மகாபாரதம்-அறத்தின் குரல்/2. சூழ்ச்சியின் தோல்வி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

“தயக்கம் ஒன்றுமில்லை துரியோதனா! பாண்டவர்கள் எல்லா விதத்திலும் வலிமை வாய்ந்தவர்களாயிற்றே?” -என்றுதான் யோசித்தேன். தருமனுக்கு முன்னும் பின்னும் காவலாக நிற்பவர்கள் யார் தெரியுமா? விற்போர் செய்வதற்கென்றே படைக்கப்பட்டவை அர்ச்சுனனுடைய கைகள், அத்தகைய வில்வீரன் தருமனுக்கு முன்புறம் நின்று காவல் புரிகிறான். உடல் வலிமையில் ஒப்பற்றவனாகிய வீமன் பின்புறம் நிற்கிறான். அவ்வாறு இருக்கும்போது தருமனைச் சிறைசெய்யலாம் என்று நாம் நினைப்பதாவது பொருந்துமா? நமக்குக் கிடைத்திருக்கும் பிறவிக்காலம் முழுவதையும் செலவிட்டாலும் செய்ய முடியாத காரியம் இது. ஒரு வேளை மகாபலசாலிகளாகிய வீமன், அர்ச்சுனன் ஆகிய இருவரையும் தருமனுக்கு உதவி செய்ய இயலாமல் அவனிடமிருந்து சிறிது காலம் பிரித்துவைக்க முடியுமானால் நமது கருத்தும் நிறைவேற முடியும். வேறு எந்த வகையாலும் நமது கருத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது! என்னுடைய அபிப்பிராயம் இது தான்“ துரோணர் இவ்வாறு கூறி முடித்தார். அவருடைய பதில் துரியோதனனுடைய ஆத்திரத்தைத் தணிப்பதற்கு மாறாக அதிகமாக்கியது.

அப்போது துரியோதனனுக்கு மிகவும் வேண்டியவனான திரிகர்த்தன் என்பவன் கூறத் தொடங்கினான்:-“துரோணர் கூறுகிறபடியே அர்ச்சுனனும், வீமனும் தருமனைக் காவல் புரிகிறார்கள் என்பது உண்மையானால் நாளைய பன்னிரண்டாம் நாள் போர் முழுவதும் வீமனையும் அர்ச்சுனனையும் தருமன் அருகில் செல்ல முடியாதபடி நாங்கள் தடுத்து நிறுத்தி வைக்கிறோம். அப்போது தருமன் தனியாகத்தான் நிற்பான். துரோணர் தருமனின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவனைக் கைது செய்து சிறைப்பிடித்து விட வேண்டும். இது நாங்கள் செய்கின்ற சபதம். இந்தச் சபதத்தை நிறைவேற்றவில்லையானால் கொடுங்கோல் அரசனும், பிறன் மனைவியை விரும்புகிறவனும் அடைகிற பாவங்களை நாங்களும் அடை வோமாக.” -திரிகர்த்தனுடைய சபதத்தைக் கேட்டதும் துரியோதனனுக்குச் சிறு அளவில் நம்பிக்கையும் திருப்தியும் ஏற்பட்டது. அடுத்து வேறு பல சிற்றரசர்களும் துரியோதனனுக்கு ஆதரவாகச் சபதம் செய்தனர். துரோணர் விருப்பு வெறுப்புக்களைக் களைந்து வீற்றிருப்பவர் போல் அமைதியாக வீற்றிருந்தார். குறைகுடம் தளும்புவது தானே வழக்கம்; செயலில் ஆண்மை குறைந்தவர்கள் சொல்லில் முதலியவர்கள் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் தருமனைச் சிறை செய்வதை சுலபமான காரியமாக நினைத்தும் பேசியும் ஆரவாரித்தனர். துரியோதனனும் அந்த வெற்று ஆரவாரத்தை நம்பி விட்டான்.

