உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/3. மாயவன் தூது

விக்கிமூலம் இலிருந்து

3. மாயவன் தூது

சஞ்சய முனிவன் சென்றபின் பாண்டவர்களும் கண்ணனும் தங்கள் நிலை பற்றி ஆராய்ந்தனர். “நம்முடைய எதிரியும் போருக்கு இணங்கி விட்டான். நாமும் போருக்குத் தயாராகி விட்டோம். வீணிற் பல உயிர்களைக் கொன்று போர்க்களம் புகுவதைவிடப் போரின்றியே நமக்குக் கிடைக்க வேண்டிய நாட்டை அடையமுடியுமானால் முயற்சி செய்யலாம்” என்றான் தருமன். திடீர் திடீரென்று முரணிப் பேசும் தருமனின் இயல்பு கண்ணனைக் கோபம் கொள்ளச் செய்தது.

“தருமா! அடிக்கடி திட்டத்தை மாற்றிப் பேசுவதில் பயனில்லை. முடிவாக உங்களுடைய தீர்மானம்தான் என்ன? போர் செய்து நாட்டைப் பெறப்போகிறீர்களா? அல்லது ஒன்றுமே செய்யாமல் மீண்டும் காட்டிற்குப் போகப் போகிறீர்களா?"

“நான் அதற்குச் சொல்ல வரவில்லை சுவாமீ! இரண்டு பக்கமும் சமாதானமாகப் போய்விட்டால் ஓர் உயிருக்கும் சேதமின்றியே நமக்கு நாடு கிடைத்துவிடும். எல்லாம் வல்லவராகிய நீங்கள் என் சார்பில் துரியோதனாதியர்களிடம் தூது சென்று அமைதியாக ஒரு ஏற்பாட்டைச் செய்தால் என்ன? உங்கள் ஒருவரால்தான் அம்மாதிரி ஏற்பாட்டைச் செய்ய முடியும்!”

“ஏன் அப்படிச் சமாதானமாகப் போக வேண்டும்? முறைப்படி உங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை முறை மறந்து கொடுக்க மறுக்கிறான் துரியோதனன். அவனைப் போருக்கு இழுத்துக் கொன்று உங்கள் ஆண்மையை நிலை நாட்டுவது தான் பெருமை.”

“சுவாமீ! உடன் பிறந்தவர்களையும் குருக்களையும் ஞானாசிரியர்களையும், சிற்றப்பன் - பெரியப்பன்மார்களையும் எதிர்த்துக் கொள்ள வேண்டிய போரைச் செய்தால்தான் என்ன பயன்? இப்படிப்பட்ட ஒரு போரைத் துணிந்து செய்ய முற்படுவதைக் காட்டிலும் சஞ்சயன் வந்து சொன்னபடி மீண்டும் காட்டுக்கே போய் விடலாமே!”

“நல்லது தருமா! நீ சொல்லுகிறபடியே காட்டுக்குப் போய்விடும். ஆனால் அன்று பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது உன் தம்பியர்கள் செய்த சபதம் என்ன ஆவது? உலகம் உங்களைப் பற்றி எவ்வளவு கேவலமாகப் பேசும் தெரியுமா?”

“சுவாமீ! என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் என் வேண்டுகோளின்படியே எனக்காக நீங்கள் ஒருமுறை துரியோதனனிடம் தூது சென்று வரவேண்டும். அமைதியாக உரிமையைப் பெற முயல்வோம். எங்கள் நாட்டைத் தருமாறு கேளுங்கள். இயலாவிட்டால் ஐந்து ஊர்களை ஐந்து பேருக்கும் தருமாறு கேளுங்கள். அதுவும் தரமறுத்தால் ஐந்து. வீடுகளையாவது கேளுங்கள், ‘ஒன்றுமே முடியாது’ என்று மறுத்துவிட்டால் இறுதியாகப் போரைச் செய்வோம்” என்று தருமன் கண்ணனிடம் கூறினான். ஏற்கனவே சஞ்சயன் சொற்களால் சினமுற்றிருந்த வீமன் இப்போது இன்னும் ஆத்திரமடைந்தான்.

வீமன் கண்ணனை நோக்கிக் கூறலானான் : “சுவாமீ! எங்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்திலெல்லாம் பெரிய துரதிர்ஷ்டம் எங்கள் அருகிலேயே இருக்கிறது. அதற்கு எங்கள் ‘அண்ணன்’ என்று பெயர். அன்று அந்தத் திவேந்தன் மன்றினிலே படாததெல்லாம் பட்டோம். நெஞ்சும் மனமும் கொதிக்கும் நியாயமற்ற துன்பங்களை மலை மலையாக அனுபவித்தோம். இன்றோ, இந்த மூத்தவரின் சொற்களுக்கு அஞ்சிப் பகை முடிக்கவும் தயங்குகிறோம். நானும் அருச்சுனனும் திரெளபதியும் மனத்திற் சுமந்திருக்கும் ஆயிரமாயிரம் எண்ணக் குமுறல்களை இவர் ஒருவரே அழித்தொழித்துவிடுவார் போலிருக்கிறது.”

