உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/2. போர் நெருங்குகிறது!

விக்கிமூலம் இலிருந்து

2. போர் நெருங்குகிறது!

பாண்டவர்கள், கௌரவர்கள். இருசாராருமே இப் போரின் அவசியத்தை உணர்ந்து விட்டனர். தங்கள் தங்கள் பக்கம் படைகளையும் அரசர்களையும் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இருதரப்பினரும் இறங்கினர். துரியோதனனுக்கு உலூகன் வந்து போனதிலிருந்து “போர் உறுதி” என்ற எண்ணம் இதன் தோன்றி விட்டது. தன்னைச் சேர்ந்தவர்களில் வலிமை வாய்ந்தவர்களாகிய வீட்டுமன், விதுரன், கர்ணன் ஆகியவர்கள் ஒருவருக்கொருவர் விருப்பமின்றி இருப்பது முதல் பலவீனமாகப் பட்டது அவனுக்கு. எனவே அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்துப் பலவாறு சமாதான உரைகளைக் கூறினான். அண்டை அயலிலுள்ள சிற்றரசர்களை அழைத்து வரவும் தன் பக்கம் படைத்துணையாகச் சேர்த்துக் கொள்ளவும் தகுதி வாய்ந்த தூதுவர்களை அனுப்பினான். பாண்டவர்கள் பக்கம் யார் சேர்ந்து விட்டாலும் ஒரே ஓர் ஆளை மட்டும் நிச்சயமாகச் சேரவிடக்கூடாதென்பது துரியோதனன் கருத்து. அந்த ஆள் தான் கண்ணன். என்ன தந்திரம் செய்தாவது கண்ணனைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு விட வேண்டும் என்று தானே துவாரகைக்குப் புறப்பட்டான். எல்லாவற்றையும் நிகழ்வதற்கு முன்பே அறிய வல்லவரான கண்ணபிரான் துரியோதனன் புறப்பட்ட உடனே, அவன் தன்னைப் பார்க்கவருவதை உணர்ந்து கொண்டான். “துரியோதனன் என்னைப் பார்க்க வருவான். வந்தால் என்னிடம் அனுமதி கேட்காமலே உள்ளே அனுப்பிவிடுங்கள்” என்று வாயிற் காவலர்களிடம் கூறிவிட்டு உள்ளே போய்த் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருந்தான்.

கண்கள் பொய் உறக்கத்தில் ஆழ்ந்து மூடியிருந்தன. துரியோதனன் வந்தான். காவற்காரர்கள் பேசாமல் அவனை உள்ளே அனுப்பிவிட்டார்கள். உள்ளே சென்ற துரியோதனன் கண்ணன் உறங்குவதை அறிந்து அவன் தலைப்பக்கமாகக் கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டான். எழுந்திருந்ததும் தன் வேண்டுகோளைக் கூறலாம் என்பது அவன் எண்ணம். துரியோதனன் வந்தது, தன் தலைப் பக்கத்தில் உட்கார்ந்தது எல்லாம் அறிந்த கண்ணனின் விழிகள் அருச்சுனன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தினால் தொடர்ந்து மூடியிருந்தன. இங்கு இவ்வாறிருக்க, உலூகனால் கண்ணன் தன்னை அழைத்திருப்பதை அறிந்து கொண்ட அருச்சுனன் உடனே புறப்பட்டுத் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். காவலர்கள் கண்ணன் உள்ளே இருப்பதாகக் கூறி அவனையும் உள்ளே அனுப்பினார்கள். உள்ளே சென்றதும் உறங்கிக் கொண்டிருந்த கண்ணனின் கமலபாதங்களைத் தன் கரங்களால் தொட்டு வணங்கினான். கால்களில் அர்ச்சுனனின் கர ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அப்போது தான் திடுக்கிட்டுக் கண்விழிப்பவனைப் போலக் கண்களைத் திறந்து எழுந்து அர்ச்சுனனை நோக்கினான் கண்ணன். தலைப்புறமிருந்த துரியோதனனை அவன் பார்க்கவே இல்லை.

“எங்களுக்கு நீயும் உன்னுடைய படைகளும் துணையாக வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான் அர்ச்சுனன்.

“அதற்கென்ன அர்ச்சுனா! முன்பே உன் அண்ணனிடம் படை உதவுவதாக ஒப்புக் கொண்டு விட்டேனே” என்றான் கண்ணன். தனக்குப் பின்புறம் தலைப்பக்கமாகத் துரியோதனன் உட்கார்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளாதவன் மாதிரி நடித்தான் கண்ணன். இந்தச் சமயத்தில் அர்ச்சுனன் குறிப்பாக, “அண்ணன் கூட இதோ இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே” என்று பின்புறமாகக் கையைச் சுட்டிக் காட்டினான். ஆச்சரியம் நிறைந்த முகபாவத்தோடு அப்போது தான் தெரிந்து கொள்பவனைப் போலத் துரியோதனனைப் பார்த்து “வா! வா! துரியோதனா! எப்போது வந்தாய்? நீ இங்கு வந்து உட்கார்ந்திருப்பது எனக்குத் தெரியவே தெரியாதே!” என்றான் கண்ணன்.