2. சூழ்ச்சியின் தோல்வி

விதியும், நியதியும், துரோகத்தோடும், வஞ்சகத்தோடும், ஒத்துழைப்பதென்பது என்றும் இல்லை. சூழ்ச்சியின் அடைத்த கதவுகளை விதியின் செயல் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உடைத்துத் திறந்து காட்டிவிடுகிறது. துரியோதனாதியர்கள் அன்று அந்த நள்ளிரவில் தருமனைச் சிறைப்பிடிப்பதற்காகச் செய்த சூழ்ச்சியின் கதியும் அப்படித்தான் ஆயிற்று. பாண்டவர்களின் ஒற்றர்கள் அன்றிரவு துரியோதனனுடைய பாசறையில் நடந்த சதிக் கூட்டத்தின் விவரங்களை ஒன்று விடாமல் அறிந்து கொண்டு போய்த் தருமனிடம் கூறிவிட்டார்கள். பன்னிரண்டாம் நாள் போரில் தன்னைக் கைது செய்து சிறைப்பிடிக்கப் போவதையும், அதற்காகத் தன் தம்பியர்களான வீமனையும் அர்ச்சுனனையும் தன்னை விட்டுத் தொலைவில் பிரித்துச் செல்லப் போவதையும் தருமன் நன்றாக உணர்ந்து கொண்டான். செய்தி தெரிந்ததுமே கண்ணன், அர்ச்சுனன், வீமன், அபிமன்னன் முதலிய முக்கியமானவர்களை அழைத்து அவர்களிடம் எல்லா வற்றையும் விவரித்துக் கூறி விட்டான் தருமன். “நாளைக்குப் பன்னிரண்டாம் நாள் போரில் அவர்கள் சதித்திட்டத்தை வெற்றிகரமாக முறியடிப்போம்! பாவம்! கெளரவர்கள் ஏமாந்து போகப் போகிறார்கள்” - பாண்டவர்கள் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வேரறுப்பதற்குத் திட்டமிட்டு விட்டார்கள். பன்னிரண்டாம் நாள் பொழுது புலர்ந்தது. பாண்டவர்கள் தங்கள் படையை அன்று அணிவகுத்து நிறுத்திய விதம் முற்றிலும் புதுமாதிரியானதாக இருந்தது. தருமனை நடுவில் நிறுத்தி அவனைச் சுற்றிலும் வளையம் வளையமாக மண்டலமிட்டுப் படைகளை நிறுத்தினார்கள். தருமனுக்கு முன்புறம் அர்ச்சுனனும் அபிமன்னனும் நின்றார்கள். பின்புறம் வீமன் நின்றான். மற்ற இருபக்கங்களிலும் நகுல சகாதேவர்கள் ஆயுத பாணிகளாய் நின்றனர். இந்த மண்டல வியூகத்தையும் தருமன் நடுவில் நிற்பதையும் கண்டபோது சபதம் செய்த திரிகர்த்தன் முதலியவர்கள் திடுக்கிட்டுப் போயினர். கெளரவ சேனை கருடவியூகத்தில் வகுத்து நிறுத்தப்பட்டது. திரிகர்த்தன் முதலிய அரசர்கள் நேற்றிரவு செய்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக அர்ச்சுனனையும் வீமனையும் சண்டைக்கு இழுக்கிற பாவனையில் தனியே பிரித்துக் கொண்டு போக முயன்றனர். முதலில் அவர்கள் அழைப்பை அர்ச்சுனன் மட்டும் ஏற்றுக் கொண்டான். முன்புறத்தில் தருமனுக்குச் சரியான பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டுத் திரிகர்த்தனோடு போருக்குச் சென்றான். அவ்வாறு செல்லும்போதும் தருமனுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டுதான் சென்றான். மற்றவர்கள் முன் போன்றே தருமனை மண்டலமிட்டுக் கொண்டு நின்றார்கள். அர்ச்சுனனுக்கும், திரிகர்த்தன் முதலியவர்களுக்கும் போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே துரோணர் பல அரசர்கள் புடைசூழத் தருமனைத் தாக்குவதற்கு வந்தார். துரோணரோடு சயத்திரதன், சகுனி, குண்டலன் ஆகிய அரசர்கள் வந்தனர். இவர்களைத் தவிர, தருமனைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருக்கும் மண்டலத்தைக் கலைப்பதற் காகக் கெளரவ சேனையிலிருந்து ஆயிரக்கணக்கான அரசர்கள் பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தனர். பாண்டவர்களின் படைத் தலைவனான துட்டத்துய்ம்மன் இதைப் பார்த்து விட்டான். மண்டலத்தைக் கலையவிட்டுவிடக் கூடாது என்ற கடமை உணர்ச்சியோடு பாஞ்சால வீரர்கள் அடங்கிய பெரும்படையினால் துரோணரையும் அவர் கோஷ்டியையும் எதிர்த்தான். மாரிகாலத்துக் காட்டாற்று வெள்ளம் போல் அலை பாய்ந்து வந்த துரோணரும் அவர் படை வீரர்களும் சின்னா பின்னமாகச் சிதறி ஓடுமாறு செய்தான் துட்டத்துய்ம்மன். இறுதியில் உயிரோடு எஞ்சியவர்கள் துரோணரும் அவரருகில் நின்ற மிகச் சில வீரர்களுமே!

