மணி பல்லவம் 2/017-022

விக்கிமூலம் இலிருந்து

17. பயங்கர நண்பர்கள்

ப்போது அந்த பாதாள அறையில் நிலவிய சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்த புலிகளைக் காட்டிலும் கொடுமையான புலியாக மாறிப் பாய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர் நகைவேழம்பர்தாம் என்பதை அங்கே இருந்த எல்லாரும் உணர்ந்தார்கள். எல்லாருடைய மனத்திலும் அடுத்த கணம் என்ன நிகழப் போகிறதோ என்ற பயம்தான் நிரம்பியிருந்தது. புலிக் கூண்டுகள் அமைந்திருந்த இடத்துக்கு மேலே முதற்படியில் தோன்றிப் பேயாக நகைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பருடைய கைகளில் அங்கே நின்ற அத்தனை பேருடைய உயிர்களும் இருந்தன. புலிக்கூண்டுகளைத் திறப்பதற்கு இணைத்திருந்த சங்கிலியை அவர் இழுத்தால் கீழே அந்தக் கூண்டுகளுக்கு நடுவே நிற்பவர்களின் கதி அதோகதிதான்.

தனக்குரிய செல்வங்களாலே கிடைக்கிற எல்லாவகைப் பெருமைகளையும் மீறி எந்தச் செல்வமும் இல்லாத அரைக்குருடன் ஒருவனுக்கு இரகசியங்களால் அடிமைப்பட்டுக் கிடந்து தவித்த பெருநிதிச் செல்வர் ‘அந்த இரகசியங்களையும் அவற்றை மனத்தில் சுமந்து கொண்டிருந்தவனையும் சேர்த்து ஒழித்துவிட்டோம்’ என்று நிம்மதியோடு தலை நிமிர்ந்தபோது 'நான் ஒழியவில்லை’ என்று முன் வந்து நின்று மீண்டும் அவர் தலையைக் குனியச் செய்துவிட்டார் நகைவேழம்பர்.

தாம் இரையிட்டு வளர்த்த புலிகளுக்கு இன்று தாமே இரையாகும் நிலை வந்துவிட்டதே என்று மெய்நடுங்க நின்றார் பெருநிதிச் செல்வர். அவரை விளித்து நகைவேழம்பர் சிறிதும் நெகிழ்ச்சியில்லாத குரலில் பேசினார்:

“நஞ்சு கலந்த பாலைப் பருகி நான் அழிந்தொழிந்து போயிருப்பேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்கள் பெருமை நீடிக்க வழியின்றி நானே முன்னால் வந்து நிற்கிறேன். ஒன்று நாமிருவரும் நண்பர்களாயிருக்க வேண்டும். அல்லது பகைவர்களாயிருக்க வேண்டும். ஆனால் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, எதற்கென்று தெரியவில்லை; இப்போது நாமிருவருமே எப்படியிருக்கிறோமோ அப்படி இதற்கு முன்பு இருக்க நேர்ந்ததில்லை. நட்பின் நெருக்கத்தைக் குறித்து உயிர் நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்களும் நானுமோ, இப்போது ஒருவருக்கொருவர் உயிரைக் கவர்ந்து கொள்ளத் துணிந்துவிட்ட நண்பர்களாயிருக்கிறோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கத்தில் முன்பு இந்த நட்புத் தொடங்கிற்று என்பதை நீங்கள் மறந்து போயிருக்கலாம். இப்போது உயிர்களை அழிக்கும் ஆத்திரத்தில் முடிவதற்கிருக்கிறது. இந்த உறவு இப்படித்தான் முடிய வேண்டுமா, அல்லது வேறுவிதமாகவும் முடிய இடமிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய விநாடிகளில் நிற்கிறோம் நாம்...”

பெருநிதிச் செல்வர் தலைநிமிர்ந்து எதிராளியைப் பார்ப்பதற்கு வேண்டிய சுறுசுறுப்போ, ஆர்வமோ, சிறிதுமில்லாமல் சோர்ந்து போயிருந்தாலும் இந்தப் பேச்சைக் கேட்டதும் அடிபட்ட நாகம் படத்தைத் தூக்குகிறாற் போலத் தலைநிமிர்ந்து நகைவேழம்பரைப் பார்த்தார். பின்பு இயல்பாகப் பேசும் பேச்சின் விரைவு இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையாகத் தயங்கித் தயங்கி நிறுத்திக் கேட்டார்.

“நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விநாடிகளில் இவர்களைப் போன்ற ஊழியர்களும் உடனிருக்க வேண்டியது அவசியம்தானா?”

“அவசிய அநாவசியங்களைச் சிந்தித்துச் செயல்படுகிற நிலையில் இப்போது நான் இல்லை. நீங்கள் என்னை அப்படி இருக்கவும் விடவில்லை. ‘என்னைப் போல் ஒருவன் உங்களுக்கு அவசியமா இல்லையா?’ என்று நீங்களே சிந்தித்து உடனடியாக முடிவுகட்டி விட்ட பின் நான் சிந்திக்க என்ன இருக்கிறது? நான் அநாவசியமென்று நீங்கள் தீர்மானம் செய்தபின் நீங்கள் எனக்கு அவசியம் என்று நம்பி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளலாமா!”

