மகாபாரதம்-அறத்தின் குரல்/8. படை ஏற்பாடுகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. படை ஏற்பாடுகள்

காட்டாறுகள் பல பொங்கியெழுந்து கடலில் வந்து ஒன்று சேருவது போலப் பாண்டவர்கள் பக்கம் அரசர்களும் படைகளும் மேலும் மேலும் வந்து குவிந்தார்கள். திரெளபதியின் தந்தையாகிய துருபத மன்னன் தனக்கு அடங்கிய சிற்றரசர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். தமிழ்நாட்டு மூவேந்தர்கள் வந்திருந்தார்கள். உலகில் பாண்டவர்கள் பக்கமே உண்மையும் அறமும் ஓங்கி நிற்கின்றன என்பதை உணர்ந்து கொண்டிருந்த எல்லா அரசர்களும் வந்திருந்தனர். முடி சூடிய மன்னர்களும், வாலைப்பருவத்து இளவரசர்களும், படை நடத்தும் தலைவர்களும், அரசு நெறி செலுத்தும் அமைச்சர்களும், உற்சாகத்தோடு பாண்டவர்களுக்கு உதவிபுரிய வந்து காத்திருந்தனர். சீனர், தெலுங்கர், மாளவர், கலிங்கர், கன்னடர், மகாதர் என்று அடுக்கிக் கொண்டிருப்பதை விடத் தருமத்தின் மேல் நம்பிக்கை யுள்ளவர்கள், தருமத்தைத் தோற்க விடக் கூடாது என்று உறுதியுள்ளவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் எனச் சுருக்கமாகக் கூறி முடித்து விடலாம்.

தங்களுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக வந்திருக்கும் அவர்களை அன்பு ததும்பும் மனத்தோடு வரவேற்றுத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர் பாண்டவர். கண்ணன் உடனிருந்தான். அத்தினாபுரிக்குத் தூது சென்றிருந்தபோது அங்கு நடந்தவற்றை வந்திருந்த மன்னர்கள் எல்லோரும் கண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். “நண்பர்களே! தர்மயுத்தமாக நடக்க இருக்கின்ற இந்தப் போரில் படைப் பலத்தைவிட ஆத்மாவின் பலத்தையே நான் பெரிதாகக் கருதுகின்றேன். உங்கள் எல்லோருடைய நல்ல மனத்தாலும் உதவியாலும் தான் என் ஆன்ம பலம் வெற்றி அடைய வேண்டும். எனது இந்த நம்பிக்கையை நிறைவேற்றிவைப்பது உங்கள் பொறுப்பு!” என்று தருமன் வந்திருந்த அரசர்களை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டான்.

தருமனின் வேண்டுகோளால் மனமிரங்கிய மன்னர்கள், “பாண்டவர்களுக்கு உதவுவதில் பெருமைப்பட வேண்டியவர்கள் நாங்கள், இந்த உயிரும் இந்தப் பிறவியும் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக அழியுமானால் அது எங்கள் பேறு ஆகும். அந்தப் பெரும்பேற்றை இழக்க எங்கும், என்றும், எப்போதும் நாங்கள் தயாராக இல்லை” என்று மறுமொழி கூறினர்.

“போரில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பின்பு பார்க்கலாம். நீங்கள் கூறுகின்ற இந்த உறுதிமொழி இப்போதே வெற்றியை அடைந்து விட்டாற்போன்ற பெருமிதத்தை எனக்கு உண்டாக்குகின்றது. உங்களுக்கு என் நன்றி...” என்று தருமன் கூறினான். பின்பு எல்லோருமாகக் கூடிப் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். வலிமையும் ஆற்றலும் படைகளை நன்கு ஆளும் திறமையும் உடைய சிவேதன் தலைவனானான். சிவேதன் தலைவனாக வாய்த்ததில் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி வெறியில் அரவான் எழுந்து ஒரு சபதம் செய்தான். “துரியோதனாதியர்கள் படையில் பெரும் பகுதியை அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரை எதிர்நோக்கித் துடித்துக் கொண்டிருக்கின்றன என் தோள்கள்.” அரவானுடைய சபதத்தால் ஆவேசமுற்ற யாவரும் மகிழ்ச்சியோடு அதைக் கைகொட்டி வரவேற்றனர்.

