மணி பல்லவம் 1/015-039
பட்டினப்பாக்கத்துப் பெருவீதியின் திருப்பத்தில் இளங்குமரனைக் கண்டதும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் குதிரைகளை நிறுத்திக் கீழே இறங்கிச் சூழ நின்று கொண்டார்கள். எதிர்பாராத நிலையில் அவர்களை அங்கே வியப்பு அடங்கச் சில வினாடிகள் ஆயிற்று இளங்குமரனுக்கு.
“கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் என்று பழமொழி கூறுவார்கள். இளங்குமரா! நாங்கள் உன்னைத் தேடித்தான் வந்து கொண்டிருக்கிறோம், அதற்குள் நீயே எதிரே வந்துவிட்டாய். உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று பேச்சைத் தொடங்கினான் கதக் கண்ணன். அதைக் கேட்டு இளங்குமரன் சிரித்துச் சொல்லலானான்.
“நான் தெய்வமும் இல்லை; நீங்கள் என்னைக் கும்பிடுவதற்கரகத் தேடிவரவும் இல்லை. நான் மட்டும் தெய்வமாயிருந்தால் இந்தப் பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்தை இப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்க் கிழக்கே கடலில் மூழ்கச் செய்து விடுவேன். இங்கே பெரிய மாளிகைகளின் அகன்ற இடங்களில் சிறிய மனிதர்கள் குறுகிய மனங்களோடு வாழ்கிறார்கள். இவர்கள் பார்வை, பேச்சு, நினைவு, செயல் எல்லாவற்றிலும் சூழ்ச்சி கலந்திருக்கிறது; சூது நிறைந்திருக்கிறது.”
ஆத்திரத்தோடு இவ்வாறு கூறிக்கொண்டே பின் புறம் திரும்பி, யாருடைய வரவையோ எதிர்பார்க்கிறாற் போல் நோக்கினான் இளங்குமரன். ஆனால் பின்புறம் ஒன்றன் பின் ஒன்றாக வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று தேர்களின் தோற்றம் அவன் பார்வையை அப்பால் சென்று காண முடியாமல் தடுத்துவிட்டது. கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் இளங்குமரனின் பார்வை யாரைத் தேடி ஆத்திரத்தோடு அவ்வாறு பின்புறம் திரும்புகிறதென்று தெரியாமல் மயங்கினர். அப்போது, “வா அப்பனே! நன்றாகப் பின் தொடர்ந்து வா. ஒரு கண்ணோடு இன்னொரு கண்ணையும் பொட்டையாக்கி முழுக்குருடனாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்” என்று பின்புறம் திரும்பி நோக்கியவாறே இளங்குமரன் மெல்லக் கறுவிக்கொண்டு முணுமுணுத்த சொற்களை அவனுக்கு மிகவும், அருகில் நின்ற கதக்கண்ணன் கேட்க முடிந்தது. பட்டினப்பாக்கத்தில் இளங்குமரனுக்கு ஆத்திரமூட்டக்கூடிய அனுபவங்கள் எவையேனும் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கதக்கண்ணன் நினைத்துக் கொண்டான். இளங்குமரனுக்கு அப்போது நல்ல பசி. பசியின் வேதனையும் ஆத்திரத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. நாளங்காடியிலிருந்து தொடர்ந்து ஏற்பட்ட அனுபவங்களால் அவனுக்கு உண்டாகியிருந்த இனம்புரியாத மனக்கொதிப்பும் சேர்ந்து சினமாக மூண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்த ஒற்றைக் கண்ணன் அருகில் வந்திருந்தால் தனக்கு இப்போதிருந்த சினத்தில் அவனைப் பந்தாடியிருப்பான் இளங்குமரன். அருகில் தென்படாததால் அந்த ஒற்றைக் கண் மனிதன் பிழைத்தான். குதிரைகளையும் அருகில் நடத்திக் கொண்டு இளங்குமரனோடு மேலே தொடர்ந்து நடந்தார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு சென்றதும் “நேற்றே இரவில்” என்று தொடங்கி எதையோ அவசரமாகச் சொல்ல முற்பட்டான் கதக்கண்ணன், ஆனால் இளங்குமரன், “அதைப் பற்றி இப்போது இங்கே சொல்ல வேண்டாம்; பிறகு தனியே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்” என்று கூறி மேலே பேசவிடாமல் கதக்கண்ணனின் நாவை அடக்கி விட்டான். நெருங்கிய நண்பர்களாகிய தாங்கள் உடனிருக்கும்போது இளங்குமரன் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு நண்பர்கள் சிறிது திகைப்படைந்தனர்.
