மணி பல்லவம் 2/013-022
தந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்டிருந்தவற்றில் எதையும் பேச முடியவில்லை.
சுரமஞ்சரி இளங்குமரனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணின் மனம் சந்தனப் பேழையைப் போன்றது. சந்தனப் பேழையில் சந்தனம் இருந்தாலும் மணக்கும். சந்தனம் இல்லாவிட்டாலும் அது இருந்ததற்கு அடையாளமான மணம் கமழும். மனத்துக்குப் பிரியமானவர் அருகில் இருந்தாலும் விலகி இருந்தாலும் அவரைப் பற்றிய இனிய நினைவுகளை எண்ணாமலிருக்கப் பெண்ணால் முடிவதில்லை. சுரமஞ்சரியின் மனத்திலும் சந்தனப் பேழையைப் போல் இளங்குமரனின் நினைவுகள் மணந்தன.
‘பின்னால் துரத்திக் கொண்டு சென்ற நகைவேழம்பரால் ஓவியனுக்கு ஒரு துன்பமும் ஏற்பட்டிருக்காததனால் அவரிடம் தெரிவிப்பதற்கென நான் சொல்லியனுப்பிய செய்தி அவரை எட்டியிருக்கும்’ என்று நினைத்தாள் அவள்.
“நான் இடைவிடாமல் இளங்குமரனையே நினைத்துக் கொண்டிருப்பது ஏன்! எப்படி இந்தப் பித்துக் கொண்டேன்?” என்று தனக்குத் தானே ஒரு கணம் விலகி நினைக்கும்போது அவளுக்கு வெட்கமாகக்கூட இருந்தது.
“தன்னுடைய நெஞ்சத்தில் எனக்குச் சிறிதும் இடமளிக்காமல் என்னைக் கடிந்து ஒதுக்கும் அவர் என்னுடைய நெஞ்சில் புகுந்து இப்படி நினைவுகளாகத் தங்கி வேதனைப் படுத்துகிறாரே; வெட்கமில்லையா அவருக்கு?” என்று காதலனைப் பிரிந்த காதலி துயரப்படுவதாக வள்ளுவர் பெருமான் எழுதியுள்ள அழகிய குறள் ஒன்று சுரமஞ்சரிக்கு நினைவு வந்தது.
"தம்நெஞ்சத்(து) எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்?“
இந்தக் குறளின் தலைவியாகத் தன்னையும், தலைவனாக இளங்குமரனையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் சுரமஞ்சரி. கற்பனை மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அது உண்மையல்ல; கற்பனை மட்டுமே என்பதால் துயரமும் அதிலிருந்தே பிறந்தது. ‘என்னைப் பற்றி நினைத்து மகிழாதவருக்கு என் நினைவில் மட்டும் அடிக்கடி நுழைய உரிமை ஏது?’ என்று குறளில் வந்ததைப் போல் எண்ணினாலும் அவரைக் கடிந்து கொள்ளத் தனக்கு என்ன உரிமையிருக்கிறதென்ற வினாவும் அவள் மனத்திலேயே எழுந்தது.
