சகுனி, “முனிவரே! அந்த விரோதிகள் வேறெவரும் இல்லை. பாண்டவர்கள் தாம். அவர்களைக் கொல்வதற்காக நீங்கள் ஓர் யாகம் செய்ய வேண்டும்” என்றான். முனிவர் திடுக்கிட்டார். துரியோதனனுடைய வஞ்சகம் அப்போது தான் விளங்கியது. ‘குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல இவனிடம் வாக்களித்து அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே’ என்று கலங்கியது அவருடைய தூய உள்ளம் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் வழியில்லை. பாண்டவர்களைப் பற்றிய நல்லெண்ணமும் நல்ல நோக்கமும் உடையவராகிய அந்த முனிவர் விதியின் கொடுமையை எண்ணி மனம் புழுங்கினார்.

சகுனியின் வேண்டுகோளை எப்படியாவது மறுத்து விடலாம் என்றெண்ணி “அப்பா! தயவு செய்து வேறு ஏதாவது ஒரு வரம் கேள் நான் பாண்டவர்களை அழிக்க வேள்வி செய்தால் என் புண்ணியமும் தருமமும் ஆகிய யாவும் அழிந்து போய்விடும். நல்லதை எண்ணுங்கள்! நல்லதைக் கேளுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்” என்று உருக்கமாகக் கூறினார். துரியோதனனும் சகுனியும் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டார்கள். அதோடு கூறியதையே மீண்டும் கூறி வற்புறுத்தினார்கள். “நீங்கள் வாக்குக் கொடுத்துவிட்டீர்கள், இனி மாறக் கூடாது. எங்கள் விருப்பப்படியே பாண்டவர்களைக் கொன்று தொலைப்பதற்கு யாகம் செய்தே தீரவேண்டும் என்று முரண்டினார்கள். காளமா முனிவர் மறுப்பதற்கு வழியில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்புப் போல் திண்டாடினார். பாண்டவர்கள் மேலுள்ள அன்பு ‘வேள்வி செய்யாதே’ என்று தடுத்தது. துரியோதனாதியர்க்குக் கொடுத்த வாக்கு ‘வேள்வி செய்’ என்று வற்புறுத்தியது.

கடைசியில் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேள்வி செய்ய இணங்கினார். அந்தத் தீய வேள்விக்குரிய பொருள்களை எல்லாம் துரியோதனன் அவருக்குக் கொடுத்தான். கள்ளி மரங்களும் எட்டி மரங்களும் மற்றும் பல வாடிய மரங்களுமாகச் சூழ்ந்து நின்ற பயங்கரமானதோர் காட்டுப் பகுதியில் அந்தப் பயங்கரமான யாகத்தைச் செய்யத் தொடங்கினார் முனிவர். ஏராளமான பலிகளையும் பொருள்களையும் தீயிலே இட்டுத் துர்மந்திரங்களைக் கூறித் தொடர்ந்து வேள்வியைச் செய்தார். வானளாவி வளர்ந்த வேள்வியின் தீக்கொழுந்துகளில் இருந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாகத் தோற்றமுடைய ஒரு பெரும் பூதம் தோன்றியது. கோரமான கடைவாய்ப் பற்களும் குரூரமான செவ்விழிகளும் பாறை போன்ற செவிகளுமாகத் தோன்றிய அந்தப் பூதத்தைக் கண்டு காளமா முனிவருக்கே சதை ஆடியது. எலும்புக் குருத்துக்களுக்குள்ளே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல் இருந்தது.

“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுக” என்று இடி முழக்கம் போன்ற குரலில் அண்டகடாட்சங்கள் எல்லாம் எதிரொலிக் கும்படியாகப் பூதம் முனிவரைக் கேட்டது.

“ஏ பூதமே! நீ போய்ப் பாண்டவர்கள் ஐவரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொன்று தொலைத்து விட்டு வா.”

