மணி பல்லவம் 1/016-039
சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவதற்குத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள், படியோரத்தில் மறைந்து நின்றுகொண்டிருந்த சுரமஞ்சரி. தன் செவிகளின் கேட்கும் ஆற்றலை எவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முடியுமோ அவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முயன்றாள் அவள். சற்றுமுன் நிலா முற்றத்தில் இருந்தபோது தென்றலையும், பால் மழை பொழிவது போல் வெண்மதி தவழும் வானத்தையும், தன் சகோதரியின் இன்னிசையையும் எண்ணி எண்ணி இன்பத்தில் மூழ்கினவளாய் அந்த இனிமை நினைவுகளின் எல்லையாய் இளங்குமரன் என்னும் பேரினிமை நினைவில் திளைத்து மகிழ்ந்த சுரமஞ்சரி இப்போது சித்திரச்சாலையின் படியருகே அச்சமும் திகைப்பும் கொண்டு நின்றாள். என்னென்னவோ நிகழக் கூடாதனவும் நிகழத் தகாதனவுமாகிய நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கி விட்டாற்போல் அவள் மனத்துள் ஒருவிதமான திகில் சூழ்ந்தது. வெள்ளை விழியும் கருவட்டமுமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து கொள்ளையழகோடு பார்க்கும் அவளுடைய மைதீட்டிய நளின நயனங்கள் இப்போது பயத்தால் மிரண்டு விரிந்தன.
பெருமுயற்சி செய்தும் தந்தையாரும் ஓவியனும் பேசிக் கொண்டதை அவள் முற்றிலும் அறிய இயலவில்லை. சில சில சொற்கள்தாம் இடையிடையே கேட்க முடிந்தன. ஆனால் அவள் நின்றுகொண்டு பார்த்த இடத்திலிருந்து தந்தையின் விலாப்புறமும் ஓவியனின் முன்தோற்றமும் தெரிந்ததனால் தந்தை ஊன்றுகோலால் இளங்குமரனின் ஓவியத்தைச் சுட்டிக் காட்டி ஏதோ செய்யச் சொல்லித் தூண்டுவதாகவும் அப்படி அவர் எதைச் செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வதற்கு ஓவியன் அஞ்சித் தயங்குவதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. வாயிலோரத்துப்படி விளிம்பில் வலது காற் பெருவிரலை அழுத்தி ஊன்றி அதன் பலத்தில் நின்று கொண்டு தலையை நீட்டிப் பார்ப்பது சிறிது கால் இடறினாலும் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்து நின்று, தான் மறைந்து கவனித்துக் கொண்டிருப்பது — தந்தையாருக்குத் தெரிந்தால் அதன் விளைவு எவ்வளவு விரும்பத் தகாததாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.
காற்பெருவிரல் வலிக்காமல் இருப்பதற்காகத் தலையைப் பின்னுக்குத் திருப்பி உட்புறம் எட்டிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வாயிலுக்கு இப்பால் விலகி நன்றாக நின்று கொண்டாள் சுரமஞ்சரி, உட்பக்கம் நிகழ்வதைக் காணாமல் இப்படிச் சிறிது நேரம் விலகி நின்று விட்டுப் பின்பு மறுபடியும் அவள் உட்பக்கம் பார்த்த போது ஓவியனின் முகம் முன்னைக் காட்டிலும் பயந்து வெளிறிப் போயிருந்ததைக் கண்டாள். அவனுடைய முகம் அவ்வாறு பயந்து வெளிறிப் போவதற்குக் காரணமாக உட்பக்கத்தில் தான் பார்க்காதபோது என்ன நடந்திருக்கக் கூடும் என்பதைச் சுரமஞ்சரியால் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அநுமானம் செய்ய முடியவில்லை ஆனால்; ‘ஏதோ நடந்திருக்கிறது— நடந்திருக்க வேண்டும்’ என்று தேற்றமாகத் தெரிந்தது. ஒன்றும் விளங்காமல் மேலும் குழம்பினாள் சுரமஞ்சரி.
