மகாபாரதம்-அறத்தின் குரல்/7. நன்றி மறக்கமாட்டேன்

விக்கிமூலம் இலிருந்து
7. நன்றி மறக்கமாட்டேன்

கர்ணனுடைய மாளிகையில் அவன் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். இந்திரன் கிழவனைப் போல வந்ததும் கவச குண்டலங்களை வாங்கிக் கொண்டு போனதும் ஆகிய நினைவுகள் அவன் மனத்திரையில் நிழலெனப் படிந்து கொண்டிருந்தன. ஏதேதோ பலவகைப் பட்ட வேறு எண்ணங்களும் இடையிடையே மனத்தில் குமுறிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் சுற்றிலும் மிரள மிரளப் பார்த்துக் கொண்டே குந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கர்ணன் அவள் உள்ளே வருவதைப் பார்த்து விட்டான். உடனே அவளுக்கு எதிரே வந்து “தாங்கள் தான் என்னைப் பெற்ற தாய் என்று சமீபத்தில் கண்ணனிடம் கேள்விப்பட்டேன். அது உண்மையாக இருக்குமானால் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பாசமும் கடமையும் எனக்கு உண்டு” என்றான். குந்தி இதற்கு மறுமொழி கூறாமல் சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்தாள். பின்பு துணிவை வரவழைத்துக் கொண்டு எல்லா விவரங்களையும் கூறினாள். அவனைச் சிறு குழந்தையாகப் பெற்ற சிறிது போதிலேயே பெட்டியில் வைத்து விட்டது தொடங்கி யாவும் கூறினாள். கர்ணன் யாவற்றையும் உருக்கமாகக் கேட்டான். எல்லாம் நம்பக் கூடியவனவாகத்தான் இருந்தன. ஆனாலும் பாண்டவர்களுக்கு ஆதரவு தேடுவதற்காக மாயனான கண்ணனே குந்தியைக் கொண்டு இப்படி ஒரு, வஞ்சக நாடகத்தை நடிக்கச் செய்கின்றானோ?’ என்று கர்ணனுக்கு ஒரு சந்தேகமும் இருந்தது. குந்தியினிடம் நேருக்கு நேர் அந்தச் சந்தேகத்தையும் கேட்டு நிவர்த்தித்துக் கொள்ள அவன் ஆசைப்பட்டான். அதற்காக அவளுக்கு ஒரு கடுமையான சோதனையையும் ஏற்படுத்தினான்.

“அம்மா! நீங்கள்தான் என்னுடைய தாய் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் என் மனத்தில் சில சந்தேகங்கள் குறுக்கிடுகின்றன. அவற்றை நீக்கித் தெளிவு பெற வேண்டுவது அவசியமே. முன்பே பல பல பெண்கள் எனது செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருமையிலும் பங்கு கொள்ள ஆசைப்பட்டு என் தாய் என்று பொய் உறவு கொண்டாடி வந்தனர். பேய் போன்ற தீய இயல்பும் தீய எண்ணங்களும் படைத்த அந்தப் பெண்களைச் சரியானபடி சோதித்துத் தண்டித்தேன். மாயத்தன்மை பொருந்தியதும் தேவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டதுமான ஒரு ஆடை என்னிடமிருக்கிறது. என்னை மெய்யாகவே பெற்ற தாயைத் தவிர வேறு யார் அணிந்து கொண்டாலும் அந்த ஆடை அவர்களை எரித்துவிடும். இதற்கு முன் என்னைத் தேடி வந்த போலித் தாய்களும் அப்படியே அழிந்து போய்விட்டனர். தாங்கள் என்னுடைய உண்மைத் தாயாயிருக்கும் பட்சத்தில் அந்த ஆடை தங்களை ஒன்றும் செய்யாது, இதோ அந்த ஆடையை இப்போது கொண்டு வருகிறேன்” என்று கூறிக்கொண்டே கர்ணன் உள்ளே சென்று அந்த அற்புத ஆடையை எடுத்துக் கொண்டு வந்து குந்தியிடம் கொடுத்தான்.

