மகாபாரதம்-அறத்தின் குரல்/9. பாஞ்சாலி சபதம்

விக்கிமூலம் இலிருந்து

9. பாஞ்சாலி சபதம்

ஏமாற்றமடைந்த துரியோதனன் முன்னைக் காட்டிலும் பல மடங்கு சினமும் ஆத்திரமும் கொண்டிருந்தான். வீமன் பேசிய பேச்சு வேறு அவனை மனங்குன்றிப் போகச் செய்திருந்தது. ஒரே சமயத்தில் இரட்டைத் தோல்விகளை அடைந்துவிட்டது போல் அவன் மனம் புழுங்கினான். இது திரெளபதியை எப்படியாவது மீண்டும் வேறு இன வகையில் மானபங்கம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தை உறுத்தியது.

“துச்சாதனா! இந்த வீமனுடைய ஆண்மையைப் பின்பு பார்க்கலாம். இப்போது திரெளபதியைத் தூக்கி வந்து இந்த அவையிலுள்ள பலரும் காணும்படியாக என் தொடையில் அமரச் செய்! பார்க்கலாம், இவர்கள் வீரத்தையும், அவள், கற்பையும்."

துச்சாதனன் எழுந்து திரெளபதியை நோக்கிப் பாய்ந்தான். வேட்டைப் பொருளின் மேல் பாயும் மிருக வெறி அந்தப் பாய்ச்சலில் இருந்தது.

திரெளபதியின் உடலில் மீண்டும் நடுக்கம் தோன்றியது. ‘மானத்தைக் காத்தளித்த கண்ணபிரான், இப்போது காத்து கருணை செய்ய மாட்டானா?’ என்று கலங்கினாள். அக்கிரமத்தை எண்ணிக் கலங்கிய அவள் உள்ளத்தில் சினமும் தோன்றியது. சினம் வெறியாக மாறியது. வீமன் முழங்கியது போல அவள் முழங்கத் தொடங்கிவிட்டாள். அந்த முழக்கத்தைக் கேட்ட துச்சாதனன் இடியோசை கேட்ட நாகம் போல அவளை நெருங்குவதற்கு அஞ்சி அப்படியே நின்ற இடத்தில் பதுங்கி நின்றான்.

“வெட்கமில்லாமல் என்னைத் தன் தொடையிலே வந்து உட்காரும்படி அழைக்கிறான் இந்த அரசன். என்னை உட்காரச் சொல்லிய இவன் தொடையைக் கூரிய அலகுகளைக் கொண்ட பறவைகள் குத்திக் கிழித்துக் குலைப்பனவாகுக! என் சொல் வீண் போகாது. ஒரு நாள் இந்தத் தொடைக்கு அத்தகைய கதி நேரிடத்தான் போகிறது. இவன் நாசத்தை அடையத்தான் போகிறான். இந்தப் பேரவையிலே இன்று கூடியிருக்கும் சான்றோர்களுக்கு முன்னே நான் செய்கின்ற சபதம் ஒன்று உண்டு. பெரியோர்களே கேட்பீர்களாக, பலர் கூடியிருக்கும் இந்தப் பேரவைக்கு இழுத்து வரப்பட்டேன் நான். என்னுடைய கூந்தலையும் சேலையையும் மற்றொருவன் தொட்டு இழுக்கும்படியான அவமானத்தையும் இன்று அடைந்தேன். இவைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தவன் இதோ இந்த அவைக்குத் தலைவனாக வீற்றிருக்கும் கொடிய அரசனே ஆவான். இவனைச் சரியானபடி பழி வாங்காமல் விட மாட்டேன்.

