உள்ளடக்கத்துக்குச் செல்

மணி பல்லவம் 1/035-039

விக்கிமூலம் இலிருந்து

35. தெய்வமே துணை!

நீரில் மூழ்கிவிட்ட அந்தப் பெண் யாராயிருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உறுதியான எண்ணத்துடன், இரு கரையும் நிரம்பிடப் பொங்கிப் பெருகி ஓடும் காவிரிப் புனலில் இளங்குமரன் தன்னுடைய நீண்ட கைகளை வீசி நீந்தினான். கரையிலிருந்து பார்த்தபோது அவள் இன்ன இடத்தில் மூழ்கியிருக்க வேண்டுமென்று முன்பு குறிப்பாகத் தெரிந்த சுவடும் இப்போது தெரியவில்லை. மூழ்கிய பெண்ணைப் பற்றிய கவனமே இல்லாமல் வாயில் அடங்கிய ஆவலோடும் தங்கள் திறமையை நிரூபிக்கும் ஆசையோடும் மற்றப் பெண்கள் நீந்தி முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

மிக அருகில் நேர் கிழக்கே கடலோடு கலக்கப் போகும் ஆவலுடன் ஓடிக் கொண்டிருந்த காவிரியில் நீரோட்டம் மிகவும் வேகமாகத்தான் இருந்தது. தேங்கி நிற்கும் நீர்ப் பரப்பாயிருந்தாலாவது மூழ்கியவளின் உடல் மிதந்து மறைவதை எதிர்பார்க்கலாம். ஒரு வேளை நீரோட்டத்தின் போக்கில் கிழக்கே சிறிது தொலைவு அந்தப் பெண் இழுத்துக் கொண்டு போகப்பட்டிருப்பாளோ என்ற சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. உடனே அவள் மூழ்கின துறைக்கு நேரே கிழக்குப் பக்கம் சிறிது தொலைவு வரை நீந்தினான் இளங்குமரன். நினைத்தது வீண்போகவில்லை. அவன் நீந்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஒரு பனைத் தூரத்தில் விரிந்த கருங்கூந்தலோடு எழுந்தும் மூழ்கியும் தடுமாறித் திணறும் பெண்ணின் தலை ஒன்று தெரிந்தது. கணத்துக்குக் கணம் அந்தத் தலைக்கும் அவனுக்கும் இடையிலிருந்த நீர்ப் பரப்பின் தொலைவு அதிகமாகிக் கொண்டு வந்தது. அவன் தன் ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி எவ்வளவோ வேகமாக நீந்தியும் கூட விரைந்தோடும் நீரின் ஓட்டம் அவளை இன்னும் கிழக்கே இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

கடலும் காவிரியும் கலக்குமிடம் நெருங்க நெருங்க ஆழமும் அலைகளும் அதிகமாயிற்றே என்று தயங்கினாலும் இளங்குமரன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை.

‘பூம்புகார்போல் பெரிய நகரத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கே வாய்ப்புக் குறைவு. அப்படியிருந்தும், அரிதாக ஏற்பட்ட ஓர் உதவியைச் செய்யாமல் கைவிடலாகாது’ என்பதுதான் அப்போது இளங்குமரனின் நினைப்பாக இருந்தது. முகம் தெரியாத அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரை சேர்த்து அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து கொண்டே, பாய்ந்து நீந்தினான் அவன். நகரத்து மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு நீராட்டு விழா முடிந்து திரும்பும்போது, பெண் காவேரியில் மூழ்கி மாண்டதற்காக அழுது புலம்பும் பெற்றோருடைய ஓலம் ஒன்றும் காவிரிக் கரையில் இருந்து ஒலிக்கக்கூடாது என்பதுதான் அவன் ஆசை.

இதோ அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அருகில் நெருங்கி அவளுடைய கூந்தலை எட்டிப் பிடித்து விட்டான் இளங்குமரன். அவளுடைய கூந்தல் மிகப் பெரிதாக இருந்ததனால் அவளை இழுத்துப் பற்றிக் கொள்ள இளங்குமரனுக்கு வசதியாயிருந்தது. தன் உடலோடு இன்னோர் உடலின் கனமும் சேரவே நீந்த விடாமல் நீரோட்டம் அவனை இழுத்தது. மேகக் காடுபோல் படர்ந்த நறுமணத் தைலம் மணக்கும் அந்தப் பெண்ணின் கூந்தல் அவளுடைய முகத்தை மறைத்ததோடன்றி அவனுடைய கண்களிலும் வாயிலும் சரிந்து விழுந்து தொல்லை கொடுத்தது. எதிரே பார்த்து நீந்திப் பயனில்லை. நீரோட்டத்தை எதிர்த்து மேற்குப் பக்கம் நீந்தினால்தான் காவிரித்துறைகளில் ஏதாவதொன்றின் அருகே கரையேறி மீள முடியும். கிழக்கே போகப் போகக் கடல் நெருங்கிக் கொண்டிருந்தது. நீரும் உப்புக் கரிக்கத் தொடங்கியது. ஆழம் அதிகமாவதோடு முதலைகளினால் பெரும் எதிர்ப்பும் கிழக்கே போகப் போக மிகுதியாகி விடுமே என்று எண்ணி நடுக்காவிரியில் தத்தளித்தான் இளங்குமரன். செய்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை.