“நல்லது முனிவரே! ஆனால் ஒரு நிபந்தனை. பாண்டவர்கள் கொல்வதற்கு அகப்படவில்லையாயின் என்னை அழைத்து என் நேரத்தை வீணாக்கிய உன்னையே திரும்பி வந்து கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றது பூதம். பூதம் கிளம்புவதற்கு முன்பே பாண்டவர்கள் உயிரைக் காப்பதற்கு வேறு ஒரு தேவன் கிளம்பி விட்டான். அவனே எமன். எமதருமன், தருமனுக்குத் தந்தை அல்லவா? பாண்டவர்களுக்கு எதிராக துர்வேள்வி நடப்பதை அறிந்து அவர்களைக் காக்க உறுதி பூண்டு மண்ணுலகுக்கு வந்தான். கொல்லும் தொழிலுடையவன் காக்கப் புறப்பட்டால் அது எவ்வளவு பெரிய விந்தையாக இருக்க வேண்டும்! பாண்டவர்களை உயிர் பெற்று வாழச் செய்வதற்கென்றே நிகழ்ந்தவை போலச் சில நிகழ்ச்சிகள் அவர்கள் வசித்த காட்டில் நிகழ்ந்தன. அந்தக் காட்டில் வசித்து வந்த முனிவர் ஒருவருடைய புதல்வன் தான் அணிந்து கொள்வதற்காகப் பூணூலையும் மான் தோலையும் எடுத்து ஆசிரமத்திற்குள் வைத்திருந்தான். எங்கிருந்தோ நால்காற் பாய்ச்சலில் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று அவன் எடுத்து வைத்திருந்த மான் தோலையும், பூணுலையும் வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பயந்து போன முனிவரின் புதல்வன் அங்கிருந்த பாண்டவர்களிடம் வந்து தன் மான் தோலையும் பூணூலையும் மானிடமிருந்து மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டான்.

மான் ஒருவரால் பிடிக்க முடியாத வேகத்தில் தலைதெறித்து விடுவது போல ஓடிக் கொண்டிருந்ததனால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒவ்வொருவராக அதைப் பின்பற்றித் துரத்திக் கொண்டு ஓடினார்கள். மான் அலுக்காமல் சலிக்காமல் வெகு தொலைவு ஓடியது. பாண்டவர்களும் விடாமல் பின்பற்றி ஓடினார்கள். ஓடஓடக் கால் நரம்புகள் விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கின. இறுதியில் மான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. ஏமாற்றமும் உடற்சோர்வுமாகச் சகோதரர்கள் ஐவரும் களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். வாய் வறண்டு தாகம் எடுத்தது. உயிரே போய் விடுவது போலத் தாகம் தொண்டையைக் கசக்கிப் பிழிந்தது. ஐந்து பேரும் நீர் வேட்கையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இதே நேரத்தில் அவர்கள் சோர்ந்து விழுந்திருந்த இடத்திற்கு அருகில் எமனுடைய அருளால் ஒரு பெரிய நச்சுக்குளம் (உண்டவர்களை இறக்கச் செய்யும் நீரை உடையது) தோன்றியது. அதன் கரையில் அடர்ந்த பசுமையான மரக்கூட்டங்களும் தோன்றின. பாண்டவர்களைப் பூதத்தினிடமிருந்து காப்பாற்றுவதற்கு எமன் செய்த ஏற்பாடுகள் இவை.

நீர் வேட்கையைப் பொறுக்க முடியாத தருமன் சகாதேவனை நோக்கி, “தம்பீ! அருகிலே ஏதாவது குளமிருந்தால் சென்று நீயும் தண்ணீர் பருகிவிட்டு எங்களுக்கும் இலைத் தொன்னையில் தண்ணீர் கொண்டு வா!” என்று கூறினான். சகாதேவன் புறப்பட்டான். அங்கும் இங்கும் சுற்றிய பிறகு எமன் போலியாக உண்டாக்கிய நச்சுக்குளம் அவன் கண்களில் தென்பட்டது. வேகமாகச் சென்று. அதில் இறங்கி நீரைக் கைகள் கொண்ட மட்டும் அள்ளிப் பருகினான். பருகி விட்டு அருகிலிருந்த மரத்தில் தொன்னை செய்ய இலை பறிப்பதற்காக இரண்டடி நடந்தவன் அப்படியே வயிற்றைப் பிடித்தவாறே கரை மேலே சுருண்டு விழுந்தான். நீரிலிருந்த நஞ்சு தன் வேலையைச் செய்துவிட்டது. சகாதேவன் போய் வெகு நேரமாகியும் திரும்பாததைக் கண்டு ஐயுற்ற தருமன் நகுலனை அனுப்பினான். அவனும் இதே குளத்தில் வந்து நீரைப் பருகிவிட்டுச் சகாதேவனுக்கு அருகில் இறந்து வீழ்ந்தான். அடுத்து அர்ச்சுனன் வந்தான். அவனும் அறியாமல் நீரைப் பருகி மாண்டு விழுந்தான்.