இங்கே பாண்டவர்கள் பக்கம் படை ஏற்பாடுகள் இவ்வாறு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துரியோதனாதியர்கள் சும்மா இருப்பார்களா? அங்கே அவர்களும் படை ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொண்டுதான் இருந்தனர். கண்ணன் தூதாக வந்து குழப்பம் செய்து விட்டுப் போனவுடனே போர் நெருங்கி விட்டது என்று துரியோதனனுடைய உள் மனம் அவனுக்கு எச்சரித்துவிட்டது. ‘இனியும் படை வலிமையையும் துணைவலிமையையும் பெருக்காமல் இருப்பதில் அர்த்தமில்லை’ என்று எண்ணிய அவன் உடனே தனக்குப் பழக்கமுள்ள அரசர்களுக்கெல்லாம் படை உதவி கோரித் திருமுகங்கள் போக்கினான். ஆனால் தான் அனுப்பிய எல்லாத் திருமுகங்களிலும் அவன் ஒரு பெரிய தவறைச் செய்தான். மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் சரி பிறரிடம் உதவி கேட்கும் போது பணிவாகக் கேட்க வேண்டியதுதான் முறை! துரியோதனன் அனுப்பியிருந்த திருமுகங்களோ ‘வேலைக்காரனை மிரட்டிக் கட்டளையிடுவது’ போன்ற ஆணவமும் அதிகாரமும் பொருந்திய வாசகங்களால் நிறைந்திருந்தன. அவன் திருமுகங்களைப் படித்த எவருக்கும் அவற்றில் இருக்கும் ஆணவத்தைக் கண்டு ஆத்திரம் உண்டாகுமே அன்றி உதவி புரிய வேண்டும் என்ற நல்ல விருப்பம் உண்டாகாது. ஆனாலும் என்ன துரியோதனனைப் போலவே ஆணவக்கார அரசர்கள் சிலர் உலகில் இல்லாமலா போய்விட்டார்கள்? அவர்கள் அவன் கட்டளையைச் சிரமேற்கொண்டு உதவிப் படைகளோடு புறப்பட்டு வந்தனர். துரியோதனனுடைய ஆணவத்தை எதிர்த்து நிற்க ஆற்றலில்லாத சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டு வந்தனர். வலிமையும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ள பேரரசர்கள் அதிகமாக அவன் பக்கம் சேரவே இல்லை. இந்த நிலையில் வழக்கம் போலச் சூழ்ச்சியில் இறங்கியது துரியோதனனுடைய மனம், அந்த மனத்தின் இயல்பே அதுதானே?

மத்திரபதி மன்னன் என்று ஓர் பேரரசன்; அவன் பாண்டவர்களுக்கு மாமன் முறையுடையவன். போரில் பாண்டவர்களுக்கே உதவிபுரியவேண்டும் என்ற நோக்கத்தோடு தன் படைகளுடன் புறப்பட்டிருந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் வருகிற வழி துரியோதனன் நாட்டைக் கடந்து பாண்டவர்கள் இருப்பிடம் சேர வேண்டியதாக அமைந்திருந்தது. ஏதாவது சூழ்ச்சி செய்து அவனை நடுவழியிலேயே மறித்துத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டான் துரியோதனன். திட்டத்திற்கேற்ப ஒரு சதியும் செய்தான். மத்திரபதியின் படைகள் வருகிற வழியில் அப்படைகளுக்குச் சோறும் நீரும் கொடுத்து உதவும் அறச்சாலைகள் பலவற்றை ஏற்படுத்தினான். துரியோதனன் தன்னுடைய இந்த ஏற்பாடுகளைப் பாண்டவர்கள் செய்திருப்பதைப் போலத் தோன்றும்படிச் செய்திருந்ததனால் மத்திரபதி மன்னன் ஏமாந்துவிட்டான். வரவை முன்பே அறிந்து தருமன் தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு துரியோதனன் விரித்து வைத்திருந்த சூழ்ச்சி வலையில் விழுந்து விட்டான். சோறும் நீரும் கொடுத்து உபசரித்தவர்கள் தருமனுடைய ஆட்கள் எண்றெண்ணிக் கொண்டு, “என்னுடைய இந்தப் பெரிய படைகளும், நானும் உங்களுக்குத் துணையாகவே வந்திருக்கிறோம். இது சத்தியம்” என்று அவர்களுக்கு உறுதி மொழி கூறிவிட்டான் மத்திரபதி.