இந்தக் கேள்வியின் பிடியிலிருந்து விடுபட்டுத் தாம் என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் திகைத்தார் பெருநிதிச் செல்வர். உயிர்ப் பயமும், ஏவலுக்குத் தலை வணங்கும் ஊழியர்களுக்கு முன் இப்படி அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என்ற நாணமும் சேர்ந்து அவரை ஆட்கொண்டு அவருக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காதபடி ஆக்கியிருந்தன.

பேசவராத உணர்ச்சிகளுக்கும் பேச வேண்டிய சொற்களுக்கும் நடுவே அகப்பட்டுக் கொண்டு அவர் திணறுவதை நகைவேழம்பர் கண்டு கொண்டார். தமக்கும் பெருநிதிச் செல்வருக்கும் இடையே உள்ள நட்பு, பகை, இரகசியங்கள் எல்லாம் ஊழியர்களும் விளங்கிக் கொள்ளும்படி தெரிவது நல்லதல்ல என்பதை அவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு கையால் சங்கிலியைப் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் ஊழியர்களை மேலே வருமாறு குறிப்புக் காட்டினார். கிழே பெருநிதிச் செல்வர் நின்ற இடத்திலிருந்து சிறிது விலகி ஒதுங்கி நின்றிருந்த ஊழியர்கள் நகைவேழம்பர் தங்களை மேலே வரச்சொல்லிக் குறிப்புக் காட்டுவதைப் புரிந்து கொண்டாலும் தங்களுக்குப் படியளப்பவராகிய பெருநிதிச் செல்வரின் ஆணையின்றி எப்படி மேலே செல்வதெனத் தயங்கினர். அவர்களுடைய இந்தத் தயக்கத்தைக் கண்டு மேலே நின்ற நகைவேழம்பர் சிரித்தார்.

“உங்களுக்குக் கட்டளையிட வேண்டியவரே இப்போது என்னுடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறார். இந்தச் சமயத்தில் நீங்கள் அவரை எதிர்பார்த்துத் தயங்குவதில் பயனில்லை. நீங்கள் எல்லாரும் வெளியேறினால் நானும் அவரும் பேசிக் கொள்வதற்குத் தனிமை வாய்க்கும்.”

நகைவேழம்பர் இப்படிக் கூறிய பின்பும் அவர்கள் தயங்கியபடியே நின்றார்கள். பெருநிதிச் செல்வரே இந்தத் தயக்கத்தைத் தவிர்ப்பதற்கு முன் வந்தவராய், “அவர் சொல்கிறபடியே செய்யுங்கள்” என்று ஊழியர்கள் பக்கம் திரும்பி மெல்லக் கூறினார்.

ஊழியர்கள் படியேறி மேலே வந்தனர். “நில்லுங்கள்!” நீங்கள் செய்ய வேண்டிய வேலையொன்று மீதமிருக்கிறது” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கீழே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார் நகைவேழம்பர். என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி தோன்ற ஊழியர்கள் அவர் முகத்தைப் பார்த்தனர். அவருடைய நாவிலிருந்து அளவில் சுருக்கமாகவும் அர்த்தத்தில் பெரிதாகவும் இரண்டே இரண்டு சொற்கள் ஒலித்தன.

“வழக்கம் போல் செய்யுங்கள்.” இதற்குப்பின் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் விரைவுடையனவாகவும், மாறுதல் உள்ளவையாகவும் இருந்தன. நகைவேழம்பர் படிகளில் இறங்கிக் கீழே வந்து தனியாக நின்று கொண்டிருந்த பெருநிதிச் செல்வருக்கு எதிரே கம்பீரமாக நடந்து கொண்டே பேசினார்-

“இந்த மாளிகையில் இதே சூழ்நிலையில் நின்று உங்களோடு பேச எனக்கு விருப்பவில்லை. இருவருமே ஒருவர் மேல் மற்றவருக்கிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம். நீங்கள் என்னைக் கொல்லவும் துணிந்து விட்டீர்கள் என்பது எனக்கே புரிந்துவிட்டது. இனிமேலும் நான் உங்களை நம்ப வேண்டுமானால் நாம் நம்முடைய நம்பிக்கைகள் பிறந்து வளர்ந்த இடத்துக்குப் போக வேண்டும். நீங்கள் இனிமேல் என்னை நம்புவீர்களா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சோதனைப்போல் உங்களை இப்போது அழைக்கிறேன். பூம்புகார் நகரம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற இந்த நேரத்தில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் தனியாக என்னோடு நீங்கள் வரவேண்டும். தேரிலோ குதிரையிலோ வரக்கூடாது; என்னைப்போல் நடந்துவர வேண்டும்.”

“எங்கே வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? வேண்டியதை இங்கேயே பேசலாமே! நாமிருவரும் தனியாகத்தான் இருக்கிறோம்.”