“இங்கே பட்டினப்பாக்கத்துக்கு நான் வந்திருக்கிறேனென்று உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று இந்தக் கேள்வியை இளங்குமரன் கேட்கும் போது வேறு கவனங்களிலிருந்து நீங்கி முற்றிலும் நண்பர்கள் பக்கம் கவனித்தவனாகத் தோன்றினான். நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முல்லையைச் சந்தித்ததையும், அவளிடமிருந்து விவரமறிந்து கொண்டதையும் கதக்கண்ணன் இளங்குமரனுக்குச் சொன்னான்.
“கதக்கண்ணா! நானும் முல்லையும் நாளங்காடிக்குப் புறப்படும்போது உன் தந்தையார் கவலை கொண்டார். நான் இறுதிவரையில் முல்லைக்குத் துணையாயிராமற் போய் விடுவேனோ” என்று அவர் பயந்ததற்கு ஏற்றாற் போலவே நடந்துவிட்டது. பூத சதுக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது யாரோ ஒரு கலைஞனுக்கு இரக்கம் காட்டப்போய் எப்படி எப்படியோ வம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிட்டது. முல்லையைத் தனியே விட்டு விட்டு அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் பட்டினப்பாக்கம் போகும்படி ஆகிவிட்டது. பாவம்! முல்லைக்கு என்மேற் பெருங்கோபம் ஏற்பட்டிருக்கும்; உன் தந்தையாரிடத்திற் போய் நடந்தையெல்லாம் சொல்லியிருக்கப் போகிறாள். அவர் முனிவரிடம் என்னைப்பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருப்பார். என்மேல் ஆத்திரத்தோடு உன் தந்தையார் என்னை எதிர் பார்த்துக் காத்திருப்பார்”— என்று வருத்தம் தோய்ந்த குரலில் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன்.
“தந்தையார் உன்மேல் சினம் கொள்ளும்படியாக முல்லை ஒன்றும் சொல்லியிருக்கமாட்டாள். இளங்குமரா! உன்னை அவர் கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதில் உனக்கு எவ்வளவு கவலை உண்டோ, அதைக் காட்டிலும் அதிகமாக முல்லைக்கும் உண்டு என்பதை நான் அறிவேன்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினான் கதக்கண்ணன். மேலே அவனே கூறலானான். “இளங்குமரா! இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய இன்றைக்கு நானும் நம் நண்பர்களும் உன் நலனைக் கருதி உன்னிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கலாமென நினைக்கிறோம். நீ அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.’
“உங்கள் வேண்டுகோள் இருக்கட்டும்! அதை அப்புறம் பார்க்கலாம். இந்தக் கணமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய அவசர வேண்டுகோள் ஒன்று எனக்கு இருக்கிறது. அது நிறைவேறாவிட்டால் நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயாவது மயங்கி விழுந்து விடுவேன் நான். ஒரே ஒருமுறைதான் சொல்வேன். ஒரு விநாடிதான் சொல்வேன். இதோ கேளுங்கள் நண்பர்களே! மறுமுறை கேட்டால் சொல்லமாட்டேன்” என்று இரைந்து சொல்லிக் கொண்டே வந்த இளங்குமரன், குரலைச் சிறிதாக்கிக் கொண்டு, இதழ்களில் குறுநகை இலங்க மெல்ல நண்பர்களைப் பார்த்துக் கூறினான்; “இப்போது அடியேனுக்கு நல்ல பசி, வயிறு பஞ்சாய்ப் பறக்கிறது.”
இளங்குமரன் என்ன பெரிய வேண்டுகோள் விடுக்கப் போகிறானோ என்று திகைத்திருந்த நண்பர்கள் இதைக் கேட்டு உரக்கச் சிரித்தார்கள். இளங்குமரனுக்கு நண்பர்களும் உற்சாகமும் சேர்ந்து வந்து சந்தித்து விட்டால் இப்படித்தான் நகைச்சுவை பிறக்கும். புதுமையான பேச்சுக்களும் புறப்படும்.