தன் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டதைக் கண்ட துரோணருக்கு மனம் குமுறியது. ஆத்திரத்தோடு மீண்டும் எதிர்த்துப் போர் புரிந்தார். இம்முறை போரில் அவர் கை ஓங்கி விட்டது. பாண்டவர்களைச் சேர்ந்த பலர் துரோணரின் தாக்குதலுக்கு ஆற்றாமல் தளர்ந்தனர். துருபதன், நகுலன், சகாதேவன் ஆகிய வலிமை வாய்ந்த வீரர்களைத் துரோணர் தோற்று ஓடும்படி செய்துவிட்டார். தருமனைச் சுற்றி நின்ற பாஞ்சால நாட்டு வீரர்கள் கூடப் பின்வாங்கி விட்டனர். தருமன் ஏறக்குறைய தனியனாக விடப்பட்டான். இந்த ஏகாந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு துரோணர் தருமனை நேருக்கு நேர் போருக்கு அழைத்தார். அவனும் மறுக்கவில்லை. தருமனும் துரோணரும் தத்தம் படைகளோடு நேரடியாகப் போரிலே இறங்கினார்கள். பார்க்கப் போனால் தருமன் துரோணருடைய மாணவன் தான். ஆனால் துரோணருக்குச் சிறிதும் சளைக்காமல் போரைச் செய்தான். வெகு விரைவிலேயே வில்லை இழந்து தேரை இழந்து வெறுந்தரையில் நிராயுதபாணியாக நிற்கவேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டு விட்டது. அந்த நிலையில் மேலும் தொடர்ந்து அவரைத் துன்புறுத்த விரும்பாத தருமன், “துரோணரே, நீர் என் ஆசிரியர்! உம்மைப் போர்க்களத்தில் அவமானப்படுத்தினேன் என்ற பழியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இப்போது நீங்கள் மிகவும் களைத்து விட்டீர்கள். போய் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் போதுமான ஆயுதங்களோடும், போதுமான படைகளோடும் போருக்கு வந்து சேருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

அவன் கூறியபடியே துரோணரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் திரும்பவும் படைகளுடனும் ஆயுதங்களுடனும் தருமனோடு போருக்கு வந்தார். இம்முறை தருமனுக்குத் துணையாக வேறு சில அரசர்களும் சேர்ந்து கொண்டிருந்தனர். இதனால் எதிர்ப்பைச் சமாளிப்பது துரோணருக்குக் கடினமாயிற்று. விராடராசன், துட்டத்துய்ம்மன், குந்திபோஜன் முதலியவர்கள் தருமனுக்குப் பக்கபலமாக நின்றார்கள். துரோணர் திணறுவதைக் கண்டு துரியோதனன், கர்ணன், சகுனி, சோமதத்தன் முதலிய கெளரவப் படைவீரர்கள் அவனருகில் துணையாக வந்து நின்று கொண்டார்கள். இரு தரப்பாருக்கும் கடுமையான போர் நடந்தது. துட்டத்துய்ம்மன் முதலியவர்களின் சாமர்த்தியத்தினால் கௌரவர் படைக்கே அதிகமான சேதம் ஏற்பட்டது. துரோணர் முதலிய பெரிய பெரிய வீரர்கள் முன்னணியில் நின்றும் கூட இந்த அழிவைத் தவிர்க்க முடியவில்லை. “வெட்கமில்லாமல் இன்னும் நீங்கள் போர் புரிகிறீர்களே! உங்கள் படை அழிந்து ஒழிந்து போன பிறகும் உங்களுக்கு ஓடிப்போக மனம் வரவில்லையா?” என்று பாண்டவர் படை கெளரவப் படையை நோக்கி ஏசியது.