“முடியாது; இது உங்களுடைய எல்லை. இங்கே நான் எந்த விநாடியும் துன்புறுத்தப்படலாம். இன்னும் உங்கள் மேல் பழைய நம்பிக்கை எனக்குத் திரும்பவில்லை. அந்த நம்பிக்கை திரும்புவதும் திரும்பாததும் நீங்கள் என்னை நம்புகிறீர்களா, இல்லையா என்பதைப் பொறுத்தது.”

“நான் உங்களை நம்புகிறேன் என்பதை மீண்டும் எப்படி நிரூபிக்க முடியும்?”

“ஏன் முடியாது? என் அழைப்புக்கு இணங்கினாலே என்னை நம்புவதை ஒப்புக் கொண்டாற்போலத்தானே?”

“ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் நகைவேழம்பரே! இந்த நள்ளிரவில் ஒரு துணையுமின்றி வெறுங்கையனாக உங்களோடு வந்தால் நீங்கள் தனிமையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வீர்களோ என்று நான் சந்தேகப்பட இடமிருக்கிறதல்லவா?”

“சந்தேகத்துக்கு இடமிருப்பதைப் போலவே சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவும் இடமிருக்கிறது. சற்றுமுன் நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களையெல்லாம் கூண்டோடு எமபுரிக்கு அனுப்பும் வாய்ப்பு என் கைகளில் இருந்தது. ஏன் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை? அதுதான் போகட்டும். இப்போது இந்த விநாடியில்கூட நீங்கள் தன்னந்தனியாகத்தான் என் எதிரில் நிற்கிறீர்கள். நான் உங்களை ஏன் விட்டு வைத்திருக்கிறேன்? நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அதை நீங்கள் செய்ய வேண்டும்.”

“என்ன செய்ய வேண்டும் நான்?”

“பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். அவநம்பிக்கை கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்பிக்கை வளர அதுவே போதும்.”

பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணில் அந்த நம்பிக்கையைத் தேடுகிறவர் போல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார். நகைவேழம்பர் அவருடைய சஞ்சலத்தைக் கண்டு சிரித்தார்.

“நான் பழைய நாட்களில் நடிகன். முகத்திலும், கண்ணிலும் எந்த உணர்ச்சியின் சாயலையும் என்னால் மறைத்தும், மாற்றியும் காண்பிக்கச் செய்யமுடியும். என் முகத்தையும் கண்ணையும் பார்த்த நீங்கள் ஒன்றும் தெரிந்து கொண்டுவிட முடியாது. என் மனத்தையும் நான் கூறிய சொற்களையும் நம்பினால் என்னோடு வாருங்கள்.”

“அவற்றிலும் நடிப்பு இருக்க முடியாதென்பது என்ன நிச்சயம்?”

“இப்படி வாதம் புரிந்தால், இதற்குப் பதிலே சொல்ல முடியாது! மறுபடியும் முன்பு சொல்லியதையே திருப்பிச் சொல்கிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப்படாமல் இருப்பதுதான்.”

நெடுநேரத் தயக்கத்துக்கும், சிந்தனைக்கும் பின்பு பெருநிதிச் செல்வர் அந்த நடுநிசிப் பொழுதில் நகைவேழம்பருடனே தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.

நடந்து போகும்போது இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு காலைச் சாய்த்துச்சாய்த்து நடக்க வேண்டியிருந்ததனால், பெருநிதிச் செல்வர் வேகமாக நடக்க முடியாமல் திணறினார். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நகைவேழம்பரைப் பின்பற்றி நடப்பதனால் உண்டான பயம் வேறு அவர் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அக நகர எல்லையைக் கடந்து காவிரி கடலோடு கடக்குமிடத்தை நெருங்கி வந்திருந்தார்கள் அவர்கள். மக்கள் பழக்கமே இல்லாத இரவு நேரமாகையினால் பகலில் இயற்கையழகு பொலியும் அந்த இடம் இப்போது பயப்படுவதற்கு உரியதாயிருந்தது. நதிக்கரைப் படுகையில் ஆள் நடந்தால் தோற்றம் மறைந்து போகிற உயரத்துக்கு நாணற்காடு புதர் மண்டியிருந்தது. பஞ்சு பூத்ததுபோல் வெண்மையான நீண்ட நாணற் பூங்கதிர்கள் இருளில் மங்கலாகத் தெரிந்தன. நாணற் புதரில் காற்று ஊடுருவுவதால் உண்டான சரசரப்பு ஓசையும், நீரலைகளின் சப்தமும், விட்டு விட்டு ஒரே சுருதியில் கேட்கிற தவளைக் குரலும், சூழ்நிலையின் பயங்கரத்துக்குத் துணை கூட்டின. ஊளையிட்டுக் கொண்டே நரிகள் புதரில் விழுந் தடித்துக் கொண்டு ஓடுகிற ஓசையும், நதி நீருடன் கரைசரிந்து தணியுமிடத்தில் நீர் நாய்கள் துள்ளும் சப்தமும், அவ்வப்போது எழுந்து அந்தப் பக்கமாக நடப்பவர்களுக்கு அச்சமூட்டிக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/017-022&oldid=1149848" இலிருந்து மீள்விக்கப்பட்டது