என் கணவன்மார்களால் போர்க்களத்தில் இவனைக் கொல்லச் செய்து இவன் தொடையினின்று பீறிட்டெழும் குருதியைப் பூசினாலொழிய என் சினம் தீராது. இன்று விரிக்கப்பட்ட என்னுடைய இக் கூந்தல் இந்தச் சபதம் நிறைவேறினாலன்றி முடிக்கப்படாது. இது உறுதி. சத்தியம். என்னுடைய இந்தப் பயங்கரமான சபதம் நிறைவேறும்போது இந்த அரசனும் இவனுடைய குலமும் வேரற்று வீழ்ந்து போய்விடப் போகிறார்கள் பாருங்கள்.

துச்சாதனன் அவளை அணுகுவதற்கு அஞ்சி நடுநடுங்கி நின்று விட்டான். துணிவும் முரட்டுத்தனமும் திரெளபதியின் பேச்சால் அவனை விட்டு நழுவிப் போயிருந்தன. ஏற்கனவே ஆத்திரமும் கொதிப்பும் கொண்டிருந்த வீமன் தானும் எழுந்து நின்று ஒரு சபதம் செய்தான்.

“ஒழுக்கம் மிகுந்தவர்களும் பெரியோர்களும் நிறைந்துள்ள இந்தப் பேரவையில் என் மனைவியை இழிவு செய்தவர்களைப் போர்களத்தில் கொன்று பழி தீர்த்துக் கொள்ளாது விடமாட்டேன். இந்தத் துரியோதனனும் துச்சாதனனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் என் கையாலேயே சாகப் போகிறார்கள். திரெளபதியை மானபங்கப் படுத்த முயன்ற துச்சாதனின் இரத்தத்தைக் குடித்தாலொழிய என் ஆத்திரத்தின் தாகம் தீராது போல் இருக்கிறது. அது வரை தண்ணீரைக் கூட நான் என் கைகளால் குடிக்கப் போவதில்லை. அவசியமானால் என் கதாயுதத்தை நீரில் தோய்த்து அதிலிருந்து வடிகின்ற நீரையே பருகுவேன். இது என் சபதம்” வீமனுக்குப் பின் அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்துத் தங்கள் சபதத்தைக் கூறினர். தான் கர்ணனை கொன்று முடிக்கப் போவதாக அர்ச்சுனன் ஆவேசத்தோடு கூறினான். சகாதேவன் சகுனியையும், நகுலன் சகுனியின் மகனையும் கொல்லப் போவதாகக் கூறினார்கள், சகோதரர்களின் ஏகோபித்த சபதங்கள் கௌரவர்களை உள்ளூரத் திகில் கொள்ளச் செய்தன.

“நன்றாக வேண்டும் இந்தக் கெளரவர்களுக்கு! இவர்கள் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் செய்த தீமைகளை எண்ண முடியுமா? பாண்டவர்கள் தாங்கள் கூறிய சபதத்தின் படியே இவர்களை அழித்துவிடப் போவது என்னவோ உறுதிதான்” என்று அவையிலிருந்த அரசர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கற்பு நெறி தவறாத பெண் ஒருத்தியின் கண்கள் தீயவர்களின் கொடுமையால் கண்ணீரைச் சிந்துமாயின் அது இந்த உலகத்துக்குப் பெரிய அபசகுணம். வானத்தில் மேகங்கள் கூடாமலே இடி இடித்துவிடலாம். சூரியனின் வடிவத்தைச் சுற்றிக் கோட்டை கட்டினாற்போல் வளையம் தோன்றலாம். பகல் நேரத்தில் தோன்றக்கூடாத நட்சத்திரங்கள் தோன்றிவிடலாம். அவை மண்ணில் உதிர்கின்ற தீமையும் நிகழலாம். ஆனால் இவைகளை எல்லாம் விடப் பெரிய தீநிமித்தம் கற்புடைய பெண் கதறிக் கண்ணீர் சிந்துவதேயாம். திரெளபதியின் கண்ணீரும் உலகத்துக்கு அப்படி ஒரு பெரிய தீமையாக நேர்ந்திருந்தது. அவையிற் கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் இப்படி ஒரு பீதி பரவிப் போயிருந்தது. ‘என்னென்ன தீமைகளுக்கு இது எதுவாகுமோ? ஊருக்குத் துன்பம் வருமோ?’ என்று பலருக்கும் பலவிதமாக அச்சம் ஏற்பட்டது.

