மணி பல்லவம் 2/020-022

விக்கிமூலம் இலிருந்து

20. செல்வச் சிறை

பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள்; கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம் இட்டுக் கொண்டிருந்தாற்போல ஒரு காட்சி. காமவேள் கோயில் விமானத்திற் பொற் கலசங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விடிகாலைக் காற்றினால் ஏரி நீர்ப்பரப்பிலே பட்டுத் துணியில் மடிப்புக்கள் விழுவது போலச் சிற்றலைகள் புரண்டன. நீர்ப் பரப்பின் தெளிவு கண்ணாடி போலிருந்தது. அந்தத் தெளிவுக்கு மாற்றாகச் செங்குமுதப் பூக்கள்.

மேகக்காடு போல நீராடிய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு-நின்றாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலையும் அப்போதுதான் நீராடி முடித்துவிட்டுக் கரையேறிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிக் குறும்புநகை குலவக் கேட்டாள் சுரமஞ்சரி.

“நீ யாரை நினைத்துக் கொண்டு நீராடினாய் வசந்தமாலை?”

“நான் ஆண்பிள்ளை யாரையும் நினைத்துக் கொள்ளவில்லையம்மா. விடிந்ததும் விடியாததுமாக இந்தக் குளிரில் என்னை நீராடுவதற்காக இங்கே இழுத்து வந்த உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.”

“கொடுத்து வைத்தவளடி நீ. உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் அன்பு செலுத்திக் கொண்டு வேதனைப்படுவதுதான். உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு அப்படி ஒரு வேதனையும் இல்லையே?”

“உங்களுக்கும் இந்த வேதனை மிகவிரைவிலே தீர்ந்து விடும் அம்மா! சோமகுண்டம், சூரியகுண்டம் துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வலங்கொள்ளும் அளவுக்குப் பெரிய முயற்சிகளைச் செய்கிறீர்களே, இவற்றுக்கு வெற்றி ஏற்படத்தான் செய்யும்.”

“தீர்த்தமாடுவதும், கோட்டம் வலங்கொண்டு சுற்றுவதும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்குத்தான். காமன் என்று தனியாக யாருமில்லை. நம்முடைய மனத்தின் உள்ளே ஊற்றெடுத்துப் பாயும் நளினமான ஆசைகளுக்கு உருவம் கொடுத்தால் அவன்தான் காமன். அவன்தான் ஆசைகளின் எழில் வாய்ந்த வடிவம், அவன் தான் அன்பின் பிறவி.”

“இந்தக் கற்பனை மெய்யானால் நீங்கள் வணங்கி வழிபட வேண்டிய காமன் இங்கே இல்லை” என்று கூறிச் சிரித்தாள் வசந்தமாலை. இருவரும் காமவேள் கோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஈர ஆடையும் நெகிழ முடிந்த கூந்தலும், ஆசையும், ஏக்கமும் தேங்கி நிற்கும் விழிகளுமாகச் சுரமஞ்சரி அன்றைக்குப் புதிய கோலத்தில் புதிய அழகோடு விளங்கினாள். மோகன நினைவுகளைக் கிளரச் செய்யும் நறுமணங்கள் அவள் பொன்னுடலிலிருந்து பரவிக் கொண்டிருந்தன. பூக்கள் சூட்டப்படுவதானால் பூக்களுக்கே இந்தக் கூந்தலிலிருந்து மணம் கிடைக்குமோ என்று எண்ணத்தக்க வாசனைகள் அவள் குழற் கற்றைகளிலிருந்து பிறந்தன. கரும்பாம்பு நெளிவது போலத் தழைத்துச் சரிந்த கூந்தலில்தான் என்ன ஒளி!

சுரமஞ்சரி ஈரம்பட்டு வெளுத்திருந்த தன் அழகிய பாதங்களினால் மணலில் நடக்கும் வேகத்தைப் பார்த்து வசந்தமாலை வியந்தாள். புகை மண்டலத்தினிடையே கொழுந்துவிட்டு தழல் கதிர்போல் ஈரப் புடவையின் கீழே பொன்னொளி விரிக்கும் அந்தப் பாத கமலங்கள் மணலில் பதிந்து பதிந்து மீளும் அழகை அதிசயம்போலப் பார்த்துக்கொண்டே உடன் சென்றாள் வசந்தமாலை.

“என்னடி பார்க்கிறாய் வசந்தமாலை?”

“உங்களுடைய பட்டுப் பாதங்கள் இன்னும் எவ்வளவு நாள் இந்தக் காமன் கோவிலை இப்படி வலம் வந்து வெற்றிபெறப் போகின்றனவோ என்று நினைத்துப் பார்த்தேன் அம்மா!”

“என்னுடைய வேதனை மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று நீதான் முதலிலேயே வாழ்த்துக் கூறிவிட்டாயே, இனிமேல் எனக்கென்ன கவலை?” என்று தோழிக்குப் பதில் கூறிவிட்டு மேலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி.

வழிபாடு முடிந்ததும் வந்ததைப் போலவே யாரும் அறிந்து ஐயம் கொள்ள இடமின்றி மாளிகைக்குப் போய் விட வேண்டுமென்று இருவரும் புறப்பட்டார்கள். வசந்தமாலை தன் தலைவியைத் துரிதப்படுத்தினாள்.

“நாம் திட்டமிட்டிருந்ததைவிட அதிக நேரமாகி விட்டதம்மா. ஆள் புழக்கம் ஏற்படுவதற்குமுன் இங்கிருந்து திரும்பிவிட வேண்டுமென்று வந்தோம். சிறிது நாழிகைக்கு முன்புகூட இந்த நாணற் புதரருகே யாரோ நடந்து போனார்கள். விடிகிற நேரத்தில் புதர்களிலிருந்து நரிகளைக் கலைத்துவிட்டு வேட்டையாடுவதற்காகப் பரதவ இளைஞர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வருவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கூட்டமெல்லாம் வருவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும்.”

