மகாபாரதம்-அறத்தின் குரல்/3. போரின் போக்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நெருங்குவதற்கு முன்பே அவன் அம்பு ஒன்று அதைத் தடுத்து நிறுத்திக் கீழே தள்ளியது. பகதத்தனுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம்! எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று குமுறியது உள்ளம். பல்லாண்டுகளாகத் திருமாலை நோக்கித் தவம் செய்து பெற்ற வேல் ஒன்று அவனிடம் இருந்தது. அந்த வேலை எறிந்தால் அது அர்ச்சுனனை அழிப்பது உறுதி. பகதத்தன் திருமால் தனக்கு அளித்த அந்தக் கூரிய வேலாயுதத்தை எடுத்து அர்ச்சுனனை நோக்கி வீசினான், பாவம்! அதைத் தனக்கு அளித்தவராகிய திருமாலே எதிர்ப்புறம் கண்ணன் என்ற பெயரில் மறைந்து தேரோட்டிக் கொண்டிருப்பதைப் பகதத்தன் அறிய மாட்டான். ஒரே ஒரு விநாடி அர்ச்சுனனுடைய தேர்த்தட்டில் கண்ணனுடைய உருவம் மறைந்தது. சங்கு சக்ரதாரியாக மகாவிஷ்ணு தோன்றினார். அவருடைய கைகள் வேகமாக எதையோ ஏந்தித் தாங்கும் பாவனையில் முன்புறம் நீண்டன. பகதத்தன் ஏவிய வேல் அர்ச்சுனனை அடையவில்லை, திருமாலின் நீட்டிய கைகளில் போய் விழுந்தது. என்ன ஆச்சரியம்! அவருடைய கையில் விழுந்தவுடன் அந்த வேல் ஓர் அழகிய மணி மாலையாக மாறியது. அதை அவர் தம் மார்பில் அணிந்து கொண்டார். அடுத்த விநாடி கண்ணனுடைய உருவமே மீண்டும் தோன்றியது. பகதத்தனுக்கு இங்கு நடைபெற்ற இந்த மாயம் ஒன்றுமே புரியவில்லை.

“தான் ஏவிய வேல் அர்ச்சுனனை ஒன்றும் செய்ய வில்லை” என்பது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. அவன் திகைத்துப் போய் வெறுங்கையோடு அர்ச்சுனனைப் பார்த்தவாறே நின்றான். “அர்ச்சுனா! இவனைத் தொலைப்பதற்கு இதுதான் சரியான சமயம்! குறி வைத்து இவன் மார்பில் ஓர் அக்கினிக் கணையைச் செலுத்து...” என்று கண்ணன் அர்ச்சுனனின் காதருகில் இரகசியமாகக் கூறினான். உடனே அர்ச்சுனன் மனம், மொழி, மெய்களால் கண்ணனைத் தியானம் செய்து கொண்டே ஓர் அக்கினி அஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துப் பகதத்தன் மேல் தொடுத்தான். அந்த அஸ்திரம் பகதத்தன் மேல் பட்டதோ, இல்லையோ அவன் உடல் குபீரென்று தீப்பற்றி எரிந்தது. மறுகணம் அவன் நின்ற இடத்தில் திட்டுத் திட்டாகச் சாம்பல் குவிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவன் ஏறிப் போர் செய்த யானையும் கீழே விழுந்து மாண்டு போயிற்று. பாண்டவர்கள் படை வெற்றி முழக்கம் செய்தது. பகதத்தனின் மரணம் துரியோதனனுக்குப் பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணிற்று. சகுனியின் தலைமையில் காந்தார மன்னர்களையும் அவர்களைச் சேர்ந்த சைனியங்களையும் திரட்டி அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு அனுப்பினான் துரியோதனன். கடல் பொங்கி வருவது போலக் காந்தாரப் படை சகுனியைத் தலைவனாகக் கொண்டு அர்ச்சுனனை நோக்கித் திரண்டு ஓடி வந்தது. அர்ச்சுனனும் சும்மா விடவில்லை. அஞ்சாமல் வில்லை நாணேற்றி அம்புகளைத் தொடுத்தான். வந்ததும் வராததுமாக சகுனியின் புதல்வர்களாகிய விடசயன், சயன் என்ற இரு அரசகுமாரர்கள் அர்ச்சுனன் அம்புகளுக்கு இலக்காகி இறந்தனர். சகுனியோடு வந்த காந்தார நாட்டு மன்னர்கள் பலருக்கு எடுத்த எடுப்பில் இதுவே ஒரு பெரிய அபசகுனமாகப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமலே சகுனிக்குத் தெரியாமல் மெல்லக் களத்திலிருந்து நழுவிவிட்டார்கள் அவர்கள். சகுனியின் ஆத்திரம் தருமன் மேல் சென்றது. தன்னருகில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு தருமன் மேலே பாய்ந்தான். தருமன் அம்புகளால் சகுனியை வரவேற்றான். ‘சூழ்ச்சியே தோற்றுவிட்டது. இனிமேல் வெறும் மனிதர்கள் தோற்க எவ்வளவு நாழிகை ஆகும்?’ என்று எண்ணிக்கொண்டே போரிட்டான் தருமன்.