அதுவரை எல்லாத் தீமைகளையும் தடுக்காமல் வாளா வீற்றிருந்த திருதராட்டிரன் கூட அப்போது தான் கொஞ்சம் திகிலடைந்தான். அவன் நெஞ்சம் துணுக்குற்றது. தன் குலம் குடி எல்லாம் விரைவாக அழிந்து போவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை தோன்றி அவனை வதைத்தது. குருடனாகிய அவன் தன் அரியணையிலிருந்து இறங்கித் தட்டுத் தடுமாறித் திரெளபதி நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.

“அம்மா! நீ பெண் தெய்வம். தர்ம பத்தினி. உன் சக்தி பெரிது. அதை அறிந்து கொள்ளத் தெரியாமல் மூடர்களாகிய என் பிள்ளைகள் ஏதேதோ தீங்குகளை உனக்குச் செய்துவிட்டார்கள். எனக்காக அவற்றைப் பொறுத்துக் கொள். என் குலம் அழிவதும் தழைப்பதும் உன் கையில் இருக்கிறது அம்மா! பேதைகளாகிய என் புதல்வர்களின் குற்றத்தை மன்னித்து இந்தக் குலம் வாழ வழி செய் அம்மா” -திருதராட்டிரனுடைய வேண்டுகோளில் மன உருக்கம் புலப்பட்டது. அவனுடைய அந்த உருக்கம் மிகுந்த வேண்டுகோளால் திரெளபதியின் மனக்கலக்கம் கூட ஓரளவு குறைந்தது, பாண்டவர்களிடமும் இதே மாதிரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் அவன். சூதில் அவர்கள் பறிகொடுத்த எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறினான். “தம்பியின் புதல்வர்களே! உங்கள் ஆட்சி, அரசு, உடமைகள் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறேன். என் புதல்வர்களின் குற்றங்களை எல்லாம் மன்னித்து மறந்து விட்டு உங்கள் தலைநகருக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று பாண்டவர்களைக் கெஞ்சினான் திருதராட்டிரன்.

தங்கள் பெரிய தந்தையின் வேண்டுகோளுக்குப் பாண்டவர்கள் இணங்கி விடுவார்கள் போலிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சகுனியின் தடை முன்னே வந்து நின்றது. ‘பாண்டவர்களையும், திரெளபதியும் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் சூதாட்டத்தில் பறி கொடுத்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து விடுவதும் முறையல்ல! தருமன் முதலிய ஐவரும் நமக்கு எதிரிகள். என்றைக்கிருந்தாலும் அவர்கள் நம்மை அழித்துத் தொலைத்து விடுவதற்கே முயற்சி செய்வார்கள். இப்போது அதிர்ஷ்டவசமாக அவர்கள் நம்முடைய கைதிகளைப் போல் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களை அழித்து ஒழித்து விட முயல்வது தான் புத்திசாலித்தனம். இப்போது பாண்டவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாம் செய்திருக்கும் அவமானங்களுக்கெல்லாம் பழி வாங்குவதற்காக உடனே படையெடுத்து வரத் தயங்கமாட்டார்கள் அவர்கள் ஆகவே நன்கு சிந்தித்து இந்தச் செயலை முடிவு செய்ய வேண்டும். பாண்டவர்களை விடக் கூடாது’ சகுனியின் மேற்படி பேச்சையே துரியோ தன்னுடைய மனமும் விரும்பியது.

