மணி பல்லவம் 2/019-022

விக்கிமூலம் இலிருந்து

19. பவழச் செஞ்சுடர்மேனி

‘ஒலிகள் ஒலியின்மையிலிருந்து பிறக்கின்றன. ஒலியின்மை, ஒலியுண்மையால் உணரப்படுகிறது” என்று தருக்க நூற்பாடத்தின் போது அடிகள் தனக்குச் சொல்லியிருந்த உண்மையை நினைத்துக் கொண்டு எதிரே பார்த்தான் இளங்குமரன். முல்லை அவனையே வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய கண்கள் எவ்வளவோ பேசித் தீர்ப்பதற்குத் தவிப்பது தெரிந்தது. ஆனால் வாய் திறந்து எதுவும் பேசாமல் நின்றாள் அவள். இளங்குமரனுக்கும் தான் அவளிடம் என்ன பேசுவதென்று தோன்றவில்லை. வாய் திறந்து பேசுவதைவிடச் சுவை நிறைந்தபேச்சை மெளனத்தினால் பேச முடிந்த சமயங்களும் உண்டு. நீண்ட மெளனத்துக்குப் பின் பிறக்கிற ஒரே ஒரு சொல்லுக்கும் ஆயிரம் சொற்களின் பொருளாற்றல் அமையும். அப்படி ஒரு சொல் தங்களில் யாரிடமிருந்து முதலில் பிறக்கப் போகிறதென்று இருவருமே ஒருவரையொருவர் எதிர்பார்த்துத் தயங்கிய நிலையில் நின்றார்கள். இருவர் நெஞ்சிலும் கொள்ளை கொள்ளையாக நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தும், ஒன்றுமே பேச வராததொரு நிலை.

அங்கே பூம்பொழிலில் மலர்ந்திருந்த மாலைப் பூக்களின் நறுமணமெல்லாம் ஒன்று சேர்ந்து உருப்பெற்றுக் கண்ணும், சிரிப்பும், முகமுமாய் எதிரே வந்து நிற்பதுபோல் முல்லை நின்றாள். ஒப்புக்குச் சிறிது நேரம் பேசிவிட்டுக் கதக்கண்ணன் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டுச் சென்றிருந்தான். கதக்கண்ணன் இவ்வாறு தங்களை விட்டுச் சென்றிராவிட்டால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்று எண்ணினான் இளங்குமரன். முல்லையின் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பராக்குப் பார்ப்பதுபோல் மேலே அண்ணாந்து நோக்கினான் அவன். சிறுசிறு வெண்மணல் திட்டுக்களைப் போல் சரிவு சரிவாய் வானில் மேக அடுக்குகள் மிகுந்தன. அனைத்தையும் அளாவி நிற்கும் அந்த எல்லையற்ற பெருவெளியிலே சலனத்தைக் காட்டி இயங்குவதுபோலக் கூட்டமாக வெண்ணிறப் பறவைகள் சில பறந்தன. பூம்பொழிலின் வாய்க்கால்களில் நீர்பாயும் ஒலியும், காற்றில் இலைகள் அசையும் ஒரே விதமான சலசலப்பும் தவிர எங்கும் ஒரு நிதானமாகப் பரவி அழகு சேர்க்கும் மாலைப் போதின் மயங்கிய சூழ்நிலை. அங்கே வானுயர வளர்ந்திருந்த நாகலிங்க மரத்தின் பூக்கள் தரையில் உதிர்ந்திருந்தன.

