மகாபாரதம்-அறத்தின் குரல்/5. வீட்டுமன் வீழ்ச்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. வீட்டுமன் வீழ்ச்சி

பத்தாவது நாள் போர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. விதிகளின் விதியாய், செயல்களின் ஆதி காரணமாய் விளங்கும் கண்ணன் கலவரம் மிகுந்த அந்தப் போர்களத்தின் நடுவே சிந்தித்துப் பார்த்தான். அவன் சிந்தனை வீட்டுமனின் வாழ்க்கையை முடிப்பது பற்றிச் சென்றது. ‘பத்தாவது நாளாகிய அன்றைய போர் முடியும்போது வீட்டுமனுடைய உலக வாழ்வும் முடிந்து விட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு அர்ச்சுனனை அணுகினான் கண்ணன். கண்ணனின் குரல் அர்ச்சுனன் காதருகே மெல்ல ஒலித்தது.

“அர்ச்சுனா! இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எதிர்த் தரப்பில் தளபதியாகவும் பெரிய வீரனாகவும் இருப்பவன் வீட்டுமன். இன்றைக்குப் போர் மட்டும் முடியக்கூடாது, வீட்டுமனுடைய வாழ்வும் முடிந்து விட வேண்டும் நீ வீட்டுமனோடு போர் செய். மற்றதை நான் கவனித்துக் கொள்கிறேன்.”

“வீட்டுமரைக் கொல்வதா? ஐயையோ...” என்று அர்ச்சுனன் தயங்கினான்.

“பார்த்தாயா? உன்னிடம் இன்னும் ஆசாபாசங்கள் இருக்கின்றன. கடமை உணர்வு இல்லை.” இதைக் கேட்டதும் அர்ச்சுனன் அரைகுறை மனத்தோடு சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். உடனே கண்ணன் அர்ச்சுனனுடைய தேரை வீட்டுமன் இருந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தினான். வீட்டுமன் தேரும், அர்ச்சுனன் தேரும் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் போர் தொடங்கிற்று. திசையெட்டும் அதிரச் செய்த முழக்கத்தின் நடுவே ‘விர் விர்’ ரென்று அம்புகளும் வேல்களும் வாள்களும் பாய்ந்தன. போர்க்களம் முழுவதும் கிளர்ச்சியும் குமுறலுமாக விளங்கிற்று. இவ்வாறாக அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்து கொண்டிருந்தபோது ‘சிகண்டி’ போர்க்களத்தில் புகுந்து வீட்டுமனுக்கு முன்னால் வந்து அவன் காணும்படி நின்றான். தான் முன்பு செய்திருந்த சப்தப்படி சிகண்டியை எதிரே கண்டவுடன் வீட்டுமன் போர் செய்வதை நிறுத்தி விட்டான். சிகண்டி வந்ததனால் வீட்டுமனிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை அருகிலிருந்த துச்சாதனன் கவனித்து விட்டான், திடுமென்று வில்லை வளைத்துக் கொண்டு சிகண்டியின் மேல் பாய்ந்தான் துச்சாதனன். அதைக் கண்டு நடுங்கி வெலவெலத்துப் போன சிகண்டி உயிர் தப்பினால் போதுமென்று குதிகால் பிடரியில் பட ஓடத் தொடங்கினான். சிகண்டியின் உருவம் போர்க்களத்திலிருந்து மறைந்ததோ, இல்லையோ, வீட்டுமன் மீண்டும் அர்ச்சுனனோடு போர் செய்ய ஆரம்பித்தான். இம்முறை வீட்டுமன் செய்த போரில் ஆவேசம் மிகுந்திருந்தது. அவன் செலுத்திய அம்புகள் அர்ச்சுனனை மாத்திரம் புண்படுத்த வில்லை. தேர்ப்பாகனாக வீற்றிருந்து தேரைச் செலுத்திய கண்ணன் மேலும் அம்புகள் தைத்தன. இவ்வாறு சமாளிக்க முடியாத வேகத்தோடு வீட்டுமன் போரிடுவதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டும் தந்திரமாகச் சிகண்டியை வரவழைத்து எதிரே நிறுத்தினான். சிகண்டியைக் கண்டதும் உடனே வீட்டுமன் போரை நிறுத்தி விட்டு நின்றான்.