அவர்கள் உட்கார்ந்திருந்த அதே நெய்தலங் கானற் கரையின் கோடியில்தான் காவிரி கடலோடு கலக்கும் இடமும் இருந்தது. அந்த இடத்தில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்று இரண்டு ஏரிகளும் அவற்றின் கரையில் காமவேள் கோட்டம் என்னும் கோயிலும் அமைந்திருந்தன. இந்தப் பிறவியில் இன்பத்தையும் மறுமையில் போக பூமியையும் தரக்கூடிய புண்ணியப் பயன் வாய்ந்த இந்த ஏரிகளுக்குப் பூம்புகார் மக்கள் இருகாமத் திணை ஏரி என்று பெயர் வழங்கினார்கள். மனம் விரும்பிய நாயகனை அடைவதற்கும், அடைந்த நாயகனைப் பிரியாமல் இருப்பதற்கும், இந்த ஏரிகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வணங்கி வலங்கொண்டு வழிபடுவது பூம்புகார்ப் பெண்களின் வழக்கமாயிருந்தது. இதனால் இருகாமத்திணை ஏரிகளின் கரையிலும் காமவேள் கோட்டத்திலும் இளம் பெண்களின் பெருங்கூட்டத்தை எப்போதும் காணலாம். இரண்டு பிறவிகளிலும் நுகர்வதற்குரிய ஆசைகளை இணைத்தலால் இருகாமத்து இணை ஏரி என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு இதற்கு முன் சுரமஞ்சளி பல முறை சென்றிருக்கிறாள். ஆனால், தன் மனத்துக்குள் ஒரு விருப்பத்தையோ, அந்தரங்கமான குறிக்கோளையோ அமைத்துக் கொண்டு அதற்கு வேண்டுதலாக இதுவரை அவள் சென்றதில்லை. இப்போது அப்படிப் போக வேண்டிய அவசியம் வந்திருப்பதை அவள் உணர்ந்தாள். ‘நீராடியும், வலம் வந்தும், வழிபட்டும், இன்னொருவருடைய மனத்தை நம் பக்கம் இழுத்து விடுவதற்கு இயலுமோ, இயலாதோ, அப்படிச் செய்கின்ற சடங்குகளால் செய்யப்படுகிற செயலின் மேல் நமக்குள்ள பக்தியும் சிரத்தையும் வளர்ந்து விடுகிறது. அதற்காகவாவது எல்லாரையும் போல நானும் அவற்றை விட்டு விடாமல் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள் சுரமஞ்சரி.
“வந்து வெகு நேரமாகிவிட்டதே? புறப்படலாமா?” என்று வசந்தமாலை மாளிகைக்குத் திரும்புவதை நினைவூட்டினாள்.
“இப்போது திரும்பலாம்; ஆனால் நாளைக்கு மறுபடியும் நாம் இந்தப் பக்கமாக வரவேண்டிய காரியமிருக்கிறது” என்று கூறிக்கொண்டே சுரமஞ்சரி எழுந்தாள்.
இருவரும் தேரில் ஏறிக் கொண்டதும் ஊழியன் தேரைச் செலுத்தினான். மணிகளை ஒலித்துக் கொண்டு தேர் விரைந்தது. சுரமஞ்சரியும், வசந்தமாலையும் மாளிகையை அடைந்தபோது முன் கூடத்தில் தந்தையார் அமர்ந்திருந்தார். மாலையில் பாண்டிய நாட்டுக் கொற்கையிலிருந்தும், சேரநாட்டு விழிஞத்திலிருந்தும் வாணிகக் கப்பல்கள் வந்து துறை சேர்ந்திருந்தன போலும். தந்தை யாருக்கு முன்னால் முத்துக் குவியலும் முற்றிப் பருத்து நீண்ட யானைத் தந்தங்களும் காட்சியளித்தன. அவற்றைத் துறைமுகத்திலிருந்து சுமந்து வந்த கப்பல் ஊழியர்கள் சுற்றிலும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தந்தையார் அவர்களிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
இவற்றில் ஒன்றும் புதுமை இல்லை. அடிக்கடி அந்த மாளிகையில் தென்படுகிற காட்சிதான். சுரமஞ்சரியும் வசந்தமாலையும் உள்ளே போய்த் தங்களுக்காகக் காத்திருந்த தாயுடனும், வானவல்லியுடனும் உண்பதற்குச் சென்றார்கள்.
“இன்றைக்கு முத்துக் கப்பல் வந்திருக்கிறது அம்மா! நல்ல முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து எனக்கு ஒரு மாலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று வானவல்லி தாயிடம் கூறினாள்.
“உனக்குத்தான் நாலைந்து முத்து மாலைகள் இருக்கின்றனவே. இன்னும் எதற்கு?...”
“முத்துக்களில் ஒவ்வொன்றும் ஒரு சாதி அம்மா. இந்தக் கப்பலில் இன்றைக்கு வந்திருக்கிற முத்துக்கள் எல்லாமே நன்றாக விளைந்தவை. பொதிகளை இறக்கிப் பிரித்துக் குவித்தவுடனே நான் போய்ப் பார்த்தேன்.”