“போகலாம். அதற்காக இறக்கை கட்டிக்கொண்டு பறக்க முடியுமா என்ன? விடிந்ததும் நரி முகத்தில் விழிக்கிற உரிமை பரதவ இளைஞர்களுக்கு மட்டும் சாசனம் இல்லையே? வாய்த்தால் நாமும் நரி முகத்தில் விழிக்கலாமே தோழி!” என்று விளையாட்டுப் பேச்சில் இறங்கினாள் சுரமஞ்சரி. பேச்சு விளையாட்டாயிருந்தாலும் நடை வேகமாகவேதான் இருந்தது; என்ன இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறோம் என்ற பயம் பயம்தானே? காமன் கோவிலிலிருந்து அவர்கள் மாளிகையை அடைந்தபோது யாருடைய சந்தேகத்திற்கும் இலக்காகவில்லை. மாளிகை அமைதியாயிருந்தது. பெருமாளிகைத் தோட்டத்தில் நகைவேழம்பரும் தந்தையாரும் தோளோடு தோள் இணைந்தபடி கனிவாகப் பேசிக் கொண்டிருந்ததையும் தன்னுடைய மாடத்திலிருந்தே சாளரத்தின் வழியே சுரமஞ்சரி பார்க்க நேர்ந்தது.

“வசந்தமாலை! இங்கே வந்து இந்த விந்தையைப் பாரேன்” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அவர்களுக்கும் இதைக் காண்பித்தாள் சுரமஞ்சரி.

“நேற்றிரவு இரண்டு பேரும் பயங்கரமான கருத்து மாறுபாடு கொண்டு கடுமையாகப் பேசினார்கள் என்றாயே? இப்போது என்ன சொல்கிறாய், தோழீ?”

தோழி பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். “நல்ல வேளை, தோழி! தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததனால் இவர்கள் பார்வையில் தென்படாமல் உள்ளே வந்தோம். இவர்கள் பார்வையில் பட்டிருந்தால் நாமிருவரும் நிறைய பொய்கள் சொல்ல நேர்ந்திருக்கும். சொன்னாலும் நம் பொய்யை இவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள்.”

“உங்கள் தந்தையார் நம்பினாலும் நம்புவார். நகைவேழம்பர் இருக்கிறாரே, அவர் உண்மைகளையே நம்பாத மனிதர். பொய்களை எப்படி நம்புவார் என்று எதிர் பார்க்க முடியும்!” என்றாள் வசந்தமாலை. யாருக்கும் தெரியாமல் செய்ய நினைத்த செயலை நினைத்தபடி செய்துவிட்டோம் என்று சுரமஞ்சரி. அன்று மிகவும் மகிழ்ச்சியாயிருந்தாள்.

அன்றைக்கு மாலை ஆலமுற்றத்துக்குப் போய்வர வேண்டுமென்றும் அவள் நினைத்திருந்தாள். தந்தை யாருக்கு சந்தேகம் ஏற்படாமலிருப்பதற்காகத் தன் தோழியோடு சகோதரி வானவல்லியையும் உடன் அழைத்துப் போகத் திட்டமிட்டிருந்தாள். ஓவியன் மணிமார்பன் தான் கூறியனுப்பியிருந்த செய்திகளை ஆலமுற்றத்தில் உரியவரிடம் போய்த் தெரிவித்திருப்பா னென்றே சுரமஞ்சரி நம்பினாள். அன்றியும் இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் இருப்பதாகவே அவளுக்கு எண்ணம்.

தன் எண்ணப்படி மாலையில் ஆலமுற்றத்துக்குப் புறப்படுமுன் அவள் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். வசந்தமாலை அணிகலன்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்த வண்ணமிருந்தாள்.

தன் அலங்காரம் முடிந்ததும் “நீ போய் வானவல்லியையும் புறப்படச் சொல்லு” என்று தோழியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் சுரமஞ்சரி. தோழி திரும்புவதற்கு வழக்கத்தை மீறிய நேரமாயிற்று.

தோழி திரும்பி வந்தபோது அவள் முகம் வாட்டம் கண்டிருந்தது.

“ஏன் இவ்வளவு நேரம்?”

“ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா! நமக்குத் தெரியாமலே இங்கே என்னவெல்லாமோ நடக்கிறது.”

“புரியும்படியாகத்தான் சொல்லேன்!”

“நீங்களே என்னோடு வந்து பாருங்கள், புரியும்.” உடனே சுரமஞ்சரியும் தோழியோடு எழுந்து சென்றாள்.

அங்கே தன்னுடைய மாடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வாயிலில் புதிய ஏற்பாடாக இரண்டு யவனக் காவலர்கள் நிற்பதைக் கண்டு திகைப்போடு தோழியின் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி.

“அங்கே பார்த்துப் பயனில்லை. என்னுடைய முகத்தைப் பாருங்கள். நான் சொல்கிறேன். உங்களுடைய அலங்கார மண்டபத்தில் நீங்கள் அரும்பெரும் சித்திரங்களைச் சிறை செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதே போல் இந்த மாளிகையின் உயிர்ச் சித்திரமாகிய உங்களைத் தந்தையார் இந்த மாடத்திலிருந்து வெளியேறி விடாமல் பாதுகாக்க விரும்புகிறார்” என்று தூண் மறைவிலிருந்து வெளிவந்த நகைவேழம்பர், வன்மம் தீர்க்கிற குரலில் அவளை நோக்கிச் சொல்லிக் கொடுமையாகச் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_2/020-022&oldid=1149851" இலிருந்து மீள்விக்கப்பட்டது