3. போரின் போக்கு

போர்க்களத்தை விட்டு ஓடினவர்கள் தவிர மீதமிருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சகுனி தருமனை நோக்கித் தாக்க  வந்த போது தருமனுக்குச் சிரிப்பு வந்தது. ‘எத்தனை முறை போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடியிருக்கிறான் இவன்? இப்போது இருந்தாற் போலிருந்து திடீரென்று இவ்வளவு வீரம் இவன் உடம்பில் எங்கிருந்து வந்து புகுந்தது?’ என்று தருமன் தனக்குள் நினைத்துக்கொண்டான். “என்னப்பா! சகுனி, உனக்குக் கூட இவ்வளவு வீரம் இருக்கிறதா? உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமலே பசுடைகளை உருட்டும் சூது விளையாட்டு அன்று இது! போர் அப்பா போர் இந்த விளையாட்டு உனக்குப் புரியாதே? உன்னால் புரிந்து கொள்ளவும் முடியாதே. வீணாக இதில் ஏன் தலையிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? -சகுனியை நோக்கி இவ்வாறு கூறிக்கொண்டே வில்லை வளைத்தான் தருமன். வளைந்த வில்லிலிருந்து அம்புகள் விரைந்தன. போர் நுணுக்கங்களையும், எதிர்ப்பைச் சமாளிக்கும் ஆற்றலையும் பெறாத சகுனி, தருமனின் அம்புகளைத் தடுக்கத் தெரியாமல் திணறினான். அவனுடன் வந்திருந்த படை வீரர்களும் திணறினர். வெகு நேரம் போர் செய்ய வேண்டிய அவசியமே தருமனுக்கு ஏற்படவில்லை. சகுனியும் அவன் படைகளும் தனித்தனியே சிதறி ஓடினர். அவ்வளவில் தருமனுக்கு எதிர்ப்பின்றி ஒழிந்தது. வேறோர் இடத்தில் வீமன் பலமான எதிரிகளுக்கு நடுவே கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். துரோணர். அசுவத்தாமன், கர்ணன், துரியோதனன் ஆகிய பல பெரிய வீரர்கள் அவனை எதிர்த்தனர். அத்தனை பேரையும் தான் ஒருவனாக இருந்தே துரத்தியடித்துக் கொண்டிருந்தான் வீமன். பகைவர்களைத் துரத்தும் பெருமிதம் காரணமாக மலர்ச்சியடைந்த அவன் முகத்தில் புன்சிரிப்பு விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் புன்சிரிப்பு துரியோதனாதியர்க்கு நெருப்பாகத் தகித்தது. தன் தம்பியர்கள் சிலரை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு மீண்டும் வீமனோடு போருக்கு வந்தான் துரியோதனன் இந்த முறையும் வீமன் அவனுக்குச் சரியானபடி புத்தி கற்பித்தான். அவனும் அவன் தம்பியர்களும் களத்தைவிட்டு ஓட நேர்ந்தது. அவ்வாறு ஓடும்போது துரியோதனனுடைய தம்பியர்கள் தங்கள் மனத்திலே என்ன எண்ணிக் கொண்டார்கள் தெரியுமா? “இந்த வீமனைப் படைத்த கடவுள் பெரிதும் வல்லமை உடையவன். அந்தப் படைப்புக் கடவுளே மீண்டும் வந்து இவனோடு போர் செய்தாலும் இவனை வெல்ல முடியாது” என்று வீமனைப் புகழ்ந்து கொண்டே சென்றனர்.