“நாங்கள் என்ன செய்வது? உங்கள் பக்கத்து அரசர்களின் வலிமைக்கு முன்னால் நாங்கள் எது செய்தாலும் வெற்றி பெற மாட்டேன் என்கிறதே?” என்று கெளரவ வீரர் இந்த ஏச்சுக்கு மறுமொழி கூறினர். இப்போது இரண்டாவது முறையாகத் துரோணர் தோற்றுப் பின் வாங்கினார். தருமனைச் சிறைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டு முறை படுதோல்வி அடைந்து விட்டது. வீமன், கடோற்கசன் அபிமன்னன் ஆகியோர் ஒன்று சேர்ந்து துரோணரைப் போர்க்களத்திலேயே நிற்கமுடியாதபடி துரத்தி அடித்தார்கள். கெளரவசேனையில் இறந்தவர்களைத் தவிர இருந்தவர்கள் யாவரும் உயிர் பிழைத்தால் போதுமென்ற எண்ணத்துடன் பாசறைகளை நோக்கி ஓடிவிட்டனர். களத்தில் படை தரித்து நிற்கவே இல்லை. பயம்தான் அவர்கள் இதயத்தில் நிலைத்து நின்றது. அவற்றை எல்லாம் கண்டபோது துரியோதனனுடைய மனத்தில் ஏற்பட்ட தாழ்மை உணர்ச்சிக்கும் அவமானத்திற்கும் ஓர் அளவே இல்லை, வெறுப்பினாலும் அவமானத்தினாலும் ஏற்பட்ட ஒரு வகை விரக்தி அவன் மனத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. “நாம் அசடர்கள்! நாம் முட்டாள்கள்! என்றைக்கும் நம்மால் பாண்டவர்களை வெல்ல முடியாது. அவர்கள் வீரதீரர்கள்! இந்த உலகமும் இதன் ஆட்சி உரிமையும் வெற்றியும், வீரமும் ஆகிய சகலமும் அவர்களுக்குத் தான் சொந்தம்” என்று விரக்தியோடு தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கிக் கூறினான் துரியோதனன். பலர் உறுதியும் உரமும் தோன்றப் பேசி அவனுடைய மனத்தின் விரக்தி நீங்குமாறு செய்ய முயன்றனர்.

இதன் பயனாக மீண்டும் துரோணர், துரியோதனன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் படையைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு தருமன் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே வில்லை வளைத்துக் கொண்டு இவர்களை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றான் அபிமன்னன். துரியோதனனும் அவன் படைகளும் தருமனை நெருங்குவதற்கு முன்பே அபிமன்னன் செலுத்திய கூரிய கணைகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. தருமன், கடோற்கசன், துட்டத்துய்ம்மன் முதலியவர்களும், போர் புரியவே துரியோதனனுடைய இந்த மூன்றாவது முயற்சியும் வலுவிழந்து போயிற்று. தருமனின் தரப்பார் சரியான முன்னேற்பாட்டுடன் தாக்குதலைச் சமாளித்து விட்டதனால் துரியோதனன் வந்த வழியே படைகளுடன் திரும்பி ஓட வேண்டியதாயிற்று. துரோணருக்கும் அதே கதிதான் நேர்ந்தது. இவ்வாறு இவர்களெல்லோரும் தோற்று ஓடிக் கொண்டிருக்கும் போது பகதத்தன் என்பவன் மட்டும் தன்னிடம் எஞ்சிய கெளரவசேனையை ஒன்று திரட்டிக் கொண்டு மீண்டும் தருமனை எதிர்த்து வந்தான். அவனோடு வேறுசில அரசர்களும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். பிணத்துக்கு உயிர் வந்தது போல் அசம்பாவிதமான ஒருவகைத் தைரியம் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. வேகமாகக் களத்திற்குள் நுழைந்த பகதத்தன் என்ற அரக்கன் சற்றும் எதிர்பாராத விதமாகத் தருமனை நோக்கி முன்னேறினான். இதைப் பின்புறமிருந்து பார்த்துக் கொண்டே இருந்த வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான். பகதத்தனுக்கும் வீமனுக்கும் போர் மூண்டது. யானை மேல் ஏறிப் போர் செய்ய முயன்றான் பகதத்தன். அவனை யானையிலிருந்து கீழே தள்ளி மார்பெலும்புகள் நொறுங்கும்படியாக ஓங்கி ஓர் அறை அறைந்தான் வீமன், அந்த அறையையும் வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான் பகதத்தன் தேரில் ஏறியவுடனே வில்லை வளைத்து வீமன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய வீமனின் கையிலிருந்து கதாயுதம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. பகதத்தன் ஏவிய அம்புகள் மார்பிலும் தோள் பட்டையிலுமாகத் தைக்கத் தொடங்கின. வீமனுக்கு அடக்க முடியாத சினம் மூண்டு விட்டது. தானும் ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான். வில்லை எடுத்துப் பகதத்தன் மேல் அம்புமாரி பொழிந்தான். வீமனுடைய அம்புமாரியைத் தாங்கமுடியாமல் பகதத்தன் தேரிலிருந்து கீழே குதித்தான். அதைக் கண்டு வீமனும் கீழே குதித்தான். இருவரும் விற்போரை நிறுத்தி விட்டு மற்போரைத் தொடங்கினார்கள். மற்போருக்கென்றே வாகாக அமைந்த உடல் வீமனுக்கு. பகதத்தனைப் போதும், போதும், -என்று நினைக்கும் படியாகச் செய்து விட்டான் வீமன். மற்போரிலும் தோல்வியடைந்த பகதத்தன் தளர்ந்த நிலையிலிருந்த தன் யானையின் மத்தகத்தில் தாவி ஏறிக் கொண்டு தப்பி ஓடுவதற்கு முயன்றான். பகதத்தனுடைய யானை ஓடும்போது இடையிலே பாண்டவ சைனியம் அகப்பட்டுக் கொண்டதனால் மோதியும் நசுக்கியும் வீரர்களை அழித்தது அது. பகதத்தனுடைய யானையினால் தனது சேனை சிதறி அழிவதைத் தேர்மேல் நின்று கொண்டிருந்த தருமன் பார்த்து விட்டான்.