நான்காம் முறையாக வீமன் வந்தான். கரையில் இறந்து விழுந்து கிடக்கும் தன் சகோதரர்கள் மூவரையும் கண்டவுடன் அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பொய்கை நீரில் ஏதோ தீமை இருக்கிறது என்று அனுமானித்துக் கொண்டான். எனினும் தண்ணீர்த் தாகத்தை அவனால் அடக்க முடியவில்லை. தனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூடத் தன்னை அடுத்து வருகின்ற தருமனுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு “இந்தக் குளத்திலுள்ள நீர் நச்சு நீர். இதைக் குடிக்க வேண்டாம்” -என்று குளக்கரை மணற்பரப்பில் எழுதினான். பின்பு நீரைக் குடித்து அவனும். மாண்டு வீழ்ந்தான். சகோதரர்கள் நான்கு பேரும் திரும்பி வராதது கண்டு தருமன் எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தான். சிறிது தொலைவு நடந்ததும் சோர்வு மிகுதியாகவே ஒரு சந்தன மரத்தின் அடியில் உணர்வற்று மயங்கி வீழ்ந்து விட்டான். அவன் மயங்கி வீழ்ந்த அதே சமயத்தில் காளமா முனிவரால் அனுப்பப்பட்ட பூதம் அங்கு வந்தது. தருமன் மட்டும் தனியாக வீழ்ந்து கிடப்பதைக் கண்டது. முனிவர் ஐந்து பேரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொல்ல வேண்டும் என்று கூறியிருந்ததனால் மற்ற நான்கு பேரையும் தேடிச் சுற்றியது. நச்சுக் குளத்தின் கரையில் மற்றச் சகோதரர்கள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதற்கு காளமா முனிவர் மேல் கடுங்கோபம் வந்துவிட்டது.

“கேவலம்! செத்துப் போனவர்களைக் கொல்வதற்காகவா என்னை அந்த முனிவன் அனுப்பினான். உடனே போய் அவனைக் கொல்கிறேன் பார்” -என்று வேகமாகத் திரும்பியது அது. காளமா முனிவர் பூதம் கோபாவேசமாகத் திரும்பி வருவதைக் கண்டு நடுநடுங்கி ஓட முயன்றார். பூதம் அவரை ஓட விடவில்லை. இறுக்கிப் பிடித்துக் கொண்டது. “ஏ! போலி முனிவனே! செத்தவர்களைக் கொல்லவா என்னை அனுப்பினாய்? நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்! உன்னை என்ன செய்கிறேன் பார் , இப்போது” -என்று கூறிக்கொண்டே அவரைத் திரிசூலாயுதத்தினால் கிழித்துக் கொன்று விட்டது. கொன்றபின் அருகிலிருந்த யாக குண்டத்தில் தீ வழியே தான் தோன்றியது போலவே புகுந்து மறைந்துவிட்டது.

காட்டில் சந்தன மரத்தடியில் மயங்கி விழுந்திருந்த தருமன் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதனால் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். ஞானமந்திரத்தை உச்சரித்து உடலில் வலுவேற்றிக் கொண்டான். தெம்பு தோன்றியதும் எழுந்து நடந்தான். நச்சுக் குளக்கரைக்குச் சென்று சகோதரர்கள் இறந்து கிடந்ததையும் மணலில் எழுதியிருக்கும் எழுத்துக்களையும் கண்டான். எழுதியிருந்ததைப் படித்தவுடன் அந்த நீரைக் குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். சிறிது நேரம் யோசித்துப் பார்த்ததில், “சகோதரர்கள் எல்லோரும் இறந்த பின் நாம் மட்டும் உயிர் வாழ்வானேன்? இந்த நச்சுப் பொய்கை நீரைக் குடித்து நாமும் உயிரை விட்டுவிட்டால் என்ன?” -என்று தோன்றியது. விநாடிக்கு விநாடி சிந்தனை வளர்ந்தது. சிந்தனை வளர வளர உயிரை விட்டு விடுவதே மேல் என்று தோன்றியது. இந்தத் தீர்மானத்தோடு நீரை அள்ளிப் பருகுவதற்காகக் குளத்தில் இறங்கினான் தருமன்.

“நில் ! இறங்காதே” -தருமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குரல் பெரிதாகக் கேட்டது. ஆனால் குரலுக்குரியவர் யார்? எங்கிருக்கிறார்? என்றே தெரியவில்லை. மீண்டும் ‘வீண் பிரமை’ என்று எண்ணிக் கொண்டு இறங்கினான். “நான் சொல்வது கேட்கவில்லை? இறங்கி நீரைக் குடித்தால் இறந்து போவாய் நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். அவைகட்குப் பதில் கூறினால் இறந்து கிடப்பவர்களை உயிர் மீட்டுத் தருவேன். பதில் சொல்வாயா?”

“ஆகா! தாராளமாகப் பதில் கூறுகிறேன். கேள்!” -தருமன் மகிழ்ச்சியோடு இணங்கினான். உருவமில்லாத அந்தக்குரல் கேட்டது.

“நூல்களில் பெரியது எது?”

“அரிய மெய்ச்சுருதி”

“இல்லறத்தை நடத்த அவசியமான பொருள் எது?”

“நல்ல மனைவி”

“மாலைகளில் மணமிக்கது எது?”