கர்ணன் கூறியபடி அந்த ஆடையை விரித்துத் தன் உடல் மறையப் போர்த்திக்கொண்டாள் குந்தி. நாழிகை விநாடி விநாடியாக வளர்ந்தது. மேலே போர்த்தப்பட்ட அந்த ஆடை குந்தியை ஒன்றும் செய்யவில்லை. பொலிவாக விளங்குகிற ஆடையைப் போர்த்திக் கொண்ட சிறப்பான தோற்றத்துடனே புன்முறுவல் தவழ மகனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் குந்தி.

“அம்மா! இனிமேல் சந்தேகமே இல்லை நீங்கள் தான் என்னைப் பெற்ற தாய். நான் உங்கள் புதல்வன்” என்று அன்பு ததும்பக் கூறிக் கொண்டே அவள் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான் கர்ணன். குந்தி, மகனைத் தன் கைகளால் எடுத்துத் தூக்கி நிறுத்தி உச்சி மோந்து தழுவிக் கொண்டாள். “கர்ணா! மகனே; நான் உன்னைப் பெற்ற பின் உன் முகத்திலேயே விழிக்க முடியாத பாவியாகிவிட்டேன். என் தவறுகளை மறந்து மன்னித்துவிடு அப்பா. உன் சகோதரர்களாகிய பாண்டவர்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தனியே தங்கி நாடிழந்த நிலையில் இருக்கிறார்கள். நீ உடனே அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து மூத்தவன் என்ற பொறுப்போடு அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.” -குந்தி மனமுருக வேண்டிக் கொண்டாள்.

“தாயே! கடமையைக் காட்டிலும் நன்றி பெரியது அல்லவா? நினைவு தெரியாத குழந்தையாக இருக்கும் போதே நீங்கள் பெற்ற பாசத்தையும் மறந்து என்னை ஆற்றில் மிதக்க விட்டுவிட்டீர்கள். என்னை வளர்த்து மனிதனாக்கியவன் துரியோதனன். இப்போது நான் இருக்கும் சிறப்பான நிலைக்கு அவனே காரணம். என்னை ஒரு நாட்டுக்கு அரசனாக்கித் தன் சகோதரர்களும் பிற சிற்றரசர்களும் வணங்கிப் போற்றும்படிச் செய்ததும் அவனே. இன்னும் எண்ணத் தொலையாத எத்தனையோ விதங்களில் அவனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஒரு நாள் துரியோதனன் துணைவியாகிய பானுமதியும் நானும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தோம். ஆட்டம் சுவை நிரம்பிய ஒரு கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது, வெற்றி எனக்காக அவளுக்கா என்று அறியத் துடிதுடிக்கும் ஆர்வத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாடிக் கொண்டிருந்த மாளிகையின் வாயில்புறத்தைப் பார்த்து அவள் அமர்ந்திருந்தாள். அதற்கு எதிர்புறமாக நான் அமர்ந்திருந்தேன். விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே துரியோதனன் வாயில் வழியாக உள்ளே வந்திருக்கிறான். நான் வாயிற்புறத்துக்கு நேரே முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததனால் அவன் வாயில் வழியாக உள்ளே நுழைவதைக் கவனிக்கவில்லை. ஆனால் அவள் பார்த்து விட்டாள். கணவன் முன்னால் எழுந்து நிற்க வேண்டிய மரியாதைக்காகக் குபீரென்று எழுந்திருந்தாள். விளையாட்டு வெறியில் திளைத்திருந்த நான், அவள் ‘எனக்கு வெற்றி கிடைத்துவிடப் போகிறதோ’ என்று அஞ்சியே நடு விளையாட்டில் எழுந்திருப்பதாக நினைத்துக் கொண்டேன், எனக்கு ஆத்திரம் வந்து விட்டது. மரியாதை, வரன்முறை எல்லாவற்றையும் மறந்து அவளைத் தொட்டு அவள் இடுப்பிலிருந்த மேகலையைப் பிடித்து இழுத்து விட்டேன். நான் இழுத்த வேகத்தில் மேகலை அறுந்துவிட்டது. அறுந்த மேகலையிலிருந்து மணிகள் சிதறின. நானும் பதறிவிட்டேன். அவளும் பதறிவிட்டாள். “என்ன கர்ணா! இந்த மணிகளை எல்லாம் நான் எடுத்துக் கோத்து விடட்டுமா?” என்று கேட்டுக் கொண்டே விகல்பமில்லாத முகபாவத்தோடு துரியோதனன் எனக்கு முன்வந்தான். அப்போதுதான் துரியோதனன் அங்கே வந்திருப்பதும் அவள் எழுந்திருந்ததன் காரணமும் எனக்கு விளங்கின. தனிமையாக இருக்கும்போது ஒருவன் மனைவியிடம் இப்படி அடாத முறையில் அத்துமீறி நடந்து கொண்டிருந்தால் காரணத்தைக்கூட ஆராயாமல் கொலை செய்ய வந்து விடுவான். ஆனால் துரியோதனுடைய பெருந்தன்மைதான் அவன் என்னை மன்னிக்குமாறு செய்தது. நான் செய்தது மிகப் பெரிய தவறுதான்! ஆனால் அவன் அதை ஒரு சிறிய தவறாகக்கூட எண்ணவில்லை. அப்படிப்பட்ட துரியோதனனுக்கு என் உயிரையே கொடுத்தாலும் தகுமே! நான் எப்படி அம்மா நன்றி மறப்பது? சோற்றுக்கடன் கழிப்பதற்காகவாவது போரில் அவன் பக்கம் என் உயிரைத் தியாகம் செய்தாக வேண்டும். தாயே! தயவு செய்து நீங்கள் வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். மறுக்காமல் தருகிறேன், என்னைப் பாண்டவர்கள் பக்கம் சேரும்படியாக மட்டும் வற்புறுத்தாதீர்கள்! நான் உங்களுக்குத் தரமுடியாதது இது ஒன்று தான்!” - கர்ணன் உருக்கமாக நீண்ட நேரம் பேசி முடித்தான்.