“அர்ச்சுனனுக்கும் முன்பே நான் வந்து விட்டேன். நீங்கள்தான் என்னைக் கவனிக்கவில்லை !”

“ஒரு நாளும் என்னைத் தேடி வராதவன் வந்திருக்கிறாய், என்ன விசேஷமோ?”

“வேறொன்றுமில்லை. தங்களை எங்கள் பக்கம் படை உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதற்காகத்தான் வந்தேன்.”

“அடாடா! நான் முன்பே தருமனுக்குப் படை உதவி செய்வதாக வாக்குக் கொடுத்து விட்டேனே! இப்போது கூடச் சற்றுமுன் அர்ச்சுனனிடம் நான் கூறிய உறுதிமொழியைத்தான் நீயும் கேட்டிருப்பாயே! இனி நான் என்ன செய்யலாம்? யாராவது ஒருவருக்குத்தானே உதவமுடியும்?"

“சரி? நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஆனாலும் நான் கேட்கும் மற்றோர் வேண்டுகோளையாவது நீங்கள் மறுக்காமல் நிறைவேற்ற வேண்டும்.”

“அது என்ன வேண்டுகோள்?”

“எங்களுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழ இருக்கும் போரில் நீங்கள் ஆயுதம் எடுத்துப் போர் புரியக் கூடாது. வேறு எந்த வகையிலும் பாண்டவர்களுக்கு உதவிக் கொள்ளலாம்.”

“சரி! துரியோதனா! உன் விருப்பப்படியே ஆயுதம் எடுத்துப் போர் புரியாமலே பாண்டவர்களுக்கு உதவுகின்றேன். இன்னொரு விஷயம், நான் ஒருவன்தான் உன் பக்கம் சேர்வதற்கில்லை. என்னைச் சேர்ந்த யாதவர்களையும் பலராமனையும் விரும்பினால் நீ உன் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தடையில்லை.”

“அப்படியானால் நான் இப்போதே பலராமனைப் போய்ப் பார்க்கலாமா?”

“ஓ! கட்டாயம் போய்ப் பார். அவன் உனக்கு உதவியாக வர இணங்குவது உறுதி.”

“நான் போய் வருகிறேன்” -துரியோதனன் விடை பெற்றுக்கொண்டு சென்றான். கண்ணனும் அர்ச்சுனனும் தனிமையில் விடப்பட்டனர்.

“அர்ச்சுனா!”

“என்ன சுவாமி?”

“கேட்டாயா துரியோதனன் வேண்டுகோளை? நான் ஆயுதம் எடுக்காமல் உங்களுக்கு உதவி புரிய வேண்டுமாமே! எப்படி அப்பா ஆயுதமின்றி உதவுவது?”

“உதவ முடியும் சுவாமீ! என் தேரைச் செலுத்துங்கள்! அது போதும். நீங்கள் ஆயுதமே எடுக்க வேண்டாம்.” கண்ணன் அவ்வாறே தேர் செலுத்துவதாக ஒப்புக் கொண்டு அர்ச்சுனனையும் அழைத்துக் கொண்டு தருமனைக் காண அவனிருந்த இடத்திற்குச் சென்றான். பலராமனிடம் சென்ற துரியோதனன், “தாங்களும் தங்களைச் சேர்ந்தவர்களும் போரில் என் பக்கம் உதவி புரிய வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டபின் தன் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றான். துவாரகையிலிருந்து, ‘கண்ணனைத் தன் பக்கம் வசப்படுத்த முடியாது போயிற்றே’ என்ற ஏமாற்றத்தோடு புறப்பட்டிருந்த துரியோதனன் அத்தினாபுரியை அடைந்ததும் தந்தையைச் சந்தித்தான். நடந்ததைக் கூறினான். கண்ணில்லாதவனாகிய திருதராட்டிரன் தன் மக்களையும், சகுனி, கர்ணன் முதலியவர்களையும் ஒன்று கூட்டி ஒரு பெரிய சதியாலோசனைக்குத் திட்டமிட்டான். போரின்றியே பாண்டவர்களை மீண்டும் படுகுழியில் வீழ்த்துகின்ற திட்டம் அது. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஞானாசிரியனான ‘சஞ்சயன்’ என்ற முனிவன் அப்போது அத்தினாபுரத்தில் இருந்தான். நிலையாமையைப் போதித்து, ஆசைகளை உடனே கைவிடும் வண்ணம் உபதேசம் செய்வதில் அவன் வல்லவன். அவனுடைய உபதேசங்களைக் கேட்ட எவரும் உடனே அவற்றின்படி செய்யாமலிரார். அவ்வளவு சக்தி அவன் சொற்களுக்கு உண்டு. இந்த முனிவனைப் பாண்டவர்களிடம் அனுப்பிப் ‘போர் செய்து நாட்டை மீட்டு ஆள வேண்டும்’ என்ற அவர்கள் ஆசையை போக்கிவிட ஏற்பாடு செய்தான் திருதராட்டிரன். விருப்பு வெறுப்புற்றவனாகிய சஞ்சய முனிவன் முதலில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்வதற்குத் தயங்கினான். பின்பு திருதராட்டிரனின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் பாண்டவர்கள் மனத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டு சென்றான். ஒரு காலத்தில் தங்களுக்குக் குலகுருவாகவும் ஞானாசிரியனாகவும் இருந்த முனிவன் தங்களைத் தேடிவரவே அவனை மரியாதையோடு வரவேற்றுப் போற்றினார்கள் பாண்டவர்கள்:

“இத்துணை ஆண்டுகளுக்குப் பின் எங்களைத் தேடி வரத் தூண்டிய கருணை யாதோ?” தருமன் கேட்டான்.

“வேறொன்றுமில்லை தருமா! உங்கள் மேலுள்ள அன்பால் உங்களுக்குச் சில நற்செய்திகளை உபதேசம் செய்துவிட்டுப் போக வந்தேன். கெளரவர்களிடமிருந்து உங்கள் நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றி மீண்டும் ஆளவேண்டும் என்ற ஆசை உங்களுக்குத் தோன்றியிருத்தலை அறிகிறேன். அப்பா தருமா! ஆசையின் விளைவு பாவம். பாவத்தின் விளைவு நரகம். நாடாளும் ஆசையால் உங்களுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஒற்றுமை குலைந்து போர்தான் மலியும். இந்தப் பாழும் ஆசையைக் கைவிட்டு விட்டு மறுபடியும் காட்டுக்குப் போய்த் தவம் செய்து மோட்ச மார்க்கத்தை அடையுங்கள். என் உபதேசத்தை நீங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். அதுதான் நல்லது.” முனிவன் கெளரவர்களின் சூழ்ச்சியால் உருவாகி வந்திருக்கிறான் என்பதை தருமன் புரிந்து கொண்டான்.

“முனிவரே! பழியை அழித்துப் புகழை நிலை நாட்டுவது தான் தவம். அரசாளுவது எங்கள் குலதருமம், அதை இன்னொருவனிடம் பறி கொடுத்துவிட்டோம். இன்று மீட்கத் துடிக்கின்றோம். இது முறையான ஆசை தான். இதை நிறைவேற்ற நாங்கள் தயங்கப் போவதில்லை. உங்கள் மொழிகளை மீறுவதற்காக மன்னியுங்கள்...” என்றான் தருமன். தருமனைவிட வீமன் அதிகமாகச் சினம் கொண்டு விட்டான்.

“ஏ! முனிவனே, நீ வெறுப்பும் விருப்புமின்றி உபதேசிக்க வேண்டிய ஞானாசிரியன். கேவலம், கெளரவர்களின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டு எங்களை மீண்டும் காட்டிற்குத் துரத்த வந்திருக்கிறாயே? போருக்கு தயாராக இருப்பதாக நேற்று உலூகனிடம் கூறியனுப்பிய கௌரவர்கள் அதற்குள் ஏன் இத்தகைய சூழ்ச்சிகளிலே ஈடுபட்டிருக்கிறார்கள்? திருதராட்டிரனுக்கு இந்த ஓரவஞ்சகம் அடுக்குமா? நீ தவம்தானே செய்யவேண்டுமென்கிறாய்? போர்க் களத்தில் இந்தக் கதாயுகத்தைக் கொண்டு பகைவர்களைப் புடைத்து இரத்த வெள்ளத்தில் மிதக்கும் தலைகளுக்கு நடுவே தவம் செய்கிறோம். துரியோதனாதியர்களின் உயிரைக் களவேள்வியில் பலியிடுகிறோம். இன்னும் லட்சோபலட்சம் உயிர்களைக் கொன்று குவிக்கின்றோம்.” இவ்வாறு வீமன் வெறி பிடித்தவன் போலத் தொடர்ந்து பேசினான்.

அருகிலிருந்த கண்ணனும் -தருமனும் அவனைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு, “போர் செய்வதைத் தவிர வேறெதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று முடிவாகக் கூறி சஞ்சய் முனிவனுக்கு விடை கொடுத்து அனுப்பினர். சஞ்சயனும் அவன் உபதேசமும் தோல்வியடைந்து திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பச் சென்ற சஞ்சயன் திருதராட்டிர மன்னனிடம் போய்ப் பாண்டவர்கள் கூறிய பதிலைச் சொன்னான். திருதராட்டிரன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். போரின்றியே பாண்டவர்களை வெல்லக் கண்டவழி தோற்றுவிட்டது அல்லவா?