“இது தான் நல்ல சமயம்! இப்போது அவர்மேல் அம்புகளை ஏவி வில்லை ஒடித்துவிடு... உடனே செய்..” என்று கண்ணன் அர்ச்சுனனைத் துரிதப்படுத்தினான். அர்ச்சுனன் உடனே வில்லைத் துளைக்கும் வேகத்தில் வீட்டுமனை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். வீட்டுமனுடைய வில் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. அவன் வெறுங்கையனாகத் தேரின் மேலே நின்றான். சிகண்டியும் அருச்சுனனுமாக மாறி மாறி அம்புகளைத் தொடுத்தனர். வீட்டுமனுடைய உடலில் அம்புகள் துளைத்து மொய்த்தன. இரத்தம் தேர்த்தட்டுகளில் வடிந்து ஒழுகியது. சிறிது நேரத்தில் உடல் தளர்ந்து சோர்வோடு கீழே விழுந்தான் வீட்டுமன். அந்த வேதனையும் வலியும் மிகுந்த நிலைமையிலும் கூட அவனுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “தாம் தளர்ந்து விழுவதற்குக் காரணமாக ஏவப்பட்ட அம்புகளில் பெரும்பாலானவை அர்ச்சுனனுடையவை” என்ற எண்ணமே அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அப்போது துரியோதனனின் தம்பிமார்கள் கீழே விழுந்த அவனைத் தூக்குவதற்கு ஓடி வந்தனர்.

“வேண்டாம்! வேண்டாம்! என்னைத் தூக்காதீர்கள்.. இப்படியே விட்டுவிடுங்கள். இனி நான் மீண்டும் இந்தப் பிறவியில் உயிரோடு எழுந்திருந்து போர் செய்யப் போவதில்லை. மகா வீரனான அர்ச்சுனனுடைய அம்புகளால் நான் வீழ நேர்ந்ததே என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நீங்கள் என்னைச் சுற்றி நிற்க வேண்டாம். போய் உங்கள் அண்ணன் துரியோதனனோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்துப் போரிடுங்கள். எனது உயிரின் முடிவு இதோ, மிக அருகில் என்னை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது” இப்படிச் சொல்லி விட்டு மீண்டும் சோர்ந்து விழுந்து விட்டான் வீட்டுமன். வேதனையால் மேல்மூச்சுக் கீழே மூச்சு வாங்கியது. வாயிலிருந்து மெல்லிய முனகல் ஒலிகள் கிளம்பின. இரத்தம் பாய்ந்து விழுந்த இடத்தை எல்லையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செய்தி போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. ‘வீட்டுமன் வீழ்ந்து விட்டான், வீட்டுமன் வீழ்ந்து விட்டான், என்று எங்கு நோக்கினும் அதே பேச்சாக இருந்தது. பாண்டவர்களும் கெளரவர்களும் போரை நிறுத்தி விட்டனர். இருபக்கத்தையும் சேர்ந்த முக்கியமானவர்களெல்லோரும் வீட்டு மனுக்கருகே வந்து பயபக்தியோடு நின்று கொண்டனர். படைகளும் அந்த மகாபுருஷன் வீழ்ந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கூடி விட்டன. கண்ணனும் அருச்சுனனும் தேரிலிருந்து இறங்கி வீட்டுமனின் தலைப்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள். காலத்தைக் கணிக்கும் சோதிடர்கள் ஓடிவந்தனர். வீட்டுமன் தளர்ந்து வீழ்ந்த நேரம் தட்சிணாயன காலம் என்று அறிவித்தனர். தட்சிணாயன காலத்தில் இறப்பதற்கு வீட்டுமன் விரும்பவில்லை. விரைவில் வரப்போகின்ற உத்தராயண காலம் வந்த பின்பே இம்மண்ணுலகிலிருந்து உயிர் விடுவதென்று தீர்மானித்தான் அவன். புலனுணர்வுகளை வென்று வாழ்வெல்லாம் தன்னை அடக்கி வாழ்ந்த அந்த மூதறிஞன் தனது அந்திம காலத்தில் உயிரோடும் உடலோடும் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் யாருமே இல்லை. கடமைக்காக அவன் மேல் அம்பைச் செலுத்தி வீழ்த்திய அர்ச்சுனனே இப்போது கண் கலங்கி நின்றான். வணங்காமுடியோனாகிய துரியோதனன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தான். மகிழ்ச்சி, துன்பம் இவற்றுக்கு ஆளாகாமல் மனத்தைப் பக்குவப் படுத்தியிருந்த தருமனும் வருத்தத்தின் எல்லையில் மனம் பேதலித்து நின்றான். அணையப் போகிற விளக்கின் இறுதிக் கால ஒளி போல்வீட்டுமன் விழிகள் தன்னைச் சுற்றி நின்றவர்களை ஏறிட்டுப் பார்த்தன. தனக்காக அழுகிறவர்கள், கண் கலங்கி நிற்பவர்கள் எல்லோரையும் அவன் கண்கள் கண்டன. உணர்ச்சி மயமான, உள்ளத்தை உருக்கும் சோகம் நிறைந்த சொற்பொழிவு ஒன்று அந்த இறுதியான நிலையில் மங்கிய தொனியில் அவன் வாயிலிருந்து வெளி வந்தது.