கதக்கண்ணா! இன்றைக்கு இந்த வம்பெல்லாம் வந்து சேராமல் நாளங்காடியிலிருந்து நேரே முல்லையோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தேனானால் மோர்க் குழம்பும், பொரியலுமாக அற்புதமான விருந்து கிடைத்திருக்கும். நான் மிகவும் துர்பாக்கியசாலியாகிவிட்டேன் நண்பர்களே! முல்லை கையால் மோர்க் குழம்பும் உணவும் இன்றைக்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அடடா, முல்லையின் மோர்க்குழம்பு இன்றைக்கெல்லாம் கையில் மணந்து கொண்டிருக்குமே” என்று கூறிக் கொண்டே இளங்குமரன் நாக்கைச் சப்புக் கொட்டின போது நண்பர்களுக்கெல்லாம் நாவில் சுவை நீர் ஊறியது.
“என் தங்கை படைக்கும் மோர்க் குழம்பு நன்றாக இருக்குமோ, இல்லையோ; நீ அதைப் பற்றிச் சொல்வது மிக நன்றாக இருக்கிறது. இப்போது இதைக் கேட்ட நண்பர்களெல்லாம் என் வீட்டுக்கு முல்லையின் மோர்க் குழம்பை நினைத்துக் கொண்டு முற்றுகையிட்டு விட்டால் என் கதி என்ன ஆவது?” என்று கூறிக்கொண்டே இளங்குமரன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்த கதக்கண்ணன் அவனுடைய பார்வையும் குறிப்பும் வீதியின் பின் பக்கம் சென்று திரும்புவதைக் கவனிக்கத் தவறவில்லை. வெளியில் மிகவும் சர்வ சாதாரணமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே தீவிரமாக எதையேனும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தன்மை இளங்குமரனுக்கு உண்டு என்பது கதக் கண்ணனுக்குத் தெரியும். எந்நேரமும் கண்களிலும், பார்வையிலும், இதழ்களிலும் நகை நயம் விளங்க மலர்ந்து தோன்றும் இளங்குமரன் முகத்தில் இப்போது பசி வாட்டமும், சோர்வும் தெரிவதையும் கதக்கண்ணன் கண்டான். சில சமயங்களில் தன்னுள்ளே ஓடும் நினைவுப் புயலின் வேகத்தை வெளியே தெரியவிடாமல் மறைக்கும் சாதனமாக இந்தச் சிரிப்பையும், கலகலப்பான பேச்சையும் பயன்படுத்தும் வழக்கமும் இளங்குமரனுக்கு உண்டு என்பதையும் கதக்கண்ணன் அறிவான்.
“என்னவோ வேண்டுகோள் விடுக்கப்போவதாகச் சிறிது நேரத்துக்கு முன் கூறினாயே, கதக்கண்ணா!”
தன்னுடைய நினைவுகளிலிருந்தும், வேறு கவனத்திலிருந்தும் விடுபட்டு வந்தவனாக உடன் வந்த கதக்கண்ணன் பக்கமாகத் திரும்பி இந்தக் கேள்வியைக் கேட்டான் இளங்குமரன். இதற்கு உடனே பதில் கூறாமலே தன்னுடன் வந்த மற்ற நண்பர்களின் முகங்களைப் பார்த்தான் கதக்கண்ணன். அப்படிப் பார்த்தவுடனே நண்பர்களில் சிலர் கதக்கண்ணனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போனார்கள். பின்பு திரும்பி வந்து மீண்டும் எல்லாருடனும் கலந்து கொண்டார்கள். நண்பர்களின் அந்தச் செயல் இளங்குமரனுக்குப் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. “இளங்குமரா! நம் ஆசிரியர்பிரானிடம் இன்று காலையில் நண்பர்கள் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர் உன்னை இன்று பிற்பகலுக்குள் சந்திக்க விரும்புகிறாராம்.”
“யார்? நீலநாக மறவரா?”
“ஆம்! இப்போது நாம் நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.”
“நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குப் போவதற்கும், நீ இப்போது என்னிடம் கூறுவதற்கிருந்த வேண்டுகோளுக்கும் என்ன தொடர்பு!”