ஒரே நிலையில் கற்சிலை போல் நிற்க இயலாமல் முல்லை பாதங்களை இடம் பெயர்த்து நின்றதனால் சிலம்பொலி கிளர்ந்தது. அந்தச் சிலம்பொலியும் கலைக்கக் கூடாத மெளனத்தை அநாவசியமாகக் கலைத்து விட்டதற்காக அஞ்சுவதுபோல மெல்லத்தான் ஒலித்தது. சிலம்பிலிருந்து பிறந்த ஒலியும் ஒலியிலிருந்து பிறந்த இனிமையும் பரவி அடங்கிய பின் மீண்டும் பழைய மெளனமே நீடித்தது. இலைகளின் அசைவு, நாகலிங்கப் பூவின் தெய்விக நறுமணம், நீரின் ஒலி, மேகக்கணங்கள் நகர்ந்து செல்லும் வானம், காலங்கணங்கள் நகர்ந்து செல்லும் பூமி, நகராமல் நீடிக்கும் பெரிய மெளனம்.

முல்லை பொறுமையிழந்தாள். நீண்ட மெளனத்துக்குப் பின் பிறக்கும் சொற்கள் அவளுடையவையாக இருந்தன.

“வானத்திலும் மேகங்களிலும் யாரும் கால் கடுக்க நின்று கொண்டிருக்கவில்லை. நீங்கள் பார்க்க வேண்டிய பேதைப் பெண் இங்கே பூமியில்தான் உங்கள் எதிரே நின்று கொண்டிருக்கிறாள்.”

இந்தச் சொற்களைக் கேட்டு இளங்குமரனின் கவனம் திரும்பியது. அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிரித்தான்.

“பூமியில் இருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நீ சொல்கிறாய். அதற்கு மேலே உள்ளவற்றையுமே கண்டு உணர நான் விரும்புகிறேன்.”

“விரும்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக என்னை மறந்துவிட முயலாதீர்கள்.”

“முயற்சி செய்வதனால் உலகில் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. முல்லை! மறக்க வேண்டும் என்று முயல்வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்துகொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன. ஒன்றை ஒழுங்காகவும், தொடர்பாகவும் நினைக்கத்தான் முயற்சி வேண்டும். பிடிவாதமாக ஒரு பொருளைத் தொடர்ந்து நினைப்பதை முனிவர்கள் தவம் என்கிறார்கள். மனிதர்கள் சிந்தனை என்கிறார்கள். மறதி என்பது நினைவில் தானாக வரும் சோர்வு. அதற்கு முயல வேண்டியதே இல்லை.”

“அந்தச் சோர்வு என்னைப் பொறுத்தவரையில் முயலாமலே உங்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது” முல்லையின் இந்தக் கேள்விக்கு இளங்குமரனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவள் முகத்தில் பதிந்த தன் பார்வையை மீட்காமல் அவன் நின்று கொண்டிருந்தான்.

மேலேயிருந்து உருண்டையாய்ப் பெரிதாய்ச் செழுமையான நாகலிங்கப் பூ ஒன்று இளங்குமரனின் காலடியில் உதிர்ந்து விழுந்தது. முல்லையே பேச்சை மேலும் தொடர்ந்தாள்.

“நீராட்டு விழாவன்று கழார்ப் பெருந்துறையில் உங்களைச் சந்திக்க முடியாமல் ஏமாந்தேன். அடுத்த முறை புறவீதியில் எங்கள் வீட்டு வாயில் வழியே நீங்கள் தேரைச் செலுத்திக் கொண்டு போனபோது கைநீட்டிக் கூவியழைத்தேன். பார்த்தும் பாராதவர்போலத் தேரைச் செலுத்திக் கொண்டு போய்விட்டீர்கள். அப்போதும் ஏமாற்றமே அடைந்தேன். இப்போது கண்முன்னால் நேர் எதிரே வந்து நிற்கிறபோதும் எவர் முன்பு நின்று கொண்டிருக்கிறேனோ, அவரிடமிருந்து எதையோ பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேனோ, அதை வேறு யாரோ உங்கள் இதயத்திலிருந்து பெற்றுக் கொண்டு விட்டார்கள் என்று என் மனத்தில் சந்தேகமும் உண்டாகிறது. தேருக்கும் சிவிகைக்கும் சொந்தக்காரர்களான பெருமாளிகைப் பெண்கள் பூம்புகாரின் பட்டினப்பாக்கத்தில் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் உங்களுடைய அன்பைப் பெற்றிருக்கலாம்.”

