மணி பல்லவம் 1/034-039

விக்கிமூலம் இலிருந்து

34. திருநாங்கூர் அடிகள்

பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும் சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கிலும் பசும் புல்வெளிகளும் வெறுமண் தெரியாமல் அடர்ந்த நறுமண மலர்ச் சாலைகளும், மரக்கூட்டங்களுமாகப் பசுமைக் கோலங் காட்டியது அந்த ஊர். வெயில் நுழையவும் முடியாத பசுமைக்குள் மறைந்திருந்த அழகு காரணமாக நாங்கூருக்குப் ‘பொழில் நகரம்’ என்றே சோழ நாட்டுக் கவிஞர்கள் புகழ்ப் பெயர் சூட்டியிருந்தார்கள்.

நாங்கூரின் வீரப் பெருமைக்குக் காரணமாக இருந்தவர்கள் அங்கு வாழ்ந்து வந்த வேளிர்கள் என்றால் ஞானப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர் “பூம்பொழில் நம்பி” என்னும் பெரியவரே ஆவார். பூம்பொழில் நம்பியைத் திருநாங்கூர் அடிகள் என்ற பெயரில் சோழ நாடெல்லாம் அறியும். சமய நூல்களிலும், தத்துவ ஞானத்திலும், பழுத்துப் பண்பட்டக் குணக்குன்று அவர், காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தொடங்கி நாங்கூருக்குச் செல்லுகிற பெருவழி அவ்வூர் எல்லையுள் நுழையுமிடத்தில் பூம்பொழில் என்றொரு குளிர்ந்த சோலை இருந்தது. அந்தச் சோலையில்தான் முதுபெருங் கிழவரும், துறவியுமாகிய நாங்கூர் அடிகள் வசித்து வந்தார். வயதும், உடலும், அறிவும் முதிர்ந்தாலும் கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர் திருநாங்கூர் அடிகள். சோழ நாட்டில் அந்த நாட்களில் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயவாதிகளும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும், தம்முடைய மாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அதற்காக அடிகள் இறுமாப்பு அடைந்ததேயில்லை. நேரில் தம்மைப் புகழுவோரிடம் எல்லாம், “இயற்கை தான் பெரிய ஆசிரியன்! அதனிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொண்டேன். இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பூம்பொழிலில் எத்தனையோ நாட்களாகச் செடிகள் தளிர் விடுகின்றன். அரும்புகின்றன. பூக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இவை எனக்குப் புதுமையாகவே தோன்றுகின்றன. கண்களிலும், மனத்திலும் சலிப்புத் தோன்றாமல் பார்த்து நினைத்து உணர்ந்தால் இயற்கையே பெரிய ஞானம்தான்” என்று குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டே கூறுவார். தமது பூம்பொழிலில் ஏதாவது ஒரு செடியில் புதிய தளிரையோ, புதிய அரும்பையோ பார்த்துவிட்டால் அவருக்கு ஏற்படுகிற ஆனந்தம் சொல்லி முடியாது. வித்தூன்றியிருந்த புதுச் செடி முளைத்தாலும் அவருக்குத் திருவிழாக் கொண்டாட்டம்தான். அப்படிப் புதுத் தளிரையும், புது அரும்பையும், புதுச் செடியையும் பார்த்துத் தாம் பேரானந்தம் அடைகிறபோது அருகில் இருப்பவர்கள் பேசாமல் வாளாவிருந்தால்,

“உலகத்துக்குப் புதிய அழகு ஒன்று உண்டாகியிருக்கிறது! அதைப் பார்த்து ஆனந்தப் படத் தெரியாமல் நிற்கிறீர்களே? உலகம் உம்முடைய வீடு ஐயா! உம்முடைய வீட்டில் அழகுகள் புதிது புதிதாகச் சேர்ந்தால் உமக்கு அவற்றை வரவேற்று மகிழத் தெரிய வேண்டாமா?” என்று உணர்ச்சியோடு கூறுவார் அவர். இயற்கை இயற்கை என்று புகழ்ந்து போற்றுவதுதான் அவருக்குப் பேரின்பம்.

