மணி பல்லவம் 2/014-022
அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்வமும் அந்த மண்டபத்தில் தான் இரத்தின குவியலாகவும், முத்துக் குவியலாகவும், தந்தங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், அணிகலன்களின் குவியலாகவும் பொற்காசுகளாகவும் குவிந்து கிடந்தன.
மண்டபத்துக்குள் கீழே கிடந்த இரத்தினக் குவியலிலிருந்து ஒரே ஒரு பெரிய சிவப்புக்கல் நகைவேழம்பருடைய முகத்தில் போய்ப் பதிந்துகொண்டு மின்னுவது போல் அவரது ஒற்றைக்கண் சிவந்து குரூரமாக மின்னியது. பெருநிதிச் செல்வர் தணிந்த குரலில் அவரிடம் கேட்டார்:
“இன்றைக்கு என்ன இவ்வளவு சீற்றம்? பிரளயம் புகுந்ததுபோல் புகுந்து மாளிகையையே ஒரு கலக்குக் கலக்கி விட்டீர்கள்?”
“எனக்கு உங்கள் மேல் அடக்க முடியாத கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாளிகையையும், உங்களையும், இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்து விட்டுப் போய்க் காவிரியில் தலை முழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்தேன்!”
“காரணம் என்னவோ?”
“காரணமா? இதோ இந்தக் கையைப் பாருங்கள். தெரியும்!” நகைவேழம்பர் தமது வலது கையைத் தூக்கிக் காண்பித்தார். மணிக்கட்டுக்குக் கீழே முழங்கையின் நடுவே ஒரு சுற்றுச் சிவந்து தடித்து வீங்கியிருந்தது அந்தக் கை.
“இந்தக் கை ஒத்துழைக்கவில்லையானால் நீங்கள் இவ்வளவு செல்வத்தைக் குவித்திருக்க முடியுமா?”
“முடியாது.”
“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டு பெரிய மாளிகை வாழ்வும் எட்டிப் பட்டமும், பெருநிதிச் செல்வர் என்ற பீடும் நீங்கள் அடைந்திருக்க முடியுமா?”
“முடியாது.”
“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டுகளாக நீங்கள் செய்து வரும் கொலைகளும் பாதகங்களும், சூழ்ச்சிகளும் உலகத்துக்குத் தெரியாமல் காப்பாற்றியிருக்க இயலுமா?”
“இயலாது”
“நீங்கள் செய்திருக்கிற கொடுமைகளும், துரோகங்களும் வெளியானால் சுட்ட செங்கல்லைத் தலையில் வைத்து ஊர் சுற்றச் செய்து[1]அவமானப்படுத்தி நாடு கடத்துவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.”
“சந்தேகமில்லைதான்.”
“நகைவேழம்பரின் குரல் உரத்து ஓங்க ஓங்கப் பெரு நிதிச் செல்வரின் குரலும், தோற்றமும் ஒடுங்கி நலிந்து கொண்டிருந்தன. ஒரு காலை நன்றாக ஊன்ற முடியாததால் ஏற்கெனவே சாய்ந்து கோலூன்றி நின்ற அவர் இந்தக் கேள்விகளால் தாக்குண்டு இன்னும் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்றார். அவருடைய முகத்திலும், கண்களிலும் நடுக்கமும் பீதியும் தோன்றின. எதிரே நகைவேழம்பர் பாய்ந்து கிழிக்கப் போகிற புலியைப் போல் வலது கையைத் தூக்கிக் கொண்டு நின்றார். அவருடைய மெளனம் பேச்சைக் காட்டிலும் பயமூட்டுவதாயிருந்தது. மெளனத்தை உடைத்து விட்டு அவரே பேசத் தொடங்கினார்.
“இந்தக் கை ஓங்கிய வாள் இதுவரை தவறியதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமல்லவா?”
“நன்றாகத் தெரியும்?”
“இதே கை இன்று தவறிவிட்டது என்பதைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.”
“எங்கே தவறியது? எதற்காகத் தவறியது? யாரிடம் தவறியது? சொல்லுங்கள். நாளைக்குச் சூரியோதயத்துக்குள் உங்கள் கையை இப்படி ஆக்கிய கை எதுவோ அதை உணர்வு செத்துப் போகச் செய்துவிடுகிறேன்” என்று பரபரப்போடு வினாவிய பெருநிதிச் செல்வரை நகைவேழம்பர் சொல்லிய பதில் திடுக்கிட வைத்தது.
