உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/1. பதினொன்றாவது நாளில்

விக்கிமூலம் இலிருந்து

துரோண பருவம்

1. பதினொன்றாவது நாளில்

இருதிறத்துப் படைகளும் ஆவலோடு தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோராவது நாள் ஒளி உதயத்தோடு தோன்றியது. பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளும் அன்றைய யுத்தத்திற்கு மகிழ்ச்சியோடு தயாராயின. “அர்ச்சுனா! இன்றையப் போரில் நமக்கு அவனை மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயம் ஒன்றிருக்கிறது. எதிர்த்தரப்பில் துரோணர் தான் படைத்தலைவர். வலிமைக்கெல்லாம் மூலாதாரமாக நின்ற வீட்டுமன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வெற்றி நம் பக்கம் தான் என்பதைப் பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதே இல்லை” என்று போருக்குப் புறப்படுகையிலே கண்ணன் அர்ச்சுனனிடம் கூறினான். இருதிறத்துப் படைகளும் நேர் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. வீட்டுமன் தலைமை வகிக்காத கெளரவ சேனை களையிழந்து ஒளியிழந்து காணப்பட்டது. சந்திரனே உதிக்காத ஆகாயம், மணமே இல்லாத மலர், நாதத்தை எழுப்பும் நரம்புகளே இல்லாத வீணை, நதிகளோ, ஆறுகளோ பாயாத வறண்ட நாடு, உயர்ந்த எண்ணங்கள் இல்லாத கீழோனின் மனம், வேத விதியை மீறிய அக்கிரமமான வேள்விகள் இவற்றைப் போல பொலிவிழந்து காணப்பட்டது துரியோதனாதியர் படை. அந்தப் படையின் எல்லாவிதமான பொலிவுகளுக்கும் காரணஸ்தனாக இருந்தவன் தான் மரணப்படுக்கையில் கிடக்கிறானே? புதிய படைத் தலைவரான துரோணர் கௌரவ சேனையைச் ‘சகடம்’ போன்ற வியூகத்தில் அணி வகுத்து நிறுத்தினார். திண்மையும் வலிமையும் வாய்ந்த பாண்டவ சேனையை அன்றில் பறவையைப் போன்ற வியூகத்தில் வகுத்து நிறுத்தினான் துட்டத்துய்ம்மன். படைத்தலைவர்கள் ஆணையும் அனுமதியும் பிறப்பித்தனர். அவ்வளவில் போர் தொடங்கிற்று. ‘திடீரென்று மழை தொடங்கி விட்டதோ?’ எனச் சந்தேகம் கொள்ளுமாறு ‘விர்ர்’ ‘விர்ர்’ ரென்று அம்புகள் இருபுறத்திலிருந்தும் மழை போலக் கிளம்பின, சகுனி சரியான எதிரியிடம் மாட்டிக் கொண்டு விட்டான். சகாதேவன் அவனை வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் சகாதேவன் வெல்வானா சகுனி வெல்வானா என்று முடிவு கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. நேரமாக ஆக இந்த நிலை மாறியது. சகாதேவன் கை ஓங்கிற்று.

முதலில் சகுனியின் தேர்ப்பாகன் இறந்தான். பின்பு சகுனியின் தேர்க்கொடிகள் அறுந்து வீழ்ந்தன. அடுத்துத் தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அம்பு தைத்து வீழ்ந்தன. இறுதியில் சகாதேவனின் அம்புகள் சகுனியின் உடலையும், மார்பையும் கூட விட்டுவைக்கவில்லை. சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டன. அம்புகள் தைத்த வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் சகுனி. ‘போர் வேண்டாம், ஆள் பிழைத்தால் போதும்’ என்று கீழே குதித்து ஓடுவதற்கு முயன்ற அவனைச் சகாதேவன் விடவில்லை. சகாதேவனைக் கண்டதுமே சகுனி மிரண்டு போனான். தப்புவதற்கு வழியில்லாத நிலையில் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை எதிர்த்தான். சகாதேவனும் தன் கையில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சகுனியை எதிர்த்தான். சகுனியால் சகாதேவனை எதிர்த்துச் சமாளிக்க முடியவில்லை. கதாயுதத்தைக் கீழே போட்டுவிட்டுப் புறமுதுகு காட்டி ஓடி விட்டான். தோற்று ஓடுகிற அந்தக் கோழை மனிதனைப் பார்த்து இகழ்ச்சி தோன்றச் சிரித்துக் கொண்டே கதாயுதத்தைக் கீழே வைத்தான் சகாதேவன். அதே சமயத்தில் போர்க்களத்தின் மற்றோர் புறத்தில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் பயங்கரமான முறையில் போர் நடந்து கொண்டிருந்தது. துரியோதனனும் அவனைச் சேர்ந்த துணையரசர்கள் பலருமாக ஒன்று சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தார்கள். வீமனோ தனி ஆளாக நின்று அவர்களை வளைத்துப் போர் செய்தான். வீமனுடைய தாக்குதலைத் தாங்க முடியாத துரியோதனாதியர்கள் களத்திலிருந்து பின் வாங்கி ஓடலாயினர். அவர்களுக்கு உதவுவதற்காக வந்த சல்லியன் வீமனை எதிர்த்தான். சல்லியனுடைய எதிர்ப்புச் சற்றே கடினமாகத்தான் இருந்தது. வீமன் சல்லியனைச் சமாளிக்க முயன்று கொண்டிருந்த போது, நகுலனும் வீமனுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொண்டான். வீமனும் நகுலனுமாக இருவர் சேர்ந்து தாக்கவே சல்லியன் நிலை திண்டாட்டமாகி விட்டது. தேரும், குதிரையும், கொடியும் வில்லும், அம்பும் எல்லாம் இழந்து போர்க்களத்தை விட்டு ஓடினான் சல்லியன்.