“வண்சாதி மாலை”

“போற்றத்தக்க தவம் என்ன?"

“தத்தம் குல ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது”

“முனிவர்குலம் எல்லாம் வணங்கக்கூடிய கடவுள் யார்?”

“திருத்துழாய் மாலையணியும் முகுந்தன்”

“நங்கையர்க்கு இயல்பான குணம் யாது?”

“நாணம்.”

“பொருள் மிகுந்த செல்வர்களுக்கு பாதுகாப்பு என்ன?”

“தானம்.”

“இரண்டு செவிகளுக்கும் இனியவை யாவை?”

“குழந்தைகளின் மழலை மொழிகள்.”

“நிலைத்து நிற்பது எது?”

“நீண்ட புகழ்.”

“கற்கத்தக்க கல்வி யாது?”

“கசடறக் கற்கும் கல்வி “ ‘எல்லாவற்றினும் அற்பமானது என்ன?”

“மற்றொருவரிடம் ஒரு பொருளைக் கேட்டுக் கையேந்தி வாங்குவது.”

எல்லாக் கேள்விகளுக்கும் மிக விரைவாக மறுமொழி கூறி முடித்து விட்டான் தருமன். கேள்விகளுக்கு விடை கூறி முடித்தவுடன் அவன் முன் எமன் தோன்றினான். தருமன் தந்தையை வணங்கினான். எமன் தருமனை வாழ்த்தி அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கூறி, “இந்த மந்திரத்தைக் கூறினால் உன் தம்பியர் நால்வருள் யாராவது ஒருவரைப் பிழைக்கச் செய்யலாம்” -என்றான்.

உடனே தருமன் அப்படியே கூறி, சகாதேவனை மட்டும் உயிர் பெறச் செய்தான். அது கண்ட எமன், “ஏன் இவனை மட்டும் உயிர் பெறச் செய்தாய்? மற்ற மூவர் மேலும் உனக்கு அன்பில்லையா?” -என்று கேட்டான்.

“தந்தையே! நாங்கள் நால்வரும் குந்தியின் மக்கள், இவன் மாத்திரியின் மகன். குந்தி வயிற்றில் தோன்றிய முறைக்கு நான் ஒருவனாவது இருக்கின்றேன். மாத்திரி வயிற்றில் தோன்றிய முறைக்கு இவன் இருக்கட்டும் என்றே இவனை எழுப்பினேன்!” என்று தருமன் எமனுக்கு மறுமொழி கூறினான். தருமனுடைய தன்னலமற்ற பெருந்தன்மை எமனை வியப்புக்குள்ளாக்கியது.

“மகனே! உன் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். இதோ உன்னுடைய மற்ற சகோதரர்களையும் உயிர்ப்பித்துத் தருகிறேன். எல்லோரும் நலமாக வாழுங்கள்” என்று கூறி மற்ற மூவரையும் உயிரோடு எழச் செய்தான் எமன். பின் பாண்டவர்களுக்குப் பயன்படும்படியான சில ஆயுதங்களையும், வரங்களையும் மந்திரங்களையும் கூறினான். துரியோதனனுடைய சூழ்ச்சியால் காளமா முனிவர் துர்வேள்வி செய்து பூதத்தை வருவித்து ஏவியதும், பூதம் அவரையே திரும்பிச் சென்று கொன்றதையும் முறையாக அவர்களுக்கு எடுத்துக் கூறினான். பாண்டவர்கள் யாவற்றையும் கேட்டு ஆச்சரியம் கொண்டார்கள்.

“சரி நான் வருகிறேன். நீங்கள் காட்டுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல் அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ள வேண்டும் நீங்கள்“ -என்று கூறி எமன் விடைபெற்றுக் கொண்டு சென்றான். பாண்டவர்கள் நன்றி கூறி வணங்கி விடை கொடுத்தார்கள், எமன் தன் உலகத்திற்குச் சென்றான். செத்துப் பிழைத்த மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த மனத்தோடு பாண்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடிச் சென்றார்கள். அங்கே திரெளபதி நெடுநேரமாக அவர்களைக் காணாமல், “என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ?” -என்று கலங்கிப் பதறிக் கொண்டிருந்தாள். பாண்டவர்களைக் கண்களால் கண்டபோதுதான் அவளுடைய கலக்கமும் திகைப்பும் நீங்கின. பாண்டவர்கள் தமக்கு ஏற்பட்ட பெருந்துன்பங்களையும் நல்வினை வயத்தால் எமன் தங்களை அவற்றிலிருந்து காத்ததையும் திரெளபதிக்குக் கூறிய பின் அஞ்ஞாதவாசத்துக்குரிய ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

(ஆரணிய பருவம் முற்றும்)