எண்ணிலாத மலர்கள் மலரும் அவ்வளவு பெரிய பூம்பொழிலில் அடிகள் ஒரு பூவைக்கூடக் கொய்வதற்கு விடமாட்டார். யாரும் எதற்காகவும் அங்கேயுள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது, “பூக்கள் இயற்கையின் முகத்தில் மலரும் புன்னகைகள். அந்தப் புன்னகைகளை அழிக்காதீர்கள், அவை சிரிக்கட்டும். சிரித்துக்கொண்டே மணக்கட்டும்” என்று அழகாக உருவகப்படுத்திக் கூறுவார். எத்தனை அரும்பு கட்டினாலும் எத்தனை பூப்பூத்தாலும், எத்தனை முறை மணந்தாலும், ஒரே அளவில் அரும்பு கட்டி ஒரே வித உருவில் மலர்ந்து, ஒரேவகை மணத்தைப் பரப்பும் தனித்தனிப் பூக்களைப்போல் எப்போது பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் சொற்கள் மலரக் கருத்து மணக்கப் பேசும் வழக்கமுடையவர் அடிகள், பட்டு நூலில் துளையிட்ட முத்துக்கள் ஒவ்வொன்றாய் நழுவி இறங்கிச் சேர்த்து கோத்துக் கொண்டு ஆரமாக ஒன்று படுவது போல் அவருடைய வாயிற் சொற்கள் பிறப்பதும், இணைவதும், பொருள்படுவதும் தனி அழகுடன் இருக்கும். மல்லிகைச் செடியில் பூக்கும் எல்லாப் பூக்களுக்கும் மல்லிகைக்கே உரியதான மணம் இருப்பதைப் போல் நாங்கூர் அடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவருடைய நாவில் அது பிறந்ததென்பதாலேயே ஓர் அழகு இருப்பதுண்டு.

சிறப்பு வாய்ந்த இத்தகைய ஆசிரியர் பெருமகனாரைச் சந்திக்கச் செல்வதில் எந்த மாணவருக்குத்தான் இன்பமிருக்காது? நீராட்டு விழாவுக்கு முதல்நாள் காலையிலேயே காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து நாங்கூருக்குப் புறப்பட்டிருந்த நீலநாக மறவர் அந்தி மயங்கும் போதில், நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்துவிட்டார். கூடடையடையும் பறவைகளின் ஒலியும் நாங்கூர் அடிகளின் மாணவர்கள் பாடல்களை இரைந்து பாடி மனப்பாடம் செய்யும் இனிய குரல்களும் அப்போது பூம்பொழிலில் ஒலித்துக் கொண்டிருந்தன.

நீலநாக மறவர் பொழிலுக்கு வெளியிலேயே தம்முடைய தேரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியோடு உள்ளே நடந்து சென்றார். கவசமும், வாளும் அணிந்து படைக்கலச் சாலையின் எல்லைக்குள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நீலநாக மறவர் இப்போது எளிய கோலத்தில் தம் ஆசிரியரைத் தேடி வந்திருந்தார். அவர் உள்ளே சென்றபோது ஆசிரியராகிய நாங்கூர் அடிகள் அந்தப் பூம்பொழிலிலே இருந்ததொரு பொய்கைக் கரைமேல் அமர்ந்து நீர்ப்பரப்பில் மலர்ந்து கொண்டிருந்த செங்குமுத மலரைப் பார்த்துக் கொண்டிருந்தார். நீரின் மேல் தீ மலர்வது போல் செந்நிறத்தில் அழகாக மலரும் அந்தப் பூவின் மேல் அவருடைய கண்கள் நிலைத்திருந்தன.

