மணமக்களுக்கு/அணிந்துரை
பூ. ஆலாலசுந்தரம் எம். ஏ.,
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்
சென்னைக் கிறித்தவக் கல்லூரி,
சென்னைப் பல்கலைக்கழகத்
தமிழ்ப் பேரகராதித் திருத்தப் பணி
வல்லுநர் குழு உறுப்பினர் அவர்களின்
அணிந்துரை
முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் 80 ஆண்டுகள் நிரம்பப் பெற்ற முதுபேரறிஞராவர். அவர் பல்லாண்டுகளாகத் தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு, சமூகத் தொண்டு முதலிய பல திறப்பட்ட தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். திருக்குறளைப் பட்டி,தொட்டிகளில் பரப்பி வருவது அவரது சிறந்த தமிழ்ப் பணியாகும். அவரது அயரா உழைப்பின் பயனால், தமிழ்நாடு எங்கும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசினரும் திருவள்ளுவர் திருநாளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். என் அரிய நண்பர் முத்தமிழ்க் காவலர் அவர்கள் 1958-ம் ஆண்டில் 49 புலவர்கள் அடங்கிய தமிழகப் புலவர் குழுவினைத் தோற்றுவித்து, அதன் வாயிலாகவும் சிறந்த தமிழ்ப் பணி ஆற்றி வருகின்றார். சமயத்துறையில், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற கொள்கையினை அவர் பின்பற்றிச் சமரச நெறியில் சமயத் கொண்டு ஆற்றி வருகின்றார். “மணமக்களுக்கு” என்ற அவரது அரிய நூல், அவரது சமூகப் பணியினை விளக்கும் சான்றுகளில் ஒன்றாக அமைத்துள்ளது.
முத்தமிழ்க் காவலர் அவர்கள் எழுதியுள்ள “மணமக்களுக்கு” என்ற நூலினைப் படித்து மகிழ்ந்தேன். திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக, இது வரை சற்று ஏறக்குறைய 2300 தமிழ்த் திருமணங்கள் நடத்தியுள்ளார் என்பதை இந்நூலின் வாயிலாக அறிந்து வியந்து மகிழ்ந்தேன். இந்நூலில் இல்லறம், சகிப்புத்தன்மை, புகுந்த வீடு, ஆணுக்குக் கற்பு, சிக்கனம், சேமிப்பு, ஒழுக்கம், மகட் கொடை, குழந்தை வளர்ப்பு முதலிய இன்னோரன்ன பிற சிறு தலைப்புக்கள் மூலம், ஆசிரியர் பல திருக்குறள் மேற்கோள்களுடன் தமிழ்த் திருமணம் பற்றியும், மணமக்களுக்குக் கூற வேண்டிய அறிவுரைகள் பற்றியும், நன்கு விளக்கியுள்ளார். “திருமணக் காலத்தில் மணமகனும், மணமகளும் தம் தாய்மொழியில் சில உறுதி மொழிகள் கூறுதல்வேண்டும்” என இந்நூலாசிரியர் கூறுவது சிறந்த கருத்தாகும். இதற்கு இலக்கியச் சான்றும் உள்ளது. சீதை அநுமன் வாயிலாக இராமபிரானுக்குச் சொல்லி அனுப்பிய செய்திகளுள், இராமபிரான் கூறிய திருமண உறுதிமொழியும் ஒன்றாகும்.
"வந்தெ னைக்கரம் பற்றிய வைகல்வாய்
இந்த விப்பிற விக்கிரு மாதரைச்
சிந்தை யாலுந் தொடேனென்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்
(சூளாமணிப் படலம்—34)
“அநுமனே? இராமபிரான் என்னை மிதிலையில் திருமணம் செய்து கொண்ட நாளில், ‘இப்பிறப்பில் உன்னைத் தவிர வேறு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று கூறிய உறுதி மொழிகளை நீ அவருக்கு நினைவூட்ட வேண்டுகின்றேன்” எனச் சீதை கூறியதாகக் கம்பர் கூறுவது, ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.
இந்நூலில், ஆசிரியர் ஆண் கற்பினைப் பற்றி, வள்ளுவர் கூறும்,
"ஒருமை பகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு"
(பெருமை-4)
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நன்கு விளக்கியுள்ளார். ஆண் கற்பினைப் பற்றித் திருவள்ளுவர் மற்றோர் இடத்தில்,
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஓழுக்கு"
(பிறனின் விழையாமை—8)
எனக் கூறியதும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இந் நூலாசிரியர், இந்நூலில் இல்லறத்திற்குப் பொருத்தமான பல திருக்குறள் பாக்களை விளக்கிக் கூறும் முறை சாலவும் போற்றத் தக்கது. இந்நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் M A., B L, அவர்களும், தமிழ்த் தென்றல் திரு. வி. கலியான சுந்தர முதலியார் அவர்களும் நடத்தி வந்த தமிழ்த் திருமண முறைகளைத் தமிழ் மக்கள் பின்பற்றித் தமிழ்ப் பண்பாட்டினைப் போற்றுவாராக. மணமக்களுக்கு அறவுரை கூறும் இந்த அரிய நூலினை மணமகனும் மணகளும் கற்றுக் கற்ற வண்ணம் இல்லறத்தை நடத்துவாராயின், அவர்கள் இன்ப மயமான இல்லற வாழ்வு பெறுவர் என்பதில் ஐயமில்லை. இந்நூலினை மணமக்களுக்குத் திருமணப் பரிசாக அளித்தல் இன்றியமையாததாகும். முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ. பெ. விசுவநாதன் அவர்களின் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! வெல்க!
பூ. ஆலாலசுந்தரம் எம். ஏ.,
“சிவனகம்”
5,பேராசிரியர் குடியிருப்பு,
தாம்பரம்,
30-6-78