வீட்டுமன் போர் செய்வதை நிறுத்திய பின்பே தான் வில்லைத் தொட முடியும் என்று சபதம் செய்திருந்த கர்ணன் இன்று பதினோராவது நாள் போரில் வில்லெடுத்துப் போர் செய்வதற்கு முன் வந்திருந்தான். கர்ணனுக்கும் விராட ராசனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விராட மன்னனும் கர்ணனும் ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்ட அம்புகளால் வான் வெளியே மூடப்பெற்று மறைந்துவிடும் போலத் தோன்றியது. பதினோராவது நாம் களம் முழுவதும் ஓய்வு நேரமே இல்லாமல் ஒருவரை ஒருவர் விடாது எதிர்த்துப் போர் செய்தவர்கள் துருபதனும் பகதத்தனும் ஆவர். இவர்கள் பரஸ்பரம் யானைப்படைகளைக் கொண்டு போரிட்டனர். துரியோதனாதியர் படையை சேர்ந்த அரசர்களுள் சோமதத்தன் என்பவனும் ஒருவன். அவன் கீழே பல சிற்றரசர்கள் அடங்கியிருந்தனர். அவன் தன் குழுவினரோடு சிகண்டியை எதிர்த்துப் போர்ச் செய்தான். சிகண்டி வாட்போர் செய்தானானால் அவனை எதிர்த்து நிற்க யாராலும் ஆகாது. சிகண்டியை எதிர்த்து வாட்போர் செய்த சோமதத்தன் முதலியவர்கள் மிக விரைவிலேயே தோற்று. ஓடிப் போக நேர்ந்தது. 'இலக்கண குமாரன்’ என்னும் பெயரோடு துரியோதனனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் இந்தப் போருக்கு வந்திருந்தான். அர்ச்சுனன் புதல்வனும் தீரனுமாகிய அபிமன்னனை எதிர்த்து இலக்கண குமாரன் போரிடுவதற்கு வந்தான். இருவரும் வயதில் ஏறக்குறையச் சமநிலையினரேயானாலும் வீரத்தில் ஏற்றத்தாழ்வுடையவர்களே. அபிமன்னனுடைய வீரம் மலை என்றால் இலக்கணகுமரனுடைய வீரம் மடு. இருவரும் போர் செய்து கொண்டிருக்கும்போதே போர் முறையை மீறி மறைமுகமாக அம்பு செலுத்தி அபிமன்னனுடைய வில்லை முறித்து விட்டான். அபிமன்னனுக்கு இலக்கணகுமாரன் மேல் அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. முறிந்து போன தனது வில் தண்டினால் இலக்கண குமாரனை அடி அடி என்று அடித்துக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் அபிமன்னன்.