இறுதியில் துரியோதனனே அவனுக்கு முன் தோன்றி “மத்திரபதி மன்னா! நீ என்னுடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் எனக்கு உதவுவதாகச் சத்தியமும் செய்து விட்டாய்! இனிமேல் பாண்டவர்களை நினைப்பதில் பயனில்லை. மறந்துவிடும். என் பக்கம் போரில் உதவு” என்று கூறிய போதுதான் தனது அறியாமைக்கு வருந்தி வாடினான் மத்திரபதி மன்னன். சத்தியத்தை எப்படி மீறுவது? பாண்டவர்க்குப் படைத் துணையாக வந்தவன் விதிவசத்தால் கெளரவர்களுக்குத் துணையாக நேர்ந்தது. துரியோதனன் அரசாட்சியிலும் அவனுடைய கொள்கைகளிலும் நம்பிக்கையுள்ள வேறு பல அரசர்களும் அவன் பக்கம் படைத்துணையாக வந்தார்கள். ஏற்கனவே அவன் வசமிருந்த துரோணர் அசுவத்தாமன் முதலியவர்களின் படைகளையும் சேர்த்தால் பதினொரு அக்குரோணிப் (படைகளின் வகுப்பைக் குறிக்கும் ஒரு பிரிவு) படைகள் ஆயின. வந்தவர்களும் இருந்தவர்களுமாகிய படை வீரர்களுக்குப் பாசறைகள், போர்க் கருவிகள் முதலிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. வயது முதிர்ந்தவனும் பல பெரிய போர்களில் அனுபவம் கொண்டவனுமாகிய வீட்டுமன் கௌரவர்களின் படைத்தலைவனாக இருக்க வேண்டும் என்பதை யாவரும் வரவேற்றனர். அவர்கள் வேண்டுகோளை மறுக்க முடியாத காரணத்தாலும் துரியோதனனிடம் உண்டு வளர்ந்த நன்றிக்கடனைக் கழிக்க வேண்டும் என்பதற் காகவும்தான் வீட்டுமன் அந்தத் தலைமையை ஏற்றுக் கொண்டான். உண்மையைச் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு எதிராகப் படைத் தலைமை பூணும் ஆசையே அவனுக்கு இல்லை. இவ்வாறாக இரண்டு பக்கத்திலும் படை ஏற்பாடுகள் படைத்தலைமை ஏற்பாடுகள் எல்லாம் முடிந்தன.

அக்காலப் போர் முறைகளில் போர் தொடங்குவதற்கு முன் களப்பலி கொடுப்பது என்பதும் ஒன்று. இருசாராரில் எவராவது ஒருவர் நல்லவேளை பார்த்து மற்றொரு சாராரிடம், ‘இன்னாரைக் களப்பலியாகக் கொடுங்கள்’ என்று கேட்கிற முறைமையில் இது நடைபெறும். ‘களப்பலி’ என்பது போருக்கு ஆரம்ப நிகழ்ச்சி மட்டும் அல்ல. இதயத்தின் உறுதிக்கும் ஊக்கத்திற்கும் ஒரு பெரும் சோதனை. களப்பலி விஷயமாகத் துரியோதனன் வீட்டுமனைக் கலந்தாலோசித்தான். படைத்தலைவனான வீட்டுமன் கூறினான்:

“துரியோதனா! களப்பலி கொடுப்பதற்கு முன்னால் அதற்குரிய நல்லவேளையை முக்கியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவேளையை அறிந்து கூறுவதில் சகாதேவனைப் போல் வல்லவன் வேறெவனுமில்லை. அவன் நமக்குப் பகைவனேயானாலும் நீ போய்க் கேட்டால் நல்ல வேளையைக் கூறுவதற்கு அஞ்சவோ, மறுக்கவோ மாட்டான். அவனிடம் களப்பலி கொடுப்பதற்குரிய நல்லவேளையைக் கேட்டு அறிந்து கொண்டு அப்படியே அரவானிடம் போ. அரவானைச் சந்தித்து, “உன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கு நீ தயாராக இருக்கின்றாயா?” என்று கேள்! அரவான் பெருவீரன். அவனை உயிரோடு விட்டுவிட்டால் போரில் கௌரவர் படைகளைச் சூறையாடிச் சின்னபின்னம் செய்து விடுவான். எனவே அவனை முதலிலேயே களப்பலியாக வாங்கி விடுவது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். அரவான் தூய்மையும் மனவுறுதியும் மிக்க வீரன். ஆகையினால் நீ வேண்டுவதை எதிர்க்க மாட்டான் உன் வேண்டுகோளின் படியே தன்னைக் களப்பலியாகக் கொடுப்பதற்கும் இணங்கி விடுவான். நீ சகாதேவனையும், அரவானையும் சந்தித்து இந்த இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு வா! இப்போதைக்கு இது நமக்குப் பயனளிக்கக் கூடிய திட்டமாகும்” -என்று வீட்டுமன் கூறிய திட்டத்தில் தனக்கு நிறைய நன்மை இருப்பதை உணர்ந்த துரியோதனன் அப்படியே செய்யச் சம்மதித்துச் சகாதேவனையும் அரவானையும் காண்பதற்குப் புறப்பட்டான்.

