மகாபாரதம்-அறத்தின் குரல்/4. ‘வியூகத்தின் நடுவே’
சக்கர வியூகத்தின் இரண்டாவது ஆரத்தில் அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்னன் செய்த போரில் சீக்கிரமே அசுவத்தாமன் கை ஓய்ந்துவிட்டது. மேலும் மேலும் வளர்கின்ற தன்னம்பிக்கையோடு வியூகத்தின் மூன்றாவது ஆரத்தின் மேல் அபிமன்னன் சென்றபோது கர்ணன் அவனை எதிர்த்தான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. “அபிமன்னன் சிறுவன் தானே? சீக்கிரமாகவே தோற்று ஓடிவிடுவான்!” என்றெண்ணிக் கர்ணன் அலட்சியமாகவே போரிட்டான். அபிமன்னனோ கர்ணனைக் கடுமையாக எதிர்த்தான். கர்ணன் அலட்சியம்மாகப் போர் செய்யவே அவனை வெல்வது மிகச் சுலபமாக இருந்தது. கால் நாழிகைப் போரிற்குள் அபிமன்னன் கர்ணனைத் தோற்கச் செய்து விட்டான். அடுத்தபடியாக அபிமன்னனை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றவர்கள் கிருதவன்மனும், கிருபாச்சாரியனும் ஆவர். அபிமன்னன் ஒருவன், அவர்கள் இருவர். இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர். முதலில் அதைச் சமாளிக்க முடியாது திணறிய அபிமன்னன், பின்பு மனத்தை உறுதி செய்து கொண்டு தானும் அவர்களைத் திணறச் செய்தான். கிருதவன்மனும் கிருபாச்சாரியனும் அபிமன்ன னுக்கு எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினார்கள். அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது சொந்தப் புதல்வனும் அடங்கிய படை ஒன்று அபிமன்னனை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தது. எடுத்த எடுப்பிலேயே அபிமன்னன் செலுத்திய கூரிய அம்பு சகுனியின் புதல்வனை விண்ணுலகுக்கு அனுப்பியது. சகுனியோடு வந்தவர்களுக்கு இந்த சாவு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அபாயகரமான தோல்விக்கு முன்னறிவிப்புப் போலவும் தோன்றியது. சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சகுனியும் பின்வாங்கினான். அபிமன்னனோ விடாமல் துரத்தலானான். படையில் துரியோதனனின் இளைய சகோதரர்களாகிய விகர்ணன் முதலியவர்களும் இருந்தனர். அபிமன்னனின் முன் வில்லேந்தி நிற்பதற்காக அஞ்சினர் அவர்கள். இவ்வாறு கெளரவர்களின் சக்கரவியூகத்தை அபிமன்னன் தனது போர்த்திறமையினால் ஆரம் ஆரமாகக் கலைத்துக் கொண்டிருந்தபோது பெரியப்பனான வீமனும் அவனுக்கு உதவுவதற்கு வந்து சேர்ந்தான். வியூகம் வேகமாக உடையலாயிற்று. அபிமன்னன் மேல் ஏற்பட்ட பரிவினால்தான் வீமன் உதவிக்கு வந்திருந்தான். தனியாக அபிமன்னன் திண்டாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “இது யாருடைய ஏற்பாடு? இளைஞனாகிய அபிமன்னனைத் தனியே எதிரிகள் படை நடுவே அனுப்பலாமா? அதனால் அவனுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ?” -என்று வீமன் கடிந்து கொண்டான்.
அவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தருமர் உடனே பதறிப் போய், “அப்படியானால் நீயே அவனுக்குத் துணையாகச் சென்று உதவும்” -என்று கூறியதனால் தான் வீமன் அபிமன்னனுக்கு உதவ வந்திருந்தான். வீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பல நாட்டு மன்னர்கள் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. வீமன் வேகமாக முன்னேறினான். வீமனும் அபிமன்னனோடு ஒன்று சேர்ந்து விட்டால் அந்தச் சக்கரவியூகம் மிக விரைவில் அழிந்து விடும். வியூகத்தை உடைத்துக் கொண்டு வீமன் விரைவாக வருவதைப் போர்களத்தின் மூலையிலிருந்து துரியோதனன் பார்த்து விட்டான். அவன் மனத்தில் தாங்க முடியாத திகைப்பு ஏற்பட்டது. அவன் சிந்தனை மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வீமன் அபிமன்னனை நெருங்குவதற்குள் அவனை இடையே தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்று நினைத்தான் துரியோதனன். உடனே சகுனி, விகர்ணன், அசுவத்தாமன் ஆகிய மூவரையும் அருகில் அழைத்தான். “நீங்கள் உடனே படைகளோடு விரைந்து சென்று வீமனை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். வீமன் அபிமன்னனோடு ஒன்று சேரக் கூடாது. இருவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நம்முடைய வியூகம் சீக்கிரமே அழிந்து விடும்’ என்று கட்டளை யிட்டான். துரியோதனனுடைய கட்டளையின்படியே அவர்கள் வீமனை எதிர்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின்பும் தன் தம்பிமார்கள், வேறு பல அரசர்கள் எல்லோரையும் வீமன் மேல் ஏவிவிட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். பஞ்சுச் சுருள்களை மேலும் மேலும் தன்னகத்தே வாங்கிப் பஸ்பமாக்கும் நெருப்பைப் போல வீமன் தன்னை எதிர்த்து வந்தவர்களை எல்லாம் சமாளித்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் வீமனால் அபிமன்னனை நெருங்கி அவனோடு சேர்ந்து கொள்ள முடியவில்லை. வியூகத்தின் உட்புறத்தில் அபிமன்னனும், வெளிப்புறத்தில் வீமனுமாக மாட்டிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றி அணி அணியாக நிற்கும் படைகளை அழித்தால்தான் அபிமன்னன் வியூகத்தின் வெளியே வரமுடியும். துரியோதனன் தன் மேல் ஏவி விட்டிருக்கும் மன்னர்களையும் வீரர்களையும் முற்றிலும் தோற்றோடச் செய்தால்தான் வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனுக்குப் பக்கமாக நிற்க முடியும். மலைமலையாக வீரர்கள் எதிர்த்து வந்தாலும் வீமன் கலங்காமல் அவர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த துரியோதனன் மீண்டும் தனக்குள் பயந்து விட்டான். “ஒரு வேளை வீமன் வியூகத்திற்குள் நுழைந்து அபிமன்னனோடு சேர்ந்து கொண்டு விடுவானோ?” என்ற எண்ணமே துரியோதனனது பயத்திற்குக் காரணம். இவ்வாறு பயம் தோன்றியவுடனேயே அவன் தன்னுடைய அடுத்த சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்குத் தயாராகி விட்டான். வீரத்தால் எதிரியை வெல்வதற்குத் தெரிந்தவன் வீரத்தைக் கொண்டு வெல்ல முடியும். வீரமில்லாதவன் என்ன செய்வது? சூழ்ச்சியால் தானே தன் எண்ணத்தை ஆக்கிக் கொள்ள முடியும்? துரியோதனன் தன் சூழ்ச்சியைச் சிந்து தேசத்து மன்னனாகிய சயத்திரதன் என்பவனோடு கலந்தாலோசித் தான். “சயத்திரதா! வீமன் அபிமன்னனோடு சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் படைகளை ஏவினேன். ஆனால் படைகளால் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இப்பொழுது வேறோரு தந்திரம் செய்தாக வேண்டும். அந்தத் தந்திரத்தைச் செய்வதற்கு உன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இல்லை. வீமன் சிவபக்தி மிக்கவன். சிவபெருமானுக்கும் அவன் அணிந்து கொண்டு கழித்த பொருளுக்கும் பெருமதிப்புச் செலுத்துபவன். ஆகவே நீ ஒரு பெரிய கொன்றை மலர் மாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து கழற்றி வந்து வீமனின் தேருக்கு முன்னால் குறுக்கே போட்டுவிடு. நீ சிவபெருமானிடம் பக்தி மிக்கவனென்று வீமன் எண்ணிக் கொண்டிருப்பான். ஆகையால் மாலையைக் கண்டு பயபக்தியோடு வணங்கித் தேரை மேலே செலுத்தாமல் அப்படியே நிறுத்தி விடுவான் வீமன். அபிமன்னனோ வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். கொன்றை மாலையை நடுவில் எறிந்து வீமனைத் தடுத்து நிறுத்திய பிறகு, நீயே இன்னும் ஒரு காரியமும் செய்ய வேண்டும். சிவபெருமான் அருளால் நீ பெற்றிருக்கும் கதாயுதத்தால் அபிமன்னனுடைய தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றுவிட வேண்டும். இந்த இரண்டு செயல்களும் இன்று உன் உதவியால் இங்கே நிறைவேற வேண்டும்.” துரியோதனன் வேண்டுகோளுக்குச் சாத்திரதன் இணங்கினான்.
எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானை நினைத்தான். தியானமும் வழிபாடும் செய்து கொன்றை மாலையை வரவழைத்தான். பின்பு அம்மாலையை வீமன் அபிமன்னன் இருவருடைய தேர்களுக்கும் நடுவே குறுக்காகக் கிடக்குமாறு போட்டு விட்டான். சூழ்ச்சியின் முதல்படி நிறைவேறி விட்டது. வியூகத்தின் உட்புறம் இருந்தவர்களை அநேகமாக வென்று முடித்திருந்தான் அபிமன்னன். இனியும் வியூகத்தில் நிற்க வேண்டாம் என்று வெளியே வருவதற்காகத் திரும்பினான். திரும்பிய போது தேர் செல்ல வேண்டிய பாதை மேல் கொன்றைமாலை விழுந்து கிடப்பதைக் கண்டு தயங்கினான். “சிவபெருமானுக்கு விருப்பமான அழகிய கொன்றை மலர் மாலை வழிமேல் வீழ்ந்து கிடக்கிறது. அதை மிதித்துக் கொண்டு தேரைச் செலுத்தலாமோ? அங்ஙனம் செய்வது எம்பெருமானையே அலட்சியம் செய்தது போல் அல்லவா ஆகும்?” என்றெண்ணியே அபிமன்னன் வியூகத்திலிருந்து வெளியேறும் கருத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்யலானான். ஏறக்குறைய இதே சமயத்தில் வீமன் தன்னை வழிமறித்த எதிரிகளை விரட்டிவிட்டுத் தன் தேரை அபிமன்னன் பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலை அவன் கண்களில் தென்பட்டது. உடனே தீயை மிதித்தவன் போல் திடுக்கிட்டுப் போய்த் தேரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்ற உறுதி அவன் மனத்தில் ஏற்பட்டது. ‘வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்? எதற்காகப் போட்டிருக்கக்கூடும்? என்று தனக்குள் சிந்தித்த வீமன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டான். தான் அபிமன்னனை நெருங்க விடாமலும் அபிமன்னன் வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சியே அந்தக் கொன்றைமாலையின் உருவத்தில் அங்கே கிடக்கிறது என்பதை விளங்கிக் கொண்டான். ‘வீமன், அபிமன்னன், இருவருமே கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடங்களுக்கே திரும்பி விட்டதைக் கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்ததென்று களிப்டைந்தான். துரியோதனனுடைய களிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. வெளிப்புறம் திரும்பிய வீமனும் உட்புறம் திரும்பிய அபிமன்னனும் தங்களுடைய ஆத்திரம் முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவதற்குத் தொடங்கினர். கர்ணன் அபிமன்னனை எதிர்க்க முன் வந்தான். வந்த வேகத்திலேயே அவன் வில்லை முறித்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். இதைக் கண்ட மாத்திரத்திலேயே கர்ணனுடன் வந்தவர்கள் பயந்து ஓடிவிட்டனர். துரோணரும் அவர் புதல்வன் அசுவத்தாமனும் அடுத்து அவனை எதிர்த்தனர். ஆத்திரத்திலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் செயல் செய்யும் சக்தி பெருகுவது இயல்பு. கர்ணனை விடப் படுதோல்வியடைந்து ஓடினார்கள் துரோணரும் அவர் மகனும். இறுதியாகத் துன்முகன் என்ற பெருவீரன் வந்து எதிர்த்தான். அவனையும் ஓட ஓட விரட்டியபின் எதிர்ப்பதற்கு ஆள் இன்றித் தனியே நின்றான் அபிமன்னன். இவற்றையெல்லாம் கண்ட துரியோதனனுக்கு அங்கேயே அப்பொழுதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. “கேவலம் ஒரு சிறு பிள்ளை! பேரரசனாகிய தன்னையும் தன் படைகளையும் எவ்வளவு அலட்சியமாகத் தோற்று ஓடச் செய்கிறான்?” என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான். உடனே ஏமாற்றத்தாலும் தோல்வியாலும் உண்டான குரோதம் அவனுடைய மனத்தில் குமுறிற்று. “இளைஞனாகிய இவனை இளைஞர்களைக் கொண்டே தோற்கச் செய்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டு தன் மகன் இலக்கண குமாரனைக் கூப்பிட்டு அனுப்பினான். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பதினாயிரம் இளவரசர்களை ஒன்று சேர்த்தான். அந்தப் பதினாயிரம் இளவரசர்களுக்குத் தன் மகன் இலக்கண குமாரனை தலைவனாக நியமித்து அபிமன்னனை எதிர்ப்பதற்காக வியூகத்திற்குள் அனுப்பினான். பல எலிகள் ஒன்று சேர்ந்து தங்கள் அறியாமையால் பூனையை எதிர்க்க முற்பட்டது போல் அரசகுமாரர்களின் கூட்டம் அபிமன்னனை வளைத்துக் கொண்டது. அபிமன்னன் புயல் வேகத்தில் கணைகளை அவர்கள் மேல் தூவினான். ஒரு வகையிலும் வலிமையில்லாத அந்த அரச குமாரர்கள் சிறிது நேரத்திலேயே தளர்ந்து புறமுதுகிட்டு ஓடி வந்து விட்டனர். துரியோதனனுக்கு மகனாகவும் இளவரசர்களுக்கு தலைவனாகவும் இருந்த இலக்கண குமாரன் அபிமன்னனுடைய அம்பு பட்டுக் களத்திலேயே இறந்து வீழ்ந்தான். மகனை இழந்த துயரமும் மானக்கேடுமாகப் பெரிதும் வாட்டமடைந்த துரியோதனன் தன் கட்சியைச் சேர்ந்த அரசர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டித் தன் இதய வேதனையை அவர்களுக்குத் திறந்து காட்டினான்.