துச்சாதனன், கர்ணன் முதலிய தன் கூட்டத்தவர்களைக் கலந்து ஆலோசித்தபோது, அவர்களும் இதையே வரவேற்றனர். பாண்டவர்களை அழித்தொழிக்கின்ற எண்ணமே அவர்கள் மனங்களில் முற்றி கன்றிப் போயிருந்தது. மூவரும் கலந்து ஆலோசித்த பின்னர் அவையினருக்குக் கூறவேண்டிய செய்திகளைத் துச்சாதனன் கூறத் தொடங்கினான்.

“தருமா! எங்கள் தந்தை கூறுவது போல உன் உடமைகளைத் திரும்ப அளித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டு உங்களை நாட்டிற்கு அனுப்ப நாங்கள் தயாராயில்லை. நிச்சயமாக எங்களால் அப்படிச் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரேயொரு விதத்தில் உங்களுக்குக் கருணைக் காட்டுகிறோம். நீங்களும் உங்கள் மனைவி திரெளபதியும் இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு அடிமைகள். எங்கள் தந்தையின் மனத்திருப்திக்காக உங்கள் ஐவருக்கும் திரெளபதிக்கும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கிறோம். நீங்கள் இங்கிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாகச் செல்லலாம். எங்காவது காடு மலைகளில் மறைந்து வாழலாம்.” -துச்சாதனனின் இந்தச் சொற்களை எதிர்த்துப் பேசும் ஆற்றல் துரியோதனாதியர்களுக்குத் தந்தையாகிய திருதராட்டிரனுக்குக்கூட இல்லாமல் போய்விட்டது. வீட்டுமன், விதுரன் முதலியவர்களைத் தனியே அழைத்துச் சென்று திருதராட்டிரனும் ஆலோசித்துப் பார்த்தான். வேறெந்த வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.

முடிவில் தருமனிடம் சென்று, “அப்பா! துரியோத னாதியர்கள் என் மக்கள் எனினும் பிடிவாதக்காரர்கள். நான் இனி எது கூறினாலும் கேட்கமாட்டார்கள். ஆகவே நீ அவர்கள் கூறியபடியே செய்வது தான் நல்லது என்று கூறிவிட்டான். உடனே துரோணர் உரிமையோடும் அன்போடும் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

“நீங்கள் இப்போது உடனே உங்கள் நாட்டின் அரசுரிமையை அடைய முயலவேண்டாம். நேரே காடு சென்று பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறேனும் அங்கு வாழ்ந்து கழித்து விடுங்கள். அதற்குப் பின் ஏதாவது ஒரு நகரில் எவரும் நீங்கள் பாண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடாதபடி அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை அவசியம். அஞ்ஞாதவாச காலத்தில் உங்களை எவரேனும் பாண்டவர்களென்றும் அடையாளம் கண்டு கொண்டால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசிக்க நேரிடும். இதற்கு அவசியம் ஏற்படாமல் பதின்மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு மீண்டும் வாருங்கள், பழையபடி உங்கள் நாடு, அரசுரிமை எல்லாம் உங்களுக்குத் திரும்பிக் கொடுக்கப்படும்.” துரோணர் கூறிய இதே தீர்மானத்தை மூதறிஞராகிய வீட்டுமரும் ஆமோதித்தார்.

இவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திரௌபதி துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘நானும் என் கணவன்மார்கள் பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு போவது போல இவர்களிடம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு போக விரும்பவில்லை. என் கணவர் மறுபடியும் சூதாடியே எங்களை அடிமைத்தனத்திலிருந்து வென்று மீட்டுக் கொள்வார்” என்று கூறினாள். யாவரும் திகைத்துப் போயினர். திரெளபதியின் யோசனையைத் தருமனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். இம்முறை வெற்றி என் கணவர் பக்கம் ஏற்பட வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வமான கண்ணபிரானைத் தியானித்துக் கொண்டாள் திரெளபதி. தருமனும் கண்ணபிரானை எண்ணிவாறே ஆட ஆரம்பித்தான். ஆடத் தொடங்கும்போதே சகுனி மிகப் பெரியதோர் தடையைக் குறுக்கே நுழைத்தான்.