சாதாரணமாக வேறு சமயமாயிருந்தால் அவன் தன்னை விட நிலையில் தாழ்ந்தவனாகிய சகாதேவனை அணுகுவதற்கு விரும்பியிருக்க மாட்டான், செயலில் தான் அடைகின்ற சாதகம் அதிகமாக இருப்பதனால் சகாதேவனையும் அரவானையும் வலுவில் சந்திக்கக் கிளம்பி விட்டான். துரியோதனன் தன்னைத் தேடி வரக் கண்ட சகாதேவன் பகைமையை மறந்து வாருங்கள் அண்ணா! இந்தப் பகைமை நிறைந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னைத் தேடி வந்திருப்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது வந்த காரியம் என்னவோ?” என்று வரவேற்று விசாரித்தான்.

“தம்பீ! பகைமையைப் பாராட்டாமல் நான் வந்த காரியத்தை முடித்துக் கொடுப்பாய் என்று நினைக்கிறேன். நல்ல நிமித்தங்களையும் வேளைகளையும் அறிந்து கூறுவதில் நீயே திறமை மிக்கவன். களப்பலி கொடுப்பதற்கு ஏற்ற நல்ல நேரத்தை ஆராய்ந்து எனக்குச் சொல்ல வேண்டும். சொல்லுவாயா?” -இவ்வாறு துரியோதனன் கேட்கவும் சகாதேவன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான்.

பின்பு துரியோதனனை நோக்கி “அண்ணா ! நல்லவேளையைச் சொல்கிறேன். கேளுங்கள். சூரியனும் சந்திரனும் செயலொழிந்து தங்களுக்குள் ஒன்று சேருகின்ற நேரம் அமாவாசை இரவே, அந்த நேரம்தான் களப்பலிக்கு ஏற்றது” என்றான். நல்லவேளையைத் தெரிந்து கொண்டு அரவான் இருக்கும் இடத்தை நாடிச் சென்றான் துரியோதனன். அரவானுக்கு முன்னால் அவனுடைய ஆண்மையை வானளாவப் புகழ்ந்து காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது துரியோதனன் கருத்தாக இருந்தது.

“அரவான்! உன் ஆண்மையும் வீரமும் உறுதி நிறைந்தவை, எதற்கும் அஞ்சாதவை என்று உலகமெல்லாம் புகழ்கிறார்கள். அந்தப் புகழை நிரூபித்துக் காட்டுவதற்குரிய ஒரு சந்தர்ப்பத்தை உனக்கு நான் தருகிறேன். அதை நீ பயன்படுத்திக் கொள்வாயா?” -அரவானைச் சந்தித்ததுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் துரியோதனன். துரியோதனனைக் கண்டதும் முதலில் அரவானுக்கு வெறுப்பே ஏற்பட்டது. ஆனாலும் அவன் தன்னைப் புகழ்வது போலக் கேட்ட கேள்வியில் கொஞ்சம் மயங்கி விட்டான் அவன்.

“என்ன செய்ய வேண்டும்? நான் செய்ய முடியாததும் ஒன்று இருக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள். அவசியம் செய்து முடிக்கிறேன்.” -அரவான் தானாகவே தன் தலையை வஞ்சகத்திற்குள் நுழைத்துக் கொண்டு விட்டான். ‘எங்கே?’ என்று காத்துக் கொண்டிருக்கின்ற துரியோதனனுக்கு இவ்வளவு இடம் கிடைத்தால் போதாதா?

“கட்டாயம் நான் சொல்வதை உன்னால் செய்ய முடியுமா அரவான்?”