“அன்பர்களே! நண்பர்களே! என் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட உறவினர்களே! வீரர் பெருமக்களே! நீங்கள் யாரும் எனக்காக அழக்கூடாது. மரணம் விலக்க முடியாதது. ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பு இறப்புகளை அடைந்தே தீரவேண்டும். நான் கோழையாகவோ, கையாலாகாதவனாகவோ இறந்து போய்விடவில்லை. மார்பிலே அம்பு தைத்து வீரலட்சணத்தோடு வீரனாகவே இறக்கப் போகிறேன். இதோ என் உடம்பெங்கும் தைத்து ஊடுருவித்தரையில் என்னைக் கிடத்தியிருக்கும் இவ்வளவு அம்புகளும் எனக்குப் படுக்கை விரித்தது போலத் தோன்றுகின்றன. மலர்ப்படுக்கையைக் காட்டிலும் சிறந்ததாக இந்த அம்புப் படுக்கை எனக்குத் தோன்றுகின்றது. இத்தகைய அம்புகளை என் மேல் எய்தவன் அர்ச்சுனன் என்பதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது” - இவ்வாறு கூறிக்கொண்டே வந்த வீட்டுமன் பேச்சை நிறுத்திவிட்டு அர்ச்சுனனைச் சைகை காட்டித் தன் அருகே அழைத்தான். அர்ச்சுனன் இன்னும் அருகில் நெருங்கி வீட்டுமனின் தலைப்பக்கமாகக் குனிந்து உட்கார்ந்தான். “அர்ச்சுனா, என்னுடைய தலையைப் பார்த்தாயா? தாங்கிக்கொள்வதற்கு அணைவு ஏதும் இல்லாமல் தரையிலிருக்கிறது! இதற்காக நீதான் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். உன் அம்புகளில் ஒன்றைத்தரையில் நட்டு அதன்மேல் என் தலையை அணைவாகத் தூக்கி வைத்துவிடு. இந்தச் சிறிய உதவியை என் பொருட்டு நீ செய்வாயா? உன் கையால் உதவி பெறுவதில் எனக்கு ஒரு பெருமை அப்பா! ‘மாட்டேன்’ என்று சொல்லாமல் இந்தக் கிழவனின் வேண்டுகோளை நிறைவேற்று” அவனுடைய பேச்சு அர்ச்சுனனின் இதயத்தை உருக்கிப் பிழிந்தது. அம்பறாத் தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து நட்டு அதன் மேல் உயரமாகவும் அணைவாகவும் வீட்டுமனின் தலையைத் தூக்கி வைத்தான். அர்ச்சுனன் இதைச் செய்து முடிந்ததும் நன்றி தவழும் கண்களால் அவனை ஆவல் ததும்பப் பார்த்தான் வீட்டுமன். அர்ச்சுனன் தலையை குனிந்து கொண்டான்.