“அப்படியானால் நான் கேட்கின்ற வேறு சில வேண்டுகோள்களையாவது நிறைவேற்றுவாயா?”

“ஆகா! கேளுங்கள். தாராளமாக நிறைவேற்றுகிறேன்."

“நீ உன் சகோதரர்கள் ஐவரில் அர்ச்சுனன் ஒருவனை மட்டும்தான் எதிர்த்துப் போர் புரிய வேண்டும், மற்ற நால்வரோடும் போர் புரியக் கூடாது.”

“சரி அப்படியே!..”

“இன்னும் ஒரு வேண்டுகோள். அர்ச்சுனனைப் பழிவாங்குவதற்கென்றே உன்னிடம் வளர்ந்து வரும் நாகாஸ்திரத்தை ஒரே ஒரு முறைக்கு மேல் நீ அவன் மேல் எய்யக் கூடாது.” கர்ணன் இந்த இரண்டாவது வேண்டுகோளைக் கேட்டதும் சிறிது தயங்கினான். ‘வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். தருகிறேன்’ என்று தாய்க்குக் கொடுத்த வாக்கு நினைவிற்கு வந்து, “சரி அம்மா! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் தொடுக்க மாட்டேன். உங்கள் வேண்டுகோள்கள் இரண்டையும் நான் ஒப்புக் கொண்டு அவற்றின் படியே நடக்கிறேன்.”

“மகனே! நல்லது. நீ என்னிடம் கேட்க வேண்டிய வேண்டுகோள் ஏதேனும் இருந்தால் கேளேன்.”

“ஆமாம் அம்மா! நானும் சில வேண்டுகோள்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அவற்றை மறுக்க மாட்டீர்கள் அல்லவா?”

“உன்னைப் பெற்ற தாயாக வாய்த்ததே பெரும் பேறு. உன் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வதைவிடச் சிறந்த பாக்கியம் எனக்கு வேறென்ன இருக்கிறது?”