“சூதாட ஆசைப்படுவதெல்லாம் சரிதான் தருமா! ஆனால், எந்தப் பொருளைப் பந்தயமாக வைத்து ஆடப் போகிறாய்? நீதான் வெறுங்கையனாய் மேலாடையையும் இழந்து வீற்றிருக்கிறாயே?” என்று கேட்டான் சகுனி.

“பொருள் இல்லாவிட்டால் என்ன? இது வரை நான் செய்த நற்செயல்களால் எனக்குக் கிட்டியிருக்கின்ற அவ்வளவு புண்ணியமும் இருக்கின்றதே? அதையே இந்த ஆட்டத்திற்குப் பந்தயமாக வைக்கிறேன்! எடு காய்களை, விளையாடலாம்!” என்று சாமர்த்தியமாக அவனுடைய கேள்வியைச் சமாளித்தான் தருமன். சகுனி விளையாடச் சம்மதித்தான்.

விளையாட்டு மறுபடியும் ஆரம்பமாகியது. திரெளபதி கண்ணபிரானைத் தியானித்துக் கொண்ட மகிமையோ! அல்லது தருமனின் புண்ணியப் பயனோ வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகள் தருமனின் பக்கமே விளைந்து கொண்டிருந்தன. சகுனி பேயடிப்பட்டவன் போலச் சோர்ந்து போனான், அடிமைத்தனத்தை மட்டும் வென்று கொள்வதற்காக ஆடிய ஆட்டம் தருமனுக்கு அடுக்கடுக்காக அவன் தோற்றுப்போன யாவற்றையுமே வென்று கொடுத்துவிட்டது. முதலில் ஆடிய ஆட்டத்தில் தருமனுக்கு நேர்ந்திருந்த முழுப் பெருந்தோல்வி இப்பொழுது சகுனிக்கு ஏற்பட்டது. சகுனி தலை தாழ வாய்மூடி மெளனியாக அவமானம் தாங்காமல் வீற்றிருந்தான்.

தான் தோற்றவற்றை எல்லாம் வென்று விட்டாலும் கூட வீட்டுமர் துரோணர் முதலியவர்கள் கூறிய அறிவுரைப்படி பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த பின்னரே அரசாட்சி மேற்கொள்ள விரும்பினான் தருமன். அதுவரை துரியோதனாதியர்களே தன் உடைமைகளை எல்லாம் அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் அவன். பெரியோர்களும் நல்லவர்களும் தருமனின் உயரிய மனோபாவத்தைப் பாராட்டினார்கள் எண்ணி வியந்தார்கள். துரியோதனாதியர்களது கல்மனங்களையே தருமனுடைய அந்த எதிர்பாராத தியாகம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு இது. எல்லோரையும் பணிந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு தருமனும் அவன் தம்பிகளும் திரெளபதியும் புறப்பட்டபோது, இந்த உலகத்தை இரட்சிக்கும் தரும் தேவதையே தன் பரிவாரச் சுற்றங்களுடன் வனத்திற்குப் போவது போல உணர்ந்தார்கள் அங்கிருந்தவர்கள்.

நாடு நகரங்களில் பாண்டவர்கள் திரெளபதியோடு வனவாசம் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி பரவிய போது தங்கள் நெருங்கிய உறவினர்களை வெகு தொலைவில் பிரிய விட்டு விட்டாற் போலக் கலங்கினர் மக்கள். எங்கும் பாண்டவர்கள் பிரிவு ஒரு விதமான சோக உணர்வை பரப்பியிருந்தது. ஊர் உலகத்தின் துயர் உணர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்றனர் பாண்டவர். அவர்கள் மனங்களிலே நிறைந்திருந்த மகிழ்ச்சி கானகத்திலும் குன்றவில்லை.

(சபாபருவம் முற்றும்)