இவ்வாறு இலக்கணகுமாரனை அபிமன்னன் தேரில் இழுத்து வைத்துக் கட்டிச் சிறை செய்து கொண்டு போவதைத் துரியோதனாதியர்கள் பக்கத்தைச் சேர்ந்த சயத்திரதன் என்பவன் பார்த்து விட்டான். உடனே அவன் வில்லும் கையுமாக வந்து அபிமன்னனுடைய தேரை எதிர்த்து வளைத்துக் கொண்டான். இலக்கண குமாரனைச் சிறைபடுத்திக் கொண்டு போக முடியாதபடி சயத்திரதன் அபிமன்னனை எதிர்த்துப் போர் புரிந்தான். அபிமன்னனும் சயத்திரதன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தேர்மேல் மரச்சட்டத்தில் கட்டப்பட்டிருந்த இலக்கண குமாரன் ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தான். சயத்திரதனால் அபிமன்னனை வெல்ல முடியவில்லை. ‘அபிமன்னனை எப்படி மடக்குவது?, என்று விளங்காமல் மலைத்துப் போய்ப் போர்களத்தில் நின்றான். அவன் இவ்வாறு அபிமன்னனுக்கு முன்னால் மலைத்து நிற்பதைக் கர்ணன் கண்டு கொண்டான். உடனே வில்லை வளைத்துக் கொண்டு கர்ணன் சத்திரதனுக்கு உதவியாக வந்து அபிமன்னனை எதிர்த்தான். கர்ணனைப் போலவே கெளரவ சேனையைச் சேர்ந்த வேறு பல அரசர்களும் திடுதிடுவென்று ஓடி வந்தனர். தனியாக நின்ற அபிமன்னன் பகையரசர்களின் பெருங்கூட்டத்துக்கு நடுவே சிக்கிக் கொண்டான். ஆனாலும் அந்த இளம் வீரன் அத்தனை பேருக்கும் நடுவில் மனந்தளர்ந்து விடவில்னல கைகள் ஓய்ந்துவிடவில்லை. துணிந்து போர் செய்தான்! எதிரே நின்றவர்கள் மேல் சரமாரியாக அம்புகளைத் தூவினான். தனது வில் முனையில் அவர்களைத் திக்கு முக்காடச் செய்தான். வெகு நேரம் போர் தொடர்ந்து நிகழ்ந்தது. ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில் அபிமன்னன் வெற்றியடைந்தான். அவனை எதிர்த்தவர்கள் கர்ணன் உட்பட எவரும் அவனுக்கு முன் நிற்க முடியவில்லை. நிலைகலங்கி ஓடுமாறு பகைவர்களை விரட்டியடித்து விட்டுத் தேரோடு இலக்கண குமாரனையும் கைதியாக்கிக் கொண்டு சென்றான் அபிமன்னன். இந்தக் கடைசி நிலையில் கடைசி எதிரியாகச் சல்லியன் ஓடிவந்து வளைத்துக் கொண்டான். அபிமன்னன் பொறுமை இழந்து விட்டான். அவன் மனத்தில் தோன்றிய ஆத்திரம் கைவழியே வில்லில் கலந்தது. நெருப்புச் சரங்களைப் போல அம்புகள் கிளம்பின. சல்லியனின் முகத்திலும் தோள்பட்டைகளிலுமாக அம்பு நுனிகள் துளைத்து நின்றன. வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து ஓர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்னன் மேல் அடிப்பட்ட புலிபோல் பாய்ந்தான் சல்லியன். இந்த நேரத்தில் ஏதோ காரியமாக அங்கு வந்த வீமன் தன் கையிலிருந்த கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். வீமனுக்கும் சல்லியனுக்கும் கதைப் போர் ஆரம்பமாயிற்று. சரியான சமயத்தில் வீமன் வந்து காப்பாற்றியிருக்க வில்லையானால் சல்லியன் ஓங்கிய கதை அபிமன்னனை நொறுக்கியிருக்கும், வீமனின் கதாயுதம் சல்லியனைப் புடைத்துப் புடைத்து ஓய்ந்து போகச் செய்து கொண்டிருந்தது. இறுதியாக வீமன் கொடுத்த அடி சல்லியன் உடலிலிருந்து எலும்புகளைப் பூட்டுவிட்டு நொறுங்குமாறு செய்தன. மயங்கி மூர்ச்சை போட்டு அப்படியே கீழே விழுந்து விட்டான் சல்லியன்.

வீமன் நல்ல நோக்கத்தோடுதான் அபிமன்னனுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் அபிமன்னனுடைய மனத்தில் அது தவறாகப் பட்டு விட்டது. “இந்தச் சல்லியனை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கும்போது பெரிய தந்தை வீணாக இதில் ஏன் குறுக்கிட வேண்டும்? சல்லியனை எதிர்த்துத் தோற்கச் செய்ய என் ஒருவனுடைய ஆற்றல் போதாது என்ற எண்ணமா? அப்படியானால் பெரிய தந்தை என்னுடைய ஆற்றலை மிகவும் குறைவாகத் தானே எண்ணியிருக்கிறார்?” -என்று இவ்வாறாகத் தனக்குள் நினைத்துப் பொருமினான் அவன்.