“அந்தக் கையை உணர்விழக்கச் செய்வதற்கு உங்களாலும் முடியாது! உங்கள் பாட்டனார் வந்தாலும் முடியாது!”
“ஏன் முடியாது? என்னையும் உங்களையும் போலச் சூழ்ச்சியும் திறனும் உள்ளவர்களால் அழிக்க முடியாத வலிமைகூட இந்த நகரத்திலே இருக்கிறதா?”
“இருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் என்னுடைய இந்தக் கை இப்படி வீங்குமா ?”
“யார் என்றுதான் சொல்லுங்களேன். நடந்ததை ஒன்றும் சொல்லாமல் ஆத்திரமாகப் பேசிக் கொண்டே போவதில் என்ன பயன்?”
“நகைவேழம்பரின் குரல் சிறிது ஒலி குன்றியதும் பெருநிதிச் செல்வரின் குரல் பெரியதாய் ஒலித்தது. சுரமஞ்சரியும் அவள் தோழியும் முயற்சி செய்து ஓவியனை விடுவித்து மணிமாலை பரிசளித்ததிலிருந்து தொடங்கித் தான் ஓவியனைப் பின் தொடர்ந்து சென்றபின் ஆலமுற்றத்தில் நிகழ்ந்தது வரை, எல்லாவற்றையும் கூறினார் நகை வேழம்பர். நீலநாக மறவர் தம்முடைய கையைப் பற்றியதையும், தாம் அவரால் கீழே பிடித்துத் தள்ளப் பட்டதையும் மேலும் ஆத்திரம் மூளும் விதத்தில் விவரித்துச் சொன்னார் அவர்.
“நமக்கு எதிரிகள் வேறெங்கும் இல்லை. நம்முடைய மாளிகையிலேயே இருக்கிறார்கள்” என்று குறிப்பாகச் சொல்லிப் பெருநிதிச் செல்வரின் கோபமெல்லாம் சுரமஞ்சரியின் மேல் திரும்புமாறு செய்ய முயன்றார் அவர்.
ஆனால் பெருநிதிச் செல்வரோ, நீலநாக மறவருடைய பெயரைக் கேட்டதுமே அதற்குமேல் நகைவேழம்பர் கூறிய எதிலுமே கவனம் செலுத்த முடியாதபடி தளர்ந்து தரையிலே உட்கார்ந்திருந்தார்.
“ஆலமுற்றத்து மலையை நம்மால் அசைக்க முடியாதென்று தெரிந்தாலும் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமிட்டு வந்திருக்கிறேன்! நேர் வழியில் முடியாவிட்டாலும் ஏதேனும் சூழ்ச்சி செய்தாவது என் சபதம் நிறைவேற நாம் இருவரும் பாடுபட வேண்டும்” என்று நகைவேழம்பர் ஆவேசமாகச் சொல்லிய போதும் பெருநிதிச் செல்வர் தலையில் கையூன்றியபடி மெளனமாகவே அமர்ந்திருந்தார். நகைவேழம்பர் மறுபடியும் சீறினார்.
“ஏன் இப்படி உட்கார்ந்து விட்டீர்கள்? என் பேச்சு இலட்சியமில்லையா உங்களுக்கு...?”
“பதில் பேசுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை நகைவேழம்பரே! இந்தப் பெரிய நகரத்தில் எந்த மனிதருக்கு முன்னால் அரச குடும்பத்துப் பிள்ளைகளும் வாளுடன் நிற்பதைக் கூட மதிப்புக் குறைவாக நினைத்துப் பயப்படுவார்களோ அந்த மனிதரோடு மோதிவிட்டு வந்திருக்கிறீர்களே நீங்கள்? பெருநிதிச் செல்வரின் குரல் சோர்ந்து ஒலித்தது.
- ↑ குடிப்பெருமை மீறிப் பெருங்குற்றஞ் செய்தாரை இப்படி அவமானப்படுத்துதல் அந்தக் காலத்து வழக்கம்.