“அந்த வேண்டுகோளை இப்போது இங்கே பொது இடமான நடுவீதியில் வைத்துக் கொண்டு உன்னிடம் கூறுவதைவிடப் படைக்கலச் சாலைக்குச் சென்றபின், ‘நீலநாக மறவரே உனக்குத் தெளிவாக எடுத்துக் கூறும்படி செய்யலாம்’ என்று நண்பர்கள் கருதுகிறார்கள்.”
“நண்பர்கள் கருதுவதைப்பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். என்னிடம் சொல்லாமலே என்னென்னவோ திட்டமிட்டுக் கொண்டு செய்கிறீர்கள். எனக்குக் கெடுதலாக ஒன்றும் செய்துவிட மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்பலாம். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்பட்டுப் பயந்து கொண்டிருப்பது போல் இந்தப் பெரிய நகரத்தின் இருண்ட வனங்களிலோ, ஆள் பழக்கமற்ற கடற்கரை ஒதுக்கங்களிலோ, ‘இளங்குமரனை’ யாரும் அவ்வளவு எளிதாகக் கொன்றுபோட்டுவிட முடியாது...!”
இப்படி இந்த வாக்கியத்தின் அமங்கலமான கடைசிப் பகுதியை இளங்குமரன் சொல்லி முடிப்பதற்குள் கதக்கண்ணன் அருகில் வந்து அவன் வாயைப் பொத்தி விட்டான்.
“பித்தனைப்போல் இதென்ன பேச்சு, இளங்குமரா? உன் மேல் அன்பும், பற்றும் உள்ளவர்கள் உனக்காக அநுதாபப்படுவதற்குக்கூட உரிமையற்றவர்களா? அந்த அநுதாபத்தையும் அக்கறையையும் 'நீ ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறாய்?”
“சில சமயங்களில் என்மேல் அநுதாபப்படுகிறவர்களுக்காக நானே அநுதாபப்படும்படி நேர்ந்து விடுகிறது. என்னைக் கோழையாக்க முயல்கிற அநுதாபத்தை நான் ஒப்புக் கொள்ள முடிவதில்லை! என்னைப் பற்றி எனக்கு என் மனத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையும், உரமும் உண்டோ , அதில் அரைப்பகுதியாவது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் என்னைத் தைரியமுள்ள மனிதனாக நினைக்கிறார்களென்று நான் பெருமைப்படலாம். நீங்கள் எல்லோரும் என் அன்புக்குரியவர்கள். பெருவீரராகிய நீலநாக மறவர் என் மதிப்புக்குரியவர், எனக்கும் உங்களுக்கும் படைக்கலப் பயிற்சியும், போர்த்துறைக் கலைகளும் கற்பித்த ஆசிரியர்பிரான் அவர். ஆனால் அதற்காக அவரும் நீங்களும் சேர்ந்து கொண்டு என்னைத் தெருவில் திரியும் சிறுபிள்ளையாக எண்ணி எனக்கு அனுதாபப்படுவதை நான் ஏற்பதற்கில்லை.”
வலது கையை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டே ஆவேசத்தோடு பேசினான் இளங்குமரன், அப்போது அந்த நிலையில் அவனை எதிர்த்துப் பேசி மறுமொழி சொல்வதற்கே தயங்கி அஞ்சினார்கள் நண்பர்கள்.
இதன் பின் பட்டினப்பாக்கத்து எல்லை கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் நுழைகிறவரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
இப்போது அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் நீலநாக மறவரின் மிகப்பெரிய படைக்கலச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மறுபடியும் இளங்குமரனிடம் பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன்.
“பசிக் கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டாய், இளங்குமரா! ஆசிரியர்பிரானிடமும் அப்படி ஏதாவது ஆத்திரப் பட்டுப் பேசிவிடாதே.”
“பசிக் கோபமல்ல நண்பனே! கோபப்பசி என்றே வைத்துக்கொள்” என்று பழைய வேகம் குறையாமலே பதில் வந்தது. இளங்குமரனிடமிருந்து.
“எதுவாயிருந்தாலும் இருக்கட்டும் ஆசிரியர் பிரானைச் சந்தித்த்தும் உன்னுடைய வயிற்றுப் பசி, பசிக்கோபம், கோபப்பசி எல்லாமே நீங்கி விடுகின்றனவா இல்லையா பார்” என்று நகைத்தபடி சொன்னான் கதக்கண்ணன்.