இந்தச் சமயம் பார்த்து மழையும் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. நாற்புறமும் பனி மூடினாற் போல மங்கலாகத் தெரிந்ததே தவிர ஒன்றும் தெளிவாகக் காண முடியவில்லை. மேகங்கள் தலைக்குமேல் தொங்குவது போலக் கவிந்து கொண்டன. காற்று வெறி கொண்டு வீசியது. அலைகள் மேலெழுந்து சாடின.

உயிர்களை எல்லாம் காக்கும் காவிரி அன்னை தன் உயிரையும், அந்தப் பேதைப் பெண்ணின் உயிரையும் பலிகொள்ள விரும்பிவிட்டாளோ என்று அவநம்பிக்கையோடு எண்ணினான் இளங்குமரன். நீரோட்டம் இழுத்தது, உடல் தளர்ந்தது. பெண்ணின் சுமை தோளில் அழுத்தியது. கால்கள் நிலை நீச்சும் இயலாமல் சோர்ந்தன. நம்பிக்கை தளர்ந்தது.

ஆனால் காவிரி அன்னை இளங்குமரனைக் கைவிட்டு விடவில்லை. சிறிதளவு சோதனைதான் செய்தாள். கிழக்கு நோக்கி நீரோட்டத்தோடு நீரோட்டமாகக் கவனிப்பாரின்றி மிதந்து வந்த படகு ஒன்று இளங்குமரனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. படகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நீராட்டு விழா ஆரவாரத்தில் படகுக்குரியவர்களின் கவனத்தை மீறி அறுத்துக் கொண்டு வந்த அநாதைப் படகுபோல் தோன்றியது அது. பலங்கொண்ட மட்டும் முயன்று ஒரு கையால் அந்தப் பெண்ணின் உடலைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்திப் படகைப் பற்றினான் இளங்குமரன். நீரின் வேகம் அவனையும் படகையும் சேர்த்து இழுத்தது. அவனும் விடவில்லை. படகும் அவன் பிடித்த சுமை தாங்காமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அரை நாழிகை நேரம் படகோடும் நீரோட்டத்தோடும் போராடி முயன்று எப்படியோ தன்னையும், அந்தப் பெண்ணையும் படகுக்குள் ஏற்றிக் கொண்டான் இளங்குமரன். படகுக்குள் ஏற்றிக்கொள்ள மட்டும்தான் அவனால் முடிந்ததே ஒழியக் கடலைநோக்கி ஓடும் படகை எதிர்த் திசையில் காவிரித் துறையை நோக்கி மறித்துச் செலுத்த முடியவில்லை. அப்போதிருந்த காற்றிலும், மழையிலும், நீர்ப்பிரவாகத்தின் அசுர வேகத்திலும் அப்படி எதிர்ப்புறம் படகைச் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது. காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத்தை நோக்கி வெறிகொண்ட வேகத்தில் இழுத்துக் கொண்டு போயிற்று அந்தப் படகு. படகு சென்ற வேகத்தினாலும், அலைகளின் அசைப்பினாலும் உள்ளே கிடத்தியிருந்த பெண்ணின் தலை படகின் குறுக்கு மரச் சட்டத்தில் மோதி இடிக்கலாயிற்று. இளங்குமரனின் உள்ளம் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்தியது. அந்தப் பெண்ணின் தலையை மெல்லத் தூக்கித் தன் மேலங்கியைக் கழற்றி மடித்து அவள் தலைக்கு அணைவாக வைத்தான். அவள் தலை மோதி இடிப்பது நின்றது.

பெருமழை பெய்யவே மழைநீர் படகில் சிறிது சிறிதாகத் தேங்கலாயிற்று. மிகச் சிறிய அந்தப் படகில் இருவர் சுமையுடன் நீரும் தேங்குவது எவ்வளவு பயப்படத்தக்க நிலை என்பதை எண்ணியபோது இளங்குமரன் தனக்கிருந்த சிறிதளவு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினான். மனம் உறுதி குன்றியது.

காவிரி கடலோடு கலக்குமிடம் நெருங்க நெருங்கப் படகின் ஆட்டம் அதிகமாயிற்று. அலைகளும் சுழிப்புக்களும் படகை மேலும் கீழும் ஆட்டி அலைத்தன. படகினுள்ளே தேங்கிய நீரை முடிந்தவரை அப்புறப்படுத்த முயன்று மேலும் மேலும் நீர் சேர்ந்து கொண்டிருந்ததும், புயலில் உதிர்ந்த அரசிலையாகப் படகு அலைபட்ட போது, மனித நம்பிக்கைகள் குன்றியவனாக இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கூப்பினான், இளங்குமரன். “பூம்புகாரைக் காக்கும் தெய்வமே! சம்பாபதித் தாயே! என்னையும் இந்த அபலைப் பெண்ணையும் காப்பாற்று நான் இன்னும் நெடுங்காலம் வாழ ஆசைப்படுகிறேன். என்னை அழித்து விடாதே, என் ஆசைகளை அழித்து விடாதே” என்று மனமுருக வேண்டிக் கொள்வதைத் தவிர, வேறு முயற்சி ஒன்றும் அப்போது அவனுக்குத் தென்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/035-039&oldid=1149519" இலிருந்து மீள்விக்கப்பட்டது