இதற்குள் சித்திரச்சாலைக்குள் நிற்கும் தந்தையும், ஓவியனும் அங்கிருந்து வெளியே புறப்படுவதற்குச் சித்தமாகி விட்டாற் போல் தெரிந்தது. ‘இனிமேல் தான் அங்கே படியோரமாக நின்று கொண்டிருப்பது கூடாது’ என்று முடிவு செய்து கொண்டவளாக அடிமேல் அடி வைத்து மெல்ல நடந்து தனது அலங்கார மண்டபத்தில் உடை மாற்றிக் கொள்வதற்கென அமைந்திருந்த தனிமையான பகுதிக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. அங்கே புகுந்து மறைந்துகொள்வதனால் அப்போது அவளுக்கு இரண்டு விதமான நன்மைகள் இருந்தன. முதல் நன்மை தந்தையார் திரும்பிச் செல்லும்போது அந்தப் பகுதிக்கு வரமாட்டார். இரண்டாவது நன்மை அப்படியே நேரே போக வேண்டிய அவர் அந்தப் பகுதிக்கு வந்துவிட்டாலும் அவள் தனிமையாக அலங்காரம் செய்து கொள்வதற்குரிய பகுதியில் அவள் இருப்பதைப் பார்த்து, இப்போது ‘நீ இங்கே ஏன் வந்தாய்’ என்றோ வேறுவிதமாகவோ கேட்டு அவர் அவளைச் சினந்து கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அணியறைக்குள் புகுவதிலுள்ள இரு நன்மைகளையும் நினைத்தவாறே புகுந்த சுரமஞ்சரிக்கு அங்கே இன்னும் ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.
அறைக்குள் தோழிப்பெண் வசந்தமாலை ஓசைப்படாமல் திரும்பி வந்து குத்துக்கல்போல் சிலையாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்போது சுரமஞ்சரியைக் கண்டதில் வசந்தமாலைக்கு வியப்பு அதிகமா! வசந்தமாலையைக் கண்டதில் சுரமஞ்சரிக்கு வியப்பு அதிகமா! என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாமல் வியப்புக்களே எதிரெதிரில் சந்தித்துக் கொண்டதுபோல் அமைந்தது அந்தச் சந்திப்பு. தன் வாயிதழ்களின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துப் ‘பேசாமலிரு’ என்னும் பொருள் தோன்ற வசந்த மாலை சைகை செய்த அதே சமயத்தில் அதே போன்றதொரு சைகையைச் சுரமஞ்சரியும் வசந்தமாலைக்குக் காட்டிக் கொண்டே அருகில் வந்தாள்.
சித்திரச்சாலையிலிருந்து வெளியேறி தந்தையும் ஓவியனும் நடந்து செல்லும் காலடி ஓசை அறைக்குள் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அந்தக் காலடியோசை வெளியே நடந்து சென்று ஒலி தேய்ந்து மங்கியது. “நீ எப்போதடி இங்கு வந்தாய்?” என்று வசந்தமாலையைக் கேட்டாள் சுரமஞ்சரி.
“நான் வந்து அரை நாழிகைக்கு மேலாகி விட்டதம்மா. நீங்கள் இங்கிருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தேன். சித்திரச்சாலைக்குள் தந்தையாரையும் ஓவியனையும் பார்த்தபின் எனக்குப் பயமாயிருந்தது. நடுக்கத்தோடு பேசாமல் இந்த அறைக்குள் வந்து பதுங்கி விட்டேனம்மா” என்று இன்னும் அந்த நடுக்கம் குன்றாமலே பதில் கூறினாள் தோழிப் பெண் வசந்தமாலை.
“நீ போன காரியம் என்ன ஆயிற்று, வசந்தமாலை? அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீ!”
“அதையேன் கேட்கிறீர்கள், அம்மா! நீங்கள் குறிப்புக் காட்டினீர்களே என்று நான் அவரைப் பின்தொடர்வதற்குப் போனேன். ஆனால் எனக்கும் முன்பாகவே உங்கள் தந்தையார் அவரைப் பின்தொடரச் சொல்லி ஆள் நியமித்திருக்கிறாரேயம்மா!”
இதைக் கேட்டதும் சுரமஞ்சரியின் முகம் இருண்டது. ‘தந்தையார் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?’ என்ற கேள்வி அவள் நெஞ்சத்தில் பெரிதாக எழுந்தது.
“அவரைப் பின் தொடர்வதற்குத் தந்தையார் அனுப்பியிருந்த ஆள் யாரென்று உனக்குத் தெரியுமா வசந்தமாலை?”
“தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும் அம்மா! உங்கள் தந்தையார் வாணிகத்துக்காகச் சீனம், யவனம் முதலிய தொலைதூரத்து நாடுகளுக்குக் கடற் பயணம் செய்யும் போதெல்லாம் தவறாமல் உடன் அழைத்துக் கொண்டு போவாரே அந்த ஒற்றைக்கண் மனிதர்தான் அவரைப் பின் தொடர்ந்தான்.”
“யார்? நகைவேழம்பரையா சொல்லுகிறாய்? அவரை இப்படிப்பட்ட சிறிய வேலைகளுக்கெல்லாம் தந்தையார் அனுப்புவது வழக்கமில்லையே!”
“நானென்ன பொய்யா சொல்லுகிறேன்? என்னுடைய இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்ததைத் தானே சொல்லுகிறேனம்மா. அவருக்குப் பின்னால் நானும் தொடர்ந்து வருகிறேன் என்பதை திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு நகைவேழம்பருடைய ஒற்றைக் கண்ணால் முடிந்ததோ இல்லையோ, நான் அவரை நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட்டேன். அந்த ஒற்றைக்கண் முகத்தின் இலச்சணத்தைத்தான் ஆயிரம் பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் பார்த்தாலும் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள முடியுமே!”
“அதிருக்கட்டும் நீ திரும்பி வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? அவர் வசிக்குமிடம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறதோ?”
“அதைத்தான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பின் தொடர்ந்து சென்று பார்த்த மட்டில் சொல்லுகிறேன். மருவூர்ப் பாக்கத்திலுள்ள படைக்கலச் சாலைக்குள் அவரும், அவருடைய நண்பர்களும் நுழைந்தார்கள். அந்திப் போதுவரை காத்திருந்தும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதற்குமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்று திரும்பிவிட்டேன். ஒருவேளை அந்தப் படைக்கலச் சாலையில்தான் அவர் வசிக்கிறாரோ என்னவோ?”
“இருக்கலாம், ஆனால் யாரோ நண்பர்களோடு படைக்கலச்சாலைக்குள் நுழைந்தாரென்று சொல்லுகிறாயே! அவர் இந்த மாளிகையிலிருந்து வெளியேறிச் செல்லும்போது தனியாக அல்லவா சென்றார்?”
“நடுவழியில் அவருடைய நண்பர்கள் போலத் தோன்றிய சிலர் அவரோடு வந்து சேர்ந்து கொண்டார்கள் அம்மா. அந்த நண்பர்களில் சிலரை நேற்றுக் கடற்கரையில் நடந்த மற்போரின்போது அவருடன் சேர்த்துப் பார்த்த தாக எனக்கு நினைவிருக்கிறது.”
“நகைவேழம்பரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றதாகக் கூறினாயே வசந்தமாலை! அவரும் நண்பர்களும் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது நகைவேழம்பர் என்ன செய்தார்? அவர்களைப் பின்தொடர்ந்து அவரும் உள்ளே சென்றாரா? அல்லது உன்னைப் போலவே அவரும் வெளியில் தங்கி விட்டாரா?”
“அதுதானம்மா எனக்கும் தெரியவில்லை! அவர்கள் படைக்கலச் சாலைக்குள் நுழைவதை நகை வேழம்பரும் கவனித்தார். அவர் கவனிப்பதை நானும் பார்த்தேன். ஒரு விநாடி எங்கோ கவனக்குறைவாகப் பராக்குப் பார்த்து விட்டு மறுபடியும் திரும்பி நான் பார்த்தபோது நகை வேழம்பரை அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில் காணவில்லை. அதற்குள் எப்படியோ மாயமாக மறைந்து போய் விட்டார். அந்த ஒற்றைக்கண் மனிதர், ஒரு கணப்போதில் அவர் எங்கே மறைந்தாரென்பது எனக்குப் பெரிதும் ஆச்சரியமாயிருக்கிறது அம்மா!”