“விதியின் வலிமை நம்முடைய வலிமைகளை எல்லாம் காட்டிலும் மிகப் பெரியது அம்மா! குருக்ஷேத்திரப் போரில் நான் அர்ச்சுனனுடைய வில்லால் கொல்லப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. நான் இறந்த பிறகு என் சடலத்தை அனாதரவாக விட்டுவிடாதீர்கள். என்னுடைய வலிமைக்குக் காரணமானவற்றையெல்லாம் உங்கள் வேண்டுகோள்களால் கட்டிப் போட்டுவிட்டீர்கள். என் சடலத்திற்குச் செய்யப் பெற வேண்டிய நீர்க் கடன்களையும் தீக்கடன்களையுமாவது முறையாக என் தம்பிமார்களைக் கொண்டு செய்யுங்கள். போர்க்களத்தில் கூடியிருக்கும் மணிமுடி தரித்த மன்னர்கள் “கர்ணனை இறுதிக் கடன் செய்து எரிப்பதற்குக் கூட ஆள் இல்லை” என்று இழிவாகப் பேசும்படி விட்டுவிடாதீர்கள். இன்னொன்றும் வேண்டிக்கொள்கிறேன். நான் இறந்த பின்பாவது ‘எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன்’ என்ற உறவு முறையை உலகறிய ஒப்புக் கொண்டு பரவச் செய்யுங்கள். என் சடலத்துக்காவது பாலூட்டி அந்த உறவு முறையை வெளிப்படுத்துங்கள். ‘பெற்றவள் யார்? பெற்றவன் யார். உடன் பிறந்தோர் யார்? ஒன்றுமே தெரியாத அனாதைப் பயலல்லவா கர்ணண்! என்ற பழிச்சொல் நான் மறைந்த பிறகாவது நீங்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செய்வீர்களல்லவா?”

“கட்டாயம் செய்கிறேன் மகனே! உன்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதால் உனக்கு மட்டுமா பெருமை? எனக்குத்தானே பெருமை?” -என்று குந்தி அவன் வேண்டுகோளுக்கு இணங்கி உறுதிமொழி கொடுத்தாள். பின்பு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தாள். அவளைத் தன்னிடமிருந்து அனுப்ப மனமில்லாமல்தான் விடை கொடுத்தனுப்பினான் கர்ணனும். அங்கு விடை பெற்றுச் சென்ற குந்தி, நேரே கண்ணனிடம் சென்றாள். நடந்தவற்றை எல்லாம் கூறுமாறு கண்ணன் கேட்டான். குந்தி கர்ணனைத் தான் சந்தித்தது முதல் தனக்கும் அவனுக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறினாள்.

“குந்தி! இந்த நிகழ்ச்சிகள் இப்போதைக்கு உன்னையும் என்னையும் கர்ணனையும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இரகசியமாகவே இருக்கட்டும்” என்று குந்தியிடம் வேண்டிக் கொண்ட கண்ணபிரான் தான் அத்தினாபுரியிலிருந்து திரும்புவதாக அவளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான். கண்ணன் அங்கிருந்து புறப்படும்போது அவனுடன் வந்திருந்த சிற்றரசர்கள், பரிவாரங்கள் தவிர வேறு சிலரும் புறப்பட்டனர். அவர்கள் தம்முடன் பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு வருவதனால் சில குழப்பங்கள் நேரிடலாம் என்று கருதிய அவன், அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டான். பாண்டவர்களைச் சந்தித்துத் தூது போன இடத்தில் நடந்தவற்றையெல்லாம் விபரமாகக் கூறினான் கண்ணன்.

‘இனிநாம் துரியோதனாதியர்களோடு போர் செய்து நம் உரிமையைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று நினைத்தனர் சகோதரர்கள் ஐவரும். தங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்த பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் படைகளைக் கொடுத்துப் போரில் நேரடியாக உதவிபுரிய வேண்டுமென்று தூது அனுப்பி வேண்டிக் கொண்டார். போர் ஏற்படப் போகிறதென்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் வாளா இருக்கலாமா? கண்ணபிரானின் ஆலோசனைப்படி வரவிருக்கும் பெரிய போருக்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். போர்ச் செய்தியைத் தூதுவர்கள் மூலமும் திருமுகங்களின் மூலமும் அறிந்து கொண்ட அரசர்கள் தத்தம் படைகளோடு பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். நியாயத்தைக் கூறுகிற தருமநெறி போலவும் தருமத்தை விட்டு விலகாத மெய்மை போலவும் அரசர்கள் பலரின் படைப்புலம் பாண்டவர்கள் பக்கம் கிடைத்தது.