“அப்பா துரியோதனா! கலக்கத்தையும் குழப்பத்தையும் இனிமேல் விட்டுவிடு. வீணே நீ எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய்! என் காலமோ முடிந்து கொண்டிருக்கிறது. மேலும் போரை நிர்வகித்து நடத்துவதற்கு தகுதிவாய்ந்த படைத் தலைவனைத் தேடிக் கொள்! உன் மனத்தின் ஆசைகளையும் இந்த அந்திம காலத்திலும் நான் உணர முடிகிறது! எனக்கு அடுத்தபடியாக உன் கூட்டத்தில் கர்ணன் தான் சிறந்தவன். வில் வித்தையிலும் போர்த்திறமையிலும் நிகரில்லாத தகுதி உடையவன். அவனைப் படைத்தலைவனாக நியமித்துக் கொள். என் வார்த்தையை நிறைவேற்று.”

சம்மதத்திற்கு அடையாளமாக துரியோதனன் தலையை அசைத்தான். அந்தத் தலையசைப்பில் ஜீவனில்லை; உணர்ச்சியும் இல்லை. இந்த உலகத்தில் வீட்டுமன் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம், அல்லது இந்த உலகம் வீட்டுமனுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் அநேகமாக முடிந்து விட்டன. சாவின் வருகையையும் அது நேரப் போகின்ற உத்தராயண புண்ணிய காலத்தையும் எதிர்நோக்கி அவனும் அவனுடைய சிற்றுயிரும் காத்திருந்தன. வீட்டுமன் இறப்பை எதிர்நோக்கி நிற்கும் இந்த அந்திம காலச் செய்தியை ‘சஞ்சயன்’ மூலம் தந்தை திருதராட்டிரனுக்குக் கூறி அனுப்பினான் துரியோதனன். தன் குலத்துக்கே பெருமை அளித்துக் கொண்டிருந்தவனும் இணையற்ற வீர புருஷனும் ஆகிய வீட்டுமன் சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி கண்ணில்லா மன்னனைக் கண்ணீர் விட்டு அழச் செய்தது. துயரத்தில் ஆழ்ந்துபோனான் துரியோதனனின் தந்தை. “பதினோராவது நாள் போருக்கு யாரைப் படைத்தலைவராக்கலாம்?” -என்ற சிந்தனையில் மூழ்கினான் துரியோதனன்.

வீட்டுமன் அபிப்பிராயப்படியே கர்ணனை நியமிக்கலாம் என்று முதலில் அவன் எண்ணினான். பின்பு சிந்தித்ததில் அது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆகவே கர்ணனை இப்போதே தலைவனாக நியமித்து விட்டால் பின்பு கடைசிக் காலத்தில் நமக்கு வேறு யார் துணையாக இருக்க முடியும்? ஆகவே கர்ணனை இப்போது நியமிக்க வேண்டாம். பின்பு பார்த்து கொள்ளலாம். இப்போதைக்கு துரோணரைப் படைத்தலைவராக நியமித்து விடலாம்’ -என்று தனக்குத் தானாகவே ஒரு புதுத் தீர்மானம் செய்து கொண்டான் துரியோதனன். தன் தீர்மானப்படியே துரோணரை அழைத்து “வீட்டுமர் மரணப்படுக்கையில் இருப்பதனால் அவர் இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த படைத் தலைமைப் பதவியை இனிமேல் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுக்கக்கூடாது” என்று வேண்டிக் கொண்டான். துரியோதனனின் இந்த வேண்டுகோளைத் துரோணர் மறுக்கவில்லை. படைத்தலைமையை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். கெளரவசேனை முழுவதும் துரோணரைப் புதுப்படைத் தலைவனாக ஏற்று அதற்குரிய மரியாதைகளையும் சிறப்புகளையும் அவருக்குச் செய்தன. யாவரும் பதினோராவது நாள் காலை விடியப் போவதை எதிர்பார்த்திருந்தனர்.

(வீட்டும பருவம் முற்றும்)