உண்மையில் அன்றைய தினமாகிய பன்னிரண்டாம் நாளில் வீமன் செய்த போர் புகழின் எல்லைக்கு அப்பாற்பட்டது. மகாதீரர்களாகிய துரோணர், அசுவத்தாமன், கர்ணன் போன்ற வில்லாளர்களையே புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றால் அந்த வீரத்தின் பெருமையை எப்படிப் புகழ்வது? இந்நிலையில் கதிரவன் மறைந்து இருள் படரத் தொடங்கியதனால் பன்னிரண்டாம் நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. போர் செய்த களைப்புடன் இரு பக்கத்துப் படைகளும் படைத்தலைவர்களும் பாசறைகளை அடைந்தனர். பாண்டவர்கள் பாசறைக்குச் சென்றதும் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டனர். கெளரவர் களுடைய பாசறையிலோ ஒரே அசூயைக் குரல்களாக முழங்கின. போர்க்களத்தில் வீமனும் தருமனும் காட்டிய வீரத்தைப் பற்றியே எங்கும் பேச்சாக இருந்தது. ‘முதல் நாள் தருமருக்கு எதிராகத் தாங்கள் செய்த சபதம் வீணாகப் போய் விட்டதே’ என்ற ஆத்திரமும் அவர்களுக்கு இருந்தது.

“துரோணரே! இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்லும் நேற்றிரவு நீங்கள் செய்த சபதம் என்னவாயிற்று? அதை வெற்றிகரமாக முடித்தீரா?” என்று துரியோதனன் துரோணரைப் பார்த்து அதிகாரம் தொனிக்கக் கேட்டான். துரோணர் பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தோடு தலைகுனிந்தார்.

அந்தச் சமயத்தில் கர்ணன் சும்மா இராமல் வெந்த புண்ணில் வேல் நுழைப்பது போல, “துரோணர் பார்ப்பனச் சாதிதானே? சொன்ன சொல்லை நிறைவேற்றித்தான் ஆகவேண்டுமா என்ன? சொல் மாறி நடப்பதுதானே அந்தச் சாதியினரின் வழக்கம்?” என்று குத்திக் காட்டினான். துரோணருக்கு அந்த வார்த்தைகள் சுருக்கென்று இதயத்தில் தைத்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் கர்ணன் மேல் பாய்ந்து அப்படியே அவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றியது. மனத்தை அடக்கிக் கொண்டு தம்முடைய ஆத்திரத்தையெல்லாம் அவனுக்குப் பதில் சொல்வதில் காண்பித்தார் அவர்.

“கர்ணா! உன் வாயை மூடிக்கொள். உன்னுடைய பேச்சு உன் அறியாமையைத்தான் காட்டுகின்றது. என் சபதம் வெற்றி பெற முடியாமற் போனதற்கு நான் மட்டும் காரணமில்லை. நாம் எல்லோரும்தான் இன்று தோற்றோம். அவ்வளவு ஏன்? உன்னை மகாவீரன் என்று உனக்குள் எண்ணித் தலைகனத்துப் போயிருக்கும் நீ கூடத்தான் இன்றைய போரில் தருமனிடம் தோற்று முதுகு காட்டி ஓடி வந்தாய், தருமனிடம் சரீர பலத்தைவிட ஆத்மபலம் அதிகமாக இருக்கின்றது. அதனால்தான் நாம் ஒன்று கூடியும் அவனை வெல்ல முடியவில்லை. அர்ச்சுனன் வீமன் இவர்களும் கூட நம்மைப் போல வெறும் சரீரபலம் மட்டும் உள்ளவர்கள்தாம். அதனால் அவர்களையாவது அரிய முயற்சி செய்து வென்றுவிட முடியும். தருமனைத் தான் யாராலும் வெல்ல முடியாது. அவனுடைய வன்மை சத்தியத்தின் வன்மை, இணைகூற முடியாத பெருவன்மை, அதை வெல்ல வேர், மீறவோ, இந்த விநாடிவரை இவ்வுலகில் மனிதன் பிறக்கவில்லை. நான் இவ்வாறு கூறுவதில் உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தாலும், அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அவர்கள் நாளைக்கே தருமனோடு போர் செய்வதற்கு முயலட்டும். கர்ணா! நீயும் வீரன் தானே! முடியுமானால் நான் நிறைவேற்ற முடியாத சபதத்தை நாளையே நீ நிறைவேற்றிவிடேன் பார்க்கலாம்.”

