மணி பல்லவம் 2/015-022

விக்கிமூலம் இலிருந்து

15. பேய்ச் சிரிப்பு!

லமுற்றத்துப் பெருவீரரான நீலநாக மறவரிடம் அவமானமடைந்து வந்திருந்த நகைவேழம்பரை ஆறுதல் அடையச் செய்வதற்குப் பெருநிதிச் செல்வர் அரும்பாடு பட வேண்டியிருந்தது. பல பேர்களை அடிமையாக வைத்துக் கொண்டு ஆள்கிற அளவுக்குப் பெருஞ்செல்வராக இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் நகைவேழம்பர் என்னும் ஒரே ஒரு மனிதருக்கு முன் தாமே அடிமை போல் நின்று தணிந்துபோக வேண்டிய நிலை அன்று இரவில் அவருக்கு நேர்ந்துவிட்டது.

வெளிப்படையாக நேருக்கு நேர் அந்த ஒற்றைக்கண் மனிதரிடம் பணிந்தாற் போலவும், பயந்தாற் போலவும் நடந்து கொண்டிருந்தாலும் பெருநிதிச் செல்வருடைய மனத்தில் அவர்மேல் தாங்க இயலாத கொதிப்பு விளைந்திருந்தது. நீண்ட நேரத்து விவாதத்துக்குப் பின்னர், நகைவேழம்பரை அமைதி கொள்ளச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர்.

“நீலநாக மறவரை எதிர்த்து நேரடியாக ஒன்றும் செய்வதற்கில்லையென்பது உங்களுக்குத் தெரிந்த செய்திதான் நகைவேழம்பரே! அவருடைய வலிமை உங்களையே தளரச் செய்து விட்டதென்று ஒப்புக் கொள்கிறீர்கள். அவருடைய கைகளை உணர்விழக்கச் செய்வதற்கு என்னாலும் முடியாது. என் பாட்டனாலும் முடியாது என்று என்னிடமும் மறுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரவு நேரத்தில் நமக்குள் வீண் விவாதம் எதற்கு? நீலநாக மறவரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்ய இயலுமா என்று நிதானமாகச் சிந்திக்கலாம். இப்போது நீங்கள் உணவுக் கூடத்துக்குச் சென்று பசியாறிவிட்டு நிம்மதியாகப் போய் உறங்குங்கள்” என்று ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நகைவேழம்பரை உறங்க அனுப்பியிருந்த பெருநிதிச் செல்வர் தம்முடைய உறக்கத்தை இழந்திருந்தார்.

‘இந்த மாளிகையையும் உங்களையும் இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்துவிட்டுப் போய்க் காவிரியில் தலைமுழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்திருக்கிறேன்’ என்று நகைவேழம்பர் குமுறலோடு கூறியிருந்த சொற்களை நினைத்து நினைத்துக் கொதிப்படைந்தார். நச்சுப் பாம்பு வளர்ப்பது போல் நகைவேழம்பரை வளர்த்ததின் பயன் தம் மேலேயே அந்த நஞ்சு பாய்ந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலைக்கு இன்று வந்திருப்பது அவருக்குப் புரிந்தது. இந்த நிலைக்கு ஒரு முடிவு கண்டு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார் பெருநிதிச் செல்வர்.

இத்தனை ஆண்டுகளாகத் தம்மிடமிருந்து அவரும், அவரிடமிருந்து தாமும் விலகியோ, பிரிந்தோ செல்ல முடியாமல் இருவரையும் பிணைத்துப் பின்னியிருந்த அந்தரங்கம் உடைந்து வெளிப்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டதோ என்ற பயமும், நடுக்கமும் இன்று அவருக்கு ஏற்பட்டன. பெருநிதிச் செல்வர் தமது அந்தரங்க மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் தனிமையில் நடந்து கொண்டே சிந்தித்தார். அவருடைய நெற்றியில் வியர்த்தது. இடையிடையே ஊன்றுகோலைப் பற்றியிருந்த கை பிடியை இறுக்கியது. சிந்தனையில் ஏதோ ஒரு முடிவை ஊன்றிப் பதித்துக் கொள்வதைப் புறத்தே காட்டுவதுபோல் நடந்து கொண்டிருக்கும்போதே சில இடங்களில் வேண்டுமென்றே ஓசையெழும்படி ஊன்று கோலை அழுத்தி ஊன்றினார் அவர். வேகமாகக் கால்கள் நடந்தபோது சிந்தனை மெதுவாகவும், சிந்தனை விரைந்த போது கால்கள் மெதுவாகவும் அவர் நடந்த விதமே சிந்தனையின் சுறுசுறுப்பையும், துவண்ட நிலையையும் மாறிமாறிப் புலப்படுத்தின.