வீமன் கூறியதைக் கேட்ட தருமன், “வீமா ! பொறுமையிழந்து பேசாதே. கண்ணிலே தவறிப் போய்க் கைதீண்டிவிடுவது இயல்புதான். அதற்காகக் கண்ணையோ கையையோ அழித்து விடலாமா? உடன் பிறந்தவர்களுக்குள் சண்டை எதற்கு? அமைதியை வேண்டுவோம். இயலாவிட்டால் போரைச் செய்வோம்” என்று அவன் சினத்தை அடக்கினான்.

“அண்ணா ! உன் அறிவுரை போதும். கண்ணனைத் தூதனுப்பும் எண்ணத்தைக் கைவிடும். அவனுக்கு வேண்டாம் அந்தத் துன்பம். என்னைத் தூதனுப்புங்கள். நான் போகிறேன். போய் நாங்கள் அத்தனை பேரும் செய்த சபதங்களை நிறைவேற்றி விட்டு வருகிறேன். எல்லாவற்றையும் முடிக்காமல் திரும்ப மாட்டேன். நான் அங்கிருந்து திரும்பும்போது அத்தினாபுரத்தில் கெளரவர் குலப்பூண்டு எஞ்சியிருக்காது! என்ன சொல்கிறீர்கள் இப்போது? நான் புறப்படட்டுமா?”

“ஆத்திரப்படாதே! குற்றமோ, குறையோ மூத்தவர்கள் பேசுவதை ஒரேயடியாக இழித்துரைக்காதே. பொறுமையாக மேலும் சிந்திப்போம். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இரு” என்று கண்ணன் வீமனைச் சமாதானப்படுத்தினான். வீமன் அமைதியடைந்து உட்கார்ந்தான். அருச்சுனன் கிளம்பிவிட்டான்.

“பொறுத்துப் பொறுத்துக் கண்டதெல்லாம் போதும். இனிப் போரைத் தவிர வேறு வழியில்லை. மானபங்கம் செய்தபோது, ‘கோவிந்தா! கோவிந்தா!’ -என்று உன்னை நோக்கித்தானே திரெளபதி கதறினாள். நீயே இப்படிப் பொறுமைனய உபதேசித்தால் என்ன செய்வது? துரியோதனன் சமாதான வழிக்கு இணங்க ஒரு காலும் சம்மதிக்கமாட்டான். பால் வார்த்தவர்களிடமே நஞ்சைக் கக்கும் பாம்பு போன்றவன் அவன்” -அருச்சுனன் முடித்ததும் நகுலன் முழங்கத் தொடங்கிவிட்டான்.

“ஊரறிய உலகறியப் பாண்டவர்கள் வீரர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் புகழ் மொழிகள் வீணாகப் போக வேண்டுமா? வணங்காமுடி மன்னனாகிய துரியோதனன் நமக்கு நாடு கொடுக்க இணங்க வேண்டுமானால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாம் பிச்சை கேட்கவில்லை. நமக்கு உரியதைக் கேட்கிறோம். தானாக அறியாத மூடன் துரியோதனன். பிறர் அறிவுறுத்துவதனாலா அவனுக்குப் புத்தி வந்து விடப் போகின்றது?”

நகுலனை அடுத்துப் பேசிய சகாதேவன், “எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். எல்லாம் உங்கள் மாயை. உங்கள் அலகிலா விளையாடல்களை யார் அறிவார்? போர் தான் நடக்க வேண்டுமென்பது உங்கள் திரு உளமானால் அது நடந்து தானே தீரும்?” என்று கண்ணனை நோக்கிப் புன்னகையோடு கூறினான். சகாதேவன் கூடமாக மறைத்துப் பேசிய சாமர்த்தியப் பேச்சு கண்ணனைத் திடுக்கிடச் செய்தது. “நம்முடைய அவதார ரகசியத்தையே அல்லவா இந்தச் சின்னப் பயல் கூறிவிட்டான்!” -என்று மனத்தில் வியந்து கொண்டே சகாதேவனைத் தனியாக ஒரு புறம் அழைத்துக் கொண்டு சென்றான் கண்ணன்.

“சகாதேவா! என் அலகிலா விளையாட்டைப் பற்றி நீ அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு மிகவும் நன்றி. பாரதப் போர் நடக்காமலிருக்க வேண்டுமானால் நீ தான் அதற்கு ஒரு வழி சொல்லேன்!” -குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.

“கர்ணனுக்கு அரசாட்சியை அளித்துவிட வேண்டும். அர்ச்சுனனைக் கொன்று திரெளபதியின் கூந்தலை அறுக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு உன்னைப் பிடித்து உன் கை கால்களில் விலங்கு மாட்டிக் கட்டிப் போட வேண்டும், இவ்வளவையும் செய்துவிட்டால் பாரதப் போர் நிகழாமல் தடுக்கலாம்” -என்று ஆவேசத்தோடு பேசினான் சகாதேவன்.