“ஆச்சரியத்துக்குரியது அது ஒன்று மட்டுமில்லை வசந்தமாலை! எத்தனையோ பேராச்சரிய நிகழ்ச்சிகள் இன்று இந்த மாளிகையில் சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. மாலையில் தோட்டத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோது தந்தையார் பின்புறத்து மறைவிலிருந்து திடும் பிரவேசம் செய்து பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அந்த இளைஞரை அநாகரிகமாக உற்றுப் பார்த்தாரே, அது அவருக்கு எவ்வளவு அவமானமாகத் தோன்றியிருக்கும் தெரியுமா? அதுதான் போகட்டும். ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டுப் போகிறவனைப் பின் தொடர்கிறாற்போல் நகைவேழம்பரை எதற்காக அந்த இளைஞரைப் பின்தொடர்ந்து போகச் செய்ய வேண்டும்? நான் உள்ளே இருக்கும்போதே என்னிடம் சொல்லி அனுமதி கேட்காமல் எனது சித்திரச் சாலைக்குள் நுழையத் தயங்குகிற தந்தையார் இன்று நான் இல்லாதபோதே என் சித்திரச்சாலைக்குள் நுழைந்திருக்கிறார். மாலையில் தனக்குச் சேர வேண்டிய பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டவுடனே. அந்த ஓவியன் இங்கிருந்து வெளியேறிப் போய்விட்டானென்று நான் நினைத்திருந்தேன். இப்போது சித்திரச்சாலைக்குள் தந்தையாரோடு அவன் எப்படி வந்தானென்று தெரியவில்லை. இவையெல்லாமே பேராச்சரியங்கள் தான், ஒன்றா, இரண்டா, திடீரென்று இந்த மாளிகையே பேராச்சரியமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே வந்த சுரமஞ்சரியின் பவழ மெல்லிதழ்களை முன்னால் நீண்ட வசந்தமாலையின் பூங்கமலக் கை மேலே பேச விடாமல் மெல்லப் பொத்தியது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தோழிப் பெண் தன் வாயைப் பொத்தியதைக் கண்டு சுரமஞ்சரிக்கு அடக்க முடியாத சினம் மூண்டது.
“அம்மா! பேச்சை நிறுத்திவிடுங்கள், யாரோ மிக அருகிலிருந்து நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள்” என்று சுரமஞ்சரியின் காதருகில் ரகசியமாய் முணு முணுத்தாள் தோழி வசந்தமாலை. இதை முணுமுணுக்கும் போது தோழியின் குரல் அதிர்ச்சியும் நடுக்கமும் விரவியதாயிருந்தது. தோழியின் இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஒலித்திருக்க வில்லையானால் திடீரென்று அவள் மதிப்பின்றித் தன் வாயைப் பொத்தியதனால் தனக்கு மூண்டிருந்த கோபத்தில் அவளுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்திருப்பாள் சுரமஞ்சரி.
“அதோ அந்தப் பட்டுத்திரை காற்றில் அசைகிறதே அதன் கீழ் பாருங்கள் அம்மா!” என்று மறுபடியும் சுரமஞ்சரியின் காதருகில் முணுமுணுத்தாள் தோழி. அவள் சுட்டிக் காட்டிய திசையில் சுரமஞ்சரியின் பார்வை சென்றது. பார்த்தவுடன் அவள் கண்களில் பீதி நிழல் படிந்தது. அவள் திடுக்கிட்டாள்.
அலங்கார மண்டபத்தின் முகப்புத் திரைச்சீலை மேலே எழுந்து தணியும் நீரலை போல் அப்போது வீசிய காற்றில் ஏறி இறங்கியது. திரைச்சீலை மேலெழுந்தபோது பூ வேலைப்பாடுகள் பொருந்திய அந்தப் பட்டுத் துணியின் மறுபுறம் யாரோ நின்று கொண்டிருப்பதற்கு அடையாளமாக இரண்டு பாதங்கள் தெரிந்தன. சுரமஞ்சரி பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தப் பாதங்கள் அங்கிருந்து நகர முற்பட்டன.
உடனே ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் இரவில் படுக்குமுன் தன் பாதங்களுக்கு இட்டுக் கொள்வதற்காக அங்கே அரைத்து வைத்திருந்த வாசனைச் செம்பஞ்சுக் குழம்பில் சிறிது வாரி, நகர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பாதங்களில் போய்த் தெறிக்குமாறு வீசினாள் சுரமஞ்சரி. அதனால் அப்போது அந்தப் பகுதி முழுதும் செம்பஞ்சுக் குழம்பின் நறுமணம் கமகமவென எழுந்து பரவியது. தலைவி அப்படிச் செய்ததின் தந்திரக் குறிப்பென்ன என்று புரியாமல் திகைத்து நின்றாள் தோழி வசந்தமாலை.