“முத்துக்களைப் புகழ்ந்து நீ இவ்வளவு பேசுகிறாயே வானவல்லி! உன் பக்கத்தில் அமர்ந்து உண்ணுகிற சுரமஞ்சரியும் அவள் தோழியும் ஏன் இப்படிப் பேசாமல் அமைதியாயிருக்கிறார்கள்?” என்று சொல்லி நகைத்துக் கொண்டே சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உற்றுப் பார்த்தாள் அன்னை.
“சுரமஞ்சரிக்கு இப்போது எதற்குமே நேரமில்லையம்மா! முன்பெல்லாம் மாலை வேளைகளில் மேல் மாடத்துக்குச் சென்று என்னை வேய்ங்குழல் வாசிக்கச் சொல்லி எதிரே அமர்ந்து நேரம் போவது தெரியாமல் கேட்பாள். இப்போதோ அவளும் அவள் தோழியும் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே வெளியே கடற்கரைக்கும், காவிரித்துறைக்கும் போகத் தொடங்கிவிட்டார்கள். திடீரென்று மெளனமாகி விடுவதற்கும், திடீரென்று சிரிப்பதற்கும் அவளுக்கு ஏதேதோ புதுப்புதுக் கவலைகளும், புதுப்புது மகிழ்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன அம்மா” என்று முத்து மாலையில் தொடங்கிய பேச்சு சுரமஞ்சரியைப் பற்றித் திரும்பியது.
தாங்கள் பழகுகிற முறையில் தாயும் சகோதரியும் மேலும் வேறுபாடு காணலாகாதே என்பதற்காகச் சுரமஞ்சரி அவர்களோடு சிரித்துப் பேச முயன்றாள். தோழியும் பேசினாள். ஆனால் சுரமஞ்சரியும் தோழியும் பேசிய பேச்சிலும், சிரித்த சிரிப்பிலும், இயற்கையான உற்சாகம் இல்லை என்பதைத் தாயினால் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்தப் பெண் எதையோ மனத்துக்குள் வைத்துக் கொண்டு கலங்குகிறாள்’ என்பது பெற்ற உள்ளத்துக்குப் புரிந்தது. சமயம் பார்த்துப் பெண்ணிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் தாய். அந்த மாளிகையில் அவளுக்கு இருக்கிற ஒரே மன நிறைவு, நம்முடைய பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதுதான்! அதை இழக்க அந்தத் தாயுள்ளம் விரும்பாததில் வியப்பில்லை. தான் பெற்றவர்களின் மகிழ்ச்சியிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தேடிப் பெறுகிறவள் தாய். அவள் தேடுகிற உள்ளங்களிலெல்லாம் மகிழ்ச்சியில்லையானால் அவளுக்கும் மகிழ்ச்சி இல்லை.
உணவு முடிந்ததும் முத்துக் குவியலிலிருந்து நல்முத்துக்களைப் பொறுக்கி எடுக்கத் தாயையும் துணைக்கு அழைத் தாள் வானவல்லி. தான் மட்டும் தனியாகப் போனால் தந்தையார் சீறி விழுவார் என்பது அவளுக்குத் தெரியும். தாயோ சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உடனழைத்தாள்.
“நீயும் வா, சுரமஞ்சரி! உனக்கும், உன் தோழிக்கும் கூட மாலைக்கு முத்துக்கள் தேர்ந்தெடுக்கலாமே, ஏன் இப்படி மகிழ்ச்சியில்லாமல் காணப்படுகின்றாய்? என்னிடம் மனம் திறந்து சொல்லக்கூடாதா?” என்று கேட்டாள் தாயார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. களைத்துப் போயிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறேன் போலிருக்கிறது. நீங்கள் போய் முத்துக்களைப் பாருங்கள். என்னிடம் வேண்டிய முத்து மாலைகள் இருக்கின்றன. நான் உறங்கப் போகிறேன். தளர்ச்சியாயிருக்கிறது” என்று கூறித் தோழியோடு தன் மாடத்துக்குப் புறப்பட்டு விட்டாள் சுரமஞ்சரி.