மிக விரைவாகப் படபடவென்று சீற்றம் உற்றவளைப் போலப் பேசிக் கொண்டே வந்த முல்லையின் குரலில் விம்மலும், ஏக்கமும் கலந்து அழுகையின் சாயல் ஒலித்தது.

இளங்குமரன் கீழே குனிந்து காலடியில் விழுந்திருந்த நாகலிங்கப் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். இதயத்தில் சேர்த்து வைத்திருந்த உணர்ச்சித் தவிப்பைச் சொற்களாகக் கொட்டித் தீர்த்து போதாதென்று கண்ணீராகவும் கொட்டித் தீர்ப்பதற்கு இருந்தாற்போல் விழி கலங்கி நின்றாள் முல்லை. அவள் முகத்தை நேரே பாராமல் தன் வலது உள்ளங்கையில் நாகலிங்கப் பூவை வைத்து அதைப் பார்த்துக் கொண்டே அவளிடம் பேசினான் இளங்குமரன்:

“உன்னைப் போன்ற உலகத்துப் பெண்களின் மனங்களையெல்லாம் சந்தேகத்தையும், ஆசையையும் இணைத்துப் படைத்திருக்கிறார் படைப்புக் கடவுள். நீங்கள் எல்லாரும் என்னைப் போன்ற ஆண்மகனிடமிருந்து எதிர்பார்க்கிற பொருள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றையும் உங்களுக்கே சொந்தமாக்கி வெற்றி கொள்ள விரும்புகிறீர்கள். எந்த ஒன்றை முதலாகக் கொண்டு உலகத்தின் மற்றப் பொருள்களையெல்லாம் நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமோ அந்த முதலையே நீங்கள் கொள்ளையிட்டு வென்றுவிட முயல்கிறீர்கள்.”

“அப்படியா? நாங்கள் கொள்ளையிட்ட வெற்றி கொள்ளத்தக்கதாக உங்களிடமிருக்கும் அந்த விசித்திரப் பொருள் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமோ!”

“இதுவரை உனக்குத் தெரியாமலிருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உண்மையாகவே தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே வாயைக் கிளறுகிறாயா?”

“மெய்யாகவே தெரியவில்லை, சொல்லுங்கள் அந்த விந்தைப் பொருள் எது?”

“வேறெதுவுமில்லை! ஆண்பிள்ளையின் மனம். ஒவ்வொரு பெண்ணும் அதை வெற்றிகொண்டு ஆள்வதற்குத்தான் ஆசைப்படுகிறாள். ஆசை நிறைவேறாத போது சந்தேகப்படுகிறாள். கண்கலங்கி நின்று மணம் கலங்கச் செய்கிறாள். என்னைப் பொருத்தவரையில் ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக என் மனத்தை அளித்திருக்கிறேன்.”

“மிக்க மகிழ்ச்சி. அதே மனத்தின் ஒரு கோடியில் அன்பைப் பயிர் செய்து கொள்ளவும் சிறிது இடம் வேண்டி நிற்கிறேன் நான்.”

“முல்லை! நீ அதை வேண்டுவது தவறில்லை! சுரமஞ்சரியும் அதைத்தான் வேண்டினாள். எனக்காக உங்களுடைய மனத்தைத் தோற்கக் கொடுப்பதாய்த்தான்” நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அந்தத் தோல்வியை, என்னுடைய வெற்றியாக அங்கீகாரம் செய்து கொள்ள நான் துணிய முடியாதவனாயிருக்கிறேன். காவிரிப்பூம் பட்டினத்துப் புறவீதியில் செருக்கு மிகுந்த இளைஞனாக உன்னுடைய சிரிப்புக்கும், நீ அளித்த சுவையான விருந்து உணவுகளுக்கும் ஆட்பட்டிருந்த பழைய இளங்குமரனை மறந்துவிட வேண்டும்.