“பெரிய தந்தையே! நான் உங்களுக்கு என்ன அபசாரம் செய்தேன்? என்னையும் என் வீரத்தையும் தாங்கள் இப்படி அவமானப்படுத்தலாமா?... இந்தச் சல்லியனை ஒடுக்க என் ஆண்மை ஒன்றே போதாதா? தாங்கள் வேறு உதவிக்கு வரவேண்டுமா?” -என்று வீமனை நோக்கிப் பணிவுடனும் வணக்கத்துடனும் கேட்டான் அபிமன்னன். வீமன் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறாமல் அபிமன்னனை ஏறிட்டுப் பார்த்தான். இவர்கள் இங்கே இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் போது தேரில் கட்டி வைக்கப்பட்டிருந்த இலக்கணகுமாரன் திருட்டுத்தனமாகக் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு ஓடத் தயாராகிக் கொண்டிருந்தான். துரியோதனாதியர் படையைச் சேர்ந்தவனாகிய ‘கிருத வர்மா’ -என்பவன் இலக்கண குமாரன் தப்பி ஓடுவதற்கான உதவிகளை அவனுக்குச் செய்து கொண்டிருந்தான். வீமனோ அபிமன்ண்னோ தங்களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கிருதவர்மா இலக்கண குமாரனை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு போய் வெகு தொலைவிற்குக் கடத்திக் கொண்டு போய்க் கெளரவ சேனையின் நடுவே பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டான். பேச்சு முடிந்து அபிமன்னனும், வீமனும் திரும்பிப் பார்த்தபோது, இலக்கண குமாரனைக் கட்டி வைத்த இடம் வெறுமையாக இருந்தது! இவ்வளவில் அன்றைய போர் நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன. இரு சாராரும் படைகளோடு தத்தம் பாசறைகளுக்குச் சென்றனர். பதினோராவது நாள் போரில் துரியோதனாதியர்கள் பெருமைப்படும்படியான நிகழ்ச்சியையோ, மகிழ்ச்சிக்குரிய செயல்களையோ, அவர்கள் படை செய்யவில்லை. போதாத குறைக்குத் தன் மகன் இலக்கண குமாரன் அபிமன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு அவமானத்திற்குள்ளானான் என்பதையும் அறிந்தபோது துரியோதனன் மனம் குமுறினான். போரில் நாளுக்கு நாள் பாண்டவர்கள் கை ஓங்கி வருகிறதென்பதை நினைக்கும் போதே அவன் மனம் அசூயையால் புழுங்கியது. பாண்டவர்களையும் அபிமன்னனையும் பழிவாங்குவதற்காக ஏதாவது சூழ்ச்சி அகப்படாதா? என்று துறுதுறுத்துக் கொண்டிருந்தது அவன் மனம். அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. வஞ்சக எண்ணங்கள் அந்த அசூயை நிறைந்த மனம் முழுவதும் அலைமோதிச் சிதறிக் கொண்டிருந்தன. படையில் முக்கியமாகப் பங்கு கொண்டவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் செய்ய வேண்டிய சூழ்ச்சிகளைப் பற்றி அந்த நள்ளிரவில் சிந்தித்தான். படைத் தலைவராகிய துரோணரும் அப்போது அங்கே உடனிருந்தார்.

“துரோணரே! இன்றைய போரில் என் மகனை அபிமன்னன் அவமானப்படுத்திவிட்டான். என் மனத்திலிருந்து என்றென்றைக்கும் இந்த அவமானம் மறக்கவே மறக்காது. இதற்கு நாம் பழிவாங்கியே தீரவேண்டும். நாளைய தினமே அந்தப் பழியை நிறைவேற்றிக் கொள்ள உங்கள் உதவி தேவை. இன்று என் மகனைச் சிறைப்பிடிப்பதற்கு பதிலாக நாளைக்குப் படைத்தலைவர்களுள் முதல்வனாகிய தருமனையே நாம் சிறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் என் மனத்திலுள்ள ஆத்திரம் தீரும்” என்றான் துரியோதனன். துரோணர் சிந்தனையில் ஆழ்ந்தார். துரியோதன்னுடைய எண்ணம் அசாத்தியமானதாக மட்டும் அன்று; அநாவசியமாகவும் தோன்றியது அவருக்கு.

“என்ன துரோணரே! ஏன் தயங்குகிறீர்? நான் கூறியபடி செய்ய முடியாதா?” துரியோதனன் கேட்டான்.