“சரியான யோசனைதான். இவையெல்லாவற்றையும் நீ ஒரு கால் செய்தாலும் செய்வாய். ஆனால் ஒரே ஒரு காரியத்தை மட்டும் உன்னால் கூடச் செய்ய முடியாதே! என்னைக் கட்டுவதற்கு உன்னால் முடியுமா? உனக்கு அகப்படும்படி அவ்வளவு சாமானியமானவனா நான்?” -இப்படிக் கூறிக் கொண்டே சாதாரணத்திற்கும் அப்பாற்பட்ட விசுவரூபத்தில் பல்லாயிரம் வடிவபேதங்களாக விரிந்து தோன்றி அவனை மருளச் செய்தான் கண்ணன். சகாதேவன் வியப்படையாமல் திகைப்படையாமல் சிரித்துக் கொண்டே நின்றான்.

“இப்போது என்னைக் கட்டு பார்க்கலாம்!” -ஆயிரமாயிரம் சிரிப்பு ஒலிகளுக்கு இடையே கம்பீரமும் இறுமாப்பும் கலந்து இழைந்த இந்தக் குரல் கேட்டது. பக்தி என்கின்ற கயிற்றால் தன் மனமாகிய தூணில் எண்ணமென்ற வலுக்கொண்டு கண்ணனை இறுக்கிக் கட்டினான் சகாதேவன். கண்ணன் கட்டுண்டான். எதை மீறினாலும் இந்த ஒரே ஒரு கட்டில் அவன் யாருக்கும் எளிதில் சிக்கித்தானே ஆக வேண்டும்!

“சகாதேவா! உன் சொற்படியே நீ என்னைக் கட்டிவிட்டாய். வெற்றி உனக்குத்தான். இப்போது என்னை விட்டுவிடு."

“முடியாது! விடமாட்டேன். பாரதப் போரில் எங்களுக்கு முழு உதவியும் புரிந்து வெற்றிக்குத் துணை செய்வதாக வாக்களித்தால் தான் விடுவேன்.”

“கட்டாயம் உங்களுக்கு உதவுகிறேன் சகாதேவா! இப்போது என்னை விட்டுவிடு. இங்கு நமக்குள் தனியே நடந்த உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் நீ வேறு எவருக்கும் கூறக் கூடாது.” கண்ணன் வேண்டிக் கொண்டான். சகாதேவன் தன்னுடைய பக்திச் சிறையிலிருந்து கண்ணனை விடுவித்தான். அவர்களிருவரும் தனியிடத்திலிருந்து விலகிச் சென்று மற்றவர்களுடன் கலந்து கொண்டனர். கண்ணன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது போய் வருவதென்று முடிவாயிற்று. இந்த முடிவைக் கேட்ட திரெளபதி கண்ணனுக்கு முன்வந்து கண்ணீர் சிந்தி வருந்தினாள்.

“என்னை மானபங்கப் படுத்திய துரியோதனாதியர்களைப் போர்க்களத்தில் பழிக்குப் பழி வாங்காமல் ஐந்து ஐளர்களையோ, ஐந்து வீடுகளையோ, சமாதானமாகப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் எனது சபதத்தை நான் என்றைக்கு நிறைவேற்றுவது? முடியாமல் கிடக்கிற என் கூந்தலை துரியோதனனின் இரத்தத்தைப் பூசி என்றைக்கு முடிவது? கண்ணா ! நீதான் என் சபதம் வீணாகாமல் நிறைவேறுவதற்கு உதவி புரிய வேண்டும், என்னைக் கைவிட்டு விடாதே!” என்று அவள் கண்ணனை வணங்கி வேண்டிக் கொண்டாள்.

கண்ணன் பலராமன் ஆகியவர்களின் கடைசிச் சகோதரனாகிய சாத்தகி என்பவன் திரெளபதியின் வேண்டுகோளால் மனம் குழைந்து, “என்ன ஆனாலும் சரி துரியோதனாதியர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல நாடு கேட்கக் கூடாது. நாம் ஆண்மையற்றவர்கள் இல்லையே! தூதும் சமாதான முயற்சியும் நமக்குத் தேவை இல்லை. கண்ணன் முன்பே சாரசந்தனுக்குப் பலமுறை தோற்றவன். அவன் முடிவை ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் போரே செய்வோம்” என்று ஆத்திரமாகக் கூறினான்.

“தூதும் சமாதானமும் ஏற்பட்டால் நான் திரும்பி வந்ததும் என் கைகளாலேயே திரெளபதியின் கூந்தலை முடிந்து விடுகிறேன். உங்கள் பகைவர்களின் மனைவிமாரே இனி அமங்கலமாகக் கூந்தலை விரித்துக் கொண்டு கிடக்க நேரிடும். உன் மகன் அபிமன்யு உன் பகைவர்களை அழித்து வேரறுப்பான்! நீ பயப்படாதே...” சாத்தகியின் பேச்சைக் கேட்ட கண்ணன் இவ்வாறு திரெளபதிக்கு ஆறுதல் கூறி அவளைச் சமாதானப்படுத்தலானான்.