மணி பல்லவம் 2/018-022
அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர்.
“இங்கே என்ன காரியம்? இவ்வளவு பெரிய காவிரிப் பூம்பட்டினத்தில் நீங்களும் நானும் பேசுவதற்கு இடமில்லயென்றா இங்கே அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?”
மேலே நடப்பதை நிறுத்திவிட்டுச் சந்தேகமுற்ற மனநிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.
“காரியம் இல்லாமலா அழைத்துக் கொண்டு வருவேன்? பயப்படாமல் நடந்து வாருங்கள்” என்று உள்நோக்கத்தை வெளிப்படுத்தாத அடங்கிய குரலில் கூறி விட்டு நகைவேழம்பர் மேலே நடந்தார்.
“என்னால் நடக்க முடியவில்லை; கால் தளர்ந்து வருகிறது” என்று சொல்லிக் கொண்டே மேலே செல்லாமல் நின்று கொண்டார் பெருநிதிச் செல்வர்.
“மேலே போக வேண்டாம் - போவது நல்லதற்கல்ல” என்று அவருடைய மனக்குரல் சொல்லிற்று.
“அடடா! நீங்களே இப்படி அதைரியப்படலாமா?” என்று கூறியவாறே அருகில் வந்து பெருநிதிச் செல்வரின் கையைப் பற்றினார் நகைவேழம்பர். அவருடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது. பிடியை விடுவித்துக் கொண்டு திரும்பி நடக்கலானார் பெருநிதிச் செல்வர். எந்த நினைப்பினாலோ தெரியவில்லை; அவருக்கு நடக்கும்போதே கைகால்கள் நடுங்கின.
“அவசரப்படாதீர்கள்! கொஞ்சம் இப்படித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகலாம் அல்லவா?” என்று மிக அருகே பின்னாலிருந்து நகைவேழம்பரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து தம் தோளில் அவர் கை தீண்டித் தடுப்பதையும் பெருநிதிச் செல்வர் உணர்ந்தார்.
அவர் அப்படிப் பார்த்தபோது நகைவேழம்பர் இருந்த கோலம் அவரைச் சிலிர்ப்படையச் செய்தது.
குறுவாளை ஓங்கிக்கொண்டு கொலை வெறியராகப் பாய்வதற்கு நின்று கொண்டிருந்தார் அவர்.
“இப்போது இந்த இடத்தில் நான் உங்களைக் கொன்று போட்டால் என்னை ஏனென்று கேட்பாரில்லை...?”
வார்த்தைகளைத் தொடர்ந்து பேய்ச் சிரிப்பு ஒலித்தது. ஓங்கிய வாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக நகர்ந்தது. பெருநிதிச் செல்வர் தாம் மோசம் போய்விட்டதை உணர்ந்தார்.
கடைசி விநாடி! அவருடைய உயிருக்கும் அந்த வாளின் கூர்மைக்கும் நடுவிலிருந்த காலத்தின் ஒரே ஓர் அற்ப அணு அது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. நகைவேழம்பரின் ஓங்கிய கை தானாகவே தணிந்தது, வாளை இடுப்பிலிருந்த உறையிற் சொருகிக் கொண்டு இயல்பாக நகைத்தார் அவர்.
“இவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்கிறீர்களே? உங்களைச் சோதனை செய்து பார்த்தேன். உங்களிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உங்களுக்கு அளித்திருக்கிற தைரியத்தைத் தவிர, உங்களுடைய மனத்தில் உங்களுக்கென்று இயல்பிலே அமைந்திருக்கும் தைரியம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன். பாவம்! நீங்கள் அநுதாபத்துக்குரியவர். பயப்படாதீர்கள், உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். ஆனால் ஒன்றைமட்டும் நினைவில் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். எப்போதாவது என்னுடைய உயிருடன் விளையாட ஆசைப்பட்டீர்களோ, தொலைந்தீர்கள். நான் நன்றியுள்ளவனாக இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டால் முதலில் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதை மறந்து செயல்படத் தொடங்கினால் முதலில் சாகிற உயிர் என்னுடையதாக இராது” என்றார் நகைவேழம்பர்.