மாடத்தை அடைந்து தானும், தன் தலைவியும் தனிமை பெற்றதும் வசந்தமாலை, “ஏனம்மா, நாளைக்கு மறுபடியும் நெய்தலங்கானலுக்குப் போக வேண்டுமென்றீர்களே? எதற்காக அங்கே போக வேண்டும்?” என்று கேட்டாள்.
“கடற்கரையிலேயே உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேனடி, வசந்தமாலை! தந்தையார் தேர் ஓட்டுவதற்காக நம்மோடு அனுப்பியிருந்த ஊழியன் நாம் எப்போது வாய்திறந்து பேசப்போகிறோம் என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பக்கத்திலேயே பழி கிடந்தான், அதனால் அந்தரங்கமாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. நாளைக்குக் காலையில் விடிவதற்கு முன்பே துயிலெழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நடந்தே நெய்தலங்கானலுக்குப் புறப்பட்டு விட வேண்டும். கதிரவன் உதயமாவதற்கு முன்பே, சோம குண்டம், சூரியகுண்டம், இரண்டு ஏரிகளிலும் நீராடிக் காமன் கோவிலை வலம் வந்து வணங்கிவிட்டுப் போனது தெரியாமல் மாளிகைக்குத் திரும்பிவிட வேண்டும்.”
இதைக் கேட்டு வசந்தமாலை நளினமாகச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே சுரமஞ்சரியின் கண்களைப் பார்த்தாள்.
“அந்த இரண்டு ஏரிகளிலும் பொதுவாக எல்லாரும் நீராடுவதில்லையே, அம்மா! மனத்துக்குள் ஏதாவதொரு ஆசையை உருவேற்றிக் கொண்டு அது விளையவேண்டுமென்று அல்லவா அங்கு நீராடிக் காமன் கோவிலை வலம் வருவார்கள்? உங்களுக்கும், எனக்கும் இப்போது உடனே அந்த ஏரிகளில் நீராடித் தீரவேண்டிய அவசரம் ஒன்றுமில்லையே?”
“அப்படியானால் நீயும், நானும் ஆசைகளே இல்லாத மனத்தையுடையவர்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா வசந்தமாலை?”
“அதற்குச் சொல்லவில்லையம்மா. இருகாமத்திணை ஏரியில் நீராடிக் காமன் கோவிலை வலம் வருகிற ஆசை வேறு வகையைச் சேர்ந்தது. அங்கே நம்மைக் காண்கின்றவர்கள் குறும்பு பேசி நகைப்பார்கள்...”
“குறும்புப் பேச்சுக்கும் நகைப்புக்கும் பயந்து நாணுவதாயிருந்தால் எந்தப் பெண்ணும் அங்கே போகாமல் அல்லவா இருக்க வேண்டும்? பொழுது புலர்ந்தால் நகரில் உள்ள பெண்களின் கூட்டமெல்லாம் அங்கேதான் போய்க் கூடுகிறது.”
வசந்தமாலை பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே தலைவியின் மேல் பதியவிட்ட பார்வையை மீட்காமல் இருவிழிகளையும் மலர விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் பார்வை தாங்காமல் சுரமஞ்சரி நாணிக் குழைந்தாள்.
“என்னடி வசந்தமாலை? எதற்காக இப்படிப் பார்க்கிறாய்?”
“ஒன்றுமில்லை! உங்களுடைய ஆசைகளிலும், தோற்றத்திலும் புதுமைகள் பிறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன் அம்மா! நீங்கள் எவ்வளவோ மாறி விட்டீர்கள். உங்களுடைய பிடிவாதமான உறுதிகளையும், செருக்கையும், எங்கேயோ தோற்கக் கொடுத்துவிட்டீர்கள்.”