“என்னை அன்போடு ஆதரித்து உதவ முன் வந்திருக்கும் பேரரசர்களே!நீங்களெல்லோரும் அருகில் இருக்கும் போது எனக்கு இத்தகைய மானக்கேடு நேரலாமா? வயதில் மிக இளைஞனாகிய இந்த அபிமன்னன் என் அன்பிற்குரிய மகனைக் கொன்றதுமல்லாமல் பதினாயிரம் இளவரசர்களைத் தோல்வியடையச் செய்து விட்டான். இன்று போர் முடிவதற்குள் எப்படியாவது இந்த அபிமன்னனைக் கொன்று தொலைக்காவிட்டால் இந்த அரசாட்சி, பதவி, பெருமை எல்லாவற்றையும் கைவிட்டு நான் சந்நியாசியாகப் போக வேண்டியதுதான்” -என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்களிடம் முறையிட்டான். கேட்டுக் கொண்டிருந்த அரசர்கள் உண்மையாகவே அவனுடைய முறையீட்டில் மனம் நெகிழ்ந்து விட்டனர்.
“அரசர்க்கரசே! தாங்கள் இச்சிறுவனால் விளைந்த தோல்விகளுக்காக மனம் வருந்த வேண்டாம். இன்று போர் முடிவதற்குள் இந்த அபிமன்னனைக் கொன்று தீர்க்கவில்லையென்றால் எங்கள் கைகளில் இருப்பது வில் அல்ல. வெறும் மரமே! இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால் நாளை இவ்வில்லைக் கையால் தொட்டுப் போர் புரிய மாட்டோம். இது உறுதி. இந்தக் கணமே தாங்கள் கவலையை விட்டொழிக்கலாம்” -என்று எல்லா அரசர்களும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி கூறினார்கள். முன்பு தோற்று ஓடிப் போன துரோணன், அசுவத்தாமன், முதலியவர்களும் மற்றும் பல பெரிய அரசர்களும் ஒன்று சேர்ந்து அபிமன்னனைச் சுற்றி ஆயுதங்களோடு வளைத்துக் கொண்டார்கள். இந்தப் பெரும் படையையும், இதன் குமுறலையும் கண்டுகூட அபிமன்னன் மனம் கலங்கிவிடவில்லை. சற்றும் தளராமல் இவர்களை எதிர்த்து வில்லை வளைத்தான். அம்புகளைத் தூவினான். அவனுடைய அம்புகளால் மாண்டவர் பலர். மாளாமல் காயமுற்று வீழ்ந்தவரும் பலர் . துரியோதனனின் இளைய சகோதரனாகிய துச்சாதனனும் மாமனான சகுனியும், களத்தை விட்டு ஓடியே போய் விட்டார்கள். வேறு சிலருக்குத் தேர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டது. வில்லொடியும் நிலை ஏற்பட்டதனால் வெறுங்கையோடு நின்றவர் சிலர். சிரங்களை இழந்து வெறும் முண்டங்களாய்த் தரையிலே வீழ்ந்தவர் சிலர். கை கால்கள் அறுபட்டு வீழ்ந்தவர் சிலர். நெஞ்சிலே வலிமையும் உடம்பிலே துணிவும் இன்றித் தாமாகவே ஓடிப் போனவர்கள் சிலர். இதைக் கண்டு ஏற்கனவே பெரிதும் சலனமடைந்திருந்த துரியோதனன் மிகுந்த கலக்கமடைந்தான்.