தமக்குப் பின்னால் யாரோ மெல்ல நடந்து வரும் ஓசை கேட்டும் அவர் கவனம் கலைந்து திரும்பவில்லை. அவருக்கு ஒவ்வோர் அனுபவமும் ஒரு தவம்தான். எதில் ஈடுபட்டாலும் அதிலிருந்து மனம் கலையாமல் இணைந்து விட அவருக்கு முடியும். பூவின் எல்லா இதழ்களும் நன்றாக விரிந்து மலர்ந்த பின்புதான் அவர் திரும்பிப் பார்த்தார். அதுவரையில் அவருக்குப் பின்புறம் அடக்க ஒடுக்கமாகக் காத்து நின்ற நீலநாக மறவர், “அடியேன், நீலநாகன் வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

“வா அப்பா! வந்து வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தாயோ? நான் இந்தப் பூவில் தெய்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே தியானத்திலும் ஆழ்ந்து விட்டேன். பூ, காய், பழம், மரம், செடி, கொடி, மலை, கடல் எல்லாமே தெய்வம்தான்! அவைகளைத் தெய்வமாகப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால் நிற்குமிடமெல்லாம் கோவில்தான். நினைக்குமிட மெல்லாம் தியானம்தான். பார்க்குமிடம் எல்லாம் பரம்பொருள்தான். இவையெல்லாம் உனக்கு வேடிக்கையாயிருக்கும் நீலநாகா! இத்தனை முதிர்ந்த வயதில் இப்படி நேரமில்லாத நேரத்தில் மரத்தடியிலும் குளக்கரையிலும் கிடக்கிறேனே என்று நீ என்னை எண்ணி வருத்தப்பட்டாலும் படுவாய்! ஆனால் எனக்கென்னவோ வயதாக ஆக இந்தப் பித்து அதிகமாகிக் கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் தெய்வமாகத் தெரிகிறது. எந்தச் சிறு அழகைப் பார்த்தாலும் தெய்வத்தின் அழகாகத் தெரிகிறது. தளிர்களில் தெய்வம் அசைகிறது. மலர்களில் தெய்வம் சிரிக்கிறது, மணங்களில் தெய்வம் மணக்கிறது.”

இவ்வாறு வேகமாகச் சொல்லிக் கொண்டு வந்த அடிகள் முதுமையின் ஏலாமையால் பேச்சுத் தடையுற்று இருமினார்.

“இந்தக் காற்றில் இப்படி உட்கார்ந்திருந்தது உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, ஐயா! வாருங்கள் உள்ளே போகலாம்” என்று அவருடைய உடலைத் தாங்கினாற் போல் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் நீலநாக மறவர்.

அடிகளின் தவக்கூடத்துக்குள் சென்று அமர்ந்த பின் அவர்கள் உரையாடல் மேலே தொடர்ந்தது. நீலநாக மறவர் அடிகளிடம் வேண்டிக் கொண்டார்:

“ஐயா! சென்ற ஆண்டு இந்திரவிழாவின்போது தங்களைச் சந்தித்தபின் மறுபடியும் எப்போது காண்போம் என்ற ஏக்கத்திலேயே இத்தனை நாட்களைக் கடத்தினேன். பூக்களிலும், தளிர்களிலும், தெய்வத்தைக் கண்டு மகிழ்கிற உங்களிடமே தெய்வத்தைக் காண்கிறேன் நான். எனக்கு என்னென்ன கூற வேண்டுமோ அவ்வளவும் கூறியருளுங்கள். அடுத்த இந்திரவிழா வருகிறவரை இப்போது தாங்கள் அருளுகிற உபதேச மொழியிலேயே நான் ஆழ்ந்து மகிழவேண்டும்.”