எல்லாவற்றையும் கேட்டபடி பெருநிதிச் செல்வர் குனிந்த தலை நிமிராமல் இருளோடு இருளாக நின்றார். அவர் நின்ற நிலையே எதிரியிடம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது.
நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் அன்றிரவு அந்த நாணற்காட்டில் ஒருவரையொருவர் சோதனை செய்து கொண்டபின் திரும்பவும் நண்பர்களாக மாறவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. அவர்களுடைய நட்பிலும் பகையுண்டு. பகையிலும் நட்பு உண்டு. பகை, நட்பு என்னும் நேர் முரணான குணங்கள் அவர்களைப் பொறுத்தவரை நேர்முரணாகவும் இருப்பதில்லை. அவர்களுக்கு நடுவே உறவைப் பின்னியிருந்த இரகசியங்களைப் பொறுத்த அந்தரங்கம் அது.
அன்று அதே இடத்தில் காவிரிப் படுகை மணலில் விடிகிறவரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பல பழைய சம்பவங்களை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஓர் உண்மையை மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார் பெருநிதிச் செல்வர்.
“நகைவேழம்பரே! நீங்கள் கூறிய பின்பு என்னுடைய தைரியத்தின் எல்லை எனக்கே புரிகிறது. ஏழடுக்கு மாளிகையையும், செல்வத்தையும், எட்டிப் பட்டத்தையும், ஏவலாட்களையும் விட்டு விலகித் தனியாய் நிற்கும்போது நான் பலவீனமாகி விடுவது உண்மைதான்.”
“பலவீனம் எல்லாருக்கும் உண்டு ஐயா! நான்கூட ஒரு சமயம் உங்கள் பெண் சுரமஞ்சரிக்கு முன்னால் நடுங்கி நின்றிருக்கிறேன். அவளுடைய அலங்கார மண்டபத்தில் அவள் தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்த செய்தி ஒன்றை நான் திரைமறைவிலிருந்து கேட்க முயன்றேன். அவள் அதைத் தந்திரத்தால் கண்டு கொண்டாள். அப்போது நான் தலைகுனிய வேண்டியதாயிற்று. கோழைத்தனத்தால் தலைகுனியவில்லை. ஒட்டுக்கேட்க வேண்டுமென்ற ஆசையால் ஒரு பெண்ணின் அலங்கார மண்டபத்துக்குள் நுழைந்தது தவறுதான் என்று உள்ளுற எனக்கே பயமாயிருந்ததுதான் காரணம். நான் அப்படிச் செய்ததைப் பற்றி நீங்களோ உங்கள் பெண்ணோ என்னைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தால்கூட நான் தலை குனியத்தான் செய்வேன். ஆனால் அந்த நாணத்தை நீங்களோ உங்கள் பெண்ணோ என்னுடைய அதைரியமாக நினைத்துவிட்டால் என்னால் பொறுக்க முடியாது.”
“நீங்களும் உங்கள் பேச்சும் எப்போதும் புதிராகவே இருக்கிறது.”
“இருக்கலாம். ஆனால் பாலில் நஞ்சு கலந்து கொடுப்பதால் அந்தப் புதிருக்கு விடை கிடைத்துவிடாது.”
“பார்த்தீர்களா! நண்பரான பின் மறுபடியும் பகையை உண்டாக்கிப் பேசுகிறீர்களே?”
“பேச்சில் என்ன இருக்கிறது? நண்பர்களைப் போல் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பகைமையான செயலைச் செய்வதும், பகைவர்களைப் போலப் பேசிக் கொண்டிருந்து விட்டு நட்புக்கான காரியத்தை நடத்துவதும் நமக்குள் புதுமை இல்லையே?” என்று மேலும் ஆழமாக நெஞ்சில் இறக்கும்படி குத்திப் பேசினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்குச் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை.