அரைநாழிகைக்குப் பின் நமது அந்தரங்க மண்டபத்துக்குள்ளிருந்து அவர் வெளியேறினபோது உறுதியான திட்டத்துடன் புறப்படுகிறவரைப் போலக் காட்சியளித்தார். அந்த உறுதி புலப்பட ஊன்றுகோலை இறுகப் பற்றி அழுத்தி ஊன்றி நடந்து மாளிகையின் உணவுக் கூடத்தை அடைந்தார். அவர் உணவுக் கூடத்தில் நுழைந்த அதே நேரத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டிய பால் நிறைந்த பொற்கலத்தோடு பரிசாரகர் எதிர்ப்பட்டார். பச்சைக் கருப்பூரம், ஏலம் முதலியனவும், பருகுவதற்குச் சுவையூட்டும் பிற பொருள்களும் இட்டுக் காய்ச்சப் பெற்ற பால் மணம் பரப்பியது.

மாளிகையின் தலைவரே எதிரில் வருவதைக் கண்டு பரிசாரகர் வணக்கமாகத் தயங்கி நின்றார். அந்த நேரத்தில் அவரை அங்கே கண்டதனால் பரிசாரகரின் மெய்யில் ஏற்பட்ட நடுக்கம் கைகளிலும் கைகளில் ஏந்தியிருந்த பொற்கலத்திலும், பொற்கலத்தில் நிறைந்திருந்த பாலிலும் கூடத் தோன்றியது.

“நகைவேழம்பர் உண்பதற்கு வந்திருந்தார் அல்லவா?” என்று பெருநிதிச் செல்வரிடமிருந்து கேள்வி பிறந்தபோது “ஆம்! இப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு சென்றார். அவருக்கு உணவு பரிமாறி முடித்ததும்தான் உங்களுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்” என்று பரிசாரகர் கூறிய மறுமொழியிலும் பதற்றமிருந்தது.

வயது மூத்த அந்தப் பரிசாரகரின் முகத்தையே உற்று நோக்கியபடி சில விநாடிகள் அமைதியாக நின்றார் பெருநிதிச் செல்வர். பரிசாரகர் ஒன்றும் புரியாமல் திகைத்து மேலும் நடுங்கினார்.

“பாலைக் கீழே வைத்துவிட்டு வா”

“பரிசாரகர் பாலைக் கீழே வைத்துவிட்டு பெருநிதிச் செல்வரைப் பின்தொடர்ந்து நடந்தார். இருவரும் அந்தரங்க மண்டபத்தை அடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட பின்னும் பயந்த குரலில் இரகசியம் பேசுவது போல் பரிசாரகரிடம் ஏதோ காதருகில் பேசினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியதைக் கேட்டு பரிசாரகரின் முகம் வெளிறியது. பேயறை பட்டதுபோல் பதில் சொல்லத் தோன்றாமல் மருண்டு நின்றார் பரிசாரகர்.

“இதைச் செய்ய இத்தனை தயக்கமா உனக்கு?” என்றார் பெருநிதிச் செல்வர்.

“மிகவும் கசப்பான காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்களே!”

“கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதான்...”

“இருக்கலாம்... ஆனால்... இப்போது நீங்கள் செய்யச் சொல்வது எல்லை மீறிய கசப்பாயிருக்கிறதே?”

“எல்லை மீறிய கசப்புக்குச் சுவைகளில் இடமில்லையோ?”

“இடமிருக்கிறது! நஞ்சு என்ற பெயரில்...”

“எல்லை மீறிய கசப்புடன் பழகத் தொடங்கிவிட்டவர்களுக்கும் எல்லை மீறிய சுவையை அளிக்க வேண்டியது தானே? போ. போய் நான் சொன்னபடி செய்துவிட்டு நிம்மதியாய்த் தூங்கு.”

“ஒருநாளுமில்லாத வழக்கமாய் இன்று நான் அவருக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்தால் சந்தேகம் ஏற்படுமே? அந்த மனிதருடைய முகத்துக் கண் ஒன்றாயினும் சிந்தனை கண்கள் மிகுதியாயிற்றே”

“பயப்படாதே. பழியை என் தலையிற் போட்டுவிடு. நான் கொடுத்தனுப்பியதாகப் பாலை அவரிடம் கொடு. வாங்கிக் கொள்வார். காரியம் முடிந்ததும் வந்து சொல். கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்ப் புலிக் கூண்டிலே தள்ளிவிடலாம்.”

பெருநிதிச் செல்வரின் இந்தக் கட்டளையை மீற முடியாமலும், மீறினாலும் தம் கதி என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பரிசாரகர் பாலில் மயக்கமூட்டி உயிரிழக்கச் செய்யும் நச்சு மருந்தைக் கலந்து கொண்டு நகைவேழம்பர் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தார்.