இதைக் கேட்டு நாங்கூர் அடிகள் நகைத்தபடியே நீலநாக மறவரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

“இத்தனை வயதுக்குப் பின்பு இவ்வளவு மூப்பு அடைந்தும் நீ என்னிடம் உபதேசம் கேட்க என்ன இருக்கிறது, நீலநாகா? உனக்கு வேண்டியதையெல்லாம் முன்பே நீ என்னிடமிருந்து தெரிந்து கொண்டு விட்டாய். உன்னைப்போல் பழைய மாணவர்களுக்கு இப்போது நான் கூறுவதெல்லாம் நட்புரைதான். அறிவுரை அல்ல. ஆனால் ஒரு பெரிய ஆசை எனக்கு இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையெல்லாம் விதைத்து விட்டுப் போக ஒரு புதிய நிலம் வேண்டும். அந்த நிலம் மூப்படையாததாக இருக்க வேண்டும். நெடுங்காலம் விளையவும், விளைவிக்கவும் வல்லதாக இருக்க வேண்டும்.”

"எனக்குப் புரியவில்லை ஐயா! இன்னும் தெளிவாகக் கூறலாமே?”

“காவியத்துக்கு நாயகனாகும் குணங்கள் நிறைந்த முழு மனிதனைக் கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருப்பதுபோல் என் ஞானத்தை எல்லாம் நிறைத்து வைக்கத் தகுதி வாய்ந்த ஓர் இளம் மாணவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் நான்.”

இதைச் சொல்லும்போது நாங்கூர் அடிகளின் குழிந்த கண்களில் ஆவல் ஒளிரும் சாயல் தெரிந்தது. ஏக்கமும் தோன்றியது.

அடிகளிடம் வெகு நேரம் தத்துவங்களையும், ஞான நூல்களையும் பற்றிப் பேசிவிட்டு இறுதியாகக் காவிரிப்பூம் பட்டினத்து நிகழ்ச்சிகளையும் கூறினார் - நீலநாக மறவர். அருட்செல்வ முனிவர் மறைவு, அவர் வளர்த்த பிள்ளையாகிய இளங்குமரன் இப்போது தன் ஆதரவில் இருப்பது, எல்லாவற்றையும் அடிகளுக்கு விவரித்துக் கூறியபோது அவர் அமைதியாகக் கேட்டுக் கொன்டே வந்தார். நீலநாக மறவர் யாவற்றையும் கூறி முடித்தபின்., “நீ இப்போது கூறிய இளங்குமரன் என்னும் பிள்ளையை ஒருநாள் இங்கு அழைத்துவர முடியுமா நீலநாகா?” என்று மெல்லக் கேட்டார் நாங்கூர் அடிகள்.

அவர் என்ன நோக்கத்தோடு அப்படிக் கேட்கிறார் என்று விளங்கிக்கொள்ள இயலாவிடினும், நீலநாக மறவர் இளங்குமரனை ஒருநாள் அவரிடம் அழைத்துவர இணங்கினார்.

மறுநாள் இரவு நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பும்போது அடிகள் மீண்டும் முதல்நாள் தாம் வேண்டிக்கொண்ட அதே வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார்.

“என்ன காரணமென்று எனக்கே சொல்லத் தெரியவில்லை, நீலநாகா! அந்தப் பிள்ளை இளங்குமரனை நான் பார்க்க வேண்டும்போல் ஒரு தாகம் நீ அவனைப் பற்றிச் சொன்னவுடன் என்னுள் கிளர்ந்தது. மறந்து விடாமல் விரைவில் அவனை அழைத்து வா”

இளங்குமரனுடைய வீரப் பெருமைக்கு ஆசிரியரான நீலநாக மறவர் இப்போது அந்த இளைஞனின் வாழ்வில் இன்னும் ஏதோ ஒரு பெரிய நல்வாய்ப்பு நெருங்கப் போகிறதென்ற புதிய பெருமை உணர்வுடன் திருநாங்கூரிலிருந்து திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/034-039&oldid=1149518" இலிருந்து மீள்விக்கப்பட்டது