“நான் வேண்டுமானால் உங்களுக்குச் சத்தியம் செய்து தருகிறேன். பக்கத்திலுள்ள கடலும், காவிரியும் சாட்சியாக நாமிருவரும் இனிமேல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொள்ளலாமே?”
“வேண்டவே வேண்டாம். சத்தியம், சபதம் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பொருளை உங்களாலும் காப்பாற்ற முடியாது. என்னாலும் காப்பாற்ற முடியாது. தொடக்க நாளிலிருந்தே நியாயத்திலிருந்து வெகுதூரம் வழி விலகி வந்துவிட்டோம் நாம். எல்லாரும் நியாயமாகச் செல்கிற வழிக்கு நாம் இனிமேல் திரும்புவதைவிட நாம் வந்துவிட்ட வழிதான் நமக்கு நியாயம் என்று வைத்துக் கொள்வது நல்லது.”
பொழுது புலரும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த நாணற் பூக்கள் வெண்பனிப் பாய் விரித்தாற்போல நெடுந்தொலைவுக்குத் தோன்றின. நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நண்பகல் வானம் போல் இரண்டு பேருடைய முகங்களிலும் எந்த உணர்ச்சியும் அதிகமாகத் தெரியாத அமைதி நிலவியது. நேற்றிரவு இதே நாணற் புதரில் பெருநிதிச் செல்வருடைய முகம் எப்படித் தோன்றியிருக்கும் என்று நகைவேழம்பர் தமக்குள், கற்பனை செய்து பார்க்க முயன்றார்.
மேலே நடக்க வேண்டிய செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் எழுந்து நடந்தார்கள். நீலநாக மறவருடைய உதவியால் ஓவியன் தப்பிவிட்டதையும், இளங்குமரனின் சித்திரம் படைக்கலச் சாலையில் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டதையும், சுரமஞ்சரியின் மணிமாலை ஓவியனிடம் இருப்பதையும் விவரித்துச் சொல்லிக் கொண்டே நடந்தார் நகைவேழம்பர்.
“அருட்செல்வ முனிவருடைய தவச்சாலை தீக்கிரையான பின்பு இளங்குமரன் ஆதரவிழந்து போவான் என்று நினைத்தோம். இப்போதோ முன்னைவிடப் பலமான ஆதரவாக நீலநாக மறவரின் துணையில் அவன் இருக்கிறான்” என்றார் பெருநிதிச் செல்வர்.
“நீலநாக மறவர் மட்டுமில்லை. புறவீதியிலிருக்கும் அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையாரும் அவர்களையெல்லாம் விடப் பெரிய ஆதரவாக அவனுக்கு உங்கள் பெண் சுரமஞ்சரியும் வேறு இருக்கிறாள்” என்று சுரமஞ்சரியின் உள்ளம் இளங்குமரனுக்கு வசப்பட்டிருப்பதையும் நினைவூட்டினார் நகைவேழம்பர்.
அவர்கள் பேசிக்கொண்டே நெய்தலங்கனாலுக்கு அருகே வந்திருந்தனர்.
“இனிமேல் சுரமஞ்சரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று எங்கோ வேறுபக்கம் பார்க்கத் தொடங்கியிருந்த நகைவேழம்பரைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.
இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல், “அதோ காமன் கோவில் வாயிலில் குளக்கரையில் நிற்கிறவர்களைப் பாருங்கள்” என்று பெருநிதிச் செல்வரின் கவனத்தைத் திருப்பினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர் பார்த்தார்.
இரு காமத்திணையேரியின் கரையில் நீராடிய கோலத்தோடு கையில் காமன் கோவிலில் வழிபடுவதற்குரிய பொருள்களை யேந்தியவளாய்ச் சுரமஞ்சரியே தன் தோழியுடம் நின்று கொண்டிருந்தாள்.
“காமன் கோவில் வழிபாடு யாருக்காகவோ?” என்று மெல்ல சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.