அவர் பாலை எடுத்துக் கொண்டு போகிறாரா, இல்லையா என்பதைப் பெருநிதிச் செல்வர் மற்றோர் இடத்தில் மறைவாக வந்து நின்று கண்காணித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த பரிசாரகரை எதிர் கொண்டு சந்தித்து “என்ன ஆயிற்று” என்று அடக்க முடியாத ஆவலோடு கேட்டார்.

“நகைவேழம்பர் பொற்கலத்தோடு பாலை வாங்கி வைத்துக் கொண்டு, உங்களுக்கு நன்றி தெரிவிக்குச் சொன்னார். சிறிதும் சந்தேகம் கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் சில விநாடிகளில் பருகிவிடுவார் என்று பரிசாரகரிடமிருந்து பதில் வந்தது.

“அங்கே வேறு யாராவது உடனிருந்தார்களா?”

“அந்நியர் யாருமில்லை. வழக்கமாக அவருடைய பகுதியில் காவலுக்கு இருக்கும் காவலன் மட்டும் இருந்தான்.”

“நல்லது! நீ உறங்கப் போ. இப்படி ஒரு பெரிய காரியத்தை இன்றிரவு சாதித்ததாக நினைத்துக் கொண்டே தூக்கத்தை விட்டுவிடாமல் உடனே மறக்கப் பழகிக்கொள். நாளைக்குப் பொழுது விடிந்ததும் நகைவேழம்பர் எங்கே? என்று யாராவது கேட்டால் பதறாமல் நீயும் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்க முற்படுகிற துணிவையும் பெற்றுக் கொள்” என்று சொல்லிக் கொடுமை தோன்றச் சிரித்தார் பெருநிதிச் செல்வர்.

அப்போது நள்ளிரவுக்கு மேலும் சிறிது நாழிகை ஆகியிருந்தது. பெருமாளிகையின் எல்லா மாடங்களிலும் தீபங்கள் அணைக்கப் பெற்று இருள் சூழ்ந்திருந்தது. பெருநிதிச் செல்வர் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஊழியர்களோடு நகைவேழம்பர் படுத்திருந்த பகுதிக்குச் சென்றார். இருண்டு போயிருந்த அந்தப் பகுதியில் மயான அமைதி நிலவியது. அந்த இருளின் நடுவே திசைக்குத் திசை, மூலைக்கு மூலை நகைவேழம்பரின் கோரமான முகம் தோன்றி ‘என்னை இப்படியா செய்தாய்’ என்று பயங்கரமாக அலறுவதுபோல் பெருநிதிச் செல்வர் பிரமை கொண்டார். அவரும் அவருடன் துணைக்கு வந்திருந்த ஊழியர்களும். இருளில் தட்டுத் தடுமாறி நடந்து நகைவேழம்பரின் கட்டிலை நெருங்கினார்கள். கட்டிலுக்கு அருகில் எங்கிருந்தோ சிறகடித்துப் பறந்த வெளவால் எழுப்பிய ஓசையைச் செவியுற்று இயல்பான பயத்தின் காரணமாக நடுங்கிப் பின்புறம் நகர்ந்தார் பெருநிதிச் செல்வர். வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவருடைய பெரிய உடலின் சிறிய இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கை, கால்கள் நடுங்கின. காலடியில் பரிசாரகர் பால் கொண்டு வந்திருந்த பொற்கலம் இடறியது. உதறல் எடுத்து வலுவிழந்திருந்த கை விரல்களால் அவர் கட்டிலில் தடவினார். பொற்கலத்து நச்சுப் பாலைப் பருகியிருந்த உடல் கட்டிலில் தாறுமாறாக உணர்விழந்து கிடந்தது. போர்வையை இழுத்து அந்த உடலைத் தலை முதல் கால்வரை மூடினார் பெருநிதிச் செல்வர்.

“ஒற்றைக் கண்ணும் மூடி விட்டது” என்று பயத்தினாற் குழறும் குரலில் உடனிருந்தவர்களிடம் சிரிக்க முயன்று கொண்டே கூறினார் அவர். சிரித்துக் கொண்டே கூற முயன்றாரே தவிரச் சிரிக்கும்போது தேகமே பற்றி எரிவது போல் வெம்மையுற்றது. தன்னுடைய சிரிப்பைச் சாடுவதைப் போல் வேறொரு பயங்கரச் சிரிப்பும் அந்த இருட்டில் எங்கிருந்தோ ஒலிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு தவித்தது அவர் மனம் கொடுமையும், சூழ்ச்சியும், அளவற்றுப் புரியும் திறமை வரம்பும் கடந்து தம் உடம்பிலும், மனத்திலும் இயல்பாக எவ்வளவு கோழைத்தனம் கலந்திருக்கிறது என்பதை அந்த இருட்டில் அவர் புரிந்து கொண்டார்.