“அதென்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? செய்கிறேன் என்றால் செய்தே தீருவேன். இது சத்தியம்! என்னை நீங்கள் முழுமனத்தோடு நம்பலாம்.”

“சத்தியம்தானே? அப்படியானால் போர் தொடங்குவதற்கு முன்னால் உன்னைக் களபலியாகக் கேட்கின்றேன். கொடு!”

தலையில் பேரிடிகள் ஒரு கோடி முறை விழுந்து ஓய்ந்தது போலிருந்தது அரவானுக்கு புகழ் வெறியில் முட்டாள் தனமாகத் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டதை எண்ணிக் குமுறினான். வாய்விட்டு அழமாட்டாத குறையாக மனம் கலங்கினான். குமுறினால் என்ன, கலங்கினால் என்ன? சத்தியம் செய்த பின் எப்படி மறுப்பது? கொடுத்த வாக்கை எடுக்க முடியுமா? வில்லிருந்து புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையும் திரும்பக் கிடைக்கவா போகின்றன?

“என்ன அரவான்? நீதான் மகா வீரனாயிற்றே? ஏன் அப்பா தயங்குகின்றாய்?”

“தயங்கவில்லை. களப்பலிதானே வேண்டும்? என்னைக் கொடுக்கின்றேன்! எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன், எனக்கு உயிரினும் வாக்குப் பெரிது.” அரவான் சம்மதித்து விட்டான். வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டதை எண்ணி மனம் கொதித்துக் கொண்டே அவன் தன் சம்மதத்தைத் துரியோதனனுக்குத் தெரிவித்தான். வந்த காரியங்கள் இரண்டுமே தடையற்ற வெற்றியாக முடிந்ததை எண்ணி மகிழும் மனத்தோடு துரியோதனனும் அத்தினாபுரிக்குத் திரும்பினான். சகாதேவனிடமும் அரவானிடமும் துரியோதனன் வந்து பேசி வாக்குப் பெற்றுச் சென்ற இந்த நிகழ்ச்சி பின்பே பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் தெரிந்தது. ஏமாந்துவிட்டதை எண்ணி ஏங்கினர் பாண்டவர். துரியோதனன் சூழ்ச்சியினால் செய்த ஏற்பாட்டை நாமும் சூழ்ச்சியினாலேயே முறியடிக்க வேண்டும் என்றான் கண்ணன்.

“மாயவனாகிய நீயே அந்தச் சூழ்ச்சியை எங்களுக்குக் கூறி உதவ வேண்டும். நாங்கள் அறத்தையும் உன்னையும் தவிர வேறு எதை நம்புவது?” என்று மனம் உருகக் கண்ணனிடம் வேண்டிக்கொண்டனர் பாண்டவர்கள். கண்ணன் கூறினான்: “துரியோதனன் களப்பலி கொடுப்பதற்கென்று நல்ல வேளையும் நல்ல ஆளையும் பார்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான். அவனை முந்திக் கொண்டு அதே வேளையில் அதே ஆளை நாமே நம் சார்பில் களப்பலி கொடுத்து விட்டால் என்ன?”

“அதெப்படி முடியும்? அந்த வேளையில் துரியோதனனும் அவனுடைய ஆட்களும் அரவானிடம் வாக்குப் பெற்றுக் கொண்டபடி அவனைப் பலிக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்களே?” என்று பாண்டவர்கள் கவலையோடு கண்ணனை நோக்கிக் கேட்டனர்.

“முடியாமல் என்ன? எல்லாம் நான் அல்லவா முன்னின்று முடித்து வைக்கப் போகிறேன்! பதினைந்தாவது திதியில் வரவேண்டிய அமாவாசையைப் பதினான்காந் திதியன்றே வரவழைத்துவிடலாம். அன்றே துரியோதனனை முந்திக்கொண்டு களப்பலியையும் கொடுத்து விடலாம்.”

“அமாவாசை திதியை ஒரு நாள் முன்பு வரவழைப்பதா? அதெப்படி முடியும்? பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காந் திதியாக வரவழைப்பது சாத்தியமான காரியமாகப்படவில்லையே!”

“உங்களுக்கு ஏன் அந்தத் தயக்கம்? அது சாத்தியமாகும் படிச் செய்து காட்டுகிறேன் நான்” -என்று கண்ணன் கூறினான்.