“முயற்சி செய்வதனால் உலகின் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. மறக்க வேண்டும் என்று முயல்வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன” என்று அவன் சற்றுமுன் தன்னிடம் கூறியிருந்த தத்துவத்தையே அவனுக்குத் திருப்பிச் சொல்லிச் சிரித்தாள் முல்லை.

நல்ல நேரத்தில் தன்னை அவள் வகையாகப் பேச்சில் மடக்கி விட்டாளே என்ற மலைப்பினால் சில கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் நின்றான் இளங்குமரன். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத்தான் கண்களில் நீரைச் சுமக்கும் விசாகையும், ஓர் ஆண்பிள்ளையின் அன்பு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கண்கலங்கும் சுரமஞ்சரி, முல்லை போன்ற பெண்களையும் மனத்தில் நினைத்து நிறுத்துப் பார்த்தான் அவன்.

இளங்குமரன் தன்னைப் பார்க்காமல் இருந்த அந்த நேரத்தில் தன் இரு கண்களும் நிறைய அவனை நன்றாகப் பார்த்தாள் முல்லை. முன்பிருந்ததைவிட இளைத்திருந்தாலும் அந்த இளைப்பினாலேயே அவனுடைய அழகு வளர்ந்திருப்பதுபோல் தோன்றியது. காவிரிப்பூம் பட்டினத்தில் முரட்டுத்தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தவன் பூம்பொழிலுக்கு வந்த பின் மேனி நிறம் மாறி நளினமாகக் காட்சியளித்தான். பவழச் செஞ்சுடர் மேனியில் வைகறைக் கதிரவனின் வண்ணம் மின்னியது. முகத்தில் அறிவின் அடக்கமும் நிறைந்த ஒளியும் தெரிந்தன. அழகிய கண்களில் துணிவினாலும் உடல் வலிமையாலும் தோன்றும் பழைய செருக்கு மறைந்து பேரமைதி - எதையோ பருகக் காத்திருக்கும் அமைதி தென்பட்டது. நாகலிங்கப் பூவை ஏந்தியிருந்த வலது உள்ளங்கை அந்தப் பூவின் நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிவந்து காட்சியளித்தது. பொன்னில் வார்த்துப் பொருத்தினாற் போன்ற சுந்தர மணித் தோள்கள் காண்பவர் உள்ளத்தைக் கவர்ந்தன.

தான் இளங்குமரனுடைய சொற்களையே அவனிடம் திருப்பிச் சொல்லியதனால் அவன் மனம் நொந்து போயிருக்குமோ என்று வருந்திய முல்லை பேச்சை வேறு வழியில் மாற்றினாள்.

“நானும் அண்ணனும் இங்கு வரும்போது நீங்கள் கூடக் கண்கலங்கி வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தீர்களே? உங்கள் வருத்தத்தின் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமோ?”

“என்னுடைய தாயைப் பற்றி நினைவு வந்தது. கண்ணிலும், மனத்திலும் கலக்கமும் வந்தது.”

“மறக்க வேண்டியவர்களை நினைத்துக்கொண்டு வருந்துவதும், நினைக்க வேண்டியவர்களை மறந்துவிட்டு மகிழ்வதுமாகச் சிறிது காலத்துக்குள் எப்படி எப்படியோ மாறிவிட்டீர்கள் நீங்கள். தோற்றத்திலும் மாறிவிட்டீர்கள்? சிந்தனையிலும் மாறிவிட்டீர்கள்.”

“இன்னும் ஒன்றையும் அவற்றோடு சேர்த்துக் கொள். விருப்பங்கள், ஆசை, அன்பு இவற்றில்கூட மாறிவிட்டேன்.”

“இல்லை! மாற்றிக் கொண்டு விட்டீர்கள்.”