இதைக் கேட்டு சுரமஞ்சரி மேலும் நாணமடைந்தாள். அவள் கைகள் பக்கத்தில் வைத்திருந்த பூக்குடலையிலிருந்த ஒரு செந்தாமரைப் பூவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரைப் பூவின் மெல்லிளஞ் செவ்விதழ்களுக்கும் அவளுடைய கைகளுக்கும் வேறுபாடு தெரியாத விந்தை எழிலைப் பார்த்துக் கை எது தாமரைப் பூ எது என்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருந்த வசந்த மாலை விரல்களிலிருந்த மோதிரங்களைக் கொண்டு கையை அடையாளம் கண்டாள். தன் தலைவியிடம் வியந்து கூறலானாள் அவள்:
‘கமலத்தைப் பற்றியிருக்கும் இந்தக் கர கமலங்களைப் பிடிக்கப் போகிறவர் பாக்கியசாலியாகத்தான் இருக்க வேண்டும் அம்மா.’
“இல்லையே தோழி! அந்தப் பாக்கியசாலி இந்தக் கைகளையும் உதறிவிட்டுச் செல்கிற கல்நெஞ்சுக்காரராக அல்லவா இருக்கிறார்?” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.
அப்போது கீழே மாளிகையின் முன்புறத்தில் ஒரு நாளுமில்லாத புதுமையாய் நகைவேழம்பர், தந்தையாரிடம் இடிமுழக்கம் போன்ற குரலில் உரக்கப் பேசும் ஓசை மேன்மாடத்தையும் எட்டியது. தந்தையாரின் பதில் குரல் கேட்கவில்லை. ஆனால் எல்லை கடந்து சிறி ஒலிக்கும் நகைவேழம்பரின் குரலோ மாளிகையையே அதிரச் செய்து கொண்டிருந்தது.
“இந்த இரவு நேரத்தில் இவர் எதற்காக இப்படிப் பேய்க் கூப்பாடு போடுகிறார்? யாருடைய குடி முழுகி விட்டது இப்போது? என் தந்தையை எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு இவரிடம் துணிவு வளர்ந்து விட்டதா? கீழே போய் என்னவென்று பார்த்து வா, வசந்தமாலை!” என்று தன் தோழியை அனுப்பினாள் சுரமஞ்சரி.
தானும் தன் தோழியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் இனிய நினைவுகளிலிருந்து கீழே எழுந்த கூப்பாடு தங்களைக் கலைத்துவிட்டதே என்ற வருத்தத்தால் நகைவேழம்பர் மேல் சுரமஞ்சரிக்கு ஏற்கெனவே இருந்த சினம் பெரிதாய் மூண்டது.
கீழே சென்ற வசந்தமாலை சிறிது நேரத்தில் திரும்பி வந்து கூறினாள்:
“பிரளய காலமே முன்னால் வந்து சீறிக் கொண்டு நிற்பதுபோல் உங்கள் தந்தையாருக்கு முன் கூப்பாடு போட்டுக் கொண்டு நிற்கிறாரம்மா நகைவேழம்பர். அவரைப் பார்க்கவே பயங்கரமாயிருக்கிறது. எங்கேயோ செம்மையாகத் தோல்வியடைந்து பூசைக்காப்பு வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது. அடிபட்ட புலி போலச் சீற்றம் கொண்டு அலைபாய்கிறார். இவ்வளவுக்கும் அசைந்து கொடுக்காமல் உங்கள் தந்தையார் கட்டுப்பட்டு அடங்கி நிற்கிறார். அந்த அரைக்குருட்டு அவலட்சணத்துக்குப் பணிந்து பேசுகிறார்.”
“என்ன அநியாயமடீ இது? நான் போய்ப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி.
“உங்களால் பார்க்க முடியாதம்மா! தந்தையார் அவரை இழுத்துக் கொண்டு தமது அந்தரங்க மண்டபத்துக்குப் போய்க் கதவை அடைத்துவிட்டார்.”
“ஐயையோ! அந்த ஒற்றைக்கண் வேங்கை தனிமையில் தந்தையாரை என்ன செய்தாலும் கேள்வி கேட்பார் இல்லையே?” என்று பதறினாள் சுரமஞ்சரி.
“என்ன ஆனாலும் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை அம்மா! அவர்கள் இருவருமே எவரையும் நெருங்கவிடாமல் தனித்துப்பேசப் போயிருக்கிறார்களே! நாம் என்ன செய்வது?” என்றாள் தோழி.