கர்ணனை அழைத்து, “கர்ணா! இந்த இக்கட்டான நிலைமையை இப்படியே மேலும் வளர விட்டுவிட்டால் அதனால் துன்பமடைகிறவர்கள் நாம் தான். இந்த அபிமன்னனோடு வீமனும் அர்ச்சுனனும் வேறு சேர்ந்து கொண்டால் நாம் தோற்றுப் போவதும் நமது சக்கர வியூகம் அழிவதும் உறுதி. ஆகையால் நீ அபிமன்னனை நேருக்கு நேர் எதிர்த்துப் போர் செய்” என்று கட்டளையிட்டான். உடனே கர்ணன் அபிமன்னனோடு நெருங்கி நின்று போர் செய்யப் புறப்பட்டான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் போர் தொடங்கிற்று. தொடக்கத்தில் இரண்டு மூன்று முறை அபிமன்னனுடைய விற்போரைச் சமாளிக்க முடியாமல் தோற்றோடினான் கர்ணன். மூன்று முறை தோற்றவன் நான்காவது முறையாக அபிமன்னனை எதிர்த்து வந்தபோது அடக்கமுடியாத கோபத்தோடு வந்திருந்தான். இந்த முறை விதியும் கர்ணன் பக்கம் துணை செய்துவிட்டது, கர்ணன் எய்த முதல் அம்பு அபிமன்னனுடைய வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. பின் தொடர்ந்து தேர், தேரின் குதிரைகள் என்று கர்ணன் ஒவ்வொன்றாக அழித் தொழித்தான். அபிமன்னன் திடுக்கிட்டான்! எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு வாள் மட்டும் அவன் கையில் எஞ்சியிருந்தது. அதை உருவிக் கொண்டு தரையில் குதித்தான் அவன். அபிமன்னனுடைய வலது கையில் உருவிய வாளும் இடது கையில் கேடயமும் இருந்தன. சுற்றிச் சுழன்று நின்றவர்களை நோக்கிக் கத்தியைச் சக்ராகாரமாக வீசினான். எதிரிகள் படைக்குத் தலைமை தாங்கி முன்பு தோற்றோடிப் போன பல அரசர்கள் இப்போது மீண்டும் ஓடிவந்து அபிமன்னனை எதிர்த்தனர். தன்னுடைய நிராதரவான நிலையை எண்ணிச் சிறிதேனும் கலங்காத அபிமன்னன் வாளை இடைவிடாமல் சுழற்றிக் கொண்டிருந்தான். துரோணருடைய வில் அவனை நோக்கி அம்புமாரி பொழிந்தது. வாட்போர் செய்கிறவன் மேல் அம்புகளைச் செலுத்தக்கூடாதென்பது போர் முறை. ஆனால் எப்படியாவது அபிமன்னனைக் கொன்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மேல் அம்புகளைத் தூவினார் துரோணர் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்னனின் வலது கையைத் துண்டித்து விட்டார். துரோணரின் இந்தக் கொடுஞ் செயலால் வாளேந்திய அபிமன்னனின் கை அறுந்து குருதி சோரக் கீழே விழுந்தது. அபிமன்னனின் முடமான வலது கை துடிதுடித்தது. இடது கையால் சக்ராயுதம் ஒன்றை எடுத்து வேகமாகச் சுழற்றினான் அவன். அப்போது அவனை எதிர்த்த பலர் தலைகளை இழக்க நேரிட்டது. அபிமன்னன் சக்ராயுதத்தால் பலரைக் கொல்வதைக் கண்டு மனம் கொதித்தான் துரியோதனன். தாங்களும் தங்கள் படைகளும் பிழைக்க வேண்டுமானால் அபிமன்னனைக் கொன்றாலொழிய வேறு வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கதாயுதத்தால் அபிமன்னனை அடித்துக் கொன்றுவிடுமாறு சயத்திரதனுக்குக் கட்டளை இட்டான் துரியோதனன். சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற அரிய கதாயுதம் ஒன்று சத்திரதனிடம் இருந்தது. அதை ஓங்கிக் கொண்டு அபிமன்னன் மேல் பாய்ந்தான் அவன். உடனே அபிமன்னனும் பக்கத்திலிருந்த வேறோர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சயத்திரதனை எதிர்த்தான். இருவர் கதாயுதங்களும் மோதின. எனினும் இடது கையால் கதாயுதம் பிடித்து எவ்வளவு நேரம்தான் போரிட முடியும்? அபிமன்னன் கைசோர்ந்து கதாயுதத்தைக் கீழே போட்டபோது சத்திரதனுடைய வலிமை வாய்ந்த கதாயுதம் அவன் தலையை நோக்கிப் பாய்ந்தது. அடுத்த விநாடி அபிமன்னன் பொறிகள் நிலைகலங்கிக் கீழே தரையில் சாய்ந்தான்.