“எப்படியானால் என்ன? திருநாங்கூரில் இந்தப் பூம்பொழிலில் பழைய இளங்குமரனை நினைத்துத் தேடிக் கொண்டு வந்திருந்தால் உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.”

முல்லை எந்த வழியிலிருந்து பேச்சை மாற்றினால் இருவருடைய மனமும் நோகாமல் உரையாடல் வளரும் என்றெண்ணினாளோ அந்த வழிக்கே திரும்பி வந்தது பேச்சு. முகத்தில் அறைவதுபோல் எடுத்தெறிந்து அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவளை இரண்டாம் முறையாக அழுதுவிடுகின்ற நிலைக்குக் கொண்டு வந்தன.

அவள் முகம் வாடிவிட்டதைக் கண்டும் இளங்குமரன் புன்னகை புரிந்தான். “முல்லை! உன்னுடைய நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது.”

“பரிதாபத்தை உண்டாக்கியவரே அதைப் பார்த்து நகைப்பதில் பொருள் இல்லை" என்று இதழ்கள் துடிக்க சினத்தோடு பதில் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் முல்லை. அந்தச் சமயத்தில் பூம்பொழிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கதக்கண்ணன் திரும்பி வந்து சேர்ந்ததனால் அவர்களுடைய பேச்சு மேலே வளராமல் நின்றது. வளநாடுடையாருக்கு தன் அன்பையும் வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான் இளங்குமரன்.

“வருகிற பெளர்ணமியன்று முல்லைக்குப் பிறந்த நாள் மங்கலம். அன்றைக்கு நீ காவிரிப்பூம் பட்டினத்துக்கு வர வேண்டும். முல்லை உனக்கு விருந்து படைக்கப் போகிறாள். எங்கள் தந்தையாரும் உன்னைக் காண்பதற்கு ஆவலாயிருக்கிறார். எங்களால் உன்னைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உன்னையும் பார்த்தாயிற்று. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு வரவேண்டுமென்றும் அழைத்தாயிற்று” என்று கதக் கண்ணன் மறுமொழி கூறியதைக் கேட்டு இளங்குமரன் சிறிது திகைத்தான். அந்தத் திகைப்பைப் பார்த்துவிட்ட கதக்கண்ணன், “ஏன் திகைக்கிறாய்? உன்னால் வர முடியாதா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“கதக்கண்ணா! நீங்கள் இருவரும் என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். குருகுலவாசம் முடியும் வரை நான் திருநாங்கூர்ப் பூம்பொழிவிலிருந்து எங்கும் வெளியேறுவதற்கு இயலாது” என்று இளங்குமரன் உறுதியாக மறுமொழி கூறியபோது, முல்லையின் முகம் மேலும் வாட்டம் கண்டது.

“இவரை ஏன் அண்ணா தொல்லைப்படுத்துகிறீர்கள்? இவரால் இப்போது எதுவுமே இயலாது. அன்பு, ஆசை, பாசம் ஒன்றுமே இல்லாத இரும்பு மனிதராகி விட்டார் இவர் நீலநாகமறவருடைய மாணவர் அல்லவா? அதே வழியில் வளர்கிறார்” என்று சினம் மாறாத குரலில் குமுறிப்போய்ப் பேசினாள் முல்லை.

அப்போது அவளுடைய பூ நெற்றியில் சினம் பரவியிருக்கும் செம்மையைக் கண்டு சிரிப்பைத் தவிர இளங்குமரனுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. கதக்கண்ணனும் ஏதேதோ பழைய உறவுகளையும், நட்பையும் கூறி இளங்குமரன் மனத்தை நெகிழச் செய்ய முயன்றான் முடியவில்லை. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு காவிரிப்பூம் பட்டினம் வர இயலாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான் அவன்.

அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததற்கு அருட் பயனாவது கிடைக்கட்டும் என்று முல்லையும், கதக்கண்ணனும் தவச்சாலைக்குள்ளே போய் நாங்கூர் அடிகளை வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அவர்கள் சென்றபோது விசாகை ஏதோ ஒரு சுவடியை விரித்து வைத்துக்கொண்டு அடிகளிடம் தம் சந்தேகங்களைக் கூறி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். விசாகையைப் பற்றி அவர்களுக்கும், அவர்களைப் பற்றி விசாகைக்கும் சுருக்கமாகக் கூறி அறிமுகம் செய்து வைத்தார் நாங்கூர் அடிகள்.

பூம்பொழிலிலே மேற்கு வானத்துப் பொன் வெயில் தங்க ஓடையாய் உருகித் தகதகத்துக் கொண்டிருந்த நேரம் முல்லையும், கதக்கண்ணனும் புறப்படுவதற்கிருந்தார்கள். நாகலிங்க மரத்தின் அருகே முன்பிருந்தபடியே இளங்குமரன் இருந்தான். மனத்துக்கு மனம் ஒட்டுதல் இல்லாமல் விட்டுப் போயிருந்தாலும் விடை பெற்றுக் கொள்ள வேண்டிய முறைக்காகப் போய் விடை பெற்றுக் கொண்டு பூம்பொழிலின் வாயிலை நோக்கி நடந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவு நடந்ததும், தன் பின்னால் யாரோ தொடருவது போலக் காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். வேறு யாருமில்லை; இளங்குமரன்தான். அவன் கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.

“முல்லை! இவற்றை உன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்கு நான் அளிக்கும் பரிசாக ஏற்றுக்கொள்.”

ஒற்றை ஓலையான ஒரே ஓர் ஏட்டையும், சற்று முன் கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த நாகலிங்கப் பூவையும் அவளுக்கு அளித்தான் அவன். முல்லையின் கைகள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன் நீண்டிடாமல் தயங்கின. அந்த ஓலையை அவன் அப்போது தான் எழுதியதற்கு அடையாளம் போல் எழுத்தாணியும் கையில் இருந்தது.

“வாங்கிக்கொள், முல்லை!”

அவள் தயங்கியபடியே வாங்கிக் கொண்டாள். கதக்கண்ணன் முன்னால் விரைவாக நடந்து போயிருந்தான். ஏட்டில் முத்து முத்தாகக் கீறப்பட்டிருந்த எழுத்துக்களை ஆர்வத்தோடு படிக்கலானாள் அவள்.

சித்தம் தடுமாறச் செய்கை நினைவழியப்
பித்தம் தலைகிறங்கப் பார்க்குமே - இத்தரையில்
சித்திரம்போற் சேர்ந்த விழிநோக்கும் முல்லையெழில்
முத்துநகை பூக்கும் முகம்

என்று அழகாகக் கீறப்பட்டிருந்த அந்த வெண்பாவின் பொருளும், அதனோடு இருந்த நாகலிங்கப் பூவின் நறுமணமும் முல்லையைக் கனவுகளில் மூழ்கச் செய்தன. ஆனால் அக்கனவுகள் நீடிக்கவில்லை. அதன் கீழே ‘ஒரு காலத்தில் இந்தச் சிரிப்புக்குச் சற்றே ஆட்பட்டிருந்தவனின் வாழ்த்து’ என்று எழுதப்பட்டிருந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, ‘அதற்கென்ன அர்த்தம்?’ என்று அவனையே கேட்டு விடுவதற்காகச் சீற்றம் கொண்டு முல்லை தலை நிமிர்ந்தபோது, அவள் நின்ற இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தவச்சாலையை நோக்கி விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். மாலை வெயிலில் அவனுடைய பவழச் செஞ்சுடர் மேனி அக்கினியே நடந்து போவதுபோல் மின்னியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/019-022&oldid=1149850" இலிருந்து மீள்விக்கப்பட்டது