“தீமை எதுவாயிருந்தாலும் அதை உடனே அழித்து விடுவது தான் நல்லது! தீமைகளிலெல்லாம் தலை சிறந்த தீமை இந்தப் பகதத்தன் உருவில்தான் நடமாடுகிறது. இவனை முதலில் அழித்தொழிக்க வேண்டும்.” தருமன், இவ்வாறு தீர்மானித்துக் கொண்டு கண்ணனை மனத்தில் தியானித்தான். திரிகர்த்தனோடு போர் செய்யும் அர்ச்சுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கண்ணன், தருமன் தன்னை நினைப்பதை உணர்ந்து கொண்டான். உடனே அர்ச்சுனனிடம் சொல்லித் தேரை தருமன் நின்று கொண்டிருந்த இடத்திற்குத் திருப்பினான். கண்ணன் தேரை திருப்பிக் கொண்டு வந்த இதே சமயத்தில் பகதத்தன் ஏறிக் கொண்டிருந்த யானையும் திரும்பியது. தேரும், யானையும் மிக அருகிலே நேர் எதிரெதிரே சந்தித்தன. அவ்வளவுதான்! யானை மேலிருந்தபடியே பகதத்தன் அர்ச்சுனன் மேல் அம்புகளைச் செலுத்தினான். அர்ச்சுனன் தேர் மேலிருந்த படியே பகதத்தன் மேல் அம்புகளைச் செலுத்தினான். இருவருக்கும் திடீரென்று போர் தொடங்கி விட்டது. பகதத்தன் செலுத்திய அம்புகளைத் தன் அம்புகளால் தடுத்து முறித்தான் அர்ச்சுனன். தேரை ஓட்டுகிற கண்ணன் மேலேயே அம்புகளைச் செலுத்த முயன்றான் பகதத்தன். ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை. அர்ச்சுனனின் அம்புகளால் அவன் மார்புக் கவசம் கிழிந்தது. யானையின் முகபடாம் உடைந்து தூள் தூளாயிற்று. வில்லும், அம்பறாத் தூணியும் உடைந்து கீழே விழுந்தன. சினங்கொண்ட பகதத்தன் தன்னிடம் எஞ்சியிருந்த ஒரே ஒரு வேலை எடுத்துக் குறி பார்த்து அர்ச்சுனன் மேல் வீசினான். ஆனால் அது அர்ச்சுனனை