“கட்டிலை இப்படியே தூக்கிக் கொண்டு போய்ப் பாதாள அறையில் புலிக் கூண்டுகளுக்கு நடுவில் வையுங்கள்” என்று உடன் வந்திருந்த ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார் அவர். அச்சத்தினால் தன்னியல்பான ஒலியும் கம்பீரமும் அவருடைய குரலிலிருந்து பிரிந்து போயிருந்தன. ஊழியர்கள் அவருடைய கட்டளையைச் செய்ய முற்பட்டனர். இருட்டில் கட்டில் தூக்கப் பெற்றுப் புறப்பட்டது.

“இனிமேல் இந்தப் பகுதி பகலிலும் இப்படி இருண்டு கிடக்க வேண்டியதுதான். அந்தப் பாவியின் ஆவி குடியிருக்கிற இடத்துக்கு ஒளி வேறு வேண்டுமா?” என்று தனக்குத்தானே கூறிக் கொள்வதுபோல் அவர் இரைந்து கூறியபோது மீண்டும் அதே பேய்ச் சிரிப்பு ஒலிப்பதாக அவருடைய மனம் கற்பனை செய்தது. கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனவர்களைப் பின் தொடர்ந்து பெருநிதிச் செல்வரும் பாதாள அறைக்குச் சென்றார். அவருடைய முன்னேற்பாட்டின்படியே அங்கே தீப்பந்தங்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.

வாலைச் சுழற்றி அனல் விழி காட்டி உறுமும் புலிகளின் கூண்டுகளுக்கு நடுவே போர்த்தப்பட்டிருந்த உடல் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. “என் தலையில் சுட்ட செங்கல்லை ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வதாகத் திமிரோடு பேசினாயே! இப்போது திமிர் நிறைந்த உன் உடலின் சதையைக் கிழித்து விளையாடும் புலிகளைக் கண்டு நான் வெற்றிச் சிரிப்புச் சிரிக்கப் போகிறேன் பார்” என்று கட்டிலை நோக்கி யாரும் எதிர்ப்பதற்கு இயலாத அறைகூவல் விடுத்தார் பெருநிதிச் செல்வர்.

கட்டிலைச் சுமந்து வந்தவர்கள் மேலும் அவரிடமிருந்து என்ன கட்டளை பிறக்கப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் காத்து நின்றனர். மிக விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்திருந்த செயலைச் செய்யும்படி பெருநிதிச் செல்வர் அவர்களை ஏவினார்.

“போர்வையை விலக்கிவிட்டு உடலைத் துரக்கி மேலேயுள்ள வளையத்தில் தலைகீழாகக் கட்டுங்கள்” என்று அவர் கட்டளையிட்ட குரல் ஒலித்து அடங்கு முன் மேலே பாதாள அறைக்குள் வருவதற்கான படியருகி லிருந்து குரூரமானதொரு பேய்ச் சிரிப்பு எழுந்தது.

திகைப்புடனே எல்லாரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். பார்த்தவர்கள் சிலைகளானார்கள். அங்கே முதற்படியில் நகைவேழம்பர் நின்றார். உடனே முன்னால் பாய்ந்து கட்டிலை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்த பெருநிதிச் செல்வர் தாம் முற்றிலும் ஏமாந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டார். கட்டிலில் நகை வேழம்பர் வசிக்கும் பகுதியிற் காவலிருந்த ஊழியனின் உடல் கிடந்தது.

“தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கிறீர்களே, ஐயா! இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, அவனிடமே சோதனை செய்து பார்க்கத் துணிந்துவிட்டீர்களே? இன்றிரவு இப்படி எனக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுமென்பதை நானே எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். அப்படியே செய்துவிட்டீர்கள். நீங்கள் அன்புடன் அனுப்பிய பொற்கலத்துப் பாலை எனக்குக் காவலிருந்த ஊழியனைக் குடிக்கச் செய்து பார்த்த பின்புதான் உங்கள் நோக்கம் புரிந்தது. இப்போது நான் விரும்பினால் உங்கள் அத்தனை பேருடைய உயிரையும் சூறையாடலாம். இதோ இப்படிச் சிறிது பாருங்கள்” என்று கூறிக் கொண்டே தன் கைக்கு எட்டுகிறபடி இருந்த புலிக் கூண்டுக் கதவுகளைத் திறப்பதற்குரிய இரும்புச் சங்கிலியைப் பிடித்துக் குலுக்கினார் நகை வேழம்பர். அப்படிக் குலுக்கியபோது அந்தச் சங்கிலி குலுங்கியதாலும் அவருடைய சிரிப்பினாலும் சேர்ந்து எழுந்த விகார ஓசை பாதாள அறையில் பயங்கரமாக எதிரொலித்தது. அவர்களுடைய உயிர்கள் எல்லாம் அவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்ட நகைவேழம்பருடைய கையில் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/015-022&oldid=1149846" இலிருந்து மீள்விக்கப்பட்டது