துரோணர் பேச்சைக் கேட்டுக் கர்ணன் வாயடைத்துப் போனான். அவனுக்குப் பதில் பேச நா எழவில்லை. துரோணர் யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை. விறுவிறு வென்று அங்கிருந்து வேகமாக வெளியேறினார். தமது பாசறையை அடைந்து உறங்கச் சென்றார். பின்பு துரியோதனன் முதலிய மற்ற அரசர்களும் தத்தம் பாசறை சென்று உறங்கலாயினர்.

இரவின் அமைதி நிறைந்த ஓய்வுக்குப் பின் பதின்மூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. பொழுது மட்டுமா புலர்ந்தது? இரு திறத்துப் படைகளின் ஒடுங்கிக் கிடந்த ஆவல்களும் கூடப் புலர்ந்தன. பாண்டவர்கள் எப்போதும் போல் வெற்றியை நினைத்து வெற்றியின் மேல் நம்பிக்கை வைத்துப் போர்க்களத்திற்கு வந்தார்கள். ஆனால் கெளரவர்களோ, கழிந்து போன நாட்களில் தொடர்ந்து கிடைத்த தோல்வியைப் பற்றி எண்ணி எண்ணிப் புழுங்கும் மனத்துடன் பொறாமை நிறைந்த எண்ணங்களுடன் களத்தில் வந்து நின்றனர். துரோணருடைய கட்டளைப்படி படைகள் சக்கரவியூகமாக வகுத்து நிறுத்தப்பட்டன. நேற்றுத் தங்கள் பிடியில் அகப்படாமல் தப்பிவிட்ட தருமனை இன்று எவ்வாறேனும் பிடித்துவிடுதல் வேண்டுமென்று துரோணர் திட்டமிட்டிருந்தார். துரியோதனனின் மகனாகிய இலக்கண குமாரன், துரியோதனனின் தம்பியரிற் சிலர் கலிங்கப் பெரும் படைஞர்கள் ஆகிய இவர்கள் மொத்தமாக ஒன்று சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க ஒரு படை அமைப்பை வகுத்துக் கொண்டனர். சிந்து தேசத்தின் அரசனும் இணையற்ற வீரனுமாகிய ஜெயத்ரதன் என்பவனை இந்தப் படை அமைப்பிற்குத் தலைவனாக அமைத்துக் கொண்டனர். போர்க்களத்தில் பாண்டவர்களின் ஒற்றர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்ததனால் துரியோதனாதியர்களின் திட்டங்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி அவர்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தன. துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியவர்கள் அன்றையப் போரில் தருமனைப் பிடிக்க எண்ணியிருப்பதையும், வேறு சில இரகசியத் திட்டங்களையும், ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்த தருமன் கண்ணனையும் தன் தம்பியர்களையும் அழைத்து அவைகளைத் தெளிவாகக் கூறி விளக்கினான். இந்த விளக்கம் பாண்டவர்களுக்கு ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாக அமைந்து விட்டது. உரிய நேரத்தில் இருதிறத்தாருக்கும் போர் தொடங்கிற்று. யானை, குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைப் பெரும் படைகளோடு சஞ்சத்தகர்கள் என்ற பெரு வீரர்களைப் பாண்டவர்கள் மேல் ஏவினான் துரியோதனன். அவனால் ஏவப்பட்ட அவ்வீரர்கள் அர்ச்சுனனை வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். அர்ச்சுனன் அம்புகளை ஏவி அவர்களை வரவேற்றான். மிகச் சில கணங்களுக்குள்ளேயே வீரத்திலும் ஆற்றலிலும் வல்லவர்களான அந்தப் படையினரை நம்பிக்கை தளர்ந்து போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். அவர்களில் பலர் களத்திலேயே மாண்டனர். சிலர் கொடியும், தேரும், வில்லும், அம்பும் இழந்து வெறுங்கையர்களாய் ஓடினர். எவற்றை இழந்தாலும் உயிரை இழக்க விரும்பாத சிலர் தாமாகவே தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள், இறுதியில் அர்ச்சுனன் நின்றான், அவனுடன் அந்த வில் நின்றது. அந்த வில்லோடு வெற்றியும் நின்றது. எதிரிகள் நின்ற இடம் காலியாக இருந்தது. அந்தக் காலியிடத்தில் தோல்வி சூனிய ரூபத்தில் மானஸீகமாகக் குடிகொண்டிருப்பது போலத் தோன்றியது.

சஞ்சத்தகர்களின் படைக்கும் அர்ச்சுனனுக்கும் நிகழ்ந்த போரின் முடிவுதான் இப்படி ஆயிற்று போர்க்களத்தின் மற்றப் பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருந்த பிற நிகழ்ச்சிகளைக் காண்போம். வேறோர் புறத்தில் விற்கலையில் இளைஞனான துட்டத்துய்ம்மனும், முதுபெரும் வில்லாளனாகிய துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். துட்டத்துய்ம்மனுக்கு வில்வித்தை கற்பித்த ஆசிரியரே துரோணர்தான், ‘போர்’ என்று வந்துவிட்டால் ஆசிரியர் மாணவர், உறவு முறைகளையா கவனித்துக் கொண்டிருக்க முடிகிறது? இருவர் வில்லிலிருந்தும் எதிரெதிரே அம்புகள் மோதிக் கொண்டன. விரைவிலேயே இளைஞனான துட்டத்துய்ம்மன் தளர்ந்து சோர்ந்து விட்டான். துரோணர் நிறுத்தாமல் அம்புகளை ஏவிக் கொண்டிருந்தார். அவருடைய அந்த இடைவிடாத தாக்குதலைத் தாங்க முடியாத துட்டத்துய்ம்மன் தேரிலிருந்து குதித்து ஓடத் தலைப்பட்டுவிட்டான். முதல் முதலாகப் பாண்டவர்கள் பக்கம் நேர்ந்த இந்தப் பெரிய தோல்வி மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் போர்க்களம் முழுவதும் பரவிவிட்டது. எங்கும் ஒரே கலவரமாகிவிட்டது. துட்டத்துய்ம்மன் தோற்று ஓடினான் என்ற செய்தியை நம்ப முடியாமல் திகைத்தனர் பாண்டவர் பக்கத்து ஆட்கள். “பாண்டவர் படைத் தலைவனான துட்டத்துய்ம்மனே தோற்று ஓடி விட்டானாம்!” என்று கைகொட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் கெளரவர்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் தருமருக்குப் பகீரென்றது. அவன் துட்டத்துய்ம்மனைப் பார்த்து வருத்தமும் ஏமாற்றமும் தொனிக்கின்ற குரலில் கீழ்க் கண்டவாறு கேட்டான்: -

“துட்டத்துய்ம்மா! படைத்தலைவனாகிய நீதான் நம்முடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணஸ்தனாக இருக்க வேண்டியவன். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது இந்த மகத்தான தோல்விக்கும் நீயே காரணம் ஆகி விட்டாய்” தருமருடைய சொற்களைக் கேட்டுத் துட்டத்துய்ம்மன் தலைகுனிந்தான். நிலைமையைச் சமாளித்துப் பகைவர்களுடைய சக்கரவியூகத்தை உடைப்பதற்கு ஒரு சரியான ஆள் தேவையாயிருந்தது. தருமர் அபிமன்னனை அருகில் அழைத்தான். அபிமன்னன் அருகில் வந்து நின்றான்.

“அபிமன்னா! இப்போது உன்னால் ஓர் உதவி ஆக வேண்டியிருக்கிறது. மறுக்காமல் நீ அதைச் செய்ய வேண்டும்.”

“சொல்லுங்கள்! அது என் பாக்கியம்.”

“துரியோதனாதியர்கள் இப்போது சக்கரவியூகத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே புகுந்து போர் செய்து அந்த வியூகத்தை எவ்வாறாவது குலைக்க வேண்டும்."

“ஆகட்டும் இப்போதே இதைச் செய்கிறேன்” -தருமரின் வேண்டுகோளை அப்போதே நிறைவேற்றுவதற்குத் தயாராகிவிட்டான் அபிமன்னன். உடனே போர்க்கோலம் பூண்டு தேரின் மேல் ஏறினான். தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். அப்போது அந்த நிலையில் அபிமன்னனின் தோற்றம் இளஞ்சிங்கக் குருளையென விளங்கிற்று. அழகிய பாதங்களின் மேல் கணுக்காலில் வீரக்கழல்கள் இலங்கின. பரந்த மார்பில் வெண்ணிற முத்துமாலைகள் ஒளி நிறைந்து தோன்றின. பருத்த புயங்களில் வாகுவலயங்கள் அணி செய்தன. நீண்ட அழகிய காதுகளில் மகர குண்டலங்கள் தொங்கின. அழகும், வீரமும், இளமையும் ஒருங்கே ஒன்று சேர்ந்து தேரின் மேல் ஆயுதங்களோடு ஏறி நின்றாற் போலத் தோன்றியது அபிமன்னனின் தோற்றம். ‘இளங்கன்று’ பயமறியாது என்பதற்கு ஏற்பத் தருமனின் வார்த்தையை மீற முடியாமல் ஒப்புக் கொண்டானே தவிர அந்தச் செயல் அபிமன்னனைப் போன்ற ஓர் இளைஞனின் அனுபவத்தைவிடப் பெரியது ஆகும். ஒரு பெரும் படையின் இடையே புகுந்து அதன் வியூகத்தைக் கலைப்பது என்பது இதற்கு முன் அவனுக்கு அனுபவம் இல்லாத விஷயம். எனவே வியூகத்தைக் கலைத்துக் கொண்டு உள்ளே நுழைவது எப்படி என்பதைப் பற்றி அனுபவம் மிகுந்த பெரியோர்கள் பலரைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். வியூகத்திற்குள் நுழைவதென்றால் முதலில் முன் வரிசையில் நிற்கும் அதிரதத் தலைவர்களோடு போர் புரிந்து அவர்களை வென்றாக வேண்டும். அபிமன்னன் தன் தேரைக் கௌரவப் படையின் அதிரதர்களுக்கு முன்னே நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்கினான். துரோணரைப் போன்ற பெருவீரர்கள் கூட முன் வரிசையில் நின்று அவனை எதிர்த்துப் போரிட்டனர். வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த சக்கரவியூகத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஆரங்கள் போல் வீரர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். வியூகத்தை அழிக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு ஆரங்களையும் கலைத்தாக வேண்டும். ஒவ்வொரு ஆரத்தின் முன்னும் ஒரு பெரிய தலைவர் நின்று கொண்டிருந்ததனால் கலைப்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் இருந்தது முதல் ஆரத்தின் முதல் வீரராகத் துரோணர் வில்லுடன் நின்று கொண்டிருந்தார். அபிமன்னன் சிறிதும் தயங்காமல் அவரை எதிர்த்து விற்போர் புரியலானான். தொடக்கத்தில் பயமான இருந்தாலும் நேரம் ஆக ஆக அபிமன்னனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் பெருகி வளர்ந்தன. துரோணரை எப்படியும் வியூகத்திலிருந்து துரத்தியே தீருவது என்ற உறுதியோடு போர் செய்தான் அவன். அவனுடைய வில்லின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வயதானவராகிய துரோணர் எவ்வளவு நேரம்தான் அந்த வேகத்தைத் தாங்கமுடியும்? துரோணருடைய கைகள் ஓய்ந்து கொண்டே வந்தன. முடிவில் வில்லின் நாணை அறுத்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். அம்பறாத் தூணியையும் அறுத்து வீழ்த்தினான். வேறு வழியின்றிக் களத்தை விட்டு ஓடிப் போக வேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டது. துரோணர் ஓடியதுமே முதல் ஆரம் முற்றிலும் கலைந்து விட்டது. முதல் ஆரம் கலைந்தவுடன் இரண்டாவது ஆரத்தைக் கலைப்பதற்காகச் சென்றான் அபிமன்னன். இரண்டாவது ஆரத்தின் முன்னணியில் முதல் வீரனாகத் துரோணருடைய புதல்வன் அசுவத்தாமன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமன் அப்போது அளவு கடந்த சினத்துடனும் ஆத்திரத்துடனும் இருந்தான். தன் தந்தையை அபிமன்னன் முறியடித்ததைக் கண்டு அவனுடைய மனம் மிகவும் புண்பட்டுப் போயிருந்தது. அந்த ஆத்திரம் முழுவதையும் அபிமன்னனோடு போர் செய்வதிற் காட்டினான் அவன். அசுவத்தாமனுக்கும், அபிமன்னனுக்கும் இரண்டாவது